Tuesday, October 19, 2021

ரெசிபி படங்களின் அலப்பறைகள்.

 பூரிக்கும் பூரியுடன் கோஸ் கூட்டு.அன்பான வணக்கம் சகோதர சகோதரிகளே. 

அனைவரும் நலமா? அனைவருடனும் நலம் விசாரித்து உரையாடித்தான் வருகிறேன். ஆனாலும், நான் இங்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. அதனால், இந்த தளத்திற்கு வருகை தந்து படிக்கும் உங்கள அனைவரையும் நலம் விசாரிப்பது முறையல்லவா?  கடந்த  வாரங்களில் ஒரு திங்களில் திங்கப் பதிவாக எ. பியில் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களின் அருமையான செய்முறையில் அமைந்த கோஸ் புலாவ்வை ரசித்து படித்ததும் மனதுக்குள் , யதேச்சையாக என் டிராப்டில் நான் சும்மா எடுத்து சேகரித்து வைத்திருந்த கோஸ ரெசிபி படங்களைப் பற்றிய நினைவுகள் வந்தது. அப்போதே சென்று  பார்த்தும் பார்க்காத மாதிரி அமைதியாக அவைகளை பார்வையிட்டு விட்டு வந்து விடலாமென்று படங்களை பார்வையிட ஆரம்பித்தேன். உடனே, அவைகள் தாங்க முடியாத சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டன. 

"என்ன ஒரே சந்தோஷம்..?" என நான் புரியாமல் மீண்டும் அமைதியாக கேட்டவுடன், "நீண்ட நாட்கள் கழித்து எங்களை பார்க்க மறுபடி வந்திருக்கிறாய்.... இன்று எங்களை  வெளியே கை கோர்த்தபடி  உலாவ விடுவாய் அல்லவா?" அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் இந்த மகிழ்ச்சி... . "என்றது கோரஸாக. 

" அட... .! நான் ஏதோ ஒரு ஆர்வத்தில் உங்களை என் கைப்பேசியில் வளைத்து சிறை பிடித்து, இந்த சிறையிலும் அடைத்து விட்டேன். இந்த உங்களின் பயன்பாடுகள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் அனைவருமே அறிந்ததுதான்...! இதையெல்லாம் போய் பிரகடனப்படுத்தி எழுதி உங்களை சிறப்பித்து வெளியே நடமாட விடுவேன் என கனவில் கூட நினைக்காதீர்கள்... . " சட்டென பதில் தந்த என் பேச்சு சற்று காட்டமாக இருந்தது போலும்..

" ஆமாம். ..காற்றில்லாத இந்த அறையில் ஏகப்பட்ட எங்கள் உறவுகளுடன் கிடந்து தவிக்கிறோம்...எப்போதடா வெளியேறுவோம் என வெளியே செல்லும் ஆவலுடன் காத்திருக்கும்  நாங்கள் ஒவ்வொரு நாளும் தூக்கமில்லாது விழித்தபடிதான் உள்ளோம். இதில் எங்களுக்கு கனவு வேறேயா.. .  ?" என் கோபமான பேச்சில் அவைகள் முணுமுணுப்பாக பேசிக் கொண்டன. 

" என்ன.. முணுமுணுப்பு..? வித்தியாசமாக நான் ஏதாவது உங்களை வைத்து புதுப்புது ரெசிபிகளை செய்திருந்தால் எப்போதோ,, என்  சொந்த காணி நிலத்திலும், வரவேற்கும் எ. பியின் வளாகத்திலும் உங்களை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பேனே..!  எடுத்தது எல்லாம் அத்தர் பழசுதான். இதைப்போய்  எப்படி உங்களுக்கு பொருத்தமாக வார்த்தைகளை ஜோடித்து உங்களை அலங்காரமாக்கி வெளியில் விடுவதாம்......? பேசாமல் இங்கேயே இருங்கள்...அவ்வப்போது நான் மட்டும் வந்து பார்த்துக் கொள்கிறேன். "என் அசுவாரஸ்யமான பேச்சில் அவைகள் சிறிது நேரம் மெளனமாயின. 

தீடிரென சலசலப்பு அதிகமாயின. அதில் பூரி படங்கள் கொஞ்சம் ஆணவத்தில் தோய்தெடுத்த மாதிரி, "என்ன. .. இப்போது நாம் அழகாக இல்லையா? அதுவும் நான்...!! ஏதோ  இவர்கள் இதுவரை எழுதி கிழிக்கும் அழகிற்கு நம் உதவியால்தான் மற்றவர்களுடன் அதை பகிர்ந்து திருப்தி அடைய முடிந்திருக்கிறது... அதையெல்லாம் மறந்த மாதிரி என்ன ஒரு அகங்கார பேச்சு பார்த்தாயா? இதற்குத்தான் நாம் இவர் நம்மை படங்கள் எடுக்கும் போது ஒத்துழைக்காமல் இருக்க வேண்டுமென்றேன். கேட்டீர்களா.. ?"  என்றபடி தன் சகாக்களுடன் என் காதில் படும்படி இரகசியமாக பேசின. 

" ஆமாம்... உங்களால்தான், உங்கள் புண்ணியத்தால்தான் ஏதோ கிறுக்கி தள்ளுகிறேன்.. அதற்கென்ன இப்போது...? அதற்காக.... "

" இல்லையில்லை... இந்த மாதிரி எங்களை சிறை வைத்துக் கொண்டு இருப்பதை விட நாங்கள் உருவாகிய விதத்தை வெளிக்காட்டினால், உங்களுக்கும் கொஞ்சம் பேரும்...புக.... ." மற்ற சகாக்கள் பூரிக்கு பரிந்து முன் வரும் முன் இடைமறித்தேன்.. 

" பேரும் புகழுமா. .? இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுக்காலாம்'னு பார்க்கறீங்களா. . ? என நான் கேலியாக கேட்டவுடன், 

"புகழ்ச்சிகளா? அந்த ஆசைகள் வேறு இருக்கிறதா என்ன? இந்த மாதிரியான டயலாக்கெல்லாம் நாங்கள் எவ்வளவு கேட்டு பார்த்தாச்சு தெரியுமா? ஏதோ... எங்கள் சாக்கு வைத்து உங்களுக்கும் அது கிடைக்குமா என யோசிக்கிறோம். அது போகட்டும்.... இப்போ எங்களுக்கு வேண்டும் சுதந்திர காற்று... இல்லாவிட்டால் எங்கள் சங்கத்தில் முடிவெடுத்து இனி நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு சிக்காத வகையில் என்ன செய்யலாம் என ஆலோசிப்போம்..." அவைகள் பேச்சில்  இப்போது பாரதியின் கனத்த  காட்டம் அதிகமாக தெரிந்தது. 

" சங்கமா? அப்படி வேறு வந்தாச்சா? சரி.. சரி.. நாம் பகை மறந்து சமாதானமாகி போவோம்...! என் மன/உடல் உபாதைகளில் என்னால் இதுவரை உங்களை கண்டுக்காமல் இருந்து விட்டேன்... அது என்னவென்றால், என நான் பச்சைக் கொடி காட்டி "பாக்யராஜ் பாணியில் என் சோக கதையை கேளு தாய்க்குலமே... ."  என நான் ஆரம்பிப்பதற்குள்," அடாடா.. நிறுத்து...!! யாருக்கு வேண்டும் உன் சோகக் கதைகள்...? அந்த நேரத்தில் சீக்கிரம் எங்களை அலங்கரிக்கும் வேலையை ஆரம்பி..ம்ம்ம்." என மிரட்டலான குரலில் கட்டளையிட்டபடி வரிசையில் வந்தன படங்கள். 

வேறு வழி...? நான் மாட்டிக் கொண்டதைப் போன்று நீங்களும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.. என உள் மனசு சிந்திப்பதற்குள் கை தட்டச்சில் வார்த்தைகளை பதிய ஆரம்பித்து விட்டன. என்றேனும் மனசு சொல்வதை  நாம் கேட்டால்தானே ... :) ஆனாலும், ஒரு சந்தோஷம். ( இது நமக்கு மட்டுந்தான்.. ஹா.ஹா.ஹா ) இரண்டுமே அனைவருக்குமே தெரிந்த ரெசிபிதானே என்று படங்களின் விவரணைகளை வார்த்தைகளை கொண்டு அலங்கரிக்கவில்லை. படங்களை மட்டும் கோர்வையாக்கி  தந்திருக்கிறேன். (அந்தக்கால படம் பார்த்து புரிந்து கொள்வது போல..புரிந்து கொள்ள வேண்டும்  .. 😇😇.. ) என்ன....! இதில் இந்தப் படங்களுக்குதான் இன்னமும் கோபங்கள் அதிகரித்திருக்கும்.... அதையும் (நாம்தான்) நீங்களும் என்னுடன் சேர்ந்து அதற்கு  ஆதரவான கருத்துக்களை 👏👏 தந்து  சமாதானமாக்க வேண்டும்.  எனக்காக செய்வீர்களா.. ?. 🙏. 

பி. கு  .  இந்த பதிவை எப்போதோ எ. பியில் வல்லி சகோதரி பதிவை ரசித்ததும் எழுதி விட்டேன். ஆனால் என் பேத்திக்கு தீடிரென உடல் நிலை சரியில்லாமல் போனதினால், வெளியிட முடியவில்லை. இப்போது அவள் உங்களைனவரின்  அக்கறைபான ஆசிர்வாதங்களில் நலமாகி வருகிறாள். நன்றி. இதைப் படிக்கும் அன்பான உங்களனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும். 🙏. 

நன்றியுடன் 
உங்கள் சகோதரி 
கமலா ஹரிஹரன். 

36 comments:

 1. பூரியுடன் கோஸ் கூட்டா?

  அதுவும் நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவரிடமிருந்தா?

  அப்புறம் ஏன் பூரி குதிக்காது (கோபத்தில்)

  உடனே மஹாளய பக்ஷம் என்று சமாதானம் சொல்ல வந்துவிடுவாரோ?

  என்னவோ... மசால் இல்லாத பூரி, பொட்டு வைத்துக்கொள்ளாத பெண் போன்றுதான்... நெற்றி வெறுமையாகத் தெரிவதுபோல, பூரி சாப்பிட்ட ருசியே இருக்காது.

  இந்த ஊரில் சாஹூ என்று ஒன்றைத் தொட்டுக்கொள்ளத் தருகிறார்கள். அந்தப் பக்கமே நான் செல்லமாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் உடனடி வருகை கண்டு கண்டிப்பாக பூரியும் மனம் பூரித்திருக்கும்.:)

   /அப்புறம் ஏன் பூரி குதிக்காது (கோபத்தில்)

   உடனே மஹாளய என்று சமாதானம் சொல்ல வந்துவிடுவாரோ/

   ஹா.ஹா.ஹா. அதேதான். எப்படி கண்டு பிடித்தீர்கள்.? இந்த மஹாளயபக்ஷ ஆரம்பத்தில்தான் இந்த கூட்டுத் தயாரிப்பு. இதை என்னுடன் இந்த பூரிகளும் வந்து சொல்லும். ஆனால் சுடச்சுட சாப்பிடும் போது நன்றாகத்தான் இருந்தது. எப்போதும் வெங்காயம், உருளை, மசாலுக்கு இது ஒரு மாறுபாடாக இருந்தது. ஒரு வித்தியாசத்திற்கு நீங்களும் செய்து பாருங்களேன். இப்போது நாகரீகம் கருதி சில பெண்களும் ஸ்டிக்கர் பொட்டுக்களை கூட விரும்புவதில்லை நாங்கள் அழகில்லையா என வாதத்திற்கு வந்து விடுவார்கள். ஹா. ஹா.

   /இந்த ஊரில் சாஹூ என்று ஒன்றைத் தொட்டுக்கொள்ளத் தருகிறார்கள். அந்தப் பக்கமே நான் செல்லமாட்டேன்/

   ஆமாம்.. நானும் சாப்பிட்டு இருக்கிறேன். பெங்களூர் கத்திரிக்காய்,(சவ்சவ்) போட்டு, சமயத்தில் இந்த மாதிரி சப்பென்ற காப்களுடன் உருளை, வெங்காயமும் சேர்த்து செட் தோசையுடன் உலா வரும். ஆனால் கொஞ்ச காரம் அதிகம் விரும்புகிறவர்களுக்கு அது பிடிக்காது. எப்போதுமே பூரிக்கு சரியான ஜோடி உருளை வெங்காய மாசாலாதான். என்ன செய்வது? இந்த தடவை பூரியே ஒரு மாறுதலுக்கு சம்மதித்து விட்டது.

   தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. //"நீண்ட நாட்கள் கழித்து எங்களை பார்க்க மறுபடி வந்திருக்கிறாய்.... இன்று எங்களை வெளியே கை கோர்த்தபடி உலாவ விடுவாய் அல்லவா?" அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் இந்த மகிழ்ச்சி... . "என்றது கோரஸாக.//

  அவைகளுக்கு மகிழ்ச்சி கொடுத்து விட்டீர்கள்.
  அருமை. வருகிறேன் முழுமையாக படித்து விட்டு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்... அவைகளுக்கு மகிழ்ச்சியை தந்து விட்டேன். உங்களது பதில்களும் அவைகளுக்கு கண்டிப்பாக மகிழ்வை தந்திருக்கும். பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி சகோதரி. உங்களது ஊக்கம் அளிக்கும் கருத்துரைகள் எனக்கும் மிகுந்த மகிழ்வை தருகிறது.

   உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. //வேறு வழி...? நான் மாட்டிக் கொண்டதைப் போன்று நீங்களும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.//
  உங்கள் கற்பனை உரையாடலில் தன்னை மறந்து மாட்டிக் கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /உங்கள் கற்பனை உரையாடலில் தன்னை மறந்து மாட்டிக் கொண்டோம்./

   ஹா.ஹா.ஹா. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் கற்பனை என்கிறீர்கள். ஆனால், எப்படியோ அசட்டுத்தனமாக என் மனதில் தோன்றுபவைகளை எழுத்தில் கோர்த்து கொண்டு வரும் என் பதிவுகளையும் ரசித்துப் படிக்கும் உங்கள் பெருந்தன்மையான அன்புள்ளங்களில் நானும் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த அன்பு நம்மிடையே என்றும் மாறாதிருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். இதுதான் என் எழுத்துக்கு என்றுமே உரம், பலமென நம்புகிறேன். மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. படம் பார்த்து கதை சொல் என்பது போல உங்கள் இனிய குரலில் செய்முறையை சொல்லாமல் இனிய இசையை போட்டு படம் காட்டி விட்டீர்கள்.
  மென்மையான பூரி அழகு. பூரிக்கூட்டு அருமை.
  வட நாட்டில் எல்லா காயிலும் இது போல கூட்டு செய்து சப்பாத்தியுடம் தொட்டுக் கொள்வார்கள்.

  சொல்லிய விதம் , காணொளிகள் அருமை.

  பேத்தி நலமாகி விட்டது கேட்டு மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள் பேத்திக்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இனிய குரலா? ஹா. ஹா. அது என்னிடம் இருந்தால் அல்லவா? அந்த இனிய இசையின் காரணத்தினால்தான் அவைகளே (படங்கள்) சச்சரவை மறந்து மெளனமாகி விட்டதென நினைக்கிறேன். என் குரலில் விளக்கம் சொல்லி போட்டிருந்தால் உண்மையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் அத்தனையும் வெளிநடப்பு செய்திருக்கும்.ஹா.ஹா.

   பதிவு, மற்றும் காணொளி படங்கள், அனைத்தையும் ரசித்து கருத்துகள் இட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   பேத்தி நலமடைந்து விட்டாள் என நீங்கள் மகிழ்ந்து, அவளுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்துகள் அவளை என்றும் நலமுடன் வாழ வைக்கும். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. கமலாக்கா பூரி என்றதுமே உடனே எனக்கு திருநெல்வேலி பூரி மசால் அதுதான் நினைவுக்கு வரும். அந்த மசால் போல எந்த மசாலும் வராது. அந்தச் சுவை தனிதான். இல்லையா?

  என்றாலும் நம் வீட்டிலும் பூரிக்கு இப்படிச் சில கூட்டுகள் செய்வது உண்டுதான்.

  எல்லாம் விட உங்கள் கற்பனை சிறகு விரிந்து பறந்து அதுங்களையும் பறக்க விட்டுவிட்டது பாருங்கள்!!!! ரசித்தேன் சிறவு விரித்துப் பறந்த உங்கள் கற்பனையை...ரொம்ப வளமான கற்பனை கமலாக்கா!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /கமலாக்கா பூரி என்றதுமே உடனே எனக்கு திருநெல்வேலி பூரி மசால் அதுதான் நினைவுக்கு வரும். அந்த மசால் போல எந்த மசாலும் வராது. அந்தச் சுவை தனிதான். இல்லையா? /

   ஆமாம்... அதை மறக்க முடியுமா? பிறந்த வீட்டில் திருமணத்திற்கு முன்பு இருந்த போது ஒரிரு தடவைகள் பூரி மசாலா சாப்பிடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. வீட்டில் அப்போதெல்லாம் அநாவசியமாக உணவகங்களில் சாப்பிடும் பழக்கமில்லை. (அம்மா,அப்பா, பாட்டி மடி,ஆசாரம்.) அந்த வாசனை இன்னமும் நினைவில் உள்ளது. திருமணமான பின்னும் தி.லிக்கு வரும் போது அவ்வளவாக ஹோட்டல்களுக்கு சென்றதில்லை. ஏனென்றால், கணவருக்கு ஹோட்டல் உணவுகள் அவ்வளவாக பிடிக்காது.:)

   நம் வீட்டிலும், பூரிக்கு உ.கி வெங்காயம் மசாலா செய்து பண்ணுவோம். ஆனால் அந்த சுவை (தி.லி.) வராது. அதைத் தவிர (உ.கி மசாலா) அதற்கு (பூரிக்கு) இணையான ஜோடி இல்லை என்ற அபிப்பிராயம் பெரும்பான்மையாக எல்லோருக்கும் உண்டு. சில சமயங்களில் இப்படியான கூட்டுகளும் அதனுடன் கூட்டு சேரும்.

   நீங்கள் பதிவை ரசித்து படித்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி. உங்கள் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவளா எனத் தெரியவில்லையெனினும், மனதுக்கு மகிழ்வாக உள்ளது. மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. கமலாக்கா நல்ல காலம் பறக்கத் தொடங்கியதும் உடனே உங்கல் கற்பனையையும் பறக்க விட்டுட்டீங்க...என்னைப் போல அதைச் சிறையில் பூட்டிப் போட்டு அடுத்து அப்ப விரிக்குமோன்னு தெரியாம முழி பிதுங்கி நிற்காம ஹாஹாஹாஹா

  என் டாக்குமென்ட்ஸ் எத்தனை இருக்கு தெரியுமோ கணினியில் ஒன்னும் முடிவு பெறாமல்..

  பேத்தி நலம் பெற்று வருவது மகிழ்ச்சி கமலாக்க பாருங்க அந்த மகிழ்ச்சிதான் பறக்க விட்டிருக்கு!!!

  பூரியும் கூட்டும் நீங்களே குரல் பதிவு செய்திருக்கலாமோ? அடுத்த முறை அப்படிச் செய்ங்க் கமலாக்கா...எழுத நேரம் இல்லைனா அப்படியும் போடலாமே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /கமலாக்கா நல்ல காலம் பறக்கத் தொடங்கியதும் உடனே உங்கல் கற்பனையையும் பறக்க விட்டுட்டீங்க...என்னைப் போல அதைச் சிறையில் பூட்டிப் போட்டு அடுத்து அப்ப விரிக்குமோன்னு தெரியாம முழி பிதுங்கி நிற்காம ஹாஹாஹாஹா

   என் டாக்குமென்ட்ஸ் எத்தனை இருக்கு தெரியுமோ கணினியில் ஒன்னும் முடிவு பெறாமல்../

   உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி. ஆனால், இது ஒன்றைதான் நானும் விடுவித்திருக்கிறேன். நிறைய சமையல் போட்டோக்கள் நேரம் கிடைக்கும் போது எடுத்து வைத்துள்ளேன். எழுததான் நேரமில்லாமல் அவைகள் அமைதியாக சிறைப்பட்டுள்ளன. அதைப் போல் சில கதைகளும், முடிவை தேடியபடி சோர்வாக அமர்ந்திருக்கின்றன. (அதன் முடிவை முடிக்க முடியாமல் நானும் தேடியபடிதான் உள்ளேன் என்பது அவைகள் அறியாத ரகசியம். ஹா.ஹா.ஹா.) நீங்கள் ஒவ்வொரு கதைகளும், நன்றாக எழுதுகிறீர்கள். விரைவில் நீங்களும், நீங்கள் எழுதியவற்றை முடித்து அதன் சிறைவாசத்தை முடித்து வைக்க எனது வாழ்த்துகள்.

   /பூரியும் கூட்டும் நீங்களே குரல் பதிவு செய்திருக்கலாமோ? அடுத்த முறை அப்படிச் செய்ங்க் /

   சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நான் அளித்த பதிலை படித்துப் பாருங்கள்.இருப்பினும்,உங்கள் ஆலோசனைகளுக்கு என் நன்றிகள். முயற்சிக்கிறேன்.

   என் பேத்தி நலமடைந்து வருவதற்கு நீங்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. பதிவுக்கு தாங்கள் தந்த அன்பான கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. அழகாக உப்பி வந்திருக்கும் பூரியை கோஸ் கூட்டுடன் வீண் செய்வதா ஏந்துகிற எண்ணம் வருகிறதே...  கோஸ் கூட்டை வேறொரு சந்தர்ப்பத்துக்கு வைத்துக் கொண்டு பூரியை சும்மாவானும் சாப்பிட்டு விடலாம்!  ஆமாம், எப்படி பூரி இப்படி அழகாக  உப்பி வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /உப்பி வந்திருக்கும் பூரியை கோஸ் கூட்டுடன் வீண் செய்வதா ஏந்துகிற எண்ணம் வருகிறதே... கோஸ் கூட்டை வேறொரு சந்தர்ப்பத்துக்கு வைத்துக் கொண்டு பூரியை சும்மாவானும் சாப்பிட்டு விடலாம்!/

   ஹா.ஹா.ஹா. அனைவரின் விருப்பமும் இதுதான். பூரியின் ஜோடியை பிரிக்க மனம் வரவில்லை. அன்றைய தினம் அந்த கோஸ் கூட்டு தான் வீட்டில் மதியத்திற்கு ஸைடிஸ், சகோதரர் நெல்லைத் தமிழர் குறிப்பிட்டது போல் மஹாளயம் வேறு. வேறு வழியில்லை. பூரி கூட்டுடன் கூட்டுச் சேர ஒத்துக் கொண்டது. பிற நேரங்களில் இந்த மாதிரி கூட்டுடன் வெங்காயம் நறுக்கி வதக்கிச்சேர்த்தும் பண்ணலாம். அப்போது பூரிக்கு ஒரு மனச்சமாதானமும் கிடைக்கும்.

   பூரி எப்போதுமே இப்படி உப்பி வரும். முன்பெல்லாம் (சென்னை, மதுரையில் இருக்கும் வரை) கோதுமை வாங்கி சுத்தம் செய்து மிஷினில் அரைத்து வைத்து உபயோகித்து கொண்டிருந்தேன். இப்போது அதெல்லாம் முடியவில்லை. பாக்கெட் மாவுதான் (அதன் ஆசிர்வாதங்களுடன்) உபயோகப் படுத்துகிறேன். இதுவும் நன்றாக உள்ளது. பூரி உப்பி வந்த உடனே படங்கள் எடுத்து விட்டேன். வெறும் மாவுடன் உப்பு, வேண்டிய நீர் கலந்து சற்று கெட்டியாக தயார் பண்ணியவுடனேயே (சற்றேனும் ஊற வைக்காமல்) பூரி செய்து விட்டால் இப்படி உப்பி வரும். (மாவு ஊறி விட்டால் எண்ணெய் அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும்.) மற்றும் அதன் தன்மை எப்போதுமே நிரந்தரமல்ல. (மழைத் துளியில் தோன்றும் நீர்க்குமிழி போலத்தான்...) ஆனால் சாப்பிடும் இறுதி வரை மிருதுவாக இருக்கும்.

   அன்புடன் வந்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. பூரியும், கோஸும் பேசி சண்டை போடுவது தத்ரூபமாக இருக்கிறது!  சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரரே. எப்போதுமே உங்களது ஊக்கம் தரும் கருத்துரைகள் என் ஆக்கத்திற்கு உரமாக இருந்து வருகிறது. மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. படங்களோடு கூடிய காணொளி பிரமாதம்..

  பதிவு சுவாரஸ்யமாக இருந்தது சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   காணொளி கண்டு ரசித்ததோடு, பதிவைவும் ரசித்துப் படித்து சுவாரஸ்யமாக இருந்தது என்ற பாராட்டுக்கள் தந்தமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. கோஸ் கூட்டோடு பூரி எப்படி இருக்குமோ? உங்கள் விவரணை பிரமாதம்! நல்ல கற்பனை வளத்தோடு மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். ருசித்தேன்,சாரி ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /கோஸ் கூட்டோடு பூரி எப்படி இருக்குமோ? /

   அன்றைய தினம் உண்மையிலேயே நன்றாக இருந்தது சகோதரி. பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. நல்ல கற்பனை. ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

  உங்கள் பெயர்த்தி பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்துப்படித்து தந்த உங்களது அன்பான கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.மிக்க நன்றி.

   என் பேத்தி பூரண நலமடைய தாங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்போது நலமடைந்து வருகிறாள்.அவளுடன்தான் பகல் பொழுது முழுவதும் சரியாக உள்ளது. அதனால் உங்கள் கருத்துகளுக்கு பதிலளிக்க தாமதமாகி விட்டது. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. அருமை...

  காணொளி பின்னணி இசை மிரட்டுகிறது...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து தந்த கருத்துகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   /காணொளி பின்னணி இசை மிரட்டுகிறது...!/

   ஹா.ஹா.ஹா படங்கள் என்னை மிரட்டின... இசை உங்களை மிரட்டியதுவா..? நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. நீங்கள் நலமா? பெயர்த்தி பூரண நலமடையப் பிரார்த்திக்கிறேன்.

  வித்தியாசமான நடையில் பதிவு..மிகவும் ரசித்தேன்.. வாங்க வாங்க படங்களே..கமலாம்மா எழுத்தில்லாமல் எப்படி அழகடைவீர்கள்? :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   நான் நலம். நீங்கள் நலமாக உள்ளீர்களா? என் பேத்தியும் இப்போது நலமடைந்து விட்டாள். உங்களைப் பார்த்து நாட்களாகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்.?

   பதிவுக்கு வந்து ரசித்துப் படித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நிறைந்த கருத்துரைகளால்தான் நான் வளர்கின்றேன்.தொடர்ந்து வந்து எனக்கு பலம் அளியுங்கள். தங்கள் கருத்துரை கண்டு மிக்க சந்தோஷமடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. அன்பின் கமலாமா,
  இந்தப் பதிவைக் காணாமல் விட்டு விட்டேனே.
  ரொம்ப மன்னிக்கணும். என்ன அபாரமான வீடியோ!!!
  இந்த யுக்தி எல்லாம் எனக்குத் தெரியாது அம்மா.


  அழகா அருமையா பூரிகளும் செய்முறைகளும் உங்களுடன் பேசுவது
  எழுதி இருக்கிறீர்கள்.
  பல்லுயிர் ஓம்பிப் பல்கி வாழ்க வேண்டும் என்பது
  உங்கள் பதிவில் சிறப்புடன் அமைந்து இருக்கிறது.

  நான் உங்கள் எழுத்தை நிறைய தவற விட்டிருக்கிறேன்.

  இத்தனை அன்பும் அருமையும் உங்கள் வாழ்வையும்
  குழந்தைகள் வாழ்வையும் சிறக்கச் செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   அடாடா.. எதற்கு சகோதரி.. மன்னிப்பெல்லாம்...! நீங்கள் வந்து பதிவை ரசித்துப் படித்ததே எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. நான்தான் தாமதமாக பதில் தருவதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

   நீங்கள் வந்து பதிவை படிப்பீர்கள் என்ற ஆழமான நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதன்படி வந்து ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்த வீடியோ யுக்தியும் குழந்தைகளிடமிருந்து கற்றுத்தான் எனக்கும் வந்துள்ளது. உங்களிடமிருந்தும் ஏராளமான திறமைகளை கற்று வருகிறேன். ஆனாலும், ரத்தின சுருக்கமாக பதிவுகளும், எல்லோரின் பதிவுகளுக்கும், ஆழ்ந்த கருத்துகளுமாக வழங்கும் உங்களின் திறமையை மட்டும் என்னால் கற்க இயலவில்லை.

   உங்கள் அன்பான பாராட்டுரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமுவந்த நன்றிகள் சகோதரி. உங்கள் ஊக்கம் மிகுந்த ஆதரவுகள் எனக்கு எப்போதும் நீடிக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல்
  போவதேன்:)
  பூரியும் ,கோஸ் கூட்டும் ஏகத்துக்கு நன்றாக வந்திருக்கிறது.
  மிளகு சீரகம் மற்றும் பருப்பு, தேங்காய் என்று அமர்க்களமாக ஒரு
  நல்ல கூட்டணி.

  பிரமாதமாக் இருந்திருக்கும்!!!
  பூரி உப்பின கையோடு சாப்பிட ஆசையாக இருக்கிறது.
  அன்பின் கீதா ரங்கன் கண்டால் பத்து பின்னூட்டம் இட்டிருப்பார்.

  நேரில் வந்து உங்கள் அனைவரின் கைவண்ணங்களையும்
  ருசித்து மகிழ ஆசை.
  என்றும் நலமுடன் இருங்கள்.
  அருமையான பகிர்வுக்கு மிக நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல்
   போவதேன்:)
   பூரியும் ,கோஸ் கூட்டும் ஏகத்துக்கு நன்றாக வந்திருக்கிறது.
   மிளகு சீரகம் மற்றும் பருப்பு, தேங்காய் என்று அமர்க்களமாக ஒரு
   நல்ல கூட்டணி./

   உங்கள் ரசனையான கருத்துகளை ரசித்தேன்.உங்கள் பாராட்டான வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

   /நேரில் வந்து உங்கள் அனைவரின் கைவண்ணங்களையும்
   ருசித்து மகிழ ஆசை/

   கண்டிப்பாக வாருங்கள் சகோதரி. உங்கள் வரவை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களைப் போல் நட்புறவுகள் நானும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. ஓ.. நான் தான் கடைசிப் பந்தியோ!..

  தாமதம் ஆகி விட்டது.. ஆனாலும் சூடும் சுவையும் மாறாத பூரி.. அருமை.. அருமை..

  நவீன சமையலில் கோஸ் கூட்டுடன் கும்மியடிக்கிறது பூரி..

  உ.கி.மசாலாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் பூரிக்கு இருக்கவே இருக்கிறது சாத்துப்படி!...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாமதமெல்லாம் இல்லை சகோதரரே. உங்கள் வேலைகளின் நடுவில் நீங்கள் வந்து பதிவை ரசித்து கருத்துக்கள் தந்திருப்பதே எனக்கு மகிழ்வாக உள்ளது.

   /நவீன சமையலில் கோஸ் கூட்டுடன் கும்மியடிக்கிறது பூரி..

   உ.கி.மசாலாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் பூரிக்கு இருக்கவே இருக்கிறது சாத்துப்படி!.../

   ஹா.ஹா.ஹா. இத்தனை நாள் உ. கி மசாலாவுடன் இணக்கமாக இருந்த பூரி சாதுர்யமாக எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளும். ஹா.ஹா. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 17. அட? இந்தப் பதிவு வந்ததே தெரியலை எனக்கு. இன்னிக்குத் தான் பார்க்கிறேன். என்ன தான் சண்டை போட்டுக் கொண்டாலும் வேறு வழியில்லாமல் கோஸ் கூட்டைப் பூரி ஆதரித்து விட்டது போலும். ஆனால் கோஸ் கூட்டு இந்த மாதிரிச் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள விரத நாட்கள்/அமாவாசை நாட்களின் நானும் பண்ணி இருக்கேன். பூரிக்குப் பண்ணியதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அடாடா.. அன்றைய தினம் நீங்கள் பதிவை பார்க்கவேயில்லையா? நீங்கள் ஏனோ வரவில்லையே என நினைத்துக் கொண்டேயிருந்தேன்.. இப்போது வந்து கருத்துக்கள் தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   /வேறு வழியில்லாமல் கோஸ் கூட்டைப் பூரி ஆதரித்து விட்டது போலும்./

   ஆமாம்.. ஏனெனில் வேறு காய்கள் (உருளை உட்பட) அன்றைய தினம் வீட்டில் இல்லை. சரியென பூரியும் சம்மதித்து விட்டது.:) மற்றபடி பூரிக்கு எப்போதும் உருளைகிழங்குதான். சப்பாத்திக்கு வேண்டுமானால் இப்படி ஏதாவது மாறும். தங்கள் கருத்துகளையும் பதிந்ததற்கு என் நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 18. விரதம்/அமாவாசை போன்ற நாட்களில் வெறும் உ.கியை வைத்தேத் தக்காளி சேர்த்தோ சேர்க்காமலோ மசாலா(கரம் மசாலா) இல்லாமல் மி.பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கூட்டுப் பண்ணலாம், எங்க வீட்டில் அதுக்கு நிறையவே வரவேற்பு இருக்கும். மதுரா உ.கி. கூட்டு என்பார்கள். வெங்காயம்/பூண்டு இல்லாமல் பண்ணுவது. எங்க மாமியார் இருந்தவரை அவங்களுக்குப் பூரிக்கு இதைத் தான் தொட்டுக்கப் பண்ணிக் கொடுப்பேன்.

  ReplyDelete
 19. வணக்கம் சகோதரி

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  /விரதம்/அமாவாசை போன்ற நாட்களில் வெறும் உ.கியை வைத்தேத் தக்காளி சேர்த்தோ சேர்க்காமலோ மசாலா(கரம் மசாலா) இல்லாமல் மி.பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கூட்டுப் பண்ணலாம்/

  ஆமாம்... அப்படியும் பண்ணலாம். நான் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுவேன். ஆனால் அந்த வெங்காயம் சேர்த்த ருசிக்குத்தான் குழந்தைகள் விருப்பப்படுவார்கள்.. அவர்களுக்காக வெங்காயம் சேர்த்துதான் பண்ணுவேன். இல்லை, வெறும் தக்காளி பாசிப்பருப்பு போட்டு கூட்டு கூட ஓ.கே என்பார்கள். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு வெங்காயம் சேர்க்காமல் தனியே இப்படித்தான் செய்து தர வேண்டும். தங்களது அன்பான கருத்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete