Wednesday, December 26, 2018

தன்னை உணர்தல்..இருளில் ஒரு ஒளி.... . 


இப்ப எவ்வளவு மணியிருக்கும்?  ஒரே இருட்டாயிருக்கே...!  இன்று காலையிலே கண் திறந்ததும் கும்பலோடு கும்பலாக, இங்கே இவங்க வீட்டுக்கு வந்தாகி விட்டது. இவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அன்புடனே அடைக்கலம்  தருகிற மாதிரி என்னோடு காத்திருந்த மிச்ச என சகாக்களோடு, அவங்க அணைத்தெடுத்து கொண்டு சேர்த்த இடத்திலே அமர்ந்து கொண்டேன். குளுகுளுன்னு அந்த இடம் நல்லாத்தான் இருந்தது. பின்னே இதுதானே எங்களுக்குரிய இடம். இந்த குளுகுளுப்பில் இல்லாவிடில் நாங்கள் வாழ்வது கஸ்டம்.


அதுக்கப்புறம் இந்த வீட்டுலேயிருக்கிற இவங்க நிறைய தடவை நாங்க இருந்த இடத்திற்கு வந்து அவங்களுக்கு வேண்டியதை எடுத்துகிட்டு போகும் போது, எங்களையும் பாசமா பார்கிற மாதிரி எனக்குத் தோணும். சரி நம்மை இங்கிருந்து எப்பத்தான் விடுவிப்பார்கள்.   மைண்ட் வாய்சை உணர்ந்த அருகிலிருந்த சகாக்கள் எல்லாம் "உனக்குத்தான் முன்னுரிமை... நீதான் முதலில் தென்படற மாதிரி இருக்கிறாய்". என்றனர்.


 விழி திறந்து காத்திருந்த போது, மறுபடியும் யாரோ நாங்க இருக்கிற கதவை திறக்கிற மாதிரியிருந்தது. திடிரென விளக்கின் ஒளிபட்டு வெளிச்சம் ஒரு கண்ணை சற்று கூச வைத்தது. "யாரது" என்று பார்த்த போது, அவர்களும் என்னை கூர்ந்து பார்த்து வியப்பது புரிந்தது.


அப்புறமென்ன? ஒளியை கூட்டி என்னை விதவிதமாய், வடிவமைத்து அனேக தடவைகள், அவர்கள் கையிலிருக்கும் ஒரு கருவியைக் கொண்டு  மேலும் என் கண்களை கூசச்செய்தார்கள்.


எனக்கு ஒன்றும் புரியவில்லை, ..! "என்னப்பா செய்றாங்க இவங்க?" என்று அருகிலிருக்கும் சகாக்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மெல்ல கேட்டேன்.  ஒரு சகா அதில்  விபரமறிந்தவர் போலும்! " நீ எங்களை விட மூக்கும் முழியுமாக பளிச்சென்று இருக்கிறாய் இல்லையா.! அதனால்தான் உன்னை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கிறார்கள்." என்றார்.


எனக்கு மிகவும் ஆச்சரியத்தோடு சற்று மகிழ்வும் உதயமானது. அவ்வளவு அழகா நான்..! என்ற ஒரு எண்ணம் வந்த அந்த விநாடியில்  கொஞ்சம் கர்வம் கூட அந்த ஒரு கணம் வந்து போனது. அங்கிருந்த என் சகாக்களுக்கு என் மேல் கொஞ்சம் பொறாமை வந்திருக்கும் என்று கூடத் தோன்றியது.


அந்த புகைப்படக் கருவியை அருகில் வைத்து  மேலும் அழகாக ஒரு படமெடுத்தார்கள். "நீ எப்படி இருக்கிறாய் பார்த்தாயா?" என என்னிடம் காட்டிய போது நானே என் கண்ணையும், அழகையும் கண்டு கொஞ்சம் பூரித்துப் போனேன்..! என்பதை சொல்லவும் வேண்டுமோ.!


பின்னர்  மனம் மகிழுமாறு மேலும் இரண்டு கிளிக்குகள்..நான் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.  அடுத்து கதவை மூடி விட்டு படமெடுத்தவர் சென்றதும், சகாக்களிடம் பேசாது அமைதியாக ஒதுங்கியே இருந்தேன்.

 "என்ன சிந்தனை? புகைப்படம் எடுத்து விட்டதால், உன்னை அப்படியே விட்டு விடுவார்களா இந்த மனிதர்கள்.!  நாளை விடிந்ததும் நம்மில் பலர் சென்று விட்ட இடத்திற்கு நாமும் செல்ல வேண்டியதுதான்...! ஒரு நினைவுக்காக உன்னை படம் எடுத்து வைத்துள்ளார்கள். வேறு ஒன்றுமில்லை நன்கு யோசி.!" என்று மறுபடியும் என்னை நோக்கி குரல் வந்தது,.


 உண்மையாகவா? சட்டென்று என் குரல் உடைந்தது.  கண்கள் லேசாக தழும்ப பார்த்தது." இல்லை!  உங்களுக்கு என்மேல் கொஞ்சம் பொறாமை வந்து விட்டதோ".. என எனக்கு தோன்றுகிறது. நான் கிட்டத்தட்ட அழுகைக்கு அருகாமையில் வந்து விட்டேன்.


"என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் அழகாகத் தான்  இருக்கிறாய்...ஆனாலும் அதில் என்ன பயன்? நாம் அனைவரும் ஒரே இனந்தான்.. நாங்கள் ஏன் உன் மேல் பொறாமை கொள்ளப் போகிறோம்?  நம் அன்னை மடியில் கடைசிவரை வாழ நமக்கு கொடுப்பினை இல்லை.. அதுதான் உண்மை.. நம் அன்னையின் நலனுக்காகவும், அன்னையை காக்கும் இந்த மனிதர்களுக்கு பயனுள்ளதாக வாழ்வதற்காகவும்  மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். புரிந்து கொள்..!வந்த அழுகை நிறுத்தி நிறைய நேரம் யோசித்த  போது புரிகிற மாதிரி இருந்தது. வேறு வழியில்லை.! மனதை தேற்றிக் கொண்டு எடுத்த படங்களையும், படம் எடுத்தவர்களையும் மறந்து விட வேண்டியதுதான்.! கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், மனிதருக்காக நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை ஜீரணித்த வண்ணம் மறு நாள் கடமை ஆற்றுவதற்காக காத்திருந்தேன்.விடியும் தறுவாயில் மற்றைய சகாக்களுக்கு நன்றி கூறி விடியலுக்கு  தவமிருந்த போது,  கண்ணில் வெளிச்சம் வந்து விழுந்தது. சரி. சரி வெளியில் சென்று கடமையின் நிமித்தம் பயணிக்க எனக்கு விடை தாருங்கள்.  🙏  நன்றி.. 

பி. குறிப்பு....
அன்று என் கண்ணில் பட்ட அந்த நந்தினி பால் பாக்கெட் மிக அழகாக கண்ணும் மூக்குமாக அம்சமாக காட்சி அளித்ததால், இந்த பதிவு உருவானது. படங்களையும் பதிவையும்  பொறுமையுடன் ரசித்தவர்களுக்கு என் நன்றிகளும்.... 🙏... 

16 comments:

 1. குட்மார்னிங் அக்கா... அடடே... பால் பாக்கெட் பேசுகிறதே... அது பேசி இருப்பதைப் படித்தால் அடுத்த முறை அதை எடுத்து உபயோகப்படுத்தவே தோன்றாது போலவே... சுவாரஸ்யமான கற்பனை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   எல்லாமே பேசும் ஆற்றல் பெற்றால். மனித வர்க்கம் அநாவசியமாக பேசும் பேச்சை சற்று குறைக்கும்.

   திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பிரகாரத் தூண்களில் இருக்கும் சிலைகள் முன்னொரு காலத்தில் பேசுமாம். என்னவென்றால், அருகில் நடந்து செல்லும் மனிதர்களின் ஊழ் வினைப் பயன்களின்படி அவர்களுக்கு நடக்கும் நன்மை தீமைகளை குறித்தும் அலசுமாம். அதன் அருகில் நடந்து செல்லும் நபர்களுக்கு அத்தகைய பேச்சுகளை ஜிரணிக்க இயலுமா? பின் அந்த சிலைகளை சாஸ்த்திரம் பிரகாரம் ஒவ்வொரு விதத்தில் (கை, கால் மூக்கு) அங்கஹீனம் செய்த பிற்பாடு அவை பேசுவதை நிறுத்தியதால். இன்றளவும் அவ்வாறே காட்சி தருகிறது. விபரமறிந்த வயதில் கேள்விப்பட்டவுடன் இந்த விபரங்கள் எனக்கு அதிசயமாக இருக்கும். எனக்கு இப்பவும் அவை அருகில் செல்லும் போது ஒரு பய உணர்வு தோன்றும். தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. நல்ல சுவாரசியமான கற்பனை. முதலில் வந்ததைத் தானே முதலில் எடுத்துக் காய்ச்சணும். ஆகவே பின்னால் வந்தது கொஞ்ச நாட்கள் அல்லது நேரம் காத்திருக்கணும். என்றாலும் எல்லாமும் பயன்பாட்டில் இருக்கப் போவது என்னமோ உறுதி! அதுக்குள்ளே அவங்களுக்குள்ளாகச் சின்ன உரையாடல்! நல்லாவே பேசி இருக்குங்க! நிஜம்மாவே பேச ஆரம்பித்தால்! நினைத்தாலே சிரிப்பு வருது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   போன வருடம் இட்ட பதிவுக்கு இந்த வருடம் பதில் தருகிறேன். ஹா ஹா.
   அவர்களின் உரையாடலை என்னை மாதிரி தங்களும் ரசித்தது எனக்கு மன மகிழ்வை தருகிறது.

   /நிஜம்மாவே பேச ஆரம்பித்தால்! நினைத்தாலே சிரிப்பு வருது./

   ஆமாம். நிஜமாக பேச ஆரம்பித்தால், "என்னை நெருப்பில் காட்டி துன்புறுத்த வேண்டாம்" என ஆர்டர் கூட போட்டு விடும். அதன் பிறகு பச்சை பால் எப்படி தீங்கு விளைவிக்காதபடி நம் உடல்நலனை காக்குமென, அதற்கு எதை சேர்த்தால் நல்லதென யாராவது ஆராய்ந்து சொல்ல வேண்டும். ஹா ஹா ஹா ஹா.

   கற்பனையை ரசித்தமைக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. அருமையான கற்பனை உரையாடல்.

  //மிக அழகாக கண்ணும் மூக்குமாக அம்சமாக காட்சி அளித்ததால், இந்த பதிவு உருவானது. படங்களையும் பதிவையும் பொறுமையுடன் ரசித்தவர்களுக்கு என் நன்றிகளும்.... 🙏...//

  முதலில் பார்க்கும் போது கண்ணும், மூக்கும் தெரிந்தது பிறகு படி படியாக வந்த படங்களும் உரையாடலும் அது பால் பாக்கெட் என்று தெரிந்து விட்டது.
  ஒவ்வொன்றுக்கும் கடமை இருப்பது உண்மைதான்.
  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

   மூக்கும், விழியுமாக என் பார்வையில் பட்டவுடன், நிறைய போட்டோக்கள் எடுத்து விட்டேன். அதன் பின் அன்று காலில் அடிபட்ட இரவு உறக்கம் வராமல் வலியில் தவித்ததில், இப்படி எழுதலாம் என்ற கற்பனை வந்தது. வலி மறக்க எழுந்த கற்பனை ஒரு பதிவை தந்தது.

   நமக்கு மட்டுமில்லை.! ஓவ்வொன்றுக்கும் நம்முடனான கடமைகள் இருக்கிறது. தங்கள் கருத்து உண்மைதான்.! நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. ஹாஹா நல்ல கற்பனை.

  சுவாரசியமான உரையாடல்.... பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நல்ல கற்பனை, சுவாரஸ்யமான உரையாடல் என பதிவை என்னுடன் சேர்ந்து ரசித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. காஃபி குடித்துக் கொண்டே படிக்கிறேன். ஒரு கணம் மனதில் நாமும் குற்றவாளியோ என்ற எண்ணம் வந்து விட்டது.

  படங்கள் உண்மையிலேயே முகம் போலவே இருக்கிறது சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /காஃபி குடித்துக் கொண்டே படிக்கிறேன். ஒரு கணம் மனதில் நாமும் குற்றவாளியோ என்ற எண்ணம் வந்து விட்டது. /

   ஹா ஹா ஹா ஹா. உங்களை ஒரு வாய் காஃபி குடிக்க விடாமல் செய்தது என் குற்றமோ என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது.

   உண்மையிலேயே முகம் மாதிரி தெரிந்ததால்தான் படமெடுக்கும் ஆசையே வந்தது. வேறு எந்த பால் பாக்கெட் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரசித்தமைக்கு நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. வித்தியாசமான பார்வை... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


   /வித்தியாசமான பார்வை... ரசித்தேன்.../

   ஆமாம் ! என் பார்வையா? பால் பாக்கெட்டின் பார்வையா? ஹா ஹா ஹா ஹா. எதுவாயிருந்தாலும்,
   ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. ஆவ்வ்வ்வ் மிக அழகிய கற்பனை தான், நான் முதலில் ஐஸ் கியூப்ஸ் பக்கட் என்றே நினைத்தேன்.. பால் பக்கட்:)).. இந்த உலகில் பால் பக்கட் தொடங்கி பருவ பைங்கிளி வரை[ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்கோ:)] எதுவும் நிரந்தரமில்லை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அழகிய கற்பனை என்று ரசித்தமைக்கு நன்றிகள் சிஸ்டர்.

   /இந்த உலகில் பால் பக்கட் தொடங்கி பருவ பைங்கிளி வரை[ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்கோ:)] எதுவும் நிரந்தரமில்லை.../

   ஆமாம்.. எதுவும் நிரந்தரம் கிடையாது. வாஸ்தவம்தான். (நாம் எழுதுவது உட்பட..) நன்றி!

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. அட!! கமலாக்கா உங்கள் ரசனை செம!!! ஆமாம் பால் பாக்கெட்டில் அந்த டிசைன் மூக்கும் முழியுமாக அழகாகப் பிரின்ட் ஆகியிருக்கு!!! ஆமாம் அழகாத்தான் இருக்கிறாள் நந்தினி!

  நல்ல கற்பனை வளம் கமலாக்கா உங்களுக்கு. ரொம்பவும் ரசித்தேன் நந்தினி பாக்கெட்டுகள் பேசுவதை.

  நீதான் மூத்தவள் நேற்று பிறந்தவள் அதான் உன்னை முதல்ல எடுத்துக்குவாங்க...அப்புறம் தான் நாங்க...பாரு வரிசையா உக்காந்துருக்கோம்னும் சொல்லுமோ பாக்கெட்டுகள்?!!!! ஹா ஹா ஹா சில சமயம் நாம் மாலை வாங்கி வைத்து மறு நாள் பயன்படுத்தும் போது அன்று வாங்கியவையும் அடுத்து வைப்போமே...தேதி வாரி..கெட்டுப் போய்விடாமல் எப்படி எல்லாம் பாதுகாப்பார்கள். சில சமயம் ஸ்வெட்ட்டர் கூடக் கொடுக்காமல் பனிக்கட்டிப் பெட்டிக்குள் தள்ளி அடைத்துவிடுவார்கள்!!! ஹா ஹா ஹா...

  அம்மாவின் நலத்திற்காக...சூப்பர் அது போல மனிதர்களின் நலனுக்காக...அதுவும் சூப்பர் அக்கா.

  மனித நலனுக்காக நான் எப்படி எல்லாம் உரு மாறுகிறேன் தயிர், க்ரீம், வெண்ணை, நெய், பனீர் என்று....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   நந்தினி பெயரும் பெண் அல்லவா? ஒரு பெண் என்றைக்கு அழகில் குறைந்திருக்கிறாள்?

   என்னுடன் சேர்ந்து பால் பாக்கெட்டின் உரையாடல்களை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.

   கண்ணும் மூக்குமாக அந்த பால் பாக்கெட்டை பார்த்தவுடன் படமெடுத்து விட்டேன். மிச்சமிருக்கும் பாக்கெட்டுகள் சேர்ந்து பேசினால் எப்படியிருக்கும் என எண்ணம் வந்ததும் அன்றைய வலியை மீறியும் கற்பனை உதித்தது.

   /சில சமயம் ஸ்வெட்ட்டர் கூடக் கொடுக்காமல் பனிக்கட்டிப் பெட்டிக்குள் தள்ளி அடைத்துவிடுவார்கள்!!! ஹா ஹா ஹா.../


   ஹா ஹா ஹா தங்கள் கற்பனை என்னை மிஞ்சி விட்டது. அழகான கற்பனை. அதற்கு ஸ்வெட்டர் போட்டு விட்டால் எப்படி இருக்குமென நினைத்துப் பார்த்து ரசிக்கிறேன்.

   மனித நலனுக்காகத்தான் பசுவே பாடுபடுகிறது. நாம் அதை நம்மை காக்கும் தெய்வமாக மட்டுமல்லாது, நம் நலன் காக்கும் அன்னையாகவும் எண்ணி வழிபட வேண்டும். நல்லதொரு கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete