Sunday, September 16, 2018

கோவிலும், அதன் சிறப்பும்..

சென்ற மாதத்தில் ஒரு ஞாயறன்று  இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாமென முடிவெடுத்தோம் . காரணம் அதன் அருகிலேயே பூங்கா ஒன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு (என் குழந்தைகளின் குழந்தைகள்)  அதுதானே மிகவும் பிடித்தமானது.. ஆததால் சீக்கிரமாகவே, (சீக்கிரம் என்பது மாலை நான்கு மணி.)  அந்த டயத்துக்குள்  அவர்களை கிளப்பிக் கொண்டு  செல்வதற்குள்  போதும் போதுமென ஆகி விட்டது. அப்படியும் ஓலாவில்தான் அந்த இடத்துக்குச் சென்றோம்.

அந்த ராமாஞ்சநேயா  கோவில் சின்ன கோவில்தான் எனினும் அழகுடன் அம்சமாக இருந்தது.  கோவிலினுள் செல்ஃபோன் தடை... அதனால் கோவில் வாசலில் இருந்தபடியே போட்டோக்கள் எடுத்தேன். பூங்காவில் நேரம் போனது போக கோவிலுக்கு படியேறி செல்வதற்குள் கொஞ்சம் இருட்டு வர ஆரம்பித்து விட்டது. கோவிலில் மேல் ஸ்ரீ ராம பிரானும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி  சிலையாக இருக்கும் இத்தோற்றத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். அன்பும், பணிவும் ஒன்று கலந்த பாவத்துடன் அவர்கள் இருவரின் கண்களிலும் தோன்றும் ஆனந்த பாஷ்யம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ராமரின் அன்புக்குரிய  பணிவான  தோழரல்லவா ஆஞ்சநேயர்..... அந்த நட்பின் இறுக்கத்தை அங்கு கண்டு கொள்ளலாம். நாங்கள் முன்பெல்லாம் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறோம்.


மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இரு கைகள் கூப்பிய தோற்றத்துடன் தரிசனம் தருகிறார். கோவிலின் எதிரில், அரசும், வேம்பும், இணைந்த  பெரிய மரம்.. கீழே நிறைய வரிசையாக நாகர்கள். அந்த இடத்திலிருந்தும்  ராமரும் ஆஞ்சநேயரும் இணைந்திருந்த போட்டோ எடுத்தேன். சுற்றிலும் பூங்கா. அதன் நடுவில் மேலெழுந்தவாரிய இந்த அழகான ஆஞ்சநேயர் கோவில்.  இனி நான் எடுத்த புகைப்படங்களினால் இதன் சிறப்பை பார்ப்போமா.....


ராமரும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் அன்பால் பிணைத்துக் கொண்ட காட்சி. 


சற்று இருள் வர ஆரம்பித்து விட்டது. அந்த பின்னணியிலும். அவர்களின் அன்பு மனதை நிறையச் செய்கிறது. 


கண்ணையும் மனதையும் கவர வெட்டி விடப்பட்ட செடிகள். பூக்கள், மரங்கள் என ரம்மியமான ஒரு பகுதி.....


பெரிய பாறைகளும். மரங்களுமாக மற்றொரு பகுதி...


"இருண்ட கிளைகளுக்கு ஊடே சிறிது ஒளியையும் புகைப்படம் எடுக்கும் உங்களுக்குகாகத்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். " என விரைவு படுத்திய பூங்கா.


மாலை ஐந்தரை மணி வெளிச்சத்தில், கொஞ்சம் பளபளப்பு காட்டும் பூங்கா.


பூங்காவின் நெடியதாக  வளர்ந்த மரங்களில் கலராக இலைகள்.பூக்கள்.


மரங்கள் பாறைகள், புல்வெளிகளுக் கிடையே நானும் கொஞ்சம் இருக்கிறேன் என்று நினைவுபடுத்திய வானம்....


பூங்காவிலிருந்து  கோவிலுக்கு ஏறிச் செல்ல உதவும் படிகள்..

படிகளில் ஏறும் போது கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.! முழு முதற் கடவுளும், முப்பெரும் தேவிகளும் சுவரில் இருந்தபடி படி ஏறி வருபவர்களுக்கு ஆசி வழங்கும் காட்சி ...


கோவிலுக்குச் செல்ல படி ஏறும் முன் ஒரு இயற்கை காட்சி...


மரங்களும், புல்வெளிகள், பாறைகளுமாக அமைக்கப்பட்ட ஒரு பகுதி...


பல அடர்ந்த மரங்கள் பாறைகள் சீராக்கப்பட்ட புல்வெளிகளுடன் பூங்காவின் ஒரு தோற்றம்... 


சற்று இருளானது சூழலாமா.. வேண்டாமா? என யோசிக்கும் தறுவாயில் சட்டென எனது செல் முடிவெடுத்த ஒரு தருணத்தில் மீண்டும் ஒருமுறை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்...


கோவிலின் முன் பகுதியில் நின்றபடி நேராக எடுத்தப் புகைப்படம். முன் மண்டபம் ஏறிச் சென்றால் கோவிலினுள் பிரேவேசிக்கலாம். அங்கே கை கூப்பிய நிலையில் அடக்கத்தின் பிரதிபலிப்பாக ஆஜானுபாகுவாக,  கம்பீரமாக, உயரமான  கோலத்துடன் நின்றிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி....


அரசும் வேம்புமாக கை கோர்த்து இணைந்து  தன் காலடியில் அமர்ந்திருந்த நாகர்களின் துணை தந்த தைரியத்தில், பெரிதாக கிளை பரப்பி வளர்ந்திருக்கும் காட்சி....


இதுவும் நாங்கள்தான்.. எம்மை தினமும் பக்தியுடன் பிரதட்சணம் செய்தால், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி நீங்கள் வாழ்வீர்கள். என்கிறாரோ.. இந்த மரங்களுக்கு அரசன்.


கோவிலின் முகப்பு சேர்ந்து தெரிகிற மாதிரி எடுக்கப்பட்டது. இருள்தான்  வெற்றி யடையப் போகிறது என உணர்ந்த பின்னும் அதை தற்காலிகமாக வெல்ல நினைத்து ஒளி உமிழும் விளக்குகள்...


அடர்ந்த கிளைகளும் எங்கும் வியாபிக்கத் துடிக்கும் உள்ளம் கொண்ட இலைகளுமாக உன் சிறு செல்லின் இடம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டேன் பார்த்தாயா? என்று பரிகாசமாய் என்னைப் பார்த்து வினவும் விருட்ச ராஜா....

=================================================================================
இந்த கோவில் பார்த்து தரிசனம் முடித்ததும் அருகில் மற்றொரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். அங்கும் கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இதேப் போல் வாசலிலிருந்து எடுத்தோம். அதை அடுத்தப் பதிவாக எழுதுகிறேன்.
இதைப் படிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. 🙏

20 comments:

 1. நல்லதொரு கோவிலும், அதன் அழகிய படங்களும் விளக்கங்களுடன் அருமை சகோ.

  அடுத்து சிவன்கோவில் தரிசனம் காண ஆவலுடன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   ராமாஞ்சனேய கோவிலின் படங்களையும், அது பற்றி பகிர்ந்ததையும் ரசித்து கருத்திட்டு இருப்பது மனமகிழ்வை தருகிறது.

   அதன் அருகிலிருக்கும் சிவன் கோவிலைப் பற்றியும் படித்தறிய ஆவலுடன் இருப்பதற்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. ராமாஞ்சனேய ஆலிங்கனம் படம் அழகு. அரசும் வேம்பும் இணைந்த மரம் அபூர்வம், அழகு. எங்கள் வீட்டருகில் பின்னால் அரசும், பக்கவாட்டில் வேம்பும் இருக்கின்றன.

  பூங்கா நன்றாகக் பராமரிக்கப்படுகிறது என்று தெரிகிறது.

  அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   ஆம். அரசுக்கும் வேம்புக்கும் மணம் முடித்து நாகர்கள் பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் அது ஒன்றிணைந்து பெரிய மரமாக வளர்வது அபூர்வம்.
   எங்கள் வீட்டு பிள்ளையார் கோவில் பின்புறம் 100 வருடங்களுக்கும் மேலாக நெடிதுயர்ந்த அரசும் வேம்பும் இணைந்த மரம் இருந்தது.1990க்கு பின் ஒரு பெரிய மழையில் அது வீழ்ந்து விட்டது.
   தங்கள் வீட்டின் அருகிலும் அவ்வாறான அரச மரம் இருப்பது மகிழ்வை தருகிறது.

   பூங்கா நன்றாகவே உள்ளது. குழந்தைகள் விளையாடுமிடமும் அதிக உபயோகப்படுத்துவதாலோ என்னமோ ஓரளவு பரவாயில்லை.

   படங்களை ரசித்து கருத்திடிருப்பதற்கு கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
   தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. ராமரும் ஆஞ்சனேயரும் இருக்கும் படங்கள் அழகு.

  அரசும் வேம்பும் இணைந்த மரம் - நெய்வேலியில் வீட்டின் எதிரே இருந்தது. சிறு மேடை கட்டி அங்கே நாகர் சிலை உண்டு.

  பூங்கா அழகா இருக்கிறது.

  சிவன் கோவில் தரிசனம் கிடைக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   படங்களை ரசித்துப் படித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அரசும் வேம்பும் இணைந்த மரம் தங்கள் வீட்டின் எதிரில் இருப்பதறிந்து சந்தோஷம் எய்தினேன் காலை எட்டு மணிக்குள் இம்மரத்தை சுற்றி தினமும் பிரதட்சணம் செய்து வர அனைத்துச் செல்வங்களும், உடல் ஆரோக்கியமும் பெறலாம் என்பார்கள்.

   பூங்கா மிகவும் நன்றாகவே உள்ளது.
   சிவனின் தரிசனம் காண தாங்கள் ஆவலுடன் இருப்பதற்கு. மன மகிழ்ச்சியுடன் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. படங்கள் அனைத்தும் அழகு... ஆனந்த பாஷ்யம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   ராமாஞ்சனேய கோவிலின் படங்களை ரசித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன். தங்கள அன்பான கருத்துக்கும், பகிர்வு அருமை என்றமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. பூங்காவும் அதன் படங்களும் மட்டுமில்லாமல் கோயிலை எடுத்திருக்கும் கோணங்களும் அருமையாகப் படங்களாக வந்திருக்கின்றன. விளக்கங்களும் பொருத்தமாக வந்திருக்கிறது. இங்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆக ஆறரை மணிக்கு மேல் ஆகி விடுகிறது. பெண்களூர் இன்னமும் மேற்கு என்பதால் அங்கே ஏழு மணி ஆகும்னு நினைச்சேன். ஆனால் ஐந்தரைக்கே இருட்ட ஆரம்பிக்கிறதா? !!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   கோவில் பற்றிய பதிவினை ரசித்துப் படித்து படத்திற்கேற்ற விளக்கங்களும் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நாங்கள் சென்ற அன்று சற்று மழை வரும் போலிருந்தது. இரண்டாவதாக தென் மேற்கு பருவமழை தீவிரமடையும் நேரம். மழை இல்லையெனினும் மேகம் சற்று எப்போதும் இருட்டடிப்பு செய்திருந்தது. அங்கு எடுத்த இரண்டொரு படங்கள் அதற்கு முன்னும் ஒரு பதிவில் (மேகநாதன்) பதிந்திருந்தேன். சமயத்தில் கோடையில் கோடை மழை வராத பொழுதில் ஏழு மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும்.

   தங்கள் கருத்துகளுக்கு மகிழ்ச்சி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. அழகிய ஆஞ்சனேயரும் சுற்றாடலும்.. எனக்கும் ஆஞ்சனேயரில் ஒரு லவ்வும்.. நம்பிக்கையும் உண்டு. ஆனா இதுவரை ஒரே ஒரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு மட்டுமே போயிருக்கிறேன். கொழும்பில் இருப்பது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

   ஆஞ்சநேயர் பணிவின் பிரதிபலிப்பு. பக்தியின் சொரூபம். நேயம் மிக்கவர்.கலியுகத்தில் அவர் இன்னமும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். நாம் ராமா என்று மெய்யுருகி அழைத்தால். அழைக்குமிடத்தில் அவர் வந்து நிற்பார். அவரை பிடிக்காதவர் யார்? தங்கள் கருத்து சரிதான் சகோதரி. நம்பிக்கைக்கு பாத்திரமானவர். தங்களுடைய அனுபவம் தெரிந்து கொண்டேன். நீங்கள் இங்கு (பெங்களுர்) வரும் போது எங்கள் இல்லத்திற்கு வாருங்கள். இங்கு நிறைய ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. சென்று வரலாம்.

   தங்கள் கருத்துக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. ராம ஆஞ்சநேயர் ஆலிங்கனம் ஆனந்தம். இருள் கவிழ்ந்து மின்னொளியில் அவர்களின் படங்கள் கொள்ளை அழகு.
  எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் அரசும் வேம்பும் இணந்து இருக்கின்றன. அதன் அடியில் பிள்ளையார் கொழுவீற்று இருக்கிறார்.
  பூங்கா அழகாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட நல்ல இடம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் வீட்டருகிலும் அரசும், வேம்பும் இணைந்த மரம் உள்ளதா? மிகவும் சந்தோஷம் சகோதரி. ஆம். அரசும் வேம்பும் இணைந்த மரத்தடியில் நடுவில் விநாயகரும்
   இருப்பார். சுற்றிலும் நாகர்கள் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி இந்த மரத்தோடு விநாயகரையும், நாக தெய்வங்களையும் வணங்கி சுற்றி வந்தால் பலன் கிடைக்கும்.

   படங்கள் அழகாக இருக்கிறது எனவும், பூங்காவும். குழந்தைகளுக்கு விளையாடுமிடமாக உள்ளதெனவும் கருத்துக்கள் கூறியமைக்கு கண்டு மிக மனம் மகிழ்ந்தேன். என் வலைத்தளம் வந்து நல்லதொரு கருத்து தந்து பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. கமலாக்கா இடத்தைப் பார்த்ததுமே பங்களூரோ என்று தோன்றியது. gudda கோயில் போல இருக்கு. ஹனுமந்த நகர்? நீங்கள் இருப்பது பங்களூர்?

  ராமாஞ்சநேயர் வாவ்! என்ன அழகான படம் ஆஞ்சு என் ஃபேவரிட்! அது போன்று முருகர் என் ஃபேவரிட். வித்தியாசமான சிலை இல்லையா...ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரசித்தேன் அக்கா.

  படங்கள் எல்லாம் செம....செல்லுல எடுக்கத் தெரியாம குழந்தைகள் சொல்லிக் கொடுத்துத்தான் கற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன கமலா அக்காவா இது?!!!!!!!!!!! வாவ்!! செமையா எடுத்துருக்கீங்க அக்கா...

  பார்க் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கு பொதுவாகவே பங்களூரில் பார்க்குகள் நல்லா பராமரிக்கறாங்க. இந்தப் பார்க்கும் அப்படித்தான் போல இருக்கு. அருமை அக்கா.பங்களூருக்குச் சென்றிருந்தப்ப இந்தக் கோயிலுக்குச் செல்ல நினைத்துச் செல்ல முடியாமல் போன ஒன்று.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   நான் இருப்பது பெங்களூர்தான் சகோதரி. கோவில் இருப்பிடம் ஹனுமந்த நகர்தான்..சரியாக கண்டு பிடித்து விட்டீர்களே.. உங்களுக்கு ஒரு சபாஷ்.. பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

   ராமரும், ஆஞ்சநேயரும் என்ன ஒரு அன்பான பிணைப்பு பார்த்தீர்களா? இந்த கோவில் போகும் போதெல்லாம் அந்த அன்புத் திருவுருவங்களை கண்டு மெய்யுருகி பார்த்துக் கொண்டேயிருப் பேன். எத்தனை முறை பார்த்தாலும் அந்த ஆனந்த பாஷ்யம் நம்முள் கலந்து போவதை உணர்வேன்.

   ஆஞ்சநேயர்ரும், முருகனும் தங்களுக்கு பிடித்த கடவுள்களா? ரொம்ப சந்தோஷம் சகோதரி. எனக்கும் அப்படித்தான்.
   படங்கள் நன்றாக வந்திருப்பதாக சொன்னதற்கு என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நான் அம்மா வீட்டில் இருக்கும் போதே அண்ணாவுடைய கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளேன். தற்சமயம் மகன் வாங்கித்தந்த செல்லில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கணினி பயன்பாடுதான் (வலைத்தளம்) குழந்தைகள் மூலம் கற்று வருகிறேன்.

   இங்கு பார்க்குகள் கொஞ்சம் அழகுறவே இருக்கும்.மண் வளத்தால் மரம் செடிகள் நல்ல பசுமையை தரும். குழந்தைகள் விளையாடும் இடங்களும் நன்றாக இருக்கும். நீங்கள் அடுத்த முறை வரும் போது (என் இல்லத்துக்கு) இங்கு வாருங்கள்.கோவிலுக்கும் சென்று தரிசித்து வரலாம். நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன. பெங்களூரில் எங்கே இருக்கிறது இந்த கோவில்?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   இங்கு ஹனுமந்த நகரில் உள்ளது இந்த கோவில். ராமாஞ்சனேய கோவில் என்று பெயர். ஆஞ்சநேயர் மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் அழகாக அருள் பாலிக்கிறார். நாங்கள் அடிக்கடி இந்த கோவிலுக்கு அப்போது சென்றிருக்கிறோம். கோவிலும், அதன் கீழே பூங்காவும் மிகவும் அழகாக இருக்கும்.

   என் வலைதளம் வந்து பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்திட்டு பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. மிக அழகான இடம்...படங்களும் வெகு அழகு..


  பெங்களூரில் எங்கே என தான் நானும் கேட்க நினைத்தேன்...ஆனால் எனக்கு முன்பே கீதா க்காவும் , பானு அக்கா வும் கேட்டாச்சு..

  நினைவில் வைத்து நேரம் கிடைக்கும் போது நாங்களும் சென்று வருகிறோம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /பெங்களூரில் எங்கே என தான் நானும் கேட்க நினைத்தேன்...ஆனால் எனக்கு முன்பே கீதா க்காவும் , பானு அக்கா வும் கேட்டாச்சு/

   ஆமாம் சகோதரி.. நானும் இருக்குமிடம் தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் உங்களுக்காகவும்... ஹனுமந்த நகரில் இருக்கும் ராமாஞ்சனேய கோவில் இது. மிகவும் அழகாக உள்ளது.. சமயம் வரும் போது வாருங்கள். ஹனுமானை மனம் குளிர தரிசிக்கலாம்.

   இந்த பதிவுக்கு வந்து நல்லதொரு கருத்துக்கள் தந்து பாராட்டியமைக்கு மிகவும் நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete