இன்று கந்த சஷ்டி பெருவிழா கண்டு கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கந்தனருள் எங்கும் பரிபூரண ஒளி வீசி, மனங்குளிர மணம் பரப்பி அகிலமெல்லாம் தழைத்தோங்க மனமாற அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அவ்வாறு மனங்குளிரும் பொழுதான இன்று மனம் நிறையும்படியான எனக்கு மிகவும் பிடித்த சில முருகன் பக்திப் பாடல்களை அவனருளால் பகிர்ந்துள்ளேன். இந்தப் பாடல்கள் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் கேட்கும போது, அருள் சுரக்கும் முகத்தோடு நமக்கு அத்தனை அருளையும் வாரி வழங்கும் கந்தனை, அருகிலிருந்தே கண்டு அவனை நம் மனதோடு ஒருமுகப்படுத்தி மெய்யுருக நாமும் பாடுவது போன்ற ஒரு மன நிறைவைத் தரும். ஏனென்றால் நம் "உள்ளமெனும் கோவிலில் உறைபவன் அவன்தானே.." என்னுடனே இதை அவ்வாறே கேட்டு ரசிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நம் வினைகள் யாவையுமே தன் கை வேல் கொண்டு களைபவன் முருகன். அதனால்தான் "வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்க பயமுமில்லை." என்று அவனைப்பாடித் தொழுகிறோம். எந்த நாளும் அவனை பணிந்து தொழும் பணிவொன்றையே அவன் நமக்கு தந்தருள வேண்டும். "உனைப் பாடும் பணிவொன்று போதும்."என்ற இந்தப்பாடலில் அவனை எந்நாளும் பணிவதையே வேண்டுகிறோம்.🙏.
இந்தப்பாடலில் "எங்கெல்லாம் தேடுவதோ"எனும் போது மனமுருகிப் போகும். நிலையற்ற இந்த வாழ்வில் மாறி மாறி வரும் நிரந்தரமான ஆசைகளுடன் வாழும் முறை தெரிந்த நாம் இறைவனை தேடிக் கொண்டேதானிருக்கிறோம். நம்முடைய தேடுதலின் தவிப்பறிந்து அதற்கான ஒரு நேரத்தை வகுத்துக் கொடு இறைவா..! என வேண்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.அந்த வேண்டும் மனப்பான்மையை இந்தப்பிறவியிலேயே தந்து விடு என்பதுதான் நம் ஆசை கலந்த வேண்டுதலாக இருக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏.
இன்று நாங்கள் இங்கு அடிக்கடி சென்று வந்த சண்முகா கோவில் புகைப்படங்களை போட்டு இன்றைய நன்னாளில் பதிவாக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், "அவன்" நினைப்பு இன்று அவனைத் தொழும் அழகான பாடலாக இருக்க வேண்டுமென்பதுதான்..! என்றும் நம்மை ஆட்டுவிப்பவன் "அவன்தானே".. "அவன்" நினைப்புதான் என்றும் சந்தேகமற வெற்றிக் கொள்ளும். அதனால் இந்த அழகான பாடல்கள் கொண்ட அவசர பதிவு.
இந்தப்பாடல் "மயிலாக நான் மாறவேண்டும். உன்னைத் தொழ உன் அடியார்கள் ஏறி வருகின்ற படிகளாக நான் மாற வேண்டும்." என்று வருகிறது. நம் விருப்பங்களை உளம் உருக நம்பிக்கையுடன் கேட்டால் அவன் நிச்சயம் தந்து விடுவான். 🙏.
இதோ பாடல். முருகனின் அருகிலேயே நாம் என்னவெல்லாமாக பிறந்து இருக்க வேண்டும் என்ற ஆசை கலந்த வேண்டுதலைக் கொண்ட பாடல். 🙏.
வீடியோ பாடல்கள் நன்றி கூகுள்.
அழகான பாடல்களை கேட்டு ரசித்து அவனருள் பெற்ற அனைவருக்கும் மனம் நிறைவான நன்றிகள். 🙏.