ஆரவாரமிட்டபடி
அங்குமிங்கும்
ஆடி ஓடிய, அணில்கள்
காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே போயின!
மற்ற பறவைகளின்
பலவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின!
பிறநில வாழ்
விலங்கினங்களும்
விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல்
ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில், இது,
கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.
மழை! மழை! மழை!
எங்கும் மழை!
எத்திக்கும் மழை!
மழையரசி
மகிழ்ச்சிப்பெருக்கில் தன்
மனந்துள்ள கொட்டித் தீர்த்தாள்.
மேள தாளத்துடன்
ஆனந்தம் பொங்க
மேக வீதியில் வலம்
வந்தபடியிருந்தாள்.
இதுகாறும்
இவ்வுலக மாந்தர்க்கு
கடமையின் கருத்தை
செவ்வனே விளக்கி வந்த
கதிரவனும் அரசியின்
கட்டளைக்கு பணிந்து
மூன்று நாட்களாய் தன்,
முகம் காட்டாது
முடங்கிச் சென்ற வண்ணம்
இருந்தான்.
மழை வேண்டி.
இந்த மண்ணில்
பல வேள்விகளும்,
வேண்டுதல்களும் செய்த
மண்ணில் வாழ்
மக்களுக்கும்,
மழையரசியின்
மட்டற்ற சீற்றம் கண்டு,
மனதில் பக்தியோடு
பயமும் உதித்தது.
பூமித் தாய்க்கு
வேதனையையும்,
புவிவாழ் உயிர்களுக்கு
சோதனையையும்,
மேலும் தரவிரும்பாத
அன்னை தன்,
மேக குழந்தைகளை
அதட்டி, அடக்கி,
துள்ளித் திரிந்த
மழை கற்றைகளை
தூறலாக போகும்படிச் செய்தாள்.
துளிகள் விழுந்த வேகத்தில்,
துள்ளி கண் திறந்தான்
அந்த விவசாயி,
சுற்றிலும் பார்வையை
சுழற்றி ஓட விட்டான்,
சுடும் நெருப்பாய்
சுட்டெரித்து கொண்டிருந்தான்
சூரியன்.
மழைக்கு மாறாக
மாதவம் செய்தபடி
மனங்களித்து
மகிழ்ந்திருந்தான்
அக்குடிலின் வாயிலில்
குத்துகாலிட்டபடி
அமர்ந்தந்த
நிலையிலும்,
இத்தனை உறக்கமா?
நீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி
நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது,
இது,
பகல் பட்டினியால்,
பரிதவித்து வந்த உறக்கம்,
பஞ்சடைந்த கண்கள்
பாவப்பட்டு மூடிக் கொண்டதால்
வந்த மயக்கம்.
அந்த நித்திரையிலும் ஒரு
அற்புத கனவு!!! ஆனந்த கனவு.!!
இந்த மழை கனவு!!!
இந்த பகல் கனவை
பார்த்த மனக்கண்களின்
மகிழ்ச்சியில் வந்தது இந்த
நீர்த் துளிகள் ! ஆனந்த
கண்ணீர் துளிகள் !
பார்வை பட்ட இடமெல்லாம், .
பழுதடைந்த வயல் நிலங்களும்,
பயனற்ற கலப்பைகளும்,
பரந்த அப்பகுதியையே
பாழடைந்த சோலையாக்கின
எட்டாத கனவுடன்,
ஒட்டிய வயிறுடன்,
கண்களில் பசி சுமந்த
மக்களையும், கண்ட போது
கலக்கமடைந்தது
அவன் மனது.
இனி, இந்நிலை தொடர்ந்தால்,
பசியினால், பரிதவிக்கும்
மாந்தர் மட்டுமில்லாது,
அணில்களும் ஆடி ஓடாது!
காகங்களும் கரையாது!
பறவைகளும் பாடாது ! ஏனைய
ஜீவராசிகளும் தன்
ஜீவனை இழந்து விடும் !
இறைவா!
இவைகளுக்காகவாவது இந்த
பகல் கனவை
பலிக்க வைத்து விடு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இது எப்போதோ பதிவுலகம் வந்த துவக்கததில் எழுதி அவ்வளவாக பார்வையை பெறாதது. சிறந்த பதிவர் சகோதரர் திரு. வை. கோபலகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே வந்து நன்றாக உள்ளதாக நவின்று விட்டுச் சென்றார். அவருக்கு இன்றும் என் மனமார்ந்த நன்றி.
பொதுவாக கவிதைகள் நீளமானல் யார் கருத்திலும் நிலைபெறாது எனத் தெரியும். இங்கு கவியரசர்கள் (சகோதரர், துரைசெல்வராஜ் அவர்கள், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்) இயற்றும் அற்புதமான கவிதைகளுக்கு முன் இதை கவிதை எனச் சொல்லவும் நாணுகிறேன். இருப்பினும் எனக்குத் தெரிந்த வரிகளை மடக்கிப் போட்டு எப்போதோ ஈந்த இந்தக் ...... யை இப்போது ஒரளவிற்காகவாவது ரசிப்பீர்கள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் பதிவாக்கி காத்திருக்கிறேன். பார்வையிடும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.