Friday, December 28, 2018

சொ(நொ)ந்த கதை


பழமொழிகள் பெரும்பான்மை நம் வாழ்வில் என்றுமே  உண்மையானதாக நடந்தேறி விடும். ஒன்றை அறியாமல் செய்யும்  போது  நாம் அறிந்த அதற்கு பொருத்தமான பழமொழிகளை சுட்டிக் காண்பிப்பதும் நம் வாடிக்கை.

அது மாதிரி "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி." .. "நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்." "ஆசைதான் அழிவுக்கு காரணம்". இதெல்லாம் நம் செய்கைக்கு மாறாக ஏதாவது நடக்கக் கண்டு நமக்குள் எழும் பழமொழிகள். இன்னும் இதைப் போல் நிறைய இருக்கும். அவையெல்லாம் சட்டென நினைவின் அப்பாலுக்கு சென்று விடுகிறது.

25ம் தேதி மாலையன்று கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான (பலசரக்கு) சாமான்களை வாங்கி கொண்டு வரலாமென நாங்கள் அனைவரும் குழந்தைகள் புடைசூழ கிளம்பினோம். இரவு சாப்பாட்டுக்கு அப்படியே கடை அருகில் ஒரு புது உணவகம் உள்ளது. (அது என்னவோ பழைய உணவகந்தான்.! நாங்கள் இன்னமும் அதனுள் நுழையவில்லை. அதனால் அது இன்னமும் புதுசு.) அங்கேயே ஏதாவது இட்லி, தோசை என முடித்து விடலாம் என தீர்மானத்தோடு புறப்பாடு.

நான் பொதுவாக இந்த மாதிரி விடுமுறை நாட்களில், அவர்கள் (இளைய தலைமுறைகள்) வெளி கிளம்ப முடிவெடுத்தால், அவர்களுக்கு ஏதாவது பிடித்த மாதிரி சாப்பிட்டு விட்டு போகட்டும்.! நமக்கு சாதம் போதுமென்று இருந்து விடுவேன். இல்லையெனில், சப்பாத்தி ஏதாவது வாங்கி வரச் சொல்லி அன்றைய தின இரவு கச்சேரியை இனிதாக முடித்து விடுவேன்.

ஆனால் அன்றைய தினம் ஆசை வென்றது. "திங்க" ஆசை... "வாரந்தோறும் எ. பிக்கு சென்று "திங்க"ப்பதிவை ஒழுங்காய் படித்து சுவைத்தால் மட்டும் போதாதா? அப்படியென்ன  "திங்க "ஆசை உனக்கு?" என என் மனசாட்சி ஒரு கிலோ அரிசியை இடி இடியென்று இடித்து மாவாக்கிக் கொண்டிருக்கிறது. ( இப்படி இடித்தால் போதாது.. அரிசியில்லாமலே உன்னை இடித்து வலியை உணரச் செய்ய வேண்டுமென்று இடையிடையே வசவு வேறு.) போகட்டும்..! எத்தனை இடிகள் கொடுத்தாலும், ஆசை நின்று ஜெயிக்கும் என்ற உண்மை அதற்கு தெரியாததா?

விஷயம் என்னவன்றால்,  கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வைத்தோம். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று திரும்பிய மகன் பில்லை செட்டில் பண்ணி முடிக்க, நான் கடைக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து விட்ட என் பேத்தியை தூக்கியபடி வெளியில் படி இறங்கினேன்.  விக்கிரமாதித்தியன்  சிம்மாசனபடிகள் மாதிரி, நான் கால் வைத்த இரண்டாவது படி என்னைப் புறக்கணித்து உதறி விட நானும் மிச்சமுள்ள படியை உதாசீனம் செய்தபடி கடைசி படியில் தஞ்சமடைந்தேன். நல்லவேளை..! குழந்தையை இறுக பிடித்தபடி கீழே  வந்து அமர்ந்து விட்டதால், அவளுடைய தூக்கந்தான் கலைந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் என் வலது காலை இரண்டாவது படி பதம் பார்த்து விட்டதில் கடும் வலி பாதத்தில் தோன்றி விட்டது. கூட்டம் கூடியதால் அவமானம் தாக்க வலியை பொருட்படுத்தாது எழுந்து அமர்ந்தேன். அந்த வேண்டுதல் இல்லா உருளல் கடையில் மேலும் ஒரு சாமனை கூடுதலாக வாங்க வைத்தது.  அதுதாங்க  வலி நிவாரணி..! இப்ப என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த "அயோடக்ஸ்" அதுவும் "ஐ (அ) யோ பாவமே" ன்னு "டக்"நடை போடாமல் "ஸ்" என்று வேகமாக என் கையில் வந்து விழுந்தது. அதனின் அன்றைய விதி கடையிலிருப்பது அதற்கு கடைசி நாளானது.

நான் எப்போதுமே  பாட்டி வைத்தியத்தில் நம்பிக்கை கொள்பவள். எனவே அதிக வலியென்று காட்டிக் கொண்டால், மருத்துவமனையை சந்திக்க நேருமென்ற பயத்தில்., பல்லை கடித்தபடி, காலை இழுத்தபடி கூட வந்த அனைவரிடமும் கண்ணிலும் வலியை காட்டாது, கொஞ்சம் நடந்து சென்று, அந்த புது உணவகத்தில் இரண்டு இட்லிகளை விழுங்கி வைத்து வீடு வந்து சேர்ந்தோம்.  அதான் "திங்க"ஆசை. அவஸ்த்தை படுகிறாய்...! இப்ப ஜென்ம சாபல்யம் ஆயிற்றா?" என மெளனத்தில் விளையாடும் மனசாட்சி நிறையவே குத்தி காண்பிக்க, கால் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையை காண்பிக்க தூக்கம் வெகுவாகவே தொலை தூரமானது. அப்போதுதான் வலியை மறக்க அந்த பால் பாக்கெட் கதையை கையில் எடுத்தாளவும் வேண்டியதாகி விட்டது. பதிவை வெளியிட்ட பின்னரும் கால் வலி அன்றைய இரவு தூக்கத்தை தொலைவிலேயே வைத்திருந்தது. மணி மூன்றுக்குப்பின் சற்று கண்ணயர்ந்தேன். (மறுநாள் நான் போட்ட அன்றைய பதிவுக்கு வந்த மறு மொழிகளுக்கு கூட உடனடியாக நன்றி தெரிவித்து என்னால் பதிலளிக்க முடியவில்லை. விரைவில் அளிக்கிறேன்.)

காலை எழுந்தவுடன் மூன்றெழுத்து, முன்னதாக நின்றபடி அழைக்க அப்பமாக இருந்த கால் இப்போது மேலும் இரண்டு நாள் மூன்றெழுத்துடன் பயணித்ததில், கஜேந்திரன் காலாக மாறியுள்ளது. மேற்கொண்டு எப்படியாகுமென விளக்க நான் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமோ? இல்லை, இந்த வருடத்திற்குள் உன்னை ஒரு வ(லி)ழியாக செய்கிறேன் என கங்கணம் கட்டிக் கொணடிருக்கிறதோ என்  விதி தெரியவில்லை...! ஒரு இரண்டு நாள் பொறுத்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். இப்போது புரிகிறதா? ஏன் பழமொழிகளின் தாக்கத்தை சுட்டி காட்டினேன் என..! எனவே நடக்க வேண்டியவைகள் நடந்துதான் தீரும். (ஆனால் என்னால்தான் வீட்டுக்குள்ளேயே  வலது கால் ஊன்றி நடக்க இயலவில்லை.) என்னவோ "பகிர்ந்து கொண்டால், மன பாரம் குறையும்" என்ற புதுமொழிப்படி  இந்தப்பதிவும் உருவாகி விட்டது.

பி. கு
"எப்படியெல்லாம் ஒரு பதிவை தேத்துறாங்க "என நீங்கள மனதில் நினைப்பதற்குள், உண்மையிலேயே இந்த வருட முடிவுக்குள், அதுவும் இந்த இறுதி மாதத்தில் ஒரு நாலு பதிவாவது போட வேண்டும் என நான் நினைத்ததுதான் இந்த பதிவுக்கான காரணம். (அப்போ அட ராமா. .! இன்னொரு கண்ராவி வேறே இருக்கா?) முணுமுணுப்பு கேட்கிறது.. பொறுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.!
           
                   வலையுலக பதிவர்களுக்கு
                   அழகுக்கு அழகு செய்வது                           
                 பொறுமையெனும் நற்குணமே..!


52 comments:

  1. ஹா ஹா ஹா வலி இருந்தா இருந்திட்டுப் போகுது:) போஸ்ட் ரொம்ப நகைச்சுவை:) ஆகிட்டுது:)... இதைத்தான் “ துன்பம் வரும்போதுசிரிங்கோ” என்பதன் அர்த்தமோ ஹா ஹா ஹா...
    உங்கட கஜேந்திரன் காலைப் படிக்க மீண்டும் வருகிறேன் இப்போ த்றீ லேட்டாகிட்டுது:)...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். "இடுக்கண் வருங்கால் நகுக" என நமக்கு வள்ளுவனார் சொல்லியிருக்கிறாரே.! இந்த வரியையும் பதிவில் இணைத்துப் போடனும் என நினைத்துக் கொண்டேயிருந்தேன். நேற்றிருந்த வலி அளித்த துன்பத்தில் அது என் நினைவை விட்டுப் போய் விட்டது. நினைவு படுத்தியமைக்கு நன்றி. என்ன செய்வது? இந்த மாதிரி நகைச்சுவையாக பேசினால் துன்பத்தின் கரடு முரடான பாதையை சுலபமாக கடக்கலாம் என நினைக்கிறேன். எப்போதும் இது கை தருமா என்றால் சந்தேகம்தான்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. // அது என்னவோ பழைய உணவகம்தான்... நாங்கள் போகாததால் புது உணவகம்...//

    ஹா.. ஹா... ஹா... அதானே? சரிதான் நீங்கள் சொல்வது!

    எங்கள் வீட்டிலும் வார இறுதிகளிலோ மற்ற சமயங்களிலோ மகன்கள் வெளியில் "திங்க" ஆசைப்படும்போது நானும் இணைந்து விடுவேன்!! திங்க ஆசை அதிகம் எனக்கு. சாப்பாட்டுராமன்!!! பாஸ் வீட்டில் ஒருவாய் மோர்சாதத்துடன் அமைதியாகிவிடுவார்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உண்மையில் ஸ்ரீராம் நாங்களும் சாப்பாட்டில் வஞ்சகம் செய்வதில்லை:)).. பிறகு எதுக்காக வாழ்கிறோம் உழைக்கிறோம்?:).. சாப்பாட்டில மட்டும் கட்டுப்பாடு வைக்கக்கூடாது இதுதான் எங்கட வீட்டுக் கொள்கை:)

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும், இங்கு வந்த புதிதில் என் மகன்கள் அந்த உணவகத்தில் அது நன்றாக இருக்கும், இது நன்றாக இருக்கும் என ஆசை காட்டும் போது, ஆசை பட்டு அவர்களுடன் சரியென கிளம்பி விடுவேன். (ஆனால் என் கணவர் எங்கு வந்தாலும் இட்லி தோசைதான் சாப்பிடுவார்.) அதன் பின் எனக்கு வயிறு ஒத்துக் கொள்ளாமல், போக நேர்ந்தால் இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.( சுக்கு, மிளகு, இஞ்சி) இங்கு வந்த பின்தான் வெளியில் சாப்பிடும் ஆசை வந்து விட்டது. திருமங்கலம் வரை எப்போதும் வீட்டின் தயாரிப்புத்தான்.

      தங்கள் பாஸின் மன திருப்திக்கு பாராட்டுக்கள். அவரை மாதிரி ஆசை கொள்ளாமல் இருந்தால் வரும் துன்பத்திலிருந்து விலகி நிற்கலாம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் அதிரா சிஸ்டர்

      தங்கள் வீட்டு கொள்கையைதான் இங்கு எங்கள் மகன்களும் வலியுறுத்துவார்கள்.
      எப்போதும் சாதமா? விடுமுறை நாட்களில் ஒரு வேளையாவது வெளியில் சாப்பிடலாம் என்பார்கள். அப்போதெல்லாம் முக்கால்வாசி அவர்கள் நண்பர்களுடன் சனி, அல்லது ஞாயறில் வெளியில் சாப்பிட சென்று விடுவார்கள். எப்பவாவது நாங்களும் இப்படி சேர்ந்து கொள்வோம்.

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நானும் அப்பூடித்தான்...யாராவது கூப்பிட்டால் உடனே கிளம்பிடுவோம்ல...வீடாக இருந்தாலும் சரி, ஹோட்டலாக இருந்தாலும் சரி....திங்க என்றால் கிளம்பிடுவோம்ல ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
    5. // அது என்னவோ பழைய உணவகம்தான்... நாங்கள் போகாததால் புது உணவகம்...//

      ஹா.. ஹா... ஹா... அதானே? சரிதான் நீங்கள் சொல்வது!//

      ஸ்ரீராம் நானும் இதையேதான் நினைத்தேன் வாசிக்கறப்ப.."அதானே" என்று தோன்றியய்து.....உங்க கமென்ட் பார்த்துட்டேனா ஸோ அதையே டிட்டோ...ஹிஹி

      கீதா

      Delete
    6. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      அட.! நீங்களும் நம்ம கட்சிதானா.! சந்தோஷம்.. வீட்டில் நாமே செய்து, நாமே செய்ததினால், வீணாக்க மனமின்றி சாப்பிட்டு,சாப்பிட்டு அலுத்துப் போன நாக்குக்கு, வெளி விருந்தோம்பல் என்றால் குஷிதான் வந்து விடுகிறது. அதன் பின் இந்த மாதிரி அவஸ்தைகள்... ஹா ஹா ஹா

      ரசித்து படித்து கருத்திட்டமைக்கு என் நன்றிகள். தாங்கள் வந்தது எனக்கு மனபலம் கிடைத்ததோடு இன்னொரு காரணத்துக்காகவும் தங்களை அழைத்தேன். பாருங்கள்.! இந்த பதிவில் நான் கமெண்ட்ஸில்"அரைசதம்" வாங்கி விட்டேன்.எனக்கு இது பெரிய விஷயந்தான் இல்லையா? அதற்கும் உங்களுக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அடடா... விழுந்து விட்டீர்களா? அதை இவ்வளவு நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுத்து நன்றாக கைவசப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் ஸ்ரீராம், ஆனா கதை எழுதி எ பு க்கு அனுப்ப மட்டும் பயப்படுறா:).

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      ஆமாம், ஆமாம் படி சறுக்கி "கால் வசப்படாமல்,"தான் விழுந்து விட்டேன். அங்கேயே சற்று கூட்டம் கூடியதும் அவமானமாக போய் விட்டது. நல்லவேளை.! குழந்தைக்கு அடிபடாமல் தப்பியது. நகைச்சுவை மன பாரத்தை குறைக்கும் மருந்து அல்லவா..நானே ஒரு மன மாற்றதிற்காக வெளியில் சென்றேன். சென்றவிடத்தில் இப்படி.. அந்த கடையின் பெயர் "ஹேப்பி ஹோம்." கீழே விழுந்து தாள முடியாமல் வலி வந்தவுடன், ஐயோ.! வீட்டிலேயே இருந்திருந்தால் "ஹோமே ஹேப்பியாக" இருந்திருக்குமே எனத் தோன்றியது. எதுவுமே"பட்ட பின்தானே புத்தி வரும்". தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
      தங்கள் அனைவரின் பாராட்டுகள் வலி ஆற்றும் மருந்தாக உள்ளது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் அதிரா சிஸ்டர்

      எ.பிக்கு நிறைய கதைகள் எழுதி அனுப்பத்தான் ஆசை. ஆனால் அங்கு வரும் மலையத்தனை கதைகளுக்கு முன் நான் எழுதுவது சிறு துகள். அப்படியும் இரு கதைகளை அனுப்பினேன். அதையும் கதைகள் என ஏற்று பிரசுரித்த சகோ ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதையும் ஒரே குடும்பமாக இருக்கும் எ. பி வாசகர்கள் படித்துப் பாராட்டியது பெரிய விஷயம். இனியும் என்னால் முடிந்த கதைகளை எழுதி அனுப்புகிறேன்.

      நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. அவ்வப்போது கதை புதிதாக எழுதி அனுப்புங்கள். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      தங்களது நம்பிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ. என் மீது கொண்ட நம்பிக்கை பலத்தில் நானும் எழுதும் திறனை அதிகப்படுத்தி கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. ஆமாம் ஸ்ரீராம் அதிரா சொல்லிருப்பதை நானும் அப்படியே வழி மொழிகிறேன்...எபிக்கு கதை எழுதி அனுப்புங்க கமலாக்கா நல்லா எழுதறீங்க..

      கீதா

      Delete
    7. வணக்கம் ஆர்.கீதா சகோதரி

      தாங்களும் என்மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளீர்கள். இந்த நம்பிக்கைக்கு நன்றிகள் சொல்லும் போது, தங்களின் ஊக்குவித்தல் என் மனோபலத்தை அதிகமாக்குகிறது என்பதையும் கூறிக் கொள்கிறேன். கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வலிமாத்திரை போடமாட்டீர்களோ... போட்டிருந்தால் வலி குறைந்து கொஞ்சமாவது தூங்கி இருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      எனக்கு பொதுவாக வலி நிவாரண மாத்திரைகள் சைட் எபெக்டை உருவாக்கித் தருகின்றன. ஒரு தொந்தரவு அகன்று மறு தொந்தரவாக.. அதற்கு மறுபடியும் வேறு மாற்று மருந்து என டாக்டரிடம் செல்லவே அஞ்சுகிறேன். இதைவிட வலியை இரண்டொரு நாள் பொறுத்து பார்க்கலாமென இருக்கிறேன். அன்று இரவு காலை கீழே வைக்கவே இயலவில்லை. விண் விணணென்று தெறிக்கும் வலி. இப்போது கால் ஊன்றி நடக்கத்தான் இயலவில்லை. மற்றபடி அயோடக்ஸ் தடவி வென்னீர் உபயோகித்ததில் தெறிக்கும் வலி குறைந்துள்ளது.

      விசாரித்தமைக்கு மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வலி மாத்திரை ஒவ்வாத பட்சத்தில் ஊசியாக போட்டுக் கொண்டிருக்கலாம்.

      Delete
  5. வீங்கி இருக்கிறது என்றால் எக்ஸ்ரே எடுத்துக் பார்ப்பது அவசியம். பிராக்சர் சான்சை ரூல் அவுட் செய்து கொள்ளவேண்டும். அதுவும் காலா காலத்தில் செய்வது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கால் பாதம் முழுவதும் வீங்கித்தான் உள்ளது. வீட்டிலுள்ளவர்களும் டாக்டரிடம் செல்லத்தான் சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் அனைவருக்குமே மார்கழி பனியில் ஒவ்வொரு உபாதைகள். இடையில் நான் வேறு என் தொந்தரவை வெளிக்காட்டி அவர்களை கஸ்டபடுத்த வேண்டாமேயென்று வலி பொறுத்துக் போகிறேன். எனக்கு ஏற்கனவே டாக்டரிடம் செல்வது பயம். ஹா ஹா ஹா ஹா.அது வேறு.. (இடையில் பெருந்தன்மையான எண்ணங்கள்) வலி குறையாமல், வீக்கமும் இருந்ததென்றால், குழந்தைகளால் வரும் விடுமுறையான இரு தினங்கள் டாக்கரிடம் செல்ல நான் நிர்பந்திக்கப் படுவேன். என்ன செய்வதோ? பார்க்கலாம்.

      விபரமாக கூறி விசாரித்தமைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. //காலை எழுந்தவுடன் மூன்றெழுத்து, முன்னதாக நின்றபடி அழைக்க அப்பமாக இருந்த கால் இப்போது மேலும் இரண்டு நாள் மூன்றெழுத்துடன் பயணித்ததில்,//

    இந்த வரிகளை டீகோட் செய்ய முடியவில்லை!!!! விளக்குங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      மூன்றெழுத்து. ஹா ஹா ஹா மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். பாடல் நினைவுக்கு வருகிறது. எல்லோருக்குள்ளும் இருப்பது அதுதானே! (உயிர்)

      என் முன்னதாக நின்றது "கடமை" என்ற அந்த மூன்றெழுத்துதான். காலையில் காஃபி பில்டரே கிச்சனில் நான் காணவில்லையே என வழி மீது விழி வைத்து எதிர்பார்க்கும். அப்போ காஃபி குடிப்பவர்கள் (என்னையும் சேர்த்துதான்) எப்படி எதிர்பார்ப்பார்கள்? அப்படி ஆரம்பிக்கும் அந்த கடமைகளின் தொடர்ச்சியோடு நாள் முழுவதும் பயணித்ததில் கால் பூரித்து சந்தோஷம் அடைந்து விட்டது.இப்போது வலி வேறு இரவு தூக்கமில்லாமல் பதிவுகளையும், கமெண்டுகளையும் போட வைக்கிறது.
      பொதுவாகவே என் எழுதும் நேரம் அதுதான். அப்போதுதான் கடமைகளிலிருந்து விடுவிக்கப் பட்டவளாவேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஓ... இப்போது புரிந்தது. மற்றவர்கள் யாரும் என்னை மாதிரி கேட்கவில்லை என்பதால் அவர்களுக்கு முன்னரே புரிந்திருக்கிறது.

      Delete
    3. ஹிஹிஹிஹி ஸ்ரீராம் எனக்கும் புரியலை மூன்றெழுத்து!! அது என்ன என்று கேட்க நினைச்சிருந்தேன் நீங்க கேட்டு பதிலும் வந்துருச்சுன்றதுனால கேக்கலை ...

      கீதா

      Delete
    4. தி/கீதா, எல்லாப்ப்பதிவுகளிலும் உலாத்துகிறார். வையாளி சேவை பார்க்க வரவே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

      Delete
    5. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      மூன்றெழுத்து தத்துவம் புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி. தங்களை காணவில்லையே என சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் வருத்தப்படுகிறார். அவர் எளிதாக எல்லா பதிவுகளிலும் "சதம்" அடிக்கும் திறமைசாலி.. . நான் "அரைசதமாவது" தேற வேண்டி சென்னை எ.பியில் உலாத்திக் கொண்டிருந்த தங்களை கையோடு பிடித்திழுத்து வந்திருக்கிறேன். ஸ்ரீரங்கம் செல்லும் போது மறவாமல், இந்த காரணத்திற்காகத்தான் முன்னதாக அங்கு என்னை இழுத்துச் சென்றிருக்கிறார் என கூறி விடுங்கள்.. ஹா ஹா ஹா ஹா..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. தங்களது கால்வலி அடுத்த வருடமும் தொடராமல் இந்த வருடத்துக்குள் நிவாரணி அளித்து முடித்து விடுங்கள்.

    பதிவு சுவாரஸ்யம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      தங்களுடைய ஆறுதல் தரும் விசாரிப்புக்கு மிகவும் நன்றி. தங்கள சொல்படி வரும் வருடம் தொடராமல், 31 க்குள் குணமாகி விட்டால் நல்லதுதான்.

      சுவாரஸ்யமான பதிவு என்ற பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      "விரைவில் குணமடைய வேண்டுகிறேன்"
      தங்களுடைய மனப்பூர்வமான வேண்டுதலுகளுக்கு என்மனம் நிறைவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. உங்கள் கால்வலி விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள். சில சமயங்களில் இப்படித் தான் நம்மையும் அறியாமல் வழுக்கி விடுகிறது. என்னதான் கவனமாக இருந்தாலும் இம்மாதிரி நடப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள். ஏர்லைன் ஃப்ராக்சர் என்றால் கூட வீங்கும்! வலியும் பொறுக்க முடியாது. தள்ளிப் போடாமல் உடனே கவனிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். தாங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி. சில சமயங்களில் நாம் எப்படித்தான் கவனமாக இருந்தாலும் நடப்பது நடந்துதான் முடிந்து விடுகிறது. ஒன்றும் செய்ய இயலவில்லை. அதைதான் விதியென்றும், நேரமென்றும் சொல்கிறோம்.

      தங்களின் அக்கறையான கருத்துகளுக்கு மிகவும் நன்றி சகோதரி. விழுந்த அன்று இரவு முழுவதும், மறுநாள் முழுதும் வலியும், வீக்கமும் அதிகமாக இருந்தது. நேற்றிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை எனறு கூறலாம். வேலைகள் எதுவும் செய்யாது காலை நீட்டியபடி படுத்துறங்கும் இரவில் வீக்கம் கொஞ்சம் வடிகிறது. ஆனால் பகலில் அப்படி இயலாதல்லவா! மேலே சகோ ஸ்ரீராம் அவர்களுக்கு கூறிய பதிலை போல கடமை கட்டி இழுக்கிறதே.. ஒரே வயதையொத்த மூன்று குழந்தைகள். அவர்களை காலையிலிருந்து இரவு உறங்கும் வரை ஆகாரம் கொடுத்து விஷமங்களுக்கு ஈடுகொடுத்து, (இல்லை, அவர்களுக்குள் வரும் விஷமங்களை தடுத்து) அவர்களுடன் ஓடியாடி பார்த்துக் கொள்வது பெரிய விஷயம். அதனால்தான் பொதுவாகவே தங்களுக்கெல்லாம் பதிலளிக்கவே எனக்கு தாமதமாகிறது. அவர்கள் உறங்கும் பொழுதில், அவர்களை என்னை தவிர்த்து வேறு யாராவது பார்த்துக் கொள்ளும் தருணத்தில், என்ற சமயம் பார்த்து பதில் கூறுகிறேன். மன்னிக்கவும்.

      தங்களின் ஆலோசனைகளை ஏற்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. விரைந்து குணமாகட்டும்..... எனக்கு "பட்ட காலிலே படும்.." பழமொழி நினைவில் வந்தாலும் துன்பம் தொலைந்து போகும் என்பதும் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. இன்பமோ துன்பமோ யாருக்கும் நிரந்தரமில்லைத்தானே நெல்லைத்தமிழன்... எல்லோருகும் எல்லாம் வந்து போகும்.. அப்படி துன்பம் வரும்போது, அதையும் நகைச்சுவையாக்கிட்டால் துன்பம் நம்மிடம் தோற்றுப் போகும் ஹா ஹா ஹா:)..

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகுந்த நன்றிகள்.

      "எனக்கு "பட்ட காலிலே படும்.." பழமொழி நினைவில் வந்தாலும் துன்பம் தொலைந்து போகும் என்பதும் நினைவுக்கு வந்தது."

      பழமொழி உண்மைதான்.. தங்கள் சொல்படி துன்பம் தொலைந்து போகட்டும். அடுத்தடுத்து இரு பழமொழிகளையும் இணைத்து நேர்மறையாக பிரார்த்தனை செய்து கூறியமைக்கு மிக்க நன்றி... கொஞ்ச மாதங்களாவே இந்த "பட்ட காலிலே படும்" என்ற பழமொழி எங்கள் வீட்டில் அனைவரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி விட்டு சந்தோஷமடைகிறது. விதிக்கு என்னவோ அவ்வளவு மகிழ்ச்சி.. நாங்களும் விடாமல் நேர்மறை எண்ணங்களுடன் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு வலியை மறந்து விட முயற்சிக்கிறோம். புது வருடம் அனைவருக்குமே இனிதாக அமையட்டும்.

      ஆமாம்... எனக்கு "படாத காலில் அல்லவா பட்டு இருக்கிறது" ஹா ஹா ஹா ஹா .( நகைச்சுவை) இந்த வாக்கியம் விதியின் பார்வையில் பட்டு விட்டால், விரைந்தோடி வந்து பழமொழி யை உண்மையாக்கி விடப் போகிறது. தெரியாமல் எழுதி விட்டேன். (விதி மன்னிக்க.) ஹா ஹா.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இதுக்கும் நீங்க திங்க ஆசைப்பட்டதுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. வீட்டிலேயே இருந்திருந்தால் கூட இப்படி நடக்கும் வாய்ப்புகள் உண்டே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரீட்டு கீசாக்கா.. நமக்கு ஒன்று நடக்கோணும் என இருந்தால் நாம் கதவை லொக் பண்ணிட்டு ஒளிச்சிருந்தாலும் நடக்கும்.. அதனால ஒன்று நடந்தபின்பு, அதை எப்படித்தடுத்திருக்கலாம் என ஆராட்சி பண்ணி.. சேஎ..சே.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமோஒ என எண்ணி வருந்துவதெல்லாம் வேஸ்ட் ஒஃப் ரைம்:)... வந்துவிட்டது இனி என்ன அதுக்கான வைத்தியத்தைப் பார்த்து, இப்படி அதையும் கமலாக்கா போல என்சோய் பண்ணி சிரித்துக் கடப்பதே எனக்கும் பிடிச்சிருக்கு...

      “துன்பம் வரும் தான் , அதுக்காக அதுக்கு கதிரை போட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார வைக்கக்கூடாது”..

      Delete
    2. வணக்கம் சகோதரி

      அன்றைய தினம் எனக்கு வீட்டு சமையல் கடமைகளில் சற்று மனமானது சோம்பல் கொண்டது. அதன் விளைவே "திங்க"ஆசை தொற்றிக்கொண்டது. சாமான் வாங்குவது,இரவு சாப்பாட்டையும் முடிப்பது என ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக்க மனது விரும்பியது. அது எத்தனையோ முறை ஒத்து வந்திருந்தாலும், இந்த முறை காலை வாரி விட்டு விட்டது.

      நீங்கள் சொல்வது போல் எங்கிருந்தாலும் நடக்க வேண்டு மென்றால் நடந்துதான் தீரும். அப்படி கடந்த சில வருடங்களில் வீட்டிலேயே விழுந்து பல தடவைகள் சிறிதும், பெரிதுமான சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற விழு(ம்)ப்புண்களை சந்தித்திருக்கிறேன். இந்த வாய்ப்புகளை மோஸ்ட்லி எல்லோரும் தவற விட்டிருக்க மாட்டோம் என நினைக்கிறேன். ஹா ஹா..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. உண்மைதான் அதிரா.. வலியை நினைத்து நமக்கு இப்படி வந்து விட்டதே என கவலைப்படும் போது வலியும் அதிகமாகி நம்மை துன்புறுத்துகிறது. கொஞ்சம் அதிலிருந்து விலகி வேறு எண்ணங்களுடன் யோசிக்கும் போது அது பற்றி அவ்வளவாக தெரியவில்லை.

      ஆமாம் எங்கிருந்தாலும, நடப்பவை நடந்துதான் போகும். இதற்கும் எத்தனையோ கதைகள் உண்டு. நாம் படித்திருக்கிறோம். தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. கீதாக்கா சொல்லியிருப்பதை அப்படியே வழி மொழிகிறேன்...அதே நடக்க வேண்டும் என்றால் நடக்கும்...அதிரா சொல்லிருப்பதையும் நான் டிட்டோ செய்வேன் போஸ்ட்மார்ட்டம் செய்வதை விட கடந்து போயிடனும்தான்...அதில் கிடைக்கும் பாடத்தை மட்டும் மனதில் கொண்டு அவ்வளவே..

      கீதா

      Delete
  12. கமலா சிஸ்டர்.. நீங்க வலியை எப்படி ஓட ஓட விரட்டினீங்க என இன்னொரு போஸ்ட் போட்டிடுங்கோ:)).. புது வருடம் பிறப்பதுக்குள்.. இன்னும் மூணு:) நாள்ல நோர்மல் டெலிவரி என டொக்ரேர்ஸ் சொல்லியிருக்கினம்:)... மீ புது வருசத்துக்குச் சொன்னேனாக்கும்..:).

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      "கமலா சிஸ்டர்.. நீங்க வலியை எப்படி ஓட ஓட விரட்டினீங்க என இன்னொரு போஸ்ட் போட்டிடுங்கோ:))"

      எங்கிருந்து வலியை ஓட ஓட விரட்டுவது? நடக்கவே முடியாததால்தான் அமர்ந்து அமர்ந்து ஒரு பதிவை உருவாக்கியுள்ளேன். அதற்கு பதிலாக வந்த தங்கள் அனைவரின் அன்பான அறிவுறைகள், அக்கறைகள் மருந்தாக செயல்பட்டு மறுபடியும் என்னை ஓடவைக்க வேண்டுமென ஆசைப் படுகிறேன். நானும் அப்படியே வலியையும் ஓட வைக்கிறேன். ஹா ஹா ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வலி போயே போச்!! போயிந்தி, இட்ஸ் கான்!, போயல்லோ என்று புதுவருடத்தில் எங்களோடு கும்மி அடிக்கப் போறீங்க பாருங்க கமலாக்கா!!

      சரி சரி டாக்டரைப் பார்த்தீங்களா இல்லையா? அதிரா சொல்லிருக்கறது போல புதுவருடக் குழந்தைக்குப் பாட்டு பாடவேண்டாமா!!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. வணக்கம் ஆர்.கீதா சகோதரி


      "வலி போயே போச்!! போயிந்தி, இட்ஸ் கான்!, போயல்லோ என்று புதுவருடத்தில் எங்களோடு கும்மி அடிக்கப் போறீங்க பாருங்க கமலாக்கா!!"

      இந்த.. இந்த. ஒரு எனர்ஜிக்காகத்தான் தங்களை தேடிப் பிடித்த கையோடு கூடவே அழைத்து வந்தேன்..நன்றி. நன்றி..

      வீக்கம் வடிந்து வருகின்ற வேளையில் டாக்டர் எதற்கு? சிலசமயம் நம் உடம்பிலேயே மருத்துவம் செய்து கொள்ளும் சக்தி உள்ளது. ஆனால் குணமடைய கொஞ்ச நாட்களாகும். அது பின் விளைவுகளை ஏதும் ஏற்படுத்தாமல் முழுதாக குணமடைய நானும் வேண்டிக் கொண்டே உள்ளேன்.

      புது வருட குழந்தைக்கு பாட்டு பாடும் போது நானும் வந்து கலந்து விடுவேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. விழுந்ததைக்கூட நகைச்சுவையாக வர்ணித்திருக்கும் உங்கள் ஸ்போர்டிவ் மனப்பான்மைக்கு ஒரு ஜே. எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்து விடுங்கள். வென்னீரில் கல் உப்பு போட்டு அதில் காலை வைத்துக்கொள்ளுங்கள். புளி கரைசலை கொதிக்க வைத்து பற்று போட்டாலும் வீக்கமும் வலியும் குறையும். Get well soon.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சின்ன குழந்தை மாதிரி (அதுவும் சின்ன குழந்தையோடு) விழுந்து விட்டதை சொல்வது அவமானமாக இருக்கிறது. அதை கொஞ்சம் நகைச் சுவையோடு கலந்து விட்டால், சொன்ன மாதிரியும் இருக்கும்.யாருக்கும் வருத்தமும் மிகைபடாமல் போகும். எனக்கும் தங்கள் அனைவரின் அக்கறைகள் மருந்தாக செயல்படுகிறது. இதமாகவும், வலிக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.தற்சமயம் சற்று வீக்கம் குறைந்த மாதிரி உள்ளது. சுளுக்கு என்றால் ஒருவாரத்தில் நம் உடம்பே நம்மை சரியாக்கி விடும் என்ற நம்பிக்கையில் டாக்டரிடம் செல்லாமல் இருக்கிறேன்.
      தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.கல் உப்பு ஒத்தடம் கொடுத்துள்ளேன். புளி கரைசல் பற்றும் போடுகிறேன். நினைவுக்கு வந்தது. தாங்கள் சொல்லி நினைவு படுத்தியமைக்கும் மிகவும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அடடா... விழுந்து விட்டீர்களா? விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்... எக்ஸ்ரே எடுத்து விடுவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எக்ஸ்ரே எடுத்து பார்க்க அனைவரும் அறிவுறுத்தியதற்கு நன்றிகள். கை வைத்தியத்தில் இரண்டொரு நாளில் குணமாகி விட்டால் டாக்டரிடம் செல்வதை தவிர்க்கலாமே எனப் பார்க்கிறேன். பார்க்கலாம்.. அப்படியே வலியும், வீக்கமும் தொடர்ந்ததென்றால் செல்ல வேண்டியதுதான்.

      தங்களது பிரார்த்தனைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கமலாக்கா பாருங்க லேட்டாகிப் போனதால் என்னால் உங்களோடு உங்க கஜேந்திரன் காலோடு கும்மி அடிக்க முடியலை...எல்லாரும் அடிச்சுட்டாங்க போல அதனால அவங்க சொல்லிருக்கறதையே நான் நினைத்த கருத்தா இருந்தா சொல்லிடறென்...ஹா ஹா ஹா ஹா

    டக் போல மெதுவா வராம ஸ் என்று// ஹா ஹா ஹா ஹா...

    உங்க மனசாட்சி இடித்த அரிசியை அப்புறம் என்ன செஞ்சீங்க?!!!! அசை போட்டீங்களா? ஹா ஹா ஹா ஹா அதையும் பதிவாக்கிடுங்க!!

    காலில் பட்டதையும் நகைச்சுவையோடு எழுதியிருக்கீங்க..சூப்பர்!!! வலி இப்போ எப்படி இருக்கு? கஜேந்திரன் கால் இப்போது சிம்மக்கால் போல ஆகியிருக்கோ?!!! டெஸ்ட் செய்து பாத்தீங்களா.. வீங்கிருக்குன்னா கொஞ்சம் டெஸ்ட் செய்து பார்த்துட்டா நல்லது.. மாத்திரைகளும் எடுத்துக்கோங்கக்கா...அப்புறம் இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் அந்த மாத்திரைகளின் பின் விளைவுகளைச் சரியாக்க...

    டேக் கேர் அக்கா..விரைவில் குணமாகிடப் பிரார்த்தனைகள்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நான் நினைவுபடுத்திவுடன், துரித கதியில் வந்து கருத்துக்களை பதிந்தது கண்டு மிக்க சந்தோஷமாக உள்ளது தங்கள் கருத்துக்கள் சகோதரி அதிரா தன் பதிவில் சொல்லியிருப்பது போல் இன்று காலையிலிருந்து நான் செலவழித்த எனர்ஜியை மீட்டு கொடுத்தது.

      அந்த அரிசி மாவை வீணாக்க மனமின்றி மனதோடு வைத்துள்ளேன். தங்கள் சொல்படி ஏதாவது பதிவில் கோர்த்து விட்டு விடலாம். ஹா ஹா..

      தற்சமயம் வீக்கமும் வலியும் குறைந்துள்ளது. இன்னமும் ஒரு வாரத்தில் தானாகவே குணமாகி விடும் என நம்புகிறேன். மேலும் பிரச்சனை ஏதும் தந்தால், டாக்டருக்கு தட்சணை கொடுக்கனும். கொடுக்க வேண்டுமென்று இருந்தால், எந்த பிரச்சனையும் நின்று ஜெயிக்கும் இயல்படையவை அல்லவா.. பார்க்கலாம்.! வலியையும், வேதனையையும் சமாளித்து கொண்டே நான்கு நாட்களாக வேலைகளுடன் சுற்றியாகி விட்டது. இன்னமும் இரண்டொரு நாள் சுற்றி பார்க்கலாம். தங்களது கருத்துகளை கண்டு இன்னமும் வீக்கம் வடிந்து வலி குறையுமென நினைக்கிறேன். ஹா ஹா ஹா ஹா... எப்போதுமே துன்பங்களை பகிர்ந்து கொண்டால், மனம் லேசாக போகுமல்லவா.!

      தங்களது ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மிக மிக நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      Delete