காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு. இன்று கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்... சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல் அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள் இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.
நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.
வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும் ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது.
மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன. மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக் கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர்.
"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது.
"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள். எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி.
"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ... இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம் மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான்.
அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும் இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே வந்தமர்ந்தான் அவள் கணவன்.
"பவானி... இன்று உன் கைப்பக்குவம் போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி...... எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான்.
"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி.
பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன்.
கதை முடிந்தது.
பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:))) ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏.