Sunday, March 8, 2020

பெண்மணியின் பெருமைகள்.

நிலா நிலை குலைந்து நின்றது.. !
"இந்நிலமாது என்னொளியை, எங்கணம்
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!" 

நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
"தன் அந்திச் செம்மை எவ்வாறு
தன் நிலை சிறிதும் மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாகப் போனதென்று!!!!"

வானம் வியந்து போனது! "தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில் அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி  எப்படி தன் வசப்படுத்தி கொண்டாளென்று!!!!"

நட்சத்திரங்கள் சற்றே நாணி கோணியது.! 
"நானறியா பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள் சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி, மானிடரை
கவர்ந்திழுக்கும் தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!" 

 பெண்ணே ! "உன்னை 
இப்படி இயற்கையோடு இணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், 
இன்னும் அனேக விதமாக
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய், நீ புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே உதிர்ந்து நின்றது." 

            அது அந்தக்காலம்!!!!

" இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது..." 

           இது இந்தக்காலம்!!!!

" இனி இயற்கை எப்பொழுதும்,
இயற்கையாகயிருக்கட்டும்.. ! 
இயற்கையோடிணைக்கும்
இந்த இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருகிறவள்….. நீ….!" 

" படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ….!"

" கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக் கருதி வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..!" 

" துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..!" 

" நாட்டுடன், நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…..!" 

" காலத்தோடிணைந்த, கணினியில்,
காலம் நேரம் பார்க்காமல், கவனமான
கருத்துடன் காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலா வருகிறவள்……..நீ….!"

"இனி இவ்வையத்தில்,
வாழ்வாங்கு காலம் 
வாழட்டும்  நின் புகழ்,
வளரட்டும் நின் பணி....!"

#########################################################################

மங்கையராய்  பிறந்து 
மாதவம் இயற்றிடும் 
அனைவருக்கும்  மனங்கனிந்த 
மகளிர் தின நல்வாழ்த்துகள். 

இது இன்றைய மகளிர் தினத்துக்காகவே பதிவிடவும்  காத்திருந்த  பழைய பகிர்வு. ரசித்தமைக்கு அனைவருக்கும் என் நன்றிகள். 🙏. 

31 comments:

  1. அருமையான எழுத்தாற்றல். சில வருடங்கள் முன் வரை மகளிர் தினத்துக்காகப் பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் போடுவது இல்லை. அன்று ஒரு நாள் மட்டும் சொல்லணுமா என்பது முக்கியக் காரணம். அதோடு மகளிர் முக்கியமாய்ச் சின்னச் சின்னப் பிஞ்சுப் பெண் குழந்தைகள் ஆண்களின் கைகளில் படும் பாட்டை நினைத்தால்!

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரி

      தாங்கள் முதலில் உடனடியாக தந்த வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் மகளிர் தினத்துக்காக பதிவேதும் எழுதியதில்லை. இன்று என்னவோ ஒரு வித்தியாசத்திற்காக போட்டேன். என்னுடைய கருத்தும் உங்கள் எண்ணங்களை சார்ந்ததே. தினமும் கேள்விப்படும் இத்தகைய செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன. இத்தகைய ஆண்களின் புத்திக்கள் எப்போது திருந்துமோ? தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மிக அருமையாக எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். மிகவும் நன்றி களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அழகான கவிதை சகோ
    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அழகான கவிதை என்ற பாராட்டுக்கும், இனிய மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பெண்ணின் பெருமையை நன்றாக சொல்லும் கவிதை.
    அன்றும், இன்றும் அருமை.

    புதியதலைமுறை பெண்கள் மனபலம், மனநலத்தோடு இருக்க வாழ்த்துக்கள்.

    பெண்மை மதிக்கப் பட வேண்டும்.

    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      /புதியதலைமுறை பெண்கள் மனபலம், மனநலத்தோடு இருக்க வாழ்த்துக்கள்.

      பெண்மை மதிக்கப் பட வேண்டும்./

      உண்மை.. அழகான கருத்துக்கள் தங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றிகள். தங்களுக்கும் இனிதான மகளிர் தின நல்வாழ்த்துகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மகளிர் தின நாளில் மகளிர் பெருமையை எடுத்துக் காட்டும் சிறப்பான கவிதை வாழ்த்துகள்.
    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கவிதை நன்றாக உள்ளதென கூறிய பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்களுக்கும் இனிதான மகளிர் தின நல்வாழ்த்துகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பெண்ணின் பெருமைகள் என்றெல்லாம் இடுகைகள் போடறீங்க.

    இதை ஒரு ஆண் எழுதினால்தானே பெண்ணினத்துக்குப் பெருமை.

    எத்தனைபேர் இந்த நாளில் அவர்களை நினைத்து இடுகை போட்டிருக்காங்க?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இன்று மகளிர் தினத்தில ஏதாவது நல்லது செய்யோணும் எனத் துடியாய்த் துடித்தேன்:)) வீட்டில் ஆரும் மாட்டுப்படவில்லை:)) ஆனா நெ தமிழன் மாட்டிட்டார்ர் ஹா ஹா ஹா:)).. பெண்ணே உஷார்ர்:))..

      //இதை ஒரு ஆண் எழுதினால்தானே பெண்ணினத்துக்குப் பெருமை.///

      ஆரு ஜொன்னா?:)) இந்தக் காலத்தில நம்மளை நாமளேதான் புகழோணுமாக்கும்:)) அடுத்தவங்க வந்து புகழுவினம்:)) வாழ்த்துவினம் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டோம்ம்:)).. பிக்கோஸ்ஸ்ஸ் காலம் மாறிப்போச்சூ:)) ஹா ஹா ஹா...

      Delete
    2. //எத்தனைபேர் இந்த நாளில் அவர்களை நினைத்து இடுகை போட்டிருக்காங்க?///

      எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்?:)) நாங்க ஆரும் நமக்காக போஸ்ட் போடோணும் என எதிர்பார்ப்பதில்லையாக்கும்:))...

      ஹையோ நெல்லைத்தமிழனை ஆரு குருஷேத்திரம் அனுப்பினதூஊஊஉ கர்:)) அங்கு கால் வச்சதிலிருந்து ஜண்டைக்கு ரெடியாகவே இருக்கிறாரே கர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் பயணங்கள் நல்லவிதமாக முடிந்து இருப்பிடம் திரும்பி விட்டீர்களா?

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இதை ஒரு ஆண் எழுதினால்தானே பெண்ணினத்துக்குப் பெருமை./

      உண்மைதான். ஆனால் வேறு வழி..!ஆண்கள் அப்படி ஒரு முடிவுக்கு வரவில்லையாததால் கொஞ்சம் தற்பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க முயற்சிக்கிறோம். அவ்வளவுதான்..! ஹா. ஹா. ஹா.

      /எத்தனைபேர் இந்த நாளில் அவர்களை நினைத்து இடுகை போட்டிருக்காங்க?/

      எவர்களை? இந்த இடத்தில் எனக்குப் புரியவில்லை..! நான் கருத்தில் அதிரா சகோதரியிடம் சொல்லி இருப்பது போல் என் ம. ம.க்கு ஏறவில்லை. ஹா. ஹா. ஹா.
      இருப்பினும் தன்னைத்தானே புகழ்ந்து (தற்புகழ்ச்சியாக) எழுதிக் கொள்ள இன்னமும் எவருக்கும் மனம் ஒப்பவில்லை என நினைக்கிறேன்.

      தங்கள் அன்பான கருத்துகளுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. நிறைய ஆண் பதிவர்கள் வெங்கட்ஜி உட்பட எழுதியிருக்கிறார்கள்.

      பெண்ணின் பெருமையைச் சொல்லவும் எளிதோ.

      அவர்கள் படகுக்குத் துடுப்பைப் போன்றவர்கள், விறகில் தீ போன்றும், பாலில் நெய் போன்றும் மறைந்திருந்து குடும்பம் என்னும் கப்பலைச் செலுத்துபவர்கள். அவர்கள் மனிதகுலத்தின் சிறப்பு.

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

      நான் சும்மா தங்களுக்கு பதிலாக எழுதியிருந்தேன். என் கருத்தும் தங்கள் எண்ணங்களை சார்ந்ததே.. சகோ வெங்கட்ஜி பதிவுக்கும் நான் சென்று கருத்திட்டிருந்தேன்.

      உலகில் ஆண் பெண் சரிசமமின்றி இயக்கம் எப்படி சாத்தியமாகும்? அதற்கு உங்களின் அழகான கருத்தை ரசித்தேன். எனவே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு செயல்பட்டால், எண்ணெயும் திரியுமாக குடும்பம் என்ற தீப ஒளியில் இருவரின் பெருமைகளும் எங்கும்,என்றும் பறைசாற்றப்படும்.

      தங்களின் அழகான கருத்துகளுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஆஹா அழகிய கவிதை.. இதுக்கு ஹரிதுவார்க் கவிதை எனப் பெயர் சூட்டியிருக்கலாம்:)). முக்காலத்தையும் இணைச்சுக் கவி எழுதிட்டீங்க என்பதனால ஜொன்னேன்:))..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதைக்கு உங்களின் அன்பான பாராட்டுகளை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      உங்களின் பெயர் சூட்டல் நன்றாக உள்ளது. ஆனால் ஹரிதுவார் என்பது முக்காலம் என்பதற்கு எப்படி பொருத்தமாக இருக்கும் என யோசிக்கிறேன்... ம. ம. ஆகிய எனக்கு புரியவில்லை. விளக்கினால் புரிந்து கொள்வேன்.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      குருஷேத்ராவுக்கு சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்திருக்கும் சகோதரர் நெல்லைத் தமிழருடன் மறுபடி ஒரு குருஷேத்ராவா? ஹா. ஹா. ஹா.

      அவர் எண்ணங்களில் என்ன பதில் உதயமாகிறது என்பதை நாளை காலை கதிரவன் உதயமானதும், பார்த்து ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஆஆஆஆஆஆ கவிதையில் பொருட் பிழை இருக்கிறது கவிஞரே:))..

    //தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
    தளிர் மேனியிடம் அடகாகப் போனதென்று!!!!"///

    தளிர்மேனியிடம் அடைகாக்கப் போனதோ? இல்லை அழகாகப் போனதோ? என்ன வருமெனப் புரியவில்லை நேக்கு:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      / ஆஆஆஆஆஆ கவிதையில் பொருட் பிழை இருக்கிறது கவிஞரே:))..

      ஹா. ஹா. ஹா. இருக்கட்டும்.... கவிதையில் எங்கெல்லாம் பொருட்பிழை இருக்கிறதோ, அந்த அளவுக்கு பாராட்டுகின்ற வீரியத்தை குறைத்துக் கொண்டு பாராட்டுங்கள் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஹா.ஹா.ஹா.

      /தளிர்மேனியிடம் அடைகாக்கப் போனதோ? இல்லை அழகாகப் போனதோ? என்ன வருமெனப் புரியவில்லை நேக்கு:))/

      ஹா. ஹா. ஹா. தளிர் மேனியிடம் "அடகாக" போனதை நீங்கள் "அடைகாக்க" சொல்லி அனுப்பியதை ரசித்தேன். ஆனால் நேக்கும் ஒன்னும் புரியவில்லை. ஹா. ஹா. ஹா.

      தங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அருமை அம்மா...

    என்றும் மகளிர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் பாராட்டிற்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் என்றும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      இணையப் பிரச்சனை காரணமாக பதில் தர தாமதமாகி விட்டது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அருமையா எழுதி இருக்கீங்க...    வார்த்தைகள் உங்களிடம் வரிசை கட்டி நிற்கின்றன..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றிகள். நல்லதொரு கருத்து கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. நான் சற்றே தாமதம்!  மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      உங்களின் அன்பான வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி. உங்களின் புது வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், அம்மாவின் சிரார்த்தம் பற்றி தெரிந்து கொண்டேன். அதனால் தாமதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. தங்களின் இத்தனை வேலைகள் பளு நடுவிலும் நீங்கள் வந்து கருத்திட்டது என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி.

      உங்களின் மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. எல்லா தினமும் மகளிர் தினம் தானே எனவே இதோ இப்போதும் வாழ்த்துகள் சொல்லிவிட்டு அப்படியே வருகையையும் பதிவு செய்துவிடுகிறேன்/றோம் கமலா அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா சகோதரி? வாங்ங.. வாங்க...துளசிதரன் சகோதரர் நலமா? எப்படி இருக்கிறார்?
      தங்கள் வருகையும் கருத்துப் பகிர்வும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

      ஆம். எல்லா தினங்களும் மகளிர் தினங்கள்தான். உங்களின் அன்பான வருகையே என்னை சந்தோஷமடையச் செய்கிறது. விரைவில் முன்பு போல் தவறாது எல்லோர் பதிவுகளுக்கும் வந்து தரும் தங்களின் ஊக்கமிகும் கருத்துரைக்களுக்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். சற்றே அல்ல மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவுக்கு வந்து படித்து தந்த தங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சிகளுடன் நன்றிகளும்.

      தாமதம் ஒரு பொருட்டேயில்லை.உங்களிடமிருந்து வரும் கருத்துக்கள்தான் முக்கியம். உங்களுக்கு எப்போது செளகரிபடுகிறதோ அப்போது வந்து கருத்திடுங்கள். அவசரமேயில்லை...! இதோ நானும் பதில் தர சற்றே தாமதமாகி விட்டது. ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete