Monday, December 28, 2020

மார்கழியும், நினைவுகளும்.

  வைகுண்ட ஏகாதசி. 

தெய்வீக மாதமாம் மார்கழியில் அமாவாசை கழிந்ததும் வரும் சுக்லபட்ச ஏகாதசியில் இந்த வைகுண்ட ஏகாதசி  வருகிறது. பொதுவாக  மாதாமாதம் ஏகாதசி  விரதம்  இருப்பது சிறப்புத்தான். அது  இருக்க முடியாதவர்கள் ஒரு வருடத்தில் சிறப்பாக வரும் இந்த நாளன்று இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், வருடந்தோறும் மாதத்திற்கு இருமுறையென வரும் ஏகாதசிகள்தோறும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்.  எங்கள் பாட்டி (அவர்கள் உயிரோடு இருந்தவரை..)  மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் அப்போது (எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து) விரதம் இருப்பார். 

ஏகாதசி மரணம் துவாதசி தகனம் சிறப்பென்பார்கள். அது அவர்களுக்கு கிடைத்தது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த ஏகாதசி திதியன்று கூட அவ்வளவு இயலாமையிலும்,  அன்று குளித்தவுடன்தான் அவர்களின்் அப்போதைய ஆகாரமான சிறிதளவு பாலை அருந்துவேன் என்று பிடிவாதத்துடன் ஏகாதசியை நினைவு கூர்ந்து விரதம் காத்தார். அன்று மதியம் அவரின் இழப்பை நாங்கள் தாங்க முடியாமல் தாங்கினோம். வருடங்கள் உருண்டோடினாலும், இந்த மார்கழியில் அவர் நினைவுகள் என்றும் எங்களோடு. என்னை பாசமுடன் வளர்த்த அவரை நான் என்றுமே நினைவு கூர்ந்தபடி உள்ளேன். 

முன்பு அம்மா வீட்டிலிருந்த போது   (அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். .) இந்த சிறப்பான ஏகாதசி நாளன்று மட்டும் மதிய உணவு சாதமாக  எடுத்துக் கொள்ளாமல். பச்சரிசி தோசை செய்து  ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் திறப்புக்கு  (அங்கெல்லாம் அப்போது  மாலைதான் சுவர்க்க வாசல் திறப்பு.  இப்போது எப்படியோ தெரியவில்லை. ஆனால்  இங்கு  பெங்களூரில், மற்றும் எல்லாவிடங்களிலும் காலையிலேயே சுவர்க்க வாசல் திறப்பு ஆகி விடுகிறது. ) அருகிலிருக்கும் சுற்றம்,  நட்பு சூழ சென்று வருவோம். அப்போதெல்லாம் சுவர்க்க வாசல் என்றால், ஒரே கூட்டந்தான்.  தள்ளு முள்ளுவுடன் அம்மா கையை இறுக பிடித்தபடி அடித்துப் பிடித்து மூச்சு முட்ட இறைவனுடன்  சுவர்க்க வாசலை அடைவதற்குள், பாதி உயிர் போய் விடும். மீதி உயிர் எப்படியோ வாசலை கடந்ததும் மூர்ச்சை அடையாமல், சிறிது மூச்சை விட்டவுடன், அந்த பாதி உயிரும் ஒருவாறு தட்டுத்தடுமாறி வந்து இந்த மீதியுடன் ஒட்டிக் கொள்ளும்.  

அதன் பின் வந்த காலங்களில் "விரதம் மட்டுந்தான்.... நம் வீட்டில் பெருமாளுக்கு செய்யும்  வழிபாடுகள் போதும்... கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் தரிசனம் வேண்டாம். பிறகு ஒருநாள், நிதானமாக கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாமென"எங்கள் அம்மா எடுத்த முடிவில்  நாங்கள் மட்டும் எப்போதும் செல்லும் சுற்றங்களுடன் அன்றைய தினம் செல்வதில்லை. எனக்கு மட்டும்  ஒரு மாதிரி வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் அம்மாவுக்கு கூட்டத்தின் இடிபாடு பிடிக்கவில்லையே. . .... என்ன செய்வது?" "சரி... மற்ற சுற்றங்களுடன் நீங்களாவது சென்றிருக்கலாமே? "என நீங்கள் நினை(கேட்)க்கலாம்......  எங்கள் அம்மா இல்லாமல் நான் எங்கள் வீட்டு வாசல் படியையே தாண்டிய(தாண்டவிட்ட) தில்லை. இதில் சுவர்க்க வாசலை எப்படி சந்தித்து அதன் படிகளை தாண்டுவது?  அப்போதெல்லாம் அந்த நாள் மறுபடியும் அடுத்த வருடம் வருவதை எதிர்பார்த்தபடி மனது ஆவலாக இருக்கும். (அதற்கு காரணம் அன்று எங்கள் பாட்டிக்கு நிகராக நாமும் விரதமிருக்கிறோம்... என்ற பெருமையும், மற்ற சுற்றங்களுடனான  வீட்டு குழந்தைகளுடன் (என் வயதை ஒத்த) வெளியே அன்றைய தினம் ஜாலியாக சேர்ந்து செல்கிறோம் என்ற ஆனந்தமும் மட்டுந்தான் முதலில் நிலைத்து இருந்திருக்கிறது என்பதை  பின் வரும் வயதுகளில் மனது பக்தியில் பக்குவப்பட்டு உணர்ந்திருக்கிறது.)  பின்பு வந்த காலங்கள் எனக்கே கூட்டங்களை சந்திக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே இறைவனை தியானித்து, முடிந்த அளவிற்கு விரதங்கள் இருந்தே பழக்கமாகி விட்டது. 

இப்போது இங்கெல்லாம் (பெங்களூரில்) அனைவரும் வரிசையில் நின்று நிதானமாக சென்று வருவதை பார்த்திருக்கிறேன். நானும் காலை சுவர்க்க வாசலுக்கு செல்ல முடியாவிடினும், மாலையாவது சில தடவைகள் பெருமாளை குடும்பத்துடன்  சென்று  அவ்விதமே  வரிசையில் சென்று தரிசித்துமிருக்கிறேன். இந்த தடவை கொரோனா அவ்வாறும்  செய்ய முடியாமல் தடை செய்து விட்டது. 

இந்த முக்கோடி ஏகாதசி மூன்று நாட்கள் முறையாக இருக்க வேண்டிய விரதம். ஏகாதசிக்கு விரதம் இருப்பவர்கள் முதல் நாள் தசமியன்று காலை குளித்து முடித்து, விரதம் எடுப்பதாக உறுதி பூண்டு, அன்று பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு, இரவு வெறும் பால் பழம் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் உறங்காமல், நாராயணனை நாவாற பாடித் துதித்து, மறுநாள் விடியற்காலை ஏகாதசியன்று குளித்து வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் முதலானவை முடித்து பெருமாள் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்தபடி அன்றைய தினம் முழுவதும் ஏதும் உணவருந்தாமல் இருக்க வேண்டும். கோவில்களில் தரும் துளசி தீர்த்தத்தை ஒருவேளை உணவென கருதி பருகலாம். பின்பு மாலையும் வீட்டிலும். கோவில்களுக்கும் வழிபாடுகள் முடிந்தவுடன், ஸ்ரீ மன் நாராயணனை துதித்தபடி, இரவு முழுவதும் விழித்திருந்து, இரவு நாலாவது ஜாமத்தில் குளித்து முடித்து, துவாதசி பாரணை உணவுகளை பாயசத்தோடு (இதில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் முக்கியமானது) சமைக்கவாரம்பித்து, சூரியன் உதித்து வரும் முன் அதிகாலையில் வழக்கப்படி பூஜைகள் முடிந்ததும், சமைத்ததை அன்போடு இறைவனுக்கு படைத்து விட்டு, பிறகு இரண்டு பேருக்கு வயிறார அன்னம் படைத்த பின். பசுவுக்கும் காக்கைக்கும் வேண்டியதை புசிக்க கொடுத்தும், (அகத்தி கீரை கட்டுக்களை வாங்கித் தருவார்கள்) தானும் அமர்ந்து (விரதமிருப்பவர்கள்) சாப்பிடுவார்கள். அன்று  மதியமும் படுக்காமல் விழித்திருந்து மாலை இறைவழிபாடு முடிந்ததும் மறு பாரணையாக ஏதாவது சிறிதளவு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு இரவுதான் விரதம் முடித்து படுக்கச் செல்ல வேண்டும். இப்படி முறையாக செய்து முடிக்கும் இந்த விரதத்தின் மேன்மையை பற்றி எனக்கு தெரிந்த வரை சொல்லியுள்ளேன். 

நான் இந்த மாதிரி ஒரு தடவை கூட  இது வரை இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு பின் சென்னை வந்தும், குடும்பம், சூழல், என விரத ஆசைகள் நிராகரிக்கப்பட்டது. "உன் குழந்தைகளை கவனி.. அதுவே சிறந்த தெய்வ சேவைகள்" என்று  அறிவுறுத்தபட்ட வீட்டுப் பெரியவர்களுக்காக  எந்த விரதங்களும் எடுக்க இயலவில்லை. வீட்டின் சற்று அருகிலேயே இருக்கும் கேசவ மாதவ பெருமாளை (சித்திரக் குளம்) அன்றைய தினம் சென்று தரிசிக்க முடியாமல் போவதும் உண்டு. அவர்கள் (என் குழந்தைகள்) கொஞ்சம் பெரியவர்களானதும், இந்த ஏகாதசியில் ஒரிரு தடவைகள், வீட்டில் செய்து இறைவனுக்கு  நிவேதனம் செய்த கேசரி, பழங்கள் எடுத்துக் கொண்டு அன்று மட்டும் விரதம் இருந்துள்ளேன். ஆனால் இரவு முழுவதும் விழித்திருக்க இயலாது. மறுநாள் அலுவலகம் செல்லும், கணவர், மச்சினருக்கு காலையிலேயே சமையல்  சாப்பாடென வேலைகள் தொடரும் போது அது சிரமபடுத்தும் என்பதால் வழக்கப்படியான உறக்கம் தானாகவே வந்து கண்களை தழுவிக் கொண்டு விடும். ஆனால் குழந்தைகள் சற்று பெரியவரகள் ஆனதிலிருந்து பிறந்த வீட்டு வழக்கப்படி இன்று வரை மதியம் உணவாக சாதம் எடுத்துக் கொள்ளாமல், அன்னத்தை பின்னமாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. (அரிசி உப்புமா, அரிசி உப்புமா கொழுக்கட்டை, இல்லை பச்சரிசி தோசை என செய்வேன். இல்லை, ஒரிரு சமயத்தில் உப்பில்லாத சப்பாத்தி செய்து விடுவேன். தொட்டுக் கொள்ள வெல்லந்தான் அனைத்திற்கும். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் கேசரியும் துணையாக வரும். ) 

ஆலயம் தொழுவது  சாலவும் நன்று எனப் படித்துள்ளோம். ஆனால், இயலாதவர்கள் இறைவன் மேலுள்ள பக்தியை தியானம், பூஜை என வீட்டிலிருந்தபடியே நம்மால் இயன்றவரை செய்து "அவனை" வேண்டிக் கொள்ளலாம் என்றுதான் நினைத்து திருப்தியடைந்திருக்கிறேன்.  ஆனால், மார்கழி மாதம் முழுவதும் காலை மூன்று மணிக்கே எழுந்து, தெரு வாசலில் வண்ண கோலங்கள் போட்டு, குளித்து, தினம் ஒரு கோவிலாக சென்று வந்த சந்தர்ப்பம் ஒன்றும் எனக்கு சென்னையிலிருக்கும் (லஸ்ஸில்) போது ஒரு தடவை கிடைத்தது. அப்போது சாட்சாத் அந்த கோதை நாச்சியாராக நாங்கள் குடியிருந்த  வீட்டின் பெண் (உரிமையாளரின் கடைசி பெண்.  என்னை விட நான்கைந்து வயது சிறியவள். அப்போது அவளுக்கு திருமணமாகவில்லை. ) தோழி என்னை அந்த கடமையை செய்ய வைத்து (தினமும் காலை மூன்று மணிக்கே என்னை வந்து எழுப்பி விடுவாள்.) என்னை அந்த வருடம்  மார்கழி மாதம் முழுவதும்  சந்தோஷப்படுத்தினாள். இன்று அவள் எங்கிருக்கிறாளோ? ஒவ்வொரு வருட மார்கழியில் அவள் நினைவும் என்னுள் தவறாது மலரும். 

இந்த விரதம் முறையாக இருக்கும் போது நாம் செய்த பாவங்கள் அகன்று, புண்ணியங்கள் அதிகமாவதால் அனைவருமே நல்லகதி பெற்று சுவர்க்கத்தில் இடம் இல்லாமல் போய் விடும் என்பதை உணர்ந்த மாயை ( இந்த மாயாசக்தியால்தான் பெருமாள் தேவர்களின் தேவைக்காக பூவுலகின் நன்மைகளுக்காக என்று அடிக்கடி எடுக்கும் மோகனி அவதாரமும்.. .. .அவளின் அம்சத்தைக் கொண்டே திருமால் பெண்ணாக உருமாறுவது. . என்பதாக புராணங்கள் கூறுகிறது.) நாராயணனிடம் கேட்கிறாள் 

(பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் இருவரும் சேர்ந்து  அமிர்தம் கடையும் போது, வந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு தெரியாமல் அசுரர்கள் அபகரித்து கொண்டு போக அதை அவர்களிடமிருந்து வாங்கி, தேவர்களுக்கு மட்டும் பங்கிட்டு தர நாராயணன் எடுத்த மோகினி அவதாரம். ஒன்று.. 

ஸ்ரீ கிருஷ்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தவுடன் அவரை நந்தகோபன் கோகுலத்திற்கு  எடுத்துச் செல்லும் போது, அதே  நந்த கோபரால் கோகுலத்திலிருந்து சிறையில் கொண்டு  விடப்பட்ட பெண் குழந்தையாக மாயை காத்திருக்க, தேவகியின் அண்ணன் கம்சன்  எட்டாவதாக பிறந்த அக்குழந்தையை கொல்ல வரும் போது, அவனை கடுமையாக எச்சரித்து  அவன் கையிலிருந்து தப்பித்து மாயமாகிச் சென்ற மாயா சக்தியும் அவள்தான். )  

"இப்படி புண்ணியம் செய்து மறுபிறப்பெடுக்காமல் மனிதர்கள் இருந்து விட்டால் என் கடமையை எப்படி இந்த பூலோகத்தில் சரிவர செய்வது" என வினவ "கவலைப்படாதே.. முறையாக விரதம்  இருந்து மனிதர்கள் என்னருளை முழுமையாக பெறும் போது, உன் மாயையால், சிறிது அவர்கள் கண்களில் உறக்கத்தை வரவழைத்து மயங்கச் செய்து விடு. அதனால் அவர்களுடைய புண்ணியமும் உனக்கு வரும்.  அதன் பின்பு அவர்களின் பாப புண்ணியபடி நீ உன் கடமைகளையும் பூலோகத்தில் செய்யலாம் எனக் கூறினாராம். அதனால்தான் இந்த விரதம் இருப்பவர்களை மோகினி என்ற மாயை மூன்று நாட்களில் எப்போதேனும் ஒரு முறையாவது சிறிது  உறக்கத்தை தந்து கண் மயங்க வைத்து விடுவாள் என்றும் கூறுவார்கள். ( இதற்கு மாற்றாக உள்ளங்கால்களில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு சிலர் வைகுண்ட ஏகாதசியன்று மதியம் படுத்து விடுவார்கள். இப்படி செய்தால், மோகினி நம் புண்ணியத்தில் பங்குக்கு வரமாட்டாள் என நம்பிக்கை அந்த மனிதர்களுக்கு. அப்படி கண்மூடி ஒரு மாதிரி மயக்கம் தெளிந்து எழுந்தாலும் பரவாயில்லை. அதுதான் சாக்கென 2,3 மணி நேரங்கள் நன்றாக படுத்துறங்கி எழுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.  அது என்ன விரதமோ? அனவிரதம்.  .ஹா. ஹா. ஹா.) 

ஒரு கதை... எனக்குப் பிடித்தமான கதை... நான் எழுதிய இந்தக்கதையில் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்தருளவும். 

ஒரு சமயம் நாரதர் "தான்தான் ஸ்ரீ மன் நாராயணனுக்கு பிடித்தமானவர். நான் ஒருவன்தான் அவர் நாமத்தை நாள்தோறும் பக்தியுடன் கூறிவருகிறோம் " என லேசான கர்வம் கொண்டாராம். அவருள் எழுந்த கர்வத்தை அவர்  வாயிலாகவே  போக்கி விட எண்ணம் கொண்ட எம்பெருமான் நாரதர் தம்மை தரிசிக்க வந்த சமயம் பார்த்து, "நாரதா. .நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே. ! பூலோகத்தில் என் பக்தன் ஒருவன் என்னையே சதாசர்வகாலம் நினைத்தபடி, என் கருணையை வேண்டியபடி உள்ளான். அவன் விருப்பத்தை நிறைவேற்றலாம் என உள்ளேன். அவனை நீயும் அறிந்து வருகிறாயா? என வினவவும், நாரதருக்கு தன் கர்வத்தினால், சட்டென கோபம் வந்தது. "நாராயணா... அவன் என்ன என்னை விட உன்னிடத்தில் பக்தி உடையவனோ? என கேட்கவும்,, பரந்தாமன் புன் சிரிப்புடன்," ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். நீதான் பார்க்கப் போகிறாயே . ... இதோ அவன் இருப்பிடத்தின் வழியும் இதுதான்" என்றபடி அவன் இருக்குமிடத்தை நாரதருக்கு உணர்த்தினார். 

நாரதர் உடனே கிளம்பி விட்டார். அவரின் கோபத்தைக்கண்டு எம்பெருமான் மனதிற்குள் நகைத்துக் கொண்டார். 

மறுநாள் காலை அந்த பக்தன் வீட்டிற்கு முன்பாக அவன் கண்களுக்கு தெரியாமல் நாரதர் மறைந்திருந்து அவனை கண்காணிக்க ஆரம்பித்தார். அவன் வாசலில் படுத்திருந்த கயிற்று கட்டிலிருந்து கண் விழித்து எழுந்ததும், தன் உள்ளங்கைகளை பார்த்தபடி, நாராயணா..... நாராயணா.. . என இருமுறை உரத்து கூவியபடி, வானத்தை நோக்கி நமஸ்கரித்து விட்டு படுக்கையை சுருட்டியபடி எழுந்து வீட்டினுள்ளே சென்றான். 

"ஓ...... இவர்தான் அந்த பக்தன் போலிருக்கிறது. .கண் விழித்தவுடன் நாராயணனை தொழுகிறானே... ஒருவேளை உண்மையிலேயே பரந்தாமன் கூறியது போல என்னை விட சிறந்த பக்தன்தானோ.? . இன்னும் எத்தனை முறை அவர் நாமாவை சொல்லப் போகிறாரோ.. பார்ப்போம்.... இன்று முழுவதும் பொறுத்திருந்து  பார்ப்போம்." என எண்ணிக் கொண்டார் நாரதர். 

அதன் பின்பு அவன் வேலைகளுடன் அன்று பம்பரமாய் சுழன்றான்.  வயதான தன் தாய், தந்தையரை பல் தேய்க்க வைத்து, குளிப்பாட்டி உடைகள் அணிவித்து, அவர்களுக்கு காலை ஆகாரமாக கஞ்சி புகட்டிய பின், தொழுவத்தில் இருக்கும் நான்கு மாடுகளை சுத்தப்படுத்தி, பால் கறந்து, அவற்றை வாங்க வருபவருக்கு விற்று, தன் மனைவிக்கு அன்றைய சமையலுக்கு வேண்டியவற்றை வெளியில் சென்று வாங்கித்தந்து, தன் குழந்தைகளை அன்போடு கவனித்து, அவர்களுடன் அளவளாவி, மதியம் அவர்களுக்கு உணவளித்து, நடுவில், தாய் தந்தையையும் கவனித்தபடி, தனக்கென வீட்டின் பின்புறமிருந்த சின்ன வயலில் இறங்கி வேலை செய்து, பின் சுத்தமாக குளித்து, சாப்பாடனவுடன், வெளியில் ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சென்று அங்கு  கணக்காளராக சிறிது பணியாற்றி வந்ததும், மாலை, மாடு, குழந்தைகள், தாய், தந்தை, மனைவியென அவரவர்கள் தேவைகளுக்கு உதவி, இரவு  அனைவரும் உணவருந்தியதும், குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அவர்கள் உறங்கச் சென்றதும், அனைவரும் வீட்டினுள் பத்திரமாக கண்ணயர்ந்து விட்டார்களா எனப் பார்த்து விட்டு, பின் வீட்டிற்கு வெளியே, கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டபடி படுக்க வந்தவன் மறுபடி வானத்தை நோக்கி. நாராயணா.. . நாராயணா என சத்தமாக கூவி கும்பிட்டபடி படுக்கையில் படுத்தவுடன் தன்னிலை மறந்தவனாய், அவனும் கண்ணயர்ந்தான். 

காலையிலிருந்து அவனை கண்காணித்தபடி இருந்த நாரதருக்கு அவன் இரவு வரை எத்தனை முறை பரந்தாமனின் நாமத்தைச் சொன்னான் என்பதை நினைவில் நிறுத்தி பார்த்தார். எண்ணி நான்கு முறைக்கு மேலாக அவன் நாராயணனை தொழவுமில்லை. சிந்திக்கவுமில்லை என்பது நினைவுக்கு வர, "இவனையா தன் பக்தன் என பரந்தாமன் கூறி மகிழ்நதார். ..  நல்லவேளை..  என்னைப் பார்த்து வரச் சொன்னார். இவனுக்கு குடும்பத்தை பார்த்து பார்த்து கொண்டாடவே நேரம் சரியாக இருக்கிறது. இவனைப் போய் எனக்கு நிகரானவனாக நாராயணன் கூறுகிறாரே... இதோ விரைவில் சென்று இவன் நிலையை தெளிவாக்குகிறேன்.. .. என்றபடி வைகுண்டதிற்கு ஏகினார். 

"என்ன நாரதா. ... என் பக்தனை கண்டு வந்தாயா? எப்படி இருக்கிறான்? பாவம் இல்லையா? அவனுக்கு நான் அருள் கூர்ந்து உதவ வேண்டுமில்லையா? என்ற கேள்வி கணைகளுடன் வரவேற்ற பரந்தாமனை கண்டதும் நாரதருக்கு நகைப்பு வந்தது. 

தான் காலை அவனை பார்த்த நிலையிலிருந்து, அவனின் அன்றாட வேலைகளை அவன் செய்த முறைகளையும், அவன் அவர் நாமத்தை பொழுதத்தனைக்கும், எத்தனை முறை சொன்னான் என்பதையும் விளக்கி விட்டு, "இவனையா எனக்கு சரியாக கூறினாய் ? என கேட்ட நாரதருக்கு சற்று கர்வம் முன்பை விட கூடியிருந்ததை கண்ட பரந்தாமன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 

" சரி நாரதா.... அவன் அவனுக்குண்டான கடமைகளை செய்யும் போது என்னை நினைக்க ஏது நேரம்? முதலில் அதை அவன் சரிவர செய்கிறான் பார்த்தாயா? இடைப்பட்ட நேரத்தில் என்னையும் துதிக்கிறான். அது போதாதா?. ..." என பரந்தாமன் நாதரின் கோபத்தை கிளறி விடவும், "நான் அவன் நிலையில் இருந்தால் உன்னை ஆயிரம் முறை துதித்திருப்பேன்.. . நீ வேண்டுமென்றே அவன் பக்கம் பேசுகிறாய்.  .!  என்றார் படபடப்பாக நாரதர். 

"நீயா? நீயோ கட்டை பிரம்மச்சாரி. அவன் சம்சாரி.. .நீ எப்படி அவன் நிலையில். ?? சரி. உனக்கேற்றபடி நான் ஒரு கடமையை தருகிறேன். இதோ ஒரு கிண்ணம் நிறைய எண்ணெய் தருகிறேன். நீ இதை கையில் வைத்துக் கொண்டு ஒரு துளியேனும் சிந்தாமல் சிதறாமல் மூவுலகமும் சுற்றி வரவேண்டும். எதிர்ப்படும் காரணம் கேட்கும் எவரிடமும் கோபமில்லாமல் சாந்தமாக நின்று உரையாட வேண்டும். நீ என்னிடம் இந்த எண்ணெய்யை கொண்டு சேர்ப்பிக்கும் போது ஒரு துளி குறைந்திருக்கவும் கூடாது. உன் கைகளிலும் எண்ணெய்கறை  சிறிதேனும் பட்டிருகக கூடாது. . செய்வாயா?" என்றதும், சவாலில் வெல்வதற்காக நாரதரும் எண்ணெய் கிண்ணத்துடன் மூவுலகை சுற்றி வர புறப்பட்டார். 

மூவுலகையும் சர்வ ஜாக்கிரதையுடன், எதிர்ப்பட்ட அனைவருக்கும் காரணத்தை விளக்கியபடி, ஒரு வழியாக நாராயணனின் கட்டளைப்படி துளி சிந்தாமல், சிதறாமல் எண்ணெய் கிண்ணத்தை கொண்டு வந்து தந்த நாதரின் முகத்தில் பெருமை சொல்லி மாளாமல் மின்னியதை கண்ட பரந்தாமன் மறுபடி சிரித்தார். 

"நாராயணா.... பார்த்தாயா என் சாமர்த்தியத்தை... ... அந்த பூலோக பக்தனால் இப்படி செய்ய முடியுமா?" நாதரின் முகம் பெருமையில் பளபளத்தது. 

"அது சரி. .  நாரதா... நீ இப்படி கிண்ணத்துடன் சுற்றி வரும் போது எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை தடவை என் நாமாவை சொன்னாய் ? என்ற பரந்தாமனை பார்த்து,, "பரந்தாமா  என்ன விளையாடுகிறாயா? இந்த கிண்ணத்திலிருக்கும் எண்ணெய் அசையாமல் நடக்கவே என் கவனம் முழுவதும் இருந்தது. இதில் இடைப்பட்டவர்களுக்கு நீ கூறியபடி பதில் சொல்லவே  சிரமப்பட்டேன். இதில் உன்னை எப்படி நினைப்பது? உன் நாமாவை எப்படி வாயாற பாடி துதிப்பது? அதற்கு எங்கு நேரம்? "

" அப்படி வா வழிக்கு. ...உன்னால் இந்த சிறு பாரத்தை சுமந்து, அதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் போது, அந்த பூலோக பக்தன் தன்னை பெற்ற வயதான தாய், தந்தையையும் கவனித்துக் கொண்டு, தன்னை நம்பி வந்த தன் மனைவியின் முகம் சுளிக்காது அவளின் இல்லற தேவைக்காக உழைத்துக் கொண்டும், தன்னால் உருவான தன் மக்கட் செல்வங்களையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டு, தனக்காக வாழும் வாயில்லா ஜீவன்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு. இடையில் தன் ஆத்மாவுக்கும்  புத்துணர்ச்சி அளித்தபடி, வாழும் கடமை மனிதன். நான் வேறு... கடமை வேறல்ல... என்று உணர்ந்தவன். அத்தகைய பொழுதிலும் அவன் என்னை நாளொன்றுக்கு நான்கு முறை நினைத்தான்.. இப்போது சொல்..... அவன் பக்தி சிறந்ததுதானே. .! " நாராயணனின் விளக்கத்தில் நாதரின் கர்வம் சூரியனை கண்ட பனி போல் விலகியது. " 

"உண்மைதான். ..  பரந்தாமா..  அத்தனை கடமைகளிலும் உன்னை இரு பொழுதாவது நினைக்கும் அவன் பக்தி சிறந்ததுதான் . . .   ஏன் என்னை விடவும் அவன் சிறந்தவன். உண்மையை உணர்ந்து கொண்டேன். உன் விருப்பபடி உன்னருளை அவனுக்கு வாரி வழங்கு. .. .என்னுள் எழுந்த கர்வம் இப்போது போன இடம் தெரியவில்லை.  உன் செயல்களுக்கு என்றுமே நன்மை பயக்கும் அர்த்தங்கள் நிறைய உள்ளது. நாராயணா. ..  உன் அருளின் பெருமையே உணரும் போது என்னுள் எழும் ஆனந்தத்திற்கு அளவில்லை. என்று நாராயணனின் புகழ் பாடி பலவிதமாக அவர் துதிபாடி, நாராயணா. .. நாராயணா. .. என்ற நாமம் தன்னைச் சுற்றிலும் மணம் பரப்ப மனச்சஞ்சலங்கள் அகன்றவராய்  தன்னிருப்பிடத்திற்கு சென்றார் நாரதர். 

எதிலும், நாம் செய்யும் எந்த செயல்களிலும் நம்மையறியாமல், நம் கர்வம் ( அதை பெருமிதம் என பலர் கூறுவதுமுண்டு. அதுவே அளவு கூடி நம்மை ஆளும் போது அது பெயர் மாறி கர்வமென்றாகிறது.  என்பது என் தாழ்வான எண்ணங்களில் ஒன்று.) நம்மை தட்டும் போது இத்தகைய கதைகள் நமக்கு பாடம் புகட்டும் நீதி நூல்கள் ஆகிறது 

அடுத்து வரும் இந்தக்கதை வாட்சப்பில் பகிர்ந்து வந்ததில் படித்தவுடன் பிடித்தது...

"சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லை" 

உத்தவர் கண்ணனிடம் கேட்ட விளக்கங்கள்....

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. .மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்...

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்... 

கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்து விடும் போது தான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். 

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! 

இறைவன் நம் அருகிலேயே தான் இருக்கின்றார்... ஆனால் நம் வினை மறக்கச் செய்துவிடுகிறது.

இதிலும் வைகுந்த வாசியான காக்கும் கடவுள் ஸ்ரீமன்நாராயணன் அதர்மத்தை அளிக்க பூவுலகில் மானிட அவதாரமாக எடுத்து நம்மை நல்வழிப் படுத்துவதற்காக  வந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நம்முடன் நமக்கு பலமாக, நம் அருகிலேயே தாம் எப்போதும் இருப்பதை  உணர்த்துகிறார். நாம்தான் நம் கர்வம் என்ற பாறை தரை தட்ட நடுக்கடலில் பயணிக்க இயலாமல் தத்தளித்து ஆடும் கப்பலென தவிக்கிறோமோ என எண்ணுகிறேன். 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.

இதை வைகுண்ட ஏகாதசியன்றே வெளியிட நினைத்தேன். வழக்கப்படி தாமதந்தான். (எழுதினால் அல்லவா வெளியிட முடியும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாய்....ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ வந்து முடிந்திருக்கிறது. பொறுமையுடன் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏. 

43 comments:

  1. மிகச் சிறப்பான வைகுண்ட ஏகாதசி பதிவு. ஆனால் ரொம்ப நீளமாக இருந்தது.

    உங்கள் வைகுண்ட ஏகாதசி அனுபவங்கள் ரசிக்க வைத்தன.

    சென்ற ஏகாதசியில் பகவத் கீதை அறிமுகம் சொல்லித் தருபவர் சொன்னதற்கிணங்க விரமிருக்க ஆரம்பித்து மாலை ஆறு மணிக்கு ரஸ்க் போன்றவற்றைச் சாப்பிட்டு விரதம் பங்கமாயிற்று. இந்த வைகுண்டேகாதசிக்கு விழுப்புரம் அருகிலுள்ள கோவிலில் கைங்கர்யம். காலை சிறிது கேசரி அரிசி உப்புமா ஒரு கரட்டி, மதியம் அரை டம்ளர் பயத்தம் கஞ்சி, இரவு 7 மணிக்கு சப்பாத்தி என்று உணவு. மறுநாள் காலை 8 மணிக்கு துவாதசி பாராயணம் அகத்தி நெல்லி சுண்டைக்காயோடு. இனி வரும் ஏகாதசியில் விரதம் இருக்க முயலணும்.

    நாரதர் கதை ஏற்கனவே அறிந்ததை சிறிது நீட்டி எழுதியிருக்கீங்க.

    இந்தத் தடவை அங்கு சுவர்க் வாசலுக்குள் நாங்கள் மட்டுமே காலை ஐந்து மணிக்குச் சென்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பெரிய பதிவாகி போன பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. (சாட்சாத் அந்த வைகுண்டம் என்றால் இப்படி நீண்ட தொலைவு செல்லத்தானே வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்றால் இங்கிருந்து இரவு பயணித்து காலை சென்று விடலாம். ஹா.ஹா.)

      உங்கள் ஏகாதசி விரத அனுபவங்களும் அருமையாக உள்ளது. /இனி வரும் ஏகாதசியில் விரதம் இருக்க முயலணும்./ நானும் இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நினைக்கிறேன். நடக்க நடக்க நாராயணன் செயல்...

      /நாரதர் கதை ஏற்கனவே அறிந்ததை சிறிது நீட்டி எழுதியிருக்கீங்க./

      ஆமாம்.. நாராயணா.. நாராயணா.. நான் எழுதினால் சுருக்கமாக வருமோ? ...ஹா.ஹா.ஹா. எழுத எழுத ஆர்வத்தினால் வார்த்தைகள் வந்தபடி இருந்தது.. ஆனால் கதையில் சில இடங்களில் சுருக்கித்தானே தந்திருக்கிறேன். இல்லையா? இன்னொரு விஷயம்.. இதில் இரண்டு கதைகளையும் சேர்த்து விட்டேன்.

      இந்த தடவை உங்களுக்கு சுவர்க்க வாசல் தரிசனம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. உத்தவர் கேள்வி பதில் நன்று. ஆனால் பகவான் மீது மகா விசுவாசம் இருக்கணும்.

    அதில்தான் நாம் தவறுகிறோம் என நினைக்கிறேன். இந்த நோய் பகவான் கொடுத்தது, அவனே எப்போ சரி பண்ணணுமோ அப்போது செய்வான் என மருத்துவரிடம் போகாமல் இருக்க முடிகிறதா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பகவான் மீது மகா விசுவாசம் இருக்கணும்/

      உண்மை.. அவனிடத்தில் ஆத்மார்த்தமான சுயநல கலப்பில்லாத முழு பக்தி இருக்க வேண்டும்.எங்கே..? அதில் நாம் பிறழ்ந்த விடுகிறோம். இந்த நோயை தந்தவனும் அவன்தான். மருத்துவரும் அவன்தான். அவனை பூரணமாக சரணாகதியடையவும் அவன்தான் ஒரு நேரம் அமைத்து தர வேண்டும். அதற்கு எத்தனை பிறவி காத்திருக்க வேண்டுமோ? அந்த நோய் அகல எத்தனை ஜென்மங்கள் எடுக்க வேண்டுமோ?

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தாமதமான பதிலுரைக்கு வருந்துகிறேன். இன்னமும் தாமதமானால் என் மனசாட்சி சொன்னது நடந்து விடுமே என ஓடி வந்திருக்கிறேன். ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சிறப்பான வைகுண்ட ஏகாதசிப் பதிவு. நல்ல நினைவலைகள். எனக்கும் இப்படியான நினைவலைகள் உள்ளன. ஆமாம், நீங்க சொல்லுவது போல் மதுரையிலும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் மாலை நேரமே சொர்க்கவாசல் திறப்பார்கள். கூட்டத்தில் இடித்துப் பிடித்துக் கொண்டு போன நாட்கள் உண்டு. விரதம் எல்லாம் இருந்ததில்லை. கல்யாணம் ஆவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை மட்டும் உப்பில்லா விரதம் இருந்திருக்கேன். அதுக்கே அப்பாவுக்குத் தெரிந்தால் திட்டுக் கிடைக்கும். விரதம் இருப்பதே தெரியாமல் இருந்திருக்கேன். இப்போ வைகுண்ட ஏகாதசி விரதம் என்றால் நீங்க சொல்றாப்போல் சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கோம்.கோயில்களில் கூட்டம் என்பதால் முன்னெல்லாம் போகவில்லை. இந்த வருஷம் கொரோனா மட்டுமில்லாமல் ஆன்லைனில் புக் செய்து கொண்டு தான் போக முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      ஆமாம்.. அப்போதெல்லாம் மாலைதான் சுவர்க்க வாசல் நடக்கும், மதுரையிலும் சில கோவில்கள் அப்படித்தான் என தங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். கூட்டம்தான் அப்போது சற்று சிரமமாக இருக்கும். இங்கு காலையில் எல்லோரும் கோவில் வாசலிருந்து வரிசையில் செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைவை கடந்ததும் எப்படியோ தெரியவில்லை.. நாங்கள் பெரும்பாலும் மாலை சென்று பெருமாளை தரிசித்து வருவோம். எங்கள் அப்பாவும், விரதமென்றால் சின்னவர்கள் எல்லாம் இருக்க கூடாது என்று கண்டிப்புதான் காட்டுவார். இந்த ஒரு விரதம் மட்டும் எப்படியோ அனுமதித்து விடுவார்.(பழயதை தயிர் விட்டு சாப்பிடும் என் ஆசையே எங்கள் அப்பாவின் கண்டிப்புகளினால் ஒருநாள் கூட நிறைவேறாது எப்போதுதோ ஒரு தடவை மட்டும் (அப்பா வெளியில் போயிருக்கும் போது) பாட்டி மூலமாக நடந்தது. அதற்கு அன்றைய தினம் பாட்டிக்கு விழுந்த திட்டுக்களை (அப்பா வந்த பிறகு) மறக்கவே முடியாது. ஆனால், திருமணமாகி வந்ததும் காலை முக்கால்வாசி பழையதுதான் எனக்கு கிடைக்கும். ஏன் இப்போதும் கூட.. வேஸ்ட் பண்ண விரும்பாமல் பழையதை உண்ணுகிறேன்.

      நானும் இங்கு அரிசி உப்புமாதான் பண்ணினேன். ஆனால் இரவு நன்றாக தூங்கியாச்சு. கோவில்களுக்கும் சென்று ஒரு வருடங்கள் ஆகப் போகிறது. இந்த தொற்று நல்லபடியாக அகன்று அடுத்த வருடமாவது இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பதிவை இரு பாகங்களாகப் பிரித்துப் போட்டிருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன். நீங்கள் சொல்லி இருக்கும் "ஏகாதசி மரணம்" உண்மையில் "ஏகாதசி ஸ்மரணம்" "துவாதசி தஹனம்". இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் முதல்நாள் தசமியிலிருந்து ஆரம்பித்து ஏகாதசி முழுவதும் இறைவன் நாமாவையே ஸ்மரணம் செய்து விட்டுப் பின்னர் "பசி" என்னும் "அக்னி"க்குக் கொஞ்சம் உணவு கொடுத்து துவாதசியன்று சாந்தப்படுத்தணும். அக்னியை தஹனம் செய்து உணவு கொடுத்துப் பாரணையை முடிக்க வேண்டும். இந்த இடத்தில் வரும் தஹனம் என்னும் சொல்லுக்கு ஜீரணம் என்னும் பொருள். பொதுவாக அக்னியில் தஹனம் செய்யும் பொருட்களையே ஜீரணம் ஆகிவிட்டது என்றே குறிப்பிடுவார்கள். இங்கேயும் அந்த நியதிப்படி உணவை நம் வயிற்று அக்னிக்கு அளித்து ஜீரணம் செய்யப் பண்ண வேண்டும். ஆகவே அது "ஏகாதசி ஸ்மரணம்" "துவாதசி தஹனம்" ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை இரண்டாக பிரித்து போட்டிருக்கலாம் என்றுதான் எனக்கும தோன்றியது. ஆனால் எந்த இடத்தில் பிரிப்பதென்பது தெரியவில்லை. என்னால் மிகவும் சிரமப்பட்டு படித்த உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஏகாதசி மரணம்... தங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது. நானும் கேள்விபட்டுள்ளேன். ஆனால் சொல் வழக்குக்காக அவ்வாறு சொல்வார்கள். "ஏகாதசி எட்டு தடவை சாப்பிட்டாலும் துவாதசி தலை முழுகி சாப்பிட வேண்டும்," "ஏகாதசி வாய் மூடா பட்டினி" என்பது போன்ற சொல் வழக்குகளுள் இதுவும் ஒன்று. எங்கள் மாமியாரும் ஆஞ்சி பக்தர். அவரும் பங்குனியில் ஸ்ரீராம நவமியன்று இயற்கை எய்தினார். ராமரே தன்னிடம் அழைத்துக் கொண்டார் என நாங்கள் பேசிக் கொண்டோம். என்னுடைய தாமதமான பதில்களுக்கு வருந்துகிறேன். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. விரதங்கள் இருப்பது சிறுவயதிலிருந்தே கட்டுப்பாட்டுடன் பழகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.  சிறு வயதிலிருந்தே எங்கள் அம்மா தான் மட்டும் விரதம் இருப்பரே தவிர எங்களை வற்புறுத்தியதில்லை.  அதன் பலன் இதுநாள் வரை நான் விரதம் இருந்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். சிறுவயதிலிருந்தே விரதங்களை முழுமையாக பழக்கி னால் வயதாக அதுவும் வளர்ந்து நல்ல பக்குவமடையும். ஆனால் நாம் அப்படி இருந்ததில்லையே .. இந்த விரதம் மட்டும் நான் அம்மா வீட்டிலிருந்தே ஒரளவு இருக்கிறேன். ஆனால் இரு பொழுதுகள் அந்த டிபனையே சாப்பிட்டு விடுவோம்.இரவு விழித்திருக்கும் பழக்கமும் இயலவில்லை. அடுத்த தடவையாவது,எதுவும் சாப்பிடாமல், முழுமையாக விரதம் கடைபிடிக்க வேண்டுமென எப்போதும் போல் விரத வைராக்கியம் எடுத்துள்ளேன்.(நான் இப்படி கூறியே நாராயணனுக்கே போரடித்துப் விட்டதாம்.அதனால், அடுத்த தடவை விரத செயல்பாடுகளை முற்றிலும் மாற்றப் போவதாக மேலிடத்து தகவல் ஒன்று அசரீரியாக இன்று கிடைத்தது. ஹா.ஹா.ஹா.) தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பாஸ் எனக்கு நேர்மார்.   இந்த முறையும் பச்சரிசி தோசை முதலான வரையறைகளைக் கடைப்பிடித்தார்.  நான் வேண்டாம் என்று சொல்லியும் கூட..  பழைய வீட்டில் இருந்தவரை காலையிலேயே கோவிலுக்குச் சென்றது சொர்க்கவாசல் சென்று வந்துவிடுவார்.  புதுவீட்டின் யாருமே கோவில் இல்லாததும் குறை.  கொரோனா கட்டுப்பாடுகளும் படுத்தல்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அருகில் கோவில் இல்லைனா கஷ்டம்தான். நம் மனதுக்குகந்த பெருமாள் கோவில் இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சி

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் வீட்டிலும் விரத உணவுகள் பயன்பாட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சி. உங்கள் பாஸுக்கு என் வாழ்த்துக்கள். ஆம் வீட்டின் அருகில் கோவில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இப்போதுதான் கோவில்களுக்கு செல்லவே முடியவில்லையே... துணிந்து செல்பவர்கள் உள்ளார்கள். நான் இது வரை எங்குமே செல்லவில்லை. வீட்டுச் சிறை. ஒவ்வோர் சமயம் எல்லோரையும் பார்த்து எனக்கும் ஆசை தலை தூக்குகிறது. தூக்கிய தலைக்குள் இருந்து அன்று பார்த்து நாலு தும்மல் வேறு வந்து ஆசையை அடக்கி விடுகிறது.:) தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. ஆமாம் நெல்லை தமிழரே.. வீட்டின் அருகே நாம் விரும்பும் வண்ணம் ஏதோ ஒரு கோவில் இருந்தால் (தினமும் செல்கிறோமோ இல்லையோ அது வேறு விஷயம். ) அதுவே ஒரு பலம். நன்றி.

      Delete
  7. நாரதர் கதை ஏற்கெனவே பலமுறை படித்திருக்கிறேனே...    நீங்கள் எழுதியதா?  உத்தவர் கதையும் வாட்ஸாப்பில் படித்திருக்கிறேன்.  உங்கள் விரத அனுபவங்கள் சுவாரஸ்யமான நல்ல அனுபவங்கள்.   ஆனால் இரண்டு பாதிவாகப் போடக்கூடிய அளவு நீளம்!!!   ஹா..  ஹா..  ஹா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நாரதர் கதை ஏற்கனவே படித்திருப்பது குறித்து சந்தோஷம். இந்த நாரதர் கதை நிஜமாகவே நான்தான் எழுதினேன்.

      என் பால்ய கால விரத அனுபவங்களை ரசித்தமைக்கு மிகவும் நன்றி.
      இரண்டு பதிவாக போட்டிருக்கலாம். ஆனால் இந்த ஒரு பதிவுக்கே எனக்கு பதிலளிக்க இவ்வளவு நாட்கள் ஆகிறது. ஹா..ஹா. ஹா. (ஏனென்று தெரியவில்லை... பதில் கருத்து மிகவும் தாமதமாகிறது. அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சிறப்பான பதிவு... விரதிகளின் பெருமை சொல்லற்கரியது...

    இங்கு சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதைகளையும் முன்பே கேட்டிருக்கின்றேன்..

    இரண்டாவதாக உத்தவர் சம்பாஷணை ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சக்தி விகடனில் வந்தது.. அதை யாரோ ஒருவர் தனது வலை தளத்தில் வெளியிட - அதனை ஸ்ரீமதி மனோசாமிநாதன் அவர்களும் தனது தளத்தில் சொல்லியிருந்தார்கள்..

    ஸ்ரீமந் நாராயணன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்...

    ஓம் ஹரி ஓம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் வேலை பளுவிலும் பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      /உத்தவர் சம்பாஷணை ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சக்தி விகடனில் வந்தது.. அதை யாரோ ஒருவர் தனது வலை தளத்தில் வெளியிட - அதனை ஸ்ரீமதி மனோசாமிநாதன் அவர்களும் தனது தளத்தில் சொல்லியிருந்தார்கள்../

      அப்படியா? வாட்சப்பில் வரும் அனைத்தும் இப்படி சுற்றி வருவதுதானே.. நீங்கள் குறிப்பிட்ட சகோதரி மனோ சாமிநாதன் அவர்களும் இங்கு வந்து நல்லதொரு கருத்துக்கள் தந்துள்ளார்கள். உங்களுக்கும், அவருக்கும் மிக்க நன்றிகள். நான்தான் தாமதமாக பதில் அளித்துள்ளேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இந்தப்பதிவுக்கு வந்து அன்புடன் கருத்துக்கள் அளித்த உங்களுக்கெல்லாம் கடமை பட்டிருக்கிறேன். (இனி வரப் போகிறவர்களுக்கும் சேர்த்துதான்.) பதிவின் பயங்கர நீளம் எனக்கும் புரிகிறது. கொஞ்சம் பக்தி "வெள்ளத்தில்" உணர்ச்சி வசப்பட்டு நான் நீண்ட தொலைவு அடித்து செல்லபட்டதோடு, உங்களனைவரையும் கூடவே வரவும் செய்ய வைத்து விட்டேன். ஹா.ஹா.ஹா. எனினும் பொறுமையாக பயணித்து அக்கறை ("அக்கரை ஏதும் காணா வெள்ளத்திலும்") கலந்த அன்போடு வந்து கருத்துக்கள் இட்ட உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கருத்துக்கள் பிறகு கொஞ்சம் வேலைகளை முடித்துக் கொண்டு வந்து அளிக்கிறேன். அது எப்போ? இந்த வருடமே முடிந்து விடுமே என யாரோ முணுமுணுப்பது கேட்கிறது. 😀😁😁. (அட.. வேறு யாருமில்லை.. இதோ என் அருகிலேயே இருக்கும் என் மனசாட்சிதான்):) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க மனசாட்சி உண்மை பேசும் என்பது உண்மைதான். ஹா ஹா

      Delete
    2. ஹா ஹா ஹா. உண்மையை கண்டறிந்த உங்கள் மனசாட்சிக்கு பாராட்டுக்கள். 😆😆.

      Delete
  10. வணக்கம் சகோ
    தங்களது வைகுண்ட ஏகாதசி அனுபவங்கள் ரசிக்க வைத்தது.

    புராண கதைகளும் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      புராண கதைகளுக்கு தந்த வாழ்த்துகளுக்கும் மகிழ்ச்சி. எனக்குதான் உடன் பதிலளிக்க இயலாமல் தாமதமாகி விட்டது வருந்துகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. அருமையான பதிவு... விளக்கங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு என பாராட்டியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.நன்றிகள்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஏகாதேசி அனுபவங்கள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன! ரசித்துப் படித்தேன்.
    நாரதர் கதையை நான் அறிந்ததில்லை. மிக அருமையான கதை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைப்போன்ற அனுபவ பதிவர்கள் வந்து பதிவை ரசித்து படித்து பாராட்டுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சகோதரர் துரை செல்வராஜ் அவர்களும் இங்கு தன் கருத்தில் உங்களை குறிப்பிட்டுள்ளார். உங்கள் பாராட்டுகள் என் எழுத்தை சிறப்பாகும். மிக்க நன்றி சகோதரி. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எங்கட அம்மம்மாவும் சொர்க்கவாசல் ஏகாதசி என விரதமிருந்து முழிப்பிருப்பா இரவெல்லாம் .. அது நினைவிருக்குது ஆனா நாம் யாரும் விரதமிருந்ததில்லை. இம்முறை நான் கவனிக்கவில்லை, கவனிச்சிருந்தால் விரதம் பிடிச்சு சொர்க்கத்தில துண்டு போட்டு வச்சிருப்பேனே.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களை காணோமே எனப் பார்த்திருந்தேன். நல்லவேளை வந்து விட்டீர்கள். நான் விரதமெல்லாம் நான் சொன்னபடி முறையாக பிடிக்காவிடினும், அங்கு (சுவர்க்கம்) எப்படியோ விரித்த துண்டில், என் அருகிலேயே ஓர் இடம் பிடித்து (உங்களுக்காகத்தான் ) வைந்திருந்தேன். நல்லவேளை.. யாரும் அந்த இடத்தை பார்க்கும் முன்பு வந்து விட்டீர்கள். வாருங்கள்.. நாம் இருவரும் சேர்ந்து பல காலம் சொர்க்க போகங்களை அனுபவிக்கலாம்.ஹா... ஹா.. ஹா.

      பதிவுக்கு வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. நானும் அறிஞ்சேன்... சொ.வா.ஏகாதசி அன்று மறைவோர்.. நல்ல ஆத்மா.. சொர்க்கத்துக்குச் செல்லுவினம் எனும் ஒரு நம்பிக்கை...

    சொர்க்கம் என ஒன்று அங்கின இருக்குதோ இல்லையோ என்பது அந்த சமயபுரத்து கிழக்கில இருக்கும் வைரவருக்கே வெளிச்சம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. ஏகாதசியன்று இந்த உலகிலிருந்து விடுதலை கிடைப்போருக்கு நல்ல கதி கிடைக்குமென என பாட்டியே அடிக்கடி கூறுவார்கள். அவர்களுக்கே அந்த நாள் கிடைத்து விட்டது.

      /சொர்க்கம் என ஒன்று அங்கின இருக்குதோ இல்லையோ என்பது அந்த சமயபுரத்து கிழக்கில இருக்கும் வைரவருக்கே வெளிச்சம்/

      ஆமாம் அப்படி ஒன்று இருக்கிறதாவென யாரிடம் விசாரிப்பது? அப்படியே விசாரித்தாலும், விசாரித்த பின் நாம் மறுபடியும் இங்கு வர முடியுமோ ? ஹா ஹா.
      இறப்புக்கு பின் நமக்கு ஒரே இருட்டுத்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இறப்பினால் நமக்கு வேண்டப்பட்ட உறவுகளுக்கு வேண்டுமானால் வெளிச்சம் தெரியலாம்.. :)) உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஏகாதசி விரதம் பற்றிய உங்கட சொற்பொழிவு மிக நன்று... நம்முடைய ஒவ்வொரு விரதங்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு சரித்திரமே உள்ளதுதான் வியப்பு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      /ஏகாதசி விரதம் பற்றிய உங்கட சொற்பொழிவு மிக நன்று.../

      உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். பெரிய பதிவை முழுவதும் படித்த உங்கள் பொறுமைக்கு என் நன்றிகளும்.

      ஆமாம். உண்மைதான்.. ஒவ்வொரு விரதங்களுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உள்ளன.விரதங்கள் இருப்பது பொதுவாக நமக்கு இறைபக்தியை உண்டாக்குபவை. அதே சமயம் உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்பவை. மாதங்கள் தோறும் முறையாக இருந்து விரதம் கடைப் பிடித்தால். முகத்தில் ஒரு தேஜஸ் தானாகவே வந்து விடும். உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி.தாமதமான பதில்கள் தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. நாரதருடன் கூடிய நீதிக் கதை நன்றாக உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      /நாரதருடன் கூடிய நீதிக் கதை நன்றாக உள்ளது..../

      சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் "இந்த கதை நீங்கள் எழுதியதா? என வியந்து கேட்டிருந்தார்.

      இப்படி மண்டபத்தில் யாரும் எழுதி கொடுக்காமல், நானே எழுதிய கதையை நீங்களும் ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.. ஹா. ஹா. ஹா. நன்றி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. //உத்தவர்// மகாபாரத்தில இன்றுதான் இப்பெயரை அறிகிறேன்ன்.. ஏனெண்டால் நேக்கு மகாபாரதம் தண்ணிமாதிரி:))

    அருமையான தொகுப்பு, ஆனா போஸ்ட் பெருத்துவிட்டது, இரு பகுதிகளாக்கிப் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.. இது என் போன்ற சுவீட் 16 குழந்தைகளுக்குப் படிச்சு முடிக்கையில் மூச்சு வாங்குகிறது:))

    ReplyDelete
    Replies
    1. மஹாபாரதம் உங்களுக்குத் தண்ணீர் மாதிரிதான். எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனென்றால் உங்களுக்குப் பிடித்த ராமன், சீதை எல்லோரும் அதுலதானே வர்றாங்க.

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      ///உத்தவர்// மகாபாரத்தில இன்றுதான் இப்பெயரை அறிகிறேன்ன்.. ஏனெண்டால் நேக்கு மகாபாரதம் தண்ணிமாதிரி:)) /

      இந்த உத்தவர் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவர். கண்ணனுடன் கோகுலத்தில் வளரும் போதே சிறு வயது முதற்கொண்டு உயிர் நண்பராக இருந்தவரும்..கண்ணனது அன்புக்கு பாத்திரமானவர்.

      ஆமாம்.. பதிவு உணர்ச்சி வெள்ளத்தில் மிக நீளமாக வந்து விட்டது.

      /இது என் போன்ற சுவீட் 16 குழந்தைகளுக்குப் படிச்சு முடிக்கையில் மூச்சு வாங்குகிறது/

      அடாடா... உங்களைப் போன்ற சிறுவயதினர்தான் கதைகள் என்றால் முணுமுணுக்காமல் விருப்பமாக படிப்பீர்கள் என ஒரே நம்பிக்கையில் ஒரே பதிவாக போட்டேன். ஒருவேளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கையில், அந்த ஆறு நம்பர் ஒன்றுக்கு முன்னாடி வந்து விட்டதோ? ஹா.ஹா.ஹா.

      இந்த மாதிரி உங்களுடன் போடும் அரட்டைகள் மன கவலைகளை போக்கிடும் மருந்தாக நன்றாக உள்ளது சகோதரி. உங்கள் அன்பான கருத்துக்கள் மனதிற்கு ஆறுதல்கள் தருகிறது. எப்போதும் வரவேற்கிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

      மகாபாரதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அனைவரையும் அனைவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆமாம்... இந்த ராமன், சீதை வேறு ஏதோ புராண கதைகளில் வருவார்களே:)) மறந்து விட்டது. அதனால்தான் கேட்கிறேன்.. ஹா ஹா

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. அதிரா மஹாபாரதத்தில் இவங்கதான் வருவாங்க. ஒருவேளை அதிரா இராமாயணத்தில் அர்ஜுனன், சகாதேவன் வரலாம்.

      Delete
    5. ஹா. ஹா.ஹா. எல்லோரும் ஒன்றே.. அனைவரும் ஓர் குலம் என்று நினைத்து விட்டால் கண்ணனின் கீதை நம்மிடம் வந்து நம்மை விட்டு பிரிய மனமில்லாமல் நம்முடனேயே பிரியமாய் தங்கி விடும்.

      Delete
  18. ஆஹா மிக அருமை கமலா அக்கா ...

    இரு கதைகளும் ஏற்கனவே அறிந்து இருந்தாலும் மீண்டும் வாசிக்க சுவாரஸ்யமே ...

    உங்களின் அனுபவங்கள் மிக அழகு, சுவாரஸ்யமா சொல்லி இருக்கீர்கள் ...

    தங்களின் பதிவு வந்த அன்று கொஞ்சம் வாசித்தேன் ..பொறுமையாக வாசிக்க வேண்டும் என தள்ளிப் போட்டு இன்று தான் ஆழ்ந்து வாசிக்க முடிந்தது ..

    அம்மா வீட்டில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீரங்கம் செல்வோம் ...மாமியார் வீடே பெருமாள் கோவில் தெரு தான் வாசலிலே ராஜகோபால சுவாமி கோவில் ..

    இங்கு பெங்களூரில் 5 நிமிட நடையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், இந்த வருடமும் ஏகாதசிக்கு பெருமாள் தரிசனம் சிறப்பாக கிடைத்தது ..

    சுவாரஸ்யமான பதிவு அக்கா ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பெரிய பதிவாக இருந்தாலும் ரசித்துப் படித்து தந்த அழகான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.

      / பொறுமையாக வாசிக்க வேண்டும் என தள்ளிப் போட்டு இன்று தான் ஆழ்ந்து வாசிக்க முடிந்தது ../

      ஆகா.. என் வேண்டுதல் விளம்பரம் உங்கள் மூலம் நிறைவேறி விட்டது. ஹா.ஹா.ஹா. நன்றி. நன்றி.

      தங்கள் பழைய நினைவுகள் மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும். வீட்டின் அருகிலேயே கோவில்கள் இருந்தால் இது போன்ற விஷேட தினங்களில் பிரயாண சிரமமின்றி தரிசித்து வர முடியும். அதுவும் உறவுகளுடன் சென்று வந்தால் மனதுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

      இந்த தடவை இங்கும் உங்களுக்கு 5 நிமிட நடையிலேயே பெருமாள் தரிசனம் கிடைக்குமளவிற்கு அருகிலேயே பெருமாள் கோவில் இருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      இந்தப் பதிவு ஏற்கனவே நீங்கள் அறிந்த கதைகளுடன் இருந்தாலும், சுவாரஸ்யமாக படித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete