Tuesday, November 12, 2024

விருப்பங்களில் விரும்புவது.

 குணுக்கு.

நேற்று எபியில் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பான  தஞ்சாவூர் அடையை பார்த்தவுடன் எனக்கும் அடை சாப்பிடும் ஆவல் வந்து விட்டது.  அடையும் செய்து சாப்பிட்டு பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் (பேரன், பேத்திகள்) அடையென்றால், அலர்ஜியாகி வேண்டாமென சொல்லி விடுவார்கள். ஏனோ அவர்களுக்கு இந்த அடை தோசை  பிடிப்பதில்லை. அப்படி பிடிக்க வைக்கவும் (வறுப்புறுத்தி) கற்றுத் தரவில்லை. சாதா மாவினால் செய்யும்  தோசையைதான் விரும்பி பிடித்து  சாப்பிடுவார்கள். நேற்று வீட்டிலும் இட்லி மாவு இல்லை. பின் அவர்களுக்கு என கோதுமை மாவு, ரவை சேர்த்து  கரைத்து விட்ட தோசையாக  வேறு செய்ய வேண்டும். அது வேண்டாமென இந்த குணுக்கைத் தேர்ந்தெடுத்தோம்.

இதுவும் அடை மாவு மாதிரிதான் தயார் செய்து கொள்ள  வேண்டும்.இது அனைவரும் அறிந்ததே..! 


ஒரே அளவில் நான்கு பருப்புக்களையும் (து. ப, பா. ப, க. ப, உ. ப,) ஒவ்வொரு டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அலம்பி பின் பருப்புக்கள் மூழ்கும் வரை ஊற வைத்தேன். புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், அத்துடன் முக்கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் எடுத்து அதையும் அலம்பி பின் மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற வைத்தேன். 

இரண்டும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊறியதும், முதலில் அரிசி கலவையுடன், சி வத்தல்10 , பச்சை மிளகாய் 3, தேவையான கல் உப்பு, கறிவேப்பிலை நான்கைந்து ஆர்க்கு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் பொடி என சேர்த்து மிக்ஸியில் சற்று, கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். பின்னர் பருப்பு கலவையை நன்றாக அதுவும் தோசைக்குப் போல தண்ணீர் நிறைய விட்டு நைசாக அரைப்பது போல இல்லாமல் சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன். 


இத்துடன் தேங்காய் பூ துருவி சேர்க்கலாம். இல்லை பெரியதோ, சின்னதோ, வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். தேங்காய், வெங்காயம் இரண்டுமே இரு வேறு மாதிரியான சுவைகளை கண்டிப்பாகத் தரும். ஆனால், நான் இதை சேர்க்கவில்லை. பதிலாக கொத்தமல்லி தழைகள் வீட்டில் நிறைய இருந்தன. அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து பொடிதாக நறுக்கிச் சேர்த்தேன். 


கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றிய பின், பருப்புக்களின் நிஜமான சுவையுடன்  கூடிய அந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக கிள்ளி சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் போட்டு எடுத்தேன். மாலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். இரவு மோர் சாதத்திற்கும் அவர்கள் விருப்பமாக அதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.( இரவில் எப்போதும் அவர்களுக்கு மோர் சாதந்தான் பிடிக்கும்.) 


அவர்களுக்கு பிடிக்காத அடையை செய்து "உடம்புக்கு நல்லது..! அத்தனையும் புரதம்..!  சாப்பிடு, சாப்பிடு..! " என கண்டிப்பதை விட, அவர்களுக்கு பிடித்ததை செய்து தரும் போது அவர்களும் அதே புரதத்தை விரும்பி சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் என்ன ஒன்று..! எண்ணெய்யில் பொரித்து தருவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. சரி.. என்றோ ஒரு நாள்தானே இப்படி என சமாதானமடைய வேண்டியதுதான்...! இப்படியாக இந்த குணுக்கு நேற்று எங்கள் வீட்டில் எதிர்பாராமல் தோன்றியது. 


இன்று மீதமிருக்கும் மாவு அதன் துணையாக பல பொருட்களை சேர்த்துக் கொண்டபடி, நான் வேண்டாமென ஒதுக்கிய வெங்காயத்தின் மனம் நொந்து விட்டதால், அதையும் பேசி  சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு அடையாக மாறும் என நினைக்கறேன். மாற்றங்கள் நம்மை போல், இல்லை நம்மை விட அதற்கும் பிடிக்குமல்லவா? 

வேறு படங்கள் எதுவும் ஆரம்பிக்கும் போது எடுக்கத் தோன்றவில்லையாததால், எடுத்துள்ள படங்களுடன் சூட்டோடு சூடாக எழுதிய பதிவிது. நீங்களும் இந்த மாதிரி அனேக முறைகள் உங்கள் வீட்டில் செய்து ருசித்திருப்பினும், இந்த சூடான குணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். 

நன்றி என் நட்புலக சகோதர சகோதரிகளுக்கு.🙏. 

28 comments:

  1. ஆஹா குனுக்கு சூப்பர் கமலாக்கா. ஆமாம் குழந்தைகளுக்கு அடைக்குப் பதில் குணுக்கு பிடிக்கும்.

    நல்லா வந்திருக்கு கமலாக்கா. படங்களும் அதில் தெரிகிறதே க்ரிஸ்பாகக் குனுக்கு வந்திருப்பது!

    பரவால்லக்காசின்ன பசங்கதானே ஓடி ஆடி விளையாடும் வயசு எண்ணை ஓகே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவை ரசித்து குணுக்கையும் ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி. சகோதரி.

      ஆமாம். அவர்களுக்கு அங்குமிங்கும் ஓடியாடுவதால் எண்ணெய் ஒரு பொருட்டல்ல..! நாங்களே இரவு மோர் சாதத்திற்கு அதை தொட்டுக் கொண்டுதான் சாப்பிட்டோம். மோர் சாதத்திற்கு பொருத்தமாக இருந்தது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நேற்று எங்கள் வீட்டில் அடைதான் (காலையில்... அதாவது பத்து மணிக்கு). அத்தோடு புதிதாக மனைவி செய்திருந்த மிளகாய்பொடி. (ஆனால் கொஞ்சம் புழுங்கரிசி, தீட்டாத அரிசி உபயோகித்தது)

    குனுக்கு எங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் எண்ணெய் என்பதால் அதைச் செய்து சாப்பிட்டு நான்கு மாதங்களாகிவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      சூப்பர்.. உங்கள் வீட்டிலும் அடையா? என்ன ஒரு ஒற்றுமை..! நானும் ஞாயிறு மாலையே அடை பண்ணத்தான் நினைத்தேன். எபியில் மறுநாள் காலை அடையை பார்த்ததும் முதல் நாள் இரவே செய்ய நினைத்திருந்த அடையை குனுக்காக மாற்றி விட்டோம். அடை. புது மிளகாய் பொடியுடன் சூப்பராக இருந்திருக்கும். அடைக்கு வெல்லப்பொடியும், அவியலும் நல்ல துணை.

      நீங்களும் குனுக்கை சாப்பிட்டு நாளாகி இருப்பது வருத்தமே. எங்களுக்கும் வெகு மாதங்கள் ஆகி விட்டது. நேற்று என்னவோ தோன்றியது குனுக்கு உபாயம்.. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சில நாட்களாக உளுந்து வடை அல்லது போண்டா சாப்பிடணும்னு ஆசை. டயட்டில் இருப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது. கடையில் சாப்பிட்டால் ஓரிரண்டோடு போய்விடும் என்பதால் யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை டயட்டில் இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேளை உணவை அதுக்கு ஏத்தாப்ல மாற்றிக் கொண்டுவிடணும் அவ்வளவுதான். நாங்களும் எண்ணைப்பண்டங்கள் தவிர்ப்பதால் நம்ம வீட்டில் எண்ணைச் சட்டி வைத்தே ஆகிடுச்சே! அதாவது எங்களுக்குன்னு வைச்சு.

      கீதா

      Delete
    2. நெல்லை மசால் வடை ஆசையை விட்டுட்டீங்களே!!!

      கீதா

      Delete
    3. மசால்வடை.....ஆஹா... சிறிய வெங்காயம் போட்டிருக்கணும். ஆனால் சோம்பு போட்டிருக்கக்கூடாது. பூண்டும் கூடாது

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆமாம் எதுவுமே கடையில் வாங்கி சாப்பிட்டால் ஒன்று, இரண்டோடு முடிந்து விடும். (நம் ஆசைகளின் அளவைச் சொன்னேன். வரும் பில்லை பார்க்கும் போது, நிறைய சாப்பிட்டு விட்டோமோ என்று கூட தோன்றும்.) வீட்டில் செய்யும் போதும், அதை சாப்பிடும் போதும் கணக்கு கிடையாது. ஆனால், வெளியில் செய்யும் பதாரத்தங்களின் எண்ணெய்யை விட வீட்டில் நாம் செய்யும் எண்ணெய் உணவுகள் சிறந்தவைதான் . பல மாதங்களுக்கு ஒரு முறை அவ்வாறு சாப்பிட்டால் தவறில்லை. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ரொம்ப நன்றாக இருக்கும் கமலாக்கா...வயிற்றுக்கும் கொஞ்சம் படுத்தாமல் இருக்கும் குனுக்கு!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மோர் சாதமா? எவ்ளோ மாதங்களாகிவிட்டது சாப்பிட்டு. எனக்கு All Time favourites மோர் சாதத்தைச் சுற்றித்தான். (அதுவும், நல்ல காரமான உருளை ரோஸ்ட், அல்லது சேம்பு ரோஸ்ட், அல்லது கரைச்சமா தோசை மி.பொடி, மாங்காய் ஊறுகாய், புளிமிளகாய், பொரிச்ச அப்பளம், வெங்காய பஜ்ஜி........)

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆமாம்.. இந்த மாதிரி எண்ணெய் சேர்ந்த உணவுகள் மோர் சாதத்திற்கு நல்ல பக்கத் துணை..! மோர் சாதம் அந்த எண்ணெய்யின் வீரியத்தை குறைத்து நன்கு ஜீரணமடையச் செய்யும். இருமல் போன்றவை வராது. எண்ணெய்யினால் ஏற்படும் தண்ணீர் தாகத்தையும் குறைக்கும். தங்களின் நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /மோர் சாதமா? எவ்ளோ மாதங்களாகிவிட்டது சாப்பிட்டு/

      ஏன் அப்படி? மோர் சாதம் உடம்பிற்கு நல்லதுதானே..! நீங்கள் குறிப்பிடுகிற தொட்டுகையில் ஏதேனும் ஒன்றை தொட்டுகையாக வைத்துக் கொண்டு மோர் சாதம் சாப்பிடலாம். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அடடா...   கலக்கி விட்டீர்கள்.   சி. வத்தல் என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  காய்ந்த மிளகாய் வத்தல்தானே?  நாங்கள் குணுக்குக்கென்று தனியாக மாவு அரைத்து செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிவப்பு வற்றல்-மிளகாய் வற்றல்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      சிகப்பு வத்தலைதான் அப்படி குறிப்பிட்டேன். மிளகாய் வற்றல் என்றும் சொல்லியிருக்கும். என்னவோ எழுதும் அவசரத்தில் சி. வ என வந்து விட்டது நான் எப்போதுமே குணுக்குக்கென்று மாவு தயாரிப்பேன் . அடை யென்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, சேர்த்து தளர்வாக அரைக்கலாம். அடையும் மிருதுவாக வரும். ஆனால் குனுக்கு க்கு மிக தளர்வாக அரைத்தால் எண்ணெய் அதிகம் குடித்து விடும்.

      ஆமாம். குணுக்கு என்பது சரியா? குனுக்கு என்பது சரியா? அதுவே தனக்கு ஒரு சரியான பெயர் இல்லையே என திகைத்துப் போகிறது.:)))

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      சி. வ, மி. வ விளக்கம் தந்து குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நாங்கள் அரிசி எந்த அளவோ அதே அளவுதான் பருப்புகளும்.  இது ஒரு டம்ளர், அது ஒரு டம்ளர் அரிசி என்றால், கப ஒரு டம்ளர், துப முக்கால் டம்ளர், ஒரு ஸ்பூன் உப, ஒரு ஸ்பூன் பா ப 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் வீட்டு குனுக்குகிற்கான அளவு முறைகள் தெரிந்து கொண்டேன். பா. ப ஒரு ஸ்பூன் அளவு சரி.
      ஆனால், உ. ப. ஒரு ஸ்பூன் போதுமோ? உ. ப. தானே குனுக்குக்கென்று போட்ட அரிசியை கொஞ்சம் மிருதுவாக்கும். (பச்சரிசி எவ்வளவு பருப்புகள் போட்டாலும் இழுத்துக் கொள்ளும் இல்லையா?) இப்படி இந்த அளவிலும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். . தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      என்ன மெயில் என்று தெரியவில்லையே என வருத்தமாக இருக்கிறது. எப்படியும் பார்க்க முயற்சிக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஆஹா குணுக்கு... எங்கள் வீட்டில் அனைவருக்கும் சூப்பராகப் பிடிக்கும்... சூப்பராகச் செய்திருக்கிறீங்கள்...
    உண்மைதான் அடை ஹெல்த்தியானது அதனால எல்லோரும் விரும்புவதில்லை ஹா ஹா ஹா.. குணுக்கு பொரித்தெடுப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /உண்மைதான் அடை ஹெல்த்தியானது அதனால எல்லோரும் விரும்புவதில்லை ஹா ஹா ஹா.. குணுக்கு பொரித்தெடுப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்.../

      ஹா ஹா ஹா. அடை மாவில் சுத்தி எண்ணெய் விட்டு அடையை தயாரிப்பது சுவை சுமாராகத்தான் இருக்கும். ஆனால், எண்ணெய்குள்ளேயே போய் அந்த மாவு பொரிந்து வெளிவரும் போது சுவையோ சுவைதான் அனைவருக்கும். அதனால்தான் ஒரு பழமொழி உண்டு.

      "வாய்க்கு ருசி..! வயிற்றுக்கு கேடு என்பார்கள்" .

      எல்லோரும் முதலில் வாயின் ருசியை பற்றிதான் கவலையுறுகிறோம். பிறகுதான் வயிறு..

      நேற்று பல மாதங்களுக்குப்பின செய்யும் உணவு என இந்த குனுக்கை செய்தோம் . அடிக்கடி செய்தால் கூட இதுவும் போரடித்து விடும்.

      தாங்கள் வந்து தந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஆஹா குணுக்கு... எங்கள் வீட்டில் அனைவருக்கும் சூப்பராகப் பிடிக்கும்... சூப்பராகச் செய்திருக்கிறீங்கள்...
    உண்மைதான் அடை ஹெல்த்தியானது அதனால எல்லோரும் விரும்புவதில்லை ஹா ஹா ஹா.. குணுக்கு பொரித்தெடுப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவை ரசித்து குணுக்குப் போல பொங்கி பூரித்த தங்களது கருத்த்க்களுக்கு என் மன மகிழ்வுடனான நன்றி சகோதரி.

      இன்று மீதி மாவை அடை தட்டலாம் என நினைத்தேன். ஆனால், வேறு சமையல்கள் அடையின் இடத்தைப் பிடித்துக் கொண்டால், அடை மாவு நிம்மதியுடன் கு. சா. பெட்டியில் நித்திரை கொள்கிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. என் குணுக்கையும் நீங்கள் பாத்தே ஆகோணும் ஜொள்ளிட்டேன்... :)))

    https://youtu.be/U6WrFgJ-M64?si=SbLF6uXr2ubKbhsP

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      இதோ..! உங்கள் கைப்பக்குவமான குணுக்கையும் கண்டிப்பாக பார்க்கிறேன். உங்கள் சமையல் எப்போதுமே அசத்தலாகத்தான் இருக்கும். முன்பே பலமுறைகள் கண்டிருக்கிறேனே..!! . தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      உங்கள் அன்பான அழைப்பை கண்டவுடன் நானும் உங்கள் யூடியூப் சேனலுக்கு வந்து உங்கள் இனிமையான குரலோடு சேர்ந்த முருங்கையிலை குணுக்கையும் கேட்டு/பார்த்து ரசித்துவிட்டு, ஒரு கருத்துரையையும், ஒரு லைக்கையும் இட்டு வந்தேன். நன்றாக குணுக்கு செய்துள்ளீர்கள். சுவையாக இருக்கிறது. நானும் இதுபோல் ஒரு தடவை செய்து பார்க்கிறேன். இனி வருவதற்கு வழி தெரிந்து விட்டதாகையால் அடிக்கடி வந்து உங்களை தொந்தரவு செய்வேன். ஹா ஹா ஹா நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலா அக்கா... மெயில் பார்த்தீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி

      வருந்துகிறேன். சகோதரரே உங்கள் மெயிலை என்னால் காண இயலவில்லை என்ன தகவல் எனத் தெரியாமல் தடுமாறுகிறேன் நிறைய வீடியோக்கள், போட்டோ இவற்றை அகற்ற வேண்டுமென்ற கண்டிஷனில் என் கைப்பேசியில் நிறைய மெயில்ளை காண இயலவில்லை. . நானும் நிறைய புகைப்படங்களை, வீடியோக்களை அழித்துக் கொண்டே வருகிறேன். எப்படியும் பார்க்கிறேன் தங்கள் தகவலுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete