Sunday, June 19, 2022

அன்னையின் அருள்.

 வணக்கம் அனைவருக்கும். 

காலையிலிருந்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஏன் அந்த நேரம் வரை கோவிலுக்கென்று  எங்கும் செல்லும் எண்ணங்கள் இல்லாத போது, நேற்று மாலை ஆர்.ஆர். நகர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு வீட்டிலுள்ள அனைவரும் தீடிரென சென்று வந்தோம். அவ்வாறு வரச்சொல்லி எங்களை அம்பாள் அழைத்தாள். அவளின் உத்தரவுபடிதான் அனைத்தும் தடையின்றி நடக்கிறது/நடந்தது. இனியும் நடக்கும். நேற்று அம்மனின் அருள்மிகும்  அழகு மனதை நிறைத்தது. அனைவரும் நலமாக நோய் நொடிகளின்றி வாழ வேண்டும் என பிரார்த்தித்து வேண்டும் போதே அன்னை "அவ்விதமே" என வாக்கு அருள்வதாக மனதுள் ஒரு பிரமை. அந்த அளவுக்கு அன்னையின் முகமும், கண்களும்  கருணை ததும்பி காட்சியளிப்பதாக  தோற்றமளிக்கும் ஒரு திருவுருவம் நேற்றைய நிறைவான தரிசனமாக கிடைத்தது. இந்த தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக இக்கோவிலுக்கு செல்லவில்லை. அதற்கு முன் பல தடவைகள் சென்றிருக்கிறோம். இங்கு செல்போன் படங்கள் எடுக்க எப்போதும் அனுமதியில்லை. இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் கோபுரங்களை வெளியிலிருந்தபடி கூட புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எனவே இணையத்திலிருந்து புகைப்படம் எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி கூகுள்... ...  

இன்று தான் எங்காவது கோவிலுக்கு போக வேண்டுமென நினைத்தோம். ஏனெனில் இன்று என் பேத்திக்கு (மகள் வயிற்று பேத்தி) பிறந்த நாள். . இன்று இங்கு மாலை நல்ல மழை. ஆனால் இன்று மழை வந்து விட்டால் குழந்தைகளை அழைத்து கொண்டு  போவது கடினமாகி விடுமேயென நேற்று மாலையே  வந்து  தரிசனம் செய்ய வைத்து விட்டாள் அன்னை. ஆனாலும் நேற்றும் ஒரளவு சிறு மழையோடு பெய்து நின்று விட்டதால், மழை விட்ட பின் சென்று  வந்தோம்.  அன்னையின் அருள் பெற்று என் பேத்தி  பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வை பெற வேண்டுமென மனதாற தாயிடம் வேண்டிக் கொண்டேன். நீங்களும் அவளை அன்புடன் வாழ்த்துங்கள். வலையுலக சுற்றங்களாகிய உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் அவளுக்கு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில், இதையாவது சற்று கிடைத்த நேரத்தில். மதியமே எழுதி விட நினைத்தேன். இந்த நினைப்பும் அன்னையின் அருளால்தான் தீடிரென என் மனதுக்குள் தோன்றியது. "அவள்" இல்லையெனில் அகிலமே இல்லை.  எந்த இயக்கமும் இல்லை. சரிதானே..?

 ஆனால், காலை டிபனுக்கு அப்புறம் மதிய உணவுக்கென அனைவருக்கும் சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார், உளுந்து வடை, அக்கார வடிசல் எனும் ச. பொங்கல் என சில பல பிறந்த நாள் வேலைகள் வந்து பதிவை முடிக்கவே காலந்தாழ்த்தி விட்டது. அதனால் இன்றும் நேற்றும்  மற்றவர்களின் பதிவுகளுக்கும் சரிவர வர இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். 

அனைவரும் இனிப்பு பிரெட் கேக் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு உங்கள் அன்பான வாழ்த்துகளை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

35 comments:

 1. குழந்தைக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.  இரண்டு வருடங்களுக்குப் பின் கோவில் சென்று வந்ததது என்பது மிகவும் சிறப்பு.  அவள் அழைப்பு இல்லாமல் நம்மால் தரிசிக்க செல்ல முடிவதில்லை.   2019 ஜனவரியில் திருப்பதி வரை சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் போனது என் மனதில் இன்னமும் இருக்கிறது.  அப்புறம் செல்லும் வாய்ப்பும் கிட்டவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
   உடனடியாக வந்து குழந்தைக்கு வாழ்த்துகள் தந்தமை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தேன்.

   ஆம் இறைவனின் அழைப்பு இல்லாமல் நாமாக கோவில்களுக்கு செல்ல முடிவதில்லை. நேற்று எதிர்பாராமல் கோவிலுக்கு சென்று அன்னையை வழிபட்ட சம்பவம்தான் என் பதிவுக்கும் காரணமாயிற்று.

   தங்களுக்கும் விரைவில் திருப்பதி சென்று பாலாஜியை வழிபடும் நேரத்தை அந்த பெருமாளே கண்டிப்பாக வகுத்து தருவார். அந்த பொன்னான நேரத்திற்காக நானும் கோவிந்தனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. நேற்று எங்கள் வீட்டிலும் அரைத்துவிட்ட வெங்காய சாம்பார்.  கூட உருளைக்கிழங்கு கறி!  நேற்றிரவு சென்னையில் இடி, மின்னல் மழை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அட.. உங்கள் வீட்டிலும் வறுத்தரைத்த வெங்காய சாம்பாரா ? ஆகா. . என்ன பொருத்தம்...மேலும் வெ.சாம்பாருக்கு பொருத்தமான உ. கி யும் சேர்ந்தால்
   சாப்பிட சுவையாகத்தான் இருக்கும். நான் இறைவனுக்கு நேவேத்தியம் செய்வதற்காக இனிப்பும் காரமுமாக உடன் செய்தேன்.

   இங்கும் இரவு பத்து மணிவரை நல்ல மழை. இப்படி மக்களுக்கு தொந்தரவில்லாத நல்ல மழைகள் பெய்யட்டும். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. இங்கே கடந்த சில நாட்களாகவே இரவில் மழை பெய்து கொண்டிருக்கிறது. உங்கள் பேத்திக்கு எங்கள் மனமார்ந்த நல்லாசிகளும், வாழ்த்துகளும். உங்கள் சமையல் மெனுவும் அபாரம். நான் சாம்பாரெல்லாம் மதியச் சாப்பாட்டுக்குப் பண்ணினால் இரவுக்கு அதற்கேற்றவாறு தோசை, ரவாதோசை எனப் பண்ண வேண்டி இருக்கு. ஆகவே இரவுக்கு என்ன என்பதைத் தீர்மானித்துக் கொண்டே மதியம் சாம்பார் வைக்க வேண்டி இருக்கு! :)))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என் பேத்திக்கு தங்களது மனம் நிறைந்த ஆசிகளையும், வாழ்த்துகளையும் தந்திருப்பது கண்டு மிக்க மன மகிழ்ச்சி அடைந்தேன். ரொம்பவும் நன்றி சகோதரி.

   இங்கும் நிறைய நாட்களாக இரவானதும் மழை பெய்கிறது. என்னவோ அன்று கோவிலுக்குச் செல்லும் போது சிறிய மழையுடன் நின்று விட்டது. கடவுள் சித்தம்.

   ஆம்.. சாம்பார் வைத்தால் அதுவும் வறுத்து அரைத்த சாம்பார் தாங்கள் சொன்னபடி இரவு தோசை. இட்லி இருந்தால்தான் நன்றாக இருக்கும். இரவு சாதமானலும் சரிதான்.. கொஞ்சம் சாம்பார் காலியாகும். இல்லாவிட்டால் காலியாவது கடினந்தான். மாலையே மறுபடியும் ஒரு கொதி வர வைத்து வைத்துக் கொண்டால், சமயங்களில் மறுநாளைய காலை டிபனுக்கு கை கொடுக்கும். இன்றைய ரவை உப்புமா வுக்கு தேங்காய் சட்னியுடன் அப்படிதான் உதவியது.:)
   தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. ராஜராஜேஸ்வரி கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய காணொளிக்கு நன்றி. இங்கே நானும்/நாங்களும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குப் போய் 3 வருஷங்கள் ஆகிவிட்டன. என்னால் இனிமேல் போக முடியுமா என்பதும் சந்தேகமே! ஆனால் நாங்க குலதெய்வம் கோயிலுக்கு அவ்வப்போது போய் வருவது சற்று மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் அளிக்கிறது. இல்லைனா பித்துப் பிடிச்சாப் போல் ஆயிடும். :(

  ReplyDelete
  Replies
  1. அப்படீலாம் நினைக்காதீங்க. நிச்சயம் நம்பெருமாள் தரிசனம் வாய்க்கும். சில நேரங்களில் உங்கள் எழுத்தில் மனம் கலங்குகிறது

   Delete
  2. நம்பெருமாளுக்கென்ன? வருஷத்துக்கு 3,4 தரம் இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துடறார். 2 தரம் நிச்சயமாப் பார்க்கலாம். சித்ரா பௌர்ணமி, பதினெட்டாம் பெருக்கு. மற்றவை உறையூரில் திருட்டுத்தனமாய்க் கல்யாணம் பண்ணிக்கப் போகும்போதும் வரும்போதும்! இங்கேயே அநேகமாக இரவில் தங்கி இருப்பார். எந்தவிதமான சப்தமும் இல்லாமல் கிளம்பிப் போயிட்டுத் திரும்பி வரச்சேயும் அப்படியே சப்தமில்லாமல் வருவார். அந்தத் திருட்டுத்தனத்தைத் தான் பார்க்க முடியலை. இங்கே வந்ததும் ஒண்ணுமே தெரியாதவர் போல் தாயார் சந்நிதிக்குப் போக முயல்வார். அதன் பின் ஆரம்பிப்பது தான் மட்டையடி உற்சவம். வீடியோ தயவால் அதெல்லாம் காணக் கிடைக்கிறது.

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ராஜராஜேஸ்வரி கோவில் வீடியோ நன்றாக இருப்பதாக கூறியமைக்கு மிக்க நன்றி. கோவிலில் படங்கள் எடுக்க விட்டிருந்தாலும், கோவிலைப்பற்றி உங்கள் அளவுக்கு விபரமாகச் சொல்ல எனக்குத் தெரியாது. நீங்களும், சகோதரி கோமதி அரசு அவர்களும், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களும் சென்று வந்த கோவில் விபரங்களை நன்கு மனதில் பதியும் வண்ணம் பதிவில் எழுதும் போது உங்களனைவரின் திறமைகள் கண்டு வியந்திருக்கிறேன்.

   நீங்கள் உள்ளூரிலேயே இருந்து கொண்டு ரங்கநாதரை சேவிக்க வருட கணக்கில் செல்வதில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. நாங்களும் மயிலையில் பத்து வருடங்களுக்கு மேலாக இருந்தும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எண்ணிக்கையின் கணக்கில்தான் சென்றிருப்போம். திருமங்கலத்தில் இருந்தும் மதுரை மீனாட்சியை தரிசித்ததும் அவ்வாறே... அந்தந்த ஊர்களில் இருக்கும் போது அந்தந்த பிரசித்தி பெற்ற தெய்வங்கள் நம்மருகிலேயே இருப்பது போன்ற திருப்தியை அடைந்து விடுவோம். நீங்கள் சொல்வது போல், நம் இயலாமைகளை , முடியாமைகளை புரிந்து கொண்டவனாய் அவனே வந்து உங்களுக்கு காட்சியை தருவான். அதிலேயே மனது திருப்தி அடைந்து விடும். குலதெய்வ வழிபாடு அவ்வப்போது கிடைத்து வருவது மனதுக்கு உற்சாகத்தை தருவதுதான். அதை தொடர்ந்து செய்து வாருங்கள். அதற்கு அவனருள் என்றும் தடையின்றி கிடைக்க நானும் வேண்டிக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. மேலே திருமலை வரை போயிட்டுப் பெருமாளைப் பார்க்க முடியலைனால் மனதில் வேதனை தான். நேற்று வீட்டுக்கு வந்திருந்த நண்பர் இப்போதையத் திருப்பதிப் பெருமாள் முன்னால் இருந்தவர் இல்லை என்பதும் ஆங்கிலேயர் காலத்துக்குச் சற்றே முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்றும் சொன்னார். திருமலஈயில் இருந்தவரைக் கொஞ்ச நாட்கள் அந்நியரிடமிருந்து காப்பாற்றக் கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் இன்னம்பூரில் வைத்துப் பாதுகாத்ததாகவும் பின்னர் திருமலைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தும் அது இயலாமல் போனதாகவும் இப்போ இருக்கிறவரே தொடர்ந்து இருக்கும்படி நேரிட்டதாகவும் சொன்னார். இன்னம்பூர்ப் பெருமாளை நாங்களும் தரிசித்தோம். ஆனாலும் இந்தத் தகவல் கேட்டதாக நினைவில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. இது புதிய தகவல். நம்பிக்கை இல்லை

   Delete
  2. வணக்கம் சகோதரி

   ஒரு கோவிலைப் பற்றியம், அங்கிருக்கும் தெய்வங்களை குறித்தும். புதுபுதுச் செய்திகளாக இப்படித்தான் ஏனோ சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது போல் நம் பாரம்பரிய நம்புகெகைகளை குலைப்பது போல திருமலையில் இருப்பவர் பெருமாள் இல்லை, முருகன்தான் எனவும் சொல்கிறார்கள் கட்டுக்கதைகள் எப்போதுமே வேகமாக பரவும் தன்மையுடையவை என்பதை உணராதவர்கள். நீங்கள் சொல்லும் தகவல்கள் எனக்கும் புதிது. இதுவரை கேள்விபடாதது. எதை நம்புவது எனத் தெரியவில்லை. இறைவனின் உருவ வழிபாடுகள் நம் மனதின் அமைதிக்காகத்தான் என சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னவோ ஒன்றும் புரியவில்லை. கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. ஹிந்து நாளிதழ் காரங்க குடும்பத்துக் குல தெய்வம் அந்த இன்னம்பூர்ப் பெருமாள். ஹிந்து பத்திரிகைக்கரங்களுக்கும் இன்னம்பூர் தான் பூர்விகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   இந்த இன்னம்பூர் கோவிலைப்பற்றி நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள். இதுவும் எனக்கு தெரியாதது. நானும் யூடியூப் சென்று தேடினேன். அங்கு ஸ்ரீவாச பெருமாள் கோவிலின் படங்களை மட்டும் பகிர்ந்திருக்கிறதே தவிர செய்திகள் ஒன்றும் கிடைக்கவில்லை. நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. காணொளி கண்டேன் சிறப்பு.

  பெயர்த்தி அனைத்து நலனும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அம்மன் கோவிலின் காணொளி கண்டு கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.அது போல் என் பெயர்த்திக்கும் தாங்கள் தந்த வாழ்த்துக்களை கண்டும் என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. தங்களது அன்பான ஆசிகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. ஶ்ரீராம் இன்னம்பூர் சென்றிருப்பதாகக் கூறி இருக்கும் கருத்து இங்கே வரலை. ஆனால் என்னோட மெயில் பாக்ஸில் இருக்கு! :(

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   அப்படியா? சகோதரர் இன்னம்பூர் சென்று பெருமாளை தரிசித்து இருக்கிறாரா? ஏன் இப்படி அனைவரது கருத்துக்களும் இடம் மாறிச் செல்கிறதோ . அதுவும் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்:)
   தகவலுக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. இன,று வெங்காய சாம்பார் செய்யச் சொல்வதாக இருந்தேன். பகல் முழுதும் மாமியார் அடுத்த நாலு நாட்களுக்கு எவ்களோடு இருப்பதால் அதற்கெல்லாம் தடை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இந்த மாதிரி பெரியவர்கள் இருக்கும் வீட்டிலும், அல்லது வெங்காய வாசனை பிடிக்காதவர்களுக்குமாக தனியாக ஏதேனும், வற்றல் குழம்பு, துவையல் என செய்து தந்து விட்டு பிடித்தவர்கள் வெங்காயம் சேர்த்து செய்து கொள்ளலாமே.... எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் பாட்டிக்காக இப்படித்தான் செய்வோம். அவர்களுக்கென்று ருசியாக இப்படி ஏதேனும் செய்து தரும் போது அவர்களுக்கும் வித்தியாசம் ஏதும் வராது. கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. நிறைய பின்னூட்டங்கள் காணவில்லை. அதில் ஒன்று,

  எங்க அக்காரவடிசல் படம் போட்டால் நிறையபேர் எடுத்துக்கொள்ளுவார்கள் என்று பயந்து கேக் படம் போட்டுவிட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்னவோ பதிவுகளுக்கு வந்த சோதனை.. போட்ட கருத்துரைகள் எங்கே சென்று மாயமாகிறதோ?

   /எங்க அக்காரவடிசல் படம் போட்டால் நிறையபேர் எடுத்துக்கொள்ளுவார்கள் என்று பயந்து கேக் படம் போட்டுவிட்டீர்களா?/

   ஹா.ஹா.ஹா. இல்லையில்லை . மதியம் சாப்பாட்டு நேரத்தில் படங்கள் எடுக்க மறந்து விட்டது. அதன் பின்தான் அன்னையின் அருளால் மதியம் எழுதவே ஆரம்பித்தேன் என பதிவில் சொல்லியுள்ளேனே.... இது சென்ற வருடம் நாங்களே குழந்தையின் பிறந்த நாளுக்கு வீட்டில் செய்த கேக்கின் படம். (ஆகா.. உண்மையை சொல்லி விட்டேனே. :))) இந்த வருடம் வீட்டின் இளைய தலைமுறைகள் விருப்பப்படி வெளியிலிருந்து கேக் வாங்கினார்கள். அதையும் என் செல்லில் படங்கள் எடுக்க மறந்து விட்டேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. கோவில் அருமை. அம்பாள் உங்களைக் கூப்பிட்டிருக்கிறாள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம். கோவில் சுத்தத்துடன் அருமையாகத்தான் இருந்தது. உண்மைதான்... அன்னைதான் வரச்சொல்லி அழைத்தாள்.நம் எண்ணங்களின் சக்தியாய் மனதுக்குள் இருந்து அந்த நிமிடம் உத்தரவு பிறப்பித்தாள். அவளன்றி ஒர் அணுவும் அசையாது. தங்கள். கருத்துரைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. ராஜராஜேஸ்வரி அம்மன் காணொளி அருமை. அம்மனை பக்கத்தில் காட்டியது அருமை.
  அன்னையின் கருணை ததும்பும் முகம் நிறைவை தரும் என்பது உண்மை. காணொளியில் சிரித்த கனிவு ததும்பும் முகம் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவு தந்தது உண்மை.

  "//அவள்" இல்லையெனில் அகிலமே இல்லை. எந்த இயக்கமும் இல்லை. சரிதானே..?//

  ஆமாம், சக்தி இல்லையேல் இயக்கம் ஏது?
  பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அன்புகள், ஆசிகள்.

  கேக் எடுத்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து காணொளியை பார்த்து அம்மனை தரிசனம் செய்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன்.

   /ஆமாம், சக்தி இல்லையேல் இயக்கம் ஏது?/

   ஆம். நமது நல்ல எண்ணங்களுக்குள் இந்த சக்திதான் குடி கொண்டுள்ளது.

   என் பேத்திக்கு தங்களின் ஆசிகளை பரிபூரணமாக தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் அவளிடமும் தெரியபடுத்துகிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை மன நிறைவோடு நீங்கள் தந்ததை கண்டு நானும் மன மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் வாழ்த்துக்களை அவளிடம் சொல்கிறேன். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. உங்களின் பேத்திக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் கமலாக்கா. தாம்தமாகத்தான் சொல்கிறேன் என்றாலும் வாழ்த்து எப்போதும்தானே!! பேத்தி எப்போதும் சந்தோஷமாக இருந்திட இறைவன் ஆசிர்வதித்திடட்டும்!

  காணொளி மிக நன்றாக இருக்கிறது. நாங்களும் செல்ல நினைத்த கோயில் ஆனால் இது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

  // ஆனால், காலை டிபனுக்கு அப்புறம் மதிய உணவுக்கென அனைவருக்கும் சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார், உளுந்து வடை, அக்கார வடிசல் எனும் ச. பொங்கல் //

  ஆஹா சூப்பர் மெனு!!!!

  அக்கா கருத்து அதிகம் போடவில்லை. கருத்து போவதே கடினமாக இருப்பதால், மற்றும் வேலைப் பளு மீண்டும்....டக்கு புக்குனு போட்டுப் போகிறேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   குழந்தைக்கு உங்களின் அன்பு வாழ்த்தினை கண்டு மிக்க மன மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் ஆசிகள் அவள் வாழ்க்கையை கண்டிப்பாக மேம்படுத்தும். .மிக்க நன்றி சகோதரி.

   தாமதமெல்லாம் ஒன்றுமில்லை. தங்களின் வேலை பளுவிலும் நினைவாக வந்து பதிவை படித்து குழந்தைக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   கோவிலுக்கு நேரம் அமையும் போது கண்டிப்பாக வாருங்கள். அழகான கோவில். என் சமையல் மெனுவை பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி சகோதரி ஏதோ என்னால் இயன்றதை நேற்று செய்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. இரண்டு பின்னூட்டங்கள் போட்டேன். உடனே வந்ததையும் பார்த்தேன். இப்போது ஒன்று தான் இருக்கிறது.
  இனி பதிவுக்கு போடும் கருத்துக்களை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அடாடா.. நீங்கள் இரண்டு கருத்துக்கள் போட்டதில் இரண்டையும் பார்த்தும் கூட ஒன்றுதான் வந்துள்ளதா? போட்டவை எல்லாம் எங்கேதான் மாயமாகி போகிறதோ ? நானும் இப்படித்தான் சகோதரி பானுமதி அவர்களின் பதிவுக்கு போட்ட கருத்தை பார்த்தேன். பிறகு காணவில்லை. இந்த கருத்துப் பெட்டி வந்த பிறகுதான் இந்த தலைவலி ஆரம்பித்துள்ளது.நீங்கள் மீண்டும் வந்து தகவல் சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. இங்கு அமெரிக்காவில் சிட்டி பேங்க் முன்னால் நின்று படம் எடுத்தேன். 'சிட்டி' என்ற லோகோ வராதபடி படம் எடுங்கள் என்றார் காவலாளி. நம்மூர்க் கோயில் கோபுரங்களுக்குமா படம் எடுக்கத் தடை விதிக்கிறார்கள்! ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அமேரிக்காவிலும் வங்கி முன்பாக இப்படி சில தடைகளை உங்கள் வாயிலாக அறிகிறேன். ஆம்.. இங்கும் சில கோவில்களில் புகைப்படங்கள் எடுக்க தடைதான். இக் கோவிலினுள்ளும் சென்ற பின் படங்கள் எடுக்க தடை. ஒரு வேளை சாலையை ஒட்டி இருக்கும் இக்கோவிலின் வெளியிலிருந்தபடி கோபுரங்களை படங்கள் எடுக்கலாம் என்னவோ.. ஆனால் யாரும் அவ்விதம் செய்யவில்லை. அதனால் நாங்களும் எடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் கூகுளில் இந்தக் கோவிலின் படம் கிடைத்தது. அதை வெளியிட்டேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நான் தாமதமாக பதில் கருத்து தந்ததற்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete