Showing posts with label அழகான மைசூர் அரண்மனை. பயணங்கள். Show all posts
Showing posts with label அழகான மைசூர் அரண்மனை. பயணங்கள். Show all posts

Tuesday, December 17, 2024

அழகின் பிரம்மாண்டங்கள்.

சென்ற  வருட தொடக்கத்தில்,    (ஒரு வேளை இது அதற்கும் முந்தைய வருட தொடக்கமா என்பது சரியாக நினைவில் இல்லை.:)) ) குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் குடும்பத்துடன் மைசூர் இரண்டு மூன்று நாட்களுக்குள் சென்று வருவதாக திட்டம் தீட்டி சென்று வந்தோம். சனிக்கிழமை  அதிகாலை கிளம்பி, திங்கட்கிழமை மாலை வாக்கில் வீடு திரும்பி விட்டோம். காலையில் செல்லும் வழியில் குழந்தைகளுக்காக ஒரு பார்க் (ஜி.ஆர்.எஸ் பார்க். அதில் நீர் நிலைகளில் விளையாட்டுக்கள். அதற்கு உள்ளே செலவதற்கே ஒரு நபருக்கு ரூ1000 கட்டணம் வசூலித்தார்கள். கிளம்புவதற்கு முன் கூட்டியே  ஆன்லைனில் மகன் அதற்குரிய கட்டணம் கட்டி  ஏற்பாடு செய்து விட்டார். ) சென்று விட்டு மாலைக்குள் தங்குமிடமாக ஒரு தரமான ஹோட்டல் ரூமில் இடம் அமர்த்திக் கொண்டுதான் சென்றோம் மாலையில் வேறு எங்கும் சுற்ற முடியாதென்பதால் குழந்தைகளும் (பேரன், பேத்திகள்) நீரில் ஓடியாடி    விளையாடி அலுப்பாக இருப்பதால், இரவு உணவை அருகிலிருக்கும் வேறொரு உணவகத்தில் முடித்துக் கொண்டு வந்து,ஓய்வெடுத்து மறுநாள் காலை மைசூர் அரண்மனை செல்லலாமென முடிவு செய்தோம் .

மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை முதலில் சாமுண்டி கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு அரண்மனை செல்லலாம் என நினைத்தால், அந்த ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியில் உள்ளவர்கள். "ஞாயிறு கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வார. நாட்களான நாளை காலை செல்லுங்கள்" எனக் கூறியதால், கோவிலுக்கும் செல்லும் முடிவை மாற்றி வைதது அரண்மனை செல்ல முடிவாகியது. 

சரி... அன்று அரண்மனை செல்லாமென்றால், ஞாயிறு அரண்மனை உள்ளே சுற்றிப்பார்க்க அனுமதி இல்லையாம். அதற்கு பதிலாக அன்று மாலை செயற்கை தீப அலங்கராங்களுடன் ஒளிமயமான அரண்மனையை பார்க்கலாம் என்றதும், காலை வேறு ஒரு சில  இடங்களுக்கு சென்று விட்டு, மதியம் உணவு முடிந்ததும் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு மாலை அரண்மனையை காணச் சென்று. அரண்மனை மின்னொளி அலங்காரங்களை சுற்றிப் பார்த்து விட்டு. அறைக்கு திரும்பினோம். அந்த காட்சிகளை இன்றைய பதிவாக படங்களுடன் தந்துள்ளேன. இது புகைப்படங்களுடன் இணைத்து ஒரு வழியாக பதிவாக்கி அப்போதே கொஞ்சம் எழுதி வைத்ததை, இப்போதும் வெளியிடாது விட்டால், மேலும் ஒரு மாமாங்கம் ஆகி விடுமென்பதால், இன்று பாக்கி எழுதாததை முடிந்த வரையில் எழுதி முடித்து இணைத்து  வெளியிடுகிறேன். :)) 



















இது என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். அங்கு அன்று ஒரே கூட்டம். அத்தனை இருளிலும், மக்கள் வெள்ளமாக அரண்மனை முழுக்க ஒளிரும்  ஒளிக்காட்சியை காண வந்திருந்தார்கள். நாங்கள் கொஞ்ச. தூரம் வரை தட்டித் தடுமாறிதான் நகர்ந்து சென்றோம். ஆனால், அரண்மனை உள்ளே சென்று அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்குமோ தெரியவில்லை... ? 

அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிகள் உண்டா.?இல்லை கைப்பேசி முதற்கொண்டு காமிராக்களை வெளியில் பத்திரப்படுத்தி விட்டுதான் உள்ளே செல்ல வேண்டுமா..? தெரியவில்லை. இப்போது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசி என்னிடம் உள்ளது. ஆனால் அது முன்பொரு தடவை (பல, பல வருடங்களுக்கு முன்பு.) மைசூர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சென்ற போது என் கையில் இல்லை. ஏதோ இந்த அரண்மனை மின்னொளி காட்சியை மட்டுமாவது இப்போது எடுக்க முடிந்ததே என மனம் மகிழ்வுற வேண்டியதுதான்..! 

ஒரு தடவை நாங்கள் இங்கு வந்த புதிதில் (பல வருடங்களுக்கு முன்பாக) சென்ற மைசூர் பயணத்தில் அரண்மனை உள்ளே  சென்று சுற்றிப் பார்த்துள்ளோம்.  அப்போது இந்த மாலை தீப அலங்காரங்கள் எல்லாம் இல்லையென நினைக்கிறேன். ஒரு நாளில் மாலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அரண்மனையை சுற்றிப்பார்க்க அனுமதி இருந்தது. ஆனால், அப்போது ரசிக்கும் ஆவலும், நேரமும் குறைவோ என்று இப்போது என் மனதில்  தோன்றுகிறது. 

அப்போது ஒரே நாளில் மைசூரில் பிரசித்தியான சில இடங்களை மட்டும் சுற்றி விட்டு மறுநாள் களைப்புடன் திரும்பி வந்து விட்டோம். இப்போது இரு தினங்கள் அங்கு தங்கியும் அரண்மனை உள்ளே சென்று பார்க்கும் நேரம் வேறு பல அனேக திட்டங்களுக்கிடையே நழுவி விட்டது. 


ஒரு பழமொழி உண்டே..! கல்லுக்கும், நாயிக்குமான ஒரு பழமொழி....! அது போலத்தான். ஆனால், இதற்கும் தகுந்த ஒரு கதை உள்ளதை இன்றுதான் கூகுளில் ஒர் இடத்தில் படித்தேன .(பழமொழிகளின் உண்மையான விளக்கத்தை உணர்த்தும் கதை).

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் பொதுவாக  நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.

அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.

அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறுதான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி.

கதை விளக்கத்திற்கு நன்றி. கூகுள்.

இந்தப்பதிவை படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.