Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 
இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும். 

35 comments:

 1. சென்ற வருடம் கம்யூனிட்டியாக அபார்ட்மென்ட் வாசிகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது சிறப்பு.

  குழந்தைகள் வரைந்த பிள்ளையார் படங்களும் அழகு. எல்லோருமே ஒரே படத்தைப் பார்த்து வரைந்ததுபோலத் தோன்றுகிறது. அதனால் பிள்ளையாரும் தும்பிக்கை ஆழ்வானாக்க் காட்சி அளிக்கிறார்.

  விழா படங்கள் கண்ணைக் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   சென்ற வருட அபார்ட்மென்ட் சதுர்த்தி விழாவை சிறப்பு என விமர்சித்தற்கு, இங்கு வசிக்கும் அனைவரின் சார்ப்பில் என் மகிழ்வையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   /எல்லோருமே ஒரே படத்தைப் பார்த்து வரைந்ததுபோலத் தோன்றுகிறது. அதனால் பிள்ளையாரும் தும்பிக்கை ஆழ்வானாக்க் காட்சி அளிக்கிறார்./

   ஆமாம். எல்லோருக்கும் ஒரே படத்தைதான் ஜெராக்ஸ் எடுத்து தந்தனர். அதில் குழந்தைகள் அவரவர்கள் விருப்பப்படி கலர் அடித்து நிரப்பி அழகுற செய்தனர். சிறு குழந்தைகள்தானே. அவர்களுக்கு தும்பிக்கை ஆழ்வார் நம்பிக்கை தந்தார்.

   தங்கள் அருமையான கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. உங்கள் பூஜையறைப் படங்கள், கோலம், மூன்று பூக்களினால் மறைந்திருக்கும் குலப் பிள்ளையார் அழகாக இருக்கின்றன.

  ஆனால் உண்மையில் என்னைக் கவர்ந்திழுத்தது ஒரே வடிவில் அழகாக உருட்டி வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கொழுக்கட்டைகள். ரொம்ப அழகா வந்திருக்கு. மைலாப்பூரில் ஒரு கடையில் இப்படித்தான் சேவையும், இனிப்பு கொழுக்கட்டைகளும் வாங்குவோம், ஆனால் இப்படி அழகிய உருண்டைகளாக இருக்காது. சிலவற்றில் பூரணம் வெளியே தெரியும். பாராட்டுகள்.

  பூஜையில் வைத்திருந்த பிரசாதங்கள் படமும் கவர்ந்திழுக்கிறது.

  ஊரடங்கு காலத்திலேயே ஒரே ஒரு வகை கொழுக்கட்டைதான் பண்ணியிருக்கீங்க. இதுல ஶ்ரீராம் வரும்போது மூன்றுவகை கொழுக்கட்டை செய்துதருவதாக வேறு சொல்லியிருக்கீங்க.

  இடுகையில் "ஆக்ஞை" என்பதற்குப் பதில் "ஆஞ்கை" என வந்துள்ளதை முடிந்தால் சரி செய்யவும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /உங்கள் பூஜையறைப் படங்கள், கோலம், மூன்று பூக்களினால் மறைந்திருக்கும் குலப் பிள்ளையார் அழகாக இருக்கின்றன./

   ஹா.ஹா.ஹா. மூன்று பூக்கள். பாதத்தில் ஒரு பூ வைத்திருக்கிறேன். குண்டு பூக்கள் அந்த குட்டிப் பிள்ளையார் தாங்க மாட்டார். அதனால்தான் ஒரு பூ இருக்கும் படமாக (முன்பு எடுத்தது) பகிர்ந்துள்ளேன். அதில் அவர் தன்னை தெள்ளத்தெளிவாக காட்டி காட்சியளிக்கிறார்.

   பதிவின் பாராட்டுகளுக்கு நன்றி. சுவையான சேவை கிடைத்தது மைலாப்பூர் என்றால், கிழக்குமாட வீதியிலோ .. அங்கு கபாலி கோவில் அருகில் லலிதா பார்மஸி அருகில் ஒரு மாமி இதெல்லாம் செய்து சுடச்சுட விற்பனை செய்வார். 80..90 களில், இருக்குமென நினைக்கிறேன்.

   பூரணம் அதிக இனிப்பு, இல்லை, வெல்லம் சரியான விதத்தில் அமையவில்லையென்றால் பூரணம் வெந்ததும் வெளியில் வந்து விடும். பொதுவாக உளுந்து கார கொழுக்கட்டைகள் போல். இது அலுங்காமல் பிரியாமல் ரோம்ப நேரம் இருக்காது.அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஊரடங்கு காலத்திலேயே ஒரே ஒரு வகை கொழுக்கட்டைதான் பண்ணியிருக்கீங்க. இதுல ஶ்ரீராம் வரும்போது மூன்றுவகை கொழுக்கட்டை செய்துதருவதாக வேறு சொல்லியிருக்கீங்க./

   ஹா.ஹா.ஹா. அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்கள். இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி ஸ்ரீராம் சகோதரரை (அவரை மட்டுமல்ல.. உங்கள் அனைவரையும்..) சந்திக்க இயலும்? இந்த தொற்றுக்கொரு தீர்வு முடிந்து பெங்களூரில் அனைவரும் சந்திக்கும் காலம் வரட்டும். அப்போது நான் சொன்னது நடக்க பிள்ளையார் அருள் தருவார்.

   இரண்டாவதாக அன்று அவருடனான (பிள்ளையார்) என் மானசீக பேச்சுக்களை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

   பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இரவு நேரம் அவசர தட்டச்சில் எழுத்துக்கள் மாறி விட்டன. தங்கள் ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு திருத்தி விட்டேன். நன்றி.

   தங்கள் உடனடி கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. சுவையான சேவை (வெறும் சேவை, தேங்காய் சேவை, எலுமி, புளியோதரை சேவை, தக்காளி சேவை) - சரவணபவன் ஹோட்டல் பகுதியில் ராஜு காபிக்கடைக்கு அருகில் மதியம் 12 மணிக்கு வரும். இது மாம்பலம், தி நகர் போன்ற இடங்களில் உள்ள கடைகளிலும் விற்பனை செய்யப்படும். இது தவிர, அம்மிணிக்கொழுக்கட்டை, இனிப்பு/உப்பு கொழுக்கட்டை, மிளகாய்பொடி தடவிய இட்லி போன்றவையும் பாக்கெட்டில் கிடைக்கும். கடைசியா ஒரு வருடத்துக்கு முன்பு வாங்கினபோது, சேவை 35 ரூபாய், கொழுக்கட்டை ஒன்று 8 ரூபாய் என்று நினைவு.

   Delete
  4. வணக்கம் சகோதரரே

   மீள் வருகை தந்து தாங்கள் அளித்த விபரங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி. ஒரு கொழுக்கட்டை எட்டு ரூபாய் அதிகந்தான். இங்கு ஒரு போளியும் பதினைந்து ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள். (சென்ற வருடத்தில்) எல்லாமே விலைவாசி அதிகமாகி விட்டது. வீட்டில் செய்து சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆனால் ருசிகள் மாறுபடும்.

   நாங்கள் சென்னை மயிலையிலிருந்த போது கபாலி கோவிலுக்கருகில் அந்த கடை தாங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வந்தது. ஆனால் அதிகம் வெளியில் சாப்பிடும் பழக்கம் அப்போது கிடையாது. மாம்பலம் பக்கம் உறவுகளை சந்திக்கப் போய் வருவோம். அப்போதும் வெளியில் சாப்பிட்டதில்லை. மற்றபடி இப்போது சென்னையில் நாங்கள் வாழ்ந்த பகுதிகள் நிறையவே மாறி விட்டது. நாங்கள் 95 வாக்கில் என் கணவருக்கு வேலை மாற்றத்தினால் மதுரை வந்து விட்டோம். இப்போது இருக்கும் சென்னையே வேறு. பல பகுதிகள் நினைவிலேயே இல்லை. கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. விநாயக சதுர்த்திக் கொண்டாட்டங்கள் அருமை. நாங்க இந்த மாதிரி அனைவரும் சேர்ந்தெல்லாம் கொண்டாடியதில்லை. அவரவர் வீட்டில் கொண்டாடுவதோடு சரி. இதுவும் அழகாக இருக்கிறது. நமக்கும் அனைவருடனும் கலந்து கொண்டாடும்போது மன மகிழ்ச்சி. அனைவரையும் பார்த்துப் பேசிப் பழகவும் சந்தர்ப்பம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நாங்களும் இங்கு வந்த பின், அதுவும் இரண்டு மூன்று வருடங்களாய்தான் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறோம். விநாயகர் சதுர்த்தி அன்றே அவரவர் வீடுகளிலும் கொண்டாடி விடுவோம். அதற்கு முன் இந்த மாதிரி போட்டிகள் வைத்து கொண்டாடியதில்லை. ஆமாம்.. அன்று சிறு குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியதால்,மிகவும் மகிழ்வாக இருந்தது. ஆனால், அவ்வளவாக நாங்கள் யாரிடமும் பேசி பழகுவதில்லை. மொழி பிரச்சனை வேறு. கன்னடம் அவர்களைப் போல், சரளமாக பேச வராது. தங்கள்
   கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. உங்கள் வீட்டுப் பாரம்பரியப் பிள்ளையாருக்கு நீங்கள் செய்த வழிபாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. எங்க வீட்டில் மண் பிள்ளையார் தான் ஒவ்வொரு விநாயக சதுர்த்திக்கும் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் சொன்னது போல் பாரம்பரியப் பிள்ளையார் 2010 ஆம் ஆண்டில் எங்களிடம் வந்தப்புறமா என் கணவர் மண் பிள்ளையாரே வாங்குவதில்லை. எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும் பாரம்பரியப் பிள்ளையாரை வைத்தே விநாயக சதுர்த்தி கொண்டாடி வருகிறோம். இந்த வருஷம் பண்டிகை இல்லாட்டியும் அன்னிக்கு எங்க ஆவணி அவிட்டம் என்பதாலும், விநாயக சதுர்த்திக்குப் பாயசமானும் வைக்கணும் என்பதாலும் பாயசம் வைத்தேன். பிள்ளையாரைக் கிட்டே வைச்சுப் படமும் எடுத்திருக்கேன். நானும் இன்னமும் போடலை. முடியறப்போப் போடணும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் கைப்புண் நன்றாக குணமாகி விட்டதா? இப்போது இயல்பாக வேலைகளை கவனிக்க முடிகிறதா?

   எங்கள் அம்மா வீட்டிலும் வருடந்தோறும் சதுர்த்திக்கு மண் பிள்ளையார்தான் சகோதரி. அதன் பின் புக்ககம் வந்தும் அங்கும் மண் பிள்ளையார் வாங்கித்தான் பூஜித்து வந்தோம். இங்கு வந்ததும்(பெங்களூர்) நம்மூர் மாதிரி வெறும் களிமண் பிள்ளையார் அவ்வளவாக எங்கள் ஏரியாவில் கிடைக்கவில்லை. கலர் பிள்ளையார் ஏகப்பட்ட விலையில்... அதனால் பல வருடங்கள் வீட்டு பிள்ளையாருக்கு பூஜைகளை செய்து வந்தோம். நடுவில் பண்டிகைகள் கிடையாதென தட்டிப் போன வருடங்கள்.. நடுவில் சில கலர் பிள்ளையார்கள் 500, 700 என விலை தந்து வாங்கினோம். இந்த தடவை தொற்றினால் வெளியே எங்குமே செல்லவில்லை. வீட்டு பிள்ளையார்தான் பூஜைகளை ஏற்றுக் கொண்டார். நம் கையில் என்ன இருக்கிறது? நடப்பது நடந்து கொண்டேதான் உள்ளது.

   உங்கள் வீட்டு பிள்ளையாரை யும் படம் எடுத்து வைத்திருக்கிறீர்களா? அதையும் பதிவாக எழுதி பகிருங்கள். பார்த்து ரசிக்கலாம். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. கைப்புண் ஆறி வருகிறது. நன்றி.

   Delete
 5. கொழுக்கட்டைகளை வட்டவடிவ உருண்டைகளாக மட்டும் செய்வீர்கள் போல. எங்க எதிர்வீட்டு மாமியும் இப்படித் தான் செய்திருந்தார். நாங்க உச்சியில் சின்னதாக முடிச்சு மாதிரித் திருகி விடுவோம். அதோடு வெறும் தேங்காய், வெல்லம் மட்டுமே தேங்காய்க் கொழுக்கட்டைக்குப் பூரணமாகச் செய்வோம். அதோடு உளுந்துக் கொழுக்கட்டை காரம் போட்டது அவ்வளவே. ஆனால் நீங்க இரண்டு பருப்புக்களைச் சேர்த்திருப்பதாகச் சொல்லி இருக்கீங்க. எங்க அம்மா வீட்டில் தேங்காய்க் கொழுக்கட்டை தவிர்த்துக் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்துப் பண்ணுவதைத் தான் "மோதகம்" என்று சொல்லுவோம். அது கட்டாயம் பண்ணுவோம் அதோடு எள், தேங்காய், வெல்லம் சேர்த்த கொழுக்கட்டையும் கட்டாயமாய் உண்டு. இங்கே மாமியார் வீட்டில் அது பழக்கம் இல்லை. படங்கள் எல்லாம் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். குழந்தைகள் வரைந்த பிள்ளையார்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன, உங்கள் பேரன், பேத்திகளும் வரைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கொழுக்கட்டைகள் பொதுவாக இப்படி செய்வேன். நீங்கள் சொன்னபடி உச்சிப் பிடித்து சாஸதிரத்திறகு பிள்ளையாருக்கு மட்டும் அப்படியும் செய்வேன்.இந்த தடவை அப்படி செய்யவில்லை. நீள வாக்கில் உளுந்து கொழுக்கட்டை போல செய்து மடிப்புப்கள் வைத்தும் செய்வேன்.பல விதங்கள். இதில் இப்படி உருட்டி வைப்பது அலர்ந்து போகாமல் கொஞ்சம் நேரம் நீடித்து இருக்கும்.

   நான் எள்ளுடன் தேங்காய் சேர்ப்பதில்லை. வறுத்த எள், வெல்லம் பொடி செய்து எள்ளுபூரணம் வைத்து எள் கொழுக்கட்டை செய்வேன். அதுவும், உளுந்தும் இந்த தடவை மிஸ்ஸிங். என்னவோ முடியவில்லை.

   மாமியார் வீட்டில் எப்போதும் வெறும், தேங்காய், வெல்லம்தான். அம்மா வீட்டில் அத்துடன் பா. பருப்பு இல்லை கடலை பருப்பு சேர்ப்பார்கள். இங்கு இப்போது அந்த முறை இவர்களுக்கு பிடித்துப் போனதால் அப்படியே தொடர்கிறேன்.

   பதிவுக்கு தந்த தங்கள் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   குழந்தைகள் வர்ணம் தீட்டிய ஓவியங்கள் நன்றாக இருப்பதென கூறியமைக்கு நன்றிகள். ஒரே மாதிரி பிள்ளையார் போட்டோவை ஜெராக்ஸ் எடுத்து விழாவை நிர்வகித்தவர்கள் தந்து அனைத்து குழந்தைகளையும் உற்சாகப்படுத்தி, வரைய வைத்தனர். எங்கள் வீட்டு குழந்தைகளும் அதில் உள்ளனர். அப்போது அவர்களுக்கு மூன்று வயதுதான் நிரம்பியிருந்தது. ஆனாலும் ஆர்வத்துடன் வர்ணம் அடித்தார்கள். அதைப் பார்த்து நாங்களும் அன்று சந்தோஷித்தோம்.

   உடன் வந்து தந்த தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. சிறப்பான கொண்டாட்டம்...

  ஓவியங்கள் அனைத்தும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை படித்து தந்த கருத்துகளுக்கும், குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பாராட்டியமை கண்டும் மன மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள்

  படங்கள் அழகாக இருக்கிறது. விநாயகர் கொரோனாவை விரட்டி உலக மக்களை காத்திடட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து குழந்தைகளை பாராட்டியமைக்கும், வாழ்த்துகள் தந்தமைக்கும் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   /விநாயகர் கொரோனாவை விரட்டி உலக மக்களை காத்திடட்டும்./

   ஆமாம்.. நம் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கட்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. சிறப்பான கொண்டாட்டம். ஓவியங்கள் அனைத்துமே அழகு.

  தீதுண்மி விரைவில் விலகி பண்டிகைகளைக் கொண்டாடும் சூழல் வரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   /தீதுண்மி விரைவில் விலகி பண்டிகைகளைக் கொண்டாடும் சூழல் வரட்டும்./

   ஆமாம்.. விரைவில் இயல்பான நிலை திரும்பட்டும். அனைவரும் நலமே வாழ இறைவனை பிரார்த்திப்போம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. அப்பார்ட்மெண்ட் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அருமை.
  குழந்தைகள் வண்ணம் தீட்டிய விநாயகர் அழகு.

  நீங்கள் செய்த பிரசாதங்கள் கண்ணையும் மனதையும் கவருகிறது.

  //இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல் ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். //

  அவர் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து அருளை அள்ளி வழங்கி சென்று இருப்பார்.


  //அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும்.//

  ஆமாம், காத்து ரட்சிக்கட்டும்.
  நானும் வேண்டிக் கொள்கிறேன்.
  அப்பார்ட்மெண்ட் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அருமை.
  குழந்தைகள் வண்ணம் தீட்டிய விநாயகர் அழகு.

  நீங்கள் செய்த பிரசாதங்கள் கண்ணையும் மனதையும் கவருகிறது.

  //இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல் ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். //

  அவர் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து அருளை அள்ளி வழங்கி சென்று இருப்பார்.


  //அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும்.//

  ஆமாம், காத்து ரட்சிக்கட்டும்.
  நானும் வேண்டிக் கொள்கிறேன்.
  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீங்கள் பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   /அவர் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து அருளை அள்ளி வழங்கி சென்று இருப்பார்./

   ஆமாம்.. நாம் அன்போடு தருவதை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கைதான். அவர் அருள் அனைவருக்கும் தப்பாமல் கிடைக்க வேண்டும். அது ஒன்றே நமக்கு வேண்டிவது..

   நீங்களும் அவரிடம் வேண்டிக் கொண்டதை குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. குழந்தைகளின் கை வண்ணம் அருமை...
  கோலமும் அலங்காரமும் நிவேத்யங்களுமாக கோலாகலம்...

  மிக அருமையாக பதிவை வடிவமைத்து இருக்கின்றீர்கள்...

  ஆனைமுகனின் அருளால்
  அனைவரது அல்லல்களும் அகன்றிட
  வேண்டிக் கொள்வோம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   /ஆனைமுகனின் அருளால்
   அனைவரது அல்லல்களும் அகன்றிட
   வேண்டிக் கொள்வோம்.../

   ஆம்.. அது ஒன்றே நாம் வேண்டுவது.அந்த இறைவன் இந்தத் தொற்று அகன்றிட முதலில் அருள் செய்ய வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. அன்பு கமலாமா,
  பிள்ளையார் வருகையை நீங்கள் கொண்டாடியது மிகப் பிரமாதம். மானசீகமாக நீங்கள் அளித்த சித்ரான்னங்களை அவர் ஏற்றிருப்பார். இந்த வருடக் கொழுக்கட்டை சூப்பர் ஸ்மூத். நைவேத்திய பிரசாதங்களும் ,கோலங்களும் மலரகளும் கொள்ளை அழகு. பிள்ளையார் ஓவியங்கள் குழந்தைகள் கையால் அருமையாக வர்ணம் பூசப்பட்டு அருள் செய்கின்றன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

   மானசீகமாக என்னால் செய்ய முடியாததை, செய்ய ஆசைப்பட்டதை அவரிடம்தான் எடுத்துச் சொல்ல முடியும். அவர்தான் நம்முளிருந்து நம் செயல்களை செய்விப்பவர்.

   கொழுக்கட்டை, மற்ற நைவேத்தியங்கள் படங்கள் நன்றாக உள்ளதென கூறியமைக்கு நன்றிகள்.

   குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் நன்றாக உள்ளதென வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. விநாயகர் சதுர்த்தி மிக அருமை. இப்படி பில்டிங்கில் இருப்போர் ஒன்று சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது சிறப்பு... குழந்தைகளுக்கும் நல்லது.
  அனைத்து விநாயகர் கலரிங்கும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /இப்படி பில்டிங்கில் இருப்போர் ஒன்று சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது சிறப்பு... குழந்தைகளுக்கும் நல்லது.
   அனைத்து விநாயகர் கலரிங்கும் அழகு./

   ஆமாம்.. குழந்தைகள் அனைவரும் ஒன்றுகூடி அன்று மகிழ்ச்சியாக இருந்தனர். ஓவிய கலரிங் நன்றாக உள்ளதென கூறிய பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. உங்கட வீட்டுக் கொண்டாட்டமும் அழகு. இருப்பினும் கொழுக்கட்டைப் பூரணத்துக்கு ஓவர் பில்டப்பூக் குடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)...
  ஆனா இது கொழுக்கட்டை அல்ல... இது மோதகம்... கொழுக்கட்டை என்பது பற்றீஸ் போல நீளமாக இருப்பது... என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊ:)..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /இருப்பினும் கொழுக்கட்டைப் பூரணத்துக்கு ஓவர் பில்டப்பூக் குடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)../

   ஹா.ஹா.ஹா. ஏதோ இப்படி நன்றாக வந்ததுக்கு மட்டுமாவதுதானே என்னால் பில்டப் கொடுக்க முடியும்... அதுதான் கொஞ்சம் ஏகத்துக்கும்.. பூரணம் அன்று இனிப்பு அதிகமாக இருந்ததைப் போல பில்டப்பும் கொஞ்சம் தூக்கலோ...? சரி.. சரி.. பொறுத்துக் கொள்ளவும். ஹா.ஹா.

   இது மோகம் என்று அறிவேன். அவர் எப்போதும். எல்லா விடங்களிலும் இதைத்தானே கையில் பிரியத்துடன் வைத்திருப்பார். .எப்படியும் நானும் நீளமாகவும் செய்வேன் என கருத்துக்களில் கூறியுள்ளேனே...! தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. மோதகம் எனப்படிக்கவும்.தன் நிலைக்கு சான்றாக அவரே"த"வை எடுத்து விட்டு விட்டார்.:)

   Delete
 14. கொய்யாப்பழங்கள் பார்க்க ஆசையாக இருக்கு. சுவாமிப் படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   கொய்யாப்பழங்கள் இப்போதுதான் சீசன். இங்கும் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் (1கிலோ 60 ரூபாய்.) வாசம் நன்றாக உள்ளது. உங்களுக்கு இந்தப் பழங்கள் அங்கு கிடைக்குமோ..? அப்படியே கிடைத்தாலும், விலை மிகவும் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். பதிவுக்கு வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. இங்கும் கிடைக்கிறது இடைக்கிடை, ஆனா விலை உங்கள் ரூபாயில் சொன்னச்ல் 600-700 ரூபாய் கிலோ

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்..எதுவுமே பத்து மடங்கு.. ஆனாலும் நம் இந்திய சாமான்கள், பழங்கள் கண்களில் படுவது சிறப்புத்தான்.. அங்கு இருக்கும் என் மகனும் இப்படித்தான் எதை வாங்கினாலும் விலை சொல்லும் போது பிரமிப்பாக இருக்கும் . தகவலுக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete