Sunday, January 31, 2021

பொங்கல் திருநாள்....



இது பொங்கல் மலர் மின்னூலுக்காக தயாரானது என் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் ஏகப்பட்ட டிபன் வகையறாவை போட்டு அசத்தி உள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கும் இதை என் தளத்தில் போட வேண்டுமென்ற ஆசையுடன் ஆவலும் எழுந்தது. 

பொங்கல் மலர் மின்னூலில் அனைவரது படைப்புகளையும் எனக்கு முழுமையாக தடையில்லா நெட்வொர்க் வந்தவுடன் படிக்க வேண்டும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மலரை அருமையாக தொகுத்து தயாரித்த சகோதரர் கெளதமன் அவர்கள், மற்றும் எ. பி ஆசிரிய பெருமக்களுக்கு எனது அன்பான நன்றிகள். 

பொங்கல் மின்னூலை என்னைத்தவிர அனைவரும் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை இங்கும் பார்வையிட்டு படிப்பவர்களுக்கும் என பணிவான நன்றிகள். 🙏. 

அனைவருக்கும்
  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது முதுமொழி. அதன்படி உலகத்தை தன்  விருப்பப்படி ஒருவருட காலமாக அசைத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கொடிய  தொற்று நோய் முற்றிலும் அகன்று, மக்கள் இயல்புடனும், நலமுடனும் வாழ இறைவன் நல்ல வழியை இந்நாளிலிருந்து  தர வேண்டுமாய் அனைவரும் மனமாற பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

இந் நன்நாளில் கண்களுக்கும், வயிற்றிக்குமாய் ஒரு சிறு விருந்து. இவ்விரண்டும் நிறைந்தால், மனதும் ஆனந்தமான நிறைவடையும் அல்லவா? 

காக்கும் கடவுள் கணேசனை மனமுருக  முதலில் அழைப்போம். . தூக்கிய துதிக்கையே துணை நமக்கு என நம்புவோருக்கு, அவனருள் கண்டிப்பாக என்றும் உண்டு. 🙏.🙏. 


அடுத்து செங்கதிரும்... 

முழுமதியும்...... 

சேர்ந்தணைந்த சுந்தரனின் அருளும் கண்டிப்பாக நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 🙏.🙏. 

பிறகு மலர்ந்து மணம் வீசி வரும் பொங்கல் திருநாளை,  மங்களகரமான கோலங்கள் இட்டு பசும் மஞ்சளோடு வரவேற்கலாம்.. 




முதலில் இனிப்பான பால் கொழுக்கட்டைகள்.  

பச்சரிசி மாவை வென்னீர் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக செய்து, ஆவியில் வைத்து ஒரளவு வேக வைத்துக் கொண்டு, பால், மற்றும் கொஞ்சம் தேங்காய் பாலுடன், சேர்த்து மீண்டும் கொஞ்சம் கொதிக்க வைத்ததும்,வேண்டிய வெல்லமும் சேர்த்து, அந்த வெல்ல  வாசனை போகுமளவிற்கு (வெல்லம் முழுமையாக கரைந்தால் அதுதான் அடையாளம்)  கொதிக்க வைத்துக் கொண்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால், இனிப்பான பால் கொழுக்கட்டைகள் தயார். 


அடுத்து இனிப்பான சேமியா கேசரி, மற்றும் உருளை கிழங்கு போண்டா. 

சேமியாவை தேவைக்கேற்ப எடுத்து வறுத்துக் கொண்டு, அத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, அத்துடன் ஒரிரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து பின், வேக வைத்துக் கொண்டு, சர்க்கரை ஒன்றரை பங்கு அதனுடன் சேர்த்து நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறி ஏலக்காயும் சேர்த்த பின்  மு. பருப்பு, உலர்ந்த திராட்சைகளை நெய்யில் வறுத்து போட்டு இறக்கினால், சுவையான சேமியா கேசரி பார்க்கவே அழகாக இருக்கும். 

உ. கி நான்கைந்து வேக வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய பின், பொடிதாக அரிந்த வெங்காயம், ப. மிளகாய் இவற்றை எண்ணெய்யுடன் வதக்கி, அத்துடன் உதிர்த்த உ. கி சேர்த்து, உப்பு, காரப்பொடி கலந்து நன்கு வதக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

கடலைமாவையும், அரிசி மாவையும், பஜ்ஜி மாவுபோல கலந்து வைத்துக்கொண்டு, அந்த உ. கி உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால், உகி போண்டா தயார். கூடவே தேங்காய் சட்னியும் செய்து சுடசுடப் பரிமாறலாம்... 


அடுத்து இலையில் பரிமாற சேப்பங்கிழங்கு கறி, ரோஸ்டாக வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். 

சேப்பங்கிழங்கு மண் போக நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு ஆறியதும், தோல் நீக்கி ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்..கடலை மாவை, கொஞ்சம் அரிசிமாவுடன் கலந்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்துடன் பஜ்ஜி மாவு மாதிரி கரைத்துக் கொண்டு, அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை முக்கி எடுத்து அடுப்பில் காயும் எண்ணெய்யில்
பொரித்தெடுத்தால் நன்றாக ரோஸ்டாக கரகரவென்ற சுவையுடன் வரும். எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் கடாயில், கொஞ்சம் எண்ணெயில் முக்கி எடுத்த மாவுடன் கிழங்குகளை ஒன்றிரண்டாகப் போட்டு சிறு தீயில் வைத்திருந்து அடிக்கடி திருப்பி கொடுத்து கரகரப்பாக எடுக்கலாம். பொறுமையுடன் இதை அனைத்தையும் முடிக்க கொஞ்சம் நேரமாகும்.




அடுத்தாக இலையில் பரிமாற இரண்டாவது கறியாக புடலங்காய் உசிலி செய்யலாம். 

குருவி புடலங்காய் இரண்டோ, மூன்றோ வாங்கி நன்கு அலம்பிய பின் பொடிதாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். து. ப அரை டம்ளர், க. ப இரண்டு, மூன்று பெரிய ஸ்பூனாக சேர்த்து அலம்பி ஊற வைத்தபின், அத்துடன் சிகப்பு மிளகாய், ப. மிளகாய், உப்பு  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்ந்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதை இட்லி தட்டுக்களில் வேக வைத்து உதிர்த்த பின், கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு. உ. ப தாளித்து உதிர்ந்த பருப்புக் கலவையை  நன்கு உதிர்த்துக் பிரட்டி கொண்டு அத்துடன் வெந்த புடலங்காய்களைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி எடுத்தால் அருமையான புடலங்காய் உசிலி தயார். 
 

த்துடன்  வாழைப்பூ வடையும் செய்தால் இரண்டு இனிப்புடன் நான்கு காரம். 

வாழைப்பூவை  கள்ளன் ஆய்ந்து நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும். , ஏற்கனவே ஊற வைத்த, அரை கிளாஸ் பச்சரிசியை, உப்பு, மி. வத்தல், ஒன்றிரண்டு பச்சை மிளகாயுடன் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்த ஒரு கிளாஸ்( இது மொத்தமாக கலந்த கலவை) நான்கு பருப்பு வகைகளையும்,(அதாவது உ. ப, து. ப, க. ப, பா. பருப்பு வகைகளையும்) அரைத்துக் கொண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அலம்பி வைத்திருக்கும் வாழைப்பூவையும் அரைத்தெடுத்து கொண்டு, அனைத்தையும் கலந்த பின் சிறுவடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.

பொங்கலன்று,  வழக்கமான இனிப்பான சர்க்கரை பொங்கலுடன், வெண் பொங்கலும் தயாரித்து கொண்டு, அதனுடன் மேற்கூறிய வகைகளையும் செய்து வைத்துக் கொண்டு பொங்கும் மங்கலம் எங்கும்  தங்குக என வேண்டியபடி, இறைவனுக்கு படைத்த பின் அனைவரும் உண்டு மகிழலாம். 

பொங்கலன்று இத்தனை ஐயிட்டங்களா...? எனத் திகைக்க வேண்டாம். சாதரணமாக அன்று மதிய சாப்பாடாக சர்க்கரை பொங்கல், வடை, அப்பளம்,  இரண்டு கறி, கூட்டு, தயிர் பச்சடி, ரசமென சாப்பிடுவது அன்றைய நாள் தொட்டு  இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ( இப்போது அந்த பழக்க வழக்கங்கள் மங்கி வருகிறது. செய்யவும் நேரமில்லை. சாப்பிடவும் முடியவில்லை.) அதனால்தான் கிராமங்களில், பொங்கலன்று "பால் பொங்கியாச்சா.. வயிறு வீங்கியாச்சா.. " என்று கேட்பதும் ஒரு வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக காய்கறிகளை வைத்தே இப்படி செய்யலாம் (இந்த ஒவ்வொன்றையும் இப்படி  செய்ய அன்றைய தினம் நேரம் கிடைப்பதும் அரிதுதான்) என இப்படி இத்தனை சமையல் தினுசுகளை பதிவிட்டேன். 

இன்னமும் என் விருப்ப இனிப்பான மைசூர் பாகையும் படங்களுடன் செய்முறையாக இதனுடன் இணைக்க மறந்து விட்டேன். அதையும் இணைக்கலாமென்றால்..... (ஆகா.. இதென்ன எல்லோரும் எங்கே ஓடுகிறீர்கள்...! ஹா.ஹா.ஹா சும்மா ஒரு  பேச்சுக்குத்தான் சொன்னேன்.  இல்லை.. .இல்லை.... இவ்வளவே அதிகம். மேலும் இரு இனிப்புக்களே, அன்றைய விஷேட தின இனிப்பான சர்க்கரைப் பொங்கலுடன் போதுமென்று நினைக்கிறீர்களா..! சரி. சரி.. 👍👍.) 

பி. கு... அன்றைய தினம்  உத்தராயண புண்ணியகாலம் என்பதினால், வடை, போண்டா போன்றவற்றிக்கு  வெங்காயம் தவிர்ப்பவர்கள் அதை தவிர்த்து செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் சில  எண்ணெய்  பலகாரங்கள் எப்போதோ எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டிக்காக தயாரித்தது. அந்தப் படங்கள், விவரணைகளுடன்  இந்தப் பொங்கல் சிறப்பு(சிறப்பிதழு)டன் "நானும் வருவேன்" என பிடிவாதமாக வந்து சேர்ந்து கொண்டது. சரி.. போனால் போகிறதென தவிர்க்க முடியாமல், நானும் அவைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டேன்.

 இரண்டாவதாக நாம் வாழும் இந்த மண்ணுக்கு நன்றி சொல்லும் விதமாய் மண்ணுக்கு மேல் விளையும், பயிர்கள்,  செடி, கொடிகள் நமக்குத் தரும் காய்கறிகள், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் கரும்பு, பூக்கள்  பழம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள் இலைகொத்துகள், மாவிலை, வேப்பிலை, வாழையிலை, போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருவது போல், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளான கிழங்கு வகைகளையும் பிரியத்துடன்  இன்றைய தினம் (பொங்கலன்றும், அதன் மறுநாளும், )  உணவில் சேர்ப்பதை அவசியமாகவும். வழக்கமாகவும் கருதுவோம்.  எனவேதான் இதன் பேச்சுக்களுக்கு மதிப்பளித்தேன்.   ("எங்களை வைத்துதான் இந்தப் பதிவே....அதை மறந்து விடாதே... ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதே.. ...! போதும்.. போதும்..!! உன் பிர(பரி)தாபம் .. " என்று  அவைகள் கொஞ்சம் மெதுவாக இல்லாமல், சத்தமாகவே  கோபத்துடன் முணுமுணுப்பது என் காதுகளில் மட்டுந்தானா ? இல்லை, உங்களுக்குமா ? ஆனால், உங்களுக்கு அது ஏற்கனவே  கேட்டிருக்கும் எனவும் ஐயமுற நினைக்(நம்பு)கிறேன்.😀😁 😁. )  

 எப்படியிருந்தாலும் இந்தப் பதிவு,  சிறப்பாக 👌உள்ளதாவென உங்களிடமிருந்து அன்புடனான  👏👏 தட்டல் கருத்துக்களை எப்போதும் போல் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி.... கமலா ஹரிஹரன். 

அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன் கூடிய என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏. 🙏. 


Tuesday, January 26, 2021

கடன் வாங்கியாவது..

அப்பாடா.. எப்படியோ  வந்து விட்டேன்..  இந்த நம்பிக்கை பாலம்  ஒன்றுதானே எப்போதும் எந்த காலத்திலும் நம் பலம்... நெட் பிரச்சனை காரணமாகவும்,   (தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... தை பிறந்தவுடன் எனக்கும், இணைய தொடர்பு வழிகளுக்குமான வழிகள்  மூடிக்கொள்ள வேண்டுமா? அதுதான் கொடுமை. . ) வேறு சில பல சொந்த காரணங்களுக்காகவும் என் வலையுலக பிரவேசத்திற்கு தடை போட்ட விதியும்,  அதன் சதியும்  சற்றே அசந்து போய் இருந்த இடைப்பட்ட நேரத்தில் புகுந்து எப்படியும் வந்துருவோம்ல.....! (இங்குதான் என் பதிவை  படிப்பவர்களின் விதியும், (எனக்காக வந்து படிப்பதைதான்  கூறுகிறேன்.) சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.:) ) 

சரி..  எப்படியோ வந்தாச்சு.. ஏதேனும் எழுதி கிழிக்காமல் போவதா? என ஒரு மனம் தேவையில்லாமல்  இடிக்க, பதிலுக்கு "உன் தொல்லையில்லாமல் அனைவரையும் நிம்மதியாக இருக்க கொஞ்ச நாட்கள் சும்மாவேனும் இரேன்" என இன்னொரு மனம் (நமக்குத்தான் இந்த இரண்டு மனங்களை நாம் கேட்காமலேயே இறைவன் தந்திருக்கின்றானே ....) கிண்டலடித்து சந்தோஷம் அடைந்தது.

இதை கேட்டதும் எதாவது இரண்டு வரிகளை எழுதியேத்தான் ஆக வேண்டுமென கை விரல்கள் சும்மாயிராமல் பிடிவாதம் பிடிக்க, சரி... " கடன் வாங்கி கழித்தல்" முறையிலாவது வந்து விடலாமென முயன்றேன். (அதாவது என்னைத் தவிர்த்து கைபேசிக்கு மொபைல் டேட்டா வைத்திருக்கும் என் குழந்தைகளிடம்  நெட் கடன் வாங்குவதன் மூலம்..  )  ஆனால், அதுவும் ஏனோ இத்தனை நாட்களாக சரியாக வரவில்லை. ( இந்த கடன் வாங்கி களித்தல் என்பது எனக்கு மட்டுந்தான் ராசியில்லை போலும்.....! என மன சமாதானமும் என்னால்  அடைய முடியவில்லை. ஆனால், எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்படும் பணப் பற்றாக்குறையை  சரி செய்ய நிறையவே பிறரிடம் கடன் வாங்கி உடனடியாக அதை கழிக்க மறந்தவர்களாய் தினமும் மனம் போனபடி களித்திருக்கிறார்கள்... களித்து கொண்டுமிருக்கிறார்கள்.....:) அதுவும் உண்மையிலேயே அவரவர்கள் யோகங்களை பொறுத்ததுதான் அமையும் போலும்... :)  ) 

எப்போதும் எங்கள் வீட்டில், Wi-Fi வசதி தடையற இருந்ததினால், என்னுடைய  கைபேசியில் இதுவரை வேறு எந்த பிற வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு.  ஆனால் இங்கும் எப்போதும் தடையற இருக்கும் இணைய தொடர்பு  கொஞ்சமும் தாட்சண்யமின்றி, காலை வாரி விட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் என்னால் முன்பு மாதிரி  எல்லோரின் வலைத்தளங்களுக்கு சரளமாக வர இயலவில்லை...ஆனாலும், இப்போது எனக்கு வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரின் பதிவுகளை பார்த்து மகிழ்ந்து, கருத்துக்கள் இடும் அடக்க முடியாத அபரிமிதமான ஆவலில், என் கைப்பேசிக்கும் சிறிது நெட் இணைப்பு தந்து வருகை தந்துள்ளேன். இதிலும்  மிக தாமதமாகத்தான் எல்லா  இணைய தொடர்புகள்  வருகின்றன. இருந்தாலும், பழையபடி முன்பிருந்த  இணைய தொடர்பு எளிதாக கிடைக்கும் வரை அவ்வப்போது இயன்ற வரையில் வரலாம் இல்லையா? இப்போது இந்த நெட் வகைகள் எவ்வளவோ வந்து விட்டது. எதை. எப்படி எடுப்பது என்பதில்தான் ஏகமான குழப்பங்கள்.. தாமதங்கள்.. தடுமாற்றங்கள்.. எப்படியோ நட்புறவுகள் அனைவருடனும் இன்று மனம் விட்டு பேச வைத்த இந்த மொபைல் டேட்டாவுக்கும் நன்றி. எப்போதும் என்னை மறக்காத  அன்புள்ள சகோதர சகோதரிகளான உங்களனைவருக்கும்  என் நன்றி. 

பின்பு  சும்மாவேனும் வந்து விட்டு போனால். நன்றாக இருக்காது என்பதினால்,  நான்  படித்த சும்மா பதிவு ஒன்றுறையும் பகிர்ந்துள்ளேன். "நாங்களும் சும்மாயிருக்கிற நேரத்தில் இதை படித்துள்ளோம்.. எதற்கு இப்படி சும்மா.. சும்மாவென்று எங்களை சும்மா தொந்தரவு செய்கிறீர்கள்" என கேட்காது சும்மா இதையும் இன்னொரு தடவை படித்து விட்டோம் என  ரசிக்கும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான. 🙏. 

இதோ அந்த ப (பி) டித்த பதிவு..... 

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

அது சரி *சும்மா* என்றால் என்ன? 

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*

*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றன, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..

எதற்கும் *சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள.. நன்றி... 

இந்த பதிவை படித்து விட்டீர்களா? எப்படியோ என் இணைய பிரச்சனை நடுவிலும் ஒரு பதிவை தேற்றி வந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி. பதிவைப் படித்து எப்படி  உள்ளதென  கூறும் உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும்  நன்றி. 🙏..

Thursday, December 31, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

இன்று புதிதாக சற்று நேரத்தில் பிறக்கப் போகும் புத்தாண்டு நல்ல பலன்களை உலக மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு முழுவதும் கலக்கங்கள், வருந்தங்கள், இழப்புக்கள் என சந்தித்து விட்டோம்.  ஒவ்வொரு நொடிகளும் இனம்புரியாத பயங்கள் வேறு.... இப்போது இந்த ஆண்டு புதிதாக பிறந்துதிக்கும் நொடி அமைதியானதாக இனிய பொழுதாக பிற(பிறந்திரு)க்கும் என நம்புகிறோம். ஆண்டவன் உலக வாழ் மக்களின் அனைத்து உள்ளங்களிலும் அந்த நம்பிக்கை வேரை பரப்பி ஆணிவேராக அவனருளையும் அமையச்செய்து எல்லோர் மனதிலும்  சந்தோஷ கனிகளை மட்டும் காய்க்க விட வேண்டுமென அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையாக பிரார்த்தித்துக்  கொள்வோம். 🙏🙏🙏🙏🙏. 

இது பழைய பாடல்தான். ஆனால் இதன் வரிகளின் அர்த்தங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானது. 

உதாரணமாக.... 

திருமதி வாணி ஜெயராமின் இனிமையான குரலில் வாழ்வின் நிதர்சனத்தை அழகாய் காட்டும் வரிகள்.... 

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க : அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க.: வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க:  எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல.... 

இந்த வரிகள் இ(எ)ப்போதைய சூழலுக்கும் உகந்தவை. எனவே நம்புவோம்... நன்றி. 👍. 👍. 👍. 

பி. கு.. இந்தப் பதிவு மிகச் சின்னதாக முடித்து விட்டதால், (புது வருடத்தன்று எவரையும் சிரமபடுத்த வேண்டாமென்று  நல்ல எண்ணம்தான்... :)  ) இதற்கு முந்தைய பதிவை படிக்க தவற விட்டவர்கள் படிக்கலாம்.......  படித்து பார்த்தவர்களும் மறுபடி படிப்பதில் தவறில்லை... :))

இதுவும் இந்த புத்தாண்டில் ஒரு புது விதமான விளம்பரந்தான்..  

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்....:)) உண்மைதானே...! 

நன்றி... 

Monday, December 28, 2020

மார்கழியும், நினைவுகளும்.

  வைகுண்ட ஏகாதசி. 

தெய்வீக மாதமாம் மார்கழியில் அமாவாசை கழிந்ததும் வரும் சுக்லபட்ச ஏகாதசியில் இந்த வைகுண்ட ஏகாதசி  வருகிறது. பொதுவாக  மாதாமாதம் ஏகாதசி  விரதம்  இருப்பது சிறப்புத்தான். அது  இருக்க முடியாதவர்கள் ஒரு வருடத்தில் சிறப்பாக வரும் இந்த நாளன்று இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், வருடந்தோறும் மாதத்திற்கு இருமுறையென வரும் ஏகாதசிகள்தோறும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்.  எங்கள் பாட்டி (அவர்கள் உயிரோடு இருந்தவரை..)  மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் அப்போது (எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து) விரதம் இருப்பார். 

ஏகாதசி மரணம் துவாதசி தகனம் சிறப்பென்பார்கள். அது அவர்களுக்கு கிடைத்தது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த ஏகாதசி திதியன்று கூட அவ்வளவு இயலாமையிலும்,  அன்று குளித்தவுடன்தான் அவர்களின்் அப்போதைய ஆகாரமான சிறிதளவு பாலை அருந்துவேன் என்று பிடிவாதத்துடன் ஏகாதசியை நினைவு கூர்ந்து விரதம் காத்தார். அன்று மதியம் அவரின் இழப்பை நாங்கள் தாங்க முடியாமல் தாங்கினோம். வருடங்கள் உருண்டோடினாலும், இந்த மார்கழியில் அவர் நினைவுகள் என்றும் எங்களோடு. என்னை பாசமுடன் வளர்த்த அவரை நான் என்றுமே நினைவு கூர்ந்தபடி உள்ளேன். 

முன்பு அம்மா வீட்டிலிருந்த போது   (அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். .) இந்த சிறப்பான ஏகாதசி நாளன்று மட்டும் மதிய உணவு சாதமாக  எடுத்துக் கொள்ளாமல். பச்சரிசி தோசை செய்து  ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் திறப்புக்கு  (அங்கெல்லாம் அப்போது  மாலைதான் சுவர்க்க வாசல் திறப்பு.  இப்போது எப்படியோ தெரியவில்லை. ஆனால்  இங்கு  பெங்களூரில், மற்றும் எல்லாவிடங்களிலும் காலையிலேயே சுவர்க்க வாசல் திறப்பு ஆகி விடுகிறது. ) அருகிலிருக்கும் சுற்றம்,  நட்பு சூழ சென்று வருவோம். அப்போதெல்லாம் சுவர்க்க வாசல் என்றால், ஒரே கூட்டந்தான்.  தள்ளு முள்ளுவுடன் அம்மா கையை இறுக பிடித்தபடி அடித்துப் பிடித்து மூச்சு முட்ட இறைவனுடன்  சுவர்க்க வாசலை அடைவதற்குள், பாதி உயிர் போய் விடும். மீதி உயிர் எப்படியோ வாசலை கடந்ததும் மூர்ச்சை அடையாமல், சிறிது மூச்சை விட்டவுடன், அந்த பாதி உயிரும் ஒருவாறு தட்டுத்தடுமாறி வந்து இந்த மீதியுடன் ஒட்டிக் கொள்ளும்.  

அதன் பின் வந்த காலங்களில் "விரதம் மட்டுந்தான்.... நம் வீட்டில் பெருமாளுக்கு செய்யும்  வழிபாடுகள் போதும்... கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் தரிசனம் வேண்டாம். பிறகு ஒருநாள், நிதானமாக கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாமென"எங்கள் அம்மா எடுத்த முடிவில்  நாங்கள் மட்டும் எப்போதும் செல்லும் சுற்றங்களுடன் அன்றைய தினம் செல்வதில்லை. எனக்கு மட்டும்  ஒரு மாதிரி வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் அம்மாவுக்கு கூட்டத்தின் இடிபாடு பிடிக்கவில்லையே. . .... என்ன செய்வது?" "சரி... மற்ற சுற்றங்களுடன் நீங்களாவது சென்றிருக்கலாமே? "என நீங்கள் நினை(கேட்)க்கலாம்......  எங்கள் அம்மா இல்லாமல் நான் எங்கள் வீட்டு வாசல் படியையே தாண்டிய(தாண்டவிட்ட) தில்லை. இதில் சுவர்க்க வாசலை எப்படி சந்தித்து அதன் படிகளை தாண்டுவது?  அப்போதெல்லாம் அந்த நாள் மறுபடியும் அடுத்த வருடம் வருவதை எதிர்பார்த்தபடி மனது ஆவலாக இருக்கும். (அதற்கு காரணம் அன்று எங்கள் பாட்டிக்கு நிகராக நாமும் விரதமிருக்கிறோம்... என்ற பெருமையும், மற்ற சுற்றங்களுடனான  வீட்டு குழந்தைகளுடன் (என் வயதை ஒத்த) வெளியே அன்றைய தினம் ஜாலியாக சேர்ந்து செல்கிறோம் என்ற ஆனந்தமும் மட்டுந்தான் முதலில் நிலைத்து இருந்திருக்கிறது என்பதை  பின் வரும் வயதுகளில் மனது பக்தியில் பக்குவப்பட்டு உணர்ந்திருக்கிறது.)  பின்பு வந்த காலங்கள் எனக்கே கூட்டங்களை சந்திக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே இறைவனை தியானித்து, முடிந்த அளவிற்கு விரதங்கள் இருந்தே பழக்கமாகி விட்டது. 

இப்போது இங்கெல்லாம் (பெங்களூரில்) அனைவரும் வரிசையில் நின்று நிதானமாக சென்று வருவதை பார்த்திருக்கிறேன். நானும் காலை சுவர்க்க வாசலுக்கு செல்ல முடியாவிடினும், மாலையாவது சில தடவைகள் பெருமாளை குடும்பத்துடன்  சென்று  அவ்விதமே  வரிசையில் சென்று தரிசித்துமிருக்கிறேன். இந்த தடவை கொரோனா அவ்வாறும்  செய்ய முடியாமல் தடை செய்து விட்டது. 

இந்த முக்கோடி ஏகாதசி மூன்று நாட்கள் முறையாக இருக்க வேண்டிய விரதம். ஏகாதசிக்கு விரதம் இருப்பவர்கள் முதல் நாள் தசமியன்று காலை குளித்து முடித்து, விரதம் எடுப்பதாக உறுதி பூண்டு, அன்று பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு, இரவு வெறும் பால் பழம் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் உறங்காமல், நாராயணனை நாவாற பாடித் துதித்து, மறுநாள் விடியற்காலை ஏகாதசியன்று குளித்து வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் முதலானவை முடித்து பெருமாள் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்தபடி அன்றைய தினம் முழுவதும் ஏதும் உணவருந்தாமல் இருக்க வேண்டும். கோவில்களில் தரும் துளசி தீர்த்தத்தை ஒருவேளை உணவென கருதி பருகலாம். பின்பு மாலையும் வீட்டிலும். கோவில்களுக்கும் வழிபாடுகள் முடிந்தவுடன், ஸ்ரீ மன் நாராயணனை துதித்தபடி, இரவு முழுவதும் விழித்திருந்து, இரவு நாலாவது ஜாமத்தில் குளித்து முடித்து, துவாதசி பாரணை உணவுகளை பாயசத்தோடு (இதில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் முக்கியமானது) சமைக்கவாரம்பித்து, சூரியன் உதித்து வரும் முன் அதிகாலையில் வழக்கப்படி பூஜைகள் முடிந்ததும், சமைத்ததை அன்போடு இறைவனுக்கு படைத்து விட்டு, பிறகு இரண்டு பேருக்கு வயிறார அன்னம் படைத்த பின். பசுவுக்கும் காக்கைக்கும் வேண்டியதை புசிக்க கொடுத்தும், (அகத்தி கீரை கட்டுக்களை வாங்கித் தருவார்கள்) தானும் அமர்ந்து (விரதமிருப்பவர்கள்) சாப்பிடுவார்கள். அன்று  மதியமும் படுக்காமல் விழித்திருந்து மாலை இறைவழிபாடு முடிந்ததும் மறு பாரணையாக ஏதாவது சிறிதளவு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு இரவுதான் விரதம் முடித்து படுக்கச் செல்ல வேண்டும். இப்படி முறையாக செய்து முடிக்கும் இந்த விரதத்தின் மேன்மையை பற்றி எனக்கு தெரிந்த வரை சொல்லியுள்ளேன். 

நான் இந்த மாதிரி ஒரு தடவை கூட  இது வரை இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு பின் சென்னை வந்தும், குடும்பம், சூழல், என விரத ஆசைகள் நிராகரிக்கப்பட்டது. "உன் குழந்தைகளை கவனி.. அதுவே சிறந்த தெய்வ சேவைகள்" என்று  அறிவுறுத்தபட்ட வீட்டுப் பெரியவர்களுக்காக  எந்த விரதங்களும் எடுக்க இயலவில்லை. வீட்டின் சற்று அருகிலேயே இருக்கும் கேசவ மாதவ பெருமாளை (சித்திரக் குளம்) அன்றைய தினம் சென்று தரிசிக்க முடியாமல் போவதும் உண்டு. அவர்கள் (என் குழந்தைகள்) கொஞ்சம் பெரியவர்களானதும், இந்த ஏகாதசியில் ஒரிரு தடவைகள், வீட்டில் செய்து இறைவனுக்கு  நிவேதனம் செய்த கேசரி, பழங்கள் எடுத்துக் கொண்டு அன்று மட்டும் விரதம் இருந்துள்ளேன். ஆனால் இரவு முழுவதும் விழித்திருக்க இயலாது. மறுநாள் அலுவலகம் செல்லும், கணவர், மச்சினருக்கு காலையிலேயே சமையல்  சாப்பாடென வேலைகள் தொடரும் போது அது சிரமபடுத்தும் என்பதால் வழக்கப்படியான உறக்கம் தானாகவே வந்து கண்களை தழுவிக் கொண்டு விடும். ஆனால் குழந்தைகள் சற்று பெரியவரகள் ஆனதிலிருந்து பிறந்த வீட்டு வழக்கப்படி இன்று வரை மதியம் உணவாக சாதம் எடுத்துக் கொள்ளாமல், அன்னத்தை பின்னமாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. (அரிசி உப்புமா, அரிசி உப்புமா கொழுக்கட்டை, இல்லை பச்சரிசி தோசை என செய்வேன். இல்லை, ஒரிரு சமயத்தில் உப்பில்லாத சப்பாத்தி செய்து விடுவேன். தொட்டுக் கொள்ள வெல்லந்தான் அனைத்திற்கும். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் கேசரியும் துணையாக வரும். ) 

ஆலயம் தொழுவது  சாலவும் நன்று எனப் படித்துள்ளோம். ஆனால், இயலாதவர்கள் இறைவன் மேலுள்ள பக்தியை தியானம், பூஜை என வீட்டிலிருந்தபடியே நம்மால் இயன்றவரை செய்து "அவனை" வேண்டிக் கொள்ளலாம் என்றுதான் நினைத்து திருப்தியடைந்திருக்கிறேன்.  ஆனால், மார்கழி மாதம் முழுவதும் காலை மூன்று மணிக்கே எழுந்து, தெரு வாசலில் வண்ண கோலங்கள் போட்டு, குளித்து, தினம் ஒரு கோவிலாக சென்று வந்த சந்தர்ப்பம் ஒன்றும் எனக்கு சென்னையிலிருக்கும் (லஸ்ஸில்) போது ஒரு தடவை கிடைத்தது. அப்போது சாட்சாத் அந்த கோதை நாச்சியாராக நாங்கள் குடியிருந்த  வீட்டின் பெண் (உரிமையாளரின் கடைசி பெண்.  என்னை விட நான்கைந்து வயது சிறியவள். அப்போது அவளுக்கு திருமணமாகவில்லை. ) தோழி என்னை அந்த கடமையை செய்ய வைத்து (தினமும் காலை மூன்று மணிக்கே என்னை வந்து எழுப்பி விடுவாள்.) என்னை அந்த வருடம்  மார்கழி மாதம் முழுவதும்  சந்தோஷப்படுத்தினாள். இன்று அவள் எங்கிருக்கிறாளோ? ஒவ்வொரு வருட மார்கழியில் அவள் நினைவும் என்னுள் தவறாது மலரும். 

இந்த விரதம் முறையாக இருக்கும் போது நாம் செய்த பாவங்கள் அகன்று, புண்ணியங்கள் அதிகமாவதால் அனைவருமே நல்லகதி பெற்று சுவர்க்கத்தில் இடம் இல்லாமல் போய் விடும் என்பதை உணர்ந்த மாயை ( இந்த மாயாசக்தியால்தான் பெருமாள் தேவர்களின் தேவைக்காக பூவுலகின் நன்மைகளுக்காக என்று அடிக்கடி எடுக்கும் மோகனி அவதாரமும்.. .. .அவளின் அம்சத்தைக் கொண்டே திருமால் பெண்ணாக உருமாறுவது. . என்பதாக புராணங்கள் கூறுகிறது.) நாராயணனிடம் கேட்கிறாள் 

(பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் இருவரும் சேர்ந்து  அமிர்தம் கடையும் போது, வந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு தெரியாமல் அசுரர்கள் அபகரித்து கொண்டு போக அதை அவர்களிடமிருந்து வாங்கி, தேவர்களுக்கு மட்டும் பங்கிட்டு தர நாராயணன் எடுத்த மோகினி அவதாரம். ஒன்று.. 

ஸ்ரீ கிருஷ்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தவுடன் அவரை நந்தகோபன் கோகுலத்திற்கு  எடுத்துச் செல்லும் போது, அதே  நந்த கோபரால் கோகுலத்திலிருந்து சிறையில் கொண்டு  விடப்பட்ட பெண் குழந்தையாக மாயை காத்திருக்க, தேவகியின் அண்ணன் கம்சன்  எட்டாவதாக பிறந்த அக்குழந்தையை கொல்ல வரும் போது, அவனை கடுமையாக எச்சரித்து  அவன் கையிலிருந்து தப்பித்து மாயமாகிச் சென்ற மாயா சக்தியும் அவள்தான். )  

"இப்படி புண்ணியம் செய்து மறுபிறப்பெடுக்காமல் மனிதர்கள் இருந்து விட்டால் என் கடமையை எப்படி இந்த பூலோகத்தில் சரிவர செய்வது" என வினவ "கவலைப்படாதே.. முறையாக விரதம்  இருந்து மனிதர்கள் என்னருளை முழுமையாக பெறும் போது, உன் மாயையால், சிறிது அவர்கள் கண்களில் உறக்கத்தை வரவழைத்து மயங்கச் செய்து விடு. அதனால் அவர்களுடைய புண்ணியமும் உனக்கு வரும்.  அதன் பின்பு அவர்களின் பாப புண்ணியபடி நீ உன் கடமைகளையும் பூலோகத்தில் செய்யலாம் எனக் கூறினாராம். அதனால்தான் இந்த விரதம் இருப்பவர்களை மோகினி என்ற மாயை மூன்று நாட்களில் எப்போதேனும் ஒரு முறையாவது சிறிது  உறக்கத்தை தந்து கண் மயங்க வைத்து விடுவாள் என்றும் கூறுவார்கள். ( இதற்கு மாற்றாக உள்ளங்கால்களில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு சிலர் வைகுண்ட ஏகாதசியன்று மதியம் படுத்து விடுவார்கள். இப்படி செய்தால், மோகினி நம் புண்ணியத்தில் பங்குக்கு வரமாட்டாள் என நம்பிக்கை அந்த மனிதர்களுக்கு. அப்படி கண்மூடி ஒரு மாதிரி மயக்கம் தெளிந்து எழுந்தாலும் பரவாயில்லை. அதுதான் சாக்கென 2,3 மணி நேரங்கள் நன்றாக படுத்துறங்கி எழுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.  அது என்ன விரதமோ? அனவிரதம்.  .ஹா. ஹா. ஹா.) 

ஒரு கதை... எனக்குப் பிடித்தமான கதை... நான் எழுதிய இந்தக்கதையில் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்தருளவும். 

ஒரு சமயம் நாரதர் "தான்தான் ஸ்ரீ மன் நாராயணனுக்கு பிடித்தமானவர். நான் ஒருவன்தான் அவர் நாமத்தை நாள்தோறும் பக்தியுடன் கூறிவருகிறோம் " என லேசான கர்வம் கொண்டாராம். அவருள் எழுந்த கர்வத்தை அவர்  வாயிலாகவே  போக்கி விட எண்ணம் கொண்ட எம்பெருமான் நாரதர் தம்மை தரிசிக்க வந்த சமயம் பார்த்து, "நாரதா. .நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே. ! பூலோகத்தில் என் பக்தன் ஒருவன் என்னையே சதாசர்வகாலம் நினைத்தபடி, என் கருணையை வேண்டியபடி உள்ளான். அவன் விருப்பத்தை நிறைவேற்றலாம் என உள்ளேன். அவனை நீயும் அறிந்து வருகிறாயா? என வினவவும், நாரதருக்கு தன் கர்வத்தினால், சட்டென கோபம் வந்தது. "நாராயணா... அவன் என்ன என்னை விட உன்னிடத்தில் பக்தி உடையவனோ? என கேட்கவும்,, பரந்தாமன் புன் சிரிப்புடன்," ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். நீதான் பார்க்கப் போகிறாயே . ... இதோ அவன் இருப்பிடத்தின் வழியும் இதுதான்" என்றபடி அவன் இருக்குமிடத்தை நாரதருக்கு உணர்த்தினார். 

நாரதர் உடனே கிளம்பி விட்டார். அவரின் கோபத்தைக்கண்டு எம்பெருமான் மனதிற்குள் நகைத்துக் கொண்டார். 

மறுநாள் காலை அந்த பக்தன் வீட்டிற்கு முன்பாக அவன் கண்களுக்கு தெரியாமல் நாரதர் மறைந்திருந்து அவனை கண்காணிக்க ஆரம்பித்தார். அவன் வாசலில் படுத்திருந்த கயிற்று கட்டிலிருந்து கண் விழித்து எழுந்ததும், தன் உள்ளங்கைகளை பார்த்தபடி, நாராயணா..... நாராயணா.. . என இருமுறை உரத்து கூவியபடி, வானத்தை நோக்கி நமஸ்கரித்து விட்டு படுக்கையை சுருட்டியபடி எழுந்து வீட்டினுள்ளே சென்றான். 

"ஓ...... இவர்தான் அந்த பக்தன் போலிருக்கிறது. .கண் விழித்தவுடன் நாராயணனை தொழுகிறானே... ஒருவேளை உண்மையிலேயே பரந்தாமன் கூறியது போல என்னை விட சிறந்த பக்தன்தானோ.? . இன்னும் எத்தனை முறை அவர் நாமாவை சொல்லப் போகிறாரோ.. பார்ப்போம்.... இன்று முழுவதும் பொறுத்திருந்து  பார்ப்போம்." என எண்ணிக் கொண்டார் நாரதர். 

அதன் பின்பு அவன் வேலைகளுடன் அன்று பம்பரமாய் சுழன்றான்.  வயதான தன் தாய், தந்தையரை பல் தேய்க்க வைத்து, குளிப்பாட்டி உடைகள் அணிவித்து, அவர்களுக்கு காலை ஆகாரமாக கஞ்சி புகட்டிய பின், தொழுவத்தில் இருக்கும் நான்கு மாடுகளை சுத்தப்படுத்தி, பால் கறந்து, அவற்றை வாங்க வருபவருக்கு விற்று, தன் மனைவிக்கு அன்றைய சமையலுக்கு வேண்டியவற்றை வெளியில் சென்று வாங்கித்தந்து, தன் குழந்தைகளை அன்போடு கவனித்து, அவர்களுடன் அளவளாவி, மதியம் அவர்களுக்கு உணவளித்து, நடுவில், தாய் தந்தையையும் கவனித்தபடி, தனக்கென வீட்டின் பின்புறமிருந்த சின்ன வயலில் இறங்கி வேலை செய்து, பின் சுத்தமாக குளித்து, சாப்பாடனவுடன், வெளியில் ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சென்று அங்கு  கணக்காளராக சிறிது பணியாற்றி வந்ததும், மாலை, மாடு, குழந்தைகள், தாய், தந்தை, மனைவியென அவரவர்கள் தேவைகளுக்கு உதவி, இரவு  அனைவரும் உணவருந்தியதும், குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அவர்கள் உறங்கச் சென்றதும், அனைவரும் வீட்டினுள் பத்திரமாக கண்ணயர்ந்து விட்டார்களா எனப் பார்த்து விட்டு, பின் வீட்டிற்கு வெளியே, கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டபடி படுக்க வந்தவன் மறுபடி வானத்தை நோக்கி. நாராயணா.. . நாராயணா என சத்தமாக கூவி கும்பிட்டபடி படுக்கையில் படுத்தவுடன் தன்னிலை மறந்தவனாய், அவனும் கண்ணயர்ந்தான். 

காலையிலிருந்து அவனை கண்காணித்தபடி இருந்த நாரதருக்கு அவன் இரவு வரை எத்தனை முறை பரந்தாமனின் நாமத்தைச் சொன்னான் என்பதை நினைவில் நிறுத்தி பார்த்தார். எண்ணி நான்கு முறைக்கு மேலாக அவன் நாராயணனை தொழவுமில்லை. சிந்திக்கவுமில்லை என்பது நினைவுக்கு வர, "இவனையா தன் பக்தன் என பரந்தாமன் கூறி மகிழ்நதார். ..  நல்லவேளை..  என்னைப் பார்த்து வரச் சொன்னார். இவனுக்கு குடும்பத்தை பார்த்து பார்த்து கொண்டாடவே நேரம் சரியாக இருக்கிறது. இவனைப் போய் எனக்கு நிகரானவனாக நாராயணன் கூறுகிறாரே... இதோ விரைவில் சென்று இவன் நிலையை தெளிவாக்குகிறேன்.. .. என்றபடி வைகுண்டதிற்கு ஏகினார். 

"என்ன நாரதா. ... என் பக்தனை கண்டு வந்தாயா? எப்படி இருக்கிறான்? பாவம் இல்லையா? அவனுக்கு நான் அருள் கூர்ந்து உதவ வேண்டுமில்லையா? என்ற கேள்வி கணைகளுடன் வரவேற்ற பரந்தாமனை கண்டதும் நாரதருக்கு நகைப்பு வந்தது. 

தான் காலை அவனை பார்த்த நிலையிலிருந்து, அவனின் அன்றாட வேலைகளை அவன் செய்த முறைகளையும், அவன் அவர் நாமத்தை பொழுதத்தனைக்கும், எத்தனை முறை சொன்னான் என்பதையும் விளக்கி விட்டு, "இவனையா எனக்கு சரியாக கூறினாய் ? என கேட்ட நாரதருக்கு சற்று கர்வம் முன்பை விட கூடியிருந்ததை கண்ட பரந்தாமன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 

" சரி நாரதா.... அவன் அவனுக்குண்டான கடமைகளை செய்யும் போது என்னை நினைக்க ஏது நேரம்? முதலில் அதை அவன் சரிவர செய்கிறான் பார்த்தாயா? இடைப்பட்ட நேரத்தில் என்னையும் துதிக்கிறான். அது போதாதா?. ..." என பரந்தாமன் நாதரின் கோபத்தை கிளறி விடவும், "நான் அவன் நிலையில் இருந்தால் உன்னை ஆயிரம் முறை துதித்திருப்பேன்.. . நீ வேண்டுமென்றே அவன் பக்கம் பேசுகிறாய்.  .!  என்றார் படபடப்பாக நாரதர். 

"நீயா? நீயோ கட்டை பிரம்மச்சாரி. அவன் சம்சாரி.. .நீ எப்படி அவன் நிலையில். ?? சரி. உனக்கேற்றபடி நான் ஒரு கடமையை தருகிறேன். இதோ ஒரு கிண்ணம் நிறைய எண்ணெய் தருகிறேன். நீ இதை கையில் வைத்துக் கொண்டு ஒரு துளியேனும் சிந்தாமல் சிதறாமல் மூவுலகமும் சுற்றி வரவேண்டும். எதிர்ப்படும் காரணம் கேட்கும் எவரிடமும் கோபமில்லாமல் சாந்தமாக நின்று உரையாட வேண்டும். நீ என்னிடம் இந்த எண்ணெய்யை கொண்டு சேர்ப்பிக்கும் போது ஒரு துளி குறைந்திருக்கவும் கூடாது. உன் கைகளிலும் எண்ணெய்கறை  சிறிதேனும் பட்டிருகக கூடாது. . செய்வாயா?" என்றதும், சவாலில் வெல்வதற்காக நாரதரும் எண்ணெய் கிண்ணத்துடன் மூவுலகை சுற்றி வர புறப்பட்டார். 

மூவுலகையும் சர்வ ஜாக்கிரதையுடன், எதிர்ப்பட்ட அனைவருக்கும் காரணத்தை விளக்கியபடி, ஒரு வழியாக நாராயணனின் கட்டளைப்படி துளி சிந்தாமல், சிதறாமல் எண்ணெய் கிண்ணத்தை கொண்டு வந்து தந்த நாதரின் முகத்தில் பெருமை சொல்லி மாளாமல் மின்னியதை கண்ட பரந்தாமன் மறுபடி சிரித்தார். 

"நாராயணா.... பார்த்தாயா என் சாமர்த்தியத்தை... ... அந்த பூலோக பக்தனால் இப்படி செய்ய முடியுமா?" நாதரின் முகம் பெருமையில் பளபளத்தது. 

"அது சரி. .  நாரதா... நீ இப்படி கிண்ணத்துடன் சுற்றி வரும் போது எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை தடவை என் நாமாவை சொன்னாய் ? என்ற பரந்தாமனை பார்த்து,, "பரந்தாமா  என்ன விளையாடுகிறாயா? இந்த கிண்ணத்திலிருக்கும் எண்ணெய் அசையாமல் நடக்கவே என் கவனம் முழுவதும் இருந்தது. இதில் இடைப்பட்டவர்களுக்கு நீ கூறியபடி பதில் சொல்லவே  சிரமப்பட்டேன். இதில் உன்னை எப்படி நினைப்பது? உன் நாமாவை எப்படி வாயாற பாடி துதிப்பது? அதற்கு எங்கு நேரம்? "

" அப்படி வா வழிக்கு. ...உன்னால் இந்த சிறு பாரத்தை சுமந்து, அதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் போது, அந்த பூலோக பக்தன் தன்னை பெற்ற வயதான தாய், தந்தையையும் கவனித்துக் கொண்டு, தன்னை நம்பி வந்த தன் மனைவியின் முகம் சுளிக்காது அவளின் இல்லற தேவைக்காக உழைத்துக் கொண்டும், தன்னால் உருவான தன் மக்கட் செல்வங்களையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டு, தனக்காக வாழும் வாயில்லா ஜீவன்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு. இடையில் தன் ஆத்மாவுக்கும்  புத்துணர்ச்சி அளித்தபடி, வாழும் கடமை மனிதன். நான் வேறு... கடமை வேறல்ல... என்று உணர்ந்தவன். அத்தகைய பொழுதிலும் அவன் என்னை நாளொன்றுக்கு நான்கு முறை நினைத்தான்.. இப்போது சொல்..... அவன் பக்தி சிறந்ததுதானே. .! " நாராயணனின் விளக்கத்தில் நாதரின் கர்வம் சூரியனை கண்ட பனி போல் விலகியது. " 

"உண்மைதான். ..  பரந்தாமா..  அத்தனை கடமைகளிலும் உன்னை இரு பொழுதாவது நினைக்கும் அவன் பக்தி சிறந்ததுதான் . . .   ஏன் என்னை விடவும் அவன் சிறந்தவன். உண்மையை உணர்ந்து கொண்டேன். உன் விருப்பபடி உன்னருளை அவனுக்கு வாரி வழங்கு. .. .என்னுள் எழுந்த கர்வம் இப்போது போன இடம் தெரியவில்லை.  உன் செயல்களுக்கு என்றுமே நன்மை பயக்கும் அர்த்தங்கள் நிறைய உள்ளது. நாராயணா. ..  உன் அருளின் பெருமையே உணரும் போது என்னுள் எழும் ஆனந்தத்திற்கு அளவில்லை. என்று நாராயணனின் புகழ் பாடி பலவிதமாக அவர் துதிபாடி, நாராயணா. .. நாராயணா. .. என்ற நாமம் தன்னைச் சுற்றிலும் மணம் பரப்ப மனச்சஞ்சலங்கள் அகன்றவராய்  தன்னிருப்பிடத்திற்கு சென்றார் நாரதர். 

எதிலும், நாம் செய்யும் எந்த செயல்களிலும் நம்மையறியாமல், நம் கர்வம் ( அதை பெருமிதம் என பலர் கூறுவதுமுண்டு. அதுவே அளவு கூடி நம்மை ஆளும் போது அது பெயர் மாறி கர்வமென்றாகிறது.  என்பது என் தாழ்வான எண்ணங்களில் ஒன்று.) நம்மை தட்டும் போது இத்தகைய கதைகள் நமக்கு பாடம் புகட்டும் நீதி நூல்கள் ஆகிறது 

அடுத்து வரும் இந்தக்கதை வாட்சப்பில் பகிர்ந்து வந்ததில் படித்தவுடன் பிடித்தது...

"சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லை" 

உத்தவர் கண்ணனிடம் கேட்ட விளக்கங்கள்....

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. .மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்...

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்... 

கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்து விடும் போது தான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். 

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! 

இறைவன் நம் அருகிலேயே தான் இருக்கின்றார்... ஆனால் நம் வினை மறக்கச் செய்துவிடுகிறது.

இதிலும் வைகுந்த வாசியான காக்கும் கடவுள் ஸ்ரீமன்நாராயணன் அதர்மத்தை அளிக்க பூவுலகில் மானிட அவதாரமாக எடுத்து நம்மை நல்வழிப் படுத்துவதற்காக  வந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நம்முடன் நமக்கு பலமாக, நம் அருகிலேயே தாம் எப்போதும் இருப்பதை  உணர்த்துகிறார். நாம்தான் நம் கர்வம் என்ற பாறை தரை தட்ட நடுக்கடலில் பயணிக்க இயலாமல் தத்தளித்து ஆடும் கப்பலென தவிக்கிறோமோ என எண்ணுகிறேன். 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.

இதை வைகுண்ட ஏகாதசியன்றே வெளியிட நினைத்தேன். வழக்கப்படி தாமதந்தான். (எழுதினால் அல்லவா வெளியிட முடியும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாய்....ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ வந்து முடிந்திருக்கிறது. பொறுமையுடன் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏. 

Friday, December 11, 2020

மஹாகவி பாரதியின் பிறந்த நாள்.

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள்.

இன்று மலைகளின் சர்வதேச நாளும் கூட... இயற்கையில் உதித்த இந்த மலைகளின்  அழகு எப்போதுமே கவரக் கூடியவை. மலைகளின் வண்ண மாற்றங்கள் கண்களுக்கு விருந்தளிப்பவை.  மனதிற்கு இதமளிப்பவை. 

சுப்பிரமணிய பாரதியும் சிறு வயதிலேயே இயற்கையாய் அமைந்த தம்முடைய அறிவாற்றலினாலும், பிறவியிலிருந்தே  சட்டென கவிகள் பாடும் திறமையாலும், ஆழ்ந்த தேசப்பற்றினாலும், சாதரண மனிதர்களை விட மலையென உயர்ந்து அனைவரின் மனதிலும் தங்கியவர். / இன்னமும் நிரந்தரமாக தங்கி வாசம் கொண்டிருப்பவர். அவர் புகழ் என்றும் மணக்கும் தேவலோக பாரிஜாத மலர்களுக்கு ஒப்பானது. இன்றைய தினம் பூவோடு சேர்ந்த நாரும்  போல மலைகளின்  தினத்தையும் கொண்டாடுவது சிறப்பிற்குரியது.
 வாழ்க மஹாகவியின் புகழ். 
. வாழ்க சர்வதேச மலைகளின் சிறப்பும். 


மஹாகவியின் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.... 

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

முத்து குளிப்பதொரு தென்கடலிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

அந்நாளைய இப்படத்தின் பாடல்களும் மறக்க முடியாதவை. இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் அருமையானவை. எப்போதுமே கேட்கத் திகட்டாதவை. அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏.