Friday, May 30, 2014

தந்தைக்கு ஒரு குறுந்தகடு.. (காணொளி)

அன்பு தந்தையே! எங்களிடமிருந்து உங்களையும், எங்கள் ஆருயிர் அன்னையையும்  கால(ன்)ம் பிரித்திருந்தும் உங்கள் இருவரின் அருகாமையையும் நான் எப்போதும் உணர்ந்து கொண்டேதான் இ்ருக்கிறேன். (என்னையும், என் குடும்பத்தை விட்டு கால(ன்)ம் பிரிக்கும் வரை) உங்களைப் பற்றி, உங்களது நல்ல குணங்களை பற்றி என் வாரிசுக்களுக்கு நிறையவே சொல்லி தாத்தா மாதிரி நல்ல குணங்களுடன் இருக்க வேண்டுமென்று, அன்புடன்தான் வளர்த்திருக்கிறேன். அப்படியே அவர்களும் வளர்ந்து வாழ்வில் நல்ல பெயருடன் தன் காலுன்றி நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆண்டவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையையும் தந்து சிறக்கச் செய்ய வேண்டுமென நான் தினமும் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் உங்களது ஆசிர்வாதத்தை தினமும் எங்கள் அனைவருக்கும் தந்து கொண்டுதான் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

             நான் இதற்கு முன் அன்னைக்கு ஒரு மடல் எழுதினேன். அதையும் நீங்கள் பார்த்து படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை நான் ஏன் சொல்கிறேனென்றால், என் அன்னையும் தங்களுடன்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்! அன்னையும் நீங்களும் ஒருநாள் ௬ட விட்டு பிரியாமல் அன்புடனும், அனுசரணையுடனும்  வாழ்ந்ததை நாங்கள் பார்த்தவர்களாயிற்றே! அன்னையிடம்தான் நீங்கள் எத்துனை பாசமாக இருந்தீர்கள்! அன்னையும் அப்படித்தான்! உங்கள் மேல் உயிராக, உங்கள் சொல் தட்டி நடவாமல், உங்கள் பெருமைக்கு சிறிதளவும் பங்கம் விளைவிக்காது, உங்களின் உயிராக  இருந்தார்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த ஆதர்சன தம்பதிகளாக நீங்கள் வாழ்ந்தீர்கள்.
                    
             ஆதர்சன தம்பதி என்றதும் எனக்கு அந்தத் திரைப்படம், உங்களுக்கு மிகவும் பிடித்தமான சூரியகாந்தி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் நடித்த நடிகர்களின் நிறைவான நடிப்பும் அதில் வரும் “நான் என்றால்,அது அவளும், நானும்” என்ற பாடலும் தங்களை கவர்ந்ததை அடிக்கடி நினைவு ௬ர்ந்து சொல்லிக்  கொண்டேயிருப்பீர்களே! இப்போதும் அந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் சொன்னதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


            அந்த  திரைப்படத்தில், தன் மனைவியுடன் ஏற்பட்ட மனத்தகராறுடன், ஆதர்சன தம்பதிகள் என பாராட்டுக்கள் பெறும் ஒரு விழாவுக்கு தன் மனைவியுடனே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு உட்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு முத்துராமனின் அற்புத முகபாவங்களையும்,  தன் மனைவி  இப்படி யெல்லாம் இருந்தால் நன்றாகவிருக்கும் என்பது போல் தன் மனதின் தாக்கங்களை அவர் பாடும் பாடல் வரிகளில் புலப்படுத்தும் பாங்கையும், அந்த பாடலை திறம்பட எழுதிய கவிஞர் வாலியையும், சிறப்பாக இசையமைத்த திரு. எம்.எஸ்.வி யையும், அந்தப் பாடலை என்றுமே மறக்க இயலாதபடி மிகவும் அருமையாக பாடியிருந்த திரு. எஸ்.பி.பி யையும், நீங்கள் சொல்லி சொல்லி பாராட்டுவதை இன்றும் நான் அருகிலிருந்து கேட்பது போல் அகம் மகிழ்கிறேன். அந்த பாடலை இதோ! உங்களுக்காக குறுந்தகிடில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டு ரசிக்கவும்.




      இந்த “பாடலின்படி உங்கள் அம்மா என்னுடன் வாழ்ந்திருக்கிறாள். பாடலின் வரிகள் எங்களை பார்த்து இயற்றிய மாதிரி எனக்குத் தோன்றும்!” என்று நீங்கள் அம்மாவை புகழும் போது அம்மாவின்  முகத்தில் தோன்றும் பெருமிதம் கலந்த நாணத்தை சொற்களால் என்றுமே விவரிக்க இயலாது. உணமையிலேயே ஆதர்சன தம்பதி பட்டத்தை பெற ௬டியவர்கள் நீங்கள்தாம் என நாங்கள் நினைக்கிறோம். உங்களை பெற்றோராக அடைந்ததில் மகிழ்வும் பெருமையுடன் ௬டிய கர்வமும் அடைகிறோம்.
     
      எங்களுக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால், நீங்களே மறுபடியும் எங்கள் பெற்றோராக அமையும் வாய்ப்பைத் தர வேணடுமென அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, நீங்களும் எங்கிருந்தாலும், எங்கள் நினைவாகவே இருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு, இந்த குறுந்தகிடை பதிந்து முடிக்கிறேன். பார்த்த விபரத்தை உங்களால் பகிர்ந்து கொள்ள இயலாவிடினும், விரைவில் கால(னின்)த்தின் உதவியுடன் தங்களிருப்பிடம் வந்து சேர்ந்த பின் பார்த்த விபரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். 
                                                          அன்புடன் 
 தங்கள் வாரிசு. 

2 comments:

  1. அற்புதமான கடிதம். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுத்தாக வடித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துடன் ௬டிய பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete