Saturday, February 17, 2018

நற்குணங்கள் . 3 கர்வமில்லா மனது.




இறைவன் மனிதருக்கு அளித்திருக்கும் பகுத்தறிவுகளில் ஒன்று புத்திசாலித்தனம். இதை மனிதர்கள் எதற்கும் மிகவும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டாலும், இயல்பாகவே மனிதருடன் தங்கியிருக்கும் வஞ்கசம், சூழ்ச்சி பொறாமை கோபம் என்ற கெட்ட இயல்புகள் சற்று மிகுதியாக தலையெடுக்கும் நேரம் இந்த புத்திசாலித்தனம் காணாமல் போய் அவர்கள் பாதி விலங்காகி விடுகிறார்கள், சிறிது நேரத்திலோ , சில நாட்களிலோ இத்தகைய துர்குணங்கள் விலகி சாதரணமான பின்,” ஐயோ! பொறாமையில், கோபத்தில். இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொண்டு விட்டோமே! என்று வருந்தும் அந்த நேரம் அந்த புத்திசாலித்தனம் மனிதரிடம் மறுபடி சரணடைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் செய்த பிழை எத்தனை இன்னல்களை பிறருக்குள் விதைத்து அறுவடை செய்து விட்டிருக்கும். அதன் பலன்களை அனுபவித்தவர்கள் வாழ்வும், மனமும் எவ்வளவு துன்பங்களை சுமந்திருக்கும் என்பதனை தீயகுணங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு, இறைவன் தந்த பகுத்தறிவை  மட்டும்  பயன்படுத்தி சிந்தித்தால் புரியும்.

அதே போல் அந்த திறமை (புத்திசாலித்தனம்) நம்மிடம் நிறைய உள்ளது. அதனால் நம்மை போன்றவர்கள் எவருமில்லை என ஆணவப் படும் போதும் கர்வமென்ற அந்த குணம் அளவுக்கதிகமாக மனதில் இடம் பிடித்து திறமையென வளர்ந்திருக்கும் அந்த விருட்சத்தின் வேர்களை சுலபமாய் தின்று நம்மை வேரில்லா மரமாக்கி பலமில்லா மனிதனாக கீழே சாய்க்கிறது. அதனால் நம்மால் முடிந்த அளவு அந்த கர்வமற்ற மனதை நமதாக்கிக் கொண்டால் செல்லும் இடமெல்லாம் நம்முள் நிறைந்திருக்கும் புத்திசாலிதனமெனும் ஆற்றலை பயன்படுத்தி நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தினம் ஒரு வெற்றியாக்கி  வாழலாம் இல்லையா.? இதனால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் எல்லாவித பெருமைகளும் நம்மை கேட்காமலேயே  குவியும், ஒரே ஒரு கெட்டதை நீக்கினால் பல நல்ல குணங்களும் பல நல்ல விசயங்களும் நம்மைச் சுற்றியபடியே  நடமாடிக் கொண்டிருக்கும் அல்லவா.?

ஒரு கதை..

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் போரின் வெற்றிக்காக சிவபெருமானை வேண்டி தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக தவம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்பட்டான். போகும் வழியில் தன் ரதத்திலிருந்தபடியே காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டே ராமேசுவரம் சென்றடைந்தான். அங்கு கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன்கடமைகளை முடித்துக் கொண்டவனாய் அங்கிருந்து கிளம்பும் போது அருகிலிருந்த மலையில், ராம பக்த ஹனுமான் ராம, ராம, என்னும் பெயரை பயபக்தியுடன் உச்சரித்த வண்ணம்  தவம் செய்து கொண்டிருந்ததைக்கண்டு அருகில் சென்று “ஏய் கிழக் குரங்கே! நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்.? என்றான் அலட்சியமாக.

ஹனுமான் தன் நிலை கலைந்து, அர்சுனனை ஏறிட்டு பார்த்து, அமைதியுடன், “அப்பா, என் பெயர் ஆஞ்சனேயன்! நான் வாயு புத்திரன்.  கடலில்  கற்களாலேயே பாலம் அமைத்து இராவணனை வென்ற என் அய்யன் ஸ்ரீராமனின் அடிமை.!  என்றான் அன்போடு.
இப்படி ராமனை பெருமையாக அறிமுகப்படுத்தியதை கேட்ட அர்சுனன் கேலியான குரலில்,  உன் ராமன் கற்களாலேயே பாலம் அமைத்ததற்கு பதிலாக தன் முயற்சியினால் வில்லினால் பாலம் அமைத்து சேதுவை கடந்திருக்கலாமே!  அவரும் என்னைப் போல் வில் வித்தையில் சிறந்தவர் இல்லையா.? என்றான் கர்வம் கலந்த ஏளனமான குரலில்.

தன்னை அவமானமாக என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் குணமுடைய அனுமனுக்கு தன்னுயிர் ராமனை கேலியாக பேசியது  கோபத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் பொறுமையாக, வில்லினால் உண்டாக்கும் அம்பு பாலங்கள் என்னைப் போன்ற குரங்கினங்கள் ஏறிச் சென்று சேதுவை கடப்பதற்குள் அவை கடலில் மூழ்கி விடும்,. அதனால் என்னய்யன் ராமசந்திர பிரபு கற்களாலேயே பாலம் அமைத்தார். நீ என்ன என் ராமபிரானை விட சிறந்த வில் வித்தை கற்றவனா?என்றான் சற்றே கோபமாகஅனுமன்.

அர்சுனனின் கர்வம் ௬டியது. சிரித்துக் கொண்டே, “நான் யார் தெரியுமா? வில்லுக்கு விஜயன் என பெயர் எடுத்தவன். நன்றாக வில் வித்தை கற்றவன் தான் நினைக்கும் வண்ணம் எதையும் செய்து முடிக்கும் திறமை இல்லையென்றால் அவன் வில்வித்தை கற்றதலினால் என்ன பயன்? சரி! இப்போது பார்கிறாயா? இந்த கடலில் உன் பார்வை படவே வில்லினை தொடுத்து அம்புகளினால் ஒரு பாலம் அமைக்கிறேன். எங்கே, உன் பலம் கொண்டு குதித்தோ, ஆடியோ அதை உடைந்தெறிந்து விடு பார்க்கலாம்.! என்றான் கர்வமாக.

அனுமனும் இளநகையுடன், “நீ அம்புகளினால் கட்டும் பாலத்தில் நான் ஏறி நின்றதுமே உடைந்து நொறுங்கி விட்டால் என்ன செய்வாய்? ஏன் என் கால் கட்டை விரலால் அழுத்தியதுமே உன் பாலம் நீரில் மூழ்கி விடுமே.! அப்போது என்ன செய்வாய்?” என்றான்.

“அப்படி நான் கட்டும் பாலத்தை நீ உடைத்து விட்டால், நான் அடுத்த நொடி இதே இடத்தில் அக்கினியை வளர்த்து , அக்கினிப் பிரேவசம் செய்து என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இது சத்தியம். அவ்வாறே அம்பு பாலம் கடலில் மூழ்காமலிருந்தால், பதிலுக்கு பந்தயமாக நீ என்ன செய்வாய் சொல். !’ என்றான் அர்சுனன்

“அர்ஜுனா, நீ உருவாக்கும் அம்பு பாலத்தை என் கால் கட்டை விரலினால் கடலில் மூழ்கச் செய்வேன். அப்படி நடக்க வில்லையென்றால், உன் ரதத்தின் கொடியிலிருந்து கொண்டு போரில் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன். இதுவும் உறுதி!” என்றான் அனுமன்.

அனுமன் எதிர்பார்த்ததை விட அழகான பாலத்தை கட்டுவேன் என மனதில் உறுதி பூண்ட அர்ஜுனன், தன் காண்டிபம் என்ற வில்லினை ஏந்தி அம்புகளை சரமாரியாகத் தொடுத்து எழில்மிக்க ஒருபாலத்தை உருவாக்கினான். பின் பெருமையுடன் அனுமனை நோக்கி, இப்போது இப் பாலத்தின் உறுதியை நீ எப்படி வே்டுமானாலும் பரிட்சித்துப் பார்த்துக் கொள். எனறான் கர்வமான  குரலில்.

அனுமன் தன் மனதில் ராமனை நமஸ்கரித்தபடி, “ராமா, நான் என்றும் உன் அடிமை.! இனி உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.” என்றவாறு, ராம, ராம, என்று ஸ்மரித்தவாறு, கடலில் நூறு யோசனை தூரம் அர்ஜுனன் கட்டியிருந்த பாலத்தின் ஒரு நுனியை தன் கால் கட்டை விரலால் லேசாக ஒரு அழுத்து அழுத்தினார். அவர் அப்படிச் செய்ய வேண்டுமென காத்திருந்த மாதிரி  அந்த அம்புகளால் ஆன பாலlpம். பொலபொலவென உதிர்ந்து கடலுக்குள் போயின.

அதைப் பார்த்த வீராதி வீரனான அர்ஜுனனுக்கு அவமானத்தால் எண் சாண் உடம்பும் கூனிக்குறுக, திகைத்து மனம் சோர்ந்தான். சபதத்தின்படி அவன் தான் இறக்க நேரிடுமே என கவலையுறவில்லை!. பாசுபத அஸ்திரத்தை பெற வேண்டி தவம் செய்ய புறப்பட்டுச் சென்ற தன்னைக் காணாது தன் சகோதரர்கள் தேடி அலைவார்களே. !என்னுடைய இந்த முடிவை யார் சென்று அவர்களுக்கு தெரிவிப்பார்கள்?  ஐயோ! வந்த இடத்தில் தன் செருக்கினால். இப்படி ஒரு சம்பவம் நிகழ தான் காரணமாகி விட்டோமே.! என்றெல்லாம் நினைத்து வேதனையுற்றான்.

இந்த ஆணவம் என்பது ஒருமனிதனை இப்படித்தான் சீரழித்து விடும். ஒரு மனிதன்  எவ்வளவு புத்திசாலிதனமாக, பலவானாக, மேதையாக, போற்றப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதிக கர்வமும் செருக்கும் அவனுக்கு வரும் சமயம், அவன் அறிந்த நல்லவிஷயங்களை, அவனுடைய சமயோசித்த அறிவை முடக்கி அவன் கண்களுக்கு மாயத்திரையிட்டு, அவன் அறியாமலே அவன் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டுச் செல்லும். இதுதான் இந்த கர்வத்தின் உண்மை ஸ்வரூபம். எந்நாளும் இது சாத்தியமில்லை எனினும் கர்வம் தலை ஏறாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை அர்ஜுனன் மாமனிதன். இறைவனின் அன்பை, அருகாமையை பெற்றவன். அவன் கதியே இவ்வாறெனில், சராசரி மனிதர்களின் நிலை நினைத்துக் ௬ட பார்க்கமுடியவில்லை.

அர்ஜுனன் தன் சபதபடி அக்னியை மூட்டி அக்னிப் பிரேவசத்திற்கு சித்தமானான். அனுமனும் மனம் இரக்கமுற்றவனாய், வேண்டாமென எத்தனையோ ௬றி தடுக்கப் பார்த்தான். அர்ஜுனன் தன் கடைசி நிமிடத்தில் தன் நணபனும், வழிகாட்டியுமான கிருஷ்ணனை நினைத்தபடி, இப்படி ஆகுமென்று நான் சிறிதும் நினைக்கவில்லையே.! இனி நீதான் என் சகோதரர்களை முன்னின்று காத்தருள வேண்டும் என்று மனமுருக நினைத்தபடி அக்னியை வலம் வரும் சமயம், அந்த மாயக்கிருஷ்ணன் தன்னுருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மசாரி வேடத்தில் அங்கு தோன்றி “யார் அது? அர்ஜுனன் மாதிரி தெரிகிறதே.! ஏனப்பா உனக்கு என்ன பிரச்சனை.! ஏன் அக்னி பிரேவசம் செய்யதுணிகிறாய்? என்று ஒனறுமறியாதவர் போல் வினவ, அர்ஜுனனும், ஆதரவாக கேட்ட அவரிடம் நடந்ததை விவரித்தான்.

கிருஷ்ணனும், முகபாவத்தை பாவமாக வைத்துக் கொண்டபடி, “ஐயோ.! அர்ஜுனா! உன் நிலைமை இப்படி ஆகி விட்டதே.! ஆனால் யாருமில்லாத இடத்தில் நீஙகளிருவரும் நடத்திய போட்டியில் ஒரு நியாயம் இல்லையே.! போட்டி என்றால் ஒரு நடுவர் இருந்து அவர் கண்காணித்து தீர்ப்பு  சொன்னாலன்றோ, அது போட்டியாகும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் நடுவராக இருக்கிறேன். மறுபடி போட்டியை நடத்துங்கள். யாருக்கு வெற்றி தோல்வியென நான் முடிவு ௬றுகிறேன். எனவும், அவர் சொல்லுக்கு மறுத்து ௬ற இயலாது, அவருக்கு கட்டுண்டவர்களாக இருவரும் மறுபடி போட்டிக்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த முறை கண்ணனை மனதினில் நினைத்துக்கொண்டு அர்ஜுனன் அம்புகளை  கொண்டு பாலத்தை அழகுடன்  விரைவாக கட்டி முடிக்க, சென்ற தடவை பெற்ற வெற்றிக்களிப்பில், தன்னால் முடியாதது என்ன இருக்கிறது ? என்பது போல், அனுமன் கால் பெருவிரலினால் பாலத்தின் மீது அழுத்த , பலன் ஏதுமின்றி பாலம் உடையாது போகவே, பாலத்தின் மீது ஏறி நின்று குதித்தும் தன் பலம் கொண்ட கைகளினால் ஆட்டியும் பார்த்து பின் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட மனதினராய் கீழிறங்கினார்.

அப்போது பிரம்மசாரியாக வந்த  கிருஷ்ணன் தன்னுருவை கிருஷ்ணனாகவே மாற்றிக்கொண்டு , "அர்சுனா நீ  முதல் முறை என்னை நினைக்காது உன் முபற்சியினால்  மட்டும் வென்று  விடலாம்  என்றுஎண்ணினாய் உன்னுள்ளிருந்து உன்னை ஆட்டுவிப்பவன் ""நான்'' என்பதை  நீ மறந்ததினால் திறமையுடன் உன் வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு  பாலத்தைச் சிறப்பாக கட்டியும், தோல்வியைத் தழுவினாய்!  அதே சமயம்  மறுமுறை நீ என் மீது வைத்த நமபிக்கையினால்,  என்னை நம்பி நீ உருவாக்கிய பாலத்தை அனுமனால் அசைக்கக் கூட இயலாமல் செய்து விட்டது. உன் சிறிது நேர கர்வம் உன் உயிருக்கே  பங்கம் விளைவிக்கக்கூடிய செயலாகி விட்டது பார்த்தாயா பார்த்திபா''  என அன்புடன் கேட்கவும், " உண்மைதான் பரந்தாமா! கணநேரம் என் செருக்கு கூடியதால்  நடக்க கூடாததெல்லாம் நடந்து விட்டது. என்னை மன்னித்தருளுங்கள் மாதவா!'' என அர்ஜுனன் மனப்பூர்வமாக மண்டியிட்டு வணங்கினான். 


தோல்வியால் துவண்டிருந்த அனுமானை நோக்கிய கிருஷ்ணன் புன்னைகைத்தபடி அனுமனின் அருகில் சென்று  அவர் தோள்களை பற்றி அணைத்தவாறு ," ஆஞ்சனேயா! இன்னுமா நீ என்னை அறியவில்லை! நான்தான் உன் ராமன்!" என்றபடி ராமராக வில் ஏந்திய கோலத்தில் காட்சி தரவும், "அண்ணலே" என்றபடி அனுமன் அவர் கால்களில் விழுந்தார்.

அவரை தூக்கி நிறுத்திய கிருஷணன்," ஆஞ்சனேயா! திரேதா யுகத்தில் என் அவதாரம் முடிவற்ற நிலையில் நீ என்னிடம் கேட்டாய் !"பிரபோ ! நெஞ்சிலேயே சுமந்து கொண்டிருக்கும் தங்களை மறுபடி எப்போது காண்பேன்!? அந்த பாக்கியம் என்று நடக்கும்? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி வருந்தினாய் ! மறுபடி அதர்மம் தலைதூக்கும் பொழுதில் துவாபர யுகத்தில் கண்ணனாக பிறப்பேன். அப்போது ஒரு சந்தர்பத்தில் எனனை தரிசிக்கும் பாக்கியம் உளக்கு கிடைக்கும் என உன்னிடம் கூறினேன் நினைவிருக்கிறதா ? அர்சுனன் கட்டிய பாலத்தை தகர்த்தெறியும் போது நீ என்னிடம் உன் செய்கையின் பொறுப்பை ஒப்படைத்தாய். அதனால் உன் கால் விரல் பட்டதுமே பாலம் பொலபொலவென உதிர்ந்து போனது. மறுமுறை உன் செய்கையை மட்டும் நினைத்தபடி என்னை மறந்தததினால், உன் பலம் அவ்விடத்தில் செயலற்று போயிற்று. உன் பலமே நான்தான். நான் அனைத்துமானவன் சகல உயிர்களுக்குள்ளும் நான் அடக்கமானவன். நானே ராமன். நானே கிருஷணனுமாவேன். என்ற கிருஷ்ணன் மாறி மாறி இரு அவதாரங்களையும் மெய்பித்து காட்சி தந்திட, அனுமனும் அர்சுனனும் போற்றித் தொழுதனர்.

அனுமனும் மஹா பாரத போரில் தன் வாக்கின்படி அர்சுனனின் தேரில் இருந்த கொடியில் இருந்தபடி அவனுக்கு உதவிகள் புரிந்து போரில் ஜெயமடைய வைத்தார். அனுமன் கொடியில் இருந்தால் அர்சுனனுக்கு வீழ்ச்சியடையா வெற்றிகள் தேடி வருமென்பதற்காகவே, கிருஷனன் நடத்திய நாடகங்களில் இதுவும் ஒன்று... அனுமன் கொடியில் இருந்ததினால், அனுமன் கொடியுடையவன் என்ற பேரும் புகழும் பெற்றான் அர்சுனன்.

இவ்வாறு சிறு கர்வத்தினால்,. இறையம்சம் பெற்றவருக்கும். இறைவனுக்கு நெருக்கமானவருக்குமே திறமைகள் இருந்தும் செய்யும் செயல்களில் தடுமாற்றங்கள் நிகழ்ந்த போது, சாதாரண  மனிதர்களாகிய நாம் கர்வமோ. ஆணவமோ அடைந்தால் என்ன ஆகும் என்பதை  உணர வேண்டும் . எனவே எபபோதும் தன்னடக்கத்துடன்  பணியாற்ற இறைவன் பூரண நல்லாசிகளை நமக்கு எந்நாளும் வழங்க வேண்டும்.
ஒருபோதும் படைத்தவனை மறவா பக்குவத்தை பெறுவோமாக.......

Wednesday, February 14, 2018

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய.....

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியான பரம்பொருளை இன்று சிந்தையில் இருத்தி சிவராத்திரி பெரு விழாவை பக்தியுடன் கொண்டாடுவோம்.



சர்வம்  சிவமயம்.


இனிமையான  குரலில்  எஸ் .பி . பி  யின் லிங்காஷ்டகத்தை கேட்டு மகிழலாம் .வாருங்கள்..,பக்தி பரவசத்தில் நனையலாம். 




ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்

ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரவேச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


அஷ்ட தளேபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


லிங்காஷ்டகம் இதம் புண்யம்
ய:படேத் சிவ ஸந்நிதௌ

சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோத தே





பிரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறுதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரணலிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


பொன்மணிசூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்சனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியில் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


எட்டு களத்தில் எழுந்திடும் லிங்கம்
எல்லா மாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவரின் குருவின் பூசைகொள் லிங்கம்
தேவ வண மலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


லிங்காஷ்டகமிதை தினமும்
சிவசன்னதியில் சொல்வாய்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வாய்..... 











சர்வம் சிவார்ப்பணம்....


Sunday, February 11, 2018

சேமித்தல் அவசியம்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடுகள் அவர்கள் வாழ்க்கையில் அமையும்  வசதிகளைப் பொறுத்தே அமைகிறது என்பது திண்ணம். வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அதற்கு மூலதனம் பணந்தான்! (உதாரணம் அதில்தான் "தனம்" என்ற வார்த்தையே உள்ளதே! ) ஆனால் உலகில் எல்லோராலும்  பணத்தால் வாழ்க்கையை வசதியாய் அமைத்துக்கொண்டு வாழ்ந்திட முடியுமா? அதுவும் இயலாது! ஏனெனில் எவரவர் எப்படி வாழ வேண்டுமோ அந்த நியதிபடிதான் படைத்தவன் படைத்து அனுப்பியிருக்கிறான். அதன்படி நாம் வாழ்ந்து வந்தாலும், நாளைய வாழ்வுக்காக. எதிர் கால நன்மைக்காக, சந்ததிகளின் வாழ்க்கைகாக, இல்லை பிற உபயோகத்திற்காக என்று நமக்கு இறைவன் அமைத்து கொடுத்திருக்கும் வசதி வாய்ப்புகளை (பணத்தை) சேமிக்கிறோம். சேமிப்பு என்பது தவறல்ல! கடந்த காலங்களில் தவற விட்டவைகளை, எதிர் காலத்திலாவது பெறமுடியுமா என்ற கேள்விக்குறிகளோடு, நிகழ் காலத்திலேயே முடிந்தவரை அனுபவித்து விட வேண்டுமென்ற தீவிரமான ஆ(நிரா)சைகளோடு வாழ்ந்து வரும் நாம்  அதே சமயம் சேமிப்பும் ஒரு அத்தியாவசியம் என்ற உணர்வோடு அதிலும் கவனம் செலுத்துகிறோம்.

சேமிப்பு என்பது இருவகைப்படும். ஒன்று மேலே சொன்ன காரணங்களுக்காக ஒரு குடும்பத்தின் தலைவனோ, தலைவியோ, தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் துன்புறுத்தாது, நிகழ்கால தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்தபடி சேமிப்பது, மற்றொன்று தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்தி, நிகழ்காலங்களை சோகத்தில் தள்ளி அதன் கனவுகளை தகர்த்தெறிந்து விட்டு "நாளைக்காக" என்று சேமிப்பது. முதலாவது சிக்கனமென்றால், இரண்டாவது கஞ்சம் ! இரண்டிலும்  தவறுகள் நிகழலாம். ஆனால் பின்னதில் ஒரு துளியேனும் மகிழ்ச்சி கீற்றை சந்திக்காமலே போகும் வாய்ப்புகள் உள்ளது. எப்படியோ சேமித்தல் நலமாகி பலனை நல்கினால்
மொத்தத்தில் அனைவருக்கும் நலமே!


மஹா பாரத காலத்தில்  ஒரு சமயம்  விதுரரை சந்தித்து பேச கண்ணன்அவர் இருப்பிடம் சென்றான். கண்ணனை கண்ட மாத்திரத்தில் விதுரருக்கு தலை கால் புரியாத மகிழச்சி. தன்னை நாடி வந்த பரந்தாமனுக்கு  ஏதேனும் விருந்தளித்து பசியாற்றி அனுப்பவேண்டுமென்ற ஆர்வத்தில், அங்குமிங்கும் ஓடியதை கண்ணன் ," விதுரா ! ஏன் இப்படி ஓடி நேரத்தை கழி்க்கிறாய்? நான் கொஞ்ச நேரம் இங்கு தங்கி உன்னுடன் அளவளாவவே  வந்தேன். உன் கையால் சிறிது பழங்களை தந்தால் கூட போதும். என் பசி ஆறிவிடும். நீ சிறிதும் சிரமபட வேண்டாம். "" என்றதும், விதுரருக்கும் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கும் அந்த பேறுக்காகவே, அந்த யோசனை சரியெனபட்டது. பரந்தாமனின் அருகிலேயே அமரந்து அவரின் பொலிவான முகத்தையும்,  அவர் திறம்பட பேசும் பாங்கையும் ரசித்தபடி வாழைப்பழங்களை உரித்து கொடுக்க ஆரம்பித்தார். கண்ணனும் அவர் அளித்ததை தட்டாமல் அமுதமென உண்டு கொண்டேயிருந்தார்.

கண்ணனும் ஒரு கால கட்டத்தில் தன் பேச்சை நிறுத்தி விதுரரிடம் ஏதோ கேட்கவே சுய நினைவு எய்திய விதுரர் பழத்தட்டை யதேசையாக நோக்கியதும் திடுக்கிட்டுப் போனார். பதறிப் போன குரலில், "கிருஷ்ணா! மாபெரும் தவறிழைத்து விட்டேனே! இந்தப் பாபத்தை எங்கு சென்று போக்குவேன்? நீ அருகிலிருந்தும் கூட  தவறிழைக்கும் என் செய்கையை சுட்டிக்காட்டி திருத்த முயலக்கூடாதா? மகா பாபியாகி விட்டேனே!" என்று மனம் நொந்த அழுகையுடன் கதறவும், கிருஷ்ணர் விதுரரின் அருகில் சென்று ஆதரவாக ஆலிங்கனம் செய்து கொண்டார். "விதுரா! என்ன பிழை செய்து விட்டாய் என்று இப்படி புலம்புகிறாய்? என சிரித்துக் கொண்டே கேட்கவும்,  "பரந்தாமா!  இப்படி ஒன்றும் அறியாதவன்  போல் கேட்கிறாயே!  இந்தப் பழத்தட்டை பார்!  பழத்தை இங்கு போட்டு விட்டு வெறும் தோல்களை உனக்கு தந்திருக்கிறேன். நீயும் ஒன்றும் சொல்லாமல் அனைத்தையும் உண்டிருக்கிறாய்! நான் அறியாமல் செய்து கொண்டிருக்கும் பிழையை நீ ஒரு கண்ணசைவில் சுட்டிக் காட்டியிருந்தால், இதை தவிர்த்திருக்கலாம் இல்லையா? இனி வரும் வாழ்வில் இந்த என் செய்கை....விதுரர் தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து விம்மி அழ ஆரம்பித்தார்.

கண்ணன் விதுரரின் கைகளை தன் கைகளில் அன்புடன் ஏந்தியவாறு அவர் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்தபடி, "விதுரா! இதோ பார்! சற்றேனும் உன் செயலுக்கு வருந்தாதே!  உன் அன்பு நான் அறியாததா? நீ என் மீது எவ்வளவு அன்புடன் இருந்திருந்தால் மெய்மறந்து உபசாரம் செய்திருப்பாய் எனபதை நான் அறியாதவனா?  உனது யாதும் கடந்த நிலை எனக்கு தெரியாததா?  இரண்டாவதாக கோகுலத்தில் வளரும் சமயம் என்அன்னை யசோதாதேவி  பழங்களை எனக்கும் அண்ணன் பலராமனுக்கும் ஊட்டி விட்டு தோல்களை பசுவினத்திற்கு அளிப்பார்கள். அப்போதிலிருந்தே  எனக்கு அந்த ஆவினம் உண்ணும் பழத்தோல்களை நானும் உண்ண ஆசை! அதை இன்றுதான் உன் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்! ஆகவே நீ எனக்கு ஒருவிதத்தில் நன்மைதான் செய்துள்ளாய். என் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்துள்ளாய் என்பதை நினைவில் வைத்துக்கொள்!  இதில் வருந்த ஏதும் இல்லை"  என்றான் சற்று குறும்பும் கலந்த குரலில்.

கண்ணனின் சமாதான பேச்சில் மயங்கிய விதுரரும் சற்றே மனம் விட்டு இளநகை புரிந்தார்.. அங்கே அன்புக்கு, கண்ணன் மேல் விதுரர் கொண்ட பக்திக்கு மரியாதை கிடைத்தது. தவறுகள் அன்பெனும் மாயையால் முழுதாக மூடப்பெற்று குற்றங்குறை என்ற ஏதும் இல்லாத மனப்பாங்கு உருவாக்கபட்டது. பரந்தாமன் மேல்  உண்மையான பக்தி செலுத்தினால் அறியாமல் செய்த தவறுகளை அவன்  கையில் சுழலும் சக்கராயுதத்தின் மூலம் துடைத்தெறிந்து அழித்திடுவான். என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு படிப்பினை. ஒரு உதாரணம்.

நான் 70, 80 களில் ஒரு வார இதழில் கதை ஒன்று படித்தேன். அதை எழுதியவர் பெயரோ கதா பாத்திரங்களின் பெயரோ நினைவில் இல்லை. வார இதழ் கூட  (குமுதம் என்று நினைக்கிறேன்.) சரியாக நினைவில்லை! ஆனால் இன்னமும்  கதையின் கரு மட்டும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

திருமண வயதை கடந்த  (அதாவது 30 க்கும் மேல் ! அந்த காலத்தில் 30 வயதில் திருமணமாகமல் வீட்டில் ஒரு பெண் இருந்தால், ஊர் உறவுகள் பேசும்.! அண்டை அசல் பேசும்! ஏன் ஊரிலிருக்கிற வாயில்லா ஜீவன்கள் கூட பேசும்! போகிற வருகிற இடமெல்லாம் பெண்ணுக்கு எப்போ திருமணம்? கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க? என்ற பேச்சுக்கள் அடிபடும்.அது இயல்பான ஒன்று ! ) பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து  வருகிறாள். தாயார் சிறு வயதிலேயே தவறியதால், குடும்ப  பொறுப்புகள் அனைத்தும் திறம்பட செய்து வீட்டை நிர்வகிக்கும் திறமைசாலி. அவளது தந்தை பெண் திருமண வயதை எட்டியதிலிருந்து வரன் தேடிக் கொண்டேதான் இருக்கிறார். ஜாதகம் சரியாக அமையும் இடத்தில் பெண் பிடிக்காமல் போகும். இரண்டும் பிடித்தமாகும் இடத்தில் இவர்களது "வசதிகள்" (பொருளாதாரம்)  ஒத்து வராமல் போகும். இப்படியாக தட்டிப்போனதில் தந்தையின் கவலைகள் பெருகியதை கண்ட மகள் ஏதாவது ஒரு இடத்தில் நல்லபடியாக வரன் அமைந்தால், தந்தையின் மனச்சுமை குறையுமே என்ற ஆதங்கம் அதிகமாக, தரகர் வந்து சொல்லிச் செல்லும் மாப்பிள்ளையின் ஜாதகத்திலிருந்து, அடுத்தடுத்து நிகழும் சம்பிரதாய நிகழ்வுகளுக்காக, தன்னை படைத்தவனிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தபடி வேண்டிக் கொள்வதை ஒரு கடமையாக்கி கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு சமயம்  அப்படி வந்த ஒரு மாப்பிள்ளையின் ஜாதகம் நன்றாக பொருந்தியிருந்தது அவர்கள் வீட்டிலும் பையனின் தாயார் மட்டுந்தான் ! தங்கள் மகனை அவன் தந்தை தவறியதிலிருந்து அந்த தாயார் வளர்த்து வருதால் பையன் தாய் சொல்லை தட்டியேதில்லை. அவர்களும் பெண் வீட்டில் எதையுமே எதிர் பார்க்க மாட்டார்கள்.  கல்யாண செலவைக்கூட அவர்களே ஏற்றுக் கொள்வார்கள்! ஏனெனில்  அந்த அம்மாவும் கஸ்டபட்ட நிலைமையில்தான்  தன் மகனை வளர்த்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் பண கஸ்டம் என்பது எங்களுக்கும் தெரியுமெனவும்  பையனின் அம்மா கூறி விட்டதாகவும், அந்த பையனும் எதையும் அம்மா விருப்பபடி கேட்டு கேட்டு செய்வதாகவும், தான் திருமணத்திற்கு பார்க்கும் பெண்ணைக்கூட தன் தாயே தேர்ந்தெடுக்கும் உரிமையை தாய்க்கு  தந்து விட்டதாகவும் , குடும்ப பாங்காக,  தன் தாய் பேச்சை தட்டாமல் இருக்கும்  பெண் யாராக இருந்தாலும் சரி! தாய்க்கு பிடித்து விட்டால் எனக்கும் சரிதான் என அந்த பையனே சொல்லி விட்டதாகவும், தரகர்  வந்து சொன்ன போது இந்த பெண்ணுக்கு மனதுக்குள் உல்லாச பறவையொன்று சிறகடித்து பறந்தது.

கடைசியில் ஒரு நாள் அந்த அம்மா மட்டும் வந்து பெண்ணைப்பார்த்து பிடித்து விட்டால், உடனே நிச்சயதார்ந்தான்!  அது மட்டுமல்ல! என்  மருமகளின் குடும்ப பொறுப்பையும் சமையலையும் ரசித்து , ருசித்து பார்க்கிறேன் என்று அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் (அந்த காலங்களில் கடிந்தானே!) வர, தந்தைக்கும் மகளுக்கும் சந்தோஸம் எட்டிப் பார்த்தது. வரும் அன்று வீட்டை பார்த்து பார்த்து சுத்தம் செய்ததோடு, அன்று அவர்கள் வீட்டிலேயே  பசியாறி விட்டும் போகலாம் என்பதினால், வடை பாயாசம் செய்து விருந்தாக சமைத்து வை என்று சொல்லி விட்டு வெளியில்  சென்ற  தந்தையின்  கட்டளைபடி  சமைக்க ஆரம்பித்தவளுக்கு, சின்ன சந்தேகம் உதித்தது. செட்டு கட்டாக குடும்பம் நடத்தி தன் மகனை வளர்த்து படிக்க வைத்தவருக்கு, வந்த முதல் நாளிலேயே அமர்களமாக சமையல் வகைகளை செய்து  பறிமாறினால்,  அதை ஆடம்பரமாக கருதி விட்டால் என்ன செய்வது என சந்தேகம் எழ, ஒரு சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், அப்பளம் என அளவோடு தயார் செய்து வைத்தாள். தானும் மிகவும் எளிய ஆடை அலங்காரங்களுடன் தயாராகி, வரும் விருந்தாளியையும் வெளியில் சென்றிருக்கும் தந்தையையும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சொன்னபடி வந்த பையனின் அம்மா அறிமுக படலம் முடிந்ததும்,. வீட்டின் நேர்த்தியை பார்த்து பாராட்டினார். அவளுடைய எளிய நடை உடைகளை கண்டு வியந்தார். ஓய்வு நேரத்தில்  அவள் செய்திருந்த கலைப் பொருள்களை கண் கொட்டாது பார்த்து சான்றிதழ் தந்தார். பையனின் அம்மா வருதற்கு முன்பே ஓட்டமாய் ஓடி வந்திருந்த பெண்ணின் தந்தை பார்த்துபார்த்து அவருடன் பவ்யமாக பேசியபடி தன் பெண்ணின் திறமைகளை அவவப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சாப்பிடும் போது முகம் முழுக்க மகிழ்வுடன் " சமையல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.இந்த பொரியல் என் மகன் விரும்பி சாப்பிடுவான். உன் கைமணம் பிரமாதம்! இதற்கே என் மகன் மயங்கி விடுவான்." என்றெல்லாம் சிறிதும் வெட்கப்படாமல் கூறி, தன்   பெண்ணை வெட்கப்பட வைத்ததைக் கண்டு தந்தை திருமண நிச்சயமே நடந்து விட்டதை போல மகிழ்ந்தார். வெகுவாக தன் சமையலை பாராட்டியதும் நாண மிகுதியில் நின்றிருந்தவளிடம் பையனின் அம்மா "வாழைக்காய் பொரியலுடன் காரமாக மற்றொரு பொரியல் செய்திருந்தாயே அது என்னம்மா?" எனக் கேட்கவும், வாழைக்காய்  தோல்களை வீணாக்காமல் அதையும் தான் புதுவிதமாக  புது பாணியில்  சமைத்திருப்பதை சொல்ல. "பேஷ் எனக்கேற்ற மருமகள்தான் நீ"! என்று தனியான ஒரு பாராட்டுரைத்து, இன்னும் ஒரு வாரத்தில், நாள் பார்த்து என்மகனுடன் வந்து நிச்சயம் செய்து விடுவோம் என்று நம்பிக்கை விதைகளைத் தூவி விடை பெற்றுச் சென்றார். அப்போதே வீடு திருமணக் களையை கட்டியிருந்தது போன்ற ஆனந்தத்தில் தந்தை மிதக்க, மகளும் தந்தையின் மன சஞ்சலம் நீங்கியது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தாள்.

வாரம் ஒன்றின் மேல் கடந்து சில தினங்களாயினும், தகவல் ஒன்றும் வாராமலிருக்க தானே கடிதம் எழுதி விசாரிக்கலாமா  என தந்தை யோசிக்கையில்  அவர்களிமிருந்து கடிதம் வந்தது. பெண்ணின் பெருமைகளை குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நேர்த்தியை, அமைதியான சுபாவத்தை, சமையல் திறத்தை அனைத்தையும் மீண்டும் ஒருமுறை புகழ்ந்து எழுதியிருந்த பையனின் அம்மா, "உங்கள் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துள்ளது .ஆனால் அவளை மருமகளாக அடையும்  பாக்கியம் எனக்கில்லை! உங்கள் பெண்ணின் திறமைகளை கூறி என்மகனுடன் எத்தனையோ விவாதம் செய்து விட்டேன். ஒரு காயுடன் அந்தக் காயின் தோல்களை வைத்து திறமையாக சிக்கனமாக உணவு தயாரிக்கும் பாங்கையும் சுட்டிக் காண்பித்து விட்டேன். ஆனால், இப்போதுதான் நாம் நல்ல நிலையில் இருக்கிறோமே அம்மா! மறுபடியும் உங்களை மாதிரியே சிக்கனத்தை உபதேசித்து, என் நிகழ்கால கனவுகளை கலைக்கும்படியாக ஒரு பெண் தேவையா? தயவு செய்து  வேறிடம்  பாருங்கள்! இந்த ஒரு விசயத்தில் மட்டும் உங்கள் பேச்சை கேட்காததற்கு மன்னியுங்கள்! எனறு கூறி விட்டான். அவனை வறுப்புறுத்த முடியவில்லை! தயவு செய்து நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் பெண்ணின் குணத்திறகும்,, திறமைகளுக்கும்  நல்ல இடம் கிடைக்கும்!"என்றபடியாக முடிந்திருந்த கடிதத்தை கண்டதும் படித்துக் கொண்டிருந்த தந்தை அதை வெறித்தோடிய முகத்துடன் நழுவ விட்டதும், அதை எடுத்து வரி விடாமல் கண்களை ஓட விட்டவள்,  மனம் கனத்து கண்களில் ஓடத் துடித்த கண்ணீருக்கு சட்டென்று தடை போட்டவளாய், தந்தையை பார்த்தாள்..வாடிப்போயிருந்த தந்தையை கண்டதும் கண்களின் விளிம்பில் விடாமல் ஓடிச் சிதற துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் அவள்அனுமதியின்றி கண்ணங்களில் வழிந்து மறைந்தது.

இந்த கல்யாண சந்தையில் மாமியாரை பார்ப்பதா? இல்லை! கணவனாக வருகிறவனை கவனிப்பதா? ஒருவரை திருப்திபடுத்தி சந்தோஸபடுத்தியதற்கு பரிசாய் மற்றவரின் அதிருப்தியை  பெற வேண்டியுள்ளதே!  என்று மனதில் எழுந்த எண்ணத்தின் விளைவாய் இளநகை ஒன்றை சிந்தியபடி கடிதத்தை கிழித்தெறிந்து விட்டு தற்சமயம் தந்தையை தேற்றுவதே தன் பணி என்பதை உணர்ந்தவளாய் தந்தையை சமாதானபடுத்த முனைந்தாள்.

இந்தக்கதை என்னுள் இன்றளவும்.மறையவேயில்லை.  நான் எழுதும் போது சற்று மிகை படுத்தி  வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம்.  ( தந்தை பாத்திரம்  என் கற்பனையில் உதித்தாக கூட இருக்கலாம். .ஆனால்  கதையின் கரு இதுதான்.) நான் எழுதிய இந்த மூன்று விசயங்கஞக்கும் சம்பந்தம் இருக்கிறதாவென்றும் எனக்குத் தெரியவில்லை. என் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்!