Tuesday, May 19, 2020

ஒரு கதை பிறந்த கதை.


சில கதைகள் எப்போதோ படித்தாலும் மனதை விட்டு அகலாமல் இருக்கும். ஆனால் யார் எழுதியது, எப்போது, எங்கே என்பது கூட சுத்தமாக மறந்து விடும்.

இந்த தோசை இருக்கிறதே. அதற்கு யார் ஆசையுடன் அந்த ஆசையையும் சேர்த்து பெயராக வைத்தார்களோ  தெரியவில்லை..?  "ஆசை வெட்கமறியாது" என்பது போல், "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட  வயிறு." என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவு ருசித்து தின்றாலும்  "இன்னும் ஒன்னே ஒன்னு சூடாக போட்டுக்கோ..."என்ற குரலுக்கு மறுபேச்சின்றி இணங்கி விடும். அதுதான் ஆசையின் பெயருடன் சற்று இணைந்தே இருக்கும் இந்த" தோசை" யின் சிறப்பு...

தோசைகள்  அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைய வகைகளில் உருப்பெறும்.  ஆனால்  வார்க்கும் வகைகளில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வது மட்டும் தவறாது இடம்பெறும்.

சிலருக்கு குண்டாக  தோசை வார்த்தால் பிடிக்காது. சிலருக்கு ஒல்லியாக இருந்தால், என்ன இப்படி காற்றில் பறக்கிற மாதிரி தோசை வார்த்திருக்கிறாய்.. எத்தனை தின்றாலும், வயிறே நிறைய மாட்டேன் என்கிறதே...! என்பார்கள்.

சிலருக்கு பட்சணங்கள் மாதிரி மொறு, மொறு என பல்லில் கடித்து சாப்பிடுகிற மாதிரி இருக்கனும். சிலருக்கு பஞ்சு மாதிரி மிருதுவாய், அதே சமயம் மிழுங்கும் போது தொண்டையை அடைக்காத மாதிரி வேண்டும்.

தோசைக்கே இப்படியென்றால், அதனுடன் கலந்து கூடும் துணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவர் விதவிதமாக சட்னிகள்தான் அதற்கு பொருத்தமெனவும், மற்றொருவர், இட்லி மிளகாய்ப்பொடிதான் தோசைகளுக்கும் சாலச்சிறந்தது எனவும், இன்னுமொருவர் நல்ல சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் இல்லாத தோசை ஒரு தோசையா? எனவும், பிறிதொருவர்  காய்கறி, மசாலா கலந்து செய்யும் குருமாதான் இதற்கு உடன்பாடு எனவும், மீதமிருப்பவர் அதென்ன.. ஒன்றை விட்டு ஒன்றைச்சொல்வது? இவை எல்லாம் இருந்தால்தான் தோசைக்கே ஒரு அழகு. இல்லையெனில், எவ்வளவுதான் ருசியான தோசையாக அமைந்தாலும், அது வெறும் "சை"(த்) தான் எனவும் அவரவர்கள் வாதிட்டு அவர்களே வெல்வார்கள். இது அவரவர் தோ (தே) சா சுதந்திரம். ஹா.ஹா.

ஏதோ மனதில் அகலாத கதை என்று சொல்லிவிட்டு இவள் தன் இஷ்டத்திற்கு காது குத்தி கொண்(ன்று)டு இருக்கிறாளே என நீங்கள் நினைக்கும் முன் அகலாமல் அமர்ந்திருக்கும் கதைக்கு வருகிறேன்.

கதை..

ஒருவர் தன் சொந்த வேலை விஷயமாக ஒரு ஊருக்கு தன் நண்பரோடு பயணிக்கிறார். அந்த நண்பருக்கும் அவருடன் சென்று வந்தால் அவரின் வேலைக்கும்  சில ஆதாயம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. . அந்த ஊரில் அவர் சந்திக்க  நினைக்கும் வீட்டை அடைந்ததும் அவருக்கும். நண்பருக்கும் ஏகப்பட்ட மரியாதை. அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரளவு வயதான கணவனும், மனைவியும் மட்டுந்தான்..!

 வேலைக்காக சென்றவரும், அவ்வீட்டிலிருக்கும் பெரியவரும் ஏதோ ஒரு வகையில் உறவுதான். எனவே குசலபரிபாலனம் முடிந்த பின் இருவருக்கும் சாப்பாடு தயார் செய்ய தன் மனைவியிடம் சொல்லவும்,  அந்த மனைவி நல்ல முறையில் உணவு தயாரித்து இருவருக்கும் அன்போடு பரிமாறி அவர்கள் இருவரின் நன்றியையும் பெறுகிறார்.

இரவு வீட்டின் கூடத்தில் பிராயாணித்து  வந்த  அலுப்பு நீங்க  ஆனந்தமாக படுத்து உறங்கி காலை எழுந்தவுடன் அருமையான காஃபியை குடித்த பின் அவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை சுமூகமாக அந்த வீட்டு  பெரியவர்  முடித்து தருவதாக சொன்ன செய்திக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவித்த பின் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும், "இருங்கள்.. என்ன அவசரம்? காலை டிபனை முடித்து விட்டு கிளம்பலாம்..! "என அந்த அன்பான கணவருடன் சேர்ந்து அவர் மனைவியும் மிகவும் வறுப்புறுத்தியதில் அவர்களும்  மனம் மாறி சம்மதித்து விடவே, இவர்களுக்கு குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெரியவர். 

இவர்கள் குளித்து வந்தவுடன் தோசையின் மணம் நாசிக்குள் சென்று  வயிற்றில் பசியை உண்டாக்கியதையும் வாழை இலையில்.  தோசைகளுடன் தேங்காய் சட்னி பரிமாறி, வாசனையான எண்ணெயுடன் குழைத்த மிளகாய் பொடியை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என அந்த பெரியவரின் மனைவி, ஒரு தாயின் பரிவுடன் கேட்டு, கேட்டு உபசரித்ததையும், அவர் வார்த்தெடுத்த தோசைகளின் அழகை இருவரும் ரசித்ததையும் இருவரும் அந்த கதையில் மனதுக்குள் விவரிக்கும் அழகே தனி... அதைப் படிக்கும் அந்த நேரத்தில் நமக்கே ஆழ்ந்த பசி வந்து கண்களை கட்டும். அதுவும் தோசைகளை அடுக்கி வைத்து பரிமாறிய அந்தம்மா மாதிரி நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும். 

இருவரும் முந்தைய நாளின் கூச்சமின்றி வேண்டிய அளவு தோசைகளை சாப்பிட்ட பின் மீண்டும் ஆவி பறக்கும் காஃபி குடித்து.ஆசுவாச படுத்திக் கொண்டு  இருவருக்கும் நன்றி சொல்லி கிளம்பும் போது, "மதியம் இவர்கள் ஊர் சென்று சேர நாழியாகி விடும். தோசைகள் நிறைய வார்த்திருந்தால் ஆளுக்கு நாலு தோசை இலையில் கட்டி பார்சல் செய்து கொடேன். வழியில்  சாப்பிட்டு பசியாறட்டும்.." ! என்ற கணவரின் பேச்சுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த அந்த மனைவி சமையலறை உள்ளே சென்று வாழையிலையில், தோசைகளை  வைத்து கட்டித் தந்த அந்த பார்சலை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... 

அவர்களே " இந்த மாதிரி ருசியான தோசைகளை இனி வாழ்நாளில் எப்போது சாப்பிட போகிறோம்..? பேசாமல் ஊருக்கு கிளம்பும் போதும் நாலு தோசைகளை கேட்டு வாங்கியே செல்லலாமா? "என்ற மனரீதியில் யோசித்ததையும், ஊருக்கு திரும்பும் போது பிரயாணத்தில் இருவரின் மனநிலையும், யோசனையும் ஒன்றாக இருந்ததையும் அவர்கள் பேசிக் கொள்வதை கதாசிரியர் அவ்வளவு அழகாக விமர்சரித்திருப்பார். 

இந்தக் கதையில் நான்  சம்பவங்களை கோர்வையாக தந்துள்ளேனா இல்லை சற்று என் கற்பனைகளையும் கலந்து விட்டேனா என தெரியவில்லை. கதையில் கதை எழுதியவர்,  "பெரியவர் இவர்கள் வருகையை அவ்வளவாக விரும்பாத மாதிரியும், அவர் மனைவியை நல்ல மனதுடையவராகவும்  காட்டியிருப்பாரா" என்பது இப்போது விமர்சித்த பின்  குழப்பமாக உள்ளது. எப்படியிருந்தாலும்  படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!

(என்னடா இது..! மனதில் அகலாத என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாது இவ்வளவு குழப்பங்களா? என நீங்கள் குழம்பலாம். எப்போதுமே ஒரு விஷயம் மனதை விட்டு அகலாமல் இருப்பதால்தான் ஒரு குழப்பமே உருவாகிறது.  ஹா. ஹா. ஹா.)

கதை எழுதியவர் வந்து படித்து அவர் எழுதிய  கதையைக் கூறி, இதில் சிலது மாறியுள்ளது.. நான் எழுதியதில் இப்படி இருக்கும்... என்று சொன்னால்தான் உண்டு. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லையோ எனவும் மனம் நினைக்கிறது.

நன்றாக நினைவில் நிற்கும் கதையிது என சொல்லி விட்டு மாற்றி விட்டேனோ என ஏன் பேதலிக்கிறார் என நீங்கள் எண்ணலாம். "கரு தோசையின் சிறப்பை வர்ணிப்பதும், அதை ஊருக்கு கிளம்பும் கடைசிவரை நின்று வாங்கிச் செல்லும் நிகழ்வுகள்தான்." இடையில் சில மாறுதல்களை நான் விமர்சித்தது கொண்டு வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. இந்த கதை என்றோ படித்தது. இதை வேறு யாரேனும் படித்து ரசித்திருக்கலாம். ரசித்தவர்கள் இந்தக் கதையின் தலைப்பையும், எழுதியவர் யாரென்ற பெயரையும் தெரிவித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.

இன்று என் பதிவுக்கு உபகாரமாக அன்று  இந்தக் கதையை அருமையாக எழுதியவருக்கும், நான் என் பதிவில் எழுதியதை சலிப்பின்றி படித்த  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏. 🙏.

பி. கு. இன்னமும் ஒரு கதை அகலாமல் மனதில் உள்ளது. வேறு வழியில்லை. பதிவுலக சட்டப்படி நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும். ஹா. ஹா. ஹா.  நன்றி.. 🙏. 😀😀

43 comments:

  1. ஆஹா.. தோசை புராணம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /ஆஹா.. தோசை புராணம்!/

      பதிவுக்கு தங்களின் முதல் வருகைக்கு நன்றி. அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்திலும் அன்பாக புராணத்திற்கு வந்து ரசித்து தந்த கருத்தினுக்கும் மிக மிக நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தோசையின் வடிவங்கள், வாகு, சுவை, அதனோடு சேரும் துணைப்பொருட்களின் (ஆனால் இதுதான் ரொம்ப முக்கியம். சுவையை முடிவு செய்வது, அல்லது பூர்த்தி செய்வது இதுதான்) சுவை..்். பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /(ஆனால் இதுதான் ரொம்ப முக்கியம். சுவையை முடிவு செய்வது, அல்லது பூர்த்தி செய்வது இதுதான்) சுவை..்்்/

      உண்மை.. தோசை முழுமையாக பிய்ந்து போகாமல் எடுத்து வருகிறதோ இல்லையோ, அதன் ஜோடி சேரும் சைடிஸ் தோசையின் சுவையை பூர்த்தி ஆக்க வேண்டும். ஹா ஹா. பிரமாதம் என்ற பாராட்டிற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. //தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட வயிறு//

    ஆஹா தேவகோட்டையில் இதுவரையில் கேட்டிராத புதுமொழியாக இருக்கிறதே...

    தோசையை ஆசையாக வார்த்த தசைத்த கதையை கதைத்தது அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தேவகோட்டையில் கேட்டிராத பழமோழியா? ஆனால் எங்கள் அம்மா (தேவகோட்டையில் பிறந்து வளர்ந்தவர்)அடிக்கடி சொல்லும் பழமொழி இது. அவர்கள் சொல்லித்தான் கேள்வி பட்டுள்ளேன். ஒருவேளை தி. லி யில் அப்போதிருந்த சொல் வழக்கோ என்னவோ... ஆனால் உண்மைதான்.. தோசை என்றாலே, யாரையும் கேட்காமல் கூட இரண்டு உள்ளே போய் விடும்.

      கதையையும் ரசித்து படித்து கருத்திட்ட மைக்கு மிக்க நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ஆஹா! தோசையம்மா தோசை! அருமை! சின்ன வயசில் இருந்தே அலுக்காத உணவு. ஆனால் உங்கள் தோசைக்கதையை நான் இப்போத் தான் படிக்கிறேன். எனக்குப் பிடித்தது தோசைக்குத் தக்காளிச் சட்னி அல்லது வெங்காயச் சட்னி அல்லது பச்சைமிளகாய்+பச்சைக்கொத்துமல்லி வதக்கி அரைத்த சட்னி.

    ReplyDelete
    Replies
    1. இடுகையைப் படிக்கும்போது உங்க வீட்டில் சாப்பிட்ட இலுப்பச்சட்டி தோசை நினைவு வந்துவிட்டது கீசா மேடம்..

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆஹா! தோசையம்மா தோசை/

      ஹா ஹா.பதிவை படித்ததும் அந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டதா?

      நீங்களும் இப்போதுதான் இந்த கதையை படிக்கிறீர்களா? தோசை கதையை படித்து ரசித்தமைக்கு நன்றி.

      நீங்கள் சொன்ன சைடிஸ் தோசைக்கு நன்றாக இருக்கும். இதெல்லாம் இருந்தும், சிலர் தேங்காய் சட்னிதான் கேட்பார்கள். எனக்கும் தோசைக்கு கொத்தமல்லி சட்னி மிகவும் பிடிக்கும். இன்றைய மதிய உணவுக்கு சாதத்தில் கலந்து சாப்பிட அந்த துவையல்தான் அரைத்தேன். தாங்கள் பதிவை ரசித்து தந்த அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே.

      தங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு மலரும் நினைவாக சகோதரி வீட்டில் சாப்பிட்ட இலுப்பைசட்டி தோசையை என் பதிவு உண்டாக்கினதற்கு மிக்க மகிழ்ச்சி. அந்த தோசையும், வாசமாக மிருதுவாக நன்றாக இருக்கும். உங்களின் பதில், நான் சின்ன தாளிக்கும் குழி இரும்பு கரண்டியில் முன்பு சென்னையிலிருக்கும் போது ஆளுக்கு அவரவர்கள் விருப்பம் போல் (பொங்கரம் என்று நாங்கள் சொல்வோம்) வார்த்தது நினைவுக்கு வந்தது.அது அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இப்போது முடியாது.. வீட்டின் மெம்பெர்ஸ் கூடி விட்டது. காலை ஆரம்பித்தால், எப்போது முடியுமோ?.. ஹா. ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. எனக்குத் தெரிந்து திருக்குற்றாலத்தில் ரசிகமணி டி.கே.சியின் வீட்டு தோசைகளைப் பற்றிக் கல்கி, ராஜாஜி ஆகியோர் சிலாகித்துப் பேசியது ஒன்றே தோசை குறித்து நினைவில் இருக்கும் விஷயம். மற்றபடி நீங்கள் சொல்லி இருக்கும் கதையை எழுதியவர் பெயரோ அது எதில் வந்தது என்பதோ நினைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எனக்குத் தெரிந்து திருக்குற்றாலத்தில் ரசிகமணி டி.கே.சியின் வீட்டு தோசைகளைப் பற்றிக் கல்கி, ராஜாஜி ஆகியோர் சிலாகித்துப் பேசியது ஒன்றே தோசை குறித்து நினைவில் இருக்கும் விஷயம்./

      அப்படியா..? தகவலுக்கு நன்றி. சில வீட்டில் பறிமாறப்படும் மற்றைய டிபன், தோசைகள், இல்லை சாப்பிடும் உணவுகள் இப்படி ஏதாவது நினைவில் நின்று விடும். அதன் ருசி நாவை விட்டு அகலாதபடி அமைந்து விடுவதால், அதை மீண்டும் சுவைக்கும் போது அந்த நினைவுகள் வந்தபடி இருக்கும். நாம் இதைச் சொல்லிச்சொல்லி நம் வீட்டில் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் அதன் தாக்கம் தொற்றிக்கொண்டு, அவர்களும் அதை நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

      இந்த கதையும் எனக்கு தோசைகள் வார்க்கும் போதெல்லாம் மனதுள் எட்டிப்பார்க்கும். எனக்கும் படித்தது நினைவிருக்கிறதே ஒழிய மற்றது நினைவுக்கு வரவில்லை. எப்போதாவது வரலாம். நீங்களும் கதையை ரசித்துப் படித்தமைக்கு என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தோசையும் கதையும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தோசையும், கதையும் அருமையென தோசைப் பதிவை படித்து, சுதையையும் படித்து ரசித்து தந்த தங்களின் ஊக்கமிகுந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை

    கடைசியில் தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் பூசை என்று அந்தக்கால பாட்டு . தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் தோசை என்று பாடல் வரிகள் மாறி இருக்கிறது இப்போது.
    தோசை புறணமும், பழமொழியும் அருமை.
    கதை நன்றாக இருக்கிறது பொன்னியின் செல்வனில் வருகிறதோ! ஆனால் காப்பி கிடையாதே அந்தக்காலத்தில்!

    //படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!//

    ஆமாம், உங்கள் கதையை படிக்கும் போதே சுவாரஷ்யமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /கடைசியில் தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் பூசை என்று அந்தக்கால பாட்டு . தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் தோசை என்று பாடல் வரிகள் மாறி இருக்கிறது இப்போது./

      ஹா ஹா. உங்களுக்கும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? நானும் இதையும் பதிவில் சேர்க்க நினைத்து பிறகு விட்டு விட்டேன்.

      ஓ.. இப்போது பாடல் வரிகள் மாறி விட்டனவா? பாடலில் கூட குழந்தைகளுக்கு அடியை நினைவு படுத்தாத வரி மாற்றத்திற்கு பாராட்டுக்கள்.

      தோசை புராணத்தையும், கதையையும் ரசித்து படித்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி அடைந்தேன். பழமொழி உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி.

      /பொன்னியின் செல்வனில் வருகிறதோ! ஆனால் காப்பி கிடையாதே அந்தக்காலத்தில்/

      இல்லையில்லை. இது இப்போது பத்தாண்டுகளுக்கு முன்போ, என்னவோ படித்த சிறுகதை. எழுத்தாளரின் பெயரும் எங்கு படித்தோம் என்பதும் மறந்து விட்டது. ஆனால் அந்த தோசைகளின் வர்ணனைகளை மறக்க இயலவில்லை. கதாசிரியர் அவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்.
      நீங்களும் இந்தக் கதையை சுவாரஸ்யமாக ரசித்துப் படித்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete


  8. தோசை புராணம் , பழமொழி அருமை.
    // நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும்.//

    நாமே சமைத்து சாப்பிடும் போது சில நேரம் மனம் அலுப்பாக இருக்கும் போது நமக்கு யாராவது தோசை சுட்டுத்தரமாட்டார்களா என்று எண்ணம் வரும் தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நாமே சமைத்து சாப்பிடும் போது சில நேரம் மனம் அலுப்பாக இருக்கும் போது நமக்கு யாராவது தோசை சுட்டுத்தரமாட்டார்களா என்று எண்ணம் வரும் தான்./

      உண்மைதான்..சிறு வயதில் அம்மா சுட்டு தந்து பொறுமையாக சாப்பிட்டது தான். இன்று காலை கூட என் பதிவுக்கு உங்கள் அனைவரின் கருத்துக்கள் வரும் போது, கோதுமை மாவு கரைத்த தோசைக் கடையில் மாட்டிக் கொண்டிருந்தேன். அனைவருக்கும் சுட்டு போட்டு விட்டு, நான் சாப்பிடும் போது மணி பதினொன்று. இது ஒரு விதமான சுகமான சுமைகள்.. அதன் பின் சமையல், சாப்பாடு, என நேரம் பறக்கிறது. இப்போதுதான் கைப்பேசியை கையில் எடுக்க முடிந்தது. இனி இரவு சாப்பாடு என நேரம் பறக்கும், தங்களின் அனைத்து அன்பான கருத்துக்களுக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வந்தேன், கதை படிக்க வருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்.. வணக்கம் அதிரா சகோதரி.தங்கள் வரவு நல்வரவுவாகுக.

      கதைப்படித்து ரசித்திட்ட கருத்துக்களுக்கு என மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ஆஆ மீண்டும் நானே வந்தேன்:))

    ஹா ஹா ஹா உண்மைதான் இந்த தோசை ஓசை.. சாபிடும்போது அதிகம் சாப்பிடப்பண்ணி உடம்பின் வெயிட்டைக் கூட்டி விடுகுது கர்ர்ர்:)) பின்பு அதைக் குறைக்க ரெண்டு நாள் பட்டினியாக இருக்க வேண்டி இருக்குது கர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தோசை சாப்பிட்டு வெயிட் போடுமா?

      /பின்பு அதைக் குறைக்க ரெண்டு நாள் பட்டினியாக இருக்க வேண்டி இருக்குது கர்ர்ர்ர்:))/

      ஹா ஹா. அளவாக சாப்பிட்டால் போயிற்று. பட்டினி இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படுமில்லையா? இப்போதுதான் அரிசியும், கோதுமையும் சமம் என வந்து விட்டதே.. குதிரைவாலி சாப்பிட்டால் உடம்பு வெயிட் குறைகிறதாக என் மகன் எனக்கு சிபாரிசு செய்கிறார். ஆனால் அதுவும் அரிசியை விட விலை அதிகம். தினமும் ஒரே மாதிரி சாப்பிட முடியுமா என சந்தேகம் வருகிறது. (அரிசி சாப்பிட்டு பழகிய நாவு வேறு.) ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. எனக்கு முறுகல் தோசையை விட, மெத்து மெத்தென இருக்கும் குண்டுத்தொசையே பிடிக்கும்.. ஆனாலும் தோசையோ இட்லியோ என்றால்.. இட்லிக்கே முதலிடம் குடுப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. பின்ன... இட்லின்னா சட்டுப்புட்டுனு 20 வார்த்துவிட்டு அக்கடா என்று க்வில்ட்ல படுத்துக்கொள்ளலாம்.

      20 தோசை வார்க்கணும்னா நின்னுக்கிட்டே வார்க்கணுமே..

      அப்புறம் ஏன் இட்லிக்கு முதலிடம் கொடுக்க மாட்டீங்க

      (ஆனா இட்லி தட்டை சுத்தம் செய்வது கடினம். தண்ணீரில் ஊறப்போட்டுத்தான் சுத்தம் செய்யணும்)

      Delete
    2. தோசை சுடுவதும் இட்லி அவிப்பதும் எளிதுதான் இட்லி என்றால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணனும் ஆனால் தோசை என்றால் உடனுக்குடன் கிடைக்கும் வீட்டில் ஆட்கள் நிறைய பேர் இருக்கும் போது இட்லி ஈஸி காரணம் சிக்கிரம் வயிறு நிறைந்துவிடும் ஆனால் தோசை அப்படி அல்ல திங்க திங்க ஆசை நான் தோசை சுடும் போது முன்று கல் போட்டு சுடுவேன்

      Delete
    3. வணக்கம் மதுரை தமிழர் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இட்லிகள் யாருக்குமே தனமும் பிடிப்பதில்லை. ஆனால் தோசை இரண்டு வேளை இருந்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள்.

      தங்கள் கூறுவது உண்மைதான். ஒரு கல் போட்டு சுட்டு தோசை சாப்பிட காத்திருக்க வேண்டும். ஆட்கள் அதிகம் உள்ள வீடுகளில், உங்களைப் போல் மூன்று அடுப்பில் வார்த்தால் ஈசியாக முடிந்து விடும். சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இட்லியும் ஐந்தாறு அடுக்குகளில் வார்த்து விட்டால்,சீக்கிரமாக வார்த்து சாப்பிட்டு விடலாம். பகிர்வுக்கும், வந்து தந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் குண்டு தோசை பிடிக்குமா? எனக்கும் ஒல்லியை விட கொஞ்சம் மெத்தாக இருக்கும் தோசை இஷ்டம். ஒல்லியென்றால் உடனே சாப்பிட்டு விட வேண்டும். குண்டாக இருந்தால், கொஞ்சம் நேரம் கழித்தும் சாப்பிடலாம்.

      நானும் ஒரு இட்லி பிரியை...ருசியாக துணைகள் அமைந்து விட்டால் மூன்று வேளையும் இட்லி சாப்பிடுவேன். ஹா ஹா. அம்மா வீட்டில் இருக்கும் போது ஒரு பசி நேரத்தில் போட்டிப் போட்டு காலி பண்ணுவோம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. உண்மைதான் சில கதைகள், சம்பவங்கள் நம் மனதை விட்டு என்றுமே அகலாது.

    இக்கதையில் என் கணிப்பு.. தோசை என்றில்லை, அந்த இருவரும் எந்தச் சாப்பாடெனினும் இப்பூடிக் கட்டிக்கொண்டுதான் போயிருப்பினம்.. நல்ல கஞ்சல்காரர்கள்போல இருக்கு:)).. வழியில காசு செலவளிக்காமல், இப்படி ஓசிச்சாப்பாட்டில் வாழ்க்கை நடத்துவோர் பலர் உண்டு ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து நல்லதாக கருத்து தந்ததற்கு மகிழ்ச்சி

      /அந்த இருவரும் எந்தச் சாப்பாடெனினும் இப்பூடிக் கட்டிக்கொண்டுதான் போயிருப்பினம்/

      ஹா ஹா. ஹா. அப்படியில்லை நம்மால் அவர்களுக்கு தொந்தரவு ஏன் என்று நினைத்ததினால்தான் விடிந்ததும் கிளம்ப யத்தனிக்கிறார்கள். ஆனால் அந்த தோசையின் அழகும், மணமும் அவர்களை அப்படி நினைக்க வைத்து விட்டது. மற்றபடி நீங்கள் சொல்வது போல், ஓசிசாப்பாட்டுக்கு காத்திருப்பவர் பலருண்டு. கருத்துகளுக்கு மிக்க நன்றி அதிரா சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கதையைப் படித்தேன்.... உபசரிப்பதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பவர்கள்... அதனால் நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாதே.. ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கதையைப் படித்தேன்.... உபசரிப்பதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பவர்கள்... அதனால் நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாதே.. ஹா ஹா/

      கதையை படித்ததற்கு மிக்க நன்றி.
      ஹா.ஹா.ஹா. ஐயோ.. இப்படி பப்ளிக்கா போட்டு உடைத்து விட்டீர்களே..! எல்லோரும் காது கேட்டு விடப் போகிறது. ஹா. ஹா.ஹா. ஆனாலும், இப்படி நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால், நமக்கு சப்போர்ட்டுக்கு யார் வருவார்கள்.? (எங்கள் அம்மா வீட்டில் (நெல்லை) இப்போதும் வருகிறவர்களுக்கு உபசாரம் செய்வதில் குறைவே கிடையாது..) நெல்லையப்பர்தான் வர வேண்டும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வாங்க வாங்க... என்ன ரொம்ப நாளாகவே வரவில்லையே.. அத்தி பூத்தாற்போல் வந்திருக்கீங்க. கொஞ்ச நாள் இருந்துட்டுதான் போகணும் என்று சொன்னால், இருக்கவா போறீங்க? நாளைக்கே கிளம்பத் திட்டம்போட்டுத்தான் வந்திருப்பீங்க.

      சரி..காபி டீ ஏதாச்சும் குடிக்கறீங்களான்னு கேட்டால் வெளிலயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என்பீங்க.

      சாப்பாடாவது இப்போ சாப்பிடலாமே, நான் பண்ணுவேனே என்றால், ரொம்ப நேரமாயிடுச்சு, இப்பவே இரவு 9 மணி ஆச்சு, அதனால் வரும்போதே சாப்பிட்டுட்டுத்தான் வர்றோம் என்பீங்க.


      இப்படீல்லாம் சிலர் சொல்லிச் சிரிப்பாங்க, நம்ம ஊர் உபசரிப்பைப் பற்றி. ஹா ஹா.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      ஓ.. சில இடங்களில் இப்படியெல்லாம் வேறே பேசுவாங்களா? ஹா. ஹா. எனக்குத் தெரிந்து அறிந்ததில்லை. வருகிறவர்கள் விடாகண்டனாக இருந்தால், இவர்கள் என்ன சொன்னாலும் அழிசாட்டியமாக அமர்ந்து விருந்தோம்பி விட்டுத்தான் செல்வார்கள் போலும்...!ஒரு வேளை அவர்கள்தான் அந்த கடுப்பில் நம் ஊர் உபசரிப்பைப் பற்றி இப்படியெல்லாம் திரித்து விட்டிருக்கிறார்களோ என்னவோ.? ஹா.ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. தோசை, சாம்பார்.... ம்ம்ம்ம்ம்ம் என்ன என்னவோ ஆசைகளை வரவழைத்துவிட்டீர்கள். தமிழ்நாட்டு ஹோட்டல் தோசை (சாதா), சாம்பார் சட்னி - ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

    எனக்கு ரொம்பவும் பிடித்தது, கொஞ்சம் தடிமனான தோசையில் இட்லி மிளகாய்ப்பொடி தடவி, பயணத்துக்குக் கொண்டு செல்வது. மென்னியைப் பிடிக்கும் என்றாலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    அது சரி... 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடு சொரணை கெட்ட பொண்டாட்டி' என்றுதானே நான் பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கும் சொரணை கெட்ட வயிறு என்றுதானே வரணும்?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை கர்ர்ர்ர்ர் தோசைனா உட்னே ஹோட்டல் தோசை சாம்பாரா....ஹையோ வீட்டில செய்யற தோசையை விடவா....ஹோட்டல் தோசை போலவே வீட்டுலயும் செய்யலாமெ....ஒயிங்கா தோசைக்கு ஊறப் போட்டு அரைச்சு தோசை வார்த்து சாப்பிடுங்க!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. ஹல்ல்ல்ல்ல்ல்லோ கீதா ரங்கன்(க்கா) - நாம என்னதான் சொன்னாலும், கடைல போடும் (தமிழகத்தில்) சாதா தோசை, சாம்பார், சட்னி போல வீட்ல வராது. நான் அளவையும் சொன்னேன்.

      இந்த ஊர்ல நல்லா முறுகலா தடிமனா தோசை - எனக்குப் பிடிக்கலை. அன்பே வா படத்தில் சரோஜாதேவி அப்பாவா நடிப்பவர் சொல்வாரில்ல... எப்படா நம்ம ஊர் இட்லி தோசை சாப்பிடப்போறோம்னு ஆயிடுச்சு என்று..அது போல.

      Delete
    3. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தமிழ் நாட்டு தோசை சாப்பிடும் ஆவல் தங்களுக்கு இந்தப் பதிவு ஏற்படுத்தி விட்டதா? ஹா ஹா. உண்மைதான்.. அங்கு தோசை சட்னி, சாம்பார் நன்றாக வாசமாக இருக்கும். இங்கு சற்று இனிப்பு மட்டும் தூக்கல். அந்த தூக்கலில் தோசையின் மணம் குறைந்து விடும்.

      பிராயாணத்திற்கு இரண்டு கரண்டி மாவை ஊற்றி கொஞ்சம் குண்டாக தோசை வார்த்து சூடாக இருக்கும் போதே மி. பொடி எண்ணெய் தடவி எடுத்துக் கொண்டால், நன்றாக இருக்குமே..! கொஞ்சம் உளுந்து கூடச் சேர்த்து அரைத்திருந்தால் மென்னியை பிடிக்காது. எப்படியும் புளிப்பில்லாத மோர் ஒரு பாட்டிலில் கூடவே எடுத்துச் சென்றால், ஒரு வாய் சாப்பிட்டதும் தொண்டையை அடைக்காமலிருக்க ஒரு மிடறு அவ்வப்போது குடித்துக் கொள்ளலாம்.ஹா.ஹா

      மனைவி கீரையை தினமும் சமைத்துப் போட்டதால் வெறுப்படைந்த கணவன் இருக்கும் கொஞ்சம் கீரையையும் ஒரு நாள் கோபத்தில் எடுத்து சுவரில் வீசினானாம். பிறகு சாததத்திற்கு தொட்டுக் கொள்ள ஏதுமில்லாததால், "சோத்து கீரையை வழித்துப் போடடி சொரனை கெட்ட வெள்ளாட்டி" என்றானாம். அப்போதும் அவன் தனக்கு சொரனை இல்லை என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. இந்த காலத்தில் நடக்குமா? கீரை அந்த காலத்தில் மலிவு விலை. இப்போது கீரை சக காய்கறிகளை விட விலை அதிகமாகவே உள்ளது. எதையும் சாப்பிட்டு பழக வேண்டுமென்பதற்காக இந்த பழமொழி யும் கதையும் உண்டானாதோ என்னவோ.?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கமலாக்கா தோசை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். தோசை விவரணம் நோ நோ புராணம் நல்லாத்தான் இருக்கு ஆனா கதையில் உங்கள் எண்ணங்களும் சேர்த்து சொல்லிட்டீங்களோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா. ஹா. தோசை புராணத்தை ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      /ஆனா கதையில் உங்கள் எண்ணங்களும் சேர்த்து சொல்லிட்டீங்களோ? /

      இல்லை.. கதையின் கரு அந்த வீட்டம்மா வார்த்த தோசைகளின் அழகை வர்ணிப்பதுதான்.. எழுதி முடித்தவுடன் ஒரு சில பகுதிகள் பதிவின் கடைசியில் கூறுயபடி நானாக மாற்றி விட்டேனோ என்ற ஒரு சின்ன சந்தேகம் வந்து விட்டது. எங்கு எதில் படித்தேன் என்பது மறந்து விட்டது. என்றாவது எங்கள் வீட்டிலேயே அந்த கதையை மறுபடி படிக்க நேரலாம். அப்போது சந்தேகம் நிவர்த்தியாகும். அது வரை இன்னமும் மனதில் குடைந்து கொண்டேயிருக்கும். கதையை நீங்களும் ரசித்து படித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. தோசை மிகவும் பிடித்த பதார்த்தம். அதைப் பற்றி நீங்கள் எழுதியது ஸ்வாரஸியம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் தோசை அனைவருக்கும் மிகவும் பிடித்த பதார்த்தம். தாங்களும் தோசை பகிர்வினை பற்றி படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. 'ஆசை தோசை அப்பளம் வடை' என்பார்கள் அளவே இருக்காது என்ற கருத்தாக இருக்கலாம்.
    கதை சுவாரசியம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆசை தோசை,அப்பளம் வடை.. தங்கள் கருத்தும் உண்மைதான் போலும்..! தோசை சாப்பிட சாப்பிட ஆசையாகத்தான் இருக்குமென்று அப்படி ஒரு சொல் வழக்கு வந்ததோ என்னவோ?

      கதை சுவாரஸ்யமான, படித்து ரசித்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      தங்கள் தொடர் வருகை என் எழுத்திற்கு பெரும் ஆற்றல் தந்து என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. அதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete