Sunday, December 16, 2018

நேர்மறை எண்ணங்கள்.

அன்பார்ந்த வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். 

நடப்பவை அனைத்தும் நலமாக அமையட்டும்

நல்லது நடந்தால் எப்போதுமே மளது சந்தோஷம் அடைகிறது. அதுவே துன்பங்கண்டு மனம் மட்டுமல்லாது  உடலும் சோர்வடைகிறது.  எதிர் மறை எண்ணங்களினால், இந்த நிகழ்வுகள் நடந்ததுவோ,  என மனம் ஐயமுற்று சிறிது தடுமாறுவதால், தனக்குத் துணையாக இருக்கட்டுமென உடலையும் பாதிக்க வைத்து பார்த்து சந்தோஷம்டைகிறதோ? இந்த நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை, மனது தீர்மானிக்கிறதா? இல்லை,  நம்  மூளை தன்னைத்தானே சலவை செய்து தூய எண்ணங்களுக்கு  வேர் ஊன்றி வளர்த்து விருட்சமாக பெருகச் செய்து, இடையே தான்தோன்றித்தனமாக வளரும் களையகற்றி, செழிப்பாக வளரும் விருட்சத்திற்கு  துணையாக இருக்கிறதா? என்பது யாரும் அறியாத தேவ ரகசியம். 

நல்லதை நினைத்தால் நல்லதாகத்தான் நடக்கும். அப்படி நல்லதையே நினைக்கும் போது. எப்படி திடீரென எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.? இது அடிக்கடி வக்கரித்து மாறும் மனதின் நிலையற்ற  ஆணவ குணத்தினால், எழும் விபரீத போக்குகளா?  இல்லை, அவ்வப்போது சலவை செய்யும் மூளை என்ற இயந்திரத்திற்கு ஒவ்வாமையால் எழும்  பழுதுகளா? புரியவில்லை....! ( இதற்கு உலகில் அவரவர் மனதில் ஏற்படும் தாக்கங்கள் காரண காரியங்களோடு, ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, கருத்துக்கள் வேறுபட்டு போகும்... இல்லை, வேரோடி நிலையாய் நிற்கும். இது வாதிப்பவர்களின், மூளையின் திறனைப் பொறுத்தது.) ஆனால், மூளையின் உத்தரவின் பேரில்தான், மனதும், உடலும் இயங்குகிறது என விஞ்ஞானத்திலிருந்து, மெஞ்ஞானம் வரை உறுதிப்படுத்துகிறது.  மொத்தத்தில் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க மனமானது மிகவும் பக்குவமடைய வேண்டும். அதனை ஆசைகளற்று, நிர்மலமாக அமைதியாக இருக்க மூளை பயிற்றுவிக்க வேண்டும். அதனுடைய ஆளுமையை மனது நிராகரிக்காமல், " நம் நலனுக்குத்தான்" என  ஆழமாக புரிந்து கொண்டால், மேற் சொன்னது நடக்க. வாய்ப்பிருக்கிறதோ என்னவோ..!

இதையெல்லாம் மீறி விதியின் பாதை அதன் வழியே நம்மை நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கது. அதன் சக்தியின் வலிமைதான் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் மனதிலோ, மூளையிலோ தோற்றுவித்து களிப்பிற்கும், களைப்பிற்கும் வழி வகுக்கிறது என்பதை  நம்மையறியாமல் நடக்கும் செயல்கள் நிரூபிக்கின்றன. இதன் விளைவில் நினைவடுக்குகளில் இருந்து எழுந்தவை இந்தக்கதை. 

கதை.. . 

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தான் அவன் அமைச்சரோ, விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும் அதை மாற்ற யாராலும் இயலாது என்ற எண்ணம் உடையவர். இதனால் இருவருக்குமிடையை நிறைய விவாதங்கள் நிகழும். மதியால் விதியை வெல்ல இயலாது என்பதை ஆதாரத்துடன் நடைமுறையாக நிரூபிக்க தக்க தருணத்தை அமைச்சரும் எதிர்பார்த்து காத்திருந்தார். அதுபோல் அரசனும், தனக்கும் வரும் ஒரு சமயத்திற்காக ஆவலோடு காத்திருந்தான்.

ஒரு நாள் அரண்மனை மேன்மாடத்தில் அமர்ந்தபடி அரசனும், மந்திரியும்  ராஜ்ஜியபரிபாலனைகள் மற்றும், இதர விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தெருவில் ஒரு ஏழை மூதாட்டி நடமாடிக் கொண்டிருந்தவர்களிடம், தன் ஒரு வேளை உணவுக்கு  யாசகமாக கையேந்திக் கொண்டிருப்பதை கண்டதும், அரசனுக்கு ஒரு எண்ணம் உதயமானது. உடனே அமைச்சரை பார்த்து, " மந்திரி, தெருவில் ஒரு வயதான பெண்மணி வருவோர் போவோரிடம் கையேந்தி யாசகம் கேட்டபடி இருக்கிறார். பாவம்! யாருமில்லாதவர் போலும்.! அவரை அழைத்து வந்து நல்லதொரு ஆடை அணிய தந்து வயிறு நிரம்ப தினமும் மூன்று வேளை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்." என்றார்.

அமைச்சரும் அரசனின் உத்தரவை சிரமேற் கொண்டு காவலாளியை அழைத்து அரண்மனையிலேயே அப்பெண்மணிக்கு ஒரு அறையை ஒதுக்கித்தந்து அரசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

சில நாட்கள் கழிந்ததும், அமைச்சரை தனியே சந்தித்த அரசர், அரசின் முக்கிய வேலைகளைப் பற்றி அளவளாவிய பின்னர், "அமைச்சரே, சில தினங்களுக்கு முன் ஒரு மூதாட்டியை அழைத்து வந்து பராமரிக்கத் சொன்னேனே.! அந்த மாது எப்படி உள்ளார்கள்? நலந்தானே.? "என்று வினவினார் அரசர்.

" மன்னா! தங்கள் அரசாட்சியில் நலமில்லாதவர் என்றொருவர் உண்டா? அவ்வாறிருக்கும் போது தாங்களே சிரத்தை எடுத்து, தங்கள் இயல்பான இரக்க குணத்தினால் ,கவனிக்கப்பட்டு, தங்கள் கருணையினால், பராமரிக்கப்பட்டு வரும் அந்த பெண்மணி நலமில்லாமல் இருக்க முடியுமா?" என்று பணிவுடன் கூறவும், அரசனின் முகமெங்கும் மந்தஹாசம் பொங்கி வழிந்தது.

"மந்திரி, நமக்குள் ஒரு அந்தரங்கமாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறதே? நினைவுள்ளதா? விதியை மாற்ற இயலாது என தாங்கள் என்னிடம் அடிக்கடி விவாதிப்பீர்களே...! இன்று நான் அதை  மாற்றி விட்டேன். யாசகம் கேட்டு வாழ்ந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியை இன்று ராஜ போக உணவுடன், அரச மாளிகையில் தங்குபடி மாற்றி விட்டேன் பார்த்தீர்களா? அதனால்தான் விதியை மதியால் வெல்லலாமென ஆணித்தரமாக கூறிக் கொண்டேயிருப்பேன். இப்போதாவது என் சொல் உண்மையாகி விட்டதை ஒத்துக் கொள்ளுங்கள். "அரசர் தம் எண்ணததை தெரிவுபடுத்தியபடி,  பேசி முடித்தார்.

மந்திரியின் முகத்தில் சிறு சலனமும்  இல்லாமலிருப்பதை ஒரு கணம் கண்ட அரசரின் முகத்தில் மந்தஹாசம் சட்டென மங்கத்துவங்கியது. " ஏன் மந்திரி.! இந்த முக வாட்டம்?  நான் கூறியதில் ஏதும் பிழை உள்ளதா? என்று அரசர் மறுபடி சற்று சினத்துடன் வினவினார்.

அரசனின் கோபத்தை உணர்ந்த மத்திரி அவசரமாக தன் மெளனம் கலைத்து, " "மன்னித்து விடுங்கள் அரசே..! தாங்கள் கூறியதை நினைத்தபடி ஏதோ யோஜனையில் ஆழ்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.. நீங்கள் கூறியபடி அந்த பெண்மணி நலமாகத்தான் உள்ளார். நாம் அவரை ஒரு தரம் சென்று கண்டு வருவோமா? என்று சாந்தமாக கூறவும், அரசரின் சினம் தணிந்து, "சரி என கூறியபடி அமைச்சருடன் புறப்பட எத்தனித்தார்.

இருவரும் மூதாட்டி தங்க வைக்க பட்டிருந்த அறைக்கு வந்ததும், அமைச்சர்,  "அரசே அங்கு பாருங்கள்." என பணிவுடன் சுட்டிக் காண்பித்ததும், அறையுனுள் பார்த்த அரசர் ஒரு கணம் திகைத்து விட்டார்.  அங்கு இருந்த அந்த மூதாட்டி, தனக்கு கொடுக்கப்பட்டிருந்த உணவை, கவள, கவளமாக உருட்டி, சுவர்களில் இருந்த மாடக்குழிகளுள் வைத்து, "அம்மா தாயே,.! பசிக்கிறது ஒரு கவளமேனும் உணவு தாருங்கள்.. என்று கேட்டபடி எடுத்து உணவு உண்டபடியிருந்தாள்.

யோசனையுடன் திகைத்து நின்றிருந்த அரசரை, அமைச்சரின் "அரசே" என்ற பணிவான குரல் இவ்வுலகிற்கு கொண்டு வரச் செய்தது.

" அரசே,! நாம் எத்தனை செல்வச் செழிப்புடன்  உணவு தயாரித்து கொடுத்தாலும், அவள் ஊழ் வினையை மாற்ற முடியவில்லை பார்த்தீர்களா? இப்படி உணவருந்தினால்தான் அவளுக்கு திருப்தியாக இருக்கிறது. இதை காவலர்களும் என்னிடம் அவள் வந்த அன்றிலிருந்து கூறினார்கள். இதைதான் நான் அவள் விதி என்கிறேன். நீங்கள் எத்தனை செல்வம் கொடுத்து அனுப்பினாலும், அவள் அத்தனையையும் பறி கொடுத்து விட்டு இப்படி கையேந்தி தான் தன் வாழ்வை நகர்த்துவாள். எத்தனை காலம் அவள் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இருக்கிறதோ, அத்தனை காலங்கள் வரை அவளால் ஏதும் செய்ய இயலாது,, .! இதை யாரலும் மாற்றவும் முடியாது,.. ஏனெனில் விதியை எந்த  ஒரு மனிதனாலும் புறக்கணிக்க இயலாது. இதில் நீங்களும், நானும் அடக்கம்... நான் கூறுவதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை மெய்பிக்கவே தங்களை இங்கே அழைத்து வந்து நேரடியாக காண்பித்தேன்.தவறெனில் என்னை மன்னியுங்கள். " என்றார் சாந்தமாக அமைச்சர்.

"அமைச்சரின் பேச்சை மெளனமாக செவிமடுத்த அரசர்," அமைச்சரே,! தங்கள் கூற்று சரிதான்.. தங்களின் சமயோஜித அறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் கூரிய எண்ணங்களும் என்னை வியக்க வைக்கிறது. தாங்கள் இந்த நீண்ட நாளைய விவாதத்தில் என்னை வெற்றி கண்டு விட்டீர்கள். விதி வலியது என இன்று கண் கூடாக உணர்ந்து கொண்டேன். பாவம், அந்த மூதாட்டியை விடுவித்து விடுங்கள். அவள் இப்படி கட்டுண்டு வாழ்வதை விட விருப்பபடி விதிப்படி வாழட்டும். வாருங்கள் நாம்  போகலாம்" என்றபடி அரசர் அமைச்சரிடம் தன் தோல்வியை ஒப்பு கொண்டபடி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

விதி வலியது என்பதை சுட்டிக் காட்டும் கதை இது. இரண்டாவதாக இதேப் போல் மதியால் விதியை மாற்றுவதாக, விக்கிரமாதித்தன், கதைகளில் வருகிறது.  அவனது மந்திரி பட்டி திறம்பட, அரசனின் விதியை பற்றி  கூறும் பட்சிகளின் பாஷைகளை அறிந்ததினால்,  தொடர்ச்சியாக வந்த இடர்களிலிருந்து விக்கிரமாதித்தியனை காப்பாற்றுவான். பட்டி பட்சி, மிருகங்களின் பாஷையை கற்றிருந்ததினால், விக்கிரமாதித்தியனுக்கு வந்த சோதனைகளை, களைந்தெறிய தான் வணங்கும் தெய்வமாகிய காளியிடமே சாமர்த்தியமாக தன் மதியறிவை கொண்டு பேசி , வாக்கு வாதங்களில் வென்று விதியை மாற்றியமைக்கும் வரங்களைப் பெறுவான்.

மூன்றாவதாக இதைப்போல் விதியையும் நோகாமல், மதி வழியும் முயற்சிக்காமல்," நடப்பது நடக்கட்டும். இதற்கும், எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல, அதன் வலியை ஒரு  சிறிதேனும் பொருட்படுத்தாமல், புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அமைதியாக காலத்துடன் ஒன்றினார் ஒரு அமைச்சர்.

தன் மகனுக்கு ராஜ போக பதவி கிடைத்தும் சந்தோஷமெய்தவில்லை. அவன் செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை கிடைத்தும் கலங்கவில்லை. யார் என்ன செய்தாலும், சொன்னாலும் அவர் வாயில் வருவது ஒரே சொல்தான்." எல்லாம் நன்மைக்கே.!" அதுதான் அவரின் தாரக மந்திரம். அந்தச் சொல்லே அவருக்கு எல்லா நன்மைகளையும், சத்தமின்றி தந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த கடைசி கதை மாந்தரைப் போல அனைத்தையும், மெளனமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேண்டும். இதற்காக இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்து அல்லல்பட்டு உழல வேண்டுமோ.!
எனினும் இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டுமென நேர்மறையோடு சிந்திக்கிறேன்.

மூன்று வித கதைகளிலும் நேர்மறை எண்ணங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கேற்ப  தானாகவே வந்து அவர்களுடன் தங்கி அவர்களுக்கு நல்லதை விளைவித்தது.

எது எப்படியோ நேர்மறை எண்ணங்களை நினைக்கும் போதும், பேசும் போதும், கேட்கும் போதும் நமக்கு எதிராக எந்த செயல் தானாக நடந்தாலும், நடந்திருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துப்பார்க்கும் ஒரு மன நிலை, நாமும் இதை கொஞ்சம் விட்டு விலகி சில நாட்களை கழித்துப் பார்க்கலாமே என்ற ஒரு  மனப்பான்மை வருகிறதென்னமோ உண்மைதான். 

அவ்வாறாக தற்சமயம் வலைத்தள நட்புகளின் நேர்மறை ஆறுதல்கள், காயப்பட்ட என் மனதிற்கு  நல்லதொரு மருந்தாக, வலி நிவாரணியாக இருந்தது. ஒரு மாற்றத்திற்காக, என்னைத் தேற்றியபடி நானும், வலையுலகில், மறுபடி வருவதற்கு விருப்பப்பட்டு, "எங்கள் குடும்பம்," மற்றும் அனைத்துப் பதிவுகளையும், படித்து வருகிறேன்.  என் வருகைக்கு முழுவாதரவாக   வந்த பின்னூட்டங்களை பகிர்ந்துள்ளேன். இதுவும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் சிரம் தாழ்த்தி அடி பணிகிறேன். எனக்கு அன்புடன் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள். 



  • வாங்க கமலாக்கா உங்கள் வருத்தத்திற்கு இடையிலும் இங்கு வந்து வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. ஆமாம் அக்கா உங்கள் வருத்தம் மிக மிக ஆழமான ஒன்றுதான்...புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்...ஆமாம் வலைக்கு வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக....எல்லோரையும் பாருங்கள் எழுதுங்கள்...கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் அக்கா...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...இது ஆறுதல் படுத்தக் கூடிய சிறு விஷயம் இல்லையே...தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி




  • சகோதரி கமலா அவர்களின் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன். என்ன சொன்னாலும் தீராத துக்கம இது!


    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம்.

      பாடலை ரசித்ததற்கு நன்றி.

      உங்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள்.
    2. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வணக்கத்துடன்....
    3. அன்புடன் நல்வரவு கூறிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு காலை வணக்கத்துடன மிக்க நன்றி.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு, இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும். என் கருத்து கண்டு உடன் பதிலளித்தது எனக்கும் மகிழ்வாக இருந்தது. நன்றி.

    4. //இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்//

      மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி... வரவேற்கிறோம்.
    5. என் வருகை கண்டு வரவேற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி கீதா சாம்பசிவம். நலமாக உள்ளீர்களா?
    6. வருக.... தொடர்ந்து வலைப்பதிவில் சந்திப்போம் கமலா ஹரிஹரன் ஜி
    7. கமலாக்கா வாங்கோ... “நாள் உதவுவதுபோல் நல்லோர் உதவார்” கால ஓட்டத்தில் பல விசயங்கள் கவலைகள் சின்னப் புள்ளியாகுகிடும் அதுவரை ஒதுங்கி இருந்து முடங்கிப் போயிடாமல், இப்படி வெளியே வந்து பேசுங்கோ மனம் இலேசாகும்.
      விதியை நம்மால் என்ன பண்ண முடியும், ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

    1. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு.

      நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்

    2. இன்னமும் என் காயம்பட்ட  மனதிற்கு தெம்பாக நேர்மறை எண்ணங்களுடன், ஆறுதல்கள் அளித்து வரும்அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கத்துடன கூடிய நன்றிகள். 


    30 comments:

    1. வருக... அனைவருடனும் சேர்ந்து இருந்தால் வருத்தங்கள் குறையும். நடந்தவற்றை மறந்து நடக்க இருப்பவை நல்லதாக இருக்க பிரார்த்திப்போம். நம் மனமும் அதன் பலமும்தான் நமக்கு நல்ல மருந்து. உங்கள் பதிவு கண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

      ReplyDelete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்கள் வார்த்தைகள் உண்மைதான். மனதின் பலத்தினால்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் இயந்திரமாகவாவது ஓடிக் கொண்டிருக்கிறது. இனி வலைத்தளம் வந்து அனைவரின் பதிவுகளை பார்த்து படித்தால், நன்றாக இருக்குமென தோன்றவே வந்துள்ளேன். என் வரவுக்கு மகிழ்ச்சியடைந்தது குறித்து நானும் மிகுந்த நன்றியுடன் சந்தோஷமடைகிறேன். பதிவை கண்டவுடன் படித்து, உடன் கருத்து தெரிவித்திருப்பதற்கு மிகவும் சந்தோஷம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      ReplyDelete
    3. வருக சகோ...
      தங்களது வருத்தங்கள் நீங்கிட பிரார்த்தனைகள்.

      வலையுலகம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

      கதை இன்னும் படிக்கவில்லை பிறகு வருவேன்.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        தங்களது பிரார்த்தனைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். நான் மீண்டும் வலையுலகம் பக்கம் வந்தது கண்டு தாங்கள் மகிழ்வு கொண்டதில் நானும் சந்தோஷம் அடைகிறேன்.

        கதையை நிதானமாக படிக்க வாருங்கள் என நான் பதிலளிப்பதற்குள், கதையை படித்து கருத்துக்கள் வழங்கியிருப்பதற்கும் என் நன்றிகள்.

        தங்கள் அனைவரின் ஊக்கமும், உற்சாகமும் என் வருத்தங்களை சற்று குறைத்து காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால்தான் மளமாற்றத்திறகாக வலைத்தளம் வருகை. நானும் அனைவரின் பதிவுகளை படிக்க ஆரம்பிக்கிறேன்.

        மிக்க நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    4. //நல்லதை நினைத்தால் நல்லதாகத்தான் நடக்கும். அப்படி நல்லதையே நினைக்கும் போது. எப்படி திடீரென எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.? ///

      இது என் மனதிலும் அப்பப்ப எழும் கேள்வியே.. நல்லதையே நினை, எண்ணு அப்போ நல்லதே நடக்கும் என்கிறார்கள் ஆனா நல்ல விதமாக கற்பனை பண்ணி வானில் பறந்தாலும் அது திடீரென விழுத்தி விடுகிறது.. உடனே அது விதி எனச் சொல்லி மனதை தேற்றப் பண்ணுகிறார்கள்... இப்போதெல்லாம் கேள்விப்படும் விசயங்கள் பலது மனதை கஸ்டப்பட வைக்கிறது.. விதி என நினைத்து மனதை ஆறுதல் படுத்த வேண்டி இருக்குது.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரி

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

        தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். என் மனதிலும் இதே கேள்விதான்.! நல்லதையே நம்பும் போது இப்படி நடக்கிறதே.! இந்த சமயத்தில் இறைவன் நமக்காக விதியின் பாரத்தை சற்று குறைத்து நம் மேல் பிரயோகிக்கக் கூடாதா என எண்ணிக் கொள்வேன். என்ன செய்வது? நாம் ஒன்று நினைத்தால், ஆண்டவன் ஒன்று நினைப்பான் என்ற பழமொழி இன்னமும் அழியாமல் இருக்கிறதே..! எதிர்மறை எண்ணங்கள் நம்மையும் மீறி தப்பித்தவறி எழுந்தாலும், அதை யார்தான் விரும்புவார்கள்? நல்லது நடக்கத்தான் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். என்னதான் விதி என்று சமாதானபடுத்திக் கொண்டாலும், ஏமாற்றமடைந்த உள்ளத்தை சரி செய்ய எத்தனை காலங்கள் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. அதற்கு எத்தனை சந்தோஷங்களை பலியாக தர வேண்டியுள்ளது..இந்தப் பிறவி முடியும் வரை உடன் தொடரும் ஜீவ போராட்டங்கள் அல்லவா?

        அழகிய கருத்துரைக்கு நன்றி சகோதரி. இனி நானும் தங்கள் பதிவுகளை பின்தொடர்கிறேன்.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
      2. அதிரா விதி என்று சொல்லித் தேற்றிக் கொள்வதுதான் அது பல சமயங்களில் கைகொடுக்கிறது என்றாலும் நாம் நல்லதையே நினைப்பதுதான் நல்லது மனம் அப்பொழுதேனும் கொஞ்சம் கவலை இல்லாமல் ஒரு நம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்த முடியும். இல்லை என்றால் நாம் முடங்கிவிடுவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

        கீதா

        Delete
      3. வணக்கம் சகோதரி கீதா ரெங்கன்.

        உண்மைதான் சகோதரி. விதியை சில காலம் நொந்த படி வாழ்ந்தாலும், அடுத்து நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என நம்பிக்கையுடன் வாழ்வது நல்லதுதான். விதியினால் வெந்த புண்கள் வேதனை தரும் சமயங்களில் கண்டிப்பாக அந்த நம்பிக்கை மருத்துவம் பலனளிக்கும். என்றுமே துன்பங்களை துச்சமாக நினைக்காத வரை வேறு வழியில்லை.!. . இப்படித்தான் நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டும். தங்களது கருத்துக்கள் உரமாக இருக்கின்றன. மிகவும் நன்றி சகோதரி.

        Delete
    5. அழகிய கதை, உண்மைதான் விதி வலியதுதான்.. இதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு...

      “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளும், நாம் அழுது குள/ழறி எப்பலனும் இல்லை”... கண்ணதாசன் அங்கிள் சொன்னவர்.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரி

        கதையை படித்து பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சகோதரி.
        விதிக்கு முன் நாம் எதுவும் செய்ய இயலாது. நாம் பிறக்கும் போதே நமக்கு இந்த பிறவியில் என்னென்ன கிடைக்க வேண்டும், இல்லை, கிடைக்காது என்பது விதிக்கப்பட்டு விடுகிறது. ஆயினும் இந்த ஆசை என்னும் விஷமரம் விஷமான எண்ணங்களை மனம் முழுவதும் தூவி, கிடைக்காதவைகளை எதிர்பார்க்கச் செய்து வருத்தங்களை அதிகரிக்கச் செய்து விடுகிறது.அதன் விளைவால் நிம்மதியை தொலைத்து விட்டு, உணரத் தெரியாமல் விதியை சாடுகிறோம். இதுதான் மனித இயல்பு.

        கண்ணதாசனின் அர்த்தமுள்ள எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். தெய்வங்களும் விதிக்கு கட்டுப்படுவது எத்தனை புராணங்களில் படித்துள்ளோம். தெய்வங்களுக்கே அந்த நிலைகள் என்னும் போது சாதாரண மனித வர்க்கம் என்ன செய்ய இயலும்?
        உண்மையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    6. தீராத துக்கம் தங்களுடையது. எனினும் என்றேனும் ஓர் நாள் அதிலிருந்து வெளியே வந்து தானே ஆகணும். உங்களுக்கு அதற்கேற்ற மனோபலத்தை ஆண்டவன் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரி

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        ஆமாம். எந்த துன்பமாயிருந்தாலும், என்றேனும் ஒரு நாள் அதிலிருந்து மீளத்தானே வேண்டும். ஆனால் அப்படியே மீள முயற்சித்தாலும், பழைய நினைவுகள் அடிக்கடி வந்து துன்புறுத்துகின்றன. இதற்காக இப்படி பாடுபட்டோம்? ஏன் இப்படி நமக்கு நேர வேண்டும்? என்று எழும் சுயபச்சாதாப அலைகளிலிருந்து இயல்பாக கரையேற இயலவில்லை. என்ன செய்வது?
        எனக்காக பிரார்த்திக்கும் தங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
        (இங்கு என் பேரன். பேத்திகளாகிய சின்ன குழந்தைகளுடன் (மூன்று பேருக்குமே மூன்று வயது) அவர்களை பார்த்துக் கொள்வதில் நேரம் கழிகிறது. இடைப்பட்ட நேரத்தில் சமையல், டிபன், பாத்திரம் சுத்தப்படுத்துவது என பிற வேலைகள். அதனால் தங்களுக்கெல்லாம் பதில் தர சற்று தாமதமாகிறது. மன்னிக்கவும். நிறுத்தி நிறுத்தி பதில் தருகிறேன்.) ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
      2. //இடைப்பட்ட நேரத்தில் சமையல், டிபன், பாத்திரம் சுத்தப்படுத்துவது என பிற வேலைகள். அதனால் தங்களுக்கெல்லாம் பதில் தர சற்று தாமதமாகிறது. மன்னிக்கவும்.//

        தாமதமாகட்டும், பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து வாருங்கள். அதுவே உங்களுக்கு மனமாறுதலைத்தரும்.

        Delete
      3. வணக்கம் சகோதரரே

        மீள் வருகை தந்து ஊக்கமும், உற்சாகமும் தருவதற்கு மிகுந்த நன்றிகள். தாங்கள் கூறியபடி தொடர்ந்து வலைத்தளம் வருகிறேன்.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
      4. குழந்தை முகம் பார்த்தால் கோடி துக்கம் தீரும் என்பார்கள். உங்கள் பேரன், பேத்திகளைக் கவனிப்பதன் மூலம் கொஞ்சமானும் உங்கள் மனம் ஆறுதல் அடையும். எங்கள் அனைவரின் மனமார்ந்த பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன்.

        Delete
      5. வணக்கம் சகோதரி

        /குழந்தை முகம் பார்த்தால் கோடி துக்கம் தீரும் என்பார்கள். உங்கள் பேரன், பேத்திகளைக் கவனிப்பதன் மூலம் கொஞ்சமானும் உங்கள் மனம் ஆறுதல் அடையும்./

        அப்படித்தான் நாட்கள் நடந்தவற்றின் நினைவலை கொடுமையிலிருந்து தினமும் கொஞ்மேனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால்,மனசு அலைபாய்ந்து மிகவும் கஸ்டமாக ஆகியிருக்கும். எங்களுடன் இருக்கும் தங்களின் மனம் நிறைந்த பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    7. கதை அருமை சகோ விதியை மாற்ற இயலாது என்பதில் நானும் மந்திரியின் பக்கம் உள்ளவனே...

      நாம் அனைவரும் விதியின் வழியே கடந்தே தீரவேண்டும். அவ்வழியை இறைவன் நல்வழி ஆக்குவானாக!

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

        கதை படித்து கருத்து தெரிவித்தமைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
        நானும் என்றும் விதியை நம்புகிறவள்தான். நமக்கென்று விதிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். நீங்கள் கூறுவது போல் ஆண்டவன் விதியின் வழியை நல்வழி படுத்தினால், நன்றாக இருக்கும். அவன் மறந்து போகும் போது அவன் மேல் கோபம் வருகிறது. இதுவும் ஒரு சுயநலம்தான். வேறு என்ன சொல்வது?

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    8. இதுவும் கடந்து போகும் அம்மா...

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        "இதுவும் கடந்து போகும்" என்ற ஆறுதலுக்கு நன்றி. அப்படித்தான் மனதை தேற்றிக்கொண்டு காலத்தோடு வாழ வேண்டியதாய் இருக்கிறது.வேறு என்ன செய்வது? தங்கள் ஆறுதல்கள் மனதிற்கு இதமளிக்கின்றன.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    9. எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேல் செல்லும்.

      உங்கள் மற்றும் வீட்டிலுள்ளோர் மனது மெதுவாக ஆறுதல் பெறுவதாக.

      நான் கொழுக்கட்டை பதிவு (உப்புமாக் கொழுக்கட்டை அல்ல, பருப்பு போட்ட கொழுக்கட்டை) ரெடி பண்ணினேன். அப்புறம் sentimentalஆ ஸ்ரீராமுக்கு அனுப்ப தயக்கமாகிவிட்டது.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        தங்களின் மனம நிறைந்த ஆறுதல் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

        தாங்கள் ரெடி பண்ணிய கொழுக்கட்டை ரெசிபியை திங்க பதிவுக்கு அனுப்பலாமே.! ஏன் அதில் செண்டிமெண்ட்? தங்கள் பதிவு எ. பியில் வர. நான் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
        இன்று கூட இங்கு எங்கள் வீட்டில் உ. கொதான். வைகுண்ட ஏகாதசி சிறப்ப..

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    10. வாங்க வாங்க கமலாக்கா.....

      இப்படி இங்கு வந்து நம் எல்லோருடனும் இருந்தாலே மனம் நிறைய சக்தி பெறும். எழுதுங்கள்....மீண்டும் வந்தது பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி கமலாக்கா....

      கீதா

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரி

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        தங்கள் வார்த்தை உண்மைதான். மன ஆறுதலுக்கு இப்படி எல்லோருடனும் வந்து பேசுவது நன்றாக உள்ளது. நானும் அதிகமாக வெளி வாசல் என்று போவது கிடையாது. என் வரவு கண்டு தாங்கள் மகிழ்வெய்தியது எனக்கும் சந்தோஷத்தை தந்தது.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    11. காலம் மாறும் காட்சிகளும் மாறும் சகோதரி. மீண்டும் வலையுலகு வந்தது கண்டு மகிழ்ச்சி!

      துளசிதரன்

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        தாங்கள் நலமாய் உள்ளீர்களா? தங்களுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
        என் வலையுலக வரவு கண்டு தாங்கள் மகிழ்ச்சியடைந்தது, எனக்கும் மகிழ்வை தந்தது. தங்களுடைய ஊக்கமிகு கருத்துரைகள் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    12. அக்கா கதைகள் எல்லாமே அருமை. விதி வலியது என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. சிலவற்றை நம் மதியால் வெல்லலாம் என்று சொல்வது கூட அங்கு அப்படி மதியால் வெல்லும் என்பது விதிக்கப்பட்டிருந்தால்தானே அதுவும் சாத்தியமாகும்! எனவே நடப்பவை நடந்தே தீறும் என்று நம்பினாலும் அது அப்படியே போகட்டும் என்றிராமல் நம்மால் முடிந்தவரையில் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லை என்றால் உழைப்பு என்பது இல்லாமல் சோம்பேறித்தனம் குடி கொண்டுவிடுமே!! ஒரு அசட்டைத்தனம் வந்துடுமே! அதற்காகத்தான் விதியை மதியால் வெல்லலாம் என்று மனிதனை சோம்பேறி ஆக்காமல், மனம் நல்லபடி சிந்தித்து உழைக்க வேண்டும் என்று சொல்வதற்கே அது .....

      கீதா

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரி

        தங்கள் கருத்துக்கள் எல்லாமும் சரியே.

        /சிலவற்றை நம் மதியால் வெல்லலாம் என்று சொல்வது கூட அங்கு அப்படி மதியால் வெல்லும் என்பது விதிக்கப்பட்டிருந்தால்தானே அதுவும் சாத்தியமாகும்! /உண்மை,.! எதுவுமே நடக்க வேண்டுமென்று இருந்தால்தான் நடக்கும். நானும் விதியை நம்புகிறவள். ஆனால் இடிகள் மாதிரி திடீரென சிலசமயம் நடைபெற்று விடும் நம் விதியைக் கண்டதும் துவண்டு விடுகிறோம். அதிலிருந்து வெளி வருவதற்கு வழி தெரியாதபடிக்கு மனம் சோர்ந்து விடுகிறது. நகரும் ஒவ்வொரு நிமிடமும் வேதனைகள்தான். என்ன செய்வது? இப்போது தங்களைப் போன்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு இதம் தருகின்றன. நன்றி

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete
    13. அருமையான கதைகளுடன் சிறப்பான பகிர்வு. நான் படித்த வேறு ஒரு கதையும் நினைவுக்கு வருகிறது. ஒரு பிச்சைக்காரர் ஆறேழு தலைமுறையாக ஒரே பாத்திரம் வைத்து பிச்சை எடுப்பது பற்றிய கதை - அந்தப் பாத்திரம் ஏதோ பெரியவர் கொடுத்தது என்றும் அதை வைத்து தான் பிச்சை எடுத்து வருவதாகவும் சொல்வார். அந்தப் பாத்திரம் தங்கத்தினால் ஆனது என்பதை தெரிந்து சொல்வார் ஒருவர். இத்தனை தலைமுறைகளாக தங்கத்தில் பாத்திரம் இருந்தும், பிச்சை தான் எடுத்திருக்கிறார்கள் - இது தான் விதி என்பதாக ஒரு கதை.

      எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

      தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்.

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சகோதரரே

        தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

        தாங்கள் கூறிய கதையும் வெகு சிறப்பு. நானும் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. அனைத்துமே வீட்டில் நாம் சிறு குழந்தைகளாய் இருக்கும் போது அப்பா, அம்மா, பாட்டி என்று பெரியவர்கள் சொன்ன கதைகள்தாம். சில ஞாபக சக்தியுடன் மறக்காமல் இருந்து வருகிறது. இந்தப் பதிவை சிறப்பான பகிர்வு என பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

        அனைத்தும் நலமாக நடக்கட்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன். மற்றபடி விதியின் செயல்.

        தாங்கள் கூறியபடி தொடர்ந்து பதிவுகளில் சந்திக்க நானும் ஆசைப் படுகிறேன். தங்கள் எண்ணத்திற்கும் மிக்க நன்றி.

        நன்றியுடன்
        கமலா ஹரிஹரன்.

        Delete