Monday, October 11, 2021

நடப்பதெல்லாம் நலமாக வேண்டும்.

 வணக்கம் சகோதர சகோதரிகளே..

அனைவருக்கும் நவராத்திரி  நல்வாழ்த்துக்கள். அனைவரும் இந்நன்நாட்களில் அம்பிகையை வழிபட்டு, நலமாக வாழவும், உலகம் நன்மைகள் பெறவும்,  அந்த மகிஷாசுரமர்த்தினியை, மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

தொடர்ந்து ஒரு வார காலமாக என்னால் வலையுலகிற்கு வர இயலாமல் போய் விட்டது.  சென்ற ஞாயறன்று இரவு மணி ஏழு அளவில் என் பேத்தி( மகள் வயிற்றுப்பேத்தி)  மகன் வயிற்று பேரன் பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  கட்டிலிலிருந்து வாட்ரோப் பக்கமாக கீழே விழுந்து விட்டாள். விழுந்ததில் வாயெல்லாம் ரத்தமாக இருந்ததை கண்ட நாங்கள் எங்கு அடி எனத் தெரியாமல் அனைவரும் பதறி விட்டோம். உடன் மகளும், மகனும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று ஞாயறாகையால்  உடனடியாக சரியான மருத்துவர்களை சந்திக்க இயலவில்லை. காயத்தை சுத்தப்படுத்தி வெறும் பிளாஸ்டர் போட்டு மறுநாள் காலை வரச்சொல்லி அனுப்பி விட்டார்கள். அன்று இரவு 12மணி வரை இங்கு பேய் மழை வேறு. . சென்றவர்கள் திரும்பி வர இயலாமல் ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. மறுநாள் காலை அவர்கள் வரச் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட டாக்டரை சென்று சந்தித்ததில், வாயின் மோவாய்கட்டைக்கு கீழ் உதட்டின் உட்பகுதியில், நல்ல அடி (பற்கள் குத்தி) என கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மூன்று தையல் போட்டு மருந்து கொடுத்து  கொடுக்கச் சொல்லி அனுப்பினார்கள். நான்கு பற்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அது இனி விழுந்து முளைக்கும் பற்கள் என்பதால் அவ்வளவாக பெரிய பாதிப்பு ஏற்படாது என்றார்கள். மோவாய்கட்டை கீழ் உதட்டின் வெளிப்பக்கமும் காயம்.. அதை இரண்டுடொரு நாள் கழித்து பார்த்து பிறகு  வேண்டுமானால் தையல் போடலாம் என்று சொல்லியும் அனுப்பினார்கள். 

எனக்கு ஒரு வார காலமாக ஒரே டென்ஷன். , சிறு வயதில் நானும், சரி... எங்கள் குழந்தைகளும் சரி, கீழே விழுந்து எழுந்து காயங்களை சந்தித்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், இப்போது என்னால் இதையெல்லாம் சந்திக்க உடம்பிலும், மனதிலும் கொஞ்சமேனும் திராணி இல்லை. கண்குத்தி பாம்பாக குழந்தைகளை கவனித்து வரும் போதே இப்படி விதி அந்த சமயத்தில் கண்களை கட்டி விட்டு வேடிக்கை பார்த்து விட்டதே  என ஒரே கவலை.. வருத்தம். 

6 வயது குழந்தை அந்த தையல்வலிகள், பல் வலிகள் என பல வலிகளை  எப்படி தாங்கினாளோ என நினைத்து நினைத்து மனம் துவண்டு விட்டது. நான்கு நாட்கள் அவள் அன்ன ஆகாரம் எதுவும் சாப்பிட முடியாமல் அவஸ்தைபட்டு விட்டாள். சாதாரண நாட்களே அவள் உணவை அவ்வளவாக  விரும்பி சாப்பிட மாட்டாள். மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பாள். 

அதன் பின் சென்ற வியாழன்று அவர்கள் கூறியபடி மருத்துவரிடம் சென்ற போது வெளிப்புற காயம் ஆறிவருகிறது எனவும், தானாகவே மூடிக்கொண்டு விடும் எனவும் சொன்னதில், ஒரு ஆறுதல் வந்தது. தையல் ஏதும் தேவையில்லை என்றதும், ஒரு பதற்றமும் நீங்கியது. இப்போது இரண்டு நாட்களாக குழந்தை நலமாகி வருகிறாள். ஏதோ சாப்பிடுகிறாள்." தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று" என்பதை போல குழந்தை நல்லபடியாக உடல்நலம் தேறி வருவது கண்டு இப்போது நிம்மதி வருகிறது. 

அதனால்தான் என்னால் வலைத்தளத்திற்கு வர முடியவில்லை. நான் வராத காரணத்தை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில், இதை என் தளத்தில் எழுதி இருக்கிறேன். கடவுளின் அன்பான அக்கறையினாலும், உங்கள் அனைவரின் நல்ல நட்புறவுகளின் அன்பினாலும், அவள் இனிவரும் காலங்களில் ஆயுள், ஆரோக்கியத்தோடு, நோய் நொடி  ஏதுமின்றி திடகாத்திரமாக வளர்ந்து நல்ல வாழ்க்கையை வாழ வேண்டுமென இந்த நவராத்திரியில் அம்பிகையை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் அனைவரின் பதிவுகளுக்கும் இயல்பாக வருகிறேன். அனைவருக்கும் என்  அன்பான  நன்றிகள். 🙏.

 நன்றியுடன், 

உங்கள் சகோதரி

கமலா ஹரிஹரன். 

22 comments:

 1. அன்பின் சகோதரி கமலா,
  இது என்ன இப்படி விசாரம் வந்தது அம்மா.
  குழந்தைகள் அடி பட்டுக் கொள்வது
  நடப்பதுதான். ஒரு பத்து வயது வரும் வரை
  அந்த ஓட்டமும் நீடிக்கும்.

  குழந்தை என்ன பாடு பட்டிருக்குமோ.
  அதைப் பார்த்து நீங்கள் என்ன பாடு பட்டீர்களோ. உங்கள் மகள்
  எப்படிப் பொறுமையாக இருந்தாரோ.
  கடவுள் நற்கருணையோடு
  குழந்தைக்கு மேற்கொண்டு சோதனை இல்லாமல்
  காப்பாற்றி இருக்கிறார்.

  குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும்
  கவனித்து இப்படி எத்தனையோ
  இருக்கிறதே அம்மா.
  நீங்கள் பத்திரமாக இருங்கள். எல்லாம் நலமாக
  நடக்கட்டும்.
  என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி. எப்படியோ சென்ற வாரம் குழந்தையோடு சேர்த்து அத்தனை வலிகளையும், நாங்களும் தாங்கிக் கொள்ள கடவுள் மன தைரியத்தை தந்து விட்டார். அவரின் கருணைக்கும் நான் எப்போதும் நன்றி தெரிவித்து கொண்டேயுள்ளேன். குழந்தை இப்போது நலமடைந்து வருகிறாள். மகளும் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்ப்பதால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பு எனக்கு திங்களிலிருந்து வெள்ளி வரை சரியாக இருக்கும். அதனால் உங்கள் அனைவருக்கும் பதிலளிக்க தாமதமாகிறது. இப்போதும் தாமதமாகி விட்டது. உங்களது அன்பான வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. அக்கா..  உங்கள் கவலை புரிந்தது.  நியாயமான கவலை.  குழந்தை எப்படி தாங்கினாளோ...  என் மகன் பதினெட்டு வயதில் பற்களின் அமைப்புக்காக முக அறுவை சிகிச்சை செய்து கொண்டு பட்ட கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை.  இவள் இன்னும் குழந்தை.  பாவம்.  இப்போது நலமாகி வருவது கேட்டு மகிழ்ச்சி.  சீக்கிரம் முற்றிலும் சரியாகப் பிரார்த்திக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

   உங்கள் மகனின் முக மருத்துவத்தின் போது நீங்களும் எப்படி துடித்துப் போயிருப்பீர்கள் என நானும் உணர்கிறேன். அதுதானே நம்மை போன்ற அனைவரின் மனதிலிருந்து குழந்தைகள் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அவர்களுக்கு ஒரு கஸ்டம் வந்தால் நம் மனம் அந்த நேரத்தில் எப்படியெல்லாம் வேதனை பட்டு விடுகிறது.

   இப்போது என் பேத்தி கடவுளின் அருளால் நலமாகி வருகிறாள்.உங்கள் ஆறுதலான வார்த்தைகளில் என் மனமும் மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. சின்னக் குழந்தைக்கு அடி பட்டு விட்டால் நமக்கு வரும் கவலை புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என நினைத்துதான் ஆறுதல் பட்டுக் கொள்கிறோம். சின்னக் குழந்தையாகையால் அன்றைய தினம் அவள் வேதனைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் போய் விட்டது. தற்சமயம் குழந்தை நலமாகி வருகிறாள். உங்கள் அன்பான, ஆறுதலான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. இந்த மட்டில் விட்டதேனு நினைக்கணும். வேறே என்ன சொல்வது! பாவம் குழந்தை! எப்படித்தான் தாங்கினாளோ! பொதுவாகவே வீட்டில் யாரேனும் ஒருவர் உடல் நலமில்லை என்றாலும் நம்மால் தாங்க முடியாது. அதிலும் குழந்தை வேறே! உங்கள் மகளுக்கும் இதைத் தாங்கிக்கும் சக்தியை ஆண்டவன் கொடுத்ததற்கு நன்றி. மேலே மேலே சோதனைகள் தாக்குகின்றன. அம்பிகை துணை இருந்து அருள் புரிவாள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   அவள் அடிபட்ட அன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் அவள் பட்ட கஸ்டங்களைப் பார்த்து நாங்கள் மிகவும் மனங்கலங்கி விட்டோம். என் மகளும் அன்று ரொம்பவே துவண்டு விட்டாள். அவளுடன்தான் குழந்தை இரண்டு நாளும் மருத்துமனையில் இருந்ததினால் அங்கு அவள்பட்ட வேதனைகளை கண்டு இவள் மனதும் வேதனையடைந்து போனது. என்ன செய்வது? வருவதை தாங்கிதானே ஆக வேண்டும். அந்த ஆண்டவன்தான் மன தைரியத்தை தந்தார். அம்பிகை துணையாக இருந்து அருள் புரிவார் என்று கூறிய உங்கள் அன்பான ஆசிர்வாதச் சொற்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து அவள் வாழ்வை வளமாக்க வேண்டும். உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும், ஆறுதலான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. நீங்க மெதுவா உங்க உடல் நலத்தையும் பார்த்துக் கொண்டு வாங்க. அவசரம் இல்லை. உங்கள் உடல் நலம் இப்போது பரவாயில்லையா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கால்வலிகள் முற்றிலும் குணமாகி உள்ளதா? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நான் இப்போது முன்பை விட நன்றாகி இருக்கிறேன். ஆனால் குழந்தை அடிபட்டவுடன் ஏற்பட்ட மனச்சோர்வுகள், ஒருவார காலமாக சரியான தூக்கமின்மை, வேலைகள் என இரண்டொரு நாட்களாக மிகவும் பலகீனமாக உணர்கிறேன். இதோ.. நேற்று அனைவருக்கும் பதிலளிக்கலாம் என ஆரம்பித்து, முடிக்க இயலவில்லை. உங்கள் அனைவரின் ஆறுதல்களிலும் சரியாகி விடும். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. விரைவாக நலம் பெற வேண்டுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்களது பிராத்தனைகள் என் பேத்திக்கு பக்கபலமாக இருந்து அவளை நோயின்றி பல்லாண்டு காலம் செழிப்பாக வாழ வைக்கும் என நம்புகிறேன். உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. குழந்தை விரைவில் நலம் பெற எமது பிரார்த்தனைகள்ள சகோ‌

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்களது அக்கறையான பிரார்த்தனைகள் குழந்தையை பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் திடமுடன் வாழ வைக்கும் என நம்புகிறேன். உங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ. அனைவருக்கும் பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. படிக்கும்பொழுதே மனம் பதறுகிறது. நம் குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் கூட எப்படியோ சமாளித்து விடுவோம். பேரக் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பதை தாங்குவது மிகவும் கடினம். குழந்தை உடல் நலம் விரைவில் சரியாக அம்பாளை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆமாம்.. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. நம் குழந்தைகளுக்கு உடல் நலமில்லாத பொழுதுகளில் சமாளித்து வந்தோம். ஏனென்றால் அப்போது மனதின் தெம்போடு உடலும் நல்ல ஆரோக்கியமாக இருந்தது. இப்போது உடல் நலம் அடிக்கடி தொந்தரவுகள் தருவதால், மனதிலும் சட்டென மனச்சோர்வுகள் உண்டாகி விடுகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை குறைந்து விடுகிறது.

   தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. உங்களது பிரார்த்தனைகளில் குழந்தை முற்றிலும் உடல் நலம் தேறி விடுவாள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. உங்களை காணோமே! என்று நினைத்தேன்,பேரக்குழந்தைகள் விடுமுறையில் இருப்பார்கள், உங்களுக்கு வேலை சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது நடந்தை படிக்கும் போது மனது வேதனை பட்டது.
  விரைவில் நலபெற வாழ்த்துக்கள்.


  //சிறு வயதில் நானும், சரி... எங்கள் குழந்தைகளும் சரி, கீழே விழுந்து எழுந்து காயங்களை சந்தித்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், இப்போது என்னால் இதையெல்லாம் சந்திக்க உடம்பிலும், மனதிலும் கொஞ்சமேனும் திராணி இல்லை//

  உண்மைதான். ஆனால், குழந்தைகளுக்கு என்றால் தாங்கும் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இறை யருளால் விரைவில் நலபெறுவாள் குழந்தை. தைரியமாக இருங்கள். மனதை தளரவிட்டால் நம்மால் செயல்பட முடியாது.

  நானும் அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறேன். விரைவில் எல்லாம் நலமாகும்.

  நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்வதால் விரைவில் நலபெறுவாள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   குழந்தைகள் விடுமுறையில் இருந்தாலும் நான் ஏதும் பதிவுகள் போடாவிடினும், அவ்வப்போது எல்லோரின் பதிவுகளுக்கு வந்து கருத்துக்கள் தருவேனே..! இந்த எதிர்பாராத சந்தர்ப்பம் என்னால், கைப்பேசியை கையில் எடுக்கக் கூட நேரமில்லாமல் செய்து விட்டது. குழந்தை அடிபட்டதை பார்த்து மனச்சங்கடமடைவது, அனைவருக்கும் உணவு தயாரிக்கும் வேலைகள், இரவில் தூக்கமின்மை என ஒருவார காலம் சோர்வுடன் வேறு எதையும் நினைக்க கூட பொழுதின்றி நகர்ந்து விட்டது. இப்போது, இரண்டொரு நாட்களாக குழந்தை நலமடைந்து அவள் பாட்டுக்கு படித்து, விளையாடி வருகிறதை பார்த்த பின்தான் மனதுக்கு கவலையில்லாமல் இருக்கிறது. உங்கள் அனைவரிடம் பகிர்ந்து கொண்டதும், நீங்கள் அனைவரும் ஆறுதலாக பதிலளித்தது மனதுக்கு நிம்மதியை தருகிறது. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் அன்பான பிரார்த்தனைகள் என் பேத்திக்கு வேண்டும் எனபதினால்தான் நானும் வலைத்தளத்திற்கு வராத இந்த காரணத்தை இங்கு தெரிவித்தேன். உங்கள் அனைவரது அன்பை கண்டு என் மனம் மிகவும் மகிழ்வடைகிறது. உங்கள் ஆறுதலான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. கமலாக்கா உங்களை என்னடா மீண்டும் காணவில்லையெ என்று நினைத்தேன்.

  குழந்தைகளுக்கு அடி படும் போது மனம் வேதனையுறும் தான்...

  அக்கா கவலை வேண்டாம். சரியாகிவிடும். சின்னக் குழந்தை வளரும் குழந்தை வேகமாகச் சரியாகிவிடும் அக்கா. இப்போது நலமாகிவருவது குறித்து மகிழ்ச்சி

  விரைவில் நலம் பெற்றுவிடுவாள். பாருங்க மற்றொன்று குணமாகி வந்து தையல் வேண்டாம் என்று சொல்லிருக்காங்க...எனவே சரியாகிவிடும்.

  நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

  விரைவில் நலம் பெறுவாள்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் அன்பான பாஸிடிவ் எண்ணங்கள் எனக்கு எப்போதுமே உற்சாகத்தை தரும் சகோதரி. வழக்கப்படி இப்போதும் உங்கள் கருத்துகள் மன மகிழ்ச்சியை தருகிறது.
   நன்றி மா..

   ஆமாம்.. உண்மைதான்.. சிறு குழந்தைகளுக்கு விரைவில் சரியாகி விடும். இரண்டாவது முறை மருத்துவரிடம் சென்ற போது வெளியிலிருந்தும் காயம் தானாக ஆறி வருகிறது தையல் ஏதும் தேவையில்லை என்ற போது ஒரு ஆறுதல் கிடைத்தது. நல்ல வேளை.. குழந்தை மற்றொரு வலிகளிலிருந்து தப்பித்தாள் என்ற மகிழ்ச்சி உண்டாக்கியது. கடவுளுக்கு நன்றி சொன்னோம்.

   உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி. உங்கள் அனைவரின் அக்கறையான ஆசிர்வாதங்கள் குழந்தையை இப்போது நலப்படுத்தி விட்டது. மேலும், அவள் பல்லாண்டு காலம் திடகாத்திரமாக வளர்ந்து நலமுடன் வளம் பெறவும் வழி வகுக்கும். மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. சகோதரி, உங்கள் பேத்தி விரைவில் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகள். நல்லகாலம் இதோடு விட்டதே என்று நம் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு எங்கேனும் அடிபட்டிருந்தால்?

  இறைவன் துணையிருப்பான். நலமே விளைந்திடும்.

  பிரார்த்திப்போம்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நலமா? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.?
   இங்கு குழந்தைக்கு பட்ட காயங்களை பார்த்து மனது மிகவும் கலக்கமடைந்து விட்டது. வாய்க்குள் பட்ட துளை கீழ் உதட்டின் வெளிவரை வந்தது கண்டு மிகவும் பயந்து விட்டோம். அந்த நிலைமையில் மனது கலங்கி விட்டது. இப்போது வெளி காயம் சேர்ந்து வருகிறது. குழந்தை இப்போது நல்லபடியாக நலமடைந்து வருகிறாள். உங்கள் அன்பான பிரார்த்தனைகளை கண்டு என் மனது இதமாக உள்ளது. அக்கறையுடன் தைரியமான கருத்துக்கள் தந்து எனக்கு மன சமாதானம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete