வணக்கம் அனைவருக்கும்.
காலையிலிருந்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஏன் அந்த நேரம் வரை கோவிலுக்கென்று எங்கும் செல்லும் எண்ணங்கள் இல்லாத போது, நேற்று மாலை ஆர்.ஆர். நகர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு வீட்டிலுள்ள அனைவரும் தீடிரென சென்று வந்தோம். அவ்வாறு வரச்சொல்லி எங்களை அம்பாள் அழைத்தாள். அவளின் உத்தரவுபடிதான் அனைத்தும் தடையின்றி நடக்கிறது/நடந்தது. இனியும் நடக்கும். நேற்று அம்மனின் அருள்மிகும் அழகு மனதை நிறைத்தது. அனைவரும் நலமாக நோய் நொடிகளின்றி வாழ வேண்டும் என பிரார்த்தித்து வேண்டும் போதே அன்னை "அவ்விதமே" என வாக்கு அருள்வதாக மனதுள் ஒரு பிரமை. அந்த அளவுக்கு அன்னையின் முகமும், கண்களும் கருணை ததும்பி காட்சியளிப்பதாக தோற்றமளிக்கும் ஒரு திருவுருவம் நேற்றைய நிறைவான தரிசனமாக கிடைத்தது. இந்த தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக இக்கோவிலுக்கு செல்லவில்லை. அதற்கு முன் பல தடவைகள் சென்றிருக்கிறோம். இங்கு செல்போன் படங்கள் எடுக்க எப்போதும் அனுமதியில்லை. இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் கோபுரங்களை வெளியிலிருந்தபடி கூட புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எனவே இணையத்திலிருந்து புகைப்படம் எடுத்துப் போட்டுள்ளேன்.
இன்று தான் எங்காவது கோவிலுக்கு போக வேண்டுமென நினைத்தோம். ஏனெனில் இன்று என் பேத்திக்கு (மகள் வயிற்று பேத்தி) பிறந்த நாள். . இன்று இங்கு மாலை நல்ல மழை. ஆனால் இன்று மழை வந்து விட்டால் குழந்தைகளை அழைத்து கொண்டு போவது கடினமாகி விடுமேயென நேற்று மாலையே வந்து தரிசனம் செய்ய வைத்து விட்டாள் அன்னை. ஆனாலும் நேற்றும் ஒரளவு சிறு மழையோடு பெய்து நின்று விட்டதால், மழை விட்ட பின் சென்று வந்தோம். அன்னையின் அருள் பெற்று என் பேத்தி பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வை பெற வேண்டுமென மனதாற தாயிடம் வேண்டிக் கொண்டேன். நீங்களும் அவளை அன்புடன் வாழ்த்துங்கள். வலையுலக சுற்றங்களாகிய உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் அவளுக்கு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில், இதையாவது சற்று கிடைத்த நேரத்தில். மதியமே எழுதி விட நினைத்தேன். இந்த நினைப்பும் அன்னையின் அருளால்தான் தீடிரென என் மனதுக்குள் தோன்றியது. "அவள்" இல்லையெனில் அகிலமே இல்லை. எந்த இயக்கமும் இல்லை. சரிதானே..?
ஆனால், காலை டிபனுக்கு அப்புறம் மதிய உணவுக்கென அனைவருக்கும் சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார், உளுந்து வடை, அக்கார வடிசல் எனும் ச. பொங்கல் என சில பல பிறந்த நாள் வேலைகள் வந்து பதிவை முடிக்கவே காலந்தாழ்த்தி விட்டது. அதனால் இன்றும் நேற்றும் மற்றவர்களின் பதிவுகளுக்கும் சரிவர வர இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும்.
அனைவரும் இனிப்பு பிரெட் கேக் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு உங்கள் அன்பான வாழ்த்துகளை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.