Friday, July 15, 2022

கீரை புராணம்.

கீரை வறுத்தரைத்த சாம்பார்.. 

மனிதர்களில் பல ரகங்கள் மாதிரி கீரையிலும்  பல ரகம்.  நான் திருமணமாகி சென்னை வந்த புதிதில், "அரைக்கிரை, முறைக்கிரை, சிரிக்கிரை" இந்த மாதிரி தெருவில்  ஒரு மாதிரி ராகத்தில் அழுத்தி கூவி கீரை விற்பார்கள். முதலில்  எதுவும் புரியவில்லை. பின் இந்த கீரை விற்கும் சொற்கள் குறித்த ஐயங்கள்  என் புகுந்த வீட்டு உறவுகள் மூலமாகத்தான் கொஞ்ச நாட்கள் கழித்து அது கீரை சம்பந்தப்பட்டது என புரிந்து கொண்டேன். 

காய் வாங்க வெளியில். செல்லும் போது, "என்னம்மா முளைக்கீரை எப்படிம்மா?" என்று கேட்கும் போது, தப்பி தவறி நாமும் "என்னம்மா முறைக்கீரை" என்று அவரை கிண்டலாக அழைப்பது போல், அவருக்கு தோன்றி விட்டால், அவர் "முறைப்பதை" முதலில் நாம்  சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த முறைப்பிலேயே அவர் சென்னை பாஷையில் ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்தில், ஏதோ ஒரு கீரையை சிரிக்காமல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். 

அதன் பின் நாடோடி தென்றலாக அங்கே இங்கே என்று வாழ்க்கை நகர்ந்ததில். கீரைகளும் ஆங்காங்கே தலைகாட்டியபடி பின் தொடர்ந்தேதான் வந்தபடி இருந்தது. இதில் என் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சாப்பிட பிடிக்காத விஷயங்களில் இந்த கீரையும் ஒன்று. 

கீரை பண்ணும் அன்றைய தினம் அவர்களுக்காக நிறைய காய்களை போட்டு சாம்பார், இல்லை, அவியல் மாதிரி  பண்ணி காய்களை உண்ணும்படி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஏதும் சாப்பிடாமல் இருப்பார்களே என அன்று வருத்தம் வரும். 

அதன் பின் அவர்கள் சற்று வளர்ந்த பிற்பாடு, அரைக் கீரையை உப்பிட்டு  வேக வைத்து மசித்து, கடுகு உ. ப, மி. வத்தல் தாளித்து, பெருங்காயத்துடன், பச்சை தேங்காய் எண்ணை ஒரு ஸ்பூன் விட்டு, அந்த கீரையுடன் கலந்த சாதம், 

 கீரை வெந்ததும் மசித்தவுடன் தேங்காய், சீரகம், மி. வத்தலுடன் அரைத்துச் சேர்த்து, செய்த கரைச்ச கூட்டு,

 கீரை வெந்து மசித்ததும்  புளி, கடுகு, வெந்தயம், பெ. காயம் தாளிப்பு சேர்த்த புளிக்கீரை,( புளிக்கீரையென்று ஒன்று  உண்டு. அதற்கு புளியே விட வேண்டாம். அது அவ்வளவாக எங்களுக்கே பிடித்ததில்லை. குழந்தைகளுக்கு எப்படி?)  

அரைக்கீரையோ முளைக்கீரையோ வேக வைத்துக் கொண்டு, மிளகு, தேங்காய், மி. வத்தல் சேர்த்து மிளகூட்டல், 

இல்லை கீரை வடை, கீரை அடை, 

கீரையைவெந்து மசித்ததும், வேக வைத்த பா. பருப்புடன் சேர்த்து, தேங்காய், சீரகம், நாலைந்து மிளகு, மி. வத்தலுடன் (இதை வறுத்து ஒரு முறை, வறுக்காமல் ஒரு முறையில் செய்யலாம். ) அரைத்து சேர்த்த பொரிச்ச கீரைக்குழம்பு, (இது பொதுவாக பொன்னாங்கண்ணிகீரை, இல்லை பீட்ரூட் கீரை, இல்லை,மணத்தக்காளி கீரையில் செய்தால் அமிர்தமாக ருசிக்கும்.)

 கீரையை து. பருப்புடன் கலந்து சாம்பார் பொடி போட்டு ஒரு குழம்பு, இல்லை வறுத்த சாமான்களுடன் சேர்த்து செய்த கீரை சாம்பார், 

இது போக "பருப்புகீரை" என்று ஒன்று உண்டு. அதை அலம்பி பொடிதாக அரிந்து வேக வைத்த பின், வெறும் வேக வைத்த  து. பருப்படன் கலந்து  கடுகு, மி. வ உ. ப தாளித்து இறக்கிய கீரை, 

இதைத்தவிர பசலைக் கீரை என்ற ஒன்றுமுண்டு. அதையும் வேக வைத்த பருப்புகளோடு கலந்து தேங்காய் சீரகம், மி. வத்தலிட்டு காரத்துடனோ ,  இல்லை.. சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தோ,  கூட்டாக செய்தும், 

கீரை தண்டுடன் தண்டு கீரையாக வாங்கும் போது, கீரைகளை ஆய்ந்து,( பொதுவாக இந்த எல்லா வித கீரைகளை ஆய்ந்து சுத்தப்படுத்த நிறைய நேரமும், நீண்ட பொறுமையும் தேவைபடும்.) மேற்கூறிய முறைகளில் செய்து விட்டு, மறுநாள் தண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து,  அத்துடன் ஊற வைத்த பாசிப்பயிறு, அல்லது பா. பருப்பு வேக வைத்து சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவலுடன் கலந்து சுண்டலாக, 

இது போக வெந்தய கீரையில், இல்லை முள்ளங்கி கீரையில், செய்த சாம்பார், புளிக்குழம்பு, என பலவகைகளில் செய்து எங்கள் வீட்டில் அனைவரும் (குழந்தைகள், முதல் பெரியவர்கள்) கீரையை ரசித்து உண்ணும்படி செய்து விட்டேன்.( அப்பாடா.! சொல்வதற்குள் நான் வாடிய கீரையாக ஆகி விட்டேன். ஹா. ஹா. ஹா. பொறுமையாக கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும்? கேட்டதற்கு நன்றி.. நன்றி.. ) 

இன்னமும் எத்தனையோ கீரைகள் (சரியாக நினைவில்லை.) இப்படியாக செய்ததில் தற்சமயம் செய்த "வறுத்தரைத்த கீரை சாம்பாரை"  இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.  இதையும் அனைவரும் செய்து சுவைத்திருப்பீர்கள். இருந்தாலும் என் பாணியாக இருக்கட்டுமென (இல்லையென்றால், பண்ணும் போதே எடுத்த முளைக்கீரை புகைப்படங்கள் இன்னமும் என்னை "ரீலீஸ்" பண்ணவில்லையா என என்னை "முறைத்து"க்கொண்டே இருக்கின்றன.) இங்கு பகிர்கிறேன். 

கீரையை ஐந்து கட்டு அலம்பி அரிந்து வைத்த புகைப்படம். 


வறுக்க தேவையான பொருட்கள். வெந்தயம், மி. வத்தல்கள், உ. பருப்பு, க. பருப்பு, து. பருப்பு, கொத்தமல்லி விரைகள், (தனியா) இது ஆறுபேருக்கு இரு வேளைக்கு, நான் எடுத்துக் கொண்டது. கொஞ்சமாக பண்ணும் போது எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாம்பார் நன்கு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால் மறுநாள் காலைக்கும் பயன்படும். அதுவும் இரவு வைத்த மீந்து போன சாதத்தில், கொஞ்சம் தயிரும். பாலும் கலந்து கெட்டியாக தயிர்சாதம் செய்து கொண்டு இந்த சாம்பாரை துணையாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இன்னமும் நிறைய மீந்த சாதம் இருக்க கூடாதா என்ற எண்ணத்தை உருவாக்கும். (அன்றைய தினம் காலை டிபனை கூட மனம் எதிர் பார்க்காது.)


ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் மிளகும் எடுத்துக்கொண்டேன்.(சீர்+அகம் "சீரகம்" நம்முள்ளிருக்கும் அகத்தை சீராக்க, "மிளகு" (வயிற்று உப்பசம்) வயிற்று உபாதையை சரியாக்க )  "மருந்தே உணவு, உணவே மருந்து" என ஆயுர்வேதத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. விருப்பமில்லாதவர்கள் இவ்விரண்டையும் வறுக்கும் சாமான்களுடன் கலக்க வேண்டாம்.


ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டேன்.


அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நிறைய கடுகு வெடிக்கச்செய்து அதில் பாதியை வறுத்தரைக்கும் சாமான்களுடன் சேர்க்கவும்.


இல்லையென்றால், இப்படி மிக்ஸியில் நேரடியாக போட்டுக்கொண்டேன். நான் அந்த மசாலா சாமான்களில் போட்டு படமெடுக்கவில்ஙை. (அதனால் இப்படி)


உப்பிட்ட கீரை  வெந்ததும், கீரை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். கீரையை இந்த மாதிரி கீரை மத்தால் கடையும் போது சுவை மாறாமல் இருக்கும். எனக்கு தெரிந்த சிலர் ஆட்டுரலில் போட்டு அரைப்பார்கள்.  தற்சமயத்தில் மிக்ஸியில் அரைக்கிறார்கள். அது மிகவும நைசாக உருத்தெரியாமல் ஆகி விடுவதால்  அதன் ருசியின் அளவும் குறைவதாக எனக்கு தோன்றுகிறது. (இரண்டாவதாக உப்பிட்ட பின் அந்த பொருளை எங்கள் வீட்டில் "பத்து" எனச் சொல்வது சிறு வயதிலிருந்தே அம்மாவிடம் கற்ற பாடம்.) (எச்சில், பத்து என சொல்வது மாதிரி) அதை மிக்ஸியில் போடக் கூடாது. "ஒயர் மூலம் வீடே  எச்சில், பத்து என்று கனெக்ஷன் ஆகி விடுமா?" என என்னை கேலி செய்தவர்கள் நிறைய பேர்.  என்ன செய்வது? பழக்கங்களை சுலபத்தில் மாற்ற முடியுமா? 


ஒரு எலுமிச்சை அளவு புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்தெடுத்த புளிக்கரைசலை, கடாயில் மீதமிருக்கும் கடுகுடன் விட்டு கொதிக்க விடவும்.


ஆரம்பத்திலேயே சாதம் வைக்கும் போது வேக வைத்திருக்கும் து. பருப்பையும் நன்கு கடைந்து வைக்கவும்.


புளிஜலம் நன்றாக கொதித்ததும், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மசித்த கீரையை உடன் சேர்த்து கொதிக்க விடவும். 


வறுத்த மசாலா கலவையை நைசாக மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் கீரையுடன் சேர்க்கவும்.


அரைத்த பொடிகள் கரைத்து வைத்த கலவை.


கரைத்து வைத்ததை விட்டு நன்கு கொதி வந்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். 

 

கீரை சேர்ந்து கொதித்ததும் பெருங்காயத்தூள் கொஞ்சம் போடவும்.. நான் எப்போதுமே கடைசியில்தான் பெருங்காய பொடி சேர்த்து விடுவேன். வாசனை நிலைத்து இருக்கும்.


எல்லாம் கலந்த  நிலையில் கீரை சாம்பார் அசத்தலாக நான் ரெடி என்கிறது.


"சாதம் பரிமாறிய பின்தான் என்னை பரிமாறுவார்களாம். அதுவரை நான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டுமாம்" என்று முறைப்பிலிருந்த  முளைக்கீரை சாம்பார்.


என்ன நட்புகளே.! கீரை சாம்பார் ருசியாக இருந்ததா? "ஆமாம்.. நாங்க எப்போதும் செய்வதுதானே.! இதில் என்ன மாறுபட்ட ருசி...! "என்ற ஒரு கேள்வி வரும் முன் நீங்கள் இதை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்திருக்கிறீர்கள் என்ற அனுபவ கருத்துக்களை எதிர்பார்த்தபடி விடை பெறுகிறேன். நன்றி. 🙏.

இதுவும் எ. பியில் என் திங்கள் பதிவாக எப்போதோ வந்தது. இன்று என் பதிவில் இதை ஒரு மாற்றத்திற்காகவும், சேமிப்பாகவும் பதிவு செய்துள்ளேன். அதை விட நேற்று வீட்டில் மோர் கீரை செய்தேன்.(அதை மட்டும் எ. பியில் வந்த அந்தப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்) உடனே இந்த பதிவு என் டிராப்டில் இருப்பது நினைவுக்கு வரவே இந்த கீரைப்பதிவு இங்கும் விடாமல் வந்து முளைத்து விட்டது.. அங்குமிங்குமாக வந்து கருத்துக்கள் தெரிவி(த்தவர்களுக்கும்)ப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

37 comments:

  1. எனக்கு கீரை வகைகள் எல்லாமே பிடிக்கும்.

    சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். கீரை மதிய உணவுக்கு எப்போதுமே சுவை கூட்டுவது. ஆனால் தினமும் செய்யத்தான் இயலவில்லை. மேலும் தினசரி கீரைகளை மற்ற காய்களைப்போல உணவில் சேர்க்க கூடாது என்பதும் இரவில் கண்டிப்பாக உண்ணக் கூடாதென்பதும் சிலர் வாதம். தினமும் கீரைகளை உணவோடு கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்பதும் பலரின் வாதம். இப்படியான வாதங்கள், விவாதங்கள் மனித வாழ்வில் இயல்புதானே.. பதிவு நன்றாக உள்ளதென்ற தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. செய்முறை வரும் பின்னே.நாவல் வரும் முன்னே.. ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. ஒரு பிரபலமான பழமொழியை என் பதிவோடு இணைத்திருப்பதற்கு மிக்க நன்றி.

      நாவலா? இதற்கே நாவல் என்ற பெயர் சூட்டினால், இன்னொன்று நீ.... ள.. மாக எழுதிக் கொண்டே.....ஏ....ஏ
      இருக்கிறேன். அதற்கு என்ன பெயர் கிடைக்கப் போகிறதோ? ஹா.ஹா.ஹா.

      உண்மையிலேயே உங்கள், மற்றும் அனைவரின் ஊக்கம் நிறைந்த கருத்துக்களும் என் (நெடிதான) பதிவுகளுக்கு காரணம். பார்த்தீர்களா...? உங்கள் அனைவரின் அன்பான கருத்துக்களுக்கு பதில் கருத்தே என் மன மகிழ்ச்சியில் எவ்வளவு நீளமாக அளிக்கிறேன் என்று.. . பதிலே இப்படி என்றால், பதிவும் அதை மிஞ்சத்தானே செய்யும். ஹா ஹா. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. செய்முறை நல்லா இருக்கு. எனக்குத் தெரிந்த ஒருவர், செய்முறை எழுதிட்டு, வேரியேஷன்ஸ் பின்னூட்டங்கள்ல எழுதுவார். நீங்க பதிவிலேயே அனேகமா எல்லாம் எழுதிட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /செய்முறை நல்லா இருக்கு/

      ஆகா... வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்தாற்போன்று இருக்கிறது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      ஆமாம்.. யார் அவர்.? இப்படி பதிவிலேயே எல்லாவற்றையும் விவரித்து எழுதினால் தான் எனக்கும் ஒரு திருப்தி வருகிறது. படிக்கும் உங்களனைவருக்கும் கொஞ்சம் போராகத்தான் இருக்கும். புரிகிறது. ஆனால் என் பழக்கத்தை மாற்ற முடியவில்லையே... ஆனாலும் உங்கள் கருத்துக்கள் மன மகிழ்வை தருகின்றன. பொறுமையுடன் படித்து கருத்திடும் உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் எப்போதும்.

      பதிவை கண்டதும் உடன் வந்து தந்த உங்கள் கருத்துக்கும் மிக்கநன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கீரை செய்முறைகளில் கீரைப் பருப்பு உசிலி மறந்துட்டீங்க போல. கீரையையே வேகவைத்துச் சுண்டல் மாதிரியும் பண்ணலாம். தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கிச் சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணலாம். காலையில் மசிச்ச கீரை மிஞ்சினால் சாயந்திரம் சப்பாத்தி பண்ணிட்டுக் கீரையைத் தக்காளி, வெங்காயம் சேர்த்துக் கொஞ்சமாக மசாலாப் பொடி போட்டுத் தொட்டுக்கப் பண்ணிடலாம். :) வகை வகையான கீரை செய்முறைகளைச் சொல்லி இருப்பதற்கு நன்றி, எனக்குப் பிடிச்சது மோர்க்கீரை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. கீரை உசிலி.. அதுவும் நன்றாக இருக்கும். ஆனால் அதை அடிக்கடி செய்வதில்லை. ஆமாம் சிலவற்றை எழுத மறந்து விட்டேன். உங்களுக்கு தெரியாத சமையல் பக்குவங்களா? நீங்கள்தான் பல வகையான சமையல் ரெசிபிகளில் சிறந்தவராயிற்றே... உண்மையிலேயே உங்கள் அளவுக்கு எனக்கு பல ஊர்களின் சமையல் வெரைட்டிகள் செய்யவும் தெரியாது. அதையெல்லாம் கண்ணால் கூட பார்த்ததும் இல்லை. எப்போதும் இதே போல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் சமையல் அனுபவங்கள்தான்.

      சப்பாத்திக்கு நீங்கள் சொல்வது போல் இதை தொட்டுக்க செய்யலாம் என்பது நல்ல யோசனை. எனக்கும் மோர் கீரையின் சுவை பிடிக்கும். நீங்கள் வந்து பதிவை ரசித்து படித்ததற்கு மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கீரை குழம்பு அருமை.
    கீரை புராணம் அருமை.
    முன்பு அரிசி கொடுத்தால் கீரை முறம் நிறைய கொடுப்பார்கள். வீடுகளில் வந்து விற்பவர்கள்.
    கீரை வறுத்தரைத்த சாம்பார் மிக வாசனையுடன் கம கம என்று இருக்கிறது.
    நான் வறுத்து அரைத்த சாம்பார்தான் செய்கிறேன்.
    நீங்கள் சொல்வது போல தான் வறுத்து அரைத்து வைத்து இருக்கிறேன். எங்கள் வீடுகளில் சீரகம், மிளகு உண்டு.

    நீங்கள் சொல்வது போல வறுத்தரைத்த சாம்பார் மறுநாள் நன்றாக இருக்கும். சுண்ட வைத்தால் தயிர் சாதத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
    அரைக்கீரையும் புளிக்குழம்பும் சேர்த்து சுண்ட வைத்தால் அந்த குழம்பு இன்னும் ருசி. கீரை கடைசல், கீரை கூட்டு என்று அடிக்கடி செய்த காலங்கள் அருமையான காலங்கல். இப்போது கீரை வாங்க போக வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை வாங்குவதே அபூர்வம் ஆகி விட்டது. இன்று உங்கள் பதிவை படித்தது கீரை வாங்கும் எண்னம் வந்து விட்டது.பதிவை ரசித்து படித்தேன்.
    படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் . முன்பெல்லாம் நம்மூரில் அரிசிக்கு பண்டமாற்றாக அரைக்கீரை தருவார்கள். பிறந்த வீட்டிலிருக்கும் போது, பாட்டி, அம்மா இப்படி வாங்கி பார்த்துள்ளேன். இப்போது இங்கு நாங்கள் வசிக்குமிடத்தில் அந்த மாதிரியான பொடி உதிரியான அரைக்கீரை கிடைப்பதில்லை. கட்டாகத்தான் கிடைக்கிறது.

      பொதுவாகவே வறுத்தரைத்த சாம்பாரின் ருசி அருமையாகத்தான் இருக்கும். நான் முன்பெல்லாம் தினசரிக்கு வறுத்து அம்மியில் அரைத்துதான் சாம்பார் வைப்பேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் தினமும் சாம்பார் இஷ்ட தெய்வம்.

      ஆம்.. கீரை சுண்ட வைத்த குழம்பு தேவாமிர்தம். தயிர் சாதத்திற்கு அதனைப்போன்ற சிறந்த ஜோடி கிடையாது. ஆனால் முன்பு போல் கீரைகள் செய்ய இயலவில்லை. இங்கும் வாங்குவதற்கு மாதக்கணக்கில் இடைவெளிகள் விழுகிறது.

      ஆகா... இன்று என் பதிவை பார்த்ததும் தங்களுக்கும் கீரை வாங்கும் எண்ணம் வந்து விட்டதா? நல்லது. வாங்கி ருசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கீரை வகைகள், அவைகளை வைத்து குறிப்புகள் பலவற்றை சொல்லிய விதம் எல்லாமே அருமை!
    என் மாமியார் மணத்தக்காளி சாறு, அகத்திக்கீரை சாறு என்று செய்வார்கள். ரசம் போல ருசியாக இருக்கும். முருங்கைக்கீரை சாம்பார் தனி ருசி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      உங்கள் வருகையும், கருத்தும் எனக்கு மிக மகிழ்ச்சியை தருகிறது.

      ஓ.. கீரைகளில் சாறு (ரசமென்பதை சாறுவென்றுதான் நாங்களும் சொல்வோம்.) கூட செய்யலாமா? நான் மற்ற காய்களை (குடமிளகாய் முள்ளங்கி
      போன்றவை வைத்து ரசம் செய்வேன். புதிய சுவையான தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      முருங்கை கீரை வாய்வை உண்டாக்கும் என்பதினால் அதை அவ்வளவாக எங்கள் வீட்டில் சேர்ப்பதில்லை. அதனால் அதைப்பற்றி நானும் எந்தவொரு குறிப்பும் தரவில்லை. தாங்கள் வந்து பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. //முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.// முருங்கைக்கீரை வாய்வு என இப்போத் தான் உங்கள் மூலம் கேள்விப் படுகி'றேன். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும். நாங்க முருங்கைக்கீரை கிடைச்சால் உடனே தினம் சூப் வைச்சுக் குடிப்போம். அடை, பருப்புசிலி, குழம்பு ஆகியவை செய்வோம்.பாசிப்பருப்புப் போட்டுத் தேங்காய் சேர்த்துக் கறியாகவும், பொரிச்ச குழம்பு போன்றவையும் எல்லாக் கீரைகளிலும் பண்ணலாம்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. முருங்கை கீரைப்பற்றி தாங்கள் சொன்னது சரிதான்... அதன் சக்திகள் குறித்து நான் கேள்விபட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இப்போது நீங்கள் கருத்தில் சொன்னதையும் கவனத்தோடு மனதில் வாங்கிக் கொண்டேன். நன்றி.

      கீரைகளே பொதுவாக வாய்வு என்பது எங்களின் எண்ணம். அதுவும் எனக்கு இந்த வாய்வு தொந்தரவு ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு நிறைய வந்து விட்டதால் வாய்வை கிளப்பும் காய்கறிகளை பயன்படுத்தவும் சற்று பயமாக உள்ளது. சிலசமயம் "அது நானா...? என்னால்தான் உனக்கு இப்படி வாய்வு தொந்தரவு கிளம்புகிறதா ?" என்பது போல கேட்டபடி சுணக்கமின்றி என்னுடன் ஒத்துப் போகும். ஹா ஹா. ஆக நம் நேரத்தின்படிதானே எல்லாமும் நடக்கும்.

      எங்கள் அம்மா வீட்டில் கொல்லைப் புறத்தில் நான் அங்கு சிறு வயதாக இருந்த போது பெரிய முருங்கை மரம் நிறைய காய்களை தந்தபடி நீண்ட வருடங்கள் நீடித்து வளர்ந்து இருந்தது. அக்கம்பக்கம் கூட நிறைய பேர் வந்து காய்களை பறித்துச் செல்வார்கள். அதன் கீரைகளை பறித்து வீட்டில் ஒரு நாளும் செய்ததாக எனக்கு நினைவில்லை. அப்போதெல்லாம் காய்களை வேண்டிய மட்டும் பறித்து பயன்படுத்தி இருக்கிறோம். ஒரு ஐப்பசி மாத பெரிய மழையில் அது சாய்ந்தது இன்னமும் என் மனதில் வேதனையோடு நினைவாக உள்ளது. ஏதோ முருங்கை இலைகளை பற்றி பேசும் போது இந்த நினைவும் வந்து விட்டது. இப்போதும் பிறந்த வீட்டில் வேறு இடத்தில் அங்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கப்பட்டு பலன் தந்து கொண்டுள்ளது.

      என்னவோ நினைவுகள். . விட்டால் நான் ஒரு கதை மாதிரி சொல்லிக்கொண்டு போவேன். பின் சகோதரர் நெ. த வந்து உங்கள் பதில் கருத்துரையும் நாவலா என்பார். ஹா ஹா ஹா.

      முருங்கை கீரையின் பலன்கள் குறித்த தங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ராமன் எத்தனை ராமனடி என்பது போன்று கீரையில் எத்தனை வகைகள்! எத்தனை வகைகளில் சமைக்கலாம் என்று விளக்கம் ஆக உள்ளது பதிவு. நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ராமன் எத்தனை ராமனடி என்பது போன்று கீரையில் எத்தனை வகைகள்!/

      ஹா.ஹா.ஹா. நல்ல உதாரணம். கீரைகளைப் பற்றிய பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களைப் போன்றோரின் ஊக்கம் தரும் கருத்துரைகள் என் எழுத்துகளுக்கு நல்ல பலம சேர்க்கும். தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கடைக்கு சென்றால் எது எந்த கீரை என்று அவர்களையே நான் கேட்டுவிட்டு வாங்குவேன்.  முளைக்கீரை எங்கள் முதல் சாய்ஸ்.  அரைக்கீரை எப்போதாவது.  பொன்னாங்கண்ணி கீரை எப்பவோ சின்ன வயசில் சாப்பிட்டது.  பசலைக்கீரை அவ்வப்போது.  மணத்தக்காளி கீரையும் அவ்வப்போது!  பாக்சை எப்போதும் பயத்தமபருப்பு சின்னவெங்காயம் சேர்த்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடைக்கு சென்றால் எது எந்த கீரை என்று அவர்களையே நான் கேட்டுவிட்டு வாங்குவேன்/

      இப்போது நானும் அப்படித்தான் கேட்டு வாங்குகிறேன். மொழி பிரச்சனை வேறு.. நடுவில் கீரைகள் வாங்கி சமைத்து நாட்கள் வேறு ஆகி விட்டது. கொரோனா காலத்தில் கீரைகளையே வாங்கவில்லை. நாங்களும் சமயத்தில் பசலை கீரை வாங்கினோம். இப்போது போனவாரம் அரைக்கீரை கட்டாக வாங்கினோம். நடுவில் வெந்தய கீரை.. அங்கு மாதிரி உதிரியாக சின்னசின்னதாக அரைக்கீரையும், சின்னதாக வெந்தய கீரையும் நாங்கள் வாங்கும் காய்கறி கடையில் பார்க்க முடிவதில்லை. அது எங்கிருக்கிறதோ ? மக்களுக்கு தொற்று பயங்கள் முற்றிலுமாக விலகி விட்டது. நாங்கள்தான் அநாவசியமாக கடைகளுக்கு அலைந்து திரிவதை தவிர்கிறோம்.

      ஆம் கீரைகளை நம் விருப்பபடி எப்படி வேண்டுமானாலும் செய்தாலும் அவை ருசிதான். பதிவுக்கு வந்து தந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கீரையை பெரும்பாலும் மசியலாகவே செய்வது வழக்கம்.  மிகச்சில சமயங்களில் மோர்க்கீரையும், துவட்டலும்.  முருங்கைக் கீரை எனக்கு மிகவும் பிடிக்கும்..  ஆனால் எனக்கு மட்டும் என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். கீரையை வெறுமனே மசித்து தாளித்து கொட்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டாலும் போதும். அதன் ருசியே தனிதான்..

      முருங்கை கீரை எங்களுக்கு வாய்வு பிடித்துக் கொள்ளும் என்பதினால், அதை வாங்குவதே கிடையாது. சிலருக்கு ஒத்துக் கொள்ளும். எங்களுக்கு கொத்தவரை, சேம்பு போல் உடனடி பலனை தருகிறது. அதனால் அதை சேர்ப்பதேயில்லை. உங்களுக்கு பிடித்தமானது என்றால், உங்களுக்கு மட்டுமாவது எப்போதாவது செய்து சாப்பிடலாமே .... அதேயேன் தவிர்க்க வேண்டும்.

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வெந்தயக்கீரை எப்போதாவது வாங்கி கட்டி இருக்கும் கயிறை அவிழ்த்து தண்ணீரில் அலசி வேர்வரை மட்டும் நீக்கி அப்படியே சாம்பாரில் போட்டு விடுவதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தண்ணீரில் அலசி வேர்வரை மட்டும் நீக்கி அப்படியே சாம்பாரில் போட்டு விடுவதுண்டு./

      பொடியாக நறுக்காமலா? தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி.
      வெந்தய கீரை மசித்து புளி விட்டு சாம்பார் செய்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் வேர் நீக்கி அலசி மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து வெந்தய சப்பாத்தியும் பண்ணலாம். நல்ல வாசனையாக இருக்கும். வெந்தய கீரையை வைத்து குருமாவும் செய்தால், வெறும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

      தாங்கள் வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. என்னடா இது கீரைக்கு வந்த சோதனை இவ்வளவு பாடு படுகிறதே 😂😂


    வகைவகையாய்க் கீரை வளந்தரும் ! வாழ்வின்
    தகைகூட்டும் தீமை தடுத்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் வலைத்தளம் வந்து கருத்துரைகள் சொல்வது மிக்க மகிழ்வை தருகிறது. நேற்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் பக்கமும் தங்கள் கவிதையை கண்டு படித்து மகிழ்ந்தேன். நன்றி.

      /என்னடா இது.. /

      ஹா.ஹா.ஹா. கீரைக்கும் நம் ஆசைகளினால் சோதனைகளைத்தான் உருவாக்குகிறோமோ?

      /வகைவகையாய்க் கீரை வளந்தரும் ! வாழ்வின்
      தகைகூட்டும் தீமை தடுத்து!/

      ஈரடி சொற்களில் கீரையின் பலன் குறித்த தங்கள் கருத்தை ரசித்தேன்.

      தாங்கள் பதிவுக்கு வந்து ரசித்து படித்து தந்த நல்லதொரு கருத்துரைக்கு மீண்டும் என் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கீர சாம்பார் சூப்பர் கமலாக்கா.

    கீரை வகை எது கிடைத்தாலும் வாங்கிவிடும் வழக்கம் கமலாக்கா. நம் வீட்டில் எந்தக் கீரையையும் வேண்டாம் என்பதில்லை. சென்னையை விட இங்கு கீரை வகைகல் குறைச்சல்தான் ஆனால் பாண்டிச்சேரியில் அத்தனை கீரை வகைகள் சுவைத்திருக்கிறோம். முடக்கத்தான் கீரை வாதநாராயணக் கீரை எல்லாம். இன்னும் பெயர் தெரியாத கீரை எல்லாம் கீரைப்பாட்டி கொண்டுவருவார். வல்லாரை என்று பலதும். பொன்னாங்கணி விதம் விதமாகக் கொண்டுவருவார். பசலையில் கொடிப்பசலை தரைப் பசலை அது தரையில் தோட்டத்தில் வெகு சீக்கிரம் வளரும். சின்ன இலையாக இருக்கும் மிகவும் பொடி இலை.

    புளிச்ச கீரை இங்கு நன்றாகக் கிடைக்கிறது எனவே அதில் இங்கு சாம்பார், (புளி போடாமல்) அல்லது புளிக்கீரை நீங்கள் சொல்லியிருப்பது போல்....
    புளிச்சகீரை/கோங்குரா தொக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். கீரைகளில் இன்னும் நிறைய வகைகள் உள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த வல்லாரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முடக்கத்தான் என பல வகைகள் எங்கள் பாட்டி செய்து சாப்பிட்டுள்ளோம். என்ன அப்போது அவற்றின் பயன்கள் அவ்வளவாக அறிவில் ஏறாததால், அது வேண்டாமென புறக்கணித்தும் இருக்கிறோம்.

      இங்கு கீரை வகைகள் சென்னை, நம்மூர் பக்கங்களை விட குறைவுதான். நடு நடுவில் எப்போதோ வாங்குவதால் பார்த்தவுடன் அதன் பெயர்களை சொல்லும் திறனும் இப்போது மங்கி விட்டது.. பசலை கீரை, பாலக் போன்றவை இங்கு கிடைக்கிறது. கோங்குராவை வாங்குவதில்லை. அது புளிப்பான இருக்குமோவென ஐயம். கரைகளிலும், நமக்குப் பிடித்தவை வீட்டில் அனைவருக்கும் பிடிப்பதில்லை யே.. அகத்திக் கீரை உடம்புக்கு அவ்வளவு நல்லது. ஆனால் வைகுண்ட ஏகாதசி மறுநாள் அதை பசுவுக்கு கொடுக்க மட்டுமே இங்கு விற்பனையாகிறது. பாக்கி நாட்கள் கண்ணில் படுவதில்லை. அப்பத்தான் சீசனோ என்ன வோ.. நமக்கும் அன்றுதான் பெருமாள் அருளினால் அந்த கீரை நினைவுக்கு வரும். ஹா ஹா

      தங்களின் விபரமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. வெந்தயக் கீரை இங்கு கிடைக்கிறது அதிலும் சப்பாத்தி, பருப்பு உசிலி என்று செய்வது. அது போல பாலக் என்றால் பாலக் பனீர்., அரைச்சுவிட்டக் கூட்டு என்று பல வகை...

    முருங்கைக் கீரை கண்டுவிட்டால் அதையும் வாங்கிவுடுவதுண்டு. அதிலும் பருப்புசிலி, அடை, சாம்பார் என்று அப்போது என்ன தோன்றுகிறதோ அது.

    கீரை பத்தி அலசி ஆராய்ந்து ஹாஹாஹா...மழைக்காலத்தில் கீரை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதுண்டு.

    சூப்பர் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்,... வெந்தய கீரை மட்டுமின்றி, முள்ளங்கி கீரை, பாலக்கிலும் சப்பாத்தி செய்யலாம். நம் குழந்தைகள் எப்படியோ, எந்த விதத்திலோ கீரை என்ற பயனுள்ள காய்கறி சாப்பிட்டால் சரிதான் என வித விதமாக முயற்சிக்கிறோம் . நம்மையும் அப்போது நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் இப்படித்தான் நல்லதை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தினார்கள். ஆனால், அறிவுரை எந்த காலத்திலும் யாருக்கும் பிடிக்காமல் போவதுதானே இயல்பு :))))

      முருங்கை கீரையைபற்றி அறிந்துள்ளேன். நம் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் இன்றைய பதிவில் கருத்தாக சொல்லியுள்ளார்கள். இனி அந்த கீரை கிடைக்கும் சமயம் வாங்க வேண்டும். நீங்களும் பல கீரைகளை வாங்கி உபயோகப்படுத்துவது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

      இது எப்போதோ எ. பியில் திங்களன்று வந்த பதிவு. . நாங்களும் பல மாதங்களுக்குப் பின் இப்போதுதான் கீரை வாங்கி மோர் கீரை பண்ணியவுடன் இந்தப்பதிவு நினைவு வந்து பதிந்தேன்.

      மழைக்காலத்தில் கீரை அழுகிய நிலையில் கிடைக்கும், பனி காலத்தில் கொசுக்கள் அரித்தது போக மீதிதான். வெயிலில் வாடி வதங்கலாக வரும். இதனாலேயே கீரைகளை வாங்குவதே கிடையாது. ஏதோ சில சமயம் இப்படிநன்றாக அமைந்தால் அதுவும் நம் அதிர்ஷ்டந்தான்.

      தங்கள் அன்பான பாராட்டுகளுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. செங்கீரை சிறுகீரை
    அகத்தியுடன் அரைக்கீரை
    புளிக்கீரை புகழ் முருங்கைத் தளிர்க்கீரை
    பசலையுடன் வருகீரை
    வல்லாரை கண்ணியென
    வகுத்தார் வகுத்த வகைக்கு
    மேலுண்டோ வாழ்வில் நெறி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா... உங்களைத்தான் இதுவரை பதிவுக்கு காணேணோமே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கருத்துரையையும் கவிதையுடன் சேர்ந்து கொண்டு அழகாக வந்துள்ளீர்கள். கவிதை அருமை. அருமை. தாங்கள் பதிவை ரசித்துப் படித்து இவ்விதமான சிறப்பானதொரு கருத்துரை தந்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. அழகிய பொருள் நிறைந்த கவிதை.

      Delete
    3. ஆம்.. சிறப்பான கவிதை. துரை செல்வராஜ் அவர்கள் எதையும் கண்டவுடன் சட்டென கவி பாடும் திறன் பெற்றவர். சரஸ்வதி தேவியின் பூரண அருள் பெற்றவர்.🙏. நேற்று மாலை வலைப்பக்கம் வர இயலவில்லை. நானும் இப்போதுதான் பார்த்து பதில் தந்து கொண்டிருக்கிறேன். நன்றி சகோ ஸ்ரீ ராம் தங்கள் வருகைக்கும்.

      Delete
  16. இவ்வளவு திறமையையும் ஏன் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!..

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு..

    மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவுலகில் உங்கள் அனைவரின் திறமைகளை கண்டு வியக்கவே எனக்கு நேரம் போதவில்லை. ஏதோ நானும் என் சிறு அறிவினைக் கொண்டு உங்களைவருடனும் உலா வந்து கொண்டிருக்கிறேன்.எனினும் உங்கள் அனைவரின் உற்சாக அறிவுரைகள், கருத்துக்கள் என்னை மேன்மேலும் எழுது எனத் தூண்டுகிறது. அவ்வண்ணமே ஏதோ அறிந்தவற்றை, எழுதி கிறுக்கிக் கொண்டுள்ளேன். தங்களது பாராட்டுகளுக்கு ஏற்றபடி "இனியேனும் என்னை கொஞ்சமேனும் திறமையுடையவளாக மாற்றி விடு.. " என இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      தங்கள் அன்பான கருத்துக்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete