Thursday, July 1, 2021

தொடர் கதை...

 கதையின்  2.ம் பகுதி.... 

"சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடி வர்றேன் இப்ப எப்படி இருக்கு....?" என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார். 

அப்போது சதாசிவத்தின் வீட்டிலிருந்து வெளிவந்த சுசீலாவை பார்த்ததும், "அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்கோன்னு சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான்...." உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன்... .நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் ஊருக்கு போகலாமா. . .? நீயே நியாயமா பதில் சொல்லு.... இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்கு பெரிதாகி விட்டது... ?" என்று கோபத்துடன் வெடித்தார்.

"அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு... எனக்கு நாளைக்கே சரியாகிடும் .. சாதாரண ஜீரந்தானே.... அவனும் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் முடிந்ததும் வந்து விடுவான்.." மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.

"உன் மகனை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டியே.... ஆனால், அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா....? உனக்கு தெரிஞ்சாலும் நீயும்  வெளியிலே காட்டிக்க மாட்டே. ... உன் சுபாவம் அப்படி...! மனசுகுள்ளேயே உன் கவலைகளை வச்சு பூட்டி மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ..... உன் பையன் இப்ப ரொம்ப மாறிட்டான்... வளர்த்த கடா நெஞ்சிலேதான் முட்டுமுனு.. உனக்கு தெரியாததா?ஆனால், வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிறது .. நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே..." என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.

இவர்களது உரையாடலை சற்று தர்ம சங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, "மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?" என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.

"சரியம்மா... .என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து, அட...! என்னப்பா...நீ... அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே.... , அவ எம் பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா..? " என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டார்.. 

நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.

"சரி... சரி.. , ஏதோ.... உன்னை இந்த நிலைமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. அதான் சொல்லிட்டேன்.. இது  இந்த சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமாருக்கும் தெரியும். போன வாரம் குமார் கூட உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம்.... . உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன் பையன் சொல்லியிருக்கான் தெரியுமா... ? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்களையெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு.... நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னைப் பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறேன்.. . ஆனால், ,உன்னை விட்டு நிரந்தரமாக....... எப்படி சதா?" மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.

நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்

தொடர்ந்து வரும்..... 

18 comments:

 1. மகனிடம் தவறு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவன் பக்கமும் நியாயம் இருந்தால் என்ன செய்வது? தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தாங்கள் உடனடியாக முதலில் வருகை தந்து, கதையை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   மேல்ம் கதையை படிக்க ஆர்வமாக இருப்பதற்கும், கதையை தொடர்கிறேன் என்றதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.தங்கள் ஊக்கம் அளிக்கும் கருத்துக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. பெத்த மனம் பித்து.
  தொடர்கிறேன்.... மரத்தையும்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்... எப்போதுமே பெற்ற மனங்கள் பித்துதான். பிள்ளை மனம் கல்லென்பார்கள்.ஆனால் அவர்கள் பெற்ற பிள்ளைகளிடத்தில் அந்த கல் தன்மையை காண்பிக்க இயலாது. இது உலகம் தோன்றியதிலிருந்து இயல்பாக அனைத்து மானிட பிறவிகளுக்கு வருபவை.

   கதையை தொடர்கிறேன் என ஆவலாக சொன்னதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. மகனின் பக்கத்து நியாயத்தையும் யோசிக்கணும். வேலையில் முன்னேற்றம் என்பது அவருக்கு வாழ்நாள் முழுதும் துணை செய்யும் ஒரு விஷயம். அதிலும் தந்தையை விடாமல் கூடத்தானே கூட்டிச் செல்கிறார். ஆகவே தந்தை ஒத்துக்கத்தான் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தொடர்ந்து வந்து கதையை படித்து நல்லதாக கருத்துக்கள் தெரிவித்திருப்பதை கண்டு மன மகிழ்ச்சி அடைந்தேன்.

   ஆமாம் .. தன் மகனின் முன்னேற்றத்திற்கு தான் தடையாக இருக்கக் கூடாது என விரும்பும் எல்லா தந்தையைப் போலவே நம் கதையின் பெரியவரும் நினைக்கிறார். அது போல் மகன்களும் தந்தைகளின் மேல் பதிலுக்கு பாசத்தை அவர் இருக்கும் வரையில் குறைவற தர வேண்டுமென நினைக்க வேண்டும். அதுதான் நல்ல பாசமான ஒரு குடும்பத்திற்கு உள்ள அடையாளம். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. அந்தப் பெரிய மரத்தைப் பற்றி நீங்க சொல்லும்போது எங்க அம்பத்தூர் வீட்டு வேப்பமரம் நினைவில் வருது. தெருப்பூரா நிழல் கொடுத்தது. :(

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் மலரும் நினைவுகளில், இக்கதையின் மூலம் உங்கள் வீட்டு மரத்தின் நினைவும் வந்தது குறித்து எனக்கும் கஸ்டமாக இருந்தது. மரங்கள் நாம் வளர்க்கும் போதிலிருந்தே நம் அன்பை புரிந்து கொண்டவை.அதை விட்டு நீங்கி விலகி இருப்பது வேதனை தரும் நினைவுகள்தான்... தொடர்ந்து வந்து ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி சகோதரி. இனியும் மிகுதி கதைக்கும் வாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. தந்தையின் புரிதல் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /தந்தையின் புரிதல் அருமை.../

   கதையை வாசித்து தந்த நல்லதொரு கருத்தைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து முழுகதைக்கும் வந்து கருத்து தந்தது ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஊக்கம் நிறைந்த பதில் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. சரியான புரிதல் அந்தத் தந்தைக்கு. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை ரசித்துப் படித்து தந்த தங்களின் நல்லதோர் கருத்துரை மன மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து வந்து ஊக்கம் நிறைந்த கருத்தை தருவதற்கும் மேலும் கதையினை படிக்க காத்திருக்கிறேன் என்றதற்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. ஒரே வரியில் சொல்வதென்றால் -

  ரொம்பவும் கலக்குகின்றீர்கள்...

  கதையின் கலக்கலால் -
  மனமும் கலங்குகின்றது..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை ரசித்துப் படித்து தந்த ஊக்கம் மிகுந்த , கருத்துக்களையும் பாராட்டுதல்களையும் கண்டு மனம் மகிழ்ச்சியடைந்தேன்.உங்கள் அன்பான தொடர்வருகை என் எழுத்துக்களுக்கு பலம். தொடர்ந்து வந்து கதைக்கு கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. //என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்//

  தந்தையின் புரிதல் அருமை.

  வேறு வழி இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கவே பெற்றோர் விரும்புகிறார்கள்.
  வெகு நாட்கள் வாழ்ந்த இடம் , பழகிய மக்களை பிரிந்து போவதும் வருத்தம் தரும்.

  மாயவரத்தை விட்டு வந்த போது எங்கள் மனநிலை அப்படித்தான் இருந்தது . நண்பர்களும் மதுரைக்கு போகிறோம் என்ற போது கோபித்து கொண்டார்கள். இப்போது மாயவரத்திலிருந்து இங்கு இருந்தாலாவது உங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். மதுரையில் தனியாக எப்படி இருப்பீர்கள் என்று அடுத்த கவலையை எடுத்து கொண்டு கேட்கிறார்கள். எனக்கும் புரியவில்லை இறைவன் விட்ட வழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை ரசித்துப் படித்து நல்லதாக தங்கள் உள்ளத்தில் எழுந்த கருத்தை சொன்னதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

   /வேறு வழி இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கவே பெற்றோர் விரும்புகிறார்கள்.
   வெகு நாட்கள் வாழ்ந்த இடம் , பழகிய மக்களை பிரிந்து போவதும் வருத்தம் தரும்./

   அருமையான கருத்தாகத்தான் தந்துள்ளீர்கள். குழந்தைகளுக்காக நம் ஆசைகளை சற்று ஒதுக்கி வைக்க வேண்டிய பாசத்தில்தான் தவிக்கிறோம். நாங்கள் சென்னையிலும், திருமங்கலத்தில் வாடகைக்குதான் குடியிருந்தோம். வீடு நிரந்தரமாக வாங்கிக் கொண்டு இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கு குழந்தைகளுக்கு வேலை கிடைத்ததும் பழகிய ஊர்களை, இங்குதான் நிரந்தரமாக இருக்க வேண்டும் என எண்ணிய இடங்களை விட்டு விட்டு வந்தோம். என்ன செய்வது? நடப்பது என்றும அவன் செயல்தான்.. உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.தொடர்ந்து வந்து கதைக்கு ஊக்கம் அளிக்கும் கருத்துக்கள் தருவதற்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////எத்தனை நல்ல தந்தை. வளமாக இருக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது.
  பாசமும் புத்திசாலியுமான
  தந்தையின் குணத்தை மகன் உணராமலா இருப்பான்.?


  எத்தனையோ பேர் வாழ்வில்
  இது போல நடக்கிறது.
  மகன் தந்தையிடம் அன்புடன் இருக்க வேண்டுமே என்று தவிப்பு
  தோன்றுகிறது.
  அருமையான விவரங்களுடன் நல்லதொரு
  படைப்பாளி நீங்கள் கமலாமா.

  நன்மையே விளையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /எத்தனையோ பேர் வாழ்வில்
   இது போல நடக்கிறது.
   மகன் தந்தையிடம் அன்புடன் இருக்க வேண்டுமே என்று தவிப்பு
   தோன்றுகிறது./

   ஆம்.. இது வாழ்வில் நடப்பதுதான் கதையாக எழுதவும் எண்ணம் வருகிறது. . கதை என கற்பனையில் எழுதுவது வாழ்வில் அரங்கேறி விடுகிறது. தந்தையின் நிலை மகனுக்கு தானும் ஒரு தந்தையாகும் போது புரிகிறது. ஆனாலும் அவர்கள் விதி நன்றாக இருந்தால், தன் தந்தைக்கு அறிந்த, அறியாமலோ.மனவேதனை தரும்படி செய்த செயல்களிலிருந்து தப்பி விடுகிறார்கள். ஒருவருக்கொருவர் இறுதி வரை ஒத்துழைத்து அன்பாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்... எல்லாம் "அவன்" செயல். தங்கள் அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete