Tuesday, July 22, 2014

முருகா! இவையொன்றாக நான் பிறந்திருந்தால்!!!


உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள், என்னைக் கொஞ்சம்
பார்த்தும், பாராமலுமிருக்க, மற்ற
இரு முகத்தின், இரு விழிகளின்,
ஓரப்பார்வை, என்னைச்சிறிது
தொட்டும், தொடாமலுமிருக்க, தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் முழுப்பார்வையும்,
முழு திக்கிலும், பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும், முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல், என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து உன்னிடமிருந்து, மறு
மொழியொன்றையும், தினம் எதிர்பார்க்கின்றதே!
 பறவையாய் நான் பிறந்திருந்தால், என்
பறக்கும் திறனினால், பந்தென கிளம்பி,
உனைச்சுற்றும் சில பறவைகளோடு,
உளம் களிக்க உனைத் தொட்டு, என்
சிறகுகளால், உனை தினம் வருடி,
சிறகடித்து, வானில் வட்டமிடும் பிற
பறவைகளோடு, ஒரு பறவையாய், உன்னை
பலகாலம் சுற்றி வருவேன்.

 

 மலர்களாய், நான் மலர்ந்திருந்தால்,
மணம் வீசும் அச்சிறு பொழுதில், உன்
மார் மீதும், தோள் மீதும், மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் மாறி,
மணந்திருக்க, மகிழ்ந்திருப்பேன்.
வாசமுள்ள மனதுடனே, உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும், நான்
வாழும் வரை வசித்திருப்பேன்.

மேகமாய், நான் ஊர்ந்திருந்தால்,
மோகமுற்ற மனதுடனே, கடும்,
வேகமாய் அவ்விடம் விட்டு நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் அணைந்திடவே,
தங்கு தடையில்லா, நீர் தாரையாவேன்.

நிலவாய் நான் நீந்தியிருந்தால்,
நீக்கமுற நிறைந்திருக்கும், என்
தன்னொளியால், உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம், உனை
இரசித்து, கரையாமல், கரைந்திடவும்,
இமையோன் மைந்தா! உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் பெற்றிடவும்,
இயன்றவரை முயன்றிருப்பேன்

உமையவளின் அருமைந்தா!
உனைச்சுற்றிச் சூழ்ந்திருக்கும், மற்ற
மரங்களினிடையே, ஒரு மரமாக
மண்ணோடு நான் நின்றிருந்தால், என்
கிளைகள் ஆடும் அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக நான் கலந்து, உன்
காதோடு தினம் உறவாடி, என்னை
காக்க! காக்க!, என்றே துதி பாடி, நின்
கழலடியை மறவாதிருக்க பண் பாடி, என்
மனதின், எண்ணமெல்லாம், இந்த
மால் மருகனை விட்டகலாது, ஒருநாளில்,
மண்ணின் மடியில் சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் வரத்தை,
கண் மூடி, மனம்கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம், எந்தன்
கந்தனை வேண்டியபடி, நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் களித்திருப்பேன்.

இவற்றிலொன்றிலும், நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு, உன்னைத்
தொடவும் நேரம்  பிறக்கவில்லை!
தொடரவும், வழி அமையவில்லை! என்னைத்
தொடர்ந்து வரும் பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது, இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்! தற்சமயம் நின் கருணை, அக்
கட்டவிழ்த்து போனதில், உந்தன்
காட்சி கிடைத்திட, என் கவலை அகன்றிட,
கந்தா! எனை நோக்கி இனியேனும், மனம்
களிப்புற கருணைக்கண் திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் சிரத்தையோடிருக்க,
கந்தனே, உன் சிந்தைதனில், நீ
எந்தனையும், சற்று நினைத்திருக்க,
வந்தனையோடு துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்.! என்
மரணம் என்னை தொடும் வரை, உன்னை
மறவாத வரம் தந்தருள வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை, தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து யாசிக்கின்றேன்.!!!!


Sunday, July 6, 2014

(லேட்)டஸ்ட் ஆன பத்துக்கு பத்து...வெளியூர் பயணங்களில் என் எழுத்துப் பயணம் தடை பட்டிருந்த இரு வாரங்களில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்)  சகோதரரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.

சந்தோசம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.!!!

திகைப்பு….  இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் பதில் அளிக்க என்னால் இயலுமா?

பதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கடந்த ( மறந்த ) ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு பதிலை உருவாக்கி, ( நன்றாகத்தான் சமாளிக்கிறாய்? வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய்? உன்னை…… என்று மனசாட்சி பல்லை கடிக்க..!) சரி! ஒரு பதிவாகத்தான் இருக்கட்டுமே! என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.

வலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக என் தளத்திற்கு வந்து கருத்து ௬றியவர்கள் மிகவும் குறைவு! நானும் நிறைய தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் ௬றிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா? என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது!
    
இதோ! கேள்விகளுக்கான, என் பதில்களை,
 
விமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 


உங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?முதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை! இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா? அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா? என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட! இத்தனை ஆசையா உனக்கு? ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே!! உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான்! )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன்! யாருமேயில்லை! (அதன் பின்தான் புத்தியில் உதித்தது! காதருகே பேசி சென்றது என் விதியென்று!!.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க! பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்!!!!. 
     
 
என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான்! ஆனால், கணணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


 

கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக? சிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி ௬றுவார்கள். “என்ன அர்த்தம்”? என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒருவயது வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, புன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று ௬றுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது?

 

 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?முன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை! அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!)

 

உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?


       

 “திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ! அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோசம் தினமும் உங்களை வந்தடையும்!” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.

 

உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்?


ஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்பித்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறது?இயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்யும் என நினைக்கிறேன்.  

 

நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


 குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ! அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும்.! நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல! )


 

உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்?

 
    தவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி! தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்க்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?)

 
 உங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?


"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் ௬றிய வாள் கொண்டு இரு ௬றாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான்.! “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் ௬றுவேன்.

குழந்தைகளற்ற நண்பறென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான்.! “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.  


 


 உங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்?

 
வீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும்.! அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது ஒட்டுவது, தைப்பது என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே!” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் இன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.

         
                இதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...