Friday, January 24, 2020

படைப்பின் ரகசியம்.




படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று..
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே
தக்க வைத்து கொள்! எனச் சுலபமாக
"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று...

இருண்ட உலகத்தில் கருவோடு
இருந்தந்த சுகங்களும்,
இறுமாப்பு பெற்ற கனாக்களும்,
இருளை விட்டு வெளிவந்த பின்
இயன்றளவு இருப்பதும், இல்லை, 
இல்லாமல் போவதும் அந்த
இறைவனின் செயலால் தான்!

அன்னையின் அரவணைப்பில்,
அழுகையையும், அச்சத்தையும்
அமிழ்த்திவிட்டு ஆனந்தித்திருப்பதும்
அந்த ஆண்டவன் ஆணையால்தான்.

பின் வரும் காலங்களில்
பிறிதொரு பிசகில்லாமல்
அவன் இட்ட விதிப்படி
அவன் நட்ட மரங்கள் (மனிதர்கள்)
வாழ்வில் பயனுறுவதும், 
வாழ்வோடு பயணிப்பதும், 
வாழ்வை துவக்கியவனின் அருளால்தான்.

இருப்பினும் இறைவன் அமைந்திட்ட
இன்பம், துன்பம்,
ஏழ்மை, செழுமை,
ஏற்றம், இறக்கம்,
உயர்வு, தாழ்வு
ஜனனம், மரணம்,
இது போன்ற படிகளில்,
வழுக்கி விழுந்து எழுந்து புரண்டதில்
விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!
மனக் காயங்களும் தாராளம்! தாராளம்!
மனமிரங்கி மருந்திடும் மாற்றானுக்கும்
மனப்புண்ணுக்கு குறைவில்லை!

வேதனையை திரியாக்கி
வெறுப்பென்ற எண்ணெய் ஊற்றி
பற்றிலா தீப ஒளியில்,
பாழும் இவ்வுலகில் பயணித்து,
பரமனை முடிவில் சந்தித்து,
சோம்பலில்லாமல் தன் கதையை
சொல்லி வருந்திய போது,
சிந்திக்காமல் வாய்விட்டு
சிரிக்கலானான் அந்த சிற்பி.

"உன்னதமான இந்த உலகத்தில்
உயர்ந்த பிறவியாய் உன்னை
அனுப்பிய போதினிலே,
அவசரமாய் சொன்னதை,
அரை குறையாய் புரிந்து கொண்டு,
அனுதினமும் நீயும் நொந்து,
அருகிலிருந்தவரையும் நோகடித்த மனிதா!கேள்...

உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
இல்லாத அதை தேடுவதை விடுத்து,
உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!
வினாக்களை தொடுத்து உன்னை
விடைதேடச் சொன்னால், நீ அந்த
விடைகளையே வினாவாக்கி அதற்கு
விடை தேடி காலத்தை விடாது
வீணடித்திருக்கிறாய்!

மழையால் மரங்களுக்கும்,
மாந்தர்க்கும், மண்ணுக்கும் பயன்!
மழையால், மழைக்கென்ன பயன்?
ஒளியால் இருளுக்கும், இருளில்
இருக்கும் மனிதருக்கும் பயன்!
ஒளியால் ஒளிக்கென்ன பயன் ?

மனிதனுக்குள் மனிதனை தேடு!
மண்ணுக்கும், மற்ற மனிதனுக்கும்
மழையாகவும் ஒளியாகவும் இரு!
மனித நேயத்தில் நானிருக்கிறேன்!
மனிதாபிமானியாக நீ இரு!

அழிந்து விடும் பல செல்வங்களில்,
அழியாச் செல்வமாக இதை தருகிறேன் என
அருளிய இறைவன் அந்த
அழிந்து போன உடலற்ற உயிரை,
"படைத்து விட்டான்" மீண்டும்
பாரினில் வாழ்ந்து கொள்! என்று....
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இது எப்போதோ, எழுத்தை என் இன்னுயிராக கருதி, என் ஸ்வாசமே இதுதான் என்றுணர்ந்து  வாழ்ந்த போது,  எழுத்துக்கு கொஞ்சமும் நான் பழக்கமாகாமல்,  இல்லை, என்னிடம் எழுத்துக்கள் வசமாகாமல் தடுமாறிய போது
பித( இய) ற்றியதுதான்.... 

இருப்பினும் உள்ளச் சுழற்றலில் சுற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்த இப்போதைய  எண்ணங்கள்  மறுபடியும் அதை வெளி வர வைத்து விட்டது. 
க(அ) சட்டுக்கவி என்று இதை புறந்தள்ளாமல்,  பொறுமையாக படித்துப்பார்க்கும் நட்புறவுகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

30 comments:

  1. ஆஆஆ மீதான் 1ஸ்ட்டூ.. தற்செயலாக கொம்பியூட்டர் வந்து, பல போஸ்டுகள் வந்திருப்பதைக் கண்டு களம் இறங்கிட்டேன் கொமெண்ட்ஸ் போட..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் தந்திருப்பது மிகவும் மகிழ்வாக உள்ளது. நீங்கள் தற்செயலாக வந்ததும், படைத்தவனின் கட்டளை போலும். ஹா ஹா ஹா. இல்லையென்றால் இந்தப் பதிவுக்கு "இன்று சனி, ஞாயறு என்பதினால் தாங்கள் வர இயலாது போய் விடுமோ" என நினைத்தேன். ஆனால் நீங்கள் முதலில் வந்து தந்த கருத்துக்களை பெற்ற சந்தோஷத்தை அடைந்து விட்டேன். அதற்கு நான் உங்களிருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. kஅவிதை.. கற்பனை நன்றாக இருக்கிறது..

    //மழையால், மழைக்கென்ன பயன்?

    ஒளியால் ஒளிக்கென்ன பயன் ?///

    கேள்வி நன்றாக இருக்குது.. இதைப்பார்த்து எனக்குள்ளும் பல கேள்வி வருது:)..

    மனிதனின் இறப்பு மரணம் என்பதைப்போல, முகிலின் இறப்பு மழை எனக் கொள்ளலாமோ?:)...

    ஒளியால், ஒளிக்கு என்றும் கர்வமாக இருக்கும் என நினைக்கிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை ரசித்துப் படித்தமைக்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

      /கேள்வி நன்றாக இருக்குது.. இதைப்பார்த்து எனக்குள்ளும் பல கேள்வி வருது:)..

      மனிதனின் இறப்பு மரணம் என்பதைப்போல, முகிலின் இறப்பு மழை எனக் கொள்ளலாமோ?:)...

      ஒளியால், ஒளிக்கு என்றும் கர்வமாக இருக்கும் என நினைக்கிறேன்/

      தங்கள் கருத்துக்களை ரசித்தேன். அதனால்தான் வானத்தில், கூடும் முகிலின் மழை இறப்பிற்குப் பின் முகிலும் காணாது போய் வுடுகிறதோ?

      ஒளிக்கு கர்வம் வரும் போது வெளிச்சம் அதிகமாகி கடைசியில் தன் இயல்பான வெளிச்சத்தையும் தவற விடுகின்றதோ? (உ. த. வெடி, வீட்டிலே ஒளிரும் மின் விளக்குகள்.) உங்களுக்கு நல்ல கற்பனை. பாராட்டுகள்.

      உங்கள் வரிகளை படித்ததும், "முகிலினங்கள் அலைகின்றதே..
      முகவரிகள் தவறியதால்..
      முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ..
      அது மழையோ.." என்ற அருமையான பாடல் நினைவுக்கு வந்தது. கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அற்புதமான வார்த்தை ஜாலங்கள் சகோ
    கவிதையை மிகவும் ரசித்து படித்தேன்.

    //இல்லாத அதை தேடுவதை விடுத்து,
    உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு//

    மிகவும் அருமையான வரிகள்
    வாழ்த்துகள் தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஏதோ.. எனக்கு தெரிந்த அளவு எழுதி(உளறி)யதை நன்றாக உள்ளதென பாராட்டி வாழ்த்துக்கள் தந்ததற்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      தங்களைப் போன்றவர்களின் ஊக்கமிகு கருத்துரைகள் எனக்கு மிகுந்த மன ஆறுதலை தருகிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அருமை.   நன்றாக சிந்தனை செய்கிறீர்கள்.  ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தேன்.

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி என்பதுபோல இருக்கும் பொருள் / திறமை விட்டு இல்லாத பொருள் / திறமை தேடி அலைகின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் அன்பான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி. இருமுறை படிக்கும் அளவிற்கு நன்றாக உள்ளது என்று கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      ஆம்.. இது மனித இயல்புகளில் ஒன்றானாலும், நம்மிடம் இருக்கும் ஒன்றை கண்டு சந்தோஷம் அடையாமல், பிறரிடம் இருப்பதையே தேடி அடைய நினைத்து வாழ்நாட்களை துன்புறுத்திக் கொள்கிறோம். தங்கள் கருத்து உண்மைதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. //உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
    அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
    இல்லாத அதை தேடுவதை விடுத்து,
    உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!//

    அது போதும்.
    அருமை அருமை.
    மிக அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    எழுதுங்கள் கவிதைகளை அடிக்கடி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை நன்கு ரசித்து நல்லதொரு கருத்துக்களை தந்தமை கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

      உங்களின் உற்சாக கருத்துக்கள் என் எழுதும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

  6. மிக இயல்பான தமிழில் அருமையான எண்ணங்களைக் கவிதையாகப்
    பொழிந்திருக்கிறீர்கள். மனம் நிறை பாராட்டுகள்.

    காளிதாசனிலிருந்து கண்ணதாசன் வரை பிதற்றியதால் தான் நமக்கு நல்ல கவிதைகள் கிடைத்தன.Dear Kamala.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

      /காளிதாசனிலிருந்து கண்ணதாசன் வரை பிதற்றியதால் தான் நமக்கு நல்ல கவிதைகள் கிடைத்தன/

      உண்மைதான் சகோதரி. ஆனால் அவர்கள் எங்கே... நான் எங்கே.. மலைக்கும், மடுவுக்குமான வேற்றுமை.. ஹா. ஹா. ஹா.

      தங்களது அன்பான கருத்துகள் என் எழுத்துக்களுக்கு பக்க பலமாக, ஒரு சிறந்த உரமாக இருந்து உதவுகிறது. இதற்கு உங்களுக்கு என் பணிவான நன்றிகள் சகோதரி. தங்கள் அன்பான வருகை எனை ஆனந்தமடையச் செய்கிறது. வரவுக்கும், அன்பான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
    அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
    இல்லாத அதை தேடுவதை விடுத்து,
    உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!....


    ஆஹா என்ன அழகிய வரிகள் கமலா அக்கா....

    மிக சிறப்பு...

    பல வரிகள் அர்த்தம் மிக அதிகம் இரு முறை படித்து ,புரிந்து ,ரசித்தேன்.....

    வாழ்த்துக்கள் அக்கா...




    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை இருமுறை படித்து ரசித்து சிறப்பாக உள்ளதென பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் ஏதோ சாதாரணமாகத்தான் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் திறமைக்கு முன் நான் மிகவும் சாதரணமானவள். இருப்பினும் உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்பான பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மிக இயல்பான தமிழில் அழகான வார்த்தைகளுடன் நல்லதொரு தத்துவார்த்தமான கவிதையைக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதோடு என்ன சொல்ல வேண்டுமோ என்பதை நன்றாகப் புரிந்து கொண்டும் எழுதி இருக்கிறீர்கள். எழுதுவது உங்களுக்குக் கை வந்த கலையாக உள்ளது. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள். இதைப் பிதற்றல் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தக் காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறீர்கள் எனில் உங்கள் சிந்தனையின் ஆழம் நன்றாய்ப் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எப்படியோ வசன கவிதையாக நான் எழுதுவதையும் படித்து கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியது எனக்கு மகிழ்வாக உள்ளது சகோதரி. இருப்பினும் உங்களிடமிருந்தெல்லாம் நான் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நீங்கள் கணினியில் நிறைய வேலைகள் செய்து மின்னூல் பணிகள் எல்லாம் செய்கிறீர்கள். எனக்கு அது எப்படி எனத் தெரியவில்லை. முடிந்தால், அதை எப்படி செய்ய வேண்டுமென என எனக்கு விளக்க முடியுமா? கைப்பேசியில் சாத்தியமாகுமா? தங்கள் அன்பான கருத்துகளுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. Shrinivasan T நானாக மின்னூல் வெளியிடுவதில்லை, கமலா. நண்பர் ஒருவர் ஸ்ரீநிவாசன் என்பவர் க்ரியேடிவ் காமன்ஸ் என்னும் இணைய தளம் சார்பாக மின்னூல்கள் வெளியிடுகிறார். அவர் மூலமே வெளியிடப்படுகின்றன. நான் உங்களுக்கு அவருடைய இமெயில் ஐடியைக் கொடுக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். வேண்டிய உதவிகள் செய்வார். கொடுத்திருக்கும் இமெயில் ஐடியில் உள்ள நபரைத் தொடர்பு கொண்டு உங்கள் தேவையைச் சொல்லவும். ஆவன செய்வார். நன்றி.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      அனைத்தும் விபரமாக கூறியமைக்கு மிக்க நன்றிகள். குழந்தைகள் உதவியுடன் முயற்சி செய்து பார்க்குறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. "வேதனையை திரியாக்கி வெறுப்பென்ற எண்ணை ஊற்றி....சிரிக்கலானான் '
    பலரும் புலம்புவதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை ரசித்து படித்து அழகாய் கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் மகிழ்ந்தேன். உங்கள் கருத்துரைகள் என் எழுத்துக்கு பலமாக இருந்து உதவுகிறது. தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துகளுக்கும் என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது

      தங்கள் கருத்துக்கள் முதலிருந்தே என் எழுதும் ஆர்வத்தை அதிகப்படுத்த உறுதுணையாய் இருந்து வருகிறது. தங்கள் அன்பான பாராட்டிற்கு மிகுந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. பாயாசத்தில் முந்திரியாய் இடையிடையே வந்து விழுந்த உவமைகளும் சொற்றொடர்களும் தங்கள் சிந்தனைச் செழுமையைப் பறைசாற்றுகிறது..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் இயல்பான உவமானத்துடன் பதிவுக்கு வந்து தந்த கருத்துக்கள் என்ன பெருமகிழ்ச்சி அடையச் செய்கின்றன. பதிவை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்திருப்பதற்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      நான் சற்று தாமதமாக பதில் தந்திருப்பதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. //Yaathoramani.blogspot.com February 4, 2020 at 9:09 AM
      பாயாசத்தில் முந்திரியாய் இடையிடையே வந்து விழுந்த உவமைகளும் சொற்றொடர்களும் தங்கள் சிந்தனைச் செழுமையைப் பறைசாற்றுகிறது..வாழ்த்துகள்//

      ஆஹா, அதே....அதே.... அடியேன் சொல்ல நினைத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ததாஸ்து.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆஹா, அதே....அதே.... அடியேன் சொல்ல நினைத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ததாஸ்து./

      பதிவை ரசித்து அழகான கருத்திட்டதற்கு நானும் மிகவும் மன மகிழ்வடைந்தேன். தங்கள் ஊக்கமிகும் கருத்துக்கள் என் எழுத்தை செம்மையாக்கும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அருமை கமலா! கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கொஞ்சம் பிசியாக இருந்ததால் பதிவுகளுக்கு வர முடியவில்லை.   

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாமதத்திற்கு வருந்த வேண்டாம். தாங்கள் எப்போது வந்து கருத்து தெரிவித்தாலும் எனக்கு மகிழ்வாகதான் உள்ளது. பாராட்டுக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. நல்ல கவிதை. ஒளியால் ஒளிக்கென்ன பயன்? உண்மைதான். இன்று மீண்டும் பிறந்துவிட்டேன். தொடருங்கள், தொடர்வோம்...

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் வந்து பதிவை படித்து தந்த அருமையான பாராட்டுகளுக்கு மனமுவந்த நன்றிகள். நானும் இனி தங்கள் பதிவை தொடர்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete