Tuesday, June 28, 2022

பூக்களுக்கிடையே ஒரு கெண்டி.

ஜானகி படுத்திருந்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தாலும், என்ன ஒரு களையான முகம். அந்த கால ரவி வர்மா ஓவியப் பெண்களைப் போல்  இயற்கை வண்ணங்களால் வார்த்தெடுத்த அழகான முகம்.....! மனம் மட்டுமென்ன..! அதை விட அழகோவியமாக இறைவனே பார்த்து  பார்த்துக் கொடுத்திருக்கிறார். ரகு கண்களில் உண்டான லேசான நீர் துளிப்புடன் அவளையே பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் கண் விழித்துப் தன்னையே பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது கண்டதும் விழிகளாளேயே "என்ன"வென்று கேட்பது போல் புருவத்தை தூக்கினாள்.

அருகில் நெருங்கி அவள் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டவனுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை. தன் கைகளில் அவன் கண்களிலிருந்து சூடான இரு முத்துக்கள் விழுந்ததும், பதறிய அவளின் முக பாவம் ரகுவை இன்னமும் வசீகரித்தது.

" இதை எனக்காக இப்படியே நிறுத்தி விடு  ஜானகி..! என்னால் இதை ஜீரணிக்கவே முடியலே... நாளை விடியாமலே போகக்கூடாதான்னு வேண்டிக்கிறேன்."

மெதுவாக அவனிடமிருந்து கரங்களை விடுவித்தவள், மறுகணம் தன் ஒரு கரம் கொண்டு அவன் வாயை லேசாக மூடினாள்.

உலர்ந்திருந்த உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கியபடி, மெல்ல எழுந்து அமர்ந்தவள், "ஏன்...!  இப்படி பேசனும்.. எல்லாம் என்னோட கனவுக்குதானே...! இதற்கு எத்தனை வருடம் காத்திருக்கிறேன். உங்க சம்மதந்தானே என் கனவோட முதல்படி. படிபடியாக ஏறி கனவு பலிக்கிற நேரத்துல இப்படி முடியாதுன்னு சொன்னா  எம்மனசு நொறுங்கி போயிடாதா?" வேகமாக சேர்ந்தாற் போல் பேசியதில் சற்று  மூச்சு வாங்க இளைப்பதை கண்டதும், ரகு பதறி எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்து சற்றுக் குடிக்கச் செய்து  ஆசுவாசப் படுத்தினான்.

" சரி..! ஜானு..அதிகம்  பேசாதே.. நான் ஒண்ணும் சொல்லலை...உனக்காக  நான் சம்மதிக்கிறேன்.. " என்றவன் கண்களில் கண்ணீர் பெருக  அதை அவளிடம் மறைக்க முயற்சித்தான்.

"என்ன இது...! குழந்தை மாதிரி.. நா என்ன ஊர்ல உலகத்துல செய்யாததையா செய்றேன். இதுக்குப் போயி இப்படி வருத்தப்பட்டா எப்படி? "அவள் மறுபடி பேச ஆரம்பிக்கும் முன் அவளை அமர்த்தியவன்..
" நீ இப்ப எதுவும் பேசாதே ஜானு.. நான்தான் உன் இஷ்டத்துக்கு ஒத்துண்டாச்சே... மறுபடி இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு.. வேணாம். .,! நீ கொஞ்ச நேரம் தூங்கு.. என்றபடி அவள் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

கணவனின் பாசம் கண்டு ஜானகியின் கண்களும் கலங்கியது. அவனறியாமல் கண்களை துடைத்தபடி அவன் பரிவுக்கு கட்டுப்பட்டு கண்களை மூடி தூங்க பிரயத்தனித்தாள்.

"மேகலா, மேகலா, இங்கே வா.! ஜானகியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகு தேவதையாய் நடந்து வந்த  மேகலா அவளருகே வந்தமர்ந்தாள்.

" மேகலா.! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரனும். இத்தனை நாளா உன்கிட்டே  வாய் வார்த்தையா வெறும் உறுதி மொழிதான் கேட்டேன். இப்போ" என்றவளை இடைமறித்த மேகலா, "என்னக்கா,  நீங்க பெரிய வார்த்தையா கேக்கறீங்க.. நீங்க சொன்னது நான் மீறினாதானே இந்த மாதிரி சத்தியம் அது, இதெல்லாம் சொல்லனும். நீங்க சொல்றதை நான் தட்டியிருக்கேனா? ஜானகியின் மெலிந்த கைளை எடுத்து தன் மார்போடு அணைத்தவளாய் பரிவாக சொன்னாள்.

" இன்னைக்கு என்னுயிரை உங்கிட்டே  தந்திருக்கிறேன்... ஏன் தெரியுமா? அந்த உயிருக்கு ஆதரவா ஒரு உயிரை நீ சீக்கிரம் தரணும். அந்த செயலைத்தான் உங்ககிட்டே உறுதியா கேக்கிறேன். "

வெட்கத்தில்  சிவந்த முகத்துடன் மேகலா அவளுக்கு பதில் கூறும் முன் அந்த  அறைக்குள் நுழைந்தான் ரகு.

"மேகலா.! அவளுக்கு மருந்து தந்தியா? இனி நீ போ..! நான் அவளை பார்த்துக்கிறேன்.. என்றபடி, தன் கட்டிலில் அமரப் போனவனை ஜானகி தடுத்தாள்.

"என்னங்க.. ஒரு நிமிஷம்.. இங்கே வாங்க..! அழைப்புக்கு கட்டுண்டு வந்தவனை, "என்ன இது.!  இன்னைக்கு என்னவென்று உங்களுக்கு தெரியாதா? உங்க அறைக்கு போங்க. நா கொஞ்ச நேரத்துல மேகலாவை அனுப்பறேன்.  எனக்கு துணையாக இனி என் அத்தை இங்கே இருந்து பாத்துப்பாங்க.! " என்று முடியாமல் கூறி முடிக்கவும், ஜானகியின் அத்தை வந்து மேகலாவை, "வாம்மா" என்றபடி அழைத்துக் கொண்டு போனாள்.

ஒரு நிமிஷம் நடப்பதை பார்த்து திகைப்புடன் நின்றிருந்த ரகு, ஜானகி அருகே வந்தமர்ந்தபடி,  "என்ன ஜானு. .! உன் விருப்பத்துக்குதான் ஒத்துண்டேன். மறுபடியும் என்னை எல்லாத்துக்குமே ஒத்துக்க வைக்கிறே.... இது நியாயமா சொல்லு? என்றான் அழ மாட்டாத குறையாய்..

ஜானகி அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பிணைத்து கொண்டபடி வருடிக் கொடுத்தாள்." என் செல்ல ராஜா..!இதுக்குதானே நா என் உயிரை கையிலே வச்சிட்டு காத்திருக்கேன். நம்ப குழந்தையை ஒரு வாட்டி பாத்துட்டு, அதுக்கு நான் நினைச்ச மாதிரி ஆகாரம் கொடுக்காமே நான் போவேனா?  அப்படி போனாதான் என் ஆத்மா சாந்தியடையுமா என்ன?" மேற்கொண்டு அவளை பேச விடாமல், வாய் பொத்தி அவளை லேசாக தன்னுடன் அணைத்துக் கொண்டான் ரகு.

தன் திருமணத்திற்கு தன் தாய் தந்திருந்த வெள்ளி கெண்டியை அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டு,"  என்னங்க இதில்தான் என் அம்மா எனக்கு பால் புகட்டி வந்திருக்கிறார்கள். நானும் என் குழந்தைக்கு இதில்தான் பால் புகட்டிப்பார்க்க வேண்டுமென்று ஆசை... என முகம் சிவக்க கூறும் போது, ரகுவின் சீண்டும் பார்வையை தாங்க முடியாமல் வெட்கத்தில் கைகளால் கண்மூடி மௌனித்த வேளைகள் எத்தனை எத்தனை.!

அவளுடைய ஆசைகள் அவனறியாததா? அவனின் இருபத்தைந்தாவது வயதில் அவனை நம்பி அவள் அவனுடன் சம்சார பந்தமெனும் கடலில் இறங்கிய போது அவளுக்கு வயது இருபது. நிறைய கனவுகளில்  சிறகடிக்கும் பறவையின் உற்சாக மனதோடுதான் அவனை கைப்பிடித்தாள்.

 நிறைய இடைவெளியில் , தன் கூடப்பிறந்த இரு தம்பிகளையும் தன் உடன்பிறப்பாக நினைத்து அன்புடனே, வளர்த்து,  தன் பெற்றோர்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல் மதிப்பெண்கள் பெற்று, தம்பிகளின் திருமணங்கள் வரை, உற்சாகமாக ஓடியாடி  வளைய வந்தவள்தான்.!

"இவ்வளவு பொறுப்பா பெரிய மனுஷியாட்டம்  புகுந்த வீட்டை கட்டிக்காத்து  நல்ல முறையிலே நிர்வகிச்சிண்டு வர்றியே... ஜானகி. அந்த ஆண்டவன் உன் விஷயத்திலே கண் திறக்க கூடாதா? உனக்குன்னு ஒரு குழந்தை தங்கி ஒரு குடும்பமா இருந்தாதானே ஒரு சந்தோஸம் நிலையா வரும். "  என்று உறவுகள் தன் தம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளை அவள் தூக்கி சீராட்டி கொஞ்சம் போது, புகழ்வது போல பேசி, குறையை சுட்டிக் காண்பித்த போது கூட மனம் சற்று வருத்தியதை அவள்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம் வேகமாக ஓடி மூச்சு வாங்கிய போது ஜானகியும் மூச்சு விடக் கூட சங்கடப்பட்டு  சோர்ந்திருந்தாள். அவளை பரிசோதித்த பின் குழந்தை பிறக்க இனி சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதில் நொடித்துப் போன இதயம்..அது.. மறுபடியும் தேறவேயில்லை...!

ஆயிரம் மருத்துவங்கள், பலவித மருந்துகள் என எதுவும் பலனளிக்காமல், அவளை மிகவும் பலவீனபடுத்தியிருந்தன. கடைசியில் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள தூரத்து உறவின் மூலம் வந்திருந்த மேகலாவை எப்படியோ சம்மதிக்க வைத்து, ரகுவிடமும் போராடி  பேசி அவன் அரைகுறை சம்மதத்தையும் பெற்று இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டாள். இனி ரகுவின் குழந்தையை கொஞ்சாது தன்னுயிர் பிரியாது என்ற நம்பிக்கையில் தன்னை எதிர்கொள்ள காத்திருக்கும் மரணத்திற்கு சவால் விட்டபடி காத்திருந்தாள்.

கடந்த  ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி.. ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான்.  அவன் என்றாவது மனது மாறுவான் . தன்னிடம் பழைய மாதிரி சுமூகமாக பேசவாவது செய்வான் என்ற நம்பிக்கையோடு பொறுமையாய் இருந்தாள் மேகலா.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை...அப்படியே போனாலும்அவளைத் தாங்கி அரவணைத்துக்கொள்ள யாரிருக்கிறார்கள்.? பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து, வறுமையில் யாருமற்ற சூழலுடன் இருக்கையில், உறவில் அத்தை முறையான பார்வதி,  "ஜானகியை கவனமாக பார்த்துக் கொண்டால்,  உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்"என அழைத்து வந்து இங்கு தங்கச் செய்தாள். ஆரம்பத்தில் சற்று மனம் ஒட்டாமல்  தயங்கினாலும் ஜானகியின் அன்பும், அக்கறையும், அவளின் எந்த பேச்சையும் தட்டாத ஒரு நெருக்கத்தை உண்டாக்கின.

அதன் விளைவுதான் ரகுவை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள். சட்டப்படி ஜானகி எடுத்த முயற்சி பலனளித்து விட்டாலும், ரகு திருமணமான அன்றே தன் உறுதியான முடிவை "ஜானகிக்காகத்தான் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி நீயும், நானும் என்றுமே யாரோதான்..! என்று மேகலாவிடம் கூறி விட்டான். ஜானகியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை இரண்டு வருடங்களாக அவள் பார்த்திருந்ததால், இதை மேகலாவும் ஆமோதித்தது புன்னகையால் ஏற்றுக்கொண்டாள்.

"அப்படிப்பட்ட உறவையும், இந்த ஐந்தாண்டு காலம்  மிகவுமே சின்னாபின்னபடுத்தி அழகு பார்க்கிறதே " என எண்ணும் போது, பொறுமையாயிருந்த மேகலாவின் கண்கள் ஆறாகப் பெருகின.  அதன் காரணம் அவள் மனசாட்சிபடி "நீ செய்தது சரிதான்" ! என கூறினாலும், ரகுவை வெறுப்படைய செய்து விட்டதே என நினைக்கும் போது சற்று உறுத்தலாக இருந்தது. அன்றைய நாளின் நினைவுகள் அவளிடமிருந்து சிறிதும் விடைபெற  மறுத்தது மட்டுமின்றி, "நான் என்றுமே உன்னுடன்தான் இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் செய்தபடி இருந்தது.

" மேகலா.! நீயும் என்னை ஏமாற்ற போகிறாயா? கண்களால் கேள்வி கேட்கும் ஜானகியை எதிர் கொள்ளவே மேகலாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை பூப்போல அசைத்து, பணிவிடைகள் செய்யும் போதும், ஆகாரத்தை மெல்ல ஊட்டி விடும் போதும் பார்வையின் உரசல்களில் அந்த கேள்வி தொக்கி நிற்கும்.

ரகு வேலையிலிருந்து வரும் வரை ஜானகியை முழுதாக அருகிலிருந்து கவனித்துக் கொள்பவள் ரகு  வந்ததும் ரகுவின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து அகன்று விடுவாள். இருவரையும் சேர்ந்து பார்த்தால், மறுபடி "குழந்தையை பற்றி பேச்செடுத்து ஜானகி தன்னை இன்னமும் பலவீனமாக்கிக் கொள்கிறாள்" என்ற எண்ணம் ரகுவை ரொம்பவே பாதித்தது. அதை புரிந்து கொண்டவளாய்  தான் நகர்ந்து விடுவது ரகுவுக்கு பிடிக்கிறது என்ற எண்ணமே மேகலாவுக்கும் திருப்தியளித்தது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜானகி காலையிலிருந்தே சற்று கூடுதலாக சோர்வாக இருப்பது கண்டு அவளை விட்டு தானும் நகராதிருந்தாள்.  அன்று மேகலாவுக்கும் காலையிலிருந்தே தலைவலியால், சோர்வாக இருந்த உடல் ஜானகிக்கு இரவு கஞ்சியை புகட்டி கொண்டிருந்த போது, சற்று வெளிக் காட்டி விட்டது. வாய் மூடி பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளை சந்தோஷம் மிக்க கண்களால் விரிய பார்த்தாள் ஜானகி.

அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து தன்னிலை உணர்த்துவதற்குள் ஹீனஸ்வரத்தில் "மேகலா நாள் தள்ளிப் போகிறதா? நல்ல செய்தியா? என சந்தோஷம் அடைந்தவளுக்கு முன் எதையும் சொல்ல முடியாமல் மெளனித்தவளை, ரகு முறைத்தான்.

" நான் நினைத்தது நடந்து விட்டது.. கடவுள் என் குறை அறிந்து என வாழ்க்கையில் ஒரு திருப்தி கொடுத்து விட்டார், இது போதும் எனக்கு.." என் வேண்டுதல் பலித்து விட்டது. என மெலிதாக புலம்பிய வண்ணம் இருந்த ஜானகிக்கு அன்று இரவு மிகவும் உடல் பலகீனமாக அடைய, இந்த சந்தோஷம் போதுமென்று மனநிலையில், அதே சிரித்த முகத்துடன் இந்த உலகை வெறுத்து விடை பெற்றாள்.

ஆயிற்று!  நடைபிணமாயிருந்த ரகு பழையபடியாக  மாத கணக்கில் ஆனது.
அன்று சாப்பாடு பறிமாறிய மேகலாவை "இப்போ உனக்கு திருப்தியா? என் உயிரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எத்தனை நாளா யோசிச்சே? என்று கேட்கவும், மேகலா திகைத்தாள்.

" நானா? ஏன் இப்படி பேசறீங்க? அக்காவை நானும் என உயிராகத்தான் நினைச்சேன். அவங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு எவ்வளவு வேதனையை தருது தெரியுமா?" கண்ணீர் பீறீட கேவினாள் மேகலா.

"அப்படியென்றால் அன்னைக்கு உண்மையை சொல்ல வேண்டியதுதானே.! "மெளனம் உண்மை.." என்ற மாதிரி அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஏன் அமைதியா இருந்தே? " ஏன்னா உன் எண்ணத்தில் இருந்த ஆசைக்கு அதுவே ஒரு சாட்சி,.! சீ.. நீயெல்லாம் அவளை உயிரா நினைச்சியா? ஏன் பொய் மேலே பொய்யா....இப்படி.. " வார்த்தைகளை உமிழ கூட வெறுப்படைந்தவனாக முகம் சிவந்தான் ரகு.

" நீங்க நம்பலைன்னாலும் நான் சொல்றது உண்மை. அந்த நேரத்திலே நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்"னு சொல்லவா? காலையிலிருந்து தலைவலி காரணத்தாலேயே வயிற்றை பிரட்டியதுன்னு சொல்லவான்னு நான் அந்த சமயத்திலே கொஞ்சம் தடுமாறினேன். இத்தனக்கும் அவங்க எத்தனையோ நாள் இந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்கும் போது, ஒருநாள் கூட நாம ரெண்டு பேரும் இன்னமும் வாழ்க்கையையே துவங்கலைன்னு  சொல்ல நினைச்சிருக்கேனா? இல்லை என்னையும் மீறி சொல்லியிருக்கேனா? ஏன் என்னை நம்பாமே இப்படி அபாண்டமான பேசறீங்க?"
மேகலாவின் வாய் வார்த்தைகளையும் மீறி சற்றே உணர்ச்சி வசப்பட்டதில் நடுங்கியது.

எப்படியோ போ,! அவளை கொன்னுட்டே. ! என்னையும், அவளையும்  பிரிச்சு பாவத்துக்கு இனி உன் முகத்துல முழிக்கிறதே பாவம். ! ஜானகி பேச்சை மதித்து உன்னை கல்யாணம் பண்ணினதுனாலே உன்னை எங்கேயோ போன்னும், சொல்ல முடியலே! ஆனா என் ஜென்மம் முழுக்க உன்கிட்டே பேசாமே இருக்க  என்னாலே முடியும். இனி நம் தெரிஞ்ச உறவுகளுக்குத்தான்  நீயும், நானும் ஜானகி பார்த்து கல்யாணம் செய்து வைத்த  தம்பதிகள். வீட்டுக்குள்ளே நீ யாரோ.! நான் யாரோ.. என்றவன் இன்று வரை அந்த நிலை மாறாது இருக்கிறான்.

மேகலாவுக்கு முதலில் ரணமாக மனது வலித்தது. நாளடைவில் ஜானகியின் அன்பை நினைத்து, அவளுடன் தனிமையில் இருக்கும் போது  "ரகு என்ன சொன்னாலும், ரகுவை என்றுமே உன் ஆயுள் பரியந்தம் புறக்கணித்து மட்டும் விடாதே!!" என்று தன்னிடம்  கண்டிப்பான அன்புடன் கேட்டுக்கொண்ட வார்த்தைகளுக்காகவும்  அவன் கோபங்கள்  தீர இன்னும் எத்தனை வருடங்களானாலும்  பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தாள்.

காலம்  ஒன்றுதான் யாரிடமும். எதுவும் சொல்லாமல்,  கேட்காமல். தன் வேலையை பார்த்தபடி  செல்லக் கூடியது. மேலும் சில வருடங்களை தன்னுள் விழுங்கிய திருப்தியில், அது ஒருவித அலட்சிய மனப்பான்மையுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் நிழலாடியது கண்டதும், காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மேகலா தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அறையின் கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் ரகு.

ஏதாவது முக்கியமாக பேச வேண்டுமென்றால்தான் இப்படி எதிரில் வந்து நிற்பான் என்பதை உணர்ந்தவளாகையால், "என்ன?" என்பது போல அவனை பார்த்து கொண்டபடி இருக்கும் இடத்தை விட்டு ஓரடி முன் வந்து நின்றாள் மேகலா..

"நாளை காலை நாம் ஒரு விஷேடத்திற்குப் போகப் போகிறோம். ஜானகிக்கு நெருங்கிய உறவு. அவளின் மாமா மகனுக்கு  அறுபதாம் கல்யாணம். நம்மை கண்டிப்பாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்து நம் விரிசல்கள் எதையும் காட்டாமல் நடந்து கொள்...!!" என்று அவள் விழி பார்க்காமல், ரகு சொன்ன போது  மேகலாவுக்கு கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வந்தது.

" என்றைக்கு இந்த விரிசல்களை வெளியில் காட்டி யார் வந்து "சரி செய்யவா?" என்று கேட்டிக்கிறார்கள். என்னறைக்கு உங்கள் மனம் மாறும்..! விரிசலென்று நீங்கள் நினைப்பது  வெறும் கீறல்தான்... அதுவும் நீங்களாகவே போட்டு கொண்டு ஆற விடாமல், பத்திரமாக ரணத்தை அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." என்று சொல்ல வேண்டும்  போலிருந்ததை அடக்கியபடி, "சரி" என்றாள்.

மறுநாள் அந்த விஷேடத்திற்கு தன்னை சாதாரணமாகவே அலங்கரித்து கொண்டவளுக்கு, தீடிரென" ரகு என்ன சொல்வானோ? "என்ற ஐயம் வந்தது. எனவே அவன் அறை வாசலுக்கு வந்தவள்,  "இது போறுமா? இல்லை.. ஏதேனும் பட்டுப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டுமா? என கேட்க வந்தவள் அவன் என்ன சொல்வானோ என்ற  நினைப்பில் பேசத் தயங்கி நின்றாள்.

அன்றைக்கென்னவோ அவள் நிலை உணர்ந்தவன் மாதிரி அவளை சற்று ஏறெடுத்துப் பார்த்தவன்," இது பழசாக தெரிகிறதே..! ஏதேனும் பட்டுப்புடவையாக கட்டிக் கொள்ளேன். "என்ற அவன் குரலில் இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு சிறு நெகிழ்ச்சி மேகலாவை வானத்திற்கு மேலாக பறக்க வைத்தது.

தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் கரிசனம் மிகுந்த சின்னப் பேச்சு அவளைச்சுற்றி தட்டாமாலை ஆட, திருமணமானதிலிருந்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சந்தோஷத்தை அடைந்த திருப்தி எழுந்தது.  பரபரவென்று தன் திருமணத்திற்கு ஜானகி வாங்கித் தந்த புடவையை கட்டிக் கண்டதும், ஜானகியின் அன்பான அரவணைப்பு தன்னை சுற்றி வியாபிப்பதை உணர முடிந்தது. கண்கள் கலங்க  மேஜையிருந்த ஜானகியின்  போட்டோவை ஒரு நிமிடம் பார்த்தவள், "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அக்கா"என்றபடி கீழே விழுந்து நமஸ்கரித்தாள். அப்போது அறை வாசலுக்கு வந்து அகன்ற ரகுவை அவள்  சற்றேனும் கவனிக்கவில்லை.

அறுபதாம் கல்யாணம் வைதீக முறைப்படி ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது. ரகுவிற்கும்,  மேகலாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலே ரகுவிடமும் ஒரு முக மலர்ச்சி உண்டானதாக மேகலாவுக்கு தோன்றியது. தன்னுடைய இயல்பான சுபாவத்தில் அவளும் ஜானகியின் உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக்  கொண்டு, கலகலப்பாக அவர்களுக்கு உதவியாக  அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வப்போது ரகுவின் பார்வையில் இவள் பார்வையும் படும் போது "இதுதான் இவனுடன் திருமணத்திற்கு பின் முதன்முதலாக சேர்ந்து வந்திருக்கும் விஷேசம்" என்ற எண்ணம் மேகலாவுக்கு வரவும் அவளின் உற்சாகமான முகம் இன்னமும் சற்று மலர்ந்து காணப்பட்டது.

"இவன் நம்ப ஜானகியின் புருஷன் ரகு தானே... !  பாவம் ஜானகி! இந்த சின்ன வயசுலே அவள் பட்ட கஸ்டமிருக்கே அப்பப்பா ... ஆனா  அவ ரொம்ப பொறுமைசாலி... அவ பொறுமைக்கு கடவுள் ரொம்பவும் அவளை பாடாபாடு படுத்திட்டான்.. !"

"ஆமாம்... அவனேதான்... !   அந்த கடவுள் மட்டுமா? அவ உயிரோடு இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ணி கிட்டவன்தானே இவன்... ! இவன் ஒருத்தன் போதாதா அவ பொறுமையை சோதிக்கறதுக்கு...?"

" என்னமோ அவளே இவனை நிர்பந்த படுத்திதான் கல்யாணம் பண்ணி வைச்சதா கேள்விப் பட்டேனே? "

ஆமாமாம்...! அப்படித்தான் நானும் கேள்விப் பட்டேன். ஆனா அந்த  மாய்மால காரி இருக்காளே...!  அவ என்ன பொடி போட்டு மயக்கிட்டு ஜானகியை அப்படிச் சொல்ல வைத்தாளோ ? யாரு கண்டா?"

" இப்ப அவளும் வந்திருக்காளா? நா அவளை பார்த்ததே இல்லை...!

" அதோ..! நீலகலர்லே பட்டு புடவை கட்டிண்டு  ஏதோ ஜானகிக்கு உறவு மாதிரி வர்றவங்க எல்லோர்கிட்டேயும்  சகஜமா பேசிக்கிட்டிருக்காளே அவதான்..!" 

இவளுக்காவது ஏதாவது குழந்தை குட்டி பிறந்திருக்கா ? 

" எங்கே. .! அவளுக்கு செஞ்ச  துரோகத்துக்கு இவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமாக்கும்...! ஜானகியே குழந்தையா வந்து பிறக்கனும்னு கடவுள் ஆஞ்கையிட்டு சொன்னாகூட  ஜானகியே வேண்டாம்னு சொல்லிடுவா.. அந்த அளவுக்கு இவ மேலே அவளுக்கு கோபம் இருக்குமாக்கும்...!" 

ரகு அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் சடாரென எழுந்தான். வெறும் வம்பு பேசி அரட்டை அடிப்பதற்காக வந்த அந்த உறவுகள் யாரென்று தெரியவில்லை. தான் ஏதாவது பேசி அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாதென்பதற்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனுக்கு அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி வந்து அமர்ந்தவனுக்கு உள்ளூர கோபம் அடங்கவில்லை.

ஜானகியை பற்றி புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.?  அவள் இஸ்டமில்லாமலா நான் மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்? அவளா அவனுக்கு குழந்தையாக வந்து பிறப்பதை வேண்டாமென்று மறுக்கப் போகிறவள்.. ! சே..! நாக்கில் நரம்பில்லையென்றால், இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனசிலும், ஈரங்கள் இல்லாமல் போயிற்று? ஏதேதோ சிந்தனையில் கண்கள் மேகலாவை தேடின.

"ஏன்..! உன் மனதில் மட்டும் ஈரம் இருக்கிறதா?  நீ அவளை என்னவெல்லாம் பேசியிருப்பே..! அத்தனையும் தாங்கிக் கொண்டு நீ என்னைக்காவது மாறுவேன்னு அவ பொறுமையா இல்லையா?  பாவம் அவள்...! இனியும் நீ இப்படி நடந்துக்க கூடாது." 

உண்மைதான் ஜானகி... நான் செய்றது தப்புதான்....! 


ரகுவின்  அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவர் ஏதேச்சையாக அவர்களுடைய  குடும்பத்தைப் பற்றி பேசியது அவனுடைய கன்னத்தில்  அறைந்த மாதிரியிருந்தது.

இங்கும் தன்னருகில் அமர்ந்திருந்த யாரோ இருவர் தனக்காகவே பேசின மாதிரி தன் சிந்தனைக்கு தக்கபடி பேசியது தன் ஜானகியே வந்து பேசின மாதிரி இருந்தது ரகுவுக்கு. இப்போது அவன் கண்கள் தன்னையறியாமல் மேகலாவை விரைந்து தேடின.

"ஆமாம்.. இவள் எனக்கு என்ன குறை வைத்தாள்? என்னிடமும், ஜானகியிடமும் பாசமாக இருக்கதான் செய்தாள். நான்தான் இவள் அன்பை உதாசீனபடுத்தினேன். இதோ..! இன்று வரை ஜானகியை  துளியேனும் மறக்காது, காலையில் கூட அவளிடம் மானசீகமாக பேசி, ஆசிர்வாதம் வாங்கி அவளை அன்புடன் நன்றியோடு நேசித்துதானே  வருகிறாள். நான்தான் அவளை புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் கொன்றேன். அப்போதும் அவள் என்னை வெறுக்கவில்லை.  என்னிடம் அவளை ஒப்படைத்துக  சென்றதற்காக ஜானகியையும் ஒரு போதும் குறைச் சொன்னவளுமில்லை.. எல்லா தப்புமே என்னிடமிருந்துதான் ஆரம்பித்தன. "

" நான் "வா" வென்று அதிகாரமாக  அழைத்து வந்த இடத்திலும் எத்தனை முக மலர்ச்சியோடு எதைப் பற்றியும் நினைக்காமல், ஜானகியின் உறவுகளோடு பேசி பழகுகிறாள். இவளை நானே புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, பொழுதைப் போக்க இங்கு வந்து வம்படிக்கும் கூட்டம் எப்படி புரிந்து கொள்வார்கள்.? "

சுற்றும், முற்றும் பார்த்து கூட்டத்தில் அவளைத் தேடினான் ரகு.

அதோ..! அந்த சிதறியிருக்கும் மலர்களை  கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு மற்றொரு கையில் ஒரு அழகான கெண்டியை வைத்தபடி இருக்கும் மேகலாவைக் கண்டதும், ஜானகியின் வெள்ளி கெண்டியும் அதை சுற்றி படர்ந்திருந்த அவளது கனவுகளும் நினைவுக்கு வந்தன. கூடவே அவளது சுபாவத்தை கேலி செய்து பேசிய  அந்த இரு பெண்மனிகளின் பேச்சுக்களும் காதுகளில் ரீங்காரமிட்டன.

விடு விடுவென எழுந்தவன் மேகலாவின் அருகில் போய் நின்றபடி, "வா..!  மேகலா...! வீட்டிற்குப் போகலாம்...!" என்றான்.

  தீடிரென அங்கு அவனைக் கண்டதும் ஒருநிமிடம் திகைத்துப் போன மேகலா, "என்னங்க. .! நீங்க சாப்பிட்டாச்சா? நானும் இதோ இதை அவர்களிடம் தந்து விட்டு  சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.. "என்றபடி நகரப் போனவளின் கையை பிடித்தான் ரகு.

அவன் ஸ்பரிசம் தந்த ஆச்சரியத்தில் மறுபடி திகைத்துப் போனவளை "இல்லை...! வேண்டாம். . வா.! நாம் வீட்டுக்கு போகும் வழியிலேயே எங்காவது ஹோட்டலில் சாப்பிடலாம்...! " என்றவன் அந்த கெண்டியை அவளிடமிருந்து வாங்கி அவள்  திரட்டிய மலர்களின் நடுவில் வைத்தவன்  "உன்னை இது நாள் வரை சித்திரவதை படுத்தியதற்கு மன்னித்து விடு. .!  இப்போது இந்த பூக்களுக்கிடையே இருக்கும் அழகிய மணத்துடன் ஒளி வீசும்  கெண்டியாக நான் உன்னை பார்க்கிறேன்...!" என்றான்.

அவள் ஒரு விதமாக விசித்திரத்துடன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், "என்ன இப்படி பார்க்கிறாய்? இன்று என் மனதை மாற்றுவதற்காகவே ஜானகி நம் இருவரையும் இங்கு சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள் என நினைக்கிறேன். "வா..! இவர்களிடம் போய் வருகிறோம்" எனச் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குப் போனதும் உனக்கு விபரமாக என் மனமாற்றத்தின் காரணத்தை கூறுகிறேன்." என்றபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றவனை, எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அளித்திருந்தும், புரியாமல் எதை எதையோ பேசி பிறர் மனதை  துன்புறுத்தும் ஆறரறிவு  படைத்த ஜீவன்களை  போலில்லாமல், தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.


கதை நிறைந்தது
.

இது எ. பி யில் நான் எழுதி வெளி வந்த கதை. இதன் கதாநாயகனை, அவனின் மாறுபட்ட  சுபாவங்களுக்காக வாசகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. ஆனால் அவன் தன் முதல் மனைவி ஜானகி பேரில் வைத்திருந்த அளவுகடந்த அன்பு காரணமாகத்தான், (அதை ஒரு விதமான எல்லைகளுக்கும் அப்பால் உள்ள பாசம் என்றும் சொல்லலாம்.) அவளால் தனக்கென மறுபடியும் வாய்த்த மறு மனைவியான மேகலாவை  ஏறிட்டு நோக்க இயலாமல் செய்து விட்டதாக சித்தரித்திருக்கிறேன். அதை அவளுக்கிழைத்த துரோகம் என நாம் சுலபமாக கூறி விடலாம். ஆனால் அந்த மறு மனைவியே அதை புரிந்து உணர்ந்து கொண்டவளாய் நடந்து கொண்டாள் எனில், அவளுக்கு அந்த முதல் மனைவியான ஜானகியின் பாலிருக்கும் நன்றி உணர்ச்சியை  (இதையும் நமக்குப் பிடித்தமான இறைவனிடம் காட்டும் ஒரு பக்தி நிலை எனக் கொள்ளலாம்.) நமக்கும் வெளிப்படுத்தி காட்டியுள்ளதாக அவளின் கதா பாத்திரத்தை சித்தரித்துள்ளேன். இப்படி மாறுபட்ட கதா பாத்திரங்களின் ஓட்டத்தில் கதை  முடிவை நோக்கி நகர்கிறது. இதை எபியில் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். இங்கும் ஒரு வித்தியாசமாக, இல்லை என் பதிவில் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இங்கும் படித்து கருத்திடும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏 

26 comments:

  1. முன்பு படித்த நினைவு வந்தது சகோ.

    நல்லதொரு கதை ரகுவும், மேகலாவும் இனியாவது மகிழ்ச்சியாக வாழட்டும்.

    பொரணி பேசும் பெண்களால் நல்லதும் நடக்கிறது..

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் இது எ. பியில் செவ்வாயன்று வந்த கதைதான். அப்போதும் நீங்கள் வந்து படித்திருப்பீர்கள். இங்கும் வந்து படித்து நல்லதொரு கருத்தினை தந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      /பொரணி பேசும் பெண்களால் நல்லதும் நடக்கிறது.. /

      ஆம் உண்மைதான்.. ஒரு நல்லதையோ , கெடுதலையோ நம் பூர்வ ஜென்ம விதிப்படி மனிதர்கள் மூலமாகத்தானே இறைவன் நடத்தி வைக்கிறார்.

      ரகுவையும், மேகலாவையும் வாழ்த்தியமைக்கு நன்றி. இது கதை என்றில்லாவிட்டாலும், இவர்களைப் போல் பலர் நம்மில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கதையை ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நாம் நினைப்பது போல மற்றவர்கள் நினைப்பதில்லை.  ஜானகியின் எண்ணங்கள் ஆசைகள் உறவுகளுக்கோ உலகத்துக்கோ புரியப்போவதில்லை.  அதுதான் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.  ஆனால் அதுவும் விதிதானே...  அதுதானே ரகுவையும் மேகலாவையும் இணைக்கிறது!  அழகான உணர்வுபூர்வமான கதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் ஒத்துழைப்பினால்தான் இந்தக்கதை எ. பியில் இடம் பெற்ற பெருமையை அடைந்தது. அதற்கு உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      /ஜானகியின் எண்ணங்கள் ஆசைகள் உறவுகளுக்கோ உலகத்துக்கோ புரியப்போவதில்லை/

      உண்மை.. தங்கள் கூற்றுப்படி ஒருவருடைய எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்வது கடினமே.. அப்படியே புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, பிறரின் அநாவசிய பேச்சுகளினால், அதில் நிறைய மாறுதல்களும் வந்து விடும். மாறாக இதில் அவர்கள் இருவரையும் இணைத்து வைத்து பார்த்து சந்தோஷ மடைவது அவர்களின் நல்லபடியான விதியே..

      கதையை மீண்டும் ரசித்துப் படித்து தங்கள் கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.

      எனது சென்ற பதிவுக்கு (ரங்கனின் கருணை) தங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். வரவில்லை. ஆனால் உங்களின் அலுவலகப் பணிகளின் கெடுபிடியில் இந்தப்பதிவுக்கு வந்து நல்லதொரு கருத்தை பதிவு செய்தமை கண்டு மிக்க மன மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அந்த கெண்டி நான் எடுத்த புகைப்படம்.  ஒரு அதிசயம், ஆச்சர்யமான ஒற்றுமை சொல்லவா?  நான் ஒரு (நண்பரின் மகன்) திருமணத்தில் இந்த கெண்டியை படம் எடுத்தேன்.  அந்த ஜோடி சட்டபூர்வமாக பின்னர் பிரிந்து விட்டது.  என் நண்பரின் மகன் இன்னொரு பெண்ணை இப்போது திருமணம் செய்து குழந்தையுடன் சௌக்கியமாக வெளிநாட்டில் இருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அந்த கெண்டி நான் எடுத்த புகைப்படம்./

      ஆம் அந்த அழகான புகைப்படத்தை தங்கள் கதம்ப பதிவில் பார்த்த நான் "இதற்கு ஒரு கதையே எழுதலாம் எனத் தோன்றுகிறது" என்றுச் சொன்னவுடன், தங்கள் அனுமதியின் பேரில்தான் இந்தக்கதை ஒரு வருடமாக (ரொம்ப சீக்கிரந்தான்:))) காலமாக என் எழுத்தில் உருவானது. அதை மறக்க முடியுமா?

      /ஒரு அதிசயம், ஆச்சர்யமான ஒற்றுமை சொல்லவா? நான் ஒரு (நண்பரின் மகன்) திருமணத்தில் இந்த கெண்டியை படம் எடுத்தேன். அந்த ஜோடி சட்டபூர்வமாக பின்னர் பிரிந்து விட்டது. என் நண்பரின் மகன் இன்னொரு பெண்ணை இப்போது திருமணம் செய்து குழந்தையுடன் சௌக்கியமாக வெளிநாட்டில் இருக்கிறான்./

      உண்மையிலேயே நிஜமாகியிருக்கும் இந்த சம்பவம் ஆச்சரியம்தான்... அந்த கல்யாணமான ஜோடிகள் பிரிந்து விட்டதென்னவோ மனது வருத்தப்படும் நிகழ்வுதான். ஆனால் இப்போதைய கலாச்சாரப்படி அந்தப்பையனுக்கு நல்லபடியாக வேறு ஒரு குடும்பம் அமையப் பெற்று சந்தோஷமாக இருப்பது மகிழ்ச்சியான செய்தி. அதுபோல் அந்தப் பெண்ணிற்கும் ஒரு வாழ்வு கிடைத்திருந்தால் சந்தோஷமே...

      கதையைப் படித்தவுடன் மனதில் எழுந்த தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அதான் எங்கேயோ படித்த மாதிரி இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். இது எபியில் நீங்கள் அனைவரும் வாசித்த கதைதான். என் பதிவிலும் ஒரு சேமிப்பாக இங்கு பகிர்ந்தேன். வந்து படித்து கருத்தை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கமலாக்கா கதை வாசிக்கும் போதே வாசித்த நினைவு வந்துவிட்டது எயில் வந்தது நினைவுக்கு வந்தது.

    உறவுகள் ஊர் உலகம் இப்படித்தான் கண்டபடி பேசும்...நாக்கில் நரம்பில்லாதது...

    உணர்வு பூர்வமான கதை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் அனைவருமே இதை வாசித்த கதை என்றாலும், இங்கும் வந்து கதையை படித்து கருத்துக்கள் அளித்திருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களது ஊக்கங்கள் எனது ஆக்கத்திற்கு வழி வகுக்கும். தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி.

      என் செல்லில் மாலையில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் சற்று தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மரணத் தருவாயில் ஜானகியின் வேண்டுகோளை வேறு வழியில்லாமல் ஏற்கும் ரகுவால் முதலில் மேகலாவுடன் இணக்கமாக இருக்க முடியாதுதான். மனம் இரண்டிற்கும் நடுவில் தத்தளிக்கும். பார்க்கப் போனால் அவன் நிலைதான் ரொம்ப இருதலைக்கொள்ளி எறும்பு போல!!!

    ஜானகி ரொம்பப் பிடிவாதமாக இருப்பதால் ரகு சம்மதித்திருக்கிறான். ஆனால் மேகலா ரொம்ப பாவம் ....கடைசியில் ரகு புரிந்துகொள்கிறானே அதற்கு உதவியது இந்த வம்புதான். எனவே வம்பும் நன்மை செய்யும் என்று எடுத்துக் கொள்ளலாம்.. அழகா எழுதியிருக்கீங்க கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது சரி.... ரகு புரிந்துகொள்ளும்போது அவனுக்கு ரிடையர் ஆகும் வயது ஆகிவிட்டதுபோலத் தெரிகிறதே. அப்புறம் புரிந்து கொண்டால் என்ன புரிந்து கொள்ளாவிட்டால் என்ன?

      திருநெவேலியில் செக்கச் சிவந்த அழகியை, நல்ல கருப்பான வக்கீலுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். அவளுக்கு அவரைப் பிடிக்கவில்லை (அந்தக் காலத்திலேயே). அவருடன் சேர்ந்து நடக்க மாட்டாள், பக்கத்திலேயே போக மாட்டாள். அவர் பொறுமைசாலி. ஒரு சமயத்தில் அவள் தன் வீட்டுக்கே போய்விடுகிறாள். பிறகு சில பல வருடங்கள் கழித்துத் திருந்தி திரும்பவும் இவருடன் சேர வருகிறாள். பிறகு அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. வாழ்வு வீணானதுதான் மிச்சம்

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. கதையை நான் எந்த கோணத்தில் சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொண்டு தாங்கள் அளித்த கருத்து எனக்கு மகிழ்வை தருகிறது.

      மேகலா பாவந்தான்... குடும்ப வாழ்க்கையில் சிலரின் தியாகங்கள் எப்போதுமே விலை மதிப்பற்றவை . அதை குடும்பத்திலிருக்கும் பிறர் உணர்ந்து கொள்ளும் போது அதன் விலை மதிப்பு இன்னமும் கூடி இரு சாராரையும் ஒருங்கே மகிழ்விக்கும்.

      அது போல் தங்களது ஊக்கமிகும் பாராட்டும் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. தங்களது பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். அந்த காலம், இந்த காலம் என்றில்லை மனதுக்கு பிடித்தவனோ/ பிடித்தவளோ வாய்க்காவிட்டால், கணவன், மனைவி இருவருமே ஒருவரையொருவர் ஏறெடுத்துப் பார்க்காமல் வாழ்வது வழக்கந்தானே.. ஆனால், இப்போது அப்படியில்லை. மூன்று நாட்கள் இப்படி முகம் திருப்பிக் கொண்டிருந்தால் விவாகரத்துக்கு வழி செய்து விட்டு அவரவர் பாதையில் செல்லும் தைரியம், வழிகள் என வந்து விட்டது. இப்படி மனிதர்கள் தங்களையறியாமலே உண்டாக்கி கொள்வதும் அவரவர் விதி வழியே நடப்பதுதான்

      தாங்கள் சொன்ன உண்மை சம்பவத்தில் அவர்களுக்கு ஏதும் புத்திர பாக்கியம் அமையாததும் அவர்களின் விதி. அப்போது பிரிவை விட அந்த விதியை நம்பினார்கள். இப்போது தங்கள் சாமர்த்தியத்தால் பிரிகிறோம் என்று நினைத்தாலும், விதி அவர்களின் பின்னாலேயே நிழலாகி அசையாது நிற்பதை உணர மறுக்கிறார்கள். என்றுமே விதி வலியது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எபியில் என்ன கருத்து போட்டிருந்தேன் என்று பார்த்தால் என் கருத்தே இல்லை....அப்போது வலைக்கு வராமல் இருந்திருக்கிறேன் கணினி பிரச்சனை காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் கதையை வாசித்த நினைவு நன்றாக இருக்கிறது...முடிவு வரைக்கும் நினைவு வந்தது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் அங்கு என்ன கருத்துக்கள் தந்தீர்கள் என்பது எனக்கும் நினைவில்லை. ஆனால் அப்புறமாக படித்திருக்கிறீர்கள் போலும். இங்கும் வந்து படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  8. எனக்கு முன்பு வாசித்த நினைவு இல்லை. இருந்தாலும் பொறுமையாக நாவலை எழுதி, அதை ஒரு சிங்கிள் பதிவாக வெளியிடும் தைரியம் எங்க கமலா ஹரிஹரன் மேடத்திற்குத்தான் உண்டு.

    கதையை பொறுமையாக எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். ஆனால் கதை எனக்குப் பிடிக்கலை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களுக்கும் நினைவில் இல்லையா?. ஆனால் ரகு தடியன் என நீங்கள் கதையின் நாயகனை அர்ச்சித்தது எனக்கு நிழலோட்டமாக நினைவுக்கு வருகிறது. ஹா.ஹா.ஹா

      /பொறுமையாக நாவலை எழுதி, அதை ஒரு சிங்கிள் பதிவாக வெளியிடும் தைரியம் எங்க கமலா ஹரிஹரன் மேடத்திற்குத்தான் உண்டு./

      ஹா.ஹா.ஹா பாராட்டிற்கு நன்றி. உங்களுக்காகவேனும் நச்சென்று நாலுபக்கத்தில் (இல்லையில்லை அது மறுபடியும் நாவலாகி விடுமே... :) நாலு பாராவில்:) ) ஒரு சிறுகதை எழுத வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. முயன்று பார்க்கிறேன். .

      வெளிப்படையான தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அப்போது என்ன கருத்து போட்டிருப்பேன் என்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் இதில், ஜானகி-தத்தி, ரகு-கொஞ்சம்கூட அனுதாபம் வராத பாத்திரம், மேகலா-வேற வேலை இல்லை.. எவளுக்கோ, எவனிடமோ தண்டனை பெற... நாலு பேர் கமெண்டுகள்-மற்றவர்களைப் பற்றிப் பேசும் இவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் நம் வாழ்க்கைக்கு நல்லது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஒரு கதையின் பாத்திர படைப்புக்கள் நம்மில் சிலருக்கு பிடிப்பதும், பிடிக்காமல் போவதும், இயற்கையே..

      இவர்கள் இப்படியான வித்தியாசங்களுடன் நம்மிடையே வாழ்பவர்கள்தான். அல்லது இப்படி வாழுகிறவர்கள் கதையோடு நம்மிடையே வந்து, வெறுப்பையோ அன்பையோ, பச்சாதாபத்தையோ சம்பாதித்து கொண்டு செல்கிறார்கள்.

      இருந்தாலும் தங்களின் வெளிப்படையான கருத்துக்களை வரவேற்கிறேன். இது இனி நான் எழுதும் கதைகளில் சிறிது மாற்றங்களை கொண்டு வர உதவும் எனவும் நம்புகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை வாழ்வில் நடந்த நிகழ்வு கிட்டத்தட்ட இது போன்றது. மனைவியைப் பிடிக்காமல் பொருட்படுத்தாமல், சேராமல் ஆனால் பிறருக்கு-அப்பாவுக்கு அதைப்பற்றித் தெரியாமல் ஒரு வருடம் வரை வாழ்கிறார். ஏதோ ஒரு திருப்பத்தில் (எதிர்பாராவிதமாக) ஏன் உன்னைப் புறக்கணித்தேன் என்றே தெரியவில்லை என்று சொல்லி சேர்கிறார். குழந்தை பிறக்கவில்லை. ரொம்பவே அந்நியோந்யம். உடல் நிலை சட் என்று சரியில்லாமல் போய், தங்கையை மணந்துகொள்ளுங்கள் என்று சொல்லி மறைந்துவிடுகிறாள். அவருக்கு மனைவியை மறக்க முடியவில்லை. ஆனால் மாமனார், என் இரண்டாவது பெண்ணுக்கு நிச்சயம் செய்ததை கேன்சல் செய்துவிட்டேன், அவள் உங்களுக்குத்தான் என்று சொல்லி திருமணம் செய்துகொடுக்கிறார். அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன என்று அவரது தன் வரலாற்றில் எழுதுகிறார்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் தந்த தகவல்கள் எனக்குப் புதிது. இதுவரை படித்ததில்லை. விபரங்களை அறிந்த கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி.

      மற்றபடி எவ்வித குறைகளின்றி குழந்தைகள் பிறப்பதும் , சாகும் வரை தம்பதிகள் அன்போடு ஒற்றுமையாக இருப்பதும், இறப்பிலும் பிரிய இயலாமல் ஒருவரோடு ஒருவர் சேர்வதும், இறைவன் வகுத்த விதிப்பயன்தான்.

      தங்கள் அன்பான கருத்துப் பரிமாற்றலுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கனமான கதைக் களம்.. சிறப்பாகக் கையாண்டிருக்கின்றீர்கள்.. எனக்கெல்லாம் இத்தனை சாமர்த்தியம் இல்லை..

    ஸ்ரீரங்க தரிசனத்துக்கும் இதற்கும் நேற்று கருத்து எழுதி இருந்தேன். அவை காற்றோடு போய் விட்டன..

    இன்று மீண்டும் கருத்தைச் சொல்லி இருக்கின்றேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் கதையை படித்து தந்த நல்லதொரு கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரரே.

      நலமா? தங்கள் கைவலி இப்போது குறைந்துள்ளதா? நல்ல கருத்துள்ள அருமையான கதைகளையும், இறைவன் மேல் பக்தி பரவசமுள்ள பாமாலைகளையும் சுலபமாக எழுதி வரும் தங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்.? உங்கள் தன்னடக்கம் என்னை வியக்க வைக்கிறது. அதேபோல் உங்கள் நல்ல மனதால் என்னை இங்கு வந்து அன்போடு பாராட்டியதற்கும் பணிவான நன்றி.

      நீங்கள் போட்ட கருத்துரைகள் மாயமாகி விட்டது வருத்தமே.. நானும் உங்களை ஏதோ பணி நிமித்தமாக காணவில்லை போலும் எனத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். தாங்கள் மறுபடியும் வந்து கருத்துரை தந்தது மகிழ்வாக இருக்குறது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கதை நன்றாக இருக்கிறது. என் மாமியார் வீட்டு பக்கம் ஒருவரின் மனைவிக்கு உடல் நலம் இல்லை. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தால் அவர் முதல் மனைவி பிழைத்து விடுவார் என்று ஜோதிடர் சொன்னாராம். அப்படியே திருமணம் செய்தார் தன் மனைவியின் தங்கையை . முதல் மனைவி நலமாகி விட்டார்.
    இரு மனைவிகளுடன் வாழ்ந்தார், இருவரும் பள்ளி ஆசிரியர்கள்.
    உங்கள் கதையை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.

    நீங்கள் பொறுமையாக கதையை நகர்த்தி சென்றீர்கள்.

    //எவ்வித குறைகளின்றி குழந்தைகள் பிறப்பதும் , சாகும் வரை தம்பதிகள் அன்போடு ஒற்றுமையாக இருப்பதும், இறப்பிலும் பிரிய இயலாமல் ஒருவரோடு ஒருவர் சேர்வதும், இறைவன் வகுத்த விதிப்பயன்தான்.//

    நீங்கள் சொல்வது போல எல்லாம் விதிபயன் தான்.

    நிறைவு பகுதியில் சொன்னதும் அருமை.
    கதை தலைப்பும், படமும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    நீங்கள் கூறும் உண்மை சம்பவத்தை அறிந்து கொண்டேன். உண்மைதான்.. இதுபோல் பலரது வாழ்க்கையும் அமைந்துள்ளது. எல்லாமே இறைவன் வகுத்து தந்த பாதைகள்தாம்.

    கதையை பாராட்டியதற்கும்., சகோதரர் ஸ்ரீ ராம் அவர்கள் தந்த படத்தை பாராட்டியதற்கும் மிக்க மகிழ்ச்சி. தங்களது ஊக்கம் தரும் பதில்கள் தாம் என்னையும் இப்படி ஏதாவது எழுத வைக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் சகோதரி.

    இதற்கு பதில் கருத்து எழுத தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete