Wednesday, September 12, 2018

எங்கள் "பிள்ளை"யார் கதை....

வணக்கம்..
அனைத்து வலைத்தள சகோதர. சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.ஸ்ரீ விநாயகர் கும்பாபிஷேக விழா

அந்த கற்கோவில் புது சுண்ணாம்பு அடித்து கடவுளார்களை பிரதிஷ்டை செய்ய பீடங்களை சிறந்த முறையில்அமைத்து, சுற்றிலும் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக நடைபாதைகளை சீரமைத்து  வேலைகள் முழுவதும் பூர்த்தியாகி விட்டது. சின்ன கோவில்தான். ஆனாலும்  அந்த அக்ரஹார  பெரியவர்கள் பேசி ஒன்று கூடி ஒரு முடிவுடன் அம்சமாக அமைத்தது ஸ்ரீ விநாயக பெருமானின் திருவருளால்தான். அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாயாதி முறைகள்தாம். அதனால் மனப் பிரிவினையின்றி ஒன்றினைந்து ஆளுக்கொரு வேலையாக முனைப்புடன் செய்து கோவிலை  அழகான முறையில் கட்டியாகி விட்டது

ஒரு வாரத்தில் அதில்  விநாயகர்  சிலை பிரதிஷ்டை செய்து,  மஹா கும்பாபிஷேகத்திற்கு என நாட்கள் தேர்ந்தெடுத்து நல்ல பொழுதும் பார்த்து ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. மேள தாளம், நாதஸ்வர கலைஞர், தெரு முழுக்க பந்தல், பந்தலில் கட்ட வாழைமரங்கள், தோரணம், பூக்கள், கும்பாபிஷேகம் நடத்தி வைக்க தீட்சிதர்கள்  வேதங்கள் முழங்க  கணபாடிகள்,  அன்றிரவு முழுவதும்  இறைவனின் நாமாவளியை சொல்லும் பஜனைகளுக்காக பஜனை செய்பவர்கள் என அனைவருக்கும்  சொல்லியாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்திலிருக்கும் உறவுகள், வெளியூரில் குடியிருக்கும் உறவுகள், உறவுகளுக்கு அறிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகமானவர்கள் இப்படி நிறைய பேரை எதிர்பார்த்து, விழாக் கோலம் பூண்டு அந்த அக்ரஹாரத் தெரு தயாராகி கொண்டிருந்தது.

நல்ல சமையல்காரர்கள் நியமித்து, அவர்களுடன்  தெருப் பெரியவர்கள் அமர்ந்து, ஹோமத்திற்கு நிவேதனங்கள், காலை  மதியம், இரவு என அறுசுவை உணவுகள் யாவும், இப்படியாக இருக்க வேண்டுமென பேசியாகி விட்டது.

காலை நிவேதனம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல். பஞ்சாமிர்தம் எனவும். மதிய உணவு (நிவேதனமாக)  சாதம்,  பருப்பு, சித்ரானங்கள் இரண்டு, (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்) இரண்டு கறி, (வாழைக்காய் பொடித்துவல்,  சேம்பு இல்லை சேனை காரக் கறி) ஒரு கூட்டு (புடலை இல்லை தடியங்காய் கூட்டு,)  அவியல், ( எல்லா காய்களும் சேர்ந்து அவியல்,) மோர்குழம்பு, சாம்பார், ரசம், இரண்டு பச்சடிகள், (தயிர், மாங்காய்) இரண்டு வடைகள், (உளுந்து வடை, பருப்பு வடை) இனிப்புகளாக இருவகை பாயாசம்,, (பிரதமன், தேங்காய் சேர்த்து பருப்பில்லாமல் ஒரு பாயாசம்) போளி, லட்டு, என இருவகை இனிப்புகள், வாழைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து வெல்லப்பாகு வைத்து அதில் மனோகரம் மாதிரி போட்டெடுத்த வெல்ல இனிப்பு, (சர்க்கரை வரட்டி, சர்க்கரை உப்பேரி)
இது போக அப்பளம், வடாம், வறுவல் அப்போதே போட்ட மாங்காய் ஊறுகாய், புளிப்பில்லாத தயிர். என சாப்பாட்டு ஐட்டங்கள்.

இரவு புளியோதரை, தேங்காய்,  பருப்பு  கலந்த இனிப்பு பூரண கொழுக்கட்டை , உளுந்து காரக்கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, கடலைப் பருப்பு சுண்டல், தயிர் சாதமென நிவேத்தியங்கள் வெற்றிலைபாக்கு, நிறைய பழங்கள் என  தாம்பூல உபசாரங்கள். தடபுடலாக அனைத்தும் பேசி முடித்தாகி விட்டது.

மறு நாள் வழக்கம் போல் கோவிலினுள் சென்று பார்வையிடும் போது  பிரதிஷ்டை செய்யவிருக்கும் கணபதிக்கு தீடீரென ஒரு அங்கஹீனம். வலது கை தோள்பட்டை யிலிருந்து கொஞ்சம் கை வரை மாயமாகி போனது போல.. அதைக்கண்ட எல்லோருக்கும் அதிர்ச்சி.... வானமே இடிந்து தலையில் விழுந்தது போல ஒரு வேதனை.. என்ன செய்வதென்று ஒரே கவலை... ஒரு வேலையும் ஓடவில்லை. கடைசியில்  பேசிப்பேசி அன்று இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

மூலஸ்தானத்திற்கு வலபக்கம் கன்னி விநாயகர் பிரதிஷ்டை செய்வதற்காக அழகாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் இயல்பாகவே மூலவரை விட மிகவும் அழகாக வேறு அமைந்து விட்டார். எனவே அவரை குறிப்பிட்ட நாளில் மூலவராக்கி விட்டு மற்றொரு விநாயகரை செதுக்கி வேறொரு நாள் பார்த்து கன்னி விநாயகராக பிரதிஷ்டை செய்யலாம் என கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

கோலகாலமான  விசேஷ வைபவங்களுக்கு நாள் நெருங்கி விட்டது. ஊர் உறவுகள் என கும்பாபிஷேகத்திற்கு,  பேசியபடி ஆவலுடன் வரும் நாட்கள் நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் இப்படி யாகி விட்டதே என்ற கவலை அனைவருக்கும்.... ஆனாலும் கவலைப்பட நேரமில்லை. ஏதேனும் ஒரு முடிவெடுத்து சட்டென நிலைமையை  சமாளித்தாக வேண்டும். அதனால்தான் அவசரமாக இந்த முடிவு.

அன்று இரவு ஒருவருக்கும் தூக்கமே வரவில்லை.. தாங்கள் எடுத்த முடிவு தவறானவையா? இல்லை இப்படித்தான் நடக்க வேண்டுமென்பது "அவன்" கட்டளை யா? விருப்பமா? தீடீரென நடந்த சம்பவத்தால் மனச் சலனங்கள்... அதிலும் இதை சொல்லியவருக்கு மனிதினில் ஒரே குழப்பம். தம்மைச் சொல்ல வைத்தவன் "அவன்" தானெனினும் இப்படி முடிவு எடுத்து விட்டோமே. !  தெருவில் இருப்பவர் களுக்குள் தாம் சற்று வயது  மூத்தவர் என்பதால் அனைவரும் கட்டுண்டு அமைதியாய் தம் முடிவை ஆமோதித்து விட்டார்களா? இல்லை தாம் முடிவு எடுக்கும் உரிமையில் அகங்காரம் இயல்பாய் வந்து விட்டதா? குழம்பிய மனதுடன் இரவு பொழுது  கழிய விடியும் தறுவாயில், அதற்கு சற்று  முன் நாலாவது ஜாமத்தில் கண்ணயர்ந்ததார். அரைமணி நேரம் கழித்ததும்,  அவர் வாயிலிருந்து விநாயகப் பெருமானே, என்னப்பனே..விக்னேஷ்வரா... என்னை மன்னித்து விடுப்பா ... மன்னித்து விடு... என்ற கூக்குரலுடன் சத்தம் வரவே வீட்டிலுள்ளவர்களின் அனைவரும் பதறியடித்து எழுந்து, கண்ணைத் திறக்காமல்  அலறும் அவரையும் எழுப்பி அமர வைத்தனர்.

விடிந்ததும், முதல் வேலையாக  அனைவரையும் கூட்டி எப்போதும் போல் தயாராக இருக்கும் பிள்ளையாரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும், முதல்நாள் பிள்ளையார் தன் கனவில் வந்து  "உங்கள் பிள்ளைகளுக்கு  இது போல் தீடீரென ஒரு ஊனம் ஏற்பட்டால் அவனை தங்களது அனைத்து பிள்ளைகளுடன் வளர விடாமல் தனியாக பிரித்து எங்கேனும் அனுப்பி விடுவீர்களா? அப்படி செய்ய துணிவீர்களென்றால், என்னையும் ஒதுக்கி விடுங்கள்" எனக்கூறி விட்டு மறைந்தையும்  சொல்லி, என்ன ஆனாலும் சரி..! நாம் தேர்ந்தெடுத்த கணேஷரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென உறுதியுடன் கூறியதும், சிலநாட்களில் வந்த கும்பாபிஷேக விழா அனைவரின் வருகையோடும்  நினைத்ததை விடவும் சிறப்பாக நடந்தேறியது.

அதன் பின் வருடாவருடம் வருஷாபிஷேக விழாவும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இது எங்கள் வீட்டு வாசலில் கோவில் கொண்டமர்ந்து (என் பிறந்த வீடு) எங்களையெல்லாம்  நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக காத்து  இரட்சிக்கும் எங்கள் பிள்ளையாரின் உண்மைக் கதை. என் பெற்றோர்கள் நாங்கள் வளரும் பருவத்தில் பக்தியுடன் எனக்குச் சொல்லிய  விபரங்களை வைத்து எழுதியுள்ளேன்.


இது இந்த வருட (ஜனவரியில்தான் எப்போதும் வரும்.) ஜனவரியில் வருஷாபிஷேக விழாவில் எடுத்த அவரது அருள் தரும் திருவுருவப் புகைப்படம். 

இன்றளவும் கோவில் வருஷாபிஷேக விழா நடந்து கொண்டுள்ளது. நானும் வருடா வருடம் செல்ல முடியவில்லையென்றாலும், சில பல நேரங்களில் என்னையும் அதில் கலந்து கொள்ள என்னப்பன் விநாயக மூர்த்தி வரவழைத்துள்ளார். அவர் நிழலில் எங்களையெல்லாம் அரவணைத்தபடியாக  அவர் உருவாக்கியிருக்கிறார். அவரின் அன்பான கவனிப்பு எங்கள் தலைமுறைகளை 200 வருடங்களாக காத்து ரட்சித்து வருகிறது. இத்தனை நாட்களாக இதைக் குறித்து எழுத வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்த போதும், இந்த விநாயக சதுர்த்திக்கு இதை எழுத வைத்தது அவர் செயல்தான்.


இது  இப்போதும் மாத சதுர்த்தியில் செய்யப்படும் அலங்காரத்தில் ஒன்று.

ஸ்ரீ விக்னேஷ்வராய நமஃ... 

அண்ணனும் தம்பியுமாக இணைந்து அனைவருக்கும் வற்றாத அருள் புரியட்டும்.

16 comments:

 1. மிக அருமை. இந்தக்கதை/நிகழ்வு கேள்விப் பட்டிருக்கேன். எந்த ஊர்னு தெரியலை. எந்த ஊரில் நடந்தது? பரமாசாரியாரிடம் போய்க் கேட்டதாகவும் அவரும் இதே கேள்வியைக் கேட்டதாகவும் கூடச் சொல்லுவார்கள். நல்ல அருமையான பதிவுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   இது எங்கள் தாத்தாவின் (அப்பாவுக்கு அப்பா) காலத்தில் நடந்திருக்கிறது. இந்த விஷயமெல்லாம் எங்கள் அப்பா சொல்லித்தான் தெரியும். சிறு வயதில், அப்போதெல்லாம் எங்கள் அப்பா சொல்வதை அமைதியாக கேட்டுக்கொள்வோம். அப்புறம் நடுவில் வரும் நிறைய சந்தேகங்களை கேட்க கூட பயம். அப்போதைய காலங்கள் மரியாதை என்பதெல்லாம் வேறு. நாங்கள் இருந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்திற்குள் அடங்கிய ஒரு சிறு ஊர். தங்களின் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. கதை முதன் முறையாக அறிகின்றேன்.
  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   கதையை முதன் முறையாக அறிந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.
   தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. அருமையான கதை. அழகிய படங்கள், ஆவணிச் சதுர்த்தி வாழ்த்துக்கள். நாளைக்குத்தானே சதுர்த்தி?..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆம் சகோதரி. நாளைதான் ஆவணி மாத சதுர்த்தி
   ஸ்ரீ விநாயக சதுர்த்தி. அண்டங்களை கட்டி ஆள்பவன் அனைவரையும் காத்தருள மனமாற பிரார்த்திக்கிறேன்.

   உண்மை கதையை ரசித்து மிகவும் நன்றாக இருப்பதென கூறியமைக்கும், விநாயகரின் அலங்கார படங்கள் அழகாக உள்ளதென சொன்னதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. உண்மைகதை சிலிர்க்க வைத்துவிட்டது.
  அருமையான அலங்காரம். காணொளி பாடல் பிடித்த பாடல்.
  நன்றி.
  தலைமுறைகளை நல்லபடியாக காத்து நிற்கட்டும் கண்பதி.
  பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


  மகன் ஆசைபட்டு வாங்கிய மாக்கல் பிள்ளையார் கொஞ்சம் கை பக்கம் பின்னம் ஏற்பட்டு இருந்தது, அதனால் யாரோ வீட்டுக்கு வந்தவர்கள் அதை கும்பிட வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் அதை வணங்காமல் தூக்கி போடவும் மனது இல்லாமல் பத்திரமாய் வைத்து இருந்தேன். அப்புறம் மனம் கஷ்டம் ஏற்பட்ட போது மீண்டும் அந்த பிள்ளையாரை வைத்து வணங்க
  ஆரம்பித்து விட்டேன். எதையும் தாங்கும் மனபக்குவத்தை கொடுத்து இருக்கிறார்.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   உண்மை கதையை படித்து உள்ளம் உருகியதற்கு மிகவும் நன்றி சகோதரி.
   அந்த விநாயர்கர்தான் எங்களுக்கு நிழலாக இருந்து எங்களை கஷ்ட நஷ்டங்களில் இருந்து காப்பாற்றி அரவணைத்து வளர்த்து வந்திருக்கிறார். அவர்தான் எங்களுக்கு எல்லா சமயத்திலும் இன்னல் தீர்த்து காத்தருளி யவர். தலைமுறையாக நாங்கள்தான் பூஜித்து வருகிறோம். எங்கள் தலைமுறைகளும் கண்டிப்பாக அவரை பூஜிக்க அவர் அருளட்டும். நல்லதொரு கருத்தை தந்தமைக்கு நன்றி சகோதரி.

   நான் திருமானமாகி (சென்னை 1979ல்) வந்தவுடன் எங்கள் மாமியாரும் ஒரு சின்ன கற்சிலை விநாயகரை பூஜித்து வந்தார்.அந்த விநாயகருக்கும், தோள் கைபாகத்தில்தான் சிறிது பின்னம். எனக்கும் அதைப் பார்த்தவுடன் மெய் சிலிர்த்து விட்டது. பிறந்த வீட்டில் வாசலில் இருக்கும் பிள்ளையார் என்னை வளர்த்து விட்டவர் என்னை மறக்காமல். எனக்கு அருள்பாலித்திட எனக்காகவே வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில் என் மனமே உருகி விட்டது.
   இன்றளவும் எங்கள் வீட்டு பூஜையறையில் அவர் எங்கள் பூஜை களை ஏற்றபடி அமர்ந்துள்ளார்.யார் சொல்லியும் அவரை புறக்கணிக்க மனம் வரவில்லை. நீங்கள் கூறியபடி எதையும் தாங்கும் மன நிலையை அவர்தான் தந்தருளுகிறார். அனைத்தும் அவன் செயல் அல்லவா...

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. இந்நிகழ்வு எங்கேயோ கேள்விப்பட்டது போலவோ, படித்தது போலவோ இருக்கிறது. நெகிழ வைக்கும் சம்பவம்.

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   இந்த உண்மை கதை உங்களுக்கும் கேள்விப்பட்ட உணர்வை தருகிறதா? திருமதி கீதா சகோதரி அவர்களும் அதையேதான் கூறினார்கள். திருநெல் வேலியில் நடைபெற்ற சம்பவங்கள் அந்த காலத்தில் நம் வீட்டு பெரியவர்கள் மூலம் பரவியிருக்கலாம். இல்லை அது குறித்து பின்னாளில் என்றேனும் அறிந்திருக்கலாம். நல்லதொரு கருத்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

   தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. உண்மைக்கதை வியக்க வைத்தது...

  இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

   ஆம்.. வியக்க வைத்த உண்மைக் கதைதான். ரசித்துப் படித்து கர்ருத்துக்கள் சொன்னமைக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. உண்மைக் கதை மனதைச் சிலிர்க்க வைக்கிறது.

  சற்றே தாமதமாக வந்து வாழ்த்துகளைச் சொல்கிறேன். விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

   எங்கள் வீட்டு பிள்ளையாரின் உண்மைக் கதையை ரசித்துப் படித்து கருத்து தந்திருப்பது மிகவும் மன மகிழ்வை தருகிறது.

   தாமதமெல்லாம் ஒன்றும் இல்லை. தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது என் தளம் வந்து கருத்திடுங்கள். வாழ்த்துகள் எப்போது வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம். தங்கள் வேலைகள் நடுவிலும் என் தளம் வந்து வாழ்த்துகள் சொன்னதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. அருமையான நிகழ்வு. அதை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இதே போன்ற ஒரு நிகழ்ச்சி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை சரித்திரத்திலும் படித்திருக்கிறேன்.
  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   அப்படியா? இதே போன்ற ஒரு நிகழ்வு இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை சரித்திரத்தில் உள்ளதா? சமயம் கிடைத்தால் நானும் படிக்கிறேன். விபரமாக தகவல்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.

   தங்கள் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். என்னை இது சமயம் எழுத வைத்தவன் அவனல்லவா! விநாயகரின் அருள் அனைவருக்கும் கிடைத்திட நான் மனமாற பிரார்த்திக்கிறேன்.

   தாமதமாக வந்ததற்கு வருத்தம் ஏதுமில்லை சகோதரி.. தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வந்து கருத்திடுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete