சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும்.
கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும்.
இந்த ஒரு மலை அல்ல....
இந்த இருமலைகளும் மட்டுமல்ல...
ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய...
அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது.
அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம்.
கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே..
இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான்.
எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள் மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏.




