Tuesday, February 25, 2020

சற்றுப் பூரிப்பாக...

பூரியும், பீட்ரூட் கூட்டும்.

முதலில் பூரி செய்வது எப்படி? என நான் விளக்கிக் கூறலாம் என நினைத்து வார்த்தைகளை தயார் செய்தபடி ஆரம்பிக்கும் போது, தீடிரென என்னைச்சுற்றி நிறைய பூரிக்கட்டைகள் பாய்ந்து பாய்ந்து அடிக்க வருவது போல் என் கண்களுக்கு தெரிந்தன. ஒரு வேளை மன பிரமையாக இருக்கலாம்.. இல்லை பூரிக்கட்டையை கழுவி துடைத்து, அதை வைத்து பத்து பதினைந்து பூரிகளுக்கு மேலாக உருட்டி, பூரிகளை ரெடி செய்து, அவைகளை கைப் பேசியில் சிறைப்பிடிப்பு செய்து என அந்த "உருட்டுக் கட்டைகளுடன்" இதுவரை  சௌஜன்யமாக உறவாடியதில், அது கோபமடைந்து  ஒரு "வில்ல"
மனப்பான்மையைை பெற்று விட்டதோ என அதை அன்புடன் பார்த்த போதும், அவைகள் சீற்றமுடன் தன் உருட்டும் விழியைக் கொண்டு, உறுமிக் கொண்டபடியே என்னை நோக்கி உருண்டு  வர ஆரம்பித்தது.

 அவசரமாக அவைகளை தடுத்து, 🤗 நிறுத்தி விசாரித்ததில்,  "எங்களை பயன்படுத்தி நீ நினைப்பதை விட அழகான  பூரி செய்து, பூரிப்படைந்தவர்கள் இதுவரை உலகில் கோடி பேர் இருக்கிறார்கள். இதிலே நீ வேறு எங்களை வைத்து பிரபலம் தேட போகிறாயா?" எனகோபமாக  சீறிப் பாய்ந்தது. அதிலே ஒருசில  கனத்த பூரிக்கட்டைகள் "அது மட்டுமா? எங்களால் பல பேருக்கு அடிகள் வேறு விழுந்துள்ளன. அந்த விபரமெல்லாம் உனக்கும் அரசல் புரசலாக "மதுரை வாழ் தமிழர்களால்" தெரிந்திருக்கும்....! இல்லையென்றால், இப்போது ஒரு தடவை உன் தலையில் அடித்து நினைவூட்டவா?" என மிரட்டவும், "தலை த(உ)ப்புவது(ம்) இந்த தம்பிரான்களின் புண்ணியந்தான்.. " என்ற அவசர யோசனையில்," நான் எடுத்த உங்களின் படங்களை மட்டும் பகிர்ந்து விடுகிறேன். மற்றபடி நான் செய்த செய்முறை விளக்கமெல்லாம், என் செல்லிருப்பதை, செயலிலும் காட்டாது செயலிழந்து போகச் செய்து விடுகிறேன். "என்று வாக்குறுதி தந்ததும்," தலையில் அடித்துச்சொல்..." என்ற அதன் மிரட்டலுக்கு அதன் தலையை தேடி  அடிக்கச் சென்றதும், "எங்கள் தலையில் அல்ல.. உன் தலையில்...." என்ற மறுபடி சீறிய வார்த்தை மிரட்டலுக்கு அடிபணிந்து அதை மெதுவாக பிடித்து என் தலையில் லேசாக வலிக்காமல் அ(இ)டித்துக் கொண்டதும், அத்தனை பூரிக்கட்டைகளும் கண்ணெதிரே நிமிடத்தில் மாயமாயின.

" அப்பாடா..! நிம்மதியா இருக்கு..! இனி படத்தை தவிர்த்து பூரி வந்து பிறந்த  கதை யெல்லாம் உன்னால் அளக்க முடியுமோ?" என வந்த  ஏகப்பட்ட மகிழ்ச்சி குரல்களுக்கிடையே..... (அட.  !  அதில் உங்களனைவரின் குரலும் சேர்ந்து கேட்கிறதே. .) பூரி படங்களை மட்டும் பகிர்கிறேன்.

"அதற்காக படங்கள் எப்போதும் போல்  இரண்டா? அநியாயமாக இருக்கிறதே..! என மறுபடியும் பூரிகட்டையின் உதவியை நாடி ஓடி விடாதீர்கள்.." இவை ஒன்று  பார்த்தாலே ஒன்று இலவசம்" என்ற கணக்கை சார்ந்தவைகள். ஹா  ஹா. ஹா.


நாம் அதற்குள் "இப்படி பேசி, பேசியே ரூட்டை மறந்து போகும் இவங்களை என்ன செய்தால் பரவாயில்லை.." என்ற முணுமுணுப்புடன், தன் ரூட்டை மாற்றப் போகும்  எண்ணம் கொண்ட பீட்ரூட்டின் கோபத்தை சமாதான படுத்தலாமா ?

நன்கு கழுவி சுத்தப்படுத்திய ஒரு நான்கைந்து பீட்ரூட்டையும், அதே மாதிரி ந. க. சு. ப...ய உ. கி.  (ஆமாம்.. கோவப்பட்டு ரூட் மாறி போக நினைத்த பீட்ரூட்டுக்கு கிடைத்த விவரணை நமக்கும் சொன்னால் என்னவாம்..! நாம் அப்போதே பிடித்து இவர்களுக்காக இங்கேயே ரூட்டெல்லாம் மாற்ற நினைக்காது "உருண்டு" கிடக்கிறோம் என உ. கி நொடித்துக் கொள்ள.... "நாமிருவரும் ஒரே மாதிரி மண்ணுக்குள்ளிருந்து பிறந்தாலும்,  அதுதான் உன் பெயர் "உருளைக்கிழங்கு." ஆனால் "என் ரூட்டே தனி..!" பெயரிலும், கலரிலும் என்னை "பீட்" அடிக்க முடியாது.." என பெருமையடித்துக் கொண்டது பீட் ரூட். )  நான்கையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கூடவே அதன் மேல் தட்டில் பா. பருப்பு பாதி டம்ளர் எடுத்து கழுவி, ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

வெந்ததை எடுத்து நன்கு ஆறியதும்,  காய்களை ஒன்றிரண்டாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டு அத்துடன் பா. பருப்பு மசித்து கடாயில் கொதிக்க விடவும்.

 ஒரு மூடி தேங்காய், ஐந்தாறு மி. வத்தல் (அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி கூடக்குறைய எடுத்துக் கொள்ளலாம் )  எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை இலைகள்  (நான்கு ஆர்க்கு) சேர்த்து மிக்ஸியில் அரைத்து  அதனுடன் கொதிக்க விடவும்.

அது கொதித்துக் கொண்டிருக்கையில், அடுப்பை சிம்மில் வைத்தபடி, நான்கு பெல்லாரி வெங்காயம் பொடிதாக அரியவும்.  ஒரு கடாயில், கடுகு, உ. ப  ஒரு பெரிய ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்து அதனுடன் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி அந்த கூட்டில் போட்டு ஒரு கொதி வந்ததும், கொஞ்சம் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், வெங்காயம் சேர்க்கும் போதே அரை ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட்டால் கெட்டியாகி சூடான பூரியுடன் தொட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


தோலுடன் குக்கரில் வைத்து வேக வைத்த பீட்ரூட் .


அதைப் போன்று வேக வைத்த உ. கிழங்கு.


அரிந்த வெங்காயம்..


வறுக்க தயாரான சாமான்கள்.


வேக வைத்த காய்கள் மஞ்சள் தூள் சேர்த்து இனி "உன் ரூட், என் ரூட்" எனப் பிரித்து பேச முடியாது எனப் புரிந்தபடி அடக்கமாக ஒற்றுமை தத்துவத்தை உணர்த்தியபடி  சேர்ந்து இருக்கும் காட்சி..


அரைபட்ட விழுது.


வேக வைத்த பருப்பு வழித்தடங்கள் மாறாமல். பீட்ரூட்  கூட்டணியுடன் இணைந்து விட தயாராக இருக்கிறது. ..


அரிந்த வெங்காயமும், வதங்கி கூட்டுடன் கலந்து தயாராகி...


இனி பூரியுடன் ஐக்கியமாவோம் என்ற பூரிப்புடன்...


அனைத்தும் ஒன்று கலந்து தன் மேலே அழகுக்காக ஒன்றிரண்டாக சேர்க்கப்பட்ட கறிவேப்பிலையுடன் காட்சியளிக்கிறது.

இனி என்ன..! பூரி கட்டைகளை தேடாமல், பூரிப்புடன், ரூட்மாறி விடுவேன் என பயமுறுத்தினாலும், மாறாமல் சமர்த்தாக வந்து கூட்டாக சேர்ந்து இருக்கும் கூட்டின் உதவியுடன் இந்த பூரிகளை அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கலாமே ...!

இவ்வளவு நேரம் பொறுமையாக பூரி, கூட்டின் கதை கேட்டு (எல்லோரும் பெரும்பான்மையாக இந்த பக்குவங்கள் அறிந்ததுதான்...! இருப்பினும் அரைத்த மாவாக இதை என் பதிவிலும்.... ) அதை எடுத்துக் கொண்ட உங்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. இனி இந்த தயாரிப்பு 👌இருக்கிறது என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 

Sunday, February 16, 2020

மலரும் நினைவுகள்...

அவள் தன் இரண்டாவது பிரசவத்திற்கு தாய் வீடு வந்திருந்தாள். வந்த ஒரு மாதத்தில் தன் அண்ணனின் குழந்தைகளுடன், தன் மூன்றே வயதான மூத்த குழந்தையும் சேர்ந்து விளையாடி மனம் ஒத்து இருப்பதை பார்க்க அவளுக்கு  மகிழ்வாக இருந்தது.

பிறந்ததிலிருந்து தன்னை விட்டு  ஒரு நிமிடம் கூட அகலாது இருந்த குழந்தையவன்...!  தான் பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை விட்டு எப்படி தனித்திருக்கப் போகிறான் என்று கவலைப்பட்டே நாட்களை கழித்தது  இப்போது  கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது. இப்போது அவர்களுடன் உணவு உண்டு, விளையாடி, படுத்துறங்கி பார்க்கும்  போது, அந்த உற்சாகத்தில் தன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்திருக்க சம்மதிப்பான் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது.

ஒரு நாள் அன்று குடும்பத்தில் அனைவரும்  மாலைக்கு மேல் இரவு சூழ்ந்த ஒரு நேரத்தில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், பல வித பேச்சின் நடுவே இனிப்புக்களைப் பற்றியும் பேச்சு வந்தது. அவளுக்கு திருமணமான இந்த ஐந்து வருடத்தில் புகுந்த  வீட்டில்,  இரண்டு மூன்று தடவைகளுக்கு மேலாகவே தனக்கு அழகாக சுவையாக செய்ய வந்த, மைசூர்பாகின் நினைவு வர, அதைப்பற்றி பேச்சு திரும்பியது.

"அம்மா, நான் இப்போதே இந்த ஸ்வீட் செய்து உங்கள் எல்லோருக்கும் தருகிறேன். நான் இங்கிருக்கும் போதும் சரி....,, அங்கே போன பின்பும்,, என் கைப்பட செய்து  அதை செய்து உங்களுக்கெல்லாம் தர நேரமே வாய்த்ததேயில்லையே...  இப்போதுதான் அதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன்." என்றதும் முதலில் எதிர்ப்பு அம்மாவிடத்திலிருந்துதான்  வந்தது.

"இப்போதா? போடி போ.. பிள்ளைதாச்சி பொண்ணு. அடுப்பாங்கரையிலே போய் நின்னுகிட்டு.. வேறே வேலையில்லையா ? அப்படி ஆசைபட்டாலும், குழந்தை பிறந்த பின் பார்த்துக் கொள்ளலாம்.." என்றார் அம்மா.

" இப்ப என்ன அவசரம்? அதுவும் இந்த இரவு நேரத்தில்..! . அம்மா சொல்வதை கேள்.. நீ நல்லபடியா குழந்தை பெத்து வந்தவுடன் நீ  உன் புகுந்த வீட்டுக்கு திரும்பி போறதுகுள்ளே பண்ணிண்டா போச்சு..! நிறை மாசமா வாயும் வயிறுமா இருக்கறச்சே இப்ப  போய் இதுக்கெல்லாம் ஆசைப்படாதே..! என்று உடன், அம்மாவை பெற்ற பாட்டியும் சேர்ந்து கொண்டார்.

"ஒரு செயலை செய்வதற்கு பிறர்  உதவியாக இருந்தால், அந்த செயல் அந்த பிறரின் தூண்டுதலினாலும், இறைவன் அருளாலும்  நன்றாக  வெற்றிகரமாக உடனே நடக்கும். ஆனால் வேண்டாமென தடுக்கும் போது செய்ய வேண்டுமென்ற ஒரு விதமான வறட்டுப் பிடிவாதம் மனதுக்குள் உறுதிப்படுவது மனித சுபாவங்களில் ஒன்று... "  என்பது அவள்  அறிந்திருந்தாலும்,  அவள் மனதிலும் அந்த எண்ணம் ஏனோ சற்று கூடுதலாகவே நின்று வலுப்பெற்றது.

அவள் பொதுவாகவே தன்னுடைய கோபதாபம், வருத்தங்கள், பிறரைப்பற்றிய கருத்துக்கள், எதையும் வெளிக்காட்டாதபடி பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றபடி. அவர்கள் பேச்சை தட்டாமல் மரியாதையாக, பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, வாழ்ந்து/வாழ பழக்கப்பட்டவள். (அவ்வளவு நல்லவளா இவள் என ஆச்சரியப்பட்டு விட்டு கதை முடிவில் கோபப்பட்டும் விடாதீர்கள். அப்புறம் " ரொம்ப நல்லவங்கன்னு  என்னை சொல்லிட்டாங்களேன்னு" வடிவேலுக்கு இணையாக  அவளும் அழுது விடுவாள்.) ஏதோ சுமாரான வகையில் தான் நல்லவள் என்ற மனத்திருப்தியை அடைபவள்.

" பாட்டி.. அதுதான் ஆசைப்படுகிறேன் என்று புரிந்து கொண்டாயே? இந்த மாதிரி நேரத்தில் ஆசைப்படுவதை நிறைவேற்றவில்லையென்றால், பிறக்கும் குழந்தையின் காதில் சீழ் வடியும் என கூறியிருக்கிறாயே..! என குழந்தைக்கு அப்படியொரு நிகழ்வு வரவேண்டுமா? அதனால் அந்த ஸ்வீட்ஸை இப்பவே செய்யத்தான்  போகிறேன். இப்போது இன்னமும் இரவு வரவில்லை. ஏழு மணிதானே ஆகிறது. ஒரு அரைமணியில் செய்து விடலாம்."  அவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.

இப்போது இடையில் அங்கிருந்து அவர்கள் பேச்சுக்களை கேட்டவாறு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த அவளுடைய மன்னி "நீதான்  அம்மா சொல்வதை கேளேன்.... உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறார்கள். இதோ சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. உன் உடம்பு இருக்கும் நிலையில் இப்போ எதுக்கு வேலையை இழுத்து வச்சிகிட்டு...! உனக்கு வாய்க்கு இனிப்பு சாப்பிட வேண்டும் போல் இருந்தால், நாளை காலையில் நாங்கள் செய்து தருகிறோம்.  உங்கள் அம்மா இதைச் செய்வதில் நிறைய அனுபவஸ்தர் என்று உனக்குத் தெரியாதா? ஏன்...உன் அண்ணா நினைத்தால், உன் அண்ணாவே காலையில் எழுந்தவுடன் செய்து முடித்து தான் செய்த இந்த இனிப்புடன்தான் உன்னையே எழுப்புவார்....அவ்வளவு சீக்கிரமாக உனக்கு வேண்டியது கிடைக்கும். நீயே ஏன் கஷடப்படனுமின்னு நினைக்கிறே?...என தன் பங்குக்கு அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தார்.

"இல்லை மன்னி.. நான் கற்று கொண்டதை நானே தனியாக செய்து, உங்கள் அனைவருக்கும் கொடுத்து அதை நீங்கள் பாராட்ட வேண்டுமென ரொம்ப நாட்களாக ஆசைபட்டுக் கொண்டிருந்தேன். புகுந்த வீட்டிலிருந்து வரும் போது எதையும் செய்து எடுத்து வர முடியாத சூழ்நிலைகள்.  இன்று என்னவோ இந்தப் பேச்சு வந்ததும் உடனே செய்யலாம் என்று தோன்றியது. நாளை குழந்தை பிறந்து விட்டால், பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு ஏன் இந்த வேலை எனக் கேட்பீர்கள். அப்புறம் நான குழந்தைகளோடு ஊருக்கு சென்று விட்டால் என நினைவுகளில் இது எப்போதும் தங்கி விடும். மறுபடியும் நான் எப்போ இங்கு வருவேனோ? உணர்ச்சியுடன் பேசியதில் குரல் கம்மியது அவளுக்கு.

இந்த வாக்குவாதங்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் அண்ணன் "என்ன இப்போ.. நீ செய்ய வேண்டும் அவ்வளவுதானே...!  இந்த கடலைமாவு, நெய் வீட்டில் போதுமானவை இல்லை என நினைக்கிறேன். இதோ நான் சென்று கடையில் வாங்கி வருகிறேன் என கடைத்தெருவுக்கு கிளம்ப அவள் கண்களில் நீர் தளும்பியது.  இருந்தாலும் சமாளித்துக்கொண்டு" நான் செய்யும் போது என்னிடமிருக்கும் பணத்தைப் போட்டு சாமான் வாங்கினால்தான் நான் செஞ்ச மாதிரி எனக்கும் திருப்தியாக இருக்கும்." என்றபடி தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவள் அவசரமாக அண்ணனிடம் தரப் போக, "இப்போ நான் வாங்கி வரவா....  இல்லை, உன்னிடமிருக்கும் பணத்தைக் கொண்டு நாளைக் காலையிலேயே வாங்கலாமா?" என அண்ணன் சிரிப்புடன் வேண்டுமென்றே  மிரட்ட, அவளும், மன்னியும் சிரித்தார்கள்.

அந்த சிற்றூரில் பலசரக்கு கடைகள் அப்போதெல்லாம் இரவு எட்டு மணிக்குள்  அடைத்து விடுவார்கள். அனேகமாக இரவு பத்து மணிக்குள் ஆள் நடமாட்டங்கள் அடங்கி விடும்.

பிரசவம் பார்க்க டவுனில் இருக்கும்  டாக்டரிடரின் மருத்துவ மனைக்கு செல்லக்கூட அந்த நேரத்தில் உள்ளூரிலிருக்கும் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் டவுனுக்கு சென்று ஆட்டோவோ, டாக்ஸியோ  பிடித்து கொண்டு வந்து அதில் ஏறிச் செல்ல வேண்டும். பகல் நேரத்தில்தான் குழந்தை பிறக்க  வலி வர வேண்டுமென நாங்கள் வேண்டாத தெய்வமில்லை என்று கூடச் சொல்லலாம்.

ஒரு வழியாக அந்த சின்ன ஊரிலிருந்து "மைசூருக்கு" சுற்றுலா செல்ல சிரமப்பட்டு டிக்கெட் எடுப்பது போல், மைசூர்பாகு என்ற அந்த இனிப்புக்கும், பல விவாதங்களுக்கு பின்அதன் பொருத்தமான சாமான்கள் வர, அவள் ஆர்வத்துடன் செய்ய தயாரானாள் .

மறுபடியும் தடை போட்டது அம்மாவன் குரல்.
"சொல்றதை கேளடி.  . நாளை காலை எழுந்தவுடன் பண்ணு. இப்போ ராத்திரி நேரம் தீடிரென கரண்ட் போகும். வரும். ஏன் இப்படி சிரமபடுறே." என அன்போடு மறுபடியும் எச்சரிக்க..."

"போம்மா..! அதற்குள் குழந்தை பிறந்து விட்டால் நான் எப்படி செய்வதாம்?  இப்படி எல்லாமும் கையருகே வந்தும் தடை போட்டால் எப்படிம்மா!..? என்று அவள் தன் ஆதங்கத்தை காட்ட... "

" அதற்குள் ஒன்றும பிறக்காது.. இன்னும் நாள் இருக்கு. .. என் கணக்குப்படியே நாள் இந்த மாதம் கடைசி வரைப் போகும்... டாக்டர் சொன்ன கணக்கும் அடுத்த வாரத்துக்கு மேல்தான்...  ... என்று அம்மா விடாமல் பேச..."

கடைசியில் அனைவரின் விருப்பப்படி அம்மாதான் வென்றார். இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு பெரிய கூடத்தில், அனைவரும் படுக்க ஆரம்பித்தனர். அவளும் நாளை காலையில் எழுந்ததும் இனிப்பை செய்ய வேண்டுமென மனதுக்குள் ஒத்திகை பார்த்த வண்ணம் உறங்க யத்தனித்தாள்.

இரவு இரண்டு மணிக்கு யாரோ இடுப்பில் சாட்டையால் அடிப்பது போன்ற உணர்வு வர விழித்தவள், மேற்கொண்டு வந்து விழுந்த அடிகளில் எழுந்து அமர்ந்தாள். நன்றாக அயர்ந்து தூங்கும் அம்மா, பாட்டியை எழுப்ப மனம் வரவில்லை. ஆனாலும், அவள் மனதுக்குள் வலியையும் மீறி அவள் மனதில்  இப்படி ஒரு எண்ணம்  தலை தூக்கியது. "எப்படி நினைத்ததை முடிக்கப் போகிறோம்?" 

"நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் வேறொன்றை நினைக்கும்." என்ற பழமொழி மாதிரி, ஆகி விட்டதே...! அனைவரும் எழுந்து விட்டால், அக்கம் பக்கமும் விழித்து விட்டால், "ஸ்வீட் பண்ணுவதற்கு இதுவா நேரம்? " என்ற கண்டிப்பு காட்டி, டவுனுக்குச் சென்று ஆட்டோ அழைத்து வந்து மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுவார்களே...   அப்புறம் எப்போது  செய்வது?  நேற்று மாலையெல்லாம்் பேசிய மாதிரியே ஆகிவிட்டதே என மனம் கலங்கிய போது வலிகள் வேறு தாக்க ஆரம்பித்தது.

மெதுவாக பாட்டியை எழுப்பி சொன்னவுடன் பதற்றத்துடன் எழுந்து, சீரக கஷாயம் போட்டுக் கொடுத்தார்கள். அது பொய் வலி என்றால் காட்டிக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை வயதில் பெரியவர்களுக்கு உண்டு. ஆனால் திருப்பியும். ஒரு மணி நேரத்தில். "தான் உண்மை வலிகள்தான்" என்று வந்த வலிகள் மெய்பித்தன.

அதற்குள் அம்மாவும் உறக்கம் கலைந்த எழ விபரம் அறிந்து சமையல் வேலைகளை ஆரம்பித்தார்கள். ஆறு மணியானதும்  அண்ணா சென்று  ஆட்டோ அழைத்து வந்து எட்டு மணிக்குள் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என அம்மாவும், பாட்டியும் பேசிக் கொண்டார்கள். அவள் மெதுவாக "அம்மா... எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. பிள்ளை பிறப்பு மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு சதாரண இனிப்புத்தான்.  ஆனால் அதைக்கூட நினைத்ததை செய்யாமல், போகிறோனோ எனத் தோன்றுகிறது. மறுபடி நாமெல்லோரும் ஒரே குடும்பமாக பிறப்போமா? என்ற போது  மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அம்மா சட்டென ஒரு முடிவுடன், "சரி..! இப்போ என்ன..!   இடுப்பு வலிதானே ஆரம்பித்திருக்கிறது. நீ சட்டென ஒரு வெந்நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு உன் விருப்பப்படி ஸ்வீடை பண்ணு. அண்ணா, மன்னி எழுந்து விட்டால் வேண்டாம்.. .! கூடாது.. ! என தடுத்து விடுவார்கள்.... சீக்கிரம் ஆரம்பி....! என உத்தரவு கொடுக்க பாட்டி பாசத்தில் பதறிப்போய் வேண்டாம் என தடுக்க,

அவள் மடமடவென அம்மாவின் உத்தரவு கிடைத்ததை ஆண்டவனின் உத்தரவாக  எடுத்துக்கொண்டு, வலிகளின் நடுவே குளித்து, ஆண்டவனை தொழுது விட்டு இனிப்பை அரைமணியில் அவள் விருப்பப்படியே செய்ய ஆரம்பித்தாள். நடுநடுவே வலிகளின் தாக்கம்  அதிகரிக்க, சமையல் மேடையை இறுக பிடித்தபடி அவள் நின்றதை பார்த்த பாட்டி "என்னவோ போ...! இப்படி ஒரு பிடிவாத குழந்தையா? உன் அம்மாவும் உனக்கு இப்படி சிபாரிசு செய்கிறாளே ..! என்னால் பார்க்க கூட முடியவில்லையே...!" என புலம்பி தவிக்க,

அவள் வெற்றிகரமாக மைசூர் பாகை கிண்டி தட்டில் கொட்டி, வெட்டி துண்டுகளாக்கி, கடவுளுக்கு படைத்து விட்டு காடாயில்  ஒட்டிக் கொண்டிருந்த பொடிகளை சுரண்டி எடுத்துவைத்து விட்டு" பாட்டி நீ ஒரு துண்டு வாயில் போட்டு பார்.. இனிப்பு சரியாக  வந்திருக்கிறதா என்று சொல்.லு.." என்று அவள் தந்த போது அவள் முகத்தில் தெரிந்த வலிகளின் களைப்பை உணர்ந்த பாட்டிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது. "என் கண்ணே... எத்தனை மன உரம், எதையும் தாங்கும் தைரியம், உனக்கு..! ஆண்டவன்  உன்னை நல்லா வைத்திருப்பான்.. " என்று ஆசிகூறியபடி கண்ணீர் மல்கியபடி அவளை அரவணைத்துக் கொண்டாள்.

அம்மாவும் அழுதபடி அவளைக் கட்டிக் கொண்டார். "இவள் சொன்ன ஒரு வார்த்தைக்குத்தான் நான் இந்த நிலைமையில், அடுப்படியில் நிற்க சம்மதித்தேன். நேற்றே அவள் செய்ய  விடாமல் நான் தடுத்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை அவ்வாறு சம்மதிக்க வைத்தது...! நான் நினைத்தது ஒன்று.. அதற்குள் இப்படி வலி வருமென நினைத்தோமா? மழைப் பேறும், பிள்ளை பேறும் மகேசனுக்குத்தான் தெரியும் என்பது போல இன்றைக்கே வலி வந்து விட்டதே....! எனப் பாட்டியிடம் கூறியபடி கண்கலங்க,

 அவள் "எப்படியோ என் ஆசையை உங்களால் நிறைவேத்தி விட்டேன். "என நன்றியோடு தழுதழுக்க,

பேச்சு குரல்கள் கேட்டு ஐந்து மணியளவில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த அண்ணா, மன்னி, அப்பா அனைவரும் எப்படி இத்தனை வலிகளை தாங்கி கொண்டு, இப்படி ஒரு செயல் அவசியமா? என கோபப்பட, இல்லை.. ஆச்சரியப்பட, இல்லை,.. அம்மா பாட்டியைப் போல அனுதாபபடக் கூட அன்றைய அவசர காலம் அனுமதிக்கவில்லை..

பிறகு அவசரமாக ஆட்டோ வசதியைப் பெற்று வலியில் அவஸ்தை படும் அவளை மருத்துவ மனையில் சேர்க்கும் போது மணி ஒன்பது. அன்று பகல் ஒரு மணிக்கு அழகான ஆண் குழந்தை அவளுக்கு பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன், நான்கைந்து மணி நேரத்தில்,அவளை  நலம் விசாரிக்க அவளிருந்த அறைக்குள் வந்த அண்ணா, மன்னி, அப்பாவிடம், "ஸ்வீட் சாப்பிட்டீர்களா? எப்படி இருந்தது.? என்றுதான் முதலில் கேட்டாள். "நாங்கள் சாப்பிட்டோம்.... நீதான் சிறிதும்  சுவைக்க  கூட முடியாமல் உடனே இங்கு வர வேண்டியதாயிற்று... என அண்ணா, மன்னி அங்கலாயித்தனர் . அனைவரும்  கொஞ்ச நாள் வரை அந்த குழந்தையை" ஸ்வீட் பேபி" என்றுதான் அழைத்தாரகள்.

நிறைய வருடங்கள் அந்த நிகழ்வு அவள் தாய் வீட்டில் அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இப்போதும் பேசப்படுகிறது. வரும் போதே அம்மா மூலமாக ஸ்வீட் தந்து கொண்டே பிறந்தவன் என்று சொல்லி மகிழ்ந்தார்கள் .

இந்த அவள் வேறு யாருமல்ல.. சாட்சாத் நானேதான்....! இன்று பிப்ரவரி பதினாறாம் நாளாகிய  (16) இன்று பிறந்த நாள் காணும் என் இரண்டாவது மகனுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள் மட்டுமின்றிி வலைத்தள உறவுகளும் வாழ்த்த வேண்டுமென்பதற்காக, அவர் பிறந்த அன்று நடந்த நிகழ்வினை எங்கள் குடும்பத்தில், இப்போதும் நாங்களும் அடிக்கடி பேசி மகிழும் நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். 

அன்று என் அம்மா மட்டும் துணிச்சலாக என்னை "இனிப்பை செய்" என சொல்லவில்லையென்றால் இந்த மலரும் நினைவுகள் என் வாழ்வில் இடமே பிடித்திருக்காது.... அவர்களுக்கு என் வாழ்நாள் உள்ளவரை நன்றிகளை கூறிக் கொண்டேயிருப்பேன். 🙏. 

 தன் அம்மா இனிப்பை செய்து விடவேண்டி காத்திருந்து பிறந்த என் மகனுக்கு  இனிப்பென்றால் அவ்வளவு கொள்ளை பிரியம். நானும் வருடந்தோறும் அவர் பிறந்த நாளுக்கு ஏதாவது  இனிப்பு செய்து விடுவேன். பாயாசம் தவறாது வைத்து விடுவேன். இல்லை... கடையிலிருந்தாவது ஏதாவது ஸ்வீட்ஸ் வாங்கி விடுவோம். இந்த தடவை அதை மிஸ் செய்கிறேன். 

இந்த தடவை அவர் இங்கில்லாமல், வெளிநாட்டிலிருப்பதால், எங்கள் அன்பான வாழ்த்துக்களுடன், இந்தப் பதிவும், இதைப் படித்து  மனமாற வாழ்த்துரைக்கும் உங்களது வாழ்த்துக்களுந்தான்  அவருக்கு என் சார்பில் மாபெரும் தின்ன தின்ன திகட்டாத இனிப்புக்கள்... 

இது அப்போது பண்ணியதும் அல்ல.... 
இப்போதும் பண்ணியதும் அல்ல......
இடையில் எப்போதோ பண்ணியது.
இனிப்பான ஒரு படத்துக்காக இங்கு 
பங்கேற்க வந்துள்ளது.. 


இது என் மகனின்  மனைவி  (என் மருமகள்) என் மகனுக்கு பிடித்தமான அவர் இன்று விரும்பி கேட்ட இந்த  வெல்லச்சீடையை இன்று அவர் பிறந்த நாளுக்காக செய்ததை எங்களுக்கும்  அனுப்பியிருக்கிறார். (படமாக) நீங்களும் கை நிறைய சீடைகளை எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்துங்கள் என அன்போடு  கேட்டுக் கொள்கிறேன். 


இதைப் படிக்கும் அனைவருக்கும் என் சார்பிலும் என மகன், மருமகள் சார்பிலும் நன்றி..... நன்றி....நன்றி.... 🙏. 🙏. 🙏.