Showing posts with label சிறகு. Show all posts
Showing posts with label சிறகு. Show all posts

Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Thursday, April 17, 2014

நானும், தமிழ் கடவுளும்



நானும் , தமிழ் கடவுளும்

பறக்க  சிறகுகள்  வேண்டும்!

எப்படியும் ஒரு பதிவு போட ஆசை !  (உருப்படியாக)…


முன்னுரை: வணக்கம் எனதன்புள்ள, நட்புகளே ! இப்பதிவை மேலே கொடுத்துள்ள ஏதாவது ஒரு தலைப்பை சிகரமாக வைத்து கொண்டு வாசிக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் …..
       தோன்றின் புகழோடு தோன்றுக !.. என்ற வள்ளுவர் வாக்குபடி வாழத்தான் ஆசை! ஆனால் என்ன செய்வது! தோன்றும் போதுதான் இந்த புகழ் கிடைக்கவில்லை, நடுவிலாவது, அது நம்மை எட்டிப்பார்த்தால், (மன்னிக்கவும்! நாம்தான் அதை எட்டிப் பார்க்க வேண்டும்.) நன்றாக இருக்குமே என்ற  நப்பாசை அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது.
                         எதையாவது சாதித்தால்தான் இது சாத்தியமாகும் என்று ஆசை காட்டி முனகி கொண்டிருந்த உள் மனசு ,”நீ என்னத்த சாதிக்க போறே? உனக்கு  திங்கறதையும், தூங்கறதையும் தவிர வேறு என்ன தெரியும்? “ என்று நக்கல் வேறு செய்து சந்தோஷபட்டு கொண்டிருந்தது.
                          “எனக்கு எழுத்தாளியாக வேண்டுமென்று ஆசை, ஏதோ! அதனால் சிறிது பேசபட்டாலும் போதும் ! என்றதும், கைக்கொட்டி சிறித்தது உள்மனசு. “நீயா ? எழுதப் போறியா? எதைப் பத்தி?போச்சு போ! உலகத்துலே எழுத்தாளர்களுக்கு”ன்னு இருக்கிற நல்ல பேரையும் கெடுக்க போறியா?நக்கல் சற்று பலமாக நான் ரோசத்துடன்,” நான் கற்றது கை மண் துகளளவு ! அதைக்கொண்டு ஏதாவது கிறுக்கறேன், என் கிறுக்கல்களும் கொஞ்சம் புகழ் பாதையிலே, சறுக்கி  விழாதான்”னு”பாக்கறேன் என்று அதுக்கு பதிலழித்து விட்டு எனக்கு தெரிந்த பாணியில் எழுத்துலகில் குதித்து விட்டேன்.
                         ஆக, எழுதியதை நான் மட்டும் எத்தனை தடவை பார்த்து ,பார்த்து  படித்துக்கொண்டேயிருப்பது? அவஸ்த்தையை எதிராளிகளும், படுவதை கண்டு ரசித்தால் அல்லவா !என் எழுத்தாள மனம் (எழுத்தாளர்கள் மன்னிக்க!) திருப்திக் கொள்ளும். என் வீட்டில் இருப்பவர்களிடம் நான் எழுதியதைப் படித்து பாருங்கள்!! என்று தொந்தரவு செய்ய ஆரம்பிக்க அவர்கள் அதை பொறுக்க முடியாமல் , இணையத்தில் உனக்கேற்ற ஒரிடம் கண்டு பிடித்து விட்டோம் அம்மா! அது ஒரு கடல்! முடிந்தால் நீ விரும்பும் நற்பெயருடன் , புகழோடு திரும்பி வா! வென ௯றி என்னை தமிழ்மணகடலில் பிடித்து தள்ளி விட்டார்கள்.
(கடலிலுள்ள  நண்பர்களும், நண்பிகளும், சகோதர, சகோதரிகளும் பொறுத்துக் கொள்ளவும். என் வீட்டில் உள்ளவர்களை சபித்து விட வேண்டாம்.)
                            சரி! நம்பணியை தொடங்குவோம்! என்று நான் அ,ஆ,,உடன் ஆரம்பிக்க இங்குள்ளவர்கள் காவியம் ,காப்பியம், என்ற ரீதியில் சிறகு விரித்து  பறக்க , நமக்கு சிறகு முளைப்பதற்கான  அறிகுறியே தெரியவில்லையே! இவர்களுடன் எப்படி பறந்து போட்டியிட்டு ஜெயித்து காட்ட போகிறோம் ! என்ற அச்ச உணர்வுடன்  தத்தளித்து கொண்டிருக்கிறேன். 
                              சரி! தோல்வியை ( மனமில்லாமல்) ஒத்துக்கொண்டு கரையேறி விடலாமென்றால், கரையில் என் வரவை ஆவலோடு எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் என் வாரிசுகள் “ என்னம்மா கண்ணு! “எங்களை கதை  படிக்க ரசனை இல்லாதவர்கள்! கலை ஆர்வமில்லை ! என கண்டபடி காது கிழிய பேசினாயே!  நீ போன கதை என்னாச்சு? என்று  நடிகன்  பாணியில் நக்கலடிக்க ஆரம்பித்து விடுவார்களேயென்ற பயத்தில்   முடிந்தவரை   இங்கையே  சுற்றி வரலாம். “அந்த கடவுள் அருளிலிருந்தால், சிறகுகள் முளைக்கட்டும்!  பறக்கலாம் !” என்ற முடிவுடன்  எப்படி சுற்றுவது என்ற நியதியை ௯ட அறியாது நான் இங்கு சுற்றும் காலத்தில், முருகனுக்கோர்முகில் இட்டேன்.
முருகனுக்கோர் முகில்


பார்த்தான் தமிழ் கடவுள்! பார்த்தனுக்கு உதவி செய்தவனின் அன்பு மருமகன்  அல்லவா ! “போனால் போகுது என்று , அவன் மேல் (எனக்கு அரை குறையாக தெரிந்த தமிழ் எழுத்துக்களை கொண்டு) ஒரு பாட்டெழுத அனுமதித்தான். அதை தன் தமிழில் வாசம் செய்யும் ஒரு அன்பரால் (தமிழ்வாசி) வெளிக்கொணர செய்தான். அதைக் கண்ட நான்கு நல்லுறவுகள், “உங்கள் வரவு நல்வரவாகுக “ என்று அன்புடன் ௯றிச் செல்ல என் விலாவை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ( சிறகு முளைப்பதற்கான ஏதேனும் அறிகுறி தென்படுகிறதாவென்று ) 
                               இன்னமும் இல்லை !
            “ போதுமா ?  திருப்தியா? ஏதோ நாலு பேர் வந்து நல்லபடியாக உன்னை வாழ்த்தினார்களே! உன் எழுத்தாளிஆசை இந்த பிறவியில் தணிந்ததா ? என்று தமிழ் கடவுள் புன்னகையுடன் எனை பார்த்து கண்ணால் கேட்க “நான், ஆமாம் ! ஆனால் ,...எனக்கு பறக்க  சி ...ற..கு.என்று இழுப்பதற்குள், இரு! இரு! என்னைத் தேடி நாலு பேர் வந்திருக்கிறார்கள் . அவர்களை கவனித்து விட்டு அப்புறம் உன்னிடம் வருகிறேன் !...என்று கண்ணாலேயே பதிலழித்து விட்டு மாயமாகி போனான். 
                 சரி ! அவன் ஆசியுடன் ஏதோ ஆரம்பம் ஆகியிருக்கு! நமக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டு சுற்றவேண்டியதுதான்! என்று சுற்றினாலும்,” நாம சுத்தறதை ஏன் யாருமே கண்டுக்க மாட்டேங்றாங்க? என்ற வினா வந்து இருக்கற கொஞ்ச மூளையையும் மழுங்க செய்தது. (அட! அது வேற உன்கிட்ட இன்னமும் இருக்கா ? உள் மனசு திடும்மென வந்து நையாண்டி செய்தது . அட!போப்பா! நீவேற! நானே வருத்தத்திலே இருக்கேன்! நான் ஏதோ ஒன்றிரண்டு எழுதினாலும் , அந்தகடவுள் புண்ணியத்திலே,“தனம்” கிடைத்த மாதிரி ஒரு நட்பு வந்து என் மனதில் “பால்” வார்த்து செல்ல, இன்னமும் நட்பு வட்டம் கிடைக்கவில்லையே! என நொந்து போயிருக்கேன். நீவேற! சமயம் தெரியாமல் ,....... என்று நான்  புலம்ப,  “கண்டு பிடி! நட்பை தேடி கண்டு பிடி! உன்னை சுத்தி  சுத்துறவங்களை நீ சுத்துனாத்தானே நீ சுத்துறதும், அவங்களுக்கும் தெரியும்! என்று உள்மனசு போதிக்க, அட! இது எனக்கு தெரியாம போச்சே! என்று நான் மற்ற பதிவுகளை படிக்க வந்தால் , நிறைய எழுத்துக்கள் அதைதான் ஊர்ஜிதபடுத்துகின்றன . (நன்றி! உள்மனசுக்கும்!  அதை வலியுறுத்தி எழுதிய பதிவர்களுக்கும் .... என்று நினைத்தவுடன் “ஹூம் “என்றது உள்மனசு ....சற்று செருக்குடன் .) 
                   திடங்கொண்டு போரடியதால், வந்த வலிகளை ஏற்றுக் கொண்டு, ஆக அதுவும் கடக்க, தீதும் நன்றும் பிறர் தாரா வாரா, என்பதை புரிந்து கொண்டு, மூடு பனியில் தடுமாறி ,கனவில் காணாமல் போனவர்களையும்கண்டு விட்டு, இன்னும் நிறைய இடங்களின் வாசம் உணர்ந்து, நிறையபூக்களை , ஸ்வாசித்த திருப்தியுடன் , சாதிப்பது அவசியம் என நான் உணர்ந்து சுற்றி வந்ததில் நாட்கள் நிறையவே நகர்ந்து விட்டது.
          சுற்றி சுற்றி உடல்சோர்வுடன் மனச்சோர்வும், அதிகரித்ததை தவிர வேறு ஒரு பலனும் இல்லையே! என்ன செய்வது ? என்று குழம்பி போயிருந்த ஒரு இரவு வேளையில்,இறைவா! என்று அரற்றியதில்,  தீடிரென்று அருகில் ஒரு குரல்ஆதரவாக ஒலித்தது! 
                         என்னவாயிற்று? உன் முயற்சி? வெற்றியா !
கண் கசக்கி பார்த்தால், அழகான மயில் வாகனத்தின், உதவியுடன் அருகில் வந்திறங்கிய அழகிய தமிழ் கடவுள் .!  “அதையேன் கேட்கிறாய் போ!” என்று உற்சாகமில்லாமல் சொன்ன என்னை புன்னகையுடன் பார்த்தவன் , “நீ சொன்னால்தானே கேட்க முடியும்” என்றான். 
                         நானும் “நீ மயிலேறி சுற்றியதை விட பன் மடங்கு நான் எப்படி பதிவுலகில் பதிவர்களின் எழுத்தை சுற்றி வந்தேனென்று” அலுப்புடன் விவரமாக விளக்க,“அப்படியென்றால் இனி உன்காட்டில் மழைதான் !” என்று  தட்டிவிட்டவனிடம் ,”மழையா? ஒரு சிறு தூரல் ௯ட இல்லை “என்றேன் . 
                       ஏன்? நீ அவர்களை பாராட்டி புகழ்ந்த  மாதிரி அவர்களும் பதிலுக்கு உன்னை புகழ் மழையில் நனைய வைத்திருப்பார்களே ! 
 “அதுதான் இல்லை! நான் அவர்கள் எழுத்தை பார்த்து திகைத்து போனதில், ஒரு வார்த்தை ௯ட பதில் எழுத தெரியாமல் சுற்றி சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டேன். 
                 தமிழ் கடவுள் லேசாக என்னை முறைத்தான் .
             

                         இதோ பார் ! நீ என் அண்ணனின் தும்பிக்கையை பற்றியபடி நீண்ட காலமாக ,இந்த எழுத்தாளி வரம் வேண்டி, ஒரு தூசியை விட சின்ன உருவங்களுடன் உருவமாகஉருண்டு கொண்டிருந்தாய் ! அவர் ஒரு நாள் லேசாக தும்பிக்கையை ஆட்ட அங்கிருந்து நழுவி என் காலில்வந்து ஒட்டிக் கொண்ட உன் கதைக்கு இரக்கப்பட்டு உனக்கு ஏதாவது நல்லது செய்யாலாமென்ற எண்ணத்தில் உனக்கு தெரிந்த தமிழில் என்னைப் பற்றி எழுதிக் கொள்ள அனுமதித்தேன் . மற்றபடி நீ அறிந்ததை வைத்து நீதான் முன்னுக்கு வந்து உன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். என்னை இப்படி அடிக்கடி தொந்தரவு செய்ய ௯டாது.! 
   “ அது வந்து எனக்கு  நீ நிறைய விஷயங்கள்....இது விஷயமாக ,.க..ற்..று கொடுக்க”முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் அவன். 
   இதோ பார் ! இத்தனை வயது கடந்ததில் நீ ,அனுபவம் .அகராதி  அதிசயம் ,அரசியல் ,அற்புதம் ,ஆன்மீகம் இதைப் பற்றியெல்லாம்  அறிந்து கொண்டிருப்பாயல்லவா? 
           இல்லை! எனக்கு தெரிந்ததெல்லாம் அன்பு, அடக்கம், அவசரம்,அதிகாரம் , அறியாமை, ஆசைகள் என்று என் உள்மனசு எடுத்து கொடுத்த வார்த்தைகளை அவன் பாணியிலேயே சற்று வேகமாக நான் சொல்ல ,...............................

        தமிழ் கடவுளுக்கு முகம் சிவந்தது .

“என்னிடமே  கிண்டலா ! உன்னைச்சொல்லி குற்றமில்லை! என்னைப் பற்றி உன் “அழகான” தமிழில்  எழுத நான் உதவினேன் பார்! என்னைச் சொல்ல வேண்டும்!” வருகிறேன் !என்று புறப்பட யத்தனித்தவனிடம் ,....

     “அப்படி யென்றால் என் ஆசைகள் ,....

“முடிந்தால் ,உன்னை அடுத்த பிறவியில் ஆரம்பத்திலேயே அழகாக செதுக்குகிறேன் ”என்றபடி விருட்டென்று மாயமாய் மறைந்து விட்டான் .


       ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தவளை யாரோ, அனல் கக்கும் பார்வையுடன் பார்ப்பதை உள் உணர்வு உணர்த்த சற்று  திரும்பி பார்த்தால் அந்த அழகான மயில் என்னை நோக்கி முறைத்துக் கொண்டிருந்தது .ஓ.....தமிழ் கடவுள் என் மேலுள்ள கோபத்தில் தன் வாகனம் ஏறாமலேயே ,சென்று விட்டாரா ? அத்தனை வருத்தத்திலும், என் உதடுகளில் புன்னகையை கண்ட மயில் , “என்ன சிரிப்பு ?” என்று அதட்டியது . 
      
        ஒன்றுமில்லை!... என்றதும் , என் தலைவருடன் அவர் தன் அண்ணனைக் காண செல்லும் போது, அப்போதைய “மயிலு காலத்திலிருந்தே” ( நான்சொல்வது என்னையல்ல !) உன்னை நானும் பார்த்திருக்கிறேன் .கோபத்துடன் தடித்த குரலில் பேசியது மயில். 
       “புரிகிறது !” என்று நான் இழுத்தவுடன் , “இதெல்லாம் புரியும்! எது புரிய வேண்டுமோ அது புரியாது!”உள் மனசு சமயம் பார்த்து கெக்கலிக்க , ஏய் ! பேசமாலிரு!  எல்லாம் உன்னால் வந்த வினைதான்! என்று நான் கத்த உள் மனசு முகத்தை தொங்க விட்டு கொண்டு நகர்ந்தாலும் ,......
  “ என்னாலா ? நான் என்ன பண்ணினேன் உன்னை !.. என்றபடி மயில் துள்ளி குதித்தபடி கோபமாக ஓரடி முன்னால் வந்தது .
           இல்லை! இல்லை! நான் உன்னை சொல்லவில்லை ! நான் அவசரமாக மறுத்ததும் ,நின்ற மயில் , இதோ பார்! புத்தி உள்ளவன் பலசாலி! புத்திசாலிதனமாக பிழைத்துக் கொள் !நீ பதினாறிலிருந்து வேண்டுவதை என் தலைவரின் அருளினால் பெற்றிருக்கிறாய் ! தக்க வைத்து கொள்வது உன் கையில்தான் இருக்கிறது !புரிகிறதா?” உபேதேசித்த மயிலிடம்  ,புரிகிறது! ஆனால் என்னால் நன்கு படித்து பார்க்காமல் , எழுதபட்ட அந்த கருத்தை புரிந்து கொள்ளாமல், அந்த கருத்துக்கு பதிலுரை இடமுடியவில்லையே !நான் அங்கும் இங்கும் தேடி பதிலை உருவாக்குவதற்க்குள் அவர்கள் எங்கோ பயணித்து விடுகிறார்களே !அதனால்தான் தமிழுக்குடையவனிடமே , என் திறமையையும் வளர்த்து கொள்ளலாமென்று நினைத்தேன். நான் சுத்தி வந்த இடங்களிலும் இது பற்றி நிறைய விவாதங்களை பார்த்தேன். அது என்னவென்றால் ,...
   நிறுத்து! உன் கதை எனக்கெதற்கு ? நான்  இது வரையில் ஒருபோதும் என் தலைவரை பிரிந்தில்லை , இன்று உன்னால் அவர் என்னை௯ட மறந்து சென்று விட்டார் .” சோகத்துடன் பேசிய மயிலை ஆறுதல் படுத்துவதற்காக, “அடாடா !நீயும் என்னை மாதிரிதானா ?அவர் அருளில்லாமல்  உன்னால் தனியே செல்ல முடியவில்லை பார்த்தாயா?அதனால்தான் நானும் எப்போதும் அவரிடமே ஆலோஜனை கேட்கிறேன் .நீ உண்மையிலேயே இப்போதைய,“மயிலாக இருந்தும், காலொடிந்த சப்பாணியாக இருக்கிறாய் ,”பார்! என்று தமாசாக பேசி அதை கலகலக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டே போக, சோகமாக இருந்த மயில் நிமிடத்தில் பொங்கி எழுந்தது.  
 

             “ என்னிடமும் கிண்டலா ! உன்னை என்ன செய்கிறேன் பார் ! சிறகை விரித்தும் சுழற்றியும் ஆட்டியபடி அது என்னை நோக்கி ஓடி வந்தது. 
           ஐயோ !கடவுளே ! இது என்ன சோதனை!பேச தெரியாமல் பேசி விட்டேனே ! பறக்க சிறகு வேண்டும் என்று விரும்பி வேண்ட, இன்று சிறகுகளே எமனாக வந்து வாய்த்து ஒரேடியாக பறக்கப் போகிறேனோ ! தமிழ் கடவுளே !என்னை காப்பாத்து ! 
                          டமாலென்று  கட்டிலிருந்து உருண்டு விழுந்தேன். ..கண் விழித்து பார்த்தால் ,மயிலும் ,தமிழ் கடவுளும் காணாமல் போயிருக்க, அது கனவென்று புரிந்தது.
                   பின்னே ! மற்ற இடுகைகளையும் படித்து பார்த்து அவர்களுக்கு தகுந்த பின்னூட்டம் இடவேண்டுமென்று நாயும், பேயும் உறங்கும் நேரத்திலும் விழித்திருந்து,பின் காலை கடமையாற்ற  துரிதமாக எழ வேண்டுமேயென தூங்கியும், தூங்காமலும் அதே நினைவுடன் படுத்தால் , இடைபட்ட நேரத்தில் அது சம்பந்தபட்ட கனவு தானே வரும். 
                       சரி! எப்படியோ, கனவுபலிக்க வேண்டும். (ஐய்யய்யோ !இந்த கனவல்ல! ) சிறகு விரித்து பறக்கும் கனவு! கனவு நனவாக கண்டிப்பாக ஒருநாள் கை கொடுப்பான் தமிழ் கடவுள் !
                  எனக்காக வருவான் வடிவேலன் !....
 “ எந்த வடிவேலன் ” ஒரு குரல் எக்களித்தது ....வேறுயார்? வழக்கபடி  அந்த  உள்மனசுதான் !.......

முடிவுரை: எப்படியோ நானும் ஒரு நீண்ட பதிவை எழுதியாச்சு! ஒரு விஷயத்தை சொந்தமாக நீளமாக எழுதினால் (அது நன்றாக இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மனப்பாடம் செய்து எழுதாமல், கற்பனையுடன் எழுதியதற்கு ,மதிப்பெண் நன்கு விழும் என்பது படிக்கும் பருவத்தில் போதனை!இங்கு எப்படியோ ?) நன்றாக இருக்குமென்று தோன்றியதால், அதிகரித்து விட்டது.
              
                    பொறுமையுடன் “பார்த்து ”படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான 
                            நன்றிகள்...