Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Thursday, April 22, 2021

கனவு 3.

 கனவு 3..... 

முருகா.. கந்தா,.. எல்லோரையும் நல்லபடியாக காப்பாற்று.. ..! இதை ஒன்றைதான் நான் தினமும் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்.அந்த பூங்காவின்  நீண்ட பெஞ்சில் நான் அமர்ந்து கண்மூடி தியானித்தபடி இருந்தேன்.  

சுற்றிலும் சூரியனின் ராஜ்ஜியமான இந்த பகல் நேரத்திலும், இந்த நட்சத்திரங்கள் எப்படி ஒளி வீசுகின்றன. ஒரு வேளை இது இரவுதானோ? ஆனாலும், இரவுக்கான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லையே? இரவின் துணையை ஆரம்பத்திலிருந்தே எப்போதும் தன் வசப்படுத்தி கொண்ட மமதையில், இருளின் தைரியமான எக்களிப்பு குரல் எங்கும் கேட்கவில்லை. அதன் பயமுறுத்தலுக்கு பணிந்து பிறந்து வளர்ந்ததிலிருந்து அமைதி காக்கும் பறவையினங்கள் கூட பயமின்றி அங்குமிங்கும் சலசலத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன. போட்டியாக மனித நடமாட்டமும், இறக்கை இல்லாத குறையாக அங்குமிங்கும்  எப்போதும் போல் பறந்து கொண்டே உள்ளது. என்ன இது விசித்திரம்.? 

ஆண்டவா..கடம்பா... கதிர் வேலா... ஏன் இந்த குழப்பம்? உன்னை இன்று  நிம்மதியாக நினைத்துப் பார்த்து மனம் விட்டு மனதுக்குள் பேசி, அதுவும்  வண்ண மயில்கள் பல உலாவும் இந்த பூங்காவில், உந்தனுடன் தனி"மையில்" (அது( மயில்) உன் "அருகாமையில்" இல்லாமல்) உன்னுடன் பேசி மகிழலாம் என்று நானும், " நீ அன்றொரு நாள் என்னிடம் விரும்பிக்  கேட்ட உணவை செய்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். வந்து ருசி பார்த்து பசியாறி, என் அறிவு பசிக்கும் சிறிது விருந்தளிக்க வருவாயா?  மனம் சிந்தனை சொற்களை கொண்டு வண்ணம் குழைத்து தீட்ட  கண்களுக்குள் கந்தனின் வண்ண முகம் சித்திரமாக ஒளிவீச தொடங்கியது. 

ஹ்ம்ம்ம்..... ஹ்ம்ம்ம்  மயிலின் அகவல் ஓசை கண்ணின் கவனத்தை திசை திருப்பி விழித்துப் பார்த்தால், நிஜமாகவே வண்ணமயில் வேலவன் மயிலின் மேல் வீற்றிருந்தபடி  புன்னகைத்தான். (மயில் மட்டும் எப்போதும் போல் என்னை கோபத்துடன் முறைத்தது. "என் துணையின்றி, என் அருகாமை"(ம)யில்"  இல்லாத கந்தனை தனிமை"(ம)யில்" காண உனக்கு இவ்வளவு ஆசையா? பழைய சம்பவங்கள் உனக்கு மறந்து விட்டதா? இல்லை., உனக்கும், எனக்குமான நட்பை  என்னப்பன் கந்தன் கடைசிவரை காப்பாற்றுவார் என்ற அசட்டு நம்பிக்கையா? (அதன் கோபமான பார்வையில் வடிந்த வாசகங்களை படித்தேன். ) 

"என்ன இது...? உன் விருப்பப்படி வந்தவனை "வா" வென்று வாய் நிறைய அழைக்காது, என்னுடன் வந்த மயிலுடன் பார்வையில், பாடம் படித்தபடி இருக்கிறாய்? முருகனின் நமட்டுச் சிரிப்புடன் கேள்விக்கணை வந்து தாக்க என் கண்கள் அவசரமாக கந்தனின் கண்களை சந்தித்தன. 

" வேலவா... நான் நினைத்தவுடன் வந்து அருள்தரும் உன் கருணையே கருணை... . உன் எத்தனையோ வேலைகளை எனக்காக ஒதுக்கி விட்டு, நான் வேண்டி அழைத்தவுடன் வரும் உன் அன்புக்கு நான் எப்படி..... .? மேற்கொண்டு பேச முடியாமல், என்" நாத் தத்தளிக்க..  ... "நன்றாகத்தான் நடிக்கிறாய்".. என்று பார்வையில் பேசியபடி மயில் முகம் சுழித்து வெறுப்பை உமிழ்ந்தது. 

" இல்லை முருகா!! இன்று நீ நான் நினைத்தவுடன் உடனே எனக்காக வந்திருக்கிறாய்..! அந்த ஆச்சரியத்தில் சிறிது நேரம்  வாய் வார்த்தைகளை மேலெழும்ப விடவில்லை.. வேறு ஒன்றுமில்லை.. . ... என்னை மன்னித்துக் கொள்.." என்றவளாய் அவன் இரு பாதம் பற்றித் தொழ குனிந்தேன்.. 

"பார்த்து... பார்த்து... காலைப் பற்றுகிறேன் பேர்வழி என்று சிலர் காலை வாரி விட்டு விடுவார்கள். எங்கள் ஐயன் முதலில் கீழே இறங்கட்டும். " மயில் அனல் கக்கும் வார்த்தைகளால் தடுத்து நிறுத்தியது. 

" அப்படியே வாரி விட்டாலும் தாங்கிக் கொள்ள நீ இல்லையா?"  கந்தனின் சின்னச் சிரிப்போடு கொஞ்சம் எனக்கும்  சாதகமாக வந்த பதிலை கேட்டதும், மயிலின் முகம் மாறுவதை கண்டு, என் இதழிலும் நகைப்புச் சாயல் வந்ததை கவனித்த மயில்., "என்ன நகைப்பு...? நான்தான் அவரை என்றுமே தாங்கி நிற்கிறேன். என்னுயிரை தாங்கிக் கொள்ள எனக்குத் தெரியாதா? நீயும் ஒன்றும் அவருக்கு ஆமோதிக்க வேண்டாம்." எரிச்சலான பார்வையோடு முறைத்தது மயில். 

"சரி... சரி...உங்களுக்குள் பூசல் வேண்டாம். நான் வேறு வேலையாக இந்த பூலோகத்திற்கு வந்தேன். வரும் வழியில் இந்தப் பூங்காவில் தமிழ் உரையாடல்கள் ஓரிடத்தில் கேட்கவே அங்கு சில நொடிகள் தாமதித்த பின்" நீ வேறு அழைக்கிறாயே"... என உன்னைக்காண இங்கும் வந்தேன். ஆமாம்.. ஏதோ பதிவர் என்ற பெயரோடு நாலு வார்த்தைகள் எழுதி வந்தாயே....  என்னவாயிற்று உன் எழுத்துப்பணி.. ? முற்றுப்புள்ளி வைத்து விட்டாயா? "என்று வேலவன் மடமடவென கேட்டதும், மயிலின் முகத்தில், எனக்கு மட்டும்" ஏளன சாயல்" தெரிந்தது. 

" எங்கே....! இங்கே வெட்ட வெளியில் அமர்ந்து வெட்டி வேலையாக ஏதோ சிந்தித்து கொண்டிருந்தால், சேர்த்தெழுத வரும் சில  வாக்கியங்களும் மறந்துதான் போகும். பின்னர் "வண்ண மயில் வேலவனே, மயிலேறி வந்தெனது அறிவெனும் விளக்கை சிறிதாவது தூண்டி விடுபபா...."என்ற புலம்பல்கள் வேறு.. .. முதலில் அது இருக்கும் இடத்தில்  இயல்பாக இருந்தால் அல்லவா தூண்டி விடுவதற்கு. ... " என மயில் தன்னோடு, கந்தனையும் இணைத்து கூறவே, அதன் விஷமத்தனமான கோபம் கண்டு கந்தன் வாய் விட்டு சிரித்தான். 

"சரி... முருகா...! நான் நேராகவே விஷயத்திற்கு, இங்கு உன்னை வரும்படி வேண்டி அழைத்த விஷயத்திற்கு வருகிறேன். நான் அன்று உன் அண்ணன் கணபதிக்கு அவரின் பிறந்த நாளன்று அவருக்குப் பிடித்தமான நிவேதனங்கள் நிறைய செய்து பூஜித்த பின், அதை நிறைய படங்களும் எடுத்து   என் பதிவுலகத்திலும் பதித்து அது குறித்து விபரமாக எழுதி வைத்தேன்.  அங்கு அதைப்பார்த்து பாராட்டிய  சகோதர சகோதரிகள் எங்களை என்றேனும் சந்திக்கும் போது இந்த உணவுகளுடன் வர வேண்டும் என அன்புடன் கூறினார்கள்..... . 

அதன் பின் தொடர்ந்து  வந்த என் கனவுகளில் நீயும் வந்து, "என் அண்ணன் கணேசனுக்கு செய்து வைத்ததை போன்ற உணவுகளை எனக்கு மட்டும்  நீ எப்போதும் கண்களிலேயே காண்பிக்கவில்லையே? வெறும் பானகமும், பழங்களுடன், தேனும் திணைமாவும் இந்த முருகனுக்கு போதுமென்று நினைத்தாயா?" என்று கேட்கவும், இன்று அந்த நிவேதனங்களை அன்புடன் செய்து  உனக்கும், விரும்பி கேட்ட என்  பதிவுலக  நண்பர்களுக்குமாகவும், கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் உன்னை வறுபுறுத்தி இங்கு வரச்சொல்லி அழைத்தேன். நீ இதை அன்புடன் ஏற்றுக் கொண்டு என்  பதிவுலக  நண்பர்கள் இருக்குமிடத்திற்கும் என்னுடன் கூடவே  வர வேண்டும்."என்று பணிவுடன் கை கூப்பி  நான் விளக்கமாக கூறியதும், முருகன் இளமுறுவல் செய்தான். 

" ஓ... அதனால்தான் நான் வரும் போது ஓரிடத்தில் அத்தனை உரையாடல்களா? இப்போதெல்லாம்  பதிவுலக நட்புகள் உனக்கு ஒரளவு பெருகி விட்டது போலும். சரி.. சரி... என்னையும் அவ்வப்போது முன்பு மாதிரி நினைவின் ஓரத்தில் வைத்திரு.... மறந்து விடாதே... ! என்றான் சற்று  கேலியாக... 

 அதுவரையில் எங்கோ நடந்து சென்றபடி  இருந்த  மயில் பொறுமையாக வந்து கந்தனிடம் வந்து நின்று நாங்கள் பேசுவது அனைத்தையும் கேட்டதும்,  சிறிது பொறாமையுடன் முகம் சுழித்து நெளிவது தெரிந்தது. 

"ஐயனே... என்ன இது..! அபச்சாரமான வார்த்தைகள்.... உன்னை மறந்த பின் என் உடலிலும் உயிர் தங்குமா? தமிழுக்கு பிறப்பிடமான உன்னை  மறக்கும்  ஒரு பொழுதுதான் எனக்கு இந்தப் பிறவியில் உண்டாகியும் விடுமா? நினைக்கவே என் தேகம் நடுங்குகிறதே...! உன்னருளாலேதான் இந்த எழுத்துலகில் நான் பிறந்து தவழ்ந்து அடி எடுத்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன். அதை மறந்து விட்டாயா?  (இதை சுட்டினால் என்னப்பன் கந்தவேள் என்னுடன் உரையாடிய முதல் கனவு பதிவு வரும். மறக்காமல் இதையும் சுட்டி அங்கும் சென்று அனைவரையும்  படிக்க வேண்டிக் கொள்கிறேன்.🙏.)  தாயை சேய் மறப்பதா? முருகா.. ..நீ எப்போதும் என்னை ஒவ்வொரு நாளிலும்  சிறிதேனும் மறவாதிருக்க வேண்டும். அந்த வரத்தை எனக்கு இந்தப்பிறவியில் தந்தருள வேண்டும் "  நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசுவதை கண்ட கந்தன்   "சரி.....சரி... எனக்கும் நேரமாகி விட்டது. உன்னை மட்டுமல்ல...   உலகில் அனைவரையும் நானறிவேன்.. உங்களை எழுத வைப்பதும் பேச வைப்பதும், இயக்க வைப்பதும் அனைத்தும் நானேதான். நீ அவர்களை உங்கள்  ஏற்பாட்டின்படி சென்று சந்தித்து கொள். நான் வருகிறேன்... "  என்றபடி கிளம்பினான். 

வேலவா. .!    என்ன இது...? உன் துணையின்றி நான் எப்படி... .. ? எனக்கு பொதுவாகவே பேச்சறிவு குறைவு..... நீயும் என் அருகில் இருக்க வேண்டுமென்றுதானே உன்னிடம் வேண்டினேன். தவிரவும் உனக்காக  நான் கொண்டு வந்த உன்  அண்ணனுக்கு பிடித்தமான நிவேதனங்களை நீ உண்டு  ஏற்க வேண்டாமா?"  நான் அவசரமாக தடுக்கவும்  "எல்லாம் என் பார்வையில் விழுந்தாகி விட்டது. என் பார்வையாலேயே உங்களின் அன்பும், மற்ற அனைத்தும் ஏற்கப்பட்டு விடும் என உனக்குத் தெரியாதா?  என்று கூறியபடி மயிலேறி கொண்ட  முருகன், "வேண்டுமானால், என்னுடன் வா. . .! நான் வரும் போது கண்ட அந்த இடம் வந்ததும் உன்னை இறக்கி விட்டுச் செல்கிறேன்.... "என்றான். 

"ஆமாம்..ஆமாம்...வா...வா...என்ற மயிலும் அங்கு உன்னை "உதிர்த்து" விடுகிறேன்..."  (அந்த" உதிர்த்து" என்பதை எனக்கு மட்டும் சிறு குரலில் கூறியவாறே...) என்றது அதே விஷம பார்வையுடன். 

எனக்கு லேசாக பழைய நினைவுகள் நடுக்கத்தை வரவழைத்தது. 

எப்படியோ முருகனுடன் மயிலேறி குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு எவரையும் காணாமல் திகைத்தேன் .." இங்குதான் நிறைய மனிதர்கள் அமர்ந்திருக்க கண்டேன். இப்போது எவரையும் காணவில்லையே? விந்தையாக உள்ளதே....!" என்ற முருகன் மயிலை நோக்கி, "நீ சற்று, சுற்று முற்றும் பறந்து சென்று அவர்கள் எங்கேனும் உள்ளார்களா எனப் பார்த்து விட்டு வா.." என ஆஞ்கை பிறப்பித்ததும்,, மயில் கண வேகத்தில் காணாமல் போனது. 

"உனக்காக மறுபடியும் தாமதிக்கிறேன். உன் நண்பர்கள் இருக்குமிடத்தை மயில் வந்து சொன்னதும் நான் செல்ல வேண்டும்..நேரமாகிறது. . ." முருகன்  சிறிது தவிப்புடன் சொல்ல "சரி. வேலவா...! என் கைப்பேசியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கேட்டுக் கொள்ளலாமா?" என நான்  அவன் உத்தரவை கேட்டதும், "கைப்பேசியா? அப்படியென்றால்,  ....?என முருகன் வியக்கவும், "ஆம்.. முருகா..  இதன் மூலம்தான் ஒருவர்  மற்றவரின் நலன்களை விசாரித்து தெரிந்து கொள்வதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இப்படி சந்திக்கவும், பேசி ஏற்பாடுகளும் செய்து கொள்கிறோம்.""என்று பணிவுடன் சொன்னதும் கந்தன் மீண்டும் வியப்பிலாழ்ந்தான். 

அந்நேரம் அவன் ஆச்சரியத்தை போக்கவென்றே மயில் வந்து இறங்கியது. "வெகு தூரத்தில் சில மனிதர்கள் பேசிக் கொண்டே கடந்து சென்றார்கள். இந்தப் பெண்மணியிடம்  அவர்கள் அன்றைய ஓர் தினத்தில் ஏதோ" குளிர் சாதன பெட்டியில் " தங்களுக்கு சில பிடித்தமான உணவு வகைகளை வைத்திருக்க சொன்னதாகவும், அவர்களுக்கு இவர் தற்சமயம் அதைத்தான் கொண்டு வந்து விட்டதாகவும்," எப்போதோ செய்து வைத்திருந்த அதை உண்டால் எங்கள் உடல் நலம் என்னாவது?" என்று கூறிக் கொண்டே, எனவே  அவர்கள் இவர் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டுமென ஒருவடோரொருவர் பேசிக் கொண்டே சென்று விட்டார்கள். "என்று மயில் பெருமூச்சுடன் கூறி முடிக்கவும், முருகன்"குளிர் சாதன பெட்டியா.. ? அப்படியென்றால்., குளிர் சாதன பெட்டியென்றால்?" என மீண்டும் வியந்தான். 

" கந்தா.... செய்த அனைத்து உணவுகளையும் அன்றே எங்களால் சாப்பிடுவதற்கு முடியாதென்பதால், சிலவற்றை இந்த குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒரிரு நாட்களாக உண்போம். ஆனால்  இதையெல்லாம் நான் அதற்குள் வைப்பதில்லை. அன்று அவர்கள்  வேடிக்கைக்காக சொன்னது இத்தனை வீபரீதமான  அர்த்தமாக போகுமென்பதை நான் உணரவில்லை. இன்று அவர்களை சந்திக்க வரும் போது, அவர்களுக்கு ஒரு  தீடிர் எதிர்பாராத விருந்தாக, மனம் களிப்பாக இருக்கட்டுமென, புதிதாக இந்த உணவெல்லாம் செய்து கொண்டு  வந்துள்ளேன். ஆனால், அப்படி  செய்து கொண்டு வரப்போவதாகவும், நான் சொல்லவுமில்லை.  என் தவறுக்கு தகுந்த தண்டனைதான் எனக்கு கிடைத்துள்ளது.... " என்று நான் மேலும், மேலும் பேசி வருத்தப்படுவதை கண்ட முருகன்,  "சரி... சரி இப்போதென்ன...! மற்றொரு நாள் எல்லா ஏற்பாடுகளை, உங்களிடமிருக்கும் பேசும் உபகரணத்தின் மூலமாக விபரமாக பேசி செய்து கொண்டு  வந்து சந்தித்தால் போயிற்று... கவலைப்படாதே.... " இப்போது நான் புறப்படுகிறேன். .. . அடுத்த தடவையாவது  புத்திசாலிதனமாக நடந்து கொள்.... என்றபடி, திரும்பியவன் "வருகிறாயா? நீ வருத்தத்தில் இருப்பதால், தனியாக செல்ல வேண்டாம். உன்னிருப்பிடத்தில் விட்டு விடுகிறேன்....." என்று இரக்கத்துடன் முருகன் கூறவும், மயிலின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததது எனக்கு  அத்தனை வருத்தத்திலும் கொஞ்சம் ஆச்சரியத்தையும் தந்தது. 

மயில் எங்களை தன் முதுகில் ஏற்றியபடி மின்னல் வேகத்தில் பறக்கத் துவங்கிய சற்று நேரத்தில்,  "எப்படி....? எப்படி. .? என் திட்டம் வெற்றியடைந்தது பார்த்தாயா? என் துணை இல்லாமல் என்னப்பனை சந்தித்து பேச வேண்டுமென நீ நினைத்ததற்கு தண்டனை எப்படி கிடைத்தது பார்த்தாயா? நீ கந்தனுடன் பேசி நீ தயாரித்து கொண்டு வந்திருந்த உணவுகளை சிலாகித்து கொண்டிருந்த அந்த கண நேர "தனிமையில்" இந்த மயில் உன் நட்புக்களை வேறு மனித உருவத்தில், அதுவும் உன் சொந்தமென கூறிக் கொண்டு சென்று சந்தித்து நீ கொண்டு வந்திருக்கும் உணவுகளைப் பற்றி கூறி அவர்களை எப்படி அவ்விடம் விட்டு புறப்பட வைத்தேன் பார்த்தாயா? இனி என் உதவியில்லாமல் கந்தனை தரிசிக்க விருப்பபடுவாயா? சொல்... "என்றபடி முகம் வளைத்து  கந்தன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம் எனக்கு மட்டும் கேட்கும்  குரலில்  மயில்  வன்மமாக கேட்கவும் திடுக்கிட்டேன் . 

" இது உன் வேலையா?  கண நேரத்தில் இப்படி செய்ய உன்னால் எப்படி முடிந்தது.? ஏன் இப்படி செய்தாய்? நானும் உன்னைப் போல், உன்  தெய்வம் கந்தனை மனதாற வழிபட்டு நேசிப்பவள்தானே...! நீ இப்படிச் செய்யலாமா? " என்று அழாத குறையாய் கூறி சமாதானபடுத்துவற்குள், கொஞ்சமும் அதற்கு செவி மடுக்காமல், " அதுதான்.. நான்... சரி.  சரி. . உன் இருப்பிடம் வந்தாகி விட்டது.  இறங்கிக் கொள்..." என்றபடி மயில் முதுகை சிறிது ஆட்டவும், (அதன் பாணிப்படி உதிர்க்கவும்) நான் மடமடவென்று  "ஆ"வென்றுஅலறியபடி கீழே வந்து விழுந்தேன். 

" அம்மா... என்ன இது? ஏன் கத்துகிறாய்? கனவா? " என   என் பெண் உலுக்கியதில், "ஆம். .. பதிவு கனவு மூன்று...." என்றேன். 

" இப்ப மணியும் மூன்று. ....தூங்கும் நேரத்தில் வரும் கனவிலும்  பதிவுலக நினைவா? கொஞ்சம் நேரம் நிம்மதியாக மறுபடி  படுத்து தூங்கு...!" என்ற அவளது குரலின் அன்புக்கு கட்டுப்பட்டு படுத்து, கனவையும், கந்தனையும் நினைத்தபடியிருக்க உறக்கம் மறுபடி சிறிது நேரத்தில் வராவிட்டாலும், விடியலின் அருகாமை பொழுதில் வந்து என்னை அணைத்துக் கொண்டது.  

இப்போதுள்ள சூழ்நிலைகளில் ஒருவரையும் சந்திக்க இயலாவிடினும், கனவிலும் உங்கள் அனைவரையும்  என்னால் சந்திக்க முடியாமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அதனால்தான் பதிவின் மூலம்  கனவையும் எடுத்துக் கொண்டு உங்களை சந்திக்க இங்கு வந்து விட்டேன். அன்புடன் வந்து கனவுடன் சேர்ந்து வந்த பதிவையும்  சந்தித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏🙏. 

Saturday, October 3, 2020

விதியும், கவியும்..

பொதுவாக பிறப்பு எப்படி ஒருவருக்கு மகிழ்வை தருகிறதோ அதற்கு நேரெதிர் இறப்பு. ஒருவர் வருடக் கணக்காக உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையாக பிறருக்கு பாரமாக இருந்தால் கூட, அவர் டிக்கெட் எடுத்த இடம் வந்து இறங்க நேர்ந்தாலும், "இன்னும் கொஞ்ச நாள் இருக்கக் கூடாதா? அதற்குள் என்ன அவசரம்.. இப்படி எங்களை விட்டு போகுமளவிற்கு.." என்று ஆற்றாமையோடு, காலம் முழுக்க அவரை, அவர் பிரிவை நினைக்க வைத்து, கண்ணீர் வடிக்க செய்து விடும் அந்த மறைந்த ஒருவரின் பாசம் அனைத்தையும்  முழுமையாக பெற்று வாழ்ந்த  அவரது நெருங்கிய உறவுகளுக்கு....! (ஆனால்  நன்றாக நலமுடன் இருந்தவர் படுத்து நான்கைந்து நாட்களுக்குள் அவரின் இறப்பை அவசரமாக எதிர்பார்க்கும் உறவுகளும் இந்த உலகில் இருக்கிறார்கள். அது வேறு விஷயம்..:) )  

அனைவருக்குமே காதறுந்த ஊசியின் முனை கூட நம்முடன் வாராது என்பது தெரியும். ஆனாலும்  "நான்.. எனது.. என் பொருள்" என்ற எண்ணத்தை, ஒரு ஆழ்ந்த பற்றை இறுதி வரை எவராலும்  விட இயலவில்லை. ஒரு வேளை அது அனைவருக்கான விதியின் சாபமோ? ஒருவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்த நற்பெயரெனும் புகழ் ஒன்றுதான் அவர்  உடல் மறைந்த பின்னும் சில காலமாவது அவரைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு மாயை. அதுவும் காலப்போக்கில் கரைந்து வேறு பல வடிவங்களுக்கு இடம் கொடுத்து மாறுபட்டு விடும்  இயல்புடையது.  சம்பந்தமில்லாமல் என்ன உளறல் இது? என உங்களை  சிந்திக்க வைப்பதற்கு கொஞ்சம் மன்னிக்கவும். 

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு காலை ஒரு கனவு. ஒரு உறவுக்கு பரிந்து மற்றொரு உறவிடம் பேசுகிறேன். என்ன பேசினேன்.. யார் அந்த உறவுகள்... என்பதெல்லாம் சுத்தமாக மறந்து விட்டது. கனவில் யாருக்கு அனுசரணையாக பேசினேனோ, அவரே  மிகவும் கொஞ்ச நேரத்தில் கோபமாக வெளியிலிருந்து வந்து கையிலிருக்கும் ஒரு இரும்பு  "வாளி" போன்ற கனமான பொருளை என் மேல் வீசுகிறார். முகத்தில் வந்து வேகமாக விழுந்த அதன் பாரம் தாங்காமல் நான் அப்படியே கீழே சுருண்டு விழுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த வேறொருவர் என் பெயரை பல முறை கூவி அழைக்க நான் நனவுலகத்திற்குள் வந்து  விழுந்து அவசரமாக பதற்றத்துடன் எழுந்தேன்.

கனவுகள் பலதும் அர்த்தம் இல்லாமல் சிலசமயம் வருகின்றன. நாம்தான் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு பண்ணி கலக்கம்/மகிழ்ச்சி என்று அடைகிறோமோ என நான் எப்போதும் நினைப்பதுண்டு. 

எல்லா கனவுகளும் அதன்படியே வாழ்வில் நடப்பதில்லை. சில கனவுகள் நடந்து விடுமோ என்ற பயத்தை  நமக்குள் ஏற்படுத்தி நடத்திக்காட்டி விதியின் அருகில் இருக்கும் தைரியத்தில் நம்மை பார்த்து எக்களிப்புடன் சிரிக்கும் சுபாவம் கொண்டவை. ....சமயத்தில் சில மழையில் நனைந்த தீபாவளி வெடியாய் பிசுபிசுத்து நம்  பயத்தை பற்றிய  அக்கறை கொள்ளாதது போல் ஒதுங்கி விடும் பழக்கங்களை உடையவை.. .. 

அன்றாடம் நாம் பேசும் பேச்சுக்களே, நடந்த விஷயங்களே சில நேரம் கனவாக வருவதுண்டு. பலசமயம் எதற்கும், யாருடனான சம்பந்தமே இல்லாமலும்  கனவுகள் வருவதுண்டு.

 சில கனவுகள் விடியலில் கண் திறந்ததும் மறந்து விடும். ஆனால், இது நான் கண் விழித்ததே இந்த கனவினால்தான் என்பதினால், "இது காலன் என் மீது தன் பாசம் வீசி கொல்லும் கனவாக எனக்கு அன்று காலையிலிருந்து ஒரே கலக்கம்..." ஏற்பட்டது. "அதிகாலை கடந்த அந்தக் காலையில்,  கொஞ்சம் தாமதமான பொழுதில் வந்ததுதான் இந்த கனவு எனவே பலிக்காது என வீட்டிலுள்ளவர்கள் சமாதானபடுத்தினாலும், அன்றைய தினம் முழுதும் கனவின் நிஜப்பார்வைகள் வந்து  என்னை சலனபடுத்தியபடி இருந்தது." அதன் பின் தினசரி வெவ்வேறாக  வந்த கனவுகளில் அது இப்போது மறக்கவும்  தொடங்கி விட்டது. மற்றபடி எப்போதும் நடப்பதை (விதியை) யாரால் தடுக்க முடியும்? 

தான் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் காலிலுள்ள காற்றை நம்பி வாழும்   "இதைப்"  பற்றிய ஒரு சிந்தனையில் எழுந்த ஒரு கவிதை.... பதிவுலகத்தில் எத்தனையோ பேர்களின்  ஆழமான அழகான கவிதைகளை படித்த பின், இதை கவிதை எனச் சொல்வதற்கும் எனக்கு மனமில்லை. . இருப்பினும்.... ஒரு...உரைநடைக் 

கவிதை. . பாராமுகம்...  .

விரும்பிச் சொல்லும்

சிறு விஷயங்களையும், 

விருப்பமின்றி புலம்புவதையும், 

விருப்பத்தோடு ஆமோதித்து, 

வித்தியாசங்கள் ஏதுமின்றி, 

"உச்" கொட்டியுள்ளாய்... 

என் வேதனைகள் தீர்ந்திடவே

வெகு நாட்களுக்கு பின், 

வேலை ஒன்று கிடைத்ததை

வேறெங்கும் சொல்லாமல், 

நான் வீடு தேடி வந்ததும் 

விருப்பமாய் உன்னிடம் பகர்ந்தும், 

உன் முகமும் காட்டவில்லை. 

"உச்" சென்ற  ஒலியும் எழுப்பவில்லை.

இது நாள் வரை என்

பார்வையில் மட்டும் பட்டு, 

என் வெறுமை என்னும்

கனத்த போர்வை விலக்கி, 

பழகிய பாசத்திற்காகவோ ,

இல்லை, நீ இருக்குமிடத்திற்கு

குடக்கூலிகள் என்ற ஏதும்

நிர்பந்திக்காத என்

நியாய உள்ளத்திற்காகவோ, 

பதிலுக்கு உன் விடைகளாய், 

"உச்" சென்ற ஒலியை மட்டும்

பாரபட்சம் ஏதுமின்றி, 

பகிர்ந்து வந்த பல்லியே.. .!

இதற்கெல்லாம் இனியதாய் ஒர்

பதிலேதும் சொல்லாமல்,  

பயங்கர அசட்டையுடன் நான்

பல தடவைக்கும் மேல், 

பாராமுகங்கள் காண்பித்ததில், 

பரிதவித்த ஒரு மனதோடு

இன்று  நீ என் 

பார்வையில் படாமல், உன்

பாதை மாறி போனாயோ...? 

ஒரு வாரத்துக்கு மேலாக இது மேலே பரணின் கதவில் நின்று கொண்டு தினமும் காலையிலிருந்து இரவு வரை பார்வையில் பட்டதோடு மட்டுமில்லாமல்,"எங்கே ஏதாவது உணவு பண்டங்களை சுவைக்கும் ஆசையில் அருகே நெருங்கி வந்து விடுமோ..?" என்ற கவலையில் மேலே ஒரு பார்வையும், கீழே அடுப்பில் ஒரு பார்வையுமாக ஒருவார காலம் தள்ள வைத்தது. பின், என் பார்வையின் சூடு பொறுக்காமல், அது இடம் மாறி அதன் விதித்த விதிப்படி எங்கோ சென்றதில் எழுந்த "கவி" தைதக்கா, தைதக்கா என வந்து குதித்தது. எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

நான் பதிந்த இரண்டின் இறுதியிலும் விதி என்றதும், விதியின் கணக்கும் ஒரு கவியாக "நானும்" என்றபடி ஆசையோடு வந்துதிக்க, . உங்களுக்கும் ஆட்சேபனைகள் ஏதும் இருக்காதென்ற நம்பிக்கையில் அன்புடன் அதையும் இந்தப் பதிவுக்குள் இறங்க சம்மதித்தேன். 

அந்தக்.. . 

கவிதை..விதியின் கணக்கு... 

பூட்டிய வீடு என்றாலும்,

புழங்கும் வீடாகி போனாலும்,

தினமும், ஒரே மாதிரி 

கூட்டிக் கழித்து, பெருக்கிப்

பார்த்தால், இறுதியில்

குவிவது குப்பைகள்தான்

நம் மனதாகிய மாளிகையிலும், 

அன்றாடம் குவியும் கணக்கற்ற 

குப்பைகளை களைவதும், 

களைந்ததை கழிக்காமல், 

கூட்டிப் பெருக்கி, வகுத்துப் 

பார்த்து பத்திரப்படுத்துவதும்

கடவுள் போடும் நான்கு விதிப்

பயன்களை ஒத்த கணக்குதான். 

அவ்வாறான மனக்கணக்குகளில்

கணக்குகள் பிறழ்ந்தால், 

கணக்கின்றி துயர் பெறும் நாம்

விதி(யின்) விலக்காக வரும் 

விடைகளை மட்டும் விரும்பி, 

நம்முடையதான கணக்கில்

சேர்த்து நம் பயி(முய)ற்சி என்கிறோம். 

இதில் வகைகள் வேறாயினும், 

இறுதி வடிவம் பெறுவது 

விதியின் விருப்பத்தில் விளையும்  

வித்தியாசமற்ற விடைகள்தான்.. 

வலியதாகிய விதியின் கணக்கில்

வரும் விடைகள் அனைத்துமே

அவை ஆரம்பத்திலேயே

வலியுறுத்தி நிர்ணயத்தவைதான்.

விபரங்கள் யாவும் அறிந்தும், 

விபரமில்லாமல், மனம் வருந்தி, 

விதியை சபித்து, நொந்து போவதும்

வாழ்வில் நாம்  பெற்று வந்த 

விதி தந்த  வரங்கள்தான்.. 


இப்பதிவை படித்து  நல்லதொரு கருத்துக்களை தரும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.... 🙏... 


Sunday, October 4, 2015

வலைப்பதிவர் திருவிழா-2015 அழைப்பிதழ்! (கனவு 3)

வணக்கம் வலையுறவுகளே

வீட்டின் விஷேடங்களின், அலைச்சல்களிலும், பிரயாணங்களின் களைப்பிலும், சற்று உடல்நலகுறைவு ஏற்படவலைப்பக்கம் வராமல் இருந்தவள், இன்று வந்து பார்த்ததும் திகைத்துப்போய் விட்டேன். இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறும் பதிவர் திருவிழா ஜம்மென்று நாளுக்கு நாள் மெருகு ௬ட்டியத் தங்கத் தேரில் ஏறி, ராஜ வீதியில் பவனி வந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்வடைந்து விட்டேன். அதற்கென உழைத்து அதன் சிறப்பை அதிகரித்து வரும் பதிவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளும், மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகிறேன். அதற்கேற்ற மாதிரி போட்டிகளும், பரிசுகளுமாக வலையுலகமே களைகட்டிக்கொண்டிருக்கிறது. அறிந்தவர், தெரிந்தவர் அனைவருமே சிறப்பான முறையில், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதக் குவித்த வண்ணம் இருந்தை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்து விட்டேன். அனைவரும் வெற்றி வாகை சூடி பரிசுகள் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். என்னால் இந்த வருடம் எதிலும் கலந்து கொள்ள இயலாவிடினும், நானும் என் பங்குக்கு பதிவர்களை புதுக்கோட்டை திருவிழாவுக்கு வருக.. வருக..என அன்போடு அழைக்கிறேன். 

(எதிலும் கலந்து கொள்ளாமல், அழைப்பிதழை என் பதிவில் வெளியிடலாமா என்று தெரியாமலேயே வெளியிட்டு அழைத்து விட்டேன். தவறெனின் மன்னிக்கவும்.) அடுத்த வருடம் முடிந்தால் உங்களுடன் நானும் கலந்து கொள்வேன் என்ற நம்பிக்கையோடு உங்கள் சகோதரி கமலா ஹரிஹரன்.







எழுத ஆரம்பித்த கை தடை செய்தால் நிற்குமா.? நீண்ட பதிவாயிருப்பினும், என் பதிவினையும் பொறுமையுடன் படித்து கருத்திடுபவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

என் தூக்கத்தின் முதலில் திடுமென கண் விழித்தேன். வண்ண மயமான உலகம்.! இதமான தென்றல் வருட உள்ளம் மகிழ்விக்கும் இனிதான இரவு மாதிரி இருந்தது. ஆனாலும், விண்மீன்கள் மாதிரி பிரகாசமான ஒளிச்சுடர்கள் கண் சிமிட்டியபடி இருந்தன. இரவுதானா? இல்லை, இது இரவுடன் இணைக்கப்பட்ட ஒரு பகலா.? இது என்ன இடம்.? என புரிந்து கொள்ள முடியாத ஒரு மனநிலையில் தடுமாறிய போது, ஆங்காங்கே ஜல், ஜல் என காலில் சலங்கை கட்டிய அழகிய பெண்கள் அழகோவியமாக நட()மாடும் பாணியில் அசைந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களெல்லாம் யார்.? நம்மை போல் மனிதர்களா? இல்லை, வானுலகத்துதேவதைகளா.? இவர்களை வர்ணிக்கவே இயலாத அளவுக்கு இவ்வளவு ஒரு அழகா.? என்று திகைத்து நிற்கும் போது, என்னைச் சுற்றிலும் சுகந்த நறுமணங்கள் நாசிக்கு மணம் தந்தபடிபுகை மாதிரியான வடிவத்தில் சுழன்று வட்டமிட்டு அகன்றபடியிருந்தது. கண்ணெதிரே பளபளவென்று பெரிய பெரிய தூண்கள் விண்ணையும் தாண்டி சென்றுவிட முயற்சித்து கொண்டிருந்தன. அதன் அழகான சிற்ப வேலைப்பாடுகள் மனதையும் சேர்த்து கவரவே, அருகில் சென்று லேசாக தொடும் நேரம், அவை அத்தனையும் தங்கத்தாலும், வைரங்களாலும், இன்னும் பல விதமான உலோகங்களாலும், வடிவமைக்கபட்டதை மனம் உணர்த்த விழிகள் இன்னமும் விரிந்தன. ஒளி வீசும் மரங்களும், அதன் கிளைகளில் பூமியில் எங்குமே காணவே முடியாமல், கதைகளில் மட்டுமே படித்துணர்ந்த சுவையூட்டும் வாசமிகு கனிகளுமாக, “அட,அட, இது நாம் வாழ்நத இடமில்லை.! கண்டிப்பாக, பிறப்பில் வினைகளுக்கு ஏற்றபடி மானிடர்களுக்கு அமையும் சுவர்க்க பூமிதான் என்று உள் மனது ஆரவாரத்துடன் கொக்கரிக்க, “ஆகா…! நல்ல நேரந்தான். நம் பிறப்பின் வினைகள் நல்ல விதமாக அமைந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டதே.! கடவுளே..!” உனக்கு எவ்விதம் நன்றி சொல்லப் போகிறேன்.!” உணர்ச்சிப் பெருக்கில் உதடுகள் சற்று சத்தமாக முனகியது.

எந்த கடவுளுக்கு இத்தனை நன்றிகள்.? வந்த குரலில், என்னையும் இங்கு மதித்து யார் விசாரிக்கிறார்கள்.? என ஆவலுடன் தலைத்திருப்பி பார்த்தேன். பதிலை எதிர் பாராமல், நடந்து சென்ற அந்த உருவத்தை பின் தொடர, சிறு ௬ட்டமாக அங்கு அமர்ந்து உல்லாசமாக பேசிக் கொண்டிருந்த சிலரை அணுகியது அவ்வுருவம்.

இதோ பார்த்தீர்களா.? நம் இனிய தமிழ் பேசும் அம்மையார். கடவுளுக்கு நன்றி ௬றிக்கொண்டு புலம்பியபடி, திகைத்து நின்று கொண்டிருக்கிறார். இன்றுதான் இங்கு புது வரவு போலிருக்கிறது.! என்ற அந்தக்குரலுக்கு செவிச்சாய்த்து திரும்பிய அனைவரையும் பார்த்து ஒரு நொடி திகைத்துப் போய் விட்டேன். ஏனெனில் அனைவரும் அறிந்த தெரிந்த முகங்கள். அட..! நம் தேசத்திற்கே வழிகாட்டிய தேசப்பிதா, வாழ்க்கையை பண்போடு வழி நடத்திட உதவியாய் ஈரடிகளை பாவாக்கி இனிதே தந்திட்ட வள்ளுவனார், மொழியினுள் தமிழை அமுதமாக்கி இன்றும், தரணியில் தனக்கென்று தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முண்டாசு கவிஞர், என்று அனைவரும் அறிந்த தெரிந்த முகங்கள்…!. ஓடிப்போய் அனைவருக்கும், வணக்கம் ௬றி, “இன்று என்ன தவம் செய்திருக்கிறேன்.! உங்களையெல்லாம் இங்கு சந்தித்தது மிகுந்த மகிழ்வை தருகிறது.! என்று முடிக்கும் முன், “உன்னைஇதற்கு முன் நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேனே…! என்று தாடையை தட்டி யோசித்தார் கவிஞர். “ஆமாம்..! இவரை இதற்கு முன் பார்த்த நினைவு எனக்கும் வருகிறது.” என்றபடி எங்கோ புறப்படுவதற்காக தன் தடியை ஊன்றியபடி எழுந்து நின்றார் அடிகளார். ஐய்யய்யோ..! இப்படியே அன்றுமாதிரி அனைவரும் கிளம்பி விட்டால் என்ன செய்வதென்ற பயத்துடன். “நான்தான்…” என என்னைப் பற்றி விரிவாக அறிமுகபடுத்திக் கொள்ளலாம் என நான் ஆரம்பித்த போது, “எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. அன்றொரு நாள் நம் பணிகளிடையே இவரை சந்தித்தோம். கேள்விகளை கேட்டு விட்டு நம் பணி நிமித்தம் நாம் வேகமாக மறைய, வழக்கம் போல், நம் தமிழ் கடவுள் இவரிடம் சிறிது நேரம் மாட்டிக்கொண்டதாக அவரே அன்று ௬றினார். அன்று ஏதோகனவுடன்நம்மையெல்லாம் சந்தித்தவர் இன்று மறுபடியும்….இங்கு வந்திருக்கிறார்.” என்று வள்ளுவனார், நிதானமாக என் கதையை விளக்க, “அப்பாடா’” என்றிருந்தது எனக்கு. "பின்னே, நான் ௬றி நினைவூட்ட இருந்ததையெல்லாம் அவர் எடுத்து ௬றி விட்டார் இல்லையா".?

நன்றியுடன் அவரை ஏறிட்டபோது, “சரி.! இப்போது இங்கு மறுபடியும் எதற்காக வருகை.? சற்று முரட்டு குரலில், கவிஞர் அதட்டவே, மறுபடி சொல்ல வந்ததை சொல்லாமல் போய் விடுவோமோ…! என்ற பயத்தில், “அன்று உங்களையெல்லாம் கனவுலகில் சந்தித்தேன் என்றாலும் அதை ஒரு பதிவாக என் வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டேன். இப்போதைய என் கவலையெல்லாம் வேறொன்றைப் பற்றியது. என் வலைப்பூவில் நான் அவ்வப்போதுதான் எழுதி வருகிறேன். தற்சமயம், வருடாவருடம் நடைபெறும் "பதிவர் திருவிழா" இந்த முறை புதுக்கோட்டையில் பெரும் விழாவாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் என் சந்தர்ப்ப சூழலினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அங்கு அறிவிக்கப்பட்ட மின் கணினித் தமிழ்என்ற வரிசையான போட்டிகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை. ஏனெனில் காலம் தாழ்த்தி விபரங்கள் அறிந்து கொண்ட நானும், கற்றுத் தேர்ந்த திறமையானவர்களுடன் கலந்து எழுத ஒரு கலக்கம். மற்றபடி நேரமும் அமையவில்லை. ஆனாலும், மனதின் ஒரு ஓரத்தில் இந்த ஏக்கம் தினமும் இருந்து கொண்டேயிருக்கிறது. சொல்லப் போனால், தூக்கத்திலும், கனவிலும் ௬ட இதை நினைவுதான். இன்று உங்களை சந்தித்த மகிழ்ச்சியில் என் மனதில் உள்ளதை சொல்லி விட்டேன். மேலும், என ஆரம்பித்த என்னை நிறுத்தி, “ஆமாம்..! அது என்ன.? பதிவுலகம், பதிவு, பதிவர், வலைத்தளம், வலைப்பூ கணினித்தமிழ் என்று ஏகத்திற்கு தமிழில் சொல் அமைக்கிறாய்..! விபரமாக ௬று.! என்று கவிஞர் அவர் குரலில் அதட்டவே, மற்றவர்களின் முகத்திலும் அதைப்பற்றி அறியும் ஆவல் சிறிது எட்டிப் பார்த்தது.

இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாதா.? என்றவுடன், தெரியாததால்தானே கேட்கிறேன். “நூல், பாக்கள், செந்தமிழ், அருந்தமிழ், பைந்தமிழ், நாளேடு, மாதஇதழ், வாரஇதழ், கணிதம் இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். பூ., தளம்மின்கணினி, கணினித்தமிழ், இதிலெல்லாம் எப்படி எழுதுவது.? உளறுகிறாயா.? முதலில் கணினி என்றால் என்னவென்று விபரமாக ௬று..! 

 அப்பாடா.! எனக்கு அரைகுறையாக தெரிந்ததை இங்கு அளந்து விட ஒரு சமயம் கிடைத்த சந்தோஷத்தில், “கணினி என்றால்,” என ஆரம்பித்து, “வலைத்தளம், வலைப்பூ, பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு.” என முடித்தேன். இதிலும் தங்களின்பாக்கள், தங்களைப் பற்றிய செய்திகள், வள்ளுவரின் குறளின் சிறப்புக்கள், காந்தியடிகளின் வரலாற்றுகள் என்று எப்போதும் எழுதி, தங்கள் அனைவரின் நினைவோடுதான், எங்களுக்குள் இருக்கும் திறமைகளையும் பறைசாற்றி பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் வருங்கால சந்ததியினருக்கும், உங்களைப் பற்றிய பெருமைகளையும் திறமைகளையும் மனதினில் நிறுத்தும்படிக்கு ஆவண செய்து வருகிறோம்.” என்றதும், அனைவரின் முகத்திலும், சிறு மகிழ்ச்சி ரேகைகள் ஓடியது.

சரி.! இன்று இங்கு வந்து நல்ல தகவல் சொல்லியிருக்கிறாய்.! இப்போது உனக்கு என்ன வேண்டும்.? கவிஞரின் குரலில் வேகம் இருந்தது.

இந்த வருடந்தான் என்னால் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை..! அடுத்த வருடமாவது ஏதேனும் போட்டிகளுக்கு ஏற்ற திறமையுள்ளவளாக, நல்ல தமிழை சிரமமின்றி இலகுவாக எழுதும்படிக்கு என்னை தமிழில் செம்மைபடுத்த வேண்டும். என் கனவே அதுதான்…. என்ற என்னை ஏளனமாக நோக்கியவர், “இப்போது மட்டுமென்ன.? உன்கனவுதான் இது..! கனவில்தான் எங்களை வந்து சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறாய்…!” என்று௬றி கலகலவென நகைக்கவும்,அனைவரும் உடன் முறுவலித்தனர்.

கனவா.? மறுபடியுமா.? அடக்கடவுளே.! அப்படியானால் இவர்கள் இன்னும் சற்று நேரத்தில் மறைந்து போய் விடுவார்களே.! ஆறஅமர அமர்ந்து உரையாட முடியாதே என்று நான் யோசிக்க, “என்ன யோசனை.? என மீண்டும் குரல் கம்பீரமாக வரவும், “இல்லை.! தூய தமிழை அறிந்து ,கற்றுக் கொள்ள நேரம் இல்லையே…! என வருத்தமாக….” என முடிப்பதற்குள், “தமிழ் தப்பித்தது..! அத்தோடு நாங்களும்…" என்று சற்று ஓரமாக ஏடுடன் அமர்ந்து நாங்கள் பேசியதையெல்லாம், மெளனமாக  ரசித்து கேட்டபடியிருந்த, அவ்வைப்பிராட்டி, மெலிதாக ௬றவும், மறுபடி அங்கு சிரிப்பலைகள் எழுந்தன. 

சரி..! நான் பாடியதை பூமியில் இவர்கள் இன்றளவும் உணர்ந்து வழிமுறை படுத்துகிறார்களே..! அந்தளவிற்கு சந்தோஷம். வாழ்த்துக்கள்.! என கவிஞர் மகிழ்ந்து வாழ்த்தவும், “எங்கே.! அந்தப் பாடலை ஒருமுறை பாடுங்கள்..! என அனைவரும் கோரஸாக கேட்க, கவிஞரின் நாவு கம்பீரமான குரலோடு அசைந்தது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

      இனிதாவது எங்கும் காணோம்
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.


யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

யாரங்கே.! மனித வாடை.! இங்கே எனக்குத் தெரியாமல் நீ எப்படி இங்கே..! இவர்களுடன் உனக்கென்ன பேச்சு.? என பயங்கரமான குரலில், சத்தம் வந்ததும் பாட்டின் சுவையில் மயங்கி கிடந்த என் விழிகள் திறக்க எதிரே ஆஜானுபாகுவாய் ஒரு உருவம். ௬டவே விழிகளை உருட்டியபடி, அரக்கர்கள் போல அருகே இரு முரட்டாத்மாக்கள். “கிங்கரர்களே…! என் அனுமதியின்றி சுவர்க்கலோகத்தில் நுழைந்து இங்கு நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுடன்., உரையாடி கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு என்ன தண்டனை கொடுப்பது? என சித்திர குப்தனை  அழைத்துக் கேளுங்கள்.” தண்டனை சீக்கிரம் நிறைவேற்றப்படவேண்டும்.. இன்னும் இந்தப் பெண்மணியைப் போல் எத்தனை பேர், இங்கே கிளம்பியிருக்கிறார்கள் என்று கண்காணித்து விட்டு வருகிறேன். என யமதர்மன் நகர, கிங்கரர்கள் தன் உதவியாளர்களை என் அருகில் காவலுக்கு நிறுத்தி விட்டு சித்திர குப்தனிடம். சென்றனர். 

நான் பரிதாபமாக என் எதிரில் நிற்கும் கவிஞரையும், அடிகளாரையும் நோக்கி, “எப்படியாவது இவர்களிடமிருந்து "விடுதலை" வாங்கி தந்து விடுங்கள்..! “எனவும்இது கஸ்டந்தான்..! என்ற அரை நம்பிக்கை பார்வையுடன் காவல் புரிபவர்களிடம் அவர்கள் எவ்வளவோ எடுத்துக் ௬றியும், காவலர்கள், முடியவே முடியாது என்ற மாதிரி வாதிட்டு விட்டு, இது எமக்கு வந்த ஆஞ்கை..! நீங்கள் எதையும் பொருட்டாக்காமல் இங்கிருந்து சென்று விடுங்கள்”… என்று அவர்களை அப்புறபடுத்துவதில் தீவிரமாக, அவர்களும் வேறு வழியின்றி, சரி..! உன் எழுத்தை யாரால் மாற்ற இயலும்..? இனி பிராப்த்தப்படி கனவில் இல்லாமல் நிஜமாகவே,
எங்களோடு உரையாடும் சந்தர்ப்பம் உனக்கு சீக்கிரம் கிடைக்கப் போகிறது போலிருக்கிறது. எதற்கும் உன் தெய்வத்தை வேண்டிக் கொள். பராசக்தி.! இந்தப் பெண்மணியை உன்னால் முடிந்த வரை காப்பாற்று.! தமிழ் வாழ்க,! தமிழைப் போற்றும் தமிழரைப் பற்றிய தவகல் தந்த இப் பெண்மணி வாழ்க.!” என்று வாழ்த்தி விட்டு கண்ணெதிரேயே மறையலானார்கள்.

ஐயோ.! இவர்களும் சென்று விட்டார்களே.! அவர்கள் ௬ற்றுப்படி அவர்களுடனேயே தமிழில் உரையாடி கற்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும் என்றாலும், இப்பிறவியில், எனது இலட்சியங்கள் என்னாவது.? முருகா.! என்னை இப்படி மாட்டி விட்டு விட்டு நீ எங்கிருக்கிறாய்.? இது உனக்கே நல்லதாக தெரிகிறதா.? கந்தா, கடம்பா…!” என உள்ளம் உருகி அரற்றவும், படபடவென மயிலின் தோகை சத்தத்துடன் முருகன் வந்து நின்றான். முருகனை கண்டதும், நான் இங்கு வந்த கதையிலிருந்து சொந்த கதை வரை நான் விளக்க, “எனக்குத்தெரியும்.! எல்லாம் யாமறிவோம்.! நாளை கிருத்திகை விழாவிற்கு பூலோகம் செல்லும் வழியில் உன் குரல் கேட்டு வந்தேன்.! காவலர்களே.! இந்தப் பெண்மணியை மன்னித்து அனுப்பி விடுங்கள்.! எனமுருகன் உத்தரவிட, காவலர்கள் தடுமாறினாலும், என்னை விட மறுத்து முருகனிடமும் வாதித்தனர்.

நான் இந்த அம்மையாரை புத்தி ௬றி பூலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன். உங்கள் யமனுக்கு இந்த நிகழ்வுகள் யாவும் மறந்து விடும்படி செய்து விடுகிறேன். எனவே உங்களுக்கு ஒன்றும் பாதகங்கள் வாராது. இவரை விட்டு அகன்று விடுங்கள்.!” என முருகன் சற்று கோபத்தைக் காட்டி சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு காவலர்களும் அரைகுறை மனதோடு மறைந்தனர்.

முருகா.! உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.! எப்படியோ சிக்கலான சமயத்தில் வந்து என்னை காப்பாற்றி விட்டாய்.! நீ இல்லாவிட்டால் என் நிலைமை, இன்று என்னவாகியிருக்கும்.? என் நல்ல நேரந்தான்என நான் முடிப்பதற்குள், ‘சரி.! சரி.! ஆனால், என் நேரம் நன்றாகவேயில்லை.! புறப்படு..! உன்னைக் கொண்டு பூலோகத்தில் விட்டுவிட்டு என் இதர பக்தர்களின் வேதனைகளையும், குறைகளையும்  அகற்ற வேண்டும். உன் ஒருவளிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.” என கந்தன் சற்று சிடுசிடுக்க. விரைந்து அவனுடன் மயிலேறிக் கொண்டேன். மயில் என்னை ஒரு விரோத பார்வை பார்த்து விட்டு, “என் தலைவனுக்காக உன்னைப் பொறுத்துக் கொள்கிறேன்.” என கண்ணாலேயே பேசியது.

ஏன் இப்படி அடிக்கடி இங்கு வந்து தொலைத்து என்னை தொல்லைக்குள்ளாக்குகிறாய்.?

முருகா……! தற்சமயம் வலையுலகின் பரபரப்புகள் நீ அறியாததா.? என் குடும்ப சூழலில், என்னால்தான் அதில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா.? ஆயினும், அடிக்கடி இந்த நினைப்புகளும் வந்து போவதால், கனவுலகத்தின் வழியாக அந்த உலகத்திற்கு சென்று அங்கு அவர்களை கண்ட மகிழ்வில், அதைப்பற்றி பேசி மகிழ்ந்திருந்து விட்டேன். இப்படியெல்லாம், நிகழப் போகிறது என நான் எந்த கனவிலும் நினைத்தும் பார்க்கவில்லையே.! என்ன இருந்தாலும் காப்பாற்ற நீதான் விரைவாக வந்து விடுகிறாயே முருகா..! எப்படியோ, நீ மூன்று உலகங்களையும் கட்டி ஆள்பவன். வலையுலகில் நான் சாதிக்க நினைத்த ஆசைகளைப் பற்றியும், என் மனக்குறைகளை பற்றியும் உன்னிடமும் சொன்னது எனக்கு நிறைவைத் தருகிறது முருகா…” என்றதும், திரும்பி ஒரு முறை முறைத்தபடிசரி.! எனக்குப் புரிகிறது. மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமே..! வாசலில் நின்று வாழ்த்திசைத்து விழாவுக்கு வரும் அனைவரையும், வரவேற்காது விட்டாலும், இங்கிருந்தபடியே ஒரு ஓரத்தில் நின்று தலையசைக்க மட்டுமாவது செய்ய வேண்டுமில்லையா.? அதையாவது செய்தாயா.? அதற்குள் கனவு என்று வீண் அவஸ்தைகளில் மாட்டிக் கொண்டு….”’ என்றவனை இடைமறித்து, ஆம்! முருகா…! நல்ல வேளை நினைவூட்டினாய்…! அதை செய்ய ௬ட இன்னும் நாளிருக்கிறது. இந்த நேரத்தில் என்னை யமனின் தண்டனைகளிலிருந்து நல்ல வேளை காப்பாற்றினாய்..! இதே மாதிரி என்னை என்றுமே நீ மறவாமல் இருக்க வேண்டும் முருகா..! பக்தியுடனான அன்பில் குரல் தழுதழுத்தது எனக்கு.

சரி.! இப்போதெல்லாம், நீ தொழுவதை குறைத்துக்கொண்டு அழுவதின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறாய்..! நானும் அந்தளவிற்கு உனக்கு உரிமை கொடுத்து விட்டேன். ! என்று முருகனும் பாசத்துடன் பேசவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று, “முருகா..! நீ மூன்று உலகத்தையும் நிமிடத்தில் சுற்றி வருபவன். இந்த வலையுலகின் பதிவர் திருவிழாவுக்கும், புதுக்கோட்டைக்கு செல்வாயல்லவா.? என்றேன் மெதுவாக.

பின்னே..! தமிழ் இருக்குமிடத்தில் யாமில்லாமலா..! என்றான் முருகன் சிறுநகையுடன்.

அப்படியாயின் முருகா..! நீ செல்லும் சமயம் என்னையும் இதேப் போல் அழைத்துச் செல்லேன். நானும் உன்னுடன் வருகிறேனே..! இந்த தமிழோடு சேர்ந்து சென்றால் எனக்கும் மகிழ்வாக இருக்குமில்லையா..? என்று இழுத்ததும், முருகனோடு சற்றே கோபமாக மயிலும் திரும்பி பார்த்தது.

ஓசிப் பிராயணமா.? இதற்குத்தான் உனக்கு அதிக இடம் கொடுக்க ௯டாது.! உரிமைகள் அதிகமாக, என் இடத்தையும் பறித்துக் கொள்ளும் அதிகாரத்தை தானகவே எடுத்துக் கொள்வாய் போலிருக்கிறதே..! உன்னை அங்கிருந்தே மயில் மீது ஏற்றி வந்தது தப்பாகப் போய் விட்டது. இதோ பார் உன் கேள்வியில் என்னை விட மயில் எப்படி மிரண்டு மருளும் பார்வை பார்க்கிறது பார்.!” என்றதும் மருளும் பார்வையில் மயில் எப்படியிருக்கிறது?” என நான் சற்றே குனிந்து பார்க்க, முருகனின் அனுமதியில்லாமலே அதன் முதுகை சற்று ஒருக்களித்து அதனின்று என்னை உருட்டி விட்டது மயில்.

அந்தரத்தில் பறந்து கீழிறங்கி நான் வந்து கொண்டிருப்பதை உணர்ந்ததும் மயில் என்னை தள்ளி கீழிறக்கி விட்டதை உணர்ந்தேன். ஐயோ  என்னை மன்னித்துவிடு முருகா..! என்னை அழைத்துப்போக யாருமில்லையே என்ற நினைவில் உன்னிடம் உரிமை எடுத்து கேட்டு விட்டேன். அதற்காக உன் மயில் பூலோகம் வருவதற்குள் என்னை தள்ளி விடலாமா.! மறுபடி எனக்கு உதவிட வரவே மாட்டாயா..?என்றபடி கதறிய என்னிடம், “கவலைப்படாதே..! இன்னல்கள் வரும் போது இன்முகத்துடன் நான் வருவேன். உன்னிருப்பிடம் இன்னும் சற்று தொலைவில் வந்து விடும். கனவுகள் அதிகமில்லாமல், நனவினிலே நீ ஜெயிக்க என் வாழ்த்துக்கள் என்றும் உண்டு..! என்றபடி மயிலுடன் முருகனும் மறைந்து போனான்.

மறுபடி என் தூக்கத்தின் முடிவில் கண்களைத் திறக்க அந்தப் பாடல் எங்கோ ஒலித்தது. “மனமே முருகனின் மயில் வாகனம்….!” ஆம்..! மனமும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனந்தானே..!

டிஸ்கி. மனம் என்ற மயில் வாகனத்தில் ஏறி கற்பனையிலேயே பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வருவேன். நிஜமாக வந்து கலந்து கலக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும், போட்டியில் வெற்றி வாகைச் சூடி பரிசுகளை தட்டிச் செல்லும் அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
                           நன்றி….! வணக்கம்…!