Thursday, March 15, 2018

கொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.


ஒரு டம்ளர் இட்லி அரிசி, ஒரு டம்ளர் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு இவை நான்கையும் அரை டம்ளர் வீதம் எடுத்துக் கொள்ளவும். இதில் உளுத்தம் பருப்பை மட்டும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும். அரிசிகள், பருப்புகள் இவையை தனியாக அலம்பி ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
................. 



ஊற வைத்த அரிசிகளுடன் கீழே குறிப்பிட்டுள்ள காரங்களை (அவரவர் ருசிகேற்ப கூட குறைத்து)  கறிவேப்பிலை,உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக (சின்ன  ஆட்டுரல்) மிக்ஸியிலோஅல்லது (பெரிய ஆட்டுரல்) கிரைண்டரிலோ அரைத்து எடுக்கவும்.  
................. 




பின்னர் ஊறிய பருப்பு வகைகளை கொஞ்சம் நைசாக அரைத்து இரண்டையும் கலந்து வைக்கவும். கலந்து வைத்த மாவிரண்டும் உப்பு காரம் சேர்ந்து கை குலுக்கி கலந்து கொண்டிருக்கட்டும். 
............... 



அதற்குள் நான்கு  பெரிய வெங்காயத்தை அலம்பி விட்டு கீழே படத்திலுள்ளதை மாதிரி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
............... 


அத்துடன் கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 
............... 


இவ்விரண்டையும்  சின்ன ஆட்டுரலிலேயே போட்டு நைசாக அரைக்கவும். 
................. 


இந்த அரைத்த விழுதை கை குலுக்கி சமரசமாகியிருக்கும் அடை மாவுடன் கலக்கி வைக்கவும். 
.................. 



பத்து பதினைந்து நிமிடங்கள் இதற்கு சைடிஸ் என்ன செய்யலாம் என யோசிக்கும்  வேளையில், மனசு வெல்லமே போதும் என தீர்மானிக்க,  அடைக்கு வெல்லம் மட்டுந்தானா?  என நாக்கு  அதிகப்பிரசங்தனமாக கேள்வி கேட்டு உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முடிவு செய்ய, அதன் முடிவைக் கண்ட உள் மனது "அவியல் குழம்பை ரெடி செய்'
 பதிவிலும்  போடலாம்"   என  கூக்குரலிட கைகள் தாமாகவே கேரட், பீன்ஸ் முருங்கைக்காய் கோவைக்காய் உருளைக்கிழங்கு  தேங்காய் என      
 கு.சா. பெட்டியில்  உள்ளதை தேர்வு செய்து சுத்தப்படுத்தி நறுக்கி குக்கரில் வேக வைத்து  விசில் விட்டதும் வாணலியிலும்  மாற்றி விட்டது. 
................. 



அதற்கு தேவையான தேங்காய் பச்சை மிளகாய்  கொஞ்சம்  வர மிளகாய்  கறிவேப்பிலை எடுத்துக் கொண்டு,  சி.  ஆட்டுரலில்  போட்டு நைசாக அரைத்துக் கொண்டு  விடவும். 
..................... 



அரைத்த விழுதை வாணலியில் காத்திருக்கும் காய்களுடன் தேவையான அளவு உப்பும், ஓரிரு சிட்டிகை  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  
............... 


அது சேர்ந்து கொதித்து வரும் போது கெட்டியான சற்றே புளித்த மோரை சேர்க்க வேண்டும். 
................ 


அதுவும் சற்றே ஒரு சேர  கொதித்து வந்ததும் அரிசி மாவு கரைசலை விட்டு அடுப்பை சிம்மில் எரிய வைத்து ஐந்து நிமிடத்திற்கு பின்னர் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். 
.................... 


இப்போது அவியல் குழம்பு என்ற பெயரில் ஜனனமெடுத்து வாணலியிலிருந்து பாத்திரத்தில் மாறி அடைகளுக்காக தவம் இருக்கும் வஸ்தாகிய அவியல் குழம்பு.. 
................ 



நாங்கள் மூவரும்  சேர்ந்து  தயார் நிலையில் இருக்கிறோம்.  நீங்க ஏன் இப்படி .. ?  இப்படியே  க்ளிக்கி கொண்டேயிருக்க உத்தேசமா? என முறைப்புடன் கேட்க ஆரம்பித்த மாவு. .. 
............... 



 அதனால் அவசரமாக அடைக்கல்லை அடுப்பிலேற்றி  தேங்காய்  எண்ணெய்யுடன் நல்லெண்ணெயும் கலந்து வைத்துக் கொண்டு அடைகள்  சுட மெளனமாக மாவு சம்மதித்ததின் விளைவாய் சுடச்சுட உருவாகிய அடைகள்.......   
............... 
                                      

அதில் இடமில்லையென்று  மற்றொரு தட்டில் ஏறி இடம் பிடித்து வாய்க்குள் பயணிக்க காத்திருக்கும் அட்டைகள்.... 
................... 

                    ஸ்... ஸ்.... ஸ்..... அப்பாடா.......              
                            நாங்கள்  ரெடிப்பா........  
............... 
                                      

நாங்க மட்டும் என்னவாம்? 
நாங்களுந்தான் உங்களுக்கும் முன்பே முதலிலேயே ஆஜர்........
......................  


சண்டைகள் எதற்கு?  நாமும் சாப்பிட ரெடியாகி விடலாமே. 


15 comments:

  1. ஆஹா புகைப்படங்களே ஆசையை தூண்டுகிறதே.... செய்து சாப்பிடணும்

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    தங்களின் உடனடி வருகைக்கும்,கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    /ஆஹா புகைப்படங்களே ஆசையை தூண்டுகிறதே.... செய்து சாப்பிடணும்/

    கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்கள்.பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அவியல் பார்க்க கவர்ந்து இழுக்கிறது. வெங்காயம் கொத்துமல்லி சேர்த்து அரைத்ததில்லை. சேர்த்திருக்கிறம், அவ்வளவுதான். இப்படிச் செய்து விடலாம் அடுத்த முறை. அடைக்கு வெண்ணெய், வெல்லம் கூட தொட்டுக்கொள்ளலாம். அல்லது நெய்யுடன்!

    சொல்லி இருக்கும் விதம் ரசனை. ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். அடைக்கு வெல்லம் தொட்டுக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். அதன் டேஸ்டே தனிதான்.

      /சொல்லி இருக்கும் விதம் ரசனை. ஸூப்பர்./

      தங்களின் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அடை அருமை. கொத்தமல்லி கொஞ்சம் கிள்ளி போடுவோம். இதில் நிறைய கொத்தமல்லியை சின்ன வெங்காயத்துடன் அரைத்து கலந்து செய்து இருப்பது புதிது.
    செய்துப் பார்க்க வேண்டும்.
    அவியல் குழம்பு நல்லா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொத்தமல்லி நிறைய இருந்ததால்,ஒரு வித்தியாசத்திற்காக அதனுடன் வெங்காயமும் சேர்த்து அரைத்து பண்ணினேன்.அது நன்றாக சுவையாக இருந்தது. அதை பகிர்ந்தேன். அடை அருமை என்றதற்கு நன்றி.

      /அவியல் குழம்பு நல்லா இருக்கிறது./

      பாராட்டுகளுக்கு என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. செய்முறை விளக்கம் அருமை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? வெகு நாட்கள் கழித்து தங்களை என் வலைத்தளத்தில் கண்டது மிக்க மகிழ்ச்சி.

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனமுவந்த நன்றிகள் சகோதரரே.

      மிக்க நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அடை ஒவ்வொருவரும் ஒரு ப்ரப்போர்ஷன் போடுகிறார்கள் நானும் வித விதமான ப்ரொப்போர்ஷனில் செய்வதுண்டும். வெங்காயம் அரைத்தும் செய்வதுண்டு...ஆனால் பச்சரிசி சேர்த்துச் செய்வதில்லை. அடை ஹார்டாக காய்வது போல் ஆகுது என்று ...உங்கள் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன்...பார்க்கவே சாப்பிடத் தூண்டும்...விதம் சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
  7. சொன்ன விதமும் ரசித்தேன் சகோதரி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியதற்கும மிக்க நன்றிகள்.சகோதரி.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    பச்சரிசி சேர்த்தால் அடை சற்று கடினமாக இருக்கும் என்பது உண்மைதான்.ஆனால் எல்லா பச்சரிசியும் அவ்விதம் ஆவதில்லை. எங்கள் அம்மா வீட்டில் பாட்டிக்காக விரதங்களுக்கு (ஏகாதசி) அடை சுடும் போது வெறும் பச்சரிசி மட்டுந்தான் பயன் படுத்துவார்கள். அடை மிகவும் சாப்ட்டாகவும், ருசியாகவும் இருக்கும். அது அந்த காலம். அப்போது அரிசியின் தரங்களே வேறு. நான் நான்கு பருப்பும் சேர்ப்பதால் பச்சரியும் பாதிக்கு பாதி எடுத்துக்கொள்கிறேன். இவ்விதம் சேர்ப்பதால், அடைமாவு மிகுந்து போனாலும் மறுநாள் வார்க்கும் போது சுலபமாக எடுத்து வரும்.

    தங்களுடைய கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் மிகுந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் மாமியார் பச்சரிசி தான் போட்டு அடை செய்வார்கள். பருப்புக்கள் எல்லாம் குறைவாகத் தான் போடுவாங்க. அடைக்கு அதிகம் ஊறவும் வைக்க மாட்டாங்க. அரை மணி நேரம் ஊறினால் அதிகம். அவங்களுக்கு அந்த "வெடக்" என்ற ருசியே பழக்கம்.பிடிக்கும். நான் தான் புழுங்கலரிசி+பச்சரிசி சேர்க்காமல் பண்ண மாட்டேன். அதோடு அரிசி எவ்வளவோ அத்தனைக்குப் பருப்பு வகைகள். து.பருப்பு அதிகம், க.பருப்பு குறைவு உபருப்பு ஒரு கைப்பிடி தான்பெரும்பாலும்.

      Delete
    2. எங்க வீடுகளில் ஏகாதசி அடை எனில் பச்சரிசியும் துவரம்பருப்பும் மட்டும் போட்டுத்தான். சில சமயங்கள் மிளகாய் கூடப்பயன்படுத்தாமல் மிளகு, ஜீரகம், உப்பு மட்டும் போடுவார்கள். பெருங்காயமும் சேர்க்க மாட்டார்கள் விரதம் என்பதால், அந்த ருசி தனி. ஆனால் சுடச் சுடச் சாப்பிடணும்.

      Delete
  9. ஆஹா, ருசியான அடையும் அவியல் குழம்பும். இம்முறையில் அடைக்கு வெங்காயம், கொத்துமல்லி அரைத்துச் சேர்த்துப் பண்ணினதில்லை. அவியலும் குழம்பு போல் வைச்சதில்லை. பிரமாதம், பார்க்கவும்/ருசிக்கவும் நன்றாகவே இருந்திருக்கும்.

    ReplyDelete