கதையின் 2.ம் பகுதி....
"சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடி வர்றேன் இப்ப எப்படி இருக்கு....?" என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார்.
அப்போது சதாசிவத்தின் வீட்டிலிருந்து வெளிவந்த சுசீலாவை பார்த்ததும், "அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்கோன்னு சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான்...." உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன்... .நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் ஊருக்கு போகலாமா. . .? நீயே நியாயமா பதில் சொல்லு.... இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்கு பெரிதாகி விட்டது... ?" என்று கோபத்துடன் வெடித்தார்.
"அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு... எனக்கு நாளைக்கே சரியாகிடும் .. சாதாரண ஜீரந்தானே.... அவனும் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் முடிந்ததும் வந்து விடுவான்.." மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.
"உன் மகனை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டியே.... ஆனால், அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா....? உனக்கு தெரிஞ்சாலும் நீயும் வெளியிலே காட்டிக்க மாட்டே. ... உன் சுபாவம் அப்படி...! மனசுகுள்ளேயே உன் கவலைகளை வச்சு பூட்டி மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ..... உன் பையன் இப்ப ரொம்ப மாறிட்டான்... வளர்த்த கடா நெஞ்சிலேதான் முட்டுமுனு.. உனக்கு தெரியாததா?ஆனால், வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிறது .. நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே..." என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.
இவர்களது உரையாடலை சற்று தர்ம சங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, "மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?" என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.
"சரியம்மா... .என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து, அட...! என்னப்பா...நீ... அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே.... , அவ எம் பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா..? " என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டார்..
நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.
"சரி... சரி.. , ஏதோ.... உன்னை இந்த நிலைமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. அதான் சொல்லிட்டேன்.. இது இந்த சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமாருக்கும் தெரியும். போன வாரம் குமார் கூட உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம்.... . உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன் பையன் சொல்லியிருக்கான் தெரியுமா... ? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்களையெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு.... நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னைப் பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறேன்.. . ஆனால், ,உன்னை விட்டு நிரந்தரமாக....... எப்படி சதா?" மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.
நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்
தொடர்ந்து வரும்.....