இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள்.
1. ஆம் பகுதி சுட்டி.
2. ஆம் பகுதி சுட்டி.
ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு நீ ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே... மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு. என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி சோபாவில் சாய்வாக அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக.
"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள்.
ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால் குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..!
" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது.
"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது.
தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன். போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன்.
"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது.
தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன் பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது.
திருமணமண்டபம் கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும் வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள்.
"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம் புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
"தம்பி. . .நீ நூறு வயது உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள், "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள்.
"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக நான் உனக்கு என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.
தொடர்ந்து வரும்.


