Pages

Wednesday, October 12, 2022

சிவகாமியின் பந்தம்.

 சிவகாமி அமைதியாய் இருந்தாள்.

"என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு முன்னாடி அந்த ஆண்டவன் கொண்டு நிறுத்துவார். நான் உன் விருப்பங்களை என்றாவது தடை பண்ணியிருக்கேனா ? தயவு செய்து இப்ப ... இந்த விஷயத்திலே என்னை புரிஞ்சுக்கோ...!!! " இது அவனுடன் அவன் விரும்பிய பெண்ணை மறுப்பேதும் சொல்லாமல் சென்று பார்த்து விட்டு வந்த நாளில் அவள் கூறியது. இன்றைய வரைக்கும் அந்த பதில்தான் அவள் அழுத்தந்திருத்தமாக கூறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலும் இதேதான் அழியாமல் எழுதி ஒட்டியிருந்தது . 

இரு தினங்களில் அவன் அலுவலக வேலையாக வெளியூருக்கு கிளம்பும் போது" "தம்பி.. என்னை தப்பா புரிஞ்சுக்காதே. ..! தவறான பாதைகள் உன் வாழ்வில் வந்துட கூடாது. நான் நமக்கு தெரிஞ்ச உறவுகளில் சொல்லி சீக்கிரமா வேறு ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னை கல்யாண கோலத்திலே பார்க்க இந்த தாய் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்டா ....! அதை மறந்துடாதே..! அக்காவின் கண்களில் நீர் கசிவை கண்டதும் கணேசன் மனம் பதறியது.... 

"அக்கா. .. உன்னைப்பத்தி தெரியாதா? எனனை அம்மாவுக்கும் மேலாக இருந்து வளர்த்திருக்கே....!!! உன் பேச்சில் என்னைக்குமே ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் உன்னைப் போல் எப்போதுமே திருமணமொன்றை செய்து கொள்ளாமல் கூட இருப்பேனே ஒழிய, அவளையே நினைத்துக் கொண்டு தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன். அதுவும் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டு.. ..!! நீயிருக்கிற வரை நானும் உனக்காக இருப்பேன்... என்னை நம்பு..!!" என்றவனை உணர்ச்சி மிகுதியில் கண்ணில் கசிந்து தேங்கிய நீர் வடிய அவன் தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவன் சென்ற மறுதினம் தனிமை உறுத்தவே சிவகாமிக்கு மனதின் இத்தனை நாள் பாரங்களின் சுமைகள் பெரிதாக தெரிந்தன அன்றிரவு உறக்கம் வராததால், தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்கள் வேறு நினைவுகளில் வந்து சிறிதளவு வந்த உறக்கத்தையும் விழுங்க முயற்சிக்க நிம்மதியான நித்திரையை இழந்து அவதியுற்றாள்..

குடும்பத்தின் பெரிய மகளாக பிறந்த சிவகாமி அத்தனை பொறுப்புகளையும் உணர்ந்தவளாக வளர்ந்திருந்தாள். தனக்குப்பின் இடைவெளிகள் மிகவும் உடைய இரு தங்கைகள், இறுதியில் ஒரு கடைக்குட்டியாக ஒரு தம்பி......!!!! தம்பி அம்மாவுக்கு பிறக்கும் போது அம்மா பிரசவத்திற்கு அம்மாவுக்கு கூடமாட உதவியாய் இருந்தவளே சிவகாமிதான். அவளின் பொறுப்புள்ள குணத்தை கண்டு பாராட்டாத உறவுகளே இல்லை. 

படித்து முடித்து நல்லதோர் பள்ளி ஆசிரியையாக அவள் பணியில் அமர்ந்ததை பார்த்ததும் அவள் அம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. சட்டென தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்வித்து அவள் வாழ்க்கையில் வரும் வசந்தங்களை பார்க்க எல்லா தாயைப் போன்று அவளும் ஆசைப் பட்டாள். 

தன் கணவனுக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லையென தெரிந்து கொண்ட போது அவளின் கவலைகள் ஆரம்பமாகியது. உறவுகளிலும் அவளை மணம் முடிக்க வந்தவர்களையும் ஏதேதோ பேசி தடுத்தார் அவள் கணவர்.

அதன் காரணம் தெரியாமலும், அவரை எதிர்த்து பேச தெரியாமலும் திண்டாடிய அந்த தாய்க்கு. சிவகாமி தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் நல்ல பண்பான குணமுள்ள நடராஜனை தான்்விரும்புவதாகவும், அப்பாவிடம் பேசி தங்கள் திருமணத்திற்கு அம்மா எப்படியாவது சம்மதம் வாங்கித்தர வேண்டுமென ஒருநாள் தனிமையிலிருக்கும் போது தன்னிடம் கூறியது வயிற்றில் பால் வார்த்தது போன்று இருந்தது. 

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு சிவகாமி.... நானே இதுபற்றி உன்கிட்டே பேசனும்'னு இருந்தேன். சாதரணமா ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட இதுபோல தன் விருப்பத்தைப் பத்தி சொன்னா, உடனே கோபந்தான் படுவா...!!! ஆனா நான் சந்தோஷ படறேன்...!! ஏன்னா, உன் அப்பா ஏனோ உன்னை சீக்கிரம் திருமணம் செஞ்சு வைக்க விருப்பமே இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறார். என் பேச்சையும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார். தம்பியும் இப்பதான் பள்ளியில் படிச்சுகிட்டிருக்கான். அவன் வளர்ந்து இவர் சுமையை எப்போதான் வாங்கிப்பான் என்பதை போன்று பேசுறார். நீயும் எதையும் கண்டுக்காமல் தினமும் வேலைக்கு செல்வதே கடமையென இருக்கே... உனக்கு அப்பறம் இரு தங்கைகளுக்கும், பண்ண வேண்டுமே ..!! எப்படியென என யோசிக்கிறாரோ என்னவோ தெரியல்ல...!! இல்லை உன் சம்பாத்தியத்தை அவர் இழக்க விரும்பல்லையோ என என் மனசு கிடந்து தவிக்குது...! நீ இன்னைக்கு சொன்ன விஷயத்தை அவர்கிட்டேயே எப்படியாவது நாளைக்கே வலியுறுத்தி சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செஞ்சிடலாம். எல்லா பொண்களை போலவும், நீயும் நல்லா வாழ வேண்டும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லையம்மா. .." அம்மா தன் இயல்பு நிலை மாறி மனக் கலக்கங்களை இறக்கி வைத்த சோர்வில் அழ ஆரம்பித்தாள். 

" அம்மா... அப்பாவை பத்தியும், அவரோட பயங்களை பத்தியும் எனக்கு தெரியுமம்மா.. நான் இந்த குடும்பத்துக்கு மூத்த மகனா இருந்து எல்லா பொறுப்பையும் சுமப்பேன். ஏன்னா எனக்கும் அந்த ஆசை இருக்கு....என் கடமையிலிருந்து நான் தவறவே மாட்டேன். நான் சொன்ன அவரும் இதுக்கெல்லாம் தடை ஏதும் சொல்லாதவரம்மா... அவருக்கு அவர் அப்பா இவருடைய சின்ன வயசிலே தவறிப்போயிட்டதாலே அக்கா, தங்கைன்னு குடும்ப பொறுப்புக்கள் இருக்கு... அதனாலே நீ தைரியமா அப்பாகிட்டே பேசு... என் திருமணத்துக்கு பின்னும் நான் இதே மாதிரி நம்ம குடும்பத்தை காப்பாத்துவேன். தம்பியை படிக்க வச்சி, அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். என் பெரிய பையன் மாதிரி அவனை பாத்துக்குவேன். தங்கைகளுக்கும் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கு தகுந்த வாழ்க்கை வரும் போது நான் நிச்சயம் உங்க கூட இருப்பேன்ம்மா. அதைப்பற்றியும் அப்பாகிட்டே கூறி அவரை தைரியப்படுத்து.....!!! " சிவகாமி பேச. பேச அவள் தாய் இன்னமும் கண்ணீர் சிந்தினாள். 

எந்த நேரத்தில் அவள் அப்படிச் சொன்னாளோ, அவள் தந்தை அடுத்து வந்த சில மாதங்களில்,," நீயே குடும்பத்தை பார்த்துக்க....!!!!" என்பது போல், இவ்வுலக பந்தங்களை விட்டு விலகினார். அதற்குள் ஒருநாள் தன் மனைவி மூலமாக இவள் காதலிப்பதை தெரிந்து கொண்ட தந்தை உக்கிரமாக மறுத்ததோடு இல்லாமல், அதன் விபரம் தெரிந்து வீடு தேடி வந்து சுமூகமாக பேச வந்த நடராஜனை மிகவும் அவமானபடுத்தியும் அனுப்பினார். நடராஜனும் அவளிடம் ஏதும் கூறாமல் பள்ளி வேலையை விட்டு விலகியதை தந்தை மறைவு தந்த அதிர்ச்சியில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கண்ணெதிரே தன் உயிரை விட பெரிதான நான்கு ஜீவன்களின் நிராதரவான நிலை ஒன்றே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. 

தந்தையின் மறைவுக்குப் பின் இவளின் பொறுப்புக்கள் கூடியதில், மனதின் நிம்மதிக்காக காதலை தியாகம் செய்து விட்டு,பள்ளியையும் மாற்றிக் கொண்டு இங்கு வந்து விட்டாள். தங்கைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணங்கள்,, தம்பியின் படிப்பு, என்ற வாழ்வின் சுழற்சியில்,, நடராஜனின் நினைவுகள் புதைந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயின. . மிகுந்த மனவருத்தத்தில் இருந்த தாயும், தம்பியின் கைகளை பிடித்து இவளிடம் ஒப்படைத்து இவளின் நிலை குறித்து வருத்தபட்டவளாய் ஒருநாள் அவளும் இவளுக்கு இன்னமும் சிரமம் கொடுக்க வேண்டாமென மறைந்தாள். 

அம்மாவும் ஒரு நாள் தீடிரென மறைந்தப் பின் தம்பி மேல் வைத்திருந்த பாசம் இன்னமும் இறுகியது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை கண்டதும் தன் உழைப்புக்கு பலன் தெரிந்தது. இதைக்காண இப்போது தாயும், தந்தையும் இல்லையே என்ற வருத்தம் தோன்றியதின் இடையே, "இதைக்காண முடியாதோ?" என்ற அச்சம் அப்பாவுக்கு ஏனோ எழுந்ததை குறித்து அம்மா உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்பட்டதும், நினைவுக்கு வந்தது. இப்போது தம்பி தான் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாக கூறியதும் தடையேதும் சொல்லாமல், அவனுடன் வந்து அந்தப் பெண்ணை சந்திக்க ஒத்துக் கொண்டாள். அந்த உணவகத்தில் காஃபி அருந்தி கொண்டே. அவளுடன் பேசிய போது, "இவள் தன் தம்பிற்கேற்ற நல்ல மனைவிதான்.." எனத் தோன்றியது. அவளிடம் மனம் விட்டு அதை சொல்லி விடலாம் என்று நினைத்த போது, அவள் தன் குடும்ப  புகைப்படத்தை தன் கை பேசியில் யதேச்சையாக காட்டியதும் மனம் மாறி போனாள். அங்கிருந்து கிளம்பும் இறுதி வரை சற்று இறுக்கமான மன நிலையில் இருந்தவள், வீடு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை "தம்பி... உனக்கு அந்தப் பெண் வேண்டாம்டா..... " என்பதுதான். 

நினைவுகள் தந்த  இறுக்கம் குறைந்து அவள் நித்திரையை தொட்ட போது மணி நான்கை தாண்டியிருந்தது. 

தொடர்ந்து வரும்.

கதைக்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றி. 🙏. 

22 comments:

 1. //தந்தையின் மறைவுக்குப் பின் இவளது பொறுப்புக்கள் கூடியதில், //

  இந்த மாதிரியான தியாக தீபங்கள் ஆயிரம் பல்லாயிரம்..

  கதை அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   முதலில் கதைக்கு வருகை தந்து நல்லதொரு கருத்தினை பதிய வைத்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியும் கூட.

   /இந்த மாதிரியான தியாக தீபங்கள் ஆயிரம் பல்லாயிரம்/

   உண்மை.. கதை நன்றாக உள்ளது என்ற கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. நடராஜனின் பெண்ணாயிருந்தகால் என்ன, மணம் முடிக்கலாமே...   இவள் மனம் ஏன் சஞ்சலபபடவேண்டும்?  ஒருவேளை..  ஒருவேளை....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்தும் சரிதான். ஏதோ கற்பனையில் எனக்குத் தோன்றுவதை ஒரு கதை என்ற பெயரில் எழுதுகிறேன். முடிவு நன்றாக உள்ளதாவென நீங்கள் அனைவரும் சொல்லும் போது மனம் மகிழ்ச்சியடையும். அப்படியும் அது தப்பான முடிவு என்றால் அடுத்து ஏதாவது எழுதும் போது திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஊகமும் என் கற்பனையோடு ஒத்து வருமோ..? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. ஆனால் அப்படி இருந்தால் கூட கணேசனுக்கும் தெரிந்திருக்குமே....  சரி..   பொறுத்திருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே
   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஆனால் அப்படி இருந்தால் கூட கணேசனுக்கும் தெரிந்திருக்குமே/

   ஹா ஹா ஹா
   அடாடா..! எப்படி என்று இப்போது எனக்கு தெரியவில்லையே? தெரிந்து விட்டால் வேறு மாதிரியான பல முடிவுகளை யோசித்திருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. கதை முடிவில் உங்களின் கற்பனை மிகுந்த ஊகத்திற்கும் ஆவலாக காத்திருக்கிறேன். உங்களின் ஊக்கம் தரும் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் அடுத்தப் பகுதியை ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என் எழுத்துக்கு வளம் மிக்க உரம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. அக்கா வேண்டாமென்று சொன்னதற்கு வலுவான காரணமென்ன ? கணேசனின் காதல் கை கூடியதா ?என்று அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அது வலுவான காரணமா என்பது எனக்குத் தெரியாது. கணேசனின் காதல் கை கூடியதா என அறிய ஆவலுடன் இருப்பதற்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. ஓ அப்பெண் அவளின் முந்தைய காதலன் நடராஜனின் பெண்ணாக இருப்பாளோ? ...இல்லை அவள் அப்பாவிடம் ஏதேனும் ஒரு ரகசிய்ம் இருந்ததோ அதனால்தான் இவள் கல்யாணத்திற்குத் தடை சொல்லி நடராஜனை மணக்க சம்மதம் தெரிவிக்கவில்லையோ....அப்படித் தோன்றுகிறது..

  அடுத்த பகுதியை வாசிக்க ஆவலுடன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆஹா.. ஒரளவு கதையை ஊகித்து விட்டீர்கள். பல விதங்களில் சிறப்பாக கதை எழுதும் தங்களால் கண்டு பிடிக்க இயலாதா என்ன? வேறு பல யோசனைகளுடன் கதைக்கு கருவினையும் உண்டாக்கி தந்துள்ளீர்கள். பயனுள்ள கருத்துக்கள். தாங்களும் இக்கதையயின் தொடர்ச்சியை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி .

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. கதை முடிந்தபிறகு படிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை முடித்த பின்தான் மொத்தமாக படிப்பீர்கள் என்று அறிவேன். கதையை அப்படியே பகிர்ந்திருக்கும். ரொம்ப நீளமாக உள்ளதென யாராவது சொல்லி விட்டால் என்ன செய்வதென பகுதி பிரித்தேன். அதற்குள் பல இன்னல்கள்.. கதையை உடனடியாகவும் விடுவிக்க இயலவில்லை. நன்றி சகோதரரே தங்கள் கருத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. அருமை..ஆவலுடன்.தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீங்கள் வந்து கதை படித்து ஊக்கம் நிறைந்த கருத்து தந்திருப்பது கண்டு மகிழ்வடைகிறேன். இனி வரும் பாக்கி பகுதியையும் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. கதை அருமை. குடும்பத்திற்காக இப்படி தியாகம் செய்யும் உறவுகள் அதுவும் மூத்தவராக பிறந்து விட்டால் அதிகம்.

  நான் நினைத்தது சரியா என பார்க்க அடுத்த பதிவை தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம்.. மூத்தவரான பிறந்து விட்டால், அதுவும் குடும்ப சூழ்நிலை காரணமாக இப்படி மெழுகாய் தன்னை உருக்கியவர்கள் எத்தனையோ பேர்கள்...!

   தாங்களும் கதையின் தொடர் அறிய ஆவலாக இருப்பது கண்டு மகிழ்வடைகிறேன். நான்தான் தாமதப்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. சஸ்பென்சோடு கதை தொடர்கிறது. அக்கா மறுத்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது உங்கள் கதை.

  மூத்தவராகப் பிறப்பதில் இப்படி சில குடும்பப் பொறுப்புகள் என்று தனிப்பட்ட விருப்பங்களை மாற்றி வைக்கும் சங்கடங்கள் உண்டுதான் என்று தோன்றுகிறது.

  தொடர்கிறேன்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதை நன்றாக இருப்பதாக தாங்கள் சொன்னமை கண்டு என் மனம் மகிழ்வடைகிறது

   ஆம்.. குடும்பத்தில் மூத்தவர்கள், அதுவும் நல்ல மனம் படைத்தவர்கள் என்றுமே தியாகத்தின் வடிவாகத்தான் மாறிப்போவர். அவர்களின் கடமைகளும் வீணாவதில்லை. தாங்கள் கதையை தொடர்ந்து வாசிக்கிறேன் எனச் சொன்னது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து படித்து கருத்துக்களை தாருங்கள். மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. நடராஜனின் பெண்ணாகவே இருக்கட்டுமே. தம்பிக்குப் பிடித்திருந்தால் மணம் முடிச்சுடலாமே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   நலமா0 தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   தங்கள் கருத்தும் சரிதான். தங்கள் கருத்துபடியே நடந்தால் அனைவரும் சந்தோஷமடைவார்கள். நானும்தான்...

   கதைக்கு தொடர்ந்து வந்து ஊக்கம் நிறைந்த கருத்துக்ளை தாருங்கள். மிக்க நன்றி சகோதரி

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete