அன்னையர்
தினத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று மனது ஆவலுடன் பரபரத்து கொண்டேயிருந்தது.
என்ன எழுதுவது? என்று இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளைகளையும் (நம்ம வடிவேலு பாணியில்)
கசக்கிக்கொண்டேயிருந்தேன். அன்னையர் தினத்தை முதலில் கண்டு பிடித்து
அறிமுகபடுத்தியதை பற்றி எழுதலாமா? இல்லை! அதை முதலில்
கண்டுணர்ந்து பிரபல படுத்தியதை பற்றி எழுதலாமா? அல்லது, அன்னையர் தம் பெருமைகளை
மனம் உணர்த்துவதை மடை திறந்த வெள்ளமாக (அது படிப்பவர்களுக்கு தண்டனையாக
இருந்தாலும், ((முதலில் படித்தால்தானே அந்த பிரச்சனை!)) கொட்டலாமா? என்று சீட்டு குலுக்கி
போட்டு தேர்ந்தெடுப்பதற்குள் அன்னையர் தினம் அருகிலேயே நெருங்கி விட்டது. சரி!
ஏதாவது எழுதி விடவேண்டும்! இல்லையென்றால், கடலில் உண்டாகும் காற்றழுத்த தாழ்வு
மண்டலம் மாதிரி, அது உன்னை எளிதில் கடந்து சென்று விடுமென்று மனமானது எச்சரிக்க,
கவலை மேக மூட்டமாக சூழ்ந்து கொண்டது.
மழை வந்து செழிப்பாக்கும்! என்று
எதிர்பார்க்கும் மனிதர்களை, வேண்டுமானால், காற்றழுத்த மண்டலம் எப்போதும் ஏமாற்றி
விட்டு சுலபமாக கடந்து சென்று விடலாம்! ஏனென்றால், அதன் வாடிக்கையும் வேடிக்கையும்
எப்போதுமே அப்படித்தான்! ஆனால் அதுவும், நான் ஒரு விசயத்தை பற்றி எழுதி பதிவுலகில்
பெயர் (நல்ல) வாங்க வேணடுமென்பதும், ஒன்றாகி விடுமா?
நினைவாற்றல்களை நிறையவே கொடு!..... என்று
ஆண்டவனிடம் கொஞ்சம் அதிகமாகவே வேண்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அன்னையர் தினத்தை
பற்றி ஏதாவது நல்ல நல்ல தகவல்கள், புதிய பாணியில் எழுத வேண்டும். நீ ஏதாவது உதவி
செய்யேன் என்று மகனிடம் கேட்க நினைக்கும் போது, என் கருத்தை உணர்ந்து கொண்டவனாய்,
“நீயே! ஒரு அன்னை தானே! அம்மா! என் உதவி எல்லாம் உனக்கு எதுக்கு?” என்ற பதில்
வந்தது!
சரி படிப்பவர்களின் (படித்தால்…)
தலையெழுத்தை நாம் மாற்ற முடியாது! வருவதை அனைவரும் அனுபவித்து தானே ஆக வேண்டுமென்ற
முடிவுக்கு வந்து நான் எழுத துவங்கும் போது, எனக்கு ஒரு தொலைபேசி வந்தது.
“வரும் ஞாயிறன்று அன்னையர் தினம் அம்மா!
அதனால் சனி ஞாயிறு இரு தினங்களை உன்னுடன் கழிக்க ஆவலாக இருக்கிறது. அதனால் வெள்ளி
இரவு கிளம்பி நானும், உன் மாப்பள்ளையும் அங்கு வருகிறோம்! என்ன சொல்கிறாய்?”
என்றாள் என் மகள்.
“சொல்ல என்ன இருக்கிறது? தாரளமாக
புறப்பட்டு வா! என்றேன். சந்தோசத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை! இரு
தினங்களும் அவர்களை வரவேற்பதிலும் பொழுதை அவர்களுடன் கழிப்பதிலேயுமே சந்தோசமாக
கடந்து விட்டது. அதற்கு பிறகு என்ன? அன்னையர் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே
கடந்து விட்டது. (என்னை பார்த்து ஏளனம் செய்தவாறே!)
அன்னையர் தினத்தைப் பற்றி காலம் தாழ்த்தி எழுதினாலும், ஒன்று மட்டும் சொல்லிச்
செல்கிறேன், அன்னை என்ற வார்த்தையின் பொருளை அன்று உணர்ந்தேன். அன்னையாக வாழும் அத்தனை
தினங்களும் சிறப்பைத்தரும் அன்னையர் தினங்கள்தான். அன்னையருக்கு ஏது அன்னையர் தினம்….(தனியாக) எப்படி? என் கருத்து சரிதானே?
No comments:
Post a Comment