Thursday, April 2, 2020

ராம நாமம்.

ஸ்ரீ ராம ஜெயம்.

விக்கினங்களை களைபவனே..
ஸ்ரீ விநாயகப் பெருமானே...! உனை
வாயாற பாடுகின்றேன். தப்பாமல்
வந்தெமக்கு வாரி நின் அருளை
வான்மழை போல் தந்தருள்வாய்..

பிறவிப் பிணிகளை களைந்து, மீண்டும்
பிறவா வரம் மட்டும் தர வேண்டி
பிரியத்துடன் பிரார்த்தித்து நிற்கிறேன்.
பிறிதொன்றை வேண்டிலேன். ஆனால்,

கண்ணுக்கு தெரியாமல் எந்நேரமும்
கதிகலங்க வைக்கும், "கரோனா" அசுரனை
கணங்களுக்கு  அதிபதியே..! உன்
காலடியில் வைத்து கசக்கி எறிந்து விடும்
கருணைக்கு கணநேரமும் ஆகாதுனக்கு..

அந்த உமையவளின் அன்பு மகனே.. ,
அகில உலகமும் நன்மை பெற்றிடவும்,
ஆறுதல் தந்து  ஆங்காங்கு காத்திடவும்
அங்குசம் வீசி, அடிமை கொண்டு விடு
அவ்வசுரனின் அசையாத அஸ்திவாரத்தை..
அதை மட்டும் உன்னிடம் இன்று
அன்புடனே மறுபடி வேண்டுகிறேன்.



ஜெயம் என்ற வார்த்தை நம் மனதை உற்சாக படுத்தும்.  கூடவே ராம நாமமும் சேர்ந்து விட்டால், கேட்கவே வேண்டாம்
பொறுமையின் அவதாரம் ஸ்ரீ ராமபிரான். அவருடன் அவர் மனைவியாக இணைந்த சீதா பிராட்டியும்  பொறுமையின் மறு அவதாரமாகிய பூமாதேவியின் மகளாக ஜனித்து பொறுமைக்கு மறு பெயராக விளங்கியவர்.

பாசத்திற்கு அடையாளமான தந்தை, தாயுடனும், நியாயம், தர்மம், அன்புக்கு இலக்கணமாக பிறந்த உடன் பிறப்புகளுடனும், பொறுமையின் சிகரமான சீதா தேவியுடனும் வாழ்ந்து ஒரு சிறந்த சக்கரவர்த்தியாக ராஜ பரிபாலனம் நடத்தி, மானிட வர்க்கத்திற்கு  ஒரு உதாரண புருஷனாக இருநது வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமபிரான்.

அவர் வாழ்வில் அனைத்துமே அன்புதான். அன்புக்கு மட்டுந்தான் அங்கே அங்கீகரிப்பபு. அவரின் அன்புக்கு அனைவருமே கட்டுப்பட்டார்கள்.  அவர்களின் அன்பில் இவரும் கட்டுண்டார். வாழ்வின் இடையில் தோழமையாக வந்த
குகன், சுக்ரீவன், ஹனுமான், வீபீஷணன் என அனைவருமே இவரது அன்பெனும் மழையில் நனைவதற்காக பிறவி எடுத்து காத்திருந்தவர்கள். அகல்யை, சபரித்தாய் இருவரும் தாங்கள் எடுத்த பிறவியில். ராமரின் பாததுளிகள் பட்டு தங்களது  பிறவி பெருங்கடலை கடப்பதற்காக காத்திருந்தவர்கள் .

பகவான் விஷ்ணு ஏழாவதாக மனித அவதாரம் எடுத்து மனிதர்களுக்கு புகட்டிய நீதி போதனைகளை நாம் மறக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராமரின் பிறந்த நாளான நவமி திதியில் நாடு முழுவதும். அவரவர் இல்லங்களில் அவரை கொண்டாடி கோவில்களுக்கும் சென்று அங்கும் அவரை வணங்கி வந்தோம். இவ்வருடம்  அவ்விதம் கொண்டாடும் சூழ்நிலைக்கு  தடங்கல் வந்துள்ளது.

அசுரர்களை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணு  மனிதனாகவே எடுத்த அவதாரங்களில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மனிதர்களுக்கு பரிச்சயமானவையாக கருதப்படுகிறது. அவ்விதம் இப்போது  அசுரனாக முளைத்திருக்கும், "கொரோனா" என்ற அசுரனை சம்ஹரித்து  உலக மக்களை தன் அன்பால் வழி நடத்தி, இந்த அசுரனின் பிடியில் சிக்கியவர்களை நல்லவிதமாக பலப்படுத்தி  செல்ல நாம் அனைவரும் அவரது பிறந்த நாளான  இந்த நன்னாளில் ஒன்று கூடி அவர் நாமத்தைச் அன்புடன் சொல்லி பிரார்த்திப்போம். அவர் கண்டிப்பாக நமக்காக வருவார். ஏனென்றால் அவர் அன்புக்கு எந்நாளும் கட்டுப்பட்டவர். 🙏🙏🙏🙏🙏🙏.

ஸ்ரீ ராம. ராம, ராம  ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ஸ்ரீ ராமச்சந்திர பிரபோ... என தாரக மந்திரமாகிய ராம நாமாவை ஜபிப்போம். நம்மை சுற்றி ஒலிக்கும் இந்த நாமங்கள் நம் நல்வினையை  பலப்படுத்தட்டும். 🙏🙏🙏

அவசரமாக ஏதோ மனதுக்கு பட்டதை எழுதிய பதிவிது.. .இதில்  அட்சர பிழைகள் ஏதும் இருந்தால் பொறுத்தருளுங்கள் . அனைவருக்கும் அன்பான நன்றிகள். 

35 comments:

  1. கொரோனா இவ்வுலக மக்களை விட்டு விலகட்டும்.

    பொருத்தமான விசயத்தை பொருத்தி எழுதிய பதிவு நன்று சகோ

    வாழ்க வையகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மனம் மகிழ்ந்தேன்.

      இன்றைய தினத்தில் ஸ்ரீ ராமரைப்பற்றி ஏதாவது எழுதினால் மனம் நிம்மதியாக இருக்குமென தோன்றியது. ஆனால் இன்று என்னை இந்தளவுக்கு எழுத வைத்தவன் சாட்சாத் அந்த ராமரேதான்.

      ஆம்...மாலை வரை எதை எழுதுவது எப்படி எழுதுவது எனவும் தெரியவில்லை. வேலைகள் வேறு சரியாக இருந்தது. கைப்பேசியிலும் மதியத்திலிருந்தே சார்ஜ் இல்லை. மாலை ஏதோ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அதில் சார்ஜ் கம்மியாக உள்ளதென்பதை மறந்தே விட்டது. எப்படியோ நான் எழுதி முடித்து வெளியிட்டவுடன் "சார்ஜ் முழுவதையும் இழந்து விட்டேன்" என்று அணைந்தே விட்டது கைப்பேசி. ராமரின் லீலைகளில் இதுவும் ஒன்று என நினைத்ததும் எனக்கு உண்மையிலேயே மெய் சிலிர்த்தது. இதை முதலில் வந்த உங்களிடம் குறிப்பிட வேண்டுமென தோன்றியது. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நல்ல பதிவு.... இராமர் என்று சொல்லிவிட்டு விநாயகர் துதியே நீண்டுவிட்டதே...

    அது சரி... ராமாவதாரம் ஏழாவது அவதாரம். அதுவே சிறப்பான எண்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இராமர் என்று சொல்லிவிட்டு விநாயகர் துதியே நீண்டுவிட்டதே../

      ஹா. ஹா. விநாயகர் என்னைக் கொஞ்சம் அதிகப்படியாகவே ஈர்த்து விட்டார். என் இஷ்ட தெய்வமல்லவா? அதனால் இருக்கும்.

      /ஏழாவது எண் சிறப்பான எண்../அப்படியா? ஆனால் அவர் (ஸ்ரீ ராமரின்) பொறுமையை சோதித்த கஸ்டப்படவைத்த எண். பொதுவாகவே அந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன் இருந்தாலும், ஏழாம் எண் பொறுமையை சோதித்து கஸ்டப்பட வைக்கும் எண் போலிருக்கிறது. (என்னையும் சேர்த்து)

      தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. நெல்லை எந்தக் காரியமும் விக்னம் இல்லாமல் நடக்க விநாயகரை வழிபட்டுத்தான் செய்வோமே...அது போல..

      கமலாக்கா அழகா எழுதியிருக்கீங்க வேண்டுதல் கவிதை...

      கீதா

      Delete
    3. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்..! எந்த ஒரு செயலும் பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிப்போம். பிரார்த்தனைக்கும் அவருக்கு முதலிடமாக தந்து அவரை அமர வைத்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      /கமலாக்கா அழகா எழுதியிருக்கீங்க வேண்டுதல் கவிதை.../

      அது "கவிதை" என பெயரிடுமாறு தகுதி அடைந்திருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனாலும், என் பிரார்த்தனைகள் உரைநடையாக அந்த மாதிரி அமைந்து விட்டது:) எனினும் உங்களின் பாராட்டுக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. ஊக்கமிகும் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆஹா கொரோனா அங்கிளுக்குத் துதி இயற்றிப்போட்டீங்களே:)).. ஆனாலும் அவரின் பெயரைக் கரோனா என ஸ்டைலாக அழைச்சுப்போட்டீங்க அதனால அவர் கோபிக்க மாட்டார்ர்:))...

    ராமநவமியிலே ராமரையும் கவனிக்க விடாமல் கொரோனா முதலிடம் பிடித்து நிற்கிறதே..

    ReplyDelete
    Replies
    1. அதிரா இங்கு கொரோனா வை சில பத்திரிகைகள் நெட்டில் எல்லாம் கரோனா என்றுதான் எழுதுகிறார்கள்.

      கீதா

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆனாலும் அவரின் பெயரைக் கரோனா என ஸ்டைலாக அழைச்சுப்போட்டீங்க அதனால அவர் கோபிக்க மாட்டார்ர்:)).../

      ஹா.ஹா.ஹா. அவரும் ஒரே பெயருடன் எத்தனை நாள் உலகம் சுற்றிக் கொண்டிருப்பார். ஒரு வித்தியாசத்திற்காக "கரோனா" ... இன்னொரு பெயர் கிடைத்த சந்தோஷத்திலே அவர் உலகம் சுற்றுவதை நிறுத்தட்டுமே...! எப்படி என் ஐடியா? சகோதரி கீதாரெங்கன் அவர்களும் எனக்கு தோள் தந்திருக்கிறார்கள் பாருங்கள்...!

      ராம நவமியிலும்,ராமரை அன்போடு அழைத்து வணங்கி, என வேலைகள் சரியாக இருந்தாலும், உலக மக்களுக்கு நன்மை நடக்க வேண்மென என்பதே என பிரார்த்தனையாக இருந்தது. அதுவே மாலை பதிவாக வெளிவந்து விட்டது. உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் சில இடங்களில் படிக்கும் போது அந்த மாதிரி பார்த்தேன்."க"வுக்கு பொருத்தமாக அப்படியே எழுதி விட்டேன். எனக்கு "கை" (இப்போதெல்லாம் "கையே"கொடுக்க கூடாது என்பதும் தெரியும்.இருந்தாலும் நானும், நீங்களும் தைரியசாலிகள் போலும். ஹா.ஹா. ) கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. //வாயாற பாடுகின்றேன்//

    இது வாயார:)) எண்டெல்லோ வரும் ஹா ஹா ஹா.. சரி சரி வாயாற எண்டால்ல்.. வாய் +ஆற என அர்த்தமோ.. எல்லோரும் சொல்லுவினம் வாயாரப் புகழ்ந்து பாடி.. இப்படி, ஆனா இதன் சரியான அர்த்தம் தெரியவில்லை...

    ReplyDelete
  5. எல்லாம் நம் விதிப்படியேதானே நடக்கிறது, கடவுளையும் வேண்டுவோம் கவனமாகவும் இருப்போம். இத்தாலி மக்கள் நிறைய கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாம்.. இப்போ கடசியில் அவர்களை ஒழுங்காக அடக்கம் செய்யவே முடியாமல் அல்லல்படுகின்றனர்.. அப்போ கடவுள் என்ன பண்ணுகிறார் என்றே எண்ண வருது... பார்ப்போம் நம்பிக்கைதானே வாழ்க்கை நல்லதே நடக்கட்டும்...

    ஆனாலும் கமலாக்கா வெறும் வேண்டுதல் மட்டும்தானே பண்ணியிருக்கிறீங்கள்? அவல் சுண்டல், சக்கரைப்பொங்கல் ஏதும் வைக்கவில்லையோ?:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான்.. விதியின் முன் நாம் அனைவரும் அடங்கிப் போகத்தான் வேண்டும். எனக்கும் கடவுள் சடாரென வந்து எல்லா செயல்களையும் நலமாக்கி வைக்க கூடாதாவென்ற தாபம் வரும். ஆனால் அதற்கும் ஒரு நேரம். காலம் என்ற ஒன்றுள்ளதே .. அதன்படி கொஞ்சம் விதிகள் அந்நேரம் வரை விளையாட்டும் என "அவரும்" பொறுமை காக்கிறாரோ எனவும் தோன்றும். அது வரை நாமும் இப்படி வேண்டிக் கொண்டேயிருப்போம்.

      இத்தாலி மக்கள் பாவம்..! இப்படி ஒரு விதியின் ஆட்டுதல் யாருமே எதிர் பார்க்கவில்லை. இருப்பினும் நம்பிக்கை ஒரு நேரத்தில் பலனளிக்கும்.

      /ஆனாலும் கமலாக்கா வெறும் வேண்டுதல் மட்டும்தானே பண்ணியிருக்கிறீங்கள்? அவல் சுண்டல், சக்கரைப்பொங்கல் ஏதும் வைக்கவில்லையோ?:))/

      இல்லை. வேறெதும் வைக்கவில்லை. பழங்கள் கூட வாங்க வெளியில் செல்ல முடியவில்லை. வெறும் எலுமிச்சையை வைத்து பானகம் செய்து உலர் திராட்சையுடன்,படைத்தேன். பிராத்தனைகள் மட்டும் கூடை கூடையாக...இறைவன் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்.
      உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. எதையுமே விநாயகரைத் துதித்து விட்டுதான் தொடங்க வேண்டும் என்கிற நியதி பின்பற்றப்பட்டுள்ளது போலவே...    அழகான வேண்டுதல் -அற்புதமான வரிகளில்.  நானும்... இல்லை, இல்லை, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. எதையும் முதலில் பிள்ளையார் பிடித்துதானே ஆரம்பிப்பது நம் வழக்கம்.
      அவன்தான் எந்த செயலுக்கும் சக்தியை தருபவன். அதன்படி சக்தி வேண்டி அவருக்கு முதலில் பிரார்த்தனைகள்.

      பாராட்டுகளுக்கு மனமுவந்த நன்றிகள். தாங்களும், வேண்டுதல்களில் கலந்து கொண்டமைக்கு இன்னமும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நேற்று உடனே வந்து கருத்துக்கள் தந்த அனைவருக்கும் மிகவும் தாமதமாக பதில்கள் தந்து வருகிறேன். அதற்கு அனைவரிடமும் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ராமநாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்...

    அருளே மானிட வடிவாகி...   அயோத்தி நகரில் பிறந்தது...   அது ராமனின் அவதாரம்...   ஸ்ரீராமனின் அவதாரம்...

    மேலே உள்ளவை இரண்டும் இரண்டு பழைய அழகான டி எம் எஸ் பாடிய பக்தி பாடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மேலே உள்ளவை இரண்டும் இரண்டு பழைய அழகான டி எம் எஸ் பாடிய பக்தி பாடல்கள்./

      ஓ.. அப்படியா விபரம் அறிந்து கொண்டேன். டி.எம். எஸ்ஸின் எத்தனையோ பக்தி பாடல்களை கேட்டு ரசித்துள்ளேன்.இந்த இரண்டையும் கேட்டதாக நினைவில்லை. தேடினால் கிடைக்குமா? கிடைத்தால் கண்டிப்பாக கேட்டுப்பார்க்கிறேன். விபரத்திற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. அருளே மானிட வடிவாகி அயோத்தி நகரில் பிறந்தது அது ராமனின் அவதாரம் ஷ்ரீ ராமனின் அவதாரம்....டி.எம். எஸ். அவர்கள் பாடிய இந்தப் பாடல் கூகுளில் தேடிப் பார்த்து விட்டேன் பல முறை. பல வருடங்களாகத் தேடிப் பார்த்து விட்டேன். இந்தப் பாடல் கிடைக்கப் பெற்றவர்கள் தயவு செய்து என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். 70களில் கேட்டு மகிழ்ந்த மிக இனிமையானதோர் பாடல்.

      Delete
    3. https://archive.org/details/7-epe-1742-7-tjt-336-arule-maanida-vadivaagi/7EPE-1742-7TJT-336+-+Arule+Maanida+Vadivaagi.mp3

      Delete
  8. தூய உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சுயநலமின்றி பொதுநலம் வேண்டி பொங்கிய கவிதையும் பதிவும் அருமையிலும் அருமை..வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவையும், பிரார்த்தனை கவிதையையும் கேட்டு ரசித்து கருத்துக்கள் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள். தங்களின் அன்பான பாராட்டுரைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி தங்களின் ஊக்கமிகும் தொடர் வருகையும், கருத்துக்களும் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அனைத்தும் நலமாக அமைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அனைத்தும் நலமாக அமைய வேண்டுகிறேன்/

      உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நாமனைவரும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக பலிக்கும். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா நல்ல கருத்துகள். நல்லது நடந்திடட்டும் என்று நம்புவோம்.

    இப்போதைய நிகழ்வுஅள் நிறைய கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது. ஒன்று இறைவனுக்கும் இங்கு நடப்பதாற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது வேறு இது வேறு என்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் மனம் குழம்பாது.

    எதுவுமே இயற்கையை மீறி நடக்கும் போது இயற்கை பொறுத்துப் பார்த்து இறுதியில் அது தன் சக்தியைக் காட்டும். அறிவியல் படி பார்த்தால் எந்த ஸ்பீஷிஸ் அதிகமாகிறதோ அதைக் கட்டுப் படுத்த ஒன்று விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்லி சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட் என்ற டார்வினின் கோட்பாடு சரியாகவே இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எதுவுமே இயற்கையை மீறி நடக்கும் போது இயற்கை பொறுத்துப் பார்த்து இறுதியில் அது தன் சக்தியைக் காட்டும். அறிவியல் படி பார்த்தால் எந்த ஸ்பீஷிஸ் அதிகமாகிறதோ அதைக் கட்டுப் படுத்த ஒன்று விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்லி சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட் என்ற டார்வினின் கோட்பாடு சரியாகவே இருக்கிறது./

      தங்கள் கருத்து உண்மைதான் சகோதரி. எந்த ஒரு இயற்கை சீற்றங்களும், அதன் பொறுத்தலுக்குப் பின்தான் அணை உடைந்த வெள்ளமாக நடந்து முடிகிறதோ என எண்ண வைக்கிறது. இருந்தாலும் மக்களின் துயரங்களுக்காக (அதில் நம் சுயநலமும் அடங்குகிறது) நல்லது நடக்க வேண்டுமென நம்பிக்கை கொண்டு இறைவனை பிரார்த்திப்போம். எதுவுமே அந்த நேரம் என்ற ஒன்று வரும் போது இறைவன் வந்து சரி பண்ணுவான். அதுவும் நாமனைவரும் நன்கறிந்த உண்மைதான். அது வரை காத்திருப்பது நம் கடமைகளில் ஒன்றுதானே..! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான பிரார்த்தனை. பொருள் பொதிந்த கவிதை. விக்னங்களைத் தீர்க்கும் விநாயகனும், ஸ்ரீராமனும் சேர்ந்து உலகுக்கு வந்திருக்கும் இந்த மாபெரும் பேரிடரைக் களைய வேண்டுமாய்ப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விக்னங்களைத் தீர்க்கும் விநாயகனும், ஸ்ரீராமனும் சேர்ந்து உலகுக்கு வந்திருக்கும் இந்த மாபெரும் பேரிடரைக் களைய வேண்டுமாய்ப் பிரார்த்திப்போம்./

      உண்மைதான் சகோதரி.
      இப்போதைய நிலையில் பிரார்த்தனை ஒன்றுதான் நம்மால் செய்ய முடிவது. அதை இடையறாது செய்து கொண்டேயிருப்போம். விசனங்களை களையும் நேரத்தை கணேசன் எளிதில் நமக்காக ஏற்படுத்தி தருவார். ராம நாமத்திற்கும் அத்தகைய சக்தி எப்போதும் உண்டு. விரைவில் நல்லதாகவே நடக்கட்டும். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கண்ணுக்கு தெரியாமல் எந்நேரமும்
    //கதிகலங்க வைக்கும், "கரோனா" அசுரனை
    கணங்களுக்கு அதிபதியே..! உன்
    காலடியில் வைத்து கசக்கி எறிந்து விடும்
    கருணைக்கு கணநேரமும் ஆகாதுனக்கு.//
    அருமையான கவிதை.

    கண நாதன் நினைத்தால் கண நேரத்தில் சரி செய்யலாம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      / கணநாதன் நினைத்தால் கண நேரத்தில் சரி செய்யலாம் தான்/

      உண்மை சகோதரி. அவன் நினைப்பதற்கு எத்தனை நிமிடம் வேண்டும். விதிகளின் பயனை நாம் அறுவடை செய்து கொண்டுள்ளோம். அதில் நம் கஸ்டங்கள் பொறுக்க முடியாமல் அவனிடம் மனம் விட்டு பிரார்த்தனைகள் செய்யும் போது நம் துயரங்களை களைய அவன் ஓடோடி வந்து விடுவான். தங்கள் கருத்து சரிதான். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. "கொரோனா" என்ற அசுரனை சம்ஹரித்து உலக மக்களை தன் அன்பால் வழி நடத்தி, இந்த அசுரனின் பிடியில் சிக்கியவர்களை நல்லவிதமாக பலப்படுத்தி செல்ல நாம் அனைவரும் அவரது பிறந்த //நாளான இந்த நன்னாளில் ஒன்று கூடி அவர் நாமத்தைச் அன்புடன் சொல்லி பிரார்த்திப்போம். அவர் கண்டிப்பாக நமக்காக வருவார். ஏனென்றால் அவர் அன்புக்கு எந்நாளும் கட்டுப்பட்டவர். 🙏🙏🙏🙏🙏🙏.//

    ராமர் காக்க வேண்டும் மக்களை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ராமர் காக்க வேண்டும் மக்களை./

      ராம நாமம் கண்டிப்பாக மக்களின் துயரங்களை விரைவில் போக்கும். இந்த நேரத்தில் கடவுளை விட்டால் நமக்கு வேறு கதி ஏது? நம்பிக்கை ஒன்றுதான் அவருக்கும் நமக்குமான பாலம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் "கொரனா"வின் தாக்கம் கொஞ்சம் குறைவே !!! .... அதற்கு காரணம் நம்மையெல்லாம் காக்கும் கலியுக கடவுளாக விளங்கும் நம் பாரத பிரதமர் "மோடி" ஐயா மகாவிஷ்வின் ஒரு அம்சமாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் முதல் வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மனம் மகிழ்ந்தேன்.

      மற்ற நாடுகளை விட வைரஸ் இந்தியாவில் குறைவுதான். எனினும் அது முற்றிலும் அழிந்து எல்லா நாட்டு மக்களும் கவலையின்றி நிம்மதியாக வாழத்தான் நாம் அனைவரும் பிரார்த்தித்து கொண்டுள்ளோம்.

      தெய்வமும் துயரங்கள் மிகும் போது மனித உருவில்தான் வந்து ரக்ஷிக்கும் என்பது உலகமறிந்த நியதிதானே..! தங்கள் கருத்துக்கு நன்றிகள். .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. நலமே விளையட்டும். ராமநவமிக்கான உங்கள் சிறப்புப் பதிவு வெகு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உலக மக்களுக்கு இந்த வைரஸ் விளைவிக்கும் துன்பங்கள் தீர்ந்து விரைவில் எல்லா இடங்களிலும் நலன்கள் பெருகி உலக மக்கள் உடல் நலத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன்.

      தங்களுடைய உளம் நிறைந்த பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீராமநவமி சிறப்பு பதிவு என்ற பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete