Sunday, April 5, 2020

ப(பி)டித்த கதை.

ஸ்ரீ ராம ஜெயம்.

தெரிந்த புராணம்…
தெரியாத கதை!

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். 

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். 

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். 

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். 

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். 

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

🙏ஸ்ரீ ராம ! ஜெய ராம !
 ஜெயஜெய ராமா !🙏


இது வாட்சப்பில் எனக்கு வந்த கதை. இந்த கதை எனக்குப் புதிது. ஸ்ரீராம நவமி அன்று இரவு ஒரு 9 மணி வாக்கில் நான் படிக்க நேர்ந்தது. அன்று மாலை வரை என்ன எழுதுவது என நான் சற்று குழம்பிய நேரத்தில் இது வந்ததை கவனிக்க விடாமல், கொடிய கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்து என்னை எழுத வைத்தார் ஸ்ரீ ராமர். இல்லாவிடில் இதையும் என்னை பகிர வைத்திருப்பாரோ என்னவோ..!  எல்லாம் அவன் செயல் அல்லவா?. 🙏. இதைத்தவிர நம் கைகளினால் வேறெதும் பலனில்லை. 

இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த மாதிரி வாட்சப்பில் வந்து படித்திருக்கலாம். இதை என் பதிவிலும்  பகிர ஆசை வந்து அன்புடன் பகிர்ந்தும் விட்டேன். இங்கு  இதைப் படிப்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

34 comments:

 1. இந்தக் கதை இதுவரை நான் அறியாதது.

  கீதா சாம்பசிவம் மேடம் வந்து இதன் உண்மைத் தன்மையைச் சொன்னால்தான் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நானும் இதுவரை இக்கதையை கேள்விப் பட்டதில்லை. அதனால்தான் பகிர்ந்தேன். ஆனால் நமக்குத் தெரியாத எத்தனையோ உபகதைகளை உட்கொண்டது நம் இதிகாசங்களான இரு புராணங்களும். அதனால் இப்படியான பலகதைகள் எனக்குப் புதிதுதான். நானும், கீதா சாம்பசிவம் சகோதரியின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கும் நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. இந்தக் கதையைத் திருப்பூர்க் கிருஷ்ணன் (?) எழுதி தினமலர் வாரமலரில் வாசித்த ஞாபகம். தேடிப் பார்க்கணும். ராமாயணத்தில் நாம் அறியாத பல புதிய விஷயங்களை எழுதி இருக்கிறார் அவர். ஆகவே வால்மீகியில் இல்லாத இதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நான் ஆழ்ந்து படித்தது வால்மீகி மட்டுமே! கம்பன் கூட ஆங்காங்கே தான் தெரியும். அதோடு இதிகாசப் புராணங்களுக்கு நான் இதுதான் நடந்தது எனச் சொல்லும் ஆணையோ அதிகாரமோ (authority) படைத்தவளும் அல்ல! :))))

   Delete
  3. வால்மீகி எழுதியிருக்கிறாரா? இல்லையென்றால் சொற்பொழிவாளர்கள் சேர்க்கும் கற்பனைக் கதைகளுள் ஒன்றாகத்தான் இருக்கும்.

   சீதையை இராவணன் கவர்ந்து சென்றதையே தன் மனதிற்கு நிறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக விதவிதமாக பலர் எழுதியிருக்கின்றனரே... (இராவணன் அந்த குடிசை இருந்த இடம் முழுவதுமே பெயர்த்துக்கொண்டு தூக்கிச் சென்றான் என்பதுபோல).

   கீசா மேடம் இந்த சப்ஜெப்ட்லாம் நிறைய படிச்சிருப்பாங்க என்பதால் அவர் கருத்தைக் கேட்டேன்.

   Delete
  4. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீங்களும் இந்தக் கதையை படித்திருப்பீர்கள் என நினைத்தேன். அதன்படி படித்துள்ளீர்கள். இன்று இந்தக்கதையை தந்தவர் கோ.ஸ்ரீநிவாசன் எனப் போட்டிருந்தது.

   வால்மீகி ராமாயணத்தில் இந்த மாதிரி உபகதைகள் நிறைய இருக்காதென நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. தங்களுக்குத்தான் விபரமாக தெரியும் என நினைக்கிறேன். . இந்த மாதிரி கதைகள் நம் பகவத் நம்பிக்கையை ஆழப்படுத்த இடையில் உருவானவையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், கதைகள் ஸ்வாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் படிக்கும் நம் உள்ளத்தில்,அந்தக் கதையின் நல்ல பண்புகள் சிலசமயம் தங்கி விடும் சிறப்பும் நேர்வதுண்டு. அது மனதிற்கு ஆரோக்கியமான விஷயந்தானே .. என நினைத்துக் கொள்வேன்.தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

   தாங்கள் மீள் வருகை தந்து கருத்துக்கள் கூறி சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

   இதிகாசங்களில் வரும் உபகதைகளை விதவிதமாக இடங்களில் (புத்தகங்கள்) படிக்கும் சொற்பொழிவாளர்கள் அதன்படி தாம் ஆற்றும் உரையின் நடுவில் அக்கதையை சுவாரஸ்யமாக கூறும் பயிற்சி எடுத்து கொள்வார்கள் போலும்.
   (விபரத்திற்கு இதில் கலந்து கொள்ள சொற்பொழிவாளர் அதிரா சகோதரியும் வருவார்கள் என நினைக்கறேன்.)

   ராவணன் தான் பெற்ற சாபத்தால் (பிற பெண்களை அவன் தொடும் போது தலை வெடித்து விடும் சாபம்) அவன் சீதா தேவியை தொடாமல் இருந்த இடத்தோடு பெயர்த்துச் சென்றான் என சில இடங்களில், படமாக பார்க்கும் போதும், படிக்கும் போதும், பார்த்து கேள்வி பட்டுள்ளோம். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. ஜெய் ஸ்ரீ ராம் ...

  போன வாரம் முகநூலில் நானும் இக்கதை வாசித்தேன் ...

  மன சஞ்சலங்களை நீக்கி மனம் அமைதி பெறவே நானும் இது போன்ற கதைகளை வாசித்து அவன் அருள் வேண்டி நிற்கிறேன் ...

  எல்லாருக்கும் நல் அமைதியையும் , நல் உடல் நலத்தையும் அவன் அருளட்டும் ...


  ராம் ராம் ஸ்ரீ ராம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /போன வாரம் முகநூலில் நானும் இக்கதை வாசித்தேன் .../

   அப்படியா.. சகோதரி? மிகவும் சந்தோஷம். இது போன்ற ஒரு கடினமான சூழலில் இந்த மாதிரி தெய்வீக கதைகள் நம் மனதிற்கு சாந்தியையும், அமைதியையும் தருகிறது. தங்கள் கருத்துக்களும் உண்மைதான்..

   அனைவருக்கும் உடல் நலத்தையும், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சமாளிக்கும் மன தைரியத்தையும் இறைவன் நமக்காக நமக்கருள பிரார்த்திக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

   ராம் ராம் ஸ்ரீ ஜெயராம். என பிரார்த்தித்து கொண்டேயிருப்போம்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. இதுவரை கேள்விப்படாத புராணக்கதையாக இருக்கிறது சகோ.

  நமக்கு கதைகளுக்கு பஞ்சமா என்ன ?

  சுவாரஸ்யமாகவும் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்.. இதுவரை கேள்விப்படாத கதைதான்..! இதிகாசங்களில் இந்த மாதிரி சின்ன சின்ன கதைகள் ஸ்வாரஸ்யமானவையாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று. இப்படி படித்ததில் சில மறந்தே போகும் யாராவது நினைவுபடுத்தும் போது ஞாபகம் வரும். இந்தக் கதையும் படிக்கும் போதே நன்றாக இருந்தது. அதனால் பகிர்ந்தேன். தங்களுடைய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 4. கதைகள் ஏராளம் உண்டு அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம் .. இது போல் கதைகள் புராணவரலாற்றுக்கிடையே நிறைய உண்டு. இதையும் படித்து ரசித்தமைக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. கதை கேள்வி பட்டது இல்லை.
  மிக அருமையான கதை.

  //இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்//

  இறைவனே பாத பூஜை செய்து இதைவிட வேறு கெளரவம் வேண்டும்!

  நட்பு மிக உன்னதமானது. உண்மையான பக்தி இருந்தால் ஒரு நாள் இறைவனை அடையலாம் எனபதை உணர்த்தும் கதை.

  பகிர்வுக்கு நன்றி கமலா.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதை நன்றாக உள்ளதென படுத்து ரசித்தமைக்கு நன்றி சகோதரி.
   நானும் இதை படித்ததே இல்லை.

   /இறைவனே பாத பூஜை செய்து இதைவிட வேறு கெளரவம் வேண்டும்!/

   படித்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. தன்னுடன் படித்த பால்ய நண்பனை மறவாது அவரை கெளரவிக்க, தன் நாமாவை எப்போதும் ஜபித்தபடி தன்னுடனே இருக்கும் நண்பனிடமே என்ன செய்வது எனக்கேட்டு அதன்படி நடக்கும் ராமருக்கு எப்பேர்பட்ட பரந்த உள்ளம். இந்த அன்பினால் அன்புக்கு கட்டுண்ட கதையை பதிவில் இட வேண்டுமென்றுதான் பகிர்ந்தேன். உங்களுக்கும் இந்த கதை பிடித்தது மிகவும் மகிழ்வு தந்த விஷயம். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. சிறந்த கண்ணோட்டம்
  அருமையான பதிவு

  http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்தது தெரிந்து மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன்.ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றிகள். தங்கள் பதிவுக்கு நானும் வருகிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. இதை அப்படியே இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜியின் காணாமல்போன கனவுகள் தளத்திலும் படித்தேன். எனக்கும் அறிந்திராத கதை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்களும் இந்தக்கதையை ஏற்கனவே படித்திருப்பது தெரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எனக்கும் இது அறிந்திராத கதை என்பதோடு, கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன், குசேலனின் நட்பின் பெருமையோடு ஒப்பிட்ட சுவாரஸ்யமான கதை என்பதால் இங்கு என் தளத்திலும் பகிர்ந்தேன். இங்கும் வந்து தாங்கள் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கு என் மகிழ்வான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. நல்ல கதை. ஸ்ரீராம் சொன்னது போல, சமீபத்தில் நானும் ராஜியின் தளத்தில் இந்தக் கதையை படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீங்களும் இக்கதையை ரசித்துப் படித்திருப்பது தெரிந்து மகிழ்வடைந்தேன்.

   நல்ல நட்புக்கு உதாரணமான கதை. ஸ்ரீ ராமரின் அன்பும், பாசமும், நட்பை மறவாத நல்ல பண்பும் இக்கதையில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. ராம நாமாவின் மகிமையும் அதை எப்போதும் உச்சரிப்பவர்களுக்கு சிறந்த பலன் தரும் என்பது இக்கதையிலிருந்து புரிகிறது. நீங்கள் இங்கும் வந்து கருத்துக்கள் தந்தமைக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. //இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.//

  ஆவ்வ்வ் அப்போ இனி கிருஷ்ணர் அவதாரமும் படிச்சு நம் மக்களுக்குப் போஸ்டில் சொற்பொழிவாற்றப் போறேன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஆவ்வ்வ் அப்போ இனி கிருஷ்ணர் அவதாரமும் படிச்சு நம் மக்களுக்குப் போஸ்டில் சொற்பொழிவாற்றப் போறேன்ன்:))/

   ஹா.ஹா.ஹா.ஆற்றுங்கள்.ஆற்றுங்கள்நீங்கள் நினைத்தால் இவ்விதமாக எழுதிட கேட்கவா வேண்டும். உங்களின் சொற்பொழிவுகளும், உபன்யாசங்களும் கேட்க நாங்களும் எந்நாளும் தயாராக உள்ளோம். மிக விரைவில் அந்த நாளும் வந்திடட்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. அனந்தன் பற்றிக் கொஞ்சம் அறிந்திருக்கிறேன், தற்பைப் புல் பறிக்கச் சென்றது பற்றி..

  //அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.//

  ஓ இது எத்தனை வருடங்களாக நிகழ்ந்ததோ... அப்போ உணவு, தண்ணி ஏதுமின்றி இப்படி இருந்தாரெனில் எப்படி நம்புவது?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஓ.. நீங்கள் இந்தக் கதையை அறிந்துள்ளீர்களோ? எங்கு படித்தீர்கள்?
   அப்போது முழுக் கதையையும் படிக்கவில்லையா?

   /ஓ இது எத்தனை வருடங்களாக நிகழ்ந்ததோ... அப்போ உணவு, தண்ணி ஏதுமின்றி இப்படி இருந்தாரெனில் எப்படி நம்புவது?/

   அக்காலத்தில் தவமியற்றுபவர்கள் காற்றை மட்டும் உணவாக கொண்டு பல நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்து தாம் செய்யும் தவப்பலனை பெறுவார்கள் என நாம் நிறைய கதைகளில் படித்துள்ளோமே..! எல்லாம் மன வைராக்கியமும், இறைவன் அருளுந்தான். நமக்கு இந்தப் பிறவியில் இதுவெல்லாம் சாத்தியமில்லை எனும் போது அவநம்பிக்கை எழுவதும் சகஜந்தான். எனக்கும் அப்படி தோன்றும் போது பூர்வ ஜென்ம பலன்களையும் நினைத்துப் பார்ப்பேன். மொத்தத்தில் எல்லாமே விதிப்பயன்தான்.

   தாங்கள் வந்து தந்த கருத்தத்தனைக்கும் மகிழ்வுடன் கூடிய மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. ராமாயணம், பாரதக் கதைகள் கேட்டு முடியாது, ஒவ்வொருவரின் பிரசங்கம் கேட்கும்போதும் ஒவ்வொரு புதுக்கதை வெளிவருகிறது, அதனால இவற்றை நாம் படிச்சு முடிச்சுவிட்டோம் என என்றைக்குமே சொல்லி முடியாது... சமீபத்தில் ஒரு சொற்பொழிவு இலங்கை ஜெயராஜ் அங்கிள் சொன்னார்.. வெள்ளிபகவானின் வயிற்றில் இருந்து, அவரது வயிற்றைக் கிழித்து ஒருவர் பிறந்தாராம்.. ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

   ஆமாம்.. தங்கள் கருத்தனைத்தும் உண்மைதான்.. இதிகாசங்களில் ஏகப்பட்ட உபகதைகள் உள்ளன. ஒருவர் அறிந்தது மற்றொருவர் அறிய இயலாது. எழுதியவர்களும் எப்படித்தான் சேகரித்து எழுதினீர்களோ என சந்தேகம் வரும். ஆனாலும். கதைகள் அந்த வரலாற்று பாதையை ஒட்டினாற்போல் அமையும் போது கதைகளும் படிக்கும் பொழுதினில் அலுப்பு தட்டாது போய் விடும். சொற்பொழிவு செய்பவர்களும் இதையெல்லாம் படித்து நினைவில் வைத்திருந்தால்தான் அவர் ஆற்றும் சொற்பொழிவுக்கு மக்கள் கூட்டமே வரும். அவரும் பிரபலம் அடைவார். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. // எல்லாம் அவன் செயல் அல்லவா?. 🙏. இதைத்தவிர நம் கைகளினால் வேறெதும் பலனில்லை. //

  ஹா ஹா ஹா கொரொனா உங்களை நன்கு மிரட்டி வைத்திருக்கிறது என்பது மட்டும் புரியுது போஸ்ட்கள் பார்க்கும்போது.... எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது, நம் கையில் என்ன இருக்கிறது...

  அனந்தன் கதை ஒரு அழகிய கதை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன் வந்ததற்கு அன்பான நன்றிகள்.

   /கொரொனா உங்களை நன்கு மிரட்டி வைத்திருக்கிறது என்பது மட்டும் புரியுது போஸ்ட்கள் பார்க்கும்போது..../

   ஆமாம்.. வீட்டிலிருந்தபடியே அதேயே (கொரோனா) தியானம் பண்ணும் போது அது வந்து மிரட்டாமல் எப்படி இருக்கும்.? ஹா.ஹா.ஹா.

   விதிப்படிதான் எல்லாமே நடக்கும். நாம் இன்று சாப்பிடும் உணவு, அருந்தும் நீர் என எல்லாமே நம் விதிப்படிதான். அதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. நான் பட்ட அடிகளும் விதியைதான் சுட்டிக் காட்டும். நம் கையில் ஒன்றுமேயில்லை. (நம் கைரேகைகள் தவிர:)) அது கூட நம்முடையது இல்லை "அவன்" போட்ட பிச்சை.)

   அனந்தன் கதை நன்றாக உள்ளதென கூறிய கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. கம்பர் தனக்கு ஆதரவு அளித்த சடையப்ப வள்ளலை கௌரவிப்பதற்காக ராம பட்டாபிஷேக காட்சியை எழுதும் பொழுது ராமருக்கு சூட்ட வேண்டிய கிரீடத்தை சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் எடுத்துத் தர அதை வசிட்டர் ராமன் தலையில் சூட்டினார் என்று எழுதினாராம். அப்படி அனந்தன் என்று ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றிக் கடனை தீர்க்க யாரோ கட்டி விட்ட புதுக் கதை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்துக்கள் மகிழ்வளிக்கின்றன. இதிகாசங்களில், கதைகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாகத்தான் இருக்கின்றன. காப்பியங்கள் எழுதும் அவரவர் எண்ணப்படி வேறுபடுகின்றன. அதன்படி இடையில் புகுந்த இக்கதையும் படிக்க நன்றாக இருந்தது அதனால் பகிர்ந்தேன். தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. இருந்தாலும் ஸ்வாரஸ்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம் சகோதரி.. புராணங்களில் மாறுபட்ட உபகதைகள் எவ்வளவு கேட்டாலும் அனைத்து ஒரு வகையான பக்தியையும், ஸ்வாரஸ்யத்தையும் தருகின்றன. தங்கள் கருத்துக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. கமலாக்கா இப்படியான ஒரு கதையை இப்போதுதான் கேட்கிறேன். இதுவரை அறிந்ததில்லை. புதுசா இருக்கு.

  என்றாலும் கதை நன்றாக த்தான் இருக்கிறது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நானும் இதைப்புதிதாக படித்துதான் தெரிந்து கொண்டேன். நட்புக்கு இலக்கணமாக குசேலர் கதை சிறு குழந்தையிலிருந்தே அறிந்ததுதான். இந்தக் கதை உறவின் மூலம் வாட்சப்பில் வந்து படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக இருக்கவே பகிர்ந்தேன்.

   நீங்களும் கதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete