Sunday, May 12, 2019

அன்பென்றால், அன்னை....

அன்னை ..


ஸ்ரீ கிருஷ்ணனை தன் நெஞ்சில் சுமந்து காலங்காலமாய் அன்னைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த தெய்வத்தாய் யசோதைக்கும். யசோதையாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் இப்பதிவு.

பத்து மாதங்கள்  தன்னுடனே நம்மையும் சேர்த்து, ஒரு சுகமான சுமையாக சுமந்து பெற்றெடுத்து,ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பாய் வளர்த்து, நம் சந்தோஷ தருணங்களை தனதாக்கி கொண்டு, நாம் படும் இன்னல்களையும்  தன்னுடையதாய் நினைத்து வருந்தி நமக்காவே வாழ்ந்து வரும் ஒரு ஜீவனின் பெயரை அன்னை.. அம்மா...தாய்.. மாதா.. என்று சொல்லலாம்.

அன்னை என்றாலே இயற்கையாகவே தன் குழந்தைகள் மேல் பாசம் மிகுதியாகவே வந்து விடும் போலிருக்கிறது. இப்படி அன்னை, தந்தையின் அன்புதான் நம்மை உலகில் வாழ்வதற்கு ஒரு ஜீவாதாரமாக இருந்து  காத்து வருகிறது.

நேற்று அன்னையின் அன்பை பற்றி  அன்னையர் தினப்பதிவாக எழுதலாம் என நினைத்து ஆரம்பித்தேன். காலையில் ஆரம்பித்த வேலை முடிவில்லாமல் செல்ல என் குழந்தைகள் (மகன்கள், மருமகள்கள்) ஆசைக்காக மதிய உணவாக புளியோதரை, கூட்டு, சாம்பார் என சாப்பாட்டு ஐட்டங்கள் தயாரித்தபின், மாலை அவர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் என்னையும் வரச் சொல்லி அழைத்துப் போகும் போது  தட்ட முடியாமல் ஒரு  அன்னையாக  அவர்களுடன் சென்றதில் நான் எழுத வேண்டுமென்று ஒதுக்கியிருந்த  என்"நேரம்" "ஆமாம் .! எந்நாளும் அன்னையர் தினந்தானே" என்று என்னிடம் சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டது. .. அதனால் நினைத்ததை வளவளவென எழுதாமல்,  சுருக்கமாக விட்டதில் தொடர்ந்து இன்றைய அன்னையர் தினமும் அவ்வாறே சொல்லிச்சென்று விட்டால் என்ன செய்வதென  சட்டென முடித்து விட்டேன். (சுருக்கமான பதிவை விரும்பி படிப்பவர்கள் என்னை பாராட்டுவர்களாக...! ஹா. ஹா. நன்றி. நன்றி.)

எ. பியில் சகோதரி கோமதி அரசு அவர்கள் எழுதிய விமர்சன பகுதியை படித்ததோடு, வலைத்தளம் வந்து வேறு எதையும் படிக்க இயலாத ஒரு சூழ்நிலை. அனைவரும் இந்த அன்னையை மன்னிக்கவும்..

நேற்று என் அன்னையை என் வாழ்வில் தொலைத்து விட்டு வருந்திய  நாளும் கூட ... வயிற்றில், கைகளில், மனதில் என தன் காலம் முழுவதும் என்னை சுமந்தவர், என் காலம் முழுக்க வருத்தத்தை சுமக்க வைத்து விட்டு என்னை விட்டு அகன்ற நாள்.. எவ்வளவு வருடங்கள் ஓடினாலும் அன்னையை மறக்க இயலுமா? ஒரு வாரமாகவே (நானும் ஒரு அன்னையாகி கடமையாற்றி வரும்போது கூட)  இந்நினைவுகள்தான் என் மனதுள் சுற்றி வந்து கொண்டிருந்தது.  அன்னையின் அன்பை இழந்து விட்டாலும், அன்னையின் அன்பில் திளைத்த நினைவுகளோடு வாழ்ந்து வருகிறேன். 

சொல் வழக்கில் தெய்வத்திற்கும், முதலிலேயே "மாதா" வந்து வார்த்தையை முழுமையாக்குகிறாள். எனவே பெற்றெடுத்தவள் என்றும்  முதலில் தெய்வமாகிறாள்.

இந்தப் பாடல் அன்னையின் அன்பை, தியாகத்தை கூறுவதுதான். ( திரு. கண்ணதாசன் எழுதி, எம். எஸ். வி இசையில், டி. எம் . செளந்தரராஜன் பி. சுசீலா இருவரின் கம்பீரமான குரலில், "கண்ணா நலமா" என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். இது எனக்கு பிடித்தமான பாடல்.) இன்னமும் எத்தனையோ அன்னையின் சிறப்பைப் பற்றி பாடல்கள் இருந்தாலும், இதை இங்கு பகிர்வதில்  மகிழ்ச்சியடைகிறேன். பாடல் நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்ததெனினும், இப்போதும் இதை கேட்கும் உங்களுக்கு  பிடித்திருக்குமென நினைக்கிறேன். கேட்டு ரசிப்பதற்கும், ரசித்ததற்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
நான் முன்பு என் அம்மாவோடு இணைத்து யசோதை தாயிடம் வேண்டுவதாக (கவிதை என்ற பெயரில்) எழுதியதை படிக்க இங்கே சுட்டி காண்பித்ததில் படிக்கவும். ( அன்புடன் படித்ததற்கும் அனைவருக்கும் நன்றி.)

அனைத்து அன்னையர்களுக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்களும். வணக்கங்களும். 🙏.. நன்றி.. 

22 comments:

 1. அன்னையர் தின வாழ்த்துகள். என் அம்மாவும் மிகச் சின்ன வயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். என்ன செய்ய முடியும்! ஆனால் அம்மாவை இன்று ஒரு நாள் மட்டுமா நினைக்கிறோம். அம்மாவின் நினைவே இல்லாமல் இத்தனை வருட வாழ்க்கை ஏது? அழகாக உங்கள் அனுபவங்களைத் தொகுத்து அன்னையர் தினப் பதிவாக்கி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் உடனடி முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களுக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

   அப்படியா? தங்கள் அம்மாவும் தங்களை விட்டு பிரிந்த நினைவுகளை நான் ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். நம்மை இவ்வளவு தூரம் வளர்த்தவர்களை நாம் என்றாவது மறக்க இயலுமா? என் அம்மாவுக்கு அந்த கால முறைப்படி பதினான்கு வயதில் திருமணம். ஆனாலும்,அவர்களின் நாற்பதாவது வயதில்தான் நான் பிறந்தேன். நீண்ட வருடங்கள் தவமிருந்து பெற்றதினால் அன்பு அதிகம். தாங்கள் சொல்வது போல் அம்மாவின் நினைவு இல்லாமல் இத்தனை வருடங்கள் வாழ முடியுமா?

   தங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. குழந்தைகள் கூப்பிடும்போது அவர்களோடு சேர்ந்து செல்வது தான் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதை விடாதீர்கள். இணையமும், பதிவுகளும் அதற்கெல்லாம் அப்புறமாய்த் தான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம் அதனால்தான் நேற்று கொஞ்சம் கால் வலியிருந்தும், அவர்களோடு சென்று வந்தேன். அவர்களை கவனித்துக் கொள்ளும் தினசரி பணிகள்.. அதனால்தான் என் பதிவுகளும், பதில்களும், என் பதிவிலும் சரி, தங்களனைவரின் பதிவுகள் ஆயினும் சரி வர,பார்க்க தாமதமாகிறது. தங்கள் அறிவுரைக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. வணக்கம் சகோ
  தங்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பொருத்தமான பாடலை கேட்க வைத்தமைக்கு நன்றி.

  ஒரு காலத்தில் இப்பாடலை நான் தினம் கேட்டு மகிழ்ந்தவன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களது அன்பான அன்னையர் தின வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   அன்னைக்கு சமமாக நின்று உங்கள் வாரிசுகளுக்கு நல்லதொரு கடமைகளை செவ்வனே செய்து முடித்த தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் இன்றைய பதிவிலும் தங்களை சிறப்பாக கூறியிருக்கிறார். அங்கும் என் வாழ்த்துக்களை நானும் கூறியிருக்கிறேன்.

   பதிவுக்கு பொருத்தமான பாடல் எனக் கூறி, அதை கேட்டு ரசித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.முன்பும் கேட்டு ரசித்திருப்பினும் மகிழ்வை தந்தது. தங்களது பாராட்டுக்களுக்கு என மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. அன்னையர் தின வாழ்த்துக்கள்!
  அழகான அன்பான பதிவு.
  //அன்னையாக அவர்களுடன் சென்றதில் நான் எழுத வேண்டுமென்று ஒதுக்கியிருந்த என்"நேரம்" "ஆமாம் .! எந்நாளும் அன்னையர் தினந்தானே" என்று என்னிடம் சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டது. .//

  எனக்கும் இன்று பதிவு போட முடியவில்லை.
  குழந்தைகள் அன்னையர் தின வாழ்த்து சொல்லி பேசினார்கள்.
  அப்புறம் ஓய்வு பெற்ற ஆசிரியர் கழகம் நடத்தும் குடும்ப உறுப்பினர்கள் கூடும் விழா அதற்கு போய் விட்டேன்.இன்று எனக்கு மதியம் சமைக்கும் வேலை இல்லை. விழா சாப்பாடு.
  பாடல் பகிர்வு பிடித்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களது அன்பான அன்னையர் தின வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

   நேற்று தற்செயலாகத்தான் வெளியில் செல்ல வேண்டி வந்தது. நானும் எனக்கு வேலையில்லாத நேரம் பதிவுகளை கண்டும், எழுதியும் வருகிறேன். நேற்று கால் வலியாக இருப்பினும்,அவர்கள் விருப்பத்திற்கு சம்மதித்து சென்றேன். இன்று எங்கும் செல்லவில்லை.

   தங்கள் குழந்தைகளும் இன்று தங்களுக்கு வாழ்த்து செய்து பேசினார்கள் என குறிப்பிட்டது எனக்கு மிகவு‌ம் மகிழ்வாயிருக்கிறது. உங்களின் இன்றைய அனுபவங்களை என்னுடன் உரிமையாக குறிப்பிட்டு எழுதியதற்கு மிகவும் சந்தோஷமடைந்தேன். நாளை தங்களிடமிருந்து பதிவை எதிர்பார்க்கிறேன். இப்படி ஒவ்வொருவரின் அனுபவங்களை இந்த வலைத்தளம் மூலமாக பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்பறவுகளால் மனம் மகிழ்வடைகிறது.

   பகிர்ந்த பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.
   நான் கொடுத்த "சுட்டியில்" இதுவரை யாருமே சென்று பார்க்கவில்லையே.! அதற்கும் கருத்து சொன்னால் மிகவும் மகிழ்வடைவேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. அருமை... என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களின் உற்சாகமான கருத்து மகிழ்வடையச் செய்கிறது. பதிவை படித்து பாராட்டியமைக்கும், அன்பான அன்னையர் தின வாழ்த்துகள் கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 6. சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு சாம்பார் சாதமெல்லாம் சாப்பிடப் பிடிக்கவில்லை. மதியங்களில் வெறும் மோர்சாதமும், சின்னவெங்காயமும் சாப்பிடுகிறேன் நான்கைந்து நாட்களாய்!

  அன்னையர் தின வாழ்த்துகள். என் அம்மா மறைந்தபோது மிகவும் வருந்தினேன் நானும்.

  இந்தப்பாடல் கேட்டிருக்கிறேன். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்து உண்மைதான். வெயிலுக்கு உகந்தது மோர் சாதந்தான். இங்கும்,சின்ன குழந்தைகள் இருப்பதால், எப்போதும் காரமில்லாத உணவுதான். முக்கால்வாசி பருப்பு சாதம். இல்லை மோர், தயிர் சாதந்தான். இந்த புளியோதரை சாப்பிட்டு மாதங்கள் நிறைய ஆகி விட்டதால் அன்று நேயர் விருப்பம். ஆனால் அதுவும் காரமே சுத்தமாக இல்லை..

   அனைவருக்கும், அன்னையின் அருகாமை எப்போதும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்வது? நியதிகளில் எந்நாளும் மாற்றமில்லையே. ! அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.

   பாடல் பகிர்வு கேட்டிருப்பதற்கும், தங்களுக்கும் பிடித்த பாட்டென்று சொன்னதற்கும் மகிழ்ச்சி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. அன்னையர் தின வாழ்த்துக்கள். எங்கள் நாட்டில் மார்ச்சில் வரும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நலமா? தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. ஓ..அப்படியா.! தங்கள் நாட்டில் மார்ச்சிலா? நமக்கெல்லாம் என்றும் அன்னையர் தினந்தானே.! அப்படியே கடந்து விட்டதெனினும், என் அன்பான வாழ்த்துகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. அன்னையர் தின வாழ்த்துகள்.

  ஆமாம்... யசோதாவுக்கு கண்ணன் குழந்தை இல்லையே... அவன் தேவகிக்குனா பிறந்தவன்? (இல்லை... யசோதாவுக்குத் தெரியாது அவன் தேவகியின் மைந்தன் என்று).

  பாடல் அருமையான பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
   /ஆமாம்... யசோதாவுக்கு கண்ணன் குழந்தை இல்லையே... அவன் தேவகிக்குனா பிறந்தவன்?/

   அதனால்தான் அவனை தன் உள்ளத்தில் சுமந்த தாய்யென குறிப்பிட்டிருக்கிறேன்.
   உண்மைதான்.! தேவகிக்கு பிறந்தவன் என்ற உண்மை யசோதைக்குத் தெரியாது. அவன் தனக்குப் பிறந்தவன் என்ற எண்ணத்தில்தான் யசோதையால் தன் பாசம் முழுவதையும் அவனுக்கே கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் எந்த நேரத்தில் உண்மைத்தாய் வந்து தங்களை பிரித்து விடுவாளோ என்ற நினைப்பில் பாசத்தின் நடுவில் சலனம் வந்து இடர்களை தந்து விடும்.

   பாடல் பகிர்வு நன்றாக உள்ளதென கூறியதற்கு மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. என்றைக்குமே அன்னையர் தினம்தானே கமலா அக்கா.

  அழகான பதிவு. அக்கா குழந்தைகள் கூப்ப்ட்டால் உடனே அவர்களோடு சென்றுவிட வேண்டும். ஆமாம் அக்கா அப்படியான தருணங்களை எல்லாம் மிஸ் பண்ணவே கூடாதாக்கும். அவர்களுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்.

  புளியோதரை ஆஹா!!!! நாக்கு ஊறுது.

  அக்கா பாட்டு கேட்டிருக்கிறேன் அக்கா அருமையான பாட்டு. ஆனால் எந்தப் படம் என்றெல்லாம் தெரியாது...

  நானும் என் அம்மாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன்

  தினமுமே அன்னையர் தினம் என்பதால் வாழ்த்துகள்!.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து கருத்திட்டிருப்பதற்கு மிக்க நன்றி.

   ஆம்.. தினமும் நமக்கு அன்னையர் தினந்தானே.! இதில் எந்த நாளை என்று குறிப்பிட்டு சொல்வது..இருந்தாலும், ஊரோடு ஒத்து வாழ்..எங்கள் வீட்டிலும் இந்த முறைகள் எல்லாம் கிடையாது.

   புளியோதரை.. அன்று ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என குழந்தைகள் சொன்னதினால் செய்தேன். அதனால்தான் அவர்கள் விருப்பப்படி அவர்களுடன் சென்று வந்தேன். தங்கள் கருத்துக்கும் நன்றி.

   பாடலை கேட்டு ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி. தங்களது கருத்துரைகள் எனக்கு மிகவும் சந்தோஷ த்தை தருகின்றன. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. அருமை...வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்களது முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகளுக்கும் என் மகிழ்ச்சி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்னையர் தின வாழ்த்துகளுக்கு நன்றிகள். தங்களுக்கும் இந்நாளைய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete