உலகத்தை காத்து உலக மக்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கும் சிவபெருமானின் கோப கனலில் இருந்து தோன்றியவர் "முருகப் பெருமான்" என்பது நாமறிந்த விஷயம்.
அவரின் குழந்தை ஒருவரால்தான் தேவர்களை சித்ரவதைபடுத்தும் அசுரர்களை வதைக்க முடியும் என்ற காரணத்தால், அவரின் மோனதவத்தை கலைத்து, அவர் மீது தன் மலர் அம்பை ஏவி,அவரின் கோபத்தை தூண்டிய மன்மதன் அக்கணமே எரிந்து சாம்பலானாலும், அந்த நெருப்பு ஜுவாலைகள் அணைய பெறாததால், அதனின் வெப்பம் தாங்க மாட்டாமல், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி யோசித்து வாயுபகவானின் உதவியோடு அந்த தீ ஜுவாலையை சிவனின் "சேயோனாக" பாவித்து சரணவ பொய்கையில் ஆறு தாமரை மலரில் கொண்டு சேர்த்தனர்.
பின்னர் மன்மதனின் மலர் அம்பில் தன் தவம் கலைத்த சிவனிடம் உண்மை நிலையை தேவர்கள் எடுத்தியம்பியதும் அவர் கருணை கொண்டு, மன்மதனையும் உயிர்பித்து தாமரை மலரில் சரணடைந்திருக்கும் தீ ஜுவாலைகளையும் ஆறு ஆண்மகவு குழந்தைகளாக உயிர்பித்தருளினார். கூடவே அவரின் அருளால் ஆறு சேடிமார்களும் உருவாகி அந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.
ஒரு சமயம் தன் சதி பார்வதியுடன் தேவியுடன் சரவண பொய்கைக்கு வந்த சிவபெருமான் தான் தேவர்களுக்கு அளித்த வாக்கின்படி, தன் தேவியிடம் "இவை நம் குழந்தைகள்.என் கோபத்தீயின் வெப்பத்தில் உருவானவர்கள். எனவே இவர்கள் உன் பிள்ளைகளும் ஆவார்கள். உன்னருளால் இவர்களை ஒரே ஒரு குழந்தையாக்கி தேவர்களின் இன்னலை தீர்ப்பாயாக.." என்று கூறவும், இறைவி தன்னை நோக்கி ஓடி வந்த ஆறு குழந்தைகளை "ஆறுமுகா"என்று அன்போடு அழைத்து தன் கைகளால், வாரி ஒன்று போல் சேர்த்து அணைக்கவும், அனைவரும் ஒன்று சேர்ந்த "முத்துக்குமரன்" அங்கு உருவானான்."அம்மா, அப்பா" என்று வாய் நிறைய அழைத்த அந்த " சிவசக்திபாலனை" கண்டு தந்தையும், தாயும் அகமகிழ்ந்தனர்.
அதுவரை குழந்தைகளை வளர்த்து வந்த அந்த சேடிமார்களை அழைத்து எங்கள் மகன் "கார்த்திகேயனை" நீங்கள் இதுவரை கவனமாக நான் கூறியபடி பராமரித்து வளர்த்ததினால், நீங்கள் அனைவரும் கார்த்திகை நட்சத்திரமாக அவதரித்து வானுலகில் சிறப்புடன் வாழ்வீர்களாக..உங்களை கார்த்திகை பெண்கள் என அனைவரும் போற்றி வழிபடட்டும்" என்று சிவபெருமான் உரைத்ததும் அவர்கள் அன்று முதல் வானில் நட்சத்திரமாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். சிவனும், தன் மனைவி பார்வதி தேவியுடன், இது நாள்வரை சரவண பொய்கையில் வளர்ந்த தன்னருமை மகனான, "சரவணனை" அழைத்துக் கொண்டு தன்னிருப்பிடமான சிவலோகத்திற்கு சென்றார்.
காலங்களின் வேகங்களில் அங்கே தேவர்கள் அசுரர்களால் துன்படுவதை நாரதர் சிவனிடத்தில் வந்து சுட்டிக் காட்டி உரைத்தார். தக்க தருணத்தில் வீரமான வாலிப வயதை எட்டியிருந்த தம் மகனை அழைத்து, "உமைபாலா.! " நீ தேவர்களின் இன்னல்களை தீர்ப்பதற்காக பிறந்தவன். அந்த நேரம் இப்போது நெருங்கி விட்டது. என்னை நோக்கி பல்லாயிரம் காலம் தவம் செய்து, என்னிடம் அழியா வரம் வாங்கி என்னைப் போல உள்ளவரால் தான் தனக்கு மரணம் வர வேண்டுமென வரம் பெற்ற சூரபத்மனை, என் அம்சமாக பிறந்த நீதான் அழித்து வர வேண்டும். உன்னால் மட்டுமே அவனுக்கு அழிவு என்பது அவன் பெற்ற வரம். அதனால், நீ சென்று அவனை வென்று வா..! " என கட்டளையிட்டார்.
தாயின் ஆசிபெற சென்ற அழகெல்லாம் ஒன்று திரண்ட "முருகேசன்" அன்னையை தொழுது அவளருளை வேண்டி நின்றார். பார்வதி தேவியும் பாசத்துடன் தன் மைந்தனை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து, தன் சக்தியினால் உருப்பெற்ற சக்திவேலை அவனிடம் தந்து அந்த "வடிவேலவனை" வாழ்த்தி விடை தந்தாள்.
"கந்தகுருநாதன்" களைப்பின்றி களிப்புடன் படை செலுத்தி சென்று சூரபத்மனை அழித்து தேவர்களை காத்து தன் வீரச் செயலுக்காக தேவர்கள் அனைவரும் நிச்சயித்த வண்ணம் தேவேந்திரன் மகளை மணமுடித்து திருச்செந்தூரில் அம்மையப்பனாக அனைவருக்கும் அருள் புரிந்தார்.
முருகா, முத்துக்குமரா, சிவகுருநாதா, ஆறுமுகா, சிவபாலா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, சரவணா, உமை பாலா, முருகேசா, வடிவேலா, கந்தகுருநாதா, சிவகுமரா, சண்முகா, வேல்முருகா என்ற நாமாவளிகளோடு இன்று என்னை பதிவு எழுத வைத்த எந்தையே..! என்கண் தந்தையே...!
உன் அன்பின் கருணை எனக்கென்றும் வேண்டுமென உன் தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏.🙏🙏🙏.
கீழுள்ள இந்த தகவல்கள் மட்டும் மாலை மலரில் படித்ததினால், அதையும் என் பதிவோடு சேர்த்துள்ளேன்.
சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.
அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.
இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான்.
நன்றி.. மாலை மலருக்கு. 🙏.
உண்மையில் "சிவகுமாரன்" மனிதர்களாகிய நம் மனங்களில் தோன்றும் காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறு வகை குணங்களை அழிக்கத்தான் சிவபெருமானின் அம்சமாக உலகில் பிறப்பெடுத்திருக்கிறான்...! இந்த ஆறும்தான் அசுரனாக, ஒரு சூரபத்பனாக நம்முள் இருப்பவை. மாறாக அவனை தூய உள்ளன்போடு வணங்கி, அவன் தாளையன்றி வேறொன்றும் நினையாமல், வாழ்ந்து வந்தால், வீடுபேற்றை (மறு பிறப்பொன்று இல்லாத நிலை.) தருவான்.அதை அந்த "சண்முகநாதனை" தர விடாமல் தடுப்பதும் நம்முள் குடி கொண்டிருக்கும் இந்த ஆறு குணங்கள்தாம். அந்த ஆணவ நிலையை உணர்ந்து அந்த சூரபத்மனை போல "சிவசக்தியின்" புனிதமான வேலை ( அவன் நாமங்களை எப்போதும் இடையறாது நினைத்து ஜபிப்பது) நம் மார்பினில் வாங்கி சேவலாகவும், மயிலாகவும் நம் அகம்,புறத்தை இருகூறாக்கி, அந்த "வேல்முருகனின்" பாதங்களோடு ஐக்கியமாக்குவதே இந்த சஷ்டி விரதத்தின் நோக்கம்.
கந்த குரு கவசம்
நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா.. 🙏🙏.
கந்தவேல் தன் கைவேல் கொண்டு நம்மை எப்போதும் காத்து ரட்சிக்க மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.
தீடிரென இந்தப்பதிவை எழுத என்னை நினைக்க வைத்ததும் "அவன்" அருள்தான். இரவு மணி 1ஐ நெருங்கியும் விடாது எழுதி முடிக்க வைத்ததும் "அவன்"அருள்தான்.🙏.
அனைவருக்கும் கந்தசஷ்டி வாழ்த்துகள். கந்தன் அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தித்துக்கொள்கிறேன். 🙏.
முருகன் அருளால் எழுதிய இப்பதிவுக்கு வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான பணிவான நன்றிகள். 🙏.