Sunday, November 6, 2011

அன்னைக்கு மடல்

அன்னை தந்தையின் வளர்ப்பினிலே,
அருமையாய் தினம் வளர்ந்து,
குலப்பெருமை குன்றாமல்,
குணமுடன், பிறர்குறை கூறாமல்,
குன்றில் இட்ட விளக்காக திகழ,
குமுறும் இரு நெஞ்சங்களுக்காக,
பால் மறக்கா பருவத்திலே,
பள்ளி பாடங்கள் பாங்காய் தினம் கற்று,
மழலை மொழி சொற்களை,

மாற்றியமைக்க பாடுபட்டு,
கற்றதை கண்டு பிறர் களிப்புற,
கல்லாதவைக்கு கடுஞ்சொல்பெற்று,
சற்று,
கடுமையும், கனிவுமாக வளர்ந்து,
கடுகளவும் எண்ணம் சிதறாமல்,
கருத்தொன்றி படித்து, களை எடுத்த நாற்றாய்,
பள்ளிபாடங்களை பரிசீலித்து,
பள்ளிக்குபின் பல்வேறு கனவுகளுடன்,
கல்லூரியில் கால்பதித்து, கற்றதை மேம்படுத்தி,
பாரினில் பிரகாசிக்க, பட்டங்களை சுமந்து,
பழுதில்லா பணி தேடி, தினசரி பயணித்து,
சுமந்த பட்டங்களுடன், சுயமாய் நின்றிட...
சுகமான ஒரு வேலைக்காக, ஓராயிரம்
சுகங்களை உதாசித்து, இறுதியில் ஈட்ட,
நல்லதோர் பணியில், நாள்பார்த்து அமர்ந்து,
நலம் குன்றினாலும், நாள்தோறும் உழைத்து,
நாடுவிட்டு நாடுசென்று, நற்பெயர்கள் பல,
நன்கு வாங்கியதில், நாட்கள் வருடத்தை சுவைத்து, ஓரிரு
நரை முடிகளை தலையில் காட்டியதால்,
மனம் பதறிய மாதாவின் சொல் தட்டாது,
அடுத்தவ(ளி)ரின் வாழ்க்கையில்
அ(நா)வசியமாக பிரேவேசித்து,
அனுதினமும் அனுசரிக்க பழகி,
புதிய சொந்தகளை சொர்க்கமாக்கி,
பழைய பந்தங்களை பரணில் கிடத்தி,
பகட்டு வாழ்க்கைக்காக, பகல், இரவு பாராது,
பணத்தை, வாழ்வின் இலட்சியமாக்கி
நோய் துறந்து,  பாய் மறந்து,
நேரம் மட்டுமே, நேர்த்தியாய் பார்த்து,
நிமிடங்களை வீணடிக்காமல், நிம்மதியை தானமாக்கி,
சற்று,
நிதானிக்கும்போது நின்று திரும்பினால்,
நீண்ட வாழ்நாளில் பாதி காணமால் போய்,
நிதர்சனத்தின் கண்கள் சுட்டெரிக்க,
துறந்த நோய்கள் பலத் துரத்த,
வளர்ந்த விட்ட வாரிசுகளின்,
வசமாகியிருந்த மிகுந்த காலத்தின்படியில்,
வழுக்கிவிழுந்து எழமுடியாமல்,
வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,
அம்மா, உன் நினைவு வருகிறது.
தாயே! அன்று எனைக்காண நீ
தவித்த சோகம், இன்று எனைத்தழுவுகிறது.
காத்திருந்து, காத்திருந்து, கண்மூடிவிட்ட உனை,
காண வந்த என்னிடம் இமை மூடிய
கண்களின் வழியே, நீ கேட்ட கேள்விகள் ஓராயிரம்!
அவற்றிக்கு பதிலளிக்க,
அப்போது தெரியாததால்,
இயன்றவரை பதில்சொல்ல,
இப்போது உனைத் தேடுகிறேன்.
தாயே நீ எங்கிருக்கிறாய்?
தனித்திருக்கிறாயா? உன்
தாயுடன் இருக்கிறாயா? உன்
வயது விளைவித்த வலிகளின் வலிமையை விளக்க, உன்,
வாரிசுகளை தேடி கிடைக்காமல், உன்னை
வளர்த்தவளிடம் விமர்சிக்க
வானுலகம் சென்றனையோ?
எந்திரமாக வாழ்ந்த நான் இந்த
எதார்த்தவாழ்வின் விளக்கம் பெற,
எப்படியும் என்னுடைய
தள்ளாதவயதில், மனம் தளர்ந்து,
தவித்துப் போய் நான் வரும்போது,
தாங்கி பிடித்து அமரவைக்க,
தனியிடம் ஒன்று உன் அருகாமையில்
தக்க வைத்துகொள் தாயே....!
இப்படிக்கு,
விரைந்து வரவிளையும்,
உன் .....................

No comments:

Post a Comment