Sunday, September 29, 2024

இனிப்பும், கசப்பும்

 பாகல் உசிலி.

இறைவன் படைப்பில் அனைத்து காய்கறிகளும் பொதுவாக ஒவ்வொரு சக்திகளையும் கொண்டு உருப்பெற்றவை. ஆனால் இப்போது இன்றைய காலகட்டத்தில் நாம் எதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது, அல்லது எதை குறைத்தால், (முற்றிலுமாகவே) நல்லது என்ற விவாதத்தில் உள்ளோம். 

அந்தக் காலத்தில் மதிய உணவு என எடுத்துக் கொண்டால்,நல்ல சுவையான பல காய்கறிகளுடன் சாதம், பருப்பு, சாம்பார், ரசம், மோர் என அன்றாடம் நல்ல உணவைதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், அந்த உணவிற்கேற்ற உடல் உழைப்பும் அப்போது இருந்தது. 

நாம் வெளியில் செல்வதானால் ,நம்  கால்களின் நடையைதான் நம்பினோம். "எப்படி இவ்வளவு தூரம் தீடிரென புறப்பட்டு வந்தாய்..?" என கேட்கும் உறவுகளுக்கு" பார்க்க வேண்டுமென நினைத்தேன். அதனால் நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம். 

நடை உடலுக்கு மிக, மிக நல்லது என இப்போது தரும் முக்கியத்துவத்தை அப்போது யாரும், யாருக்கும் கற்றுத் தந்ததில்லை. 

அப்போது அதிசயமாக ஒவ்வொரு ஊர்களிலும், உலவும் மிதி வண்டிகள் வந்து மனிதர்களின் கால்களுக்கு ஒரு பலத்தை தருகிறோம் என்ற ஆசையை விதைத்தது. அவ்வாறு மிதி வண்டிகள் வைத்திருப்பவர்கள் பெரும்  பணக்காரர்களுக்கு ஒப்பானவர்களாக மாறினர். 

காலம் மாற, மாற நமக்கு அடி பணியும் விலங்கினங்களை துன்புறுத்தி வெகு தூரத்தை கடக்க கூட பல வண்டிகள் வந்து உதவின. இந்த ஆசைகளில் சிக்கிய  இருசக்கர வண்டிகள் பிரபலமாகி தாங்களும் மண்ணில் இடம் பிடித்தபடி  ஆங்காங்கே பறக்க ஆரம்பித்தன. 

அதற்கு போட்டியாக பேருந்துகள் பல உருவாகி ஒவ்வொரு ஊர் விட்டு பல ஊர்களையும் சுலபமாக கடந்து காண்பித்தது. இதற்கிடையே பல சொகுசு வண்டிகளை சொந்தமாக வாங்கி தங்களின் சொந்த ப(ய)ணத்தில் மனிதர்கள் தம் கால்களுக்கு ஓய்வு தந்தனர். ஆக மொத்தம் மனிதர்கள் இறைவன் அளித்த தங்கள் கால்களை நம்பாமல், இப்படி சொகுசாக வாழவும் முடியும் என்ற ஆசை வளையத்தில் வசமாக மாட்டிக் கொண்டனர். 

பச்சை பசேலென்ற பசுமையான நிறைவுடன் வளர்ந்த தாவரங்கள் காய்கறிகள், மனிதர்களின் இந்த  பயண ஆசைகளுக்காக, தங்களின் ஜீவாதாரமான,  மண் வளத்தை நிராகரித்து, எப்படியும் தங்களாலும் வளரவும் முடியும் என நிரூபித்து காட்டின. 

அதற்கு காரணம் தாங்கள்தாம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமற்ற மனிதர்கள் தங்கள் பயணங்களை வசதி மிக்கதாக செய்து கொண்டபடிக்கும், பொன்னான மண்வளத்தை கான்கீரிட் இருப்பிடங்களாகவும், அந்த இருப்பிடங்களின் வசதிக்காக மண் சாலைகளை ரசாயண கலவை சாலைகளாகவும் ஆக்கி, விளையும் தாவரங்களை அலட்சியபடுத்தி மகிழ்ந்தனர். 

தாவரங்கள் அப்போதும் தங்கள் கடமையை செய்ய அஞ்சவில்லை. மனிதர்கள்  வகுத்து தந்த மாற்றுப்பாதையில் தங்கள் விளைச்சலை நம்பியபடி வாழ்ந்து காட்டின. அதனால், அதனின் சத்துள்ள திடங்கள் முன்பு போலில்லை.. கணிசமாக குறைந்தனவென்ற புகாரையும் மௌனமாக ஏற்றுக் கொண்ட.ன. 

A முதல் Z வரை அதனிடம் இருந்த சக்திகள் இவர்களால் பொலிவிழந்து போனதற்காக அது முகம் சுளிக்கவில்லை.  நாளாவட்டத்தில் மக்கள்  தங்கள் வீட்டுக்கு நாலடி தள்ளி இருக்கும் கடைகளுக்கு கூட தங்கள் உடமையாகிய சொகுசு காரில் சென்று சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கவும் ஆரம்பித்தனர். 

நாடு விட்டு நாடு, ஊர், ஊராக செல்லும் வசதிகள் என வந்த விஞ்ஞான வளர்ச்சிகள்  நல்ல பயனுள்ள ஒரு  வாய்ப்பாக ஆக்கி காட்டினும், மக்களிடத்தில் பல நோய்களின் தாராளமயம் வேகமாக பரவியது. 

எந்த காய்கறியை சாப்பிட்டால், எந்த நோய் நம்மை அண்டாது விலகும் என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இடையில் வெற்றி பெற்ற அன்னிய மருந்துகளும், மாத்திரைகளும் தாங்கள் முன்னணி கண்ட திருப்தியில் திளைத்தன. 

இப்போது" இந்த மாத்திரைகளின் வண்டியில்தான் நம் வண்டி தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது.." என பெருமையாக காண்போரிடமெல்லாம் (நம் சுற்றங்களை, நட்புகள் ) சொல்லி அதை (மாத்திரை, மருந்தை) கௌரவபடுத்தவும் தொடங்கினோம். 

இப்போது ஏன் இந்த அலசல் என நீங்கள் நினைக்கலாம். இன்று இனிப்பு சக்தி என்ற ஒன்று உலகிலுள்ள அனைவரிடமும் அதீதமாக பரவியுள்ளது. அதை முற்றிலும் குணப்படுத்த மருந்தில்லையென்றாலும், கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன. ஆனாலும் சிலது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் அவஸ்தைகளும் அதில்  இருக்கின்றன. 

உணவுகளில் அறுசுவையில்,  இனிப்பு, புளிப்பு, உப்பு  இம்மூன்றையும் தினமும் அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, காரம் (அளவுக்கதிகமான காரங்கள் இல்லாத காரம்  )  என்ற சுவைகளை  குறைவாகவேனும்  தினமும் உட்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என அந்த காலத்தில் நம் வீட்டு  பெரியவர்கள் கூறி வந்தனர். ஆனால், நம் நாவின் சொல்படி கேட்டு வளர்ந்த நமக்கு முதலில் கூறியவைதான் பிடித்தமான உணவாக இருந்தது.

அந்த கசப்பு சுவையுடன் கலந்த பாகல் அனேக பேருக்கு சிறு வயதில் அனைவருக்குமே  பிடிக்கவே  பிடிக்காது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டுமென்றும் அப்போது சொல்வார்கள். 

பாகற்காயில் கசப்பு சுவை உள்ளதால், இனிப்பு (சுகர்) பேஷண்ட்ஸ் இரண்டொரு நாளைக்கு ஒரு  தடவை  உணவோடு இதை செய்து  சாப்பிடலாம். (அல்லது இதையை உணவாகவும் சாப்பிடலாம்.) அது போலவே துவர்ப்பான வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் இவைகள் இந்த உபாதையை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் நம்புவோம். அதுவே ஒரு சிறந்த  மருந்தாகும். (உணவே மருந்து.) 

ஆனாலும், உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொண்டு, அரிசி, கோதுமை போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் நல்லதென்பது சிலர் வாதம். 

சிறுதானிய வகைகளையும், அளவோடு சாப்பிட்டு, காய்கறிகளையும் அளவோடு சாப்பிட்டால், இந்த நோயின் உபாதைகளிலிருந்து சிறிது மீளலாம் என்பது சிலர் வாதம். 

அந்தந்த நேரத்திற்கு சிறிதளவு மட்டும் உண்டு, கிடையாய் கிடைக்காமல் நடையாய் நடந்தால், நல்லதென்போரும் உண்டு. 

என்னவோ.. போங்கள்... ! ஆனால், இந்த இனிப்பு உபாதை  நம்மோடு இருக்கிறது என்பதை கண்டு பிடித்தது முதல் மன உளைச்சல்தான். நம்மோடு இருந்து சௌக்கியமாய் அது வாழ்ந்து விட்டுத்தான் "அதுவும் நம்முடன் போகும்.. " என்றால் அதுவும் மிகையாகாது. 

சரி.. சரி.. இந்த வம்பெல்லாம் இப்போது எதற்கு..? எங்கேயோ ஆரம்பித்து, தலைப்பை வேறு விதமாக போட்டு விட்டு அதன்படி சொல்ல வந்ததை சொல்லிச் செல்லாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியாக, வேண்டாததை பிதற்றாமல், வேண்டியதை மட்டும் சொல் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்..!! 

இப்போது அனைவரும் நம் உடம்புக்கு நல்லதென கூறும் இந்த பாகற்காய் உசிலி செய்முறையை பார்ப்போமா

நல்லதான பாகற்காய் இரண்டை வாங்கி, அலம்பி பின் அதை இது போல் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.  


ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு அத்துடன் அரிந்த பாகலை போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 


வழக்கமாக காய்கறி கலந்த பருப்பு  உசிலிக்கு போடுவதை போல துவரம். பருப்பு, கடலை பருப்பு பாதிக்கு பாதியாக எடுத்து கொண்டு அலம்பி ஊற வைக்கவும். 


அரை மணிக்கும் மேலாக ஊற வைத்த அந்த பருப்புடன் அதில் காரத்திற்கு  (அவரவர் விருப்பம்.) சிகப்பு வத்தல், ஏழு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான கல் உப்பு போட்டு கறிவேப்பிலை இரண்டு ஆரக்கு  பெருங்காயப்பொடி முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக  அரைத்துக் கொண்டு, அதை இட்லிதட்டில் இட்லி மாதிரி வேக வைத்துக் கொண்டு பின்  அதை கடாயில் சமையல் எண்ணெய் விட்டு உதிர்த்துக் கொண்டு, அத்துடன் இந்த வெந்த பாகற்காயை கலந்து சிறிது நேரம் வதக்கினால் சுவையான பாகல் உசிலி தயார். 

இதை மதிய உணவாக நினைத்து நிறைய தட்டில் போட்டுக் கொண்டு இத்துடன் ஒரு கரண்டி, அல்லது எண்ணி  நாலைந்து பருக்கை சாதத்தை இத்துடன் கலந்து சாப்பிடவும். இதுவும்  அவரவர் விருப்பம். ஹா ஹா ஹா. 

ஆக மொத்தம் அன்று நடந்த நடைகளாக பகல் பொழுதினில் நாம் செல்லவேண்டிய இடங்களுக்கென்று எங்கே சென்றாலும் வெய்யில், மழை பாராமல் நடந்தோம் . ஊரில் அருகில் உள்ள  ஒவ்வொரு கோவில்களை காலை, மாலை என்று நடந்து சென்று தரிசித்ததோடு, அங்கு உட், வெளி பிரகாரங்களை சுற்றி வருவதை ஒரு நடைப்பயிற்சியோடு கலந்த பக்தியாக்கி சந்தோசமும், திருப்தியும் அடைந்தோம். நடுவில் இவற்றை தொலைத்து விட்டு, இல்லாத நோய்களை சொந்தமாக்கி கொண்டு, அவைகளின் தீர்விற்கு மீண்டும் இவற்றுக்கெல்லாம் இப்போது முயற்சியும், பயிற்சியும் செய்கிறோம். எப்படியும் இதுவாவது "நடந்தால்" சரிதான்..! :))

நடை பாடல் ஒன்று. இது போல்  நடையை வலியுறுத்தி நடை பாடல்கள் பல உண்டு. நடக்கும் நடைகளை குதர்க்கம் சொல்லி கேலி காட்டினும், தன் எழுத்து நடையில் நடை பிசகு காணாத வண்ணம் எழுதிய அந்த  பாடலாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் அன்புடன் கருத்துரை தரும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

26 comments:

  1. இரண்டு இடங்களிலும் பாகல் காயா? தாங்குமா?

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இரண்டு இடங்களிலும் பாகல் காயா? தாங்குமா?/

      ஹா ஹா ஹா. இப்போதுதான் அங்கும் பார்த்து வருகிறேன். ஆகா.. ஒரேடியாக கசப்பு வருமோ என நானும் நினைத்தேன். ஆனால் பாகல் நல்லது. இப்படி யதேச்சையாக அமைந்த பதிவுகள் ஆச்சரிய மூட்டுகின்றன. தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பாகலிலும் பருப்புசிலி செய்யலாம் என்று இன்றுதான் கேள்விப்படறேன்.

    இரு வாரங்களுக்கு முன், மனைவி முதன் முதலா கோஸ் பருப்புசிலி செய்தார். எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால் அதற்குப்பின் நான்கு முறை பண்ணச்சொல்லிவிட்டேன். இதோ.. இன்றும் அதையே விருப்பமாகச் சொல்லியிருக்கிறேன். அதை மாற்றிவிட்டு பாகல் இருந்தால் அதில் பண்ணச் சொல்கிறேன். நல்ல குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம். பீன்ஸ் மட்டுமன்றி பாகல், கொத்தவரங்காய். அவரைக்காய். வாழைப்பூ, வாழைத்தண்டு என எல்லாவற்றிலும் பருப்புசிலி செய்யலாம்..

      கோஸ்ஸிலும் நானும் செய்வேன். இதோ.. நீங்களும் அதை குறிப்பிட்டுள்ளீர்கள். கோஸ் பருப்புசிலி நன்றாக இருக்கும். தாங்களும் பாகல் பருப்புசிலி செய்யப் போவதாக கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி செய்து பாருங்கள். அதன் கசப்பு ருசி அவ்வளவாக தெரியாது. நல்ல குறிப்பு என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சாண்டில்யன் மாதிரி நீங்கள் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். பாராட்டுகள். (ஹா ஹா ஹா.. அவர்தான் ஒவ்வொரு நாவலின் ஆரம்பத்திலும், கதைக்குள் வராமல் நாலைந்து பக்கம் வர்ணனையிலேயே கடத்துவார்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /சாண்டில்யன் மாதிரி நீங்கள் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்./

      ஹா ஹா ஹா.. ஆகா... அவர் எங்கே..! நான் எங்கே..! மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். ஆனால், நான் சாண்டில்யன் கதைகளை விரும்பி படிப்பேன். அவருக்கே உரித்தான அந்த வர்ணனைகள் படிக்க மிகவும் நன்றாக இருக்கும்.

      தங்களது அன்பான கருத்துக்களுக்கும், பாராட்டுககும் மிக்க நன்றி சகோதரரே.

      இன்று எங்கள் வீட்டில் மதிய சாப்பாட்டுக்கு பீன்ஸ் உசிலிதான்.:))

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பாகற்காயில் உசிலி நானும் இதுவரை செய்ததில்லை! இனி செய்து பார்க்க வேண்டும். குறிப்பு தெளிவாக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. தொடர்ந்து என் எழுத்துக்கு ஊக்கமும், உற்சாகமும் தாருங்கள் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

      பதிவை ரசித்து தந்த தங்களது கருத்துரை கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பாகற்காயில் உசிலி… இதுவரை கேள்விப்பட்ட(சுவைத்த)தில்லை. உங்கள் செய்முறை நன்று. வீட்டில் செய்து பார்க்க வேண்டும்.

    நடை நல்லது! ஆம் நடப்பதை பலரும் மறந்து விட்டார்கள்.

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பாகல் உசிலி செய்முறை நன்றாக உள்ளதென்ற கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் மனைவி சமையலில் நல்ல திறமைசாலி. அவரின் பலவிதமான சமையல் பக்குவங்களை கண்டு நான் பல முறைகள் திகைத்திருக்கிறேன. நீங்களும் சமைப்பதில் வல்லவர்தான். உங்கள் பதிவிலும் படித்து பல பக்குவங்களை கற்றிருக்கிறேன். உங்கள் இருவருக்கும் என் அன்பான நன்றிகள்.

      நடை நல்லது என்ற கருத்து சிறப்பானது. பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கும் தங்களது இனிய பாராட்டிற்கும் என் பணிவான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இறைவன் படைப்பில் அனைத்தும் நம் பயன் கருதிதான்.
    ஆறு சுவையும் அளவோடு உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம். //

    ஆமாம், அப்போது அப்படித்தான் சொல்வோம்.

    இப்போது நடராஜா சர்வீவை சர்வீஸ் செய்து மீண்டும் இயங்க வைக்க வேண்டும் .

    உணவே மருந்தாக எடுத்து கொண்டால் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்குவது குறையும்..

    பாகற்காய் பருப்பு உசிலி நன்றாக இருக்கிறது.

    மனோ அவர்களும் பாகற்காய் பக்குவம் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் செய்முறையும், படங்களும் , சொல்ல வந்த கருத்தை அழகாய் விரிவாக சொன்னதும் நன்றாக இருக்கிறது.

    பாடல் பகிர்வும் நடைபயிற்சியின் நன்மைகள் சொன்னதும் அருமை.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /இறைவன் படைப்பில் அனைத்தும் நம் பயன் கருதிதான்.
      ஆறு சுவையும் அளவோடு உணவில் சேர்த்து கொள்வது நல்லது./

      ஆம்.. உண்மை. இறைவன் படைப்பின் விசித்திரமே அதுதான்..! ஆறு சுவைகளையும் அளவோடு உண்டால் எந்த நோயும் அண்டாது. சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

      நடராஜா சர்வீஸ் என்ற பழைய பேச்சை ரசித்தமைக்கு நன்றி சகோதரி. ஆம். இப்பவும் அந்த நடராஜாவை பின்பற்றத்தான் ஆசை.. ஆனால், ரோடில் கார், பேருந்து, பிளாட்பாரத்தில் கடைகள் என மக்கள் வெள்ளத்தின் நடுவே ஓரடி எடுத்து வைத்து நடக்கவே சிரமமாக உள்ளது.

      உணவே மருந்தானால் நல்லதுதான். ஆயுர்வேத மருந்துகளில் அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.

      எபியிலும் இன்று சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் பதிவாக பாகல் இஞ்சி புளி செய்முறை வந்திருப்பதை காலையில் எழுந்ததும் பார்த்தேன். அங்கும் படித்து கருத்துரை இட்டு விட்டுதான் பிறகு காலை வேலைகளை துவக்கினேன்.

      தாங்கள் பதிவை ரசித்து உங்களின் இரவு பொழுதோடு வந்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      பாடல் பகிர்வை குறிப்பிட்டு சொன்னதற்கும் நன்றி. நடையில் ஆரம்பிப்பதாக பல பாடல்கள் உள்ளன. எனக்கு சில பாடல்கள்தான் நினைவுக்கு வந்தன. சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் என்றால் இன்னேரம் பல பாடல்களை கூறியிருப்பார். அவரையும் இது வரை பதிவுக்கு காணவில்லை. ஏதோ வேலைகளின் பிஸியில் உள்ளார் என நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் என் பணிவான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. உங்கள் கமெண்ட்டை இப்போதுதான் படிக்கிறேன் கமலா அக்கா.  இதைப் படிப்பதற்கு முன்னாலேயே நடை பாடல்களை பட்டியலிட்டு விட்டேன்!

      Delete
  7. இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் //

    பிதற்றல் இல்லை, அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வேலைகளுக்கு இடையே இப்படி விரிவான பதிவு போட்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் என்னை ஊக்கப்படுத்துவதற்காக இவ்விதம் சொல்லியுள்ளீர்கள். ஆனால், நம் நட்புகள் எல்லோரும் சின்னதாகவும், நிறைய விஷயங்கள் அடங்கிய பதிவாக இடும் போது, நான் வளவளவென்று ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதுகிறேனோ என நினைத்துக் கொள்வேன். அதனால்தான் அப்படி சொன்னேன். தங்கள் கருத்து எனக்கு ஆறுதலைத் தருகிறது.

      நீங்களும் உங்களின் வேலைகளுக்கு நடுவில் வந்து அனைத்தையும் பொறுமையாக படித்து எனக்கு ஊக்கம் தரும் கருத்துக்களை தருகிறீர்கள். அதற்கே நான் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பாகற்காய் உசிலி ஏன் எதற்கு எப்படி கேள்விகளின் பதில்களாக உழைப்பில்லாமை, நீரிழிவு, மருந்தாக பாகற்காய் உசிலி செய்முறை என்று உங்களுக்கே உரிய முறையில் கொஞ்சம் விவரமாக தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவை ரசித்துப்படித்து உங்களின் மனதில் தோன்றிய நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே. உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளர்களின் ஊக்கம் தரும் கருத்துக்கள்தாம் என் எழுத்தின் வடிமைப்புக்கு காரணம். தொடர்ந்து என் எழுத்துக்கள் வளம் பெற உங்கள் கருத்துக்களை தவறாது தாருங்கள். தங்களது பாராட்டிற்கு என் மனம் நிறைந்த பணிவான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்ககம் ஸ்ரீராம் சகோதரரே

    இன்று இந்தப்பதிவுக்கு தாங்கள் வராததது ஒரு குறை. ஒரு வேளை காலையிலேயே தாங்கள் வந்து தங்களது கருத்துக்கள் காணாமல் மாயமாகி எங்கேனும் பதுங்கி உள்ளனவா என்பதும் தெரியவில்லை. பார்க்கலாம்.. . நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆ,,,   நான் வராமலேயே எனக்கு பதிலே தந்துள்ளீர்கள்.  நான்தான் பதிவை கவனிக்கவில்லை.  எனவே அட்வான்ஸ் பதிலையும் கவனிக்கவில்லை!!

      உங்கள் வழக்கமான வார்த்தையை இப்போது நான் கடன் வாங்கி கொள்கிறேன்... 
       
      ;மன்னித்துக் கொள்ளுங்கள்'!  

      ஹா...  ஹா..  ஹா....

      Delete
  10. கமலாக்கா சூப்பர் ரெசிப்பி. மனோ அக்கா போட்ட ரெசிப்பியும் உங்க ரெசிப்பியும் என் பாட்டி செய்து சாப்பிட்டு அப்படி நானும் கற்றுக் கொண்டேன்.

    சின்ன வயசுல பாகல் நாங்க சாப்பிடணும்னு, குட்டி குட்டியா கட் பண்ணி உசில் செய்வாங்க...முதல்ல நிறைய பருப்பு போட்டு செய்வாங்க...பாகல் கம்மியா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து பாகலும் தெரியறாப்ல செய்வாங்க. நல்லாருக்கும்.

    கீதா

    ReplyDelete
  11. அன்று வெங்கட்ஜி வேறொரு தளத்தில் பாகற்காய் உசிலி என்று எழுதியிருந்தார்....ஆனால் அது உங்கள் தளமாக இருக்கும்னு நினைக்கலை நானும் ஒரு சில விஷயங்களால் ஓடிவிட்டேன்.. அப்புறம் இன்று நெல்லைதான் சொன்னார் உங்க தளத்துலன்னு..

    குறிப்பும் நல்லா உங்க ஸ்டைல்ல சொல்லியிருக்கீங்க...

    ஆமாம் உடலுழைப்பு இப்ப இல்லை. கூடவே வாழ்க்கை மாறும் போது சிறுவயதிலேயே உடற்பயிற்சி, யோகா என்று குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றுவதுண்டு அல்லது விளையாட்டுகள் பள்ளி வீடுகள் என்று. அப்போதெல்லாம் நாம ஓடி ஆடி விளையாடியுள்ளோம். ஆனா கல்யாணம் என்ற ஒன்று ஆனதும் உடற்பயிற்சி இல்லாமல் போகிறதுஅது எல்லாப் பெண்களும் பழகிக்க வேண்டும் என்று தோன்றுகிறது நாம 45, 50 ல் தான் உணர்ந்து செய்யத் தொடங்குகிறோம்.. வாழ்வியல் மாறுவதைக் குறை சொல்லாமல், அதற்கு ஏற்ப நம் ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றும், இல்லையாக்கா.

    கீதா

    ReplyDelete
  12. இந்தப் பதிவு எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை.  திங்களன்று வெங்கட் பாகற்காய் உசிலி என்றதும் எந்த பிளாக் என்று தெரியாமல் நானும் கீதாவும் குழம்பிப்போனோம்.  சாரதா சமையல் பிளாக்காய் இருக்குமோ என்று கூட பேசிக் கொண்டோம்.  இன்று கீதா சொன்னதும்தான் தெரிந்தது!

    ReplyDelete
  13. மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு சக்கரம்தான் என்று சொல்வார்கள்.  அதுதான் பல பெரிய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னேற்றங்களுக்கு காரணமாய் இருந்ததாம்.  நீங்கள் சொல்லியிருக்கிறபடி ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் அவன் உடல்  அக்கறையை குறைத்துக் கொண்டே வந்தன!

    ReplyDelete
  14. பாகற்காயை ரசிப்பதற்கு கூட வயது வரவேண்டும் என்பது சரிதான்.  ஆனால் எனக்கு கசப்பு ருசி சிறு வயதிலிருந்தே பிடித்துப் போனது.  காஃபி கசப்பாய்தான் குடிப்பேன்.  பாகற்காய் அப்போதே பிடிக்கும்.  ஆனால் கோவைக்காய் பிடிக்காது.  அது அதன் கசப்புக்காக அல்ல!

    ReplyDelete
  15. பாகற்காய் உசிலி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  பாகற்காயில் உசிலி செய்யலாம் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை!  ஒரு முறை முயற்சித்து விடலாம்.  குட்டியாய் கொடி பாகல் கிடைக்குமே, அது கிடைத்தால், மிக இளசானதாக கிடைத்தால், அதை அலம்பி, சிறிதாய் நறுக்கி, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, பெருங்காயப்பொடி போட்டு பச்சையாகவே சாப்பிட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  16. வெள்ளிக்கண்ணு மீனா பாடல் சுவாரஸ்யம்.  நேற்று சிவாஜி பிறந்தநாள்.  அதற்கு இந்தப் பாடல் பொருத்தம்.  நடையாலங்காரம் கண்டேன் என்று ஒரு பி யு சின்னப்பா பாடல் உண்டு.  அதைத்தவிர நடையாலங்காரம் நாட்டியமைப்பா என்று SPB பாடல் உண்டு.  மலேசியா  நடையை மாத்து' என்று ஒரு பாடல் உண்டு!

    ReplyDelete