Sunday, July 4, 2021

தொடர் கதை... நானும், அவரும்.

கதையின் 6 ஆவது (நிறைவு) பகுதி... 

வந்தும், வராது ஏமாற்றிக் கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடு ஜாமம் வரை தன் மனம் போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூறல் விடாத, புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில், என்னைச் சுற்றி, ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது... "நல்லவேளை,.. . அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் வந்து விழுந்ததே.... .! எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச் சொல்லியும் அவர் இதன் மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. "என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் கூறி கொண்டும் இருந்தார்கள்.

இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் கூறியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக் கொண்டு, மரண அவஸ்தையுடன் ...... மரமாகிய நான்..... பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ.... எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்த நிலையில் என் உள்ளம் அவரைத் தேடியது. "எங்கே அவர்.  .? அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா. . .? என்னைச் சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக் காணவில்லையே...? என்னவாயிற்று அவருக்கு... சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்திருப்பாரே. .. . இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே....  ... "என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ.... வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்்  கூட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. "ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு.... தெரியவில்லையே..?" என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்த நிலையில் கூட பதறியது.

சாலையின் குறுக்கே நிகழ்ந்த என் சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும், இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின........

இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச் சென்ற குமாரிடம்,,,, "தனக்கு இப்போது பரவாயில்லை. .. மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை காலை சரியாகிவிடும்....." என்று ௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலை கண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே, அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலை கண்டு சந்தேகித்து.... ஓ... வென்று கத்தியிருக்கிறாள்.

வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது... நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே...! எத்தனை நல்ல மனிதர்.....ஒருவரிடமும் கோபபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்....

"இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்... !!!! நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை.... ரொம்ப கஸ்டமாயிருக்கு...! அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்திருக்கிருக்கிறார்கள்.  இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை காலை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது...."

பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் பேசப்பேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்...." ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே....! ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்து விட்டானே..... .! அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...

மறுநாள்.... நானும், அவரும்.... இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒரு சேர பயணமாவோம் என்று நினைத்த போது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது.

"நானும், அவரும்" என்ற இக்கதை நிறைவுற்றது.

நடிகர் திரு. விவேக் அவர்களின் தீடீர் மறைவு கொஞ்சம் அனைவரையுமே உலுக்கி விட்டது. நல்ல நடிகர். அந்தந்த நகைச்சுவை பேச்சுக்களுக்கு தன் முக பாவங்களில், நடிப்பை தந்து பேசி சிரிப்பை வரவழைத்தது மட்டுமின்றி, பகுத்தறிவு விஷயங்களில் சிந்திக்கவும் வைத்தவர். அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களை தன்னால் இயன்றவரை மிளிர வைத்தவர். அவர் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம். 

நடிகர் திரு விவேக் அவர்களின் மறைவு செய்தி ஏனோ முன்பு எழுதிய இக்கதையை   எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் பதியச் செய்தது. நல்லதொரு கலைஞர்... மரங்களின் நேசர்...இயற்கையின் அபிமானம் பெற்றவர்.. என்றெல்லாம் எண்ணியதாலோ  என்னவோ.... 🙏.

அன்றே கதையை பகுதியாக பிரித்து வெளியிட நினைத்தேன். இயலவில்லை. நாம் நினைப்பது ஒன்றாயினும், இறைவன் தான் நினைப்பதைதானே இறுதியில். நடத்தி வைக்கிறான். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... 🙏... 

இக்கதையை அப்போது ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தோடு மட்டுமின்றி, உடன் வந்த அவரது வலைச்சர ஆசிரியர் அறிமுகத்தில் என்னையும் என் எழுத்தையும் சிலாகித்து எழுதி, அங்கும் இந்தக் கதையை பிரகடனப்படுத்தி என்னை கெளரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்கள்தான். நன்றி. நன்றி கில்லர்ஜி சகோதரரே. . 🙏..

இந்தக் கதையை இப்போது படித்து கருத்துக்கள் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

46 comments:

  1. மௌனமாகிப் போனது மனம்...
    இப்பொழுது ஒன்றும் சொல்ல முடிய வில்லை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து நல்லதாக கருத்துரைகளும் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வந்து கதையினை படித்து சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அதற்கே முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். ஆனால் இந்த பதிவு கதைக்கு பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மரத்துப் போன மனங்களுக்கு மத்தியில்
    உணர்வுகளால் துளிர்த்து நிற்கின்றது மரம்..

    மானிடனின் ஆன்மா மட்டுமல்ல -
    மரத்தின் ஆன்மா கூட மரணம் எய்துவதில்லை..

    மறுபடி பிறந்திருக்கும்..
    மறுபடியும் பிறக்கட்டும்..
    அன்பு தழைக்கட்டும்..
    அகிலம் செழிக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நல்ல உண்மையான கருத்துரை.

      /மானிடனின் ஆன்மா மட்டுமல்ல -
      மரத்தின் ஆன்மா கூட மரணம் எய்துவதில்லை..

      மறுபடி பிறந்திருக்கும்..
      மறுபடியும் பிறக்கட்டும்..
      அன்பு தழைக்கட்டும்..
      அகிலம் செழிக்கட்டும்.. /

      ஆம்.. அன்பு அனைவரின் மனதிலும் செழித்தோங்கட்டும். அதனால் அகிலத்தின் மனதும் குளிர்வடையட்டும். அதுதான் நாம் என்றும் வேண்டுவது... தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்...
    மெய்யே உன் பொன்னடிகள்
    கண்டின்று வீடுற்றேன்..

    - இது ஞானப்பெருந்தகை ஸ்ரீ மாணிக்க வாசகர் தம் திருவாக்கு..

    எல்லாப் பிறவிகளையும் எடுத்து இளைத்த ஆன்மா இறைவனைக் காண்பதும் பேறடைவதும் எங்ஙனம்?..

    அன்பினால்!..

    அன்பே சிவம் எனப்பட்டது அதனால் தான்..

    அன்பே சிவமாய் அமர்ந்திருக்கலாம்...
    அடுத்தடுத்து அகிலத்தில் பிறந்திருக்கலாம்!..

    பிறப்பற்ற நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.. நல்ல நெல்லின் விதை தான் கோட்டை என்ற ஒன்றுக்குள் பாதுகாக்கப்பட்டு தக்க தருணத்தில் - பருவத்தில் மீண்டும் விதைக்கப்படுகின்றது..

    சாயுஜ்யம் என்று சிவப்பரம்பொருளுடன் ஒன்றியிருந்தாலும் பூமண்டல பரிபாலனத்திற்காக மீண்டும் பிறப்பெடுத்தாக வேண்டும்...

    மரமாக.. மனிதனாக!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. அற்புதமான ஆழமான கருத்துக்கள்.

      /பிறப்பற்ற நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.. நல்ல நெல்லின் விதை தான் கோட்டை என்ற ஒன்றுக்குள் பாதுகாக்கப்பட்டு தக்க தருணத்தில் - பருவத்தில் மீண்டும் விதைக்கப்படுகின்றது..

      சாயுஜ்யம் என்று சிவப்பரம்பொருளுடன் ஒன்றியிருந்தாலும் பூமண்டல பரிபாலனத்திற்காக மீண்டும் பிறப்பெடுத்தாக வேண்டும்...

      மரமாக.. மனிதனாக!../

      உண்மை.. பிறவி பெருங்கடல் அல்லவா? அன்பே சிவம் என்பதினால் சிவபெருமானின் அன்பிற்கேற்ப நல்ல, நல்ல பிறவிகளாக எடுத்த பின் சமுத்திரத்தை தாண்டி அவனுடன் சங்கமிக்க வேண்டும். அதுவே மோட்சம்.
      மீண்டும் பிறவாத உன்னத இடமாகிய சொர்க்கம். அது எப்போதென "அவன்தான்" தேர்ந்தெடுக்க வேண்டும்.

      அழகான கருத்துரைகளை தந்த உங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இன்னும் பேசலாம் இதைப் பற்றி...
    ஆயினும் இப்போது இங்கு நள்ளிரவு 11:30 மணி...

    நல்லதொரு கதையை வழங்கியதாக மனதாரப் பாராட்டுகின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பகலெல்லாம் தங்கள் அலுவலக பணிகளுக்கிடையே சிரமபட்ட பின் இரவிலும் தூக்கத்தை தவிர்த்து கதையை படித்து நல்ல நல்ல கருத்துக்களை தந்து, என் எழுத்துக்கு ஊக்கம் தந்து விமர்சித்த உங்கள் அன்பை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றிகள்.

      உங்கள் பாராட்டுகளுக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய பணிவான நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. குளத்தங்க்கரையின் அரசமரம் கதை நினைவுக்கு வந்தது. அந்த கதையில் தன்னுடன் பழகி மகிழ்ந்த ருக்மணி என்ற பெண்ணைப்பற்றி வருந்தி சொல்லும்.

    அது போல் சதாசிவத்தின் இன்பத்திலும் , துன்பத்திலும் பங்கு கொண்ட மரம் . அவர்கூடவே இருந்த மரம் அவரை பிரிந்து வாடாமல் அவர் கூடவே சென்றது இறைவனின் திருவுள்ளம் தான்.
    அவரை பிரிந்து மரமோ, மரத்தை பிரிந்து அவரோ வாடவில்லை.

    கதை மிக அருமை. அன்பு மனம் மகனுக்கு சிரமம் வைக்காமல் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. மகனுக்கு கெட்டபெயர் வராமல் பார்த்துக் கொண்டார்.

    //அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...//

    நேற்றுப்பார்த்தேன் இன்று இல்லையே ! என்பது நல்ல இறப்புதான். கொடுத்து வைத்தவர்.

    மீண்டும் பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரத்தின் ஆசை நிறைவேறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /குளத்தங்க்கரையின் அரசமரம் கதை நினைவுக்கு வந்தது. அந்த கதையில் தன்னுடன் பழகி மகிழ்ந்த ருக்மணி என்ற பெண்ணைப்பற்றி வருந்தி சொல்லும்./

      அப்படியா? அந்தக்கதை நான் படித்ததாக நினைவில்லையே... அன்பாக பழகியவர்களை பற்றி மரம், செடி, மற்ற இயற்கை ஜந்துகள் என சொல்லும் கதைகள் நன்றாகத்தான் இருக்கும்.புத்தகமாக வந்ததா? தலைப்பு விபரங்கள் தந்தால், நானும் அக்கறையை நானும் படிக்கிறேன்.

      நீங்கள் இந்தக் கதையையும் தொடர்ந்து வந்து படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது.

      இந்த கருத்துக்கு உடனடியாக நான் பதில் தராமைக்கு என்னை மன்னிக்கவும்.உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. தமிழின் முதல் சிறுகதை வடிவம், "குளத்தங்கரை அரசமரம்". வ.வே.சு ஐயர் எழுதினது. மனதைத் தொடும் கதைகளில் முதன்மையான ஒன்று.

      Delete
    3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      என் பதிலை கண்டதும் உடன் வருகை தந்து "குளத்தங்கரை அரசமரம்" கதை பற்றி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி. விபரம் அறிந்து கொண்டேன். எங்கள் அம்மா இவர், மற்றும் மற்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்களை விரும்பி படிப்பவர். தொடராக வரும் நிறைய கதைகளை சேகரித்து பைண்டிங் பண்ணி வைத்து விருப்பத்துடன் படிப்பவர். அவரிடமிருந்துதான் கதைகள் படிக்கும் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொண்டது. அம்மா வீட்டில் இருக்கும் புத்தகங்களில் அனேகமாக இந்தக் கதை படித்திருப்பேன். இல்லை, அம்மா வாசித்து கேட்டு அறிந்திருப்பேன். கதை நினைவிலில்லை. கொஞ்சம் படிக்க ஆரம்பித்தாலும் இப்போது நினைவுக்கு வந்து விடும். யூடியூப்ல் நீங்கள் தந்திருக்கும் விபரங்களை வைத்து தேடிப் படிக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. இந்தக் கதை 1915 ஆம் ஆண்டில் "விவேகபோதினி" என்னும் பத்திரிகையில் தமிழ், ஆங்கிலத்தில் வந்ததாகச் சொல்லுவார்கள். ஆகவே இதை நீங்கள் பைன்டிங்கில் எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. யூ ட்யூபில் எல்லாம் இருக்கானும் தெரியாது. கதை வந்த காலத்தில் உள்ள வரதட்சணைக்கொடுமையைச் சுட்டும் கதை. சோகமான முடிவாக இருக்கும். மனதை ரொம்பவே வருத்தும்.

      Delete
    5. யூ ட்யூபிலும் கிடைப்பதாக கூகிள் சொல்கிறது.

      Delete
    6. வணக்கம் சகோதரி

      அப்படியா? தாங்கள் தந்த விபரங்களை அறிந்து கொண்டேன். எங்கள் அம்மாவிடம் இருந்த புத்தகங்கள், பைண்டிங் செய்தவைகள் என எல்லாமுமே இப்போது இல்லை. ஆனால் அப்போது நிறைய இருந்தது. அவற்றை நான் அங்கிருக்கும் போது அனைத்தையுமே படித்திருக்கவில்லை. ஒரு சிலதுதான் படித்ததாக நினைவு.புகுந்த வீட்டிற்கும் எதையும் கொண்டு வந்தது கிடையாது. ஒரு வேளை அம்மா இதை படித்திருக்கிறாரோ என நினைத்தேன். தற்சமயம் யூட்யூப்பிலும் கிடைப்பதாக சொன்னதற்கு நன்றி. தேடிப்பார்க்கிறேன். தங்கள் மீள் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    7. எனக்கும் அந்தக் கதை ஞாபகம் வந்ததது.  தமிழின் முதல் சிறுகதை வடிவம்.  இதோ இந்த லிங்க்கில் படிக்கலாம்.

      https://www.valaitamil.com/kulaththangarai-arasamaram_8833.html

      Delete
    8. வணக்கம் சகோதரரே

      நீங்களும் மீள் வருகை தந்து "குளத்தங்கரை அரசமரம்"
      கதை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றிகள்.

      நீங்கள் மூவரும் சொல்வதிலிருந்தே அந்தக் கதையின் சிறப்பை உணர்ந்து கொண்டேன். சகோதரி கீதா அவர்கள் நிறைய விபரங்கள் தந்திருந்தார்.அவர்கள் சொன்னவுடன் கதையை யூட்யூப்பில் போட்டவுடன் நிறைய விமர்சகர்கள் கதை சொல்வதாக (ஆடியோவாக) கிடைத்தது. இதோ. .இப்போது நீங்களும் படிக்க லிங்க் தந்துள்ளீர்கள். இந்த லிங்க்கில் போய் கண்டிப்பாக படிக்கிறேன். உங்களைனைவரின் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நான் யார் என்பதும் புரிந்து விட்டது.
    கதையை படித்து ஆலோசனை வழங்கியவர் யார் என்றும் தெரிந்து விட்டது. சகோவிற்கு வாழ்த்துக்கள்.
    நல்ல கதையை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    தொடர்ந்து கதை எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்போதே இந்த கதையை படித்து ஆலோசனை கருத்து தெரிவித்த சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு நீங்கள் வாழ்த்துகள் தெரிவித்திருப்பதற்கு நன்றி.என்னுடைய நன்றிகளும் அவருக்கு எப்போதும் உண்டு. கதையை படித்து உங்கள் அன்பான வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தந்து மென்மேலும் எனை எழுத ஊக்குவித்த உங்கள் அன்பான உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நடிகர் திரு விவேக் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம்.//

    உங்கள் கதையை படித்தவுடன் மரங்களும் அவர் நினைவாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.
    என் சின்ன சிறிய தோட்டச்செடிகள் என்னைப்பார்த்து தலையசைத்து சிரிப்பதாய், பேசுவதாய் நினைத்து கொள்வேன். தினம் அந்த செடிகளுடன், மலர்களுடன் பேசுவேன். அவைகளை தம்பி, தங்கைகளிடம் கொடுத்து விட்டு வந்தேன்.. அங்கு அவை என்னை தேடுகிறதோ என்ற நினைப்பு வருகிறது.

    இங்கு மகன் வீட்டில் செடிகளை பராபரிக்கிறேன். அவைகளைப்பார்த்து மன ஆறுதல் அடைகிறேன். அவை தரும் பூக்களை கொண்டு மலர் அலங்காரம் செய்து இறைவனையும் என் இதய தெய்வத்தையும் வழி படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /உங்கள் கதையை படித்தவுடன் மரங்களும் அவர் நினைவாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது./

      ஆமாம்..அவர் நட்ட மரங்கள் கண்டிப்பாக அதை உணர்ந்திருக்கும்.

      /என் சின்ன சிறிய தோட்டச்செடிகள் என்னைப்பார்த்து தலையசைத்து சிரிப்பதாய், பேசுவதாய் நினைத்து கொள்வேன். தினம் அந்த செடிகளுடன், மலர்களுடன் பேசுவேன். அவைகளை தம்பி, தங்கைகளிடம் கொடுத்து விட்டு வந்தேன்.. அங்கு அவை என்னை தேடுகிறதோ என்ற நினைப்பு வருகிறது./

      ஆம் செடிகளுடன் பேசும் போது எனக்கும் அந்த உணர்வு வரும். உங்கள் தம்பி, தங்கைகள் அவைகளை நன்றாக வளர்த்து பலன் கண்டிருப்பார்கள். ஆனாலும் அவை சில சமயம் உங்களைத் தேடி ஏமாற்றம் அடைந்திருக்கும். இருப்பினும் உங்கள் உறவின் பேச்சுக்களில் நீங்கள் நலமாக உங்கள் மகன், பேரனுடன் நன்றாக இருக்கும் செய்திகளை அறிந்து கொண்டு உங்களை வாழ்த்தியபடி தானும் வாழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும்.

      /இங்கு மகன் வீட்டில் செடிகளை பராபரிக்கிறேன். அவைகளைப்பார்த்து மன ஆறுதல் அடைகிறேன். அவை தரும் பூக்களை கொண்டு மலர் அலங்காரம் செய்து இறைவனையும் என் இதய தெய்வத்தையும் வழி படுகிறேன்./

      செடி, கொடி, மலர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பை கண்டு வியக்கிறேன். உங்கள் வார்த்தைகள் மன நெகிழ்வை தருகிறது. உங்கள் நல்ல அன்பான மனதிற்கு வாழ்த்துகள்.

      இந்தக் கதைக்கு தொடர்ந்து வந்து நல்ல கருத்துக்கள் தந்தது மட்டுமின்றி, உங்கள் பேச்சுக்களை எழுத்துக்களால் பகிர்ந்து கொண்டதற்கும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நான் யூகித்தது பாதி சரி. மீதி எதிர்பாராதது. மிக அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் இந்தக் கதையை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையின் முடிவை நீங்கள் சென்ற பகுதியிலேயே சரியானபடி ஊகித்து விட்டீர்களே..! அதற்கு உங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். ஆனாலும் மீதி எதிர்பாராத திருப்பம் நன்றாக உள்ளதென ரசித்தது மகிழ்வாக உள்ளது. உங்கள் அனைவரின் பாராட்டுகளும் மன மகிழ்வை தருகிறது. உங்கள் பாராட்டிற்கு மனப்பூர்வமான நன்றிகள். தாமதமாக நான் பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மரம் போல உணர்வற்று நின்றான் என்கிற வார்த்தைப் பிரயோகம் இனி என்னிடமிருந்து வராது. ​அந்த அளவு மனதில் நின்றுவிட்டது. காட்டில் வளர்ந்த மராமமரம் என்கிற சி எஸ் ஜெயராமன் பாடல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை மனதில் நிற்கும்படியாக உள்ளது என்ற வார்த்தையே என் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் பரிசு.அந்த எழுத்து நல்லபடியாக இத்தனை நாள் வளர்ந்து வந்ததற்கு உங்கள் ஊக்கமான கருத்துரைகள்தான் பெரும் பங்காக இருந்திருக்கிறது.. உங்களைனைவரின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் மேலும் என் எழுத்துக்களுக்கு உரமாக இருந்து செயல் புரிய வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் குறிப்பிட்ட பாடலையும் கேட்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம் முதல் பதிவிலேயே இக்கதை நினைவுக்கு வந்து விட்டது.

    தலைப்பு நினைவுக்கு வராததால் 2015-ல் தேடிக்களைத்து விட்டேன் ஆனால் இப்பொழுது புரிகிறது 2014 என்று...

    நான்தான் என்பது தெரியும் என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படிக்க ஆரம்பித்ததுமே உங்களுக்கு ஏற்கனவே படித்த நினைவு வரும் என்பது எனக்கு தெரியும் சகோதரரே. அதனால்தான் அப்போதே இந்த கதையை படித்து, எனக்கு இந்த மாதிரி அந்த நீண்ட கதையை பிரித்து கொடுக்கும் ஆலோசனையை தந்தவர் என்று மட்டும் குறிப்பிட்டு இறுதியில் உங்கள் பெயரை குறிப்பிடுகிறேன் என சொல்லியிருந்தேன். அதன்படி உங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல். இப்போதும் தொடர்ந்து வந்து கதையை ரசித்துப் படித்து நல்ல கருத்துரைகள் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. ஆனால் நடுநடுவே நீங்கள் "மரத்தைத் தொடர்கிறேன்" என்ற வரிகளை கருத்துடன் தெரிவித்தது எனக்கு "திக்"கென்று இருந்தது. ஹா. ஹா.ஹா. யாராவது கற்பனையில் நூல் பிடித்து விட்டால், கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடுமே என்ற கவலைதான்.:) கதையைப் பற்றிய தங்களிடமிருந்து வந்த நல்ல கருத்துரைகளுக்கும், அன்றைய வலைச்சரத்தில் என்னை நினைவு கூர்ந்து பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான கதை.
    அன்பான மரமும் அவருடன் சேர்ந்து விடை கொண்டது.

    வீட்டைப் பிரியாமல் அவரும் சென்று,'அவர் பிரிந்ததும்
    தானும் மரித்தது
    மரத்தின் அருமை.

    நல்ல எழுத்தில் அத்தனை உணர்வுகளைக் கொண்டு வந்து விட்டீர்கள்.
    மற்றவர் கையில் அவஸ்தைப் படாமல்
    நிம்மதியாகச் சென்றுவிட்டார் சதாசிவம்.

    மீண்டும் பிறக்க வேண்டுமா தெரியவில்லை.
    பிறந்தால் சேர்ந்து பிறக்கட்டும்.
    மிக மிக நன்றிமா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /வீட்டைப் பிரியாமல் அவரும் சென்று,'அவர் பிரிந்ததும்
      தானும் மரித்தது
      மரத்தின் அருமை/

      கதையின் இறுதிப் பகுதியான ஆறாவது பகுதியும் உங்களுக்கு பிடித்தமானதாக அமைந்திருந்தது எனக்கு மகிழ்வை தந்தது.
      மகனுக்கு வீட்டை விற்று வரும் தொகையும் வேண்டும்,. அதே சமயத்தில் பெரியவரை உடன் வைத்துக் கொள்ளும் நோக்கமும் இல்லை என்கிற பட்சத்தில், அவர் அந்த மகனுக்கு தொந்தரவு இல்லாமல் ஒரு முடிவை கண்டதே நல்லதுதான். ஆனால் அவர் மேல் பாசம் மிகுந்த மரமும் ஒருவரையொருவர் பிரியாமல், இயற்கையின் விதியால், அவருடன் சென்றது அவர் ஆத்மாவுக்கும் மனநிறைவை தந்திருக்கும்.

      /மீண்டும் பிறக்க வேண்டுமா தெரியவில்லை./

      அது அவர்களின் விதியின் பயன்.
      அவர்களின் வேண்டுதல்களின்படி இறைவன் அதை நல்லபடியாக நடத்தி வைக்கட்டும்.

      கதையின் இறுதிவரை கருத்துக்களை அன்புடன் வந்து தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. செடி,கொடிகள்,மரங்கள் அனைத்துக்கும் உயிரும், உணர்வும் உண்டு என்பது நான் நேரில் அனுபவித்துத் தெரிந்து கொண்டது. ஒரு மாதிரிக் கதையின் முடிவை யூகித்திருந்தேன். இருவருக்கும் ஒரு சேர முடிவு/விடிவு கிட்டும் என்பதையும் யோசித்திருந்தேன். அப்படியே நடந்தாலும் மனசு தாங்கவே இல்லை. கடைசியாக மரம் நினைத்ததைப் படித்ததும் கண்ணீரே வந்து விட்டது. மிகவும் அருமையாக உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். அசாத்தியத் திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது. ஒரு மரம் சொல்வது போலவே கதையை ஆரம்பித்ததும், முடித்ததும் மிகப் பெரிய விஷயம். சர்வசாதாரணமாகக் கடந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /செடி,கொடிகள்,மரங்கள் அனைத்துக்கும் உயிரும், உணர்வும் உண்டு என்பது நான் நேரில் அனுபவித்துத் தெரிந்து கொண்டது/

      ஆமாம் உங்கள் அனுபவங்களை உங்கள் கருத்துக்களில் பிரதிபலிப்பை நான் எப்போதும் காண்கிறேனே ...! அம்பத்தூர் வீட்டின் வேப்பமரத்தை நீங்கள் அடிக்கடி சொல்லும் போது எங்கள் பிறந்த வீட்டின் நினைவு எனக்கு வந்து கொண்டேயிருக்கும். அங்கும் வாசலில் ஒன்றும், முற்றத்தில் ஒன்றுமாக இரு பெரிய வேப்பமரங்கள். கோடையில் அதன் வேப்பம்பூ மணத்துடன் சிலுசிலுவென காற்றை வீசியபடி மனக் கண்முன் என் சிறு வயது நினைவுகளில் லயித்து விடுவேன். இப்போது அந்த மரங்களேயில்லை. வீட்டின் நிலைகளும் மாறி விட்டது. (நினைவுகள் மட்டுமே மனதுள் அமர்ந்திருக்கிறது.)

      நீங்கள கதையின் முடிவை ஒரளவு ஊகித்து கொண்டதற்கு வாழ்த்துகள்.
      இருப்பினும், கதையை ரசித்துப் படித்து மனம் உருகிப் போனதாக சொன்னது எனக்கும் மனசு நெகிழ்ச்சியாக இருந்தது.

      நல்ல கதை என்ற தங்களது ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. உங்கள் உற்சாகம் தரும் வார்த்தைகள் என் எழுத்துக்கு ஆணிவேராக அமையும் என மனப்பூர்வமாக நம்புகிறேன். பணிவுடன் கூடிய மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எப்படியோ பெரியவரின் மனப்போராட்டமும், மரத்தின் மனப்போராட்டமும் ஒரு சேர முடிவுக்கு வந்துவிட்டது. இனி வீடு எப்படிப் போனால் என்ன? அந்த வளர்ப்பு மகன் தன்னிஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளலாம். சிரமம் தராமல் பெரியவர் மறைந்துவிட்டார். மரமும் தானாகவே விழுந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எப்படியோ பெரியவரின் மனப்போராட்டமும், மரத்தின் மனப்போராட்டமும் ஒரு சேர முடிவுக்கு வந்துவிட்டது. இனி வீடு எப்படிப் போனால் என்ன? அந்த வளர்ப்பு மகன் தன்னிஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளலாம்/

      உண்மைதான் சகோதரி. பெரியவர்களின் பேச்சை மதிக்காமல் அவர்களின் வாரிசுகள் இந்த மாதிரி நடந்து கொள்ளும் போது இந்த மனவருந்தந்தான் எனக்கும் வரும். கதையுடன் ஒன்றிப்போன உங்களின் மன உணர்வு எனக்கும் எந்த கதையை படித்தாலும், இல்லை நேரடியாகவே யாருடைய நிஜ வாழ்க்கையிலுமே பார்த்தாலும் இதே வருத்தமும் வேதனையுந்தான் வரும். எதுவுமே நிரந்தரமல்ல. ஆனால் ஆசை மட்டும் ஒரு மனிதர் கண் மூடும் வரை அவருடனிருந்து கொண்டு அம்மனிதரை வாட்டி வதைக்கிறது. அதை வென்று விட்டால், அவர் உயிருடனிருக்கும் போதே தெய்வத்திற்கு சமானமாகிறார். அதை வெல்லும் சக்தியை இறைவன்தான் எவருக்கும் தர வேண்டும்.

      அன்புடன் வந்து தந்த கருத்துகள் அனைத்திற்கும் மிக்க நன்றிகள் சகோதரி. தாமதமான பதில் கருத்துரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. ஆஹா... சிறப்பான கதை. மரங்கள், செடி கொடிகள் ஆகியவற்றிற்கும் உணர்வுண்டு என்று சொல்வதுண்டு. மரமும் அந்த மனிதரும் மறைந்து விட்டது வேதனை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மரங்கள், செடி கொடிகள் ஆகியவற்றிற்கும் உணர்வுண்டு என்று சொல்வதுண்டு. மரமும் அந்த மனிதரும் மறைந்து விட்டது வேதனை/

      ஆமாம் நம்மை சுற்றியுள்ள ஜீவன்களுக்கும் பேச்சாற்றல் தவிர எல்லாவித உணர்வுமுண்டு இல்லையா?
      இறுதியில் இருவரும் ஒரு சேர மடிவை கண்டது அவர்கள் ஆன்மாவுக்கு மகிழ்வை தந்திருக்கும் என நம்புவோம்.
      கதையை இறுதி வரை ரசித்துப்படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். பதில்கள் தரத்தான் என்க்கு தாமதமாகி விட்டது வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. வணக்கம் சகோதர சகோதரிகளே

    இந்தக் கதையை ஆவலுடன் ஆறாம் பகுதி வரை தினமும் படித்து வந்து நல்ல கருத்துக்களை தந்து, எனக்கு ஊக்கமும், தினசரி பதிவாக வெளியிட உற்சாகமும் தந்து, இறுதிப் பகுதியில் கதையை சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.ஒவ்வொருவருக்கும் தனிதனியாக பதில் கருத்துக்கள் தருகிறேன்.கொஞ்சம் தாமதமாகும். தாமதத்தை பொறுத்துக் கொண்டு மன்னிக்கவும். உங்கள் அனைவருக்கும் என் பணிவான மிக்க நன்றிகள் 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. மிகவும் அருமையான கதை... பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை இறுதி பகுதி வரை தொடர்ந்து வந்து படித்து ஊக்கம் நிறைந்த நல்லதொரு கருத்துக்கள் தந்து என் எழுத்தை வளர்த்ததற்கு உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். பாராட்டுக்களுக்கும் என் பணிவான நன்றிகள். என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. ரொம்ப சிறப்பாக கதையை எழுதியிருக்கிறீர்கள். மரத்தின் உணர்வோடு, சதாசிவத்தையும் பிணைத்து எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். நல்ல திறமையான எழுத்து. பாராட்டுகள்.

    சதாசிவம், தனக்கு உடைமையானவைகளை, வளர்ந்த தன் மகனிடம் கலந்தாலோசிக்காமல் தன் உறவினருக்கு (சகோதரிக்கு, எந்தவித நியாயமான காரணமாக இருந்தபோதிலும்) கொடுத்தது சரி என்று படவில்லை. வளர்ப்பு மகனிடம் பேசி அவனுக்குப் புரியவைத்திருக்க வேண்டும். மனித மனமே சுயநலத்தால் ஆனது.

    இன்னொன்று எப்போதுமே, சொத்தை விற்றுவிட்டு, மகனிடம் சென்று தங்குவது என்பது ரொம்பவே யோசிக்கவேண்டிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சதாசிவம், தனக்கு உடைமையானவைகளை, வளர்ந்த தன் மகனிடம் கலந்தாலோசிக்காமல் தன் உறவினருக்கு (சகோதரிக்கு, எந்தவித நியாயமான காரணமாக இருந்தபோதிலும்) கொடுத்தது சரி என்று படவில்லை. வளர்ப்பு மகனிடம் பேசி அவனுக்குப் புரியவைத்திருக்க வேண்டும்/

      உண்மைதான். ஆனால் அன்று இருந்த இக்கட்டான சூழ்நிலையில், மகனிடம் கேட்டு அவன் ஏதேனும் சொல்லப் போக அந்த தாய் மனம் வெறுத்து பணத்தை பெறாமலே சென்று விட்டால் என்ன செய்வது என அவர் நினைத்திருப்பார். அவசரமாக பணம் வேண்டி ஒருவித தவிப்புடன் தன் பிள்ளையிடம் வந்திருக்கும் தாயை ஏமாற்றத்தோடு அனுப்பும் நிலையை உருவாக்க வேண்டாம். மகனிடம் அப்புறமாக நிலை விளக்கி சொல்லலாம் எனவும் நினைத்திருப்பார். மனிதர்கள் எத்தனையோ விதம். அவர்கள் மனதுக்குள் நீதியை நினைப்பதும் எத்தனையோ விதம். அவரவர் நீதிதான் சிறந்தது என நினைப்பதால்தான் பிரச்சனையே பெரிதாகிறது. என்ன செய்வது? அதனால்தான் வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றார்கள் விபரம் உணர்ந்த பெரியவர்கள்.

      /இன்னொன்று எப்போதுமே, சொத்தை விற்றுவிட்டு, மகனிடம் சென்று தங்குவது என்பது ரொம்பவே யோசிக்கவேண்டிய விஷயம்./

      அதுவும் உண்மையே.. ஆனாலும் கதையின் பெரியவர் அதைப்பற்றி சிந்திக்கவேயில்லை. நண்பர் பாலுதான் அதில் உறுதியாய் இருந்து உண்மையை புரிய வைக்க பாடுபடுகிறார். ஏற்கனவே இல்லறத் துணை இழந்து மகனின் அன்பை மட்டும் எதிர்பார்த்திருந்த அவருக்கு ஆண்டவன் மேலும் சிரமம் தர விரும்பவில்லை. அது இந்தப் பிறவியில் அவர் வாங்கி வந்த வரம்.

      கதையை படித்து தந்த கருத்துக்கள், பாராட்டுக்கள் மன மகிழ்வை தந்தது. ஊக்கங்கள் நிறைந்த கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகளும்.

      தாமதமாக தந்த பதில் கருத்துகளுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. என்னாதூஊஊஊஊஊஊஉ இது 6 வது பகுதியோ????.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..:)) நான் முதல் பகுதியாக்கும் படிச்சுக் கருத்துச் சொல்லுவோம் என வந்தேன்.. முழுவதும் படிக்க இன்னொருதபா:)) வாறேனே:))...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்கள் பொழுதுகள் எப்படி செல்கிறது. யூட்யூப் சேனல் எப்படிச் செல்கிறது.? நான் தினமும் உங்களை நினைத்துக் கொண்டேயிருந்தேன். உடனே நீங்கள் இன்று என் தளம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம்.. இது ஆறாவது பகுதி. அவசரமில்லை. நீங்கள் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது கதையை வாசித்து விடுங்கள். உங்களது அருமையான கருத்துரைகளை காணவும் ஆவலோடு காத்திருக்கிறேன். கீதாரெங்கன் சகோதரியும் அவருக்கு நேரமிருக்கும் போது வந்து படிப்பார் என நம்புகிறேன். உங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. நான் மட்டும்தான் லேட் என்று நினைத்தேன் நல்ல வேளை எனக்கு ஒரு ஜோடி இருக்கிறது. நன்றி அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. சகோதரி அதிராவும் பிறகு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தாமதமானாலும் பாதகமில்லை. . எப்போதும் வேண்டுமானாலும் வந்து படிக்கலாம். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. ஒரு மரத்தையும் வளர்க்கிறார், மனிதனையும் வளர்க்கிறார், நன்றி கெட்ட மனிதன், நன்றி மறவாத மரம்.. அருமை! ஆனால் எனக்குத் தோன்றும் ஒன்றை சொல்லி விடுகிறேன், நீங்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை என்பது தெரிகிறது. இப்போது உங்கள் நடை பல படிகள் முன்னேறி விட்டது. இப்பொது எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். எல்லோரும் பாராட்டும் பொழுது, நான் விமர்சித்திருக்கிறேன், உங்களை புண்படுத்தும் நோக்கமல்ல.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் விமர்சனம் மகிழ்வை தருகிறது. நான் இன்னமும் கதைகள் புனைவதில் சிறப்பெய்தவில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டேதான் உள்ளது. நன்கு சிறப்பாக எழுத வேண்டுமென்ற அவாவும் இருக்கிறது. அதற்கு உங்கள் கருத்துக்கள் ஊக்கமும், உற்சாகமும் தரும் என நம்புகிறேன். நல்ல தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete