Wednesday, December 11, 2024

மஹாகவிக்கு வந்தனங்கள்.

இன்று மஹாகவி பாரதியார் பிறந்த நாள், மற்றும், சர்வ தேச மலைகளின் தினம். பெரிய மலைகளைப் போல நல்ல குணங்களில் இவரும் உயர்ந்தவர் என்பதினால், மலைகளும் இவருடன் இன்று சேர்ந்து புதிதாக பிறந்த சந்தோஷத்தை இணைத்து கொண்டதோ ? "பா"க்களுக்கு பெருமை சேர்த்த அவருடன் அழகுக்கென்ற வார்த்தைக்கு மறுபெயரெடுத்த "ரதி"யும் அவர் பெயருடன் சேர இணங்கியதால்,"பாரதி" என்றானாரோ..? இல்லை,"பார்" உள்ள வரை இவரின்"பா"க்களுடன்,"ரதி" போன்ற அழகும் சேர்ந்து மிளிரும் என்பதினால் இவர் பா(ர்)ரதி என்று  ஆனாரோ..? எது எவ்வாறாயினும், இந்த மஹாகவியை நம் மனமென்ற ஒன்று உள்ளவரை அந்த மனதிலிருந்து அகற்ற இயலாது. 

இது சின்னதாக என் சிந்தனையில் உதித்த ஒரு கவிப்பாடல்.(?) 

மஹாகவியின் மனதினிலே

மலர்ந்த கவிதை பூக்களை

மலர்சரமாக ஏற்றுக் கொள்ள 

மலையும், மடுவும்  கடுகளவும்

மறுத்ததில்லை.

பறவைகளும்  இவரின் 

பாக்களை அனுதினமும் கேட்டு

பரவசத்துடன் தானும் அவ்வாறே

பயிற்சித்து பாடி மகிழ்ந்தன.

சித்தம் மகிழ தன் கிளை பரப்பி

சிரிப்போடு, வளைந்தோடும்

சிந்து நதி மட்டும், தம்

சித்தம் களித்து அவர் ஈந்த

இச்சிறப்பான கவியை

சிறிதளவேனும் மறுக்குமா...! 

இது நம் தேசமான இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும்/விவரிக்கும் ஒரு பாடல். பாரதியார் அவர்கள் இயற்றிய அருமையான பாடல். நடிகர் திலகத்தின் அருமையான முகபாவங்களுடன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இன்று பாரதியாரின் பிறந்த நாள் என காலையிலேயே என்  நினைவடுக்குகளின் மூலமாக தெரிந்தவுடன் என் மனதினில் அடிக்கடி உதித்து வந்த பாடல். ஏதோ என்னால் இயன்ற வண்ணம் அவசரமாக இன்று மாலைக்குப் பின்னர் தொகுத்த இப்பதிவினில், அவர் புகழ் பற்றி இன்னும் நிறைய எழுதும் அளவிற்கு நான் கற்கவில்லை. ஆதலினால் இப்பாடலை ரசித்து அவர் புகழை நினைவு கூர்வோம். 

இன்றைய நாளை நம் சகோதரிகள் கீதா சாம்பசிவம் அவர்களும்,  அனுராதா பிரேம்குமார் அவர்களும் எப்போதுமே மறந்ததில்லை..! வருடந்தோறும் மஹாகவியின்  நினைவுகள் அவர்கள் நெஞ்சில் இந்த நாட்களில் மலர்ந்த பதிவுகளாகி விடத் தவறியதில்லை. அவர்கள் வீட்டின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களின் எண்ணங்களையும், நேரங்களையும் இன்று தனதாக்கி கொண்டதோ என்னவோ? அவர்களுக்காக, அவர்களின் சார்பாக இன்று பாரதியாரின் நினைவுகளை நாம் போற்றுவோம். அவர் கவித்துவமான மனதை வாழ்த்தி (மலைகளின் உயரத்திற்கும் மேல் ஒப்பான அவர் கவிமனதை வாழ்த்த நமக்குத் தகுதியில்லை.) வணங்குவோம். 🙏.



இம் மண்ணில் பிறந்து சிறந்து விளங்கிய  மாமனிதராகிய மஹாகவிக்கும் வணக்கங்கள்.🙏. மண்ணில் உயர்ந்து நிற்கும் இந்த மாமலைகளுக்கும் வணக்கங்கள்.🙏. 

இப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

22 comments:

  1. பாரதியை நினைவு கூர்ந்த விதம் நன்று.

    கவிதை சிறப்பு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? உங்கள் அலுவலக வேலைகளின் பளு தற்சமயம் எவ்வாறுள்ளது? உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பதிவுக்கு உடனடியாக வருகை தந்தமைக்கும், கருத்து தெரிவித்திருப்பதற்கும் என் மன மகிழ்வுடனான நன்றி. பதிவை ரசித்து வாழ்த்து தந்திருப்பது மேலும் மகிழ்ச்சியடைய வைக்கிறது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மஹாகவி பாரதியாரை நினைவுகூர்ந்தது சிறப்பு.

    நெல்லைப் பகுதியைச் சேர்ந்த எட்டயபுரத்துக் கார்ரால் இந்தியாவைப் பற்றிச் சிந்தித்து, சுதந்திரப் பாடல்கள் இயற்றி வானளவு புகழ் பெற முடிந்தது ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. இதெல்லாம் ஒரு கொடுப்பினைதான். "தோன்றின் புகழோடு" என்ற வாக்கியத்திற்கேற்ப மகாகவி பாரதியாரின் புகழ் என்றும் மங்காமல் இருக்கும். இதில் நாமும் அவர் பிறந்த நெல்லையில் பிறந்தோம் என்ற சிறு மகிழ்வு உள்ளது. அதற்காக இறைவனுக்கு நன்றி. தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பதிவில் குறிப்பிட்டிருப்பது போல, கீதா சாம்பசிவம் மேடமும், அனுராதா ப்ரேம்குமார் அவர்களும் பதிவு வெளியிட மறந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. ஆனால், சகோதரி அனு ப்ரேம் அவர்கள் நான் பதிவு எழுதி போட்டு விட்டு என் நண்பர்கள் பதிவில் வந்துப் பார்த்தவுடன் அவர்களும் மஹாகவியின் பிறந்த நாளுக்கான பாரதியாரின் பதிவொன்று எழுதியிருந்தார்கள். நானும் உடனே சென்று அவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, ஆச்சரியப்பட்டேன். அவரும் இன்று காலை என் பதிவுக்கு வந்து கருத்துரை தந்திருக்கிறார்கள். உங்கள் இருவருக்கும் என் அன்பான நன்றிகள். .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மஹாகவியை நினைவு கூர்ந்தது நன்று.  பொருத்தமாக, அழகாக ஒரு கவியும் புனைந்து விட்டீர்கள்.  கீதா அக்கா உ வே சா அவர்கள் நாளையும் மறக்காமல் கொண்டாடிவிடுவார்.  அவரிடம் தற்சமயம் வலைப்பக்கம் வரும் ஆர்வம் குறைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்திருப்பது கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஆம்.. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பாரதியார், மற்றும் தமிழ் தாத்தாவின் நினைவுகளயும் மறக்கத் தவறுவதேயில்லை . அவரின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் நான் உணர்வேன். அவர் முன்பு போல் பல பதிவுகளை தந்து பல நல்ல விஷயங்களை நமக்கு தெரியபடுத்துமாறு அமையும் காலங்கள் விரைவில் வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அந்தக் கால படங்களில் பெரும்பாலும் பாரதியார் பாடல்களிலிருந்து ஒன்றாவது இடம் பெற்றுவிடும்.  கப்பலோட்டிய தமிழன் போன்ற சில படங்களில் முழுவதும் பாரதியார் பாடல்களே இடம்பெறும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கப்பலோட்டிய தமிழன் போன்ற சில படங்களில் முழுவதும் பாரதியார் பாடல்களே இடம்பெறும்./

      ஆம். அந்தக்கால படங்களில் பாரதியாரின் பாடல்கள் இடம் பெறும். நடுவில் வந்த கமல் படங்களிலும் தப்பாமல் அவரின் சில பாடல்களை இணைத்து விடுவார். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஓ...  இன்று சர்வதேச மலைகளின் தினமா?  அதையும் பொருத்தமாக பாரதியார் புகழோடு இணைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /அதையும் பொருத்தமாக பாரதியார் புகழோடு இணைத்து விட்டீர்கள்./

      ஆம். இன்று சர்வதேச மலைகளின் தினமாம். நான் இணைக்கவில்லை. அதுவாகவே இணைந்து வந்திருக்கிறது. மலைகளை கண்டு கவிபாடும் அவருக்கும் தன் பிறந்த நாளில் மலைகளை கண்டதால் மகிழ்ச்சி. மலைகளுக்கும் ஒரு மா மனிதரால் என்றுமே மட்டற்ற மகிழ்ச்சி. இரு மகிழச்சிகளும் இன்று ஒன்றுடன் ஒன்றாக இணைந்து விட்டன. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வாழ்க வளமுடன் கமலா ஹரிகரன்
    பதிவும், பகிர்ந்த பாடலும் அருமை.
    பாரதியின் நினைவு நாள், பிறந்த நாளுக்கு நானும் பதிவு போட்டு கொண்டு இருந்தேன் முன்பு. சில தினங்களாய் உடல் நல குறைவாலும், அலுப்பு காரணமாக பதிவே போட வில்லை.

    நேற்று சாரின் நினைவு தினம் அதனால் வலைபக்கம் வரவில்லை.
    இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.
    உங்கள் கவிதை அருமை.

    //இம் மண்ணில் பிறந்து சிறந்து விளங்கிய மாமனிதராகிய மஹாகவிக்கும் வணக்கங்கள்.🙏. மண்ணில் உயர்ந்து நிற்கும் இந்த மாமலைகளுக்கும் வணக்கங்கள்.🙏. //

    நானும் உங்களுடன் சேர்ந்து வணங்கி கொள்கிறேன்.
    மலை , தென்னைமர படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நீங்கள் முன்பு பாரதியாரைப்ப் பற்றிய பதிவுகள் போட்டிருப்பீர்கள் என்றுதான் நானும் நினைத்தேன். நீங்கள் எவ்வளவு வருட காலமாக இந்த வலைத்தளத்தில் உலா வருகிறீர்கள். உங்கள் அனுபவங்கள், அதன் வாயிலாக வரும் பதிவுகள் என அனைத்துமே அருமையாகதானே இருக்கும்..! என்னுடைய பதிவுகளில் பாரதியாரை பற்றிய பதிவுகள் ஒன்றிரண்டுதான்.

      சாரின் நினைவு தினத்தை நானும் நினைவு வைத்துள்ளேன். திருக்கார்த்திகை வந்தாலே உங்கள் இருவரின் நினைவுதான் எனக்கு வரும். அவரின் ஆசிகள் என்றும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்.

      தற்சமயம் உங்கள் உடல் நிலை எவ்வாறுள்ளது.? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு உடல்நல குறைவிலும் நீங்கள் என்பதிவுக்கு வந்து, பதிவை ரசித்து கருத்துக்கள் தந்து வாழ்த்தும் தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

  8. அருமையான கவியின் பதிவுக்கு நன்றி அக்கா, பதிவும் பாடல்களும் மிக சிறப்பு ...
    இந்த ஆண்டு மகனின் 12ம் வகுப்பு தேர்வு அதனை தொடர்ந்து கல்லூரியில் சேர்க்கை மற்றும் கணவரின் சில பயணங்கள் என இந்த ஆண்டு சிறகை விரித்துக் கொண்டு பறந்தது. ஆனாலும் முயன்று ஆழ்வார்களின் தினம் மற்றும் தொடர் பதிவு இடம் விஷயங்களை மட்டும் பதிவிட முயன்றேன்.
    பாரதியின் பதிவையும் முன்பே தொகுத்து விட்டேன் ஆனால் அன்று கைசிக ஏகாதேசி அதனால் எதை முன்பு இடுவதில் என எண்ணியத்தில் முதலில் நம்பியும் பின் பாரதியும் வந்தார்கள்.

    பாரதி பற்றி அறியவே எனது பதிவுகள், நேற்று எனது தளத்தில் பதிவிட்டதும் இணையத்தில் கிடைத்த செய்திகளே, ஒவ்வொரு ஆண்டும் இதற்காக தேடும் பொழுது கிடைக்கும் தகவல்களை அங்கு பகிர்கிறேன்.

    நீங்களும் உங்கள் தளத்தில் பதிவிட்டதிற்கு மிகவும் மகிழ்ச்சி அக்கா ..தொடரட்டும் உங்களின் பதிவுகளும், அங்கு உங்களின் வருகையும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நான் அழைத்தவுடன் தாங்கள் வந்து பதிவை ரசித்து கருத்துகள் தந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      /இந்த ஆண்டு மகனின் 12ம் வகுப்பு தேர்வு அதனை தொடர்ந்து கல்லூரியில் சேர்க்கை/

      நல்லது.. கேட்கவே மகிழ்வாக உள்ளது. தங்கள் மகன் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நல்ல தரமான கல்லூரி கல்வியும் அவருக்கு இறைவனருளால் கிடைக்கட்டும். இத்தனை வேலைகளுக்குமிடையே தாங்கள் பல பதிவுகள் தருவது பெருமைக்குரிய விஷயம். வாழ்த்துகள் சகோதரி.

      இதில் தவறாமல் பாரதியாரின் நினைவாக பதிவை தந்ததும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் நல்ல நல்ல செய்திகளை தருவதும், இணைப்பதும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சிலவற்றை நான் படித்ததும் கருத்துகளை உடனே தந்து விடுவேன். சில தாமதமாகும். ஆனாலும் படித்து விடுவேன். உங்கள் நல்ல பதிவுகளும் தொடரட்டும். நானும் இயன்ற வரை எழுதுகிறேன். நீங்களும் உங்களுக்கு சமயம் வாய்க்கும் போது என் பதிவுகளுக்கு வாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.தங்களின் விபரமான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ///தங்கள் மகன் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நல்ல தரமான கல்லூரி கல்வியும் அவருக்கு இறைவனருளால் கிடைக்கட்டும். //

      நன்றி கமலா அக்கா ..ஆனால் போன ஆண்டு முடித்து கல்லூரில் சேர்ந்தும் விட்டார் ..

      94 % 12 th மார்க்கும், jee தேர்வில் நல்ல ரேங்க் க்கும், army examல் பாஸ் செய்து, airforce selection dehradun சென்று வந்தார், அங்கு 5 நாட்களுக்கு பிறகு conference out . இப்படி பல பல தேர்வுகளை முடித்து இப்பொழுது vit chennaiயில் சேர்ந்துவிட்டார்

      Delete
    3. வணக்கம் சகோதரி

      ஓ.. அப்படியா? அவர் சென்ற வருடமே 12th முடித்து விட்டாரா? அதில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதற்கும், பலபல தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றிருப்பதற்கும் சந்தோஷம். தங்கள் மகன் மேலும் நன்கு பயின்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மீள் வருகை தந்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஆமாம் அக்கா அவங்க ரெண்டு பேரும் பதிவிடுவது வழக்கம்.

    அனு அவங்க ஆழ்வார்களின் தினப் பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்காங்க...நான் வாசிப்பதுண்டு ஆனால் கருத்து இடுவதில்லை. அவங்களோடு பேசியும் ரொம்ப நாளாச்சு அவங்க பையன் 12 பரீட்சை எழுதுவார் என்பது என் நினைவு...முன்பு பேசிய போதான நினைவு

    உங்க பதிவும் சூப்பர் கமலாக்கா....நல்ல பாடல்கள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம்.. நான் வலைத்தளம் வந்தது முதல் அவர்கள் இருவரும் பாரதியாரின் பிறந்த நாள். நினைவு நாளென ஒரு பதிவுகளை எழுதி விடுவார்கள். பார்த்திருக்கிறேன்.

      இப்போது சகோதரி அனு ப்ரேம் அவர்கள் பக்தி பதிவுகள் தந்து கொண்டேயிருக்கிறார் நானும் அவ்வப்போது அவர் தளம் சென்று பதிவுகளை ரசித்து வருவேன். ஆம். அவர் மகன் 12 ம் வகுப்பு படித்து வருவதாக மேலே கருத்தில் கூறியுள்ளார்.அவர் மகன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.

      நீங்கள் என் பதிவை ரசித்து பாராட்டியிருப்பதற்கு என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ​நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்

    கீசா மேடம் இந்த வருடம் நினைவு பதிவு இடவில்லை. வேலைகள் பல இருந்தாலும் உ வே சா, மற்றும் பாரதி நினைவு நாட்களை அவரை தவிர்த்ததில்லை.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கீசா மேடம் இந்த வருடம் நினைவு பதிவு இடவில்லை. வேலைகள் பல இருந்தாலும் உ வே சா, மற்றும் பாரதி நினைவு நாட்களை அவரை தவிர்த்ததில்லை./

      ஆம். அதைத்தான் நானும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். சொல்லபப்போனால், அவர் சார்பாகத்தான் இந்த பதிவு உருப்பெற்றது.

      /நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
      நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்/

      யாருக்கு? எனக்குத்தான் இந்த பாடலா? ஹா ஹா ஹா. சும்மா வேடிக்கைக்காக கேட்டேன். பாரதியாரின் பாடல்களை மறக்க இயலுமா? தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete