Monday, July 25, 2011

விசுவாசிகள்

இந்த ஒரு வாரக்காலத்தில், வீட்டின் அன்றாட பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. வேளாவேளைக்கு சோறும், பிற உணவுகளும் யாரும் சரியாக கொடுப்பாரில்லை. அந்த பழைய அன்பும், நேசமும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மொத்தத்தில், சந்தோசம் காணாமல் போய், துக்கமும், வருத்தமும் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த புதிதில் இப்படியில்லை.. சிறுவயதிலேயே இவர்கள் வீட்டிற்கு நானும் என் சகோதரனும் வந்து விட்டோம். அம்மாவையும், மற்றவர்களையும் பிரிந்த ஏக்கம் மனதில் பதியாமல் எங்கள் முதலாளி
எங்களை வளர்த்தார். நாங்களும் அவரை விட்டு இணை பிரியாமல், அவருக்கு உதவியாக அவர் காலால் இட்ட வேலைகளையும் செவ்வனே செய்து அவருடையே மதிப்பை பெற்றிருந்தோம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் வீட்டில் எத்தனையோ வேலைக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் இருவரும் அவருடைய வலதுகையாக மெய்க்காப்பாளனாக இருந்து வந்தோம். அவரும் எங்களை மதித்து அன்புடன் அரவணைத்தபடி இருந்து வந்தார்.

நாட்கள், மாதமாகி, வருடத்துடன் இணைந்து வளர்ந்துவிட்டதில், நாங்களும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில் அவருக்கு பக்கபலமாக, அன்புமாறாத மனத்துடன் பணிவிடை செய்து கொண்டிருந்தோம். அன்றொருநாள் எங்கள் முதலாளி காரில் மாற்றான் ஒருவனுடன் வந்திறங்கினார். நான் வழக்கம்போல் வாசலில் சென்று எங்கள் முதலாளியை நெருங்கினேன். என்னைப் பார்த்ததும் என் முதலாளியின் முகத்தில் அத்தனை மந்தகாசம். என்னைப் பார்த்து "டேய் பையா! இவர் யார் என்று தெரியுமா? என்றப்படி வந்தவரை "வாடா" என்ன தயக்கம்? என்று தோளில் கை போட்டப்படி உள்ளே அவரை அழைத்து வந்தார். இருவரும் அமர்ந்ததும் நான் என் முதலாளியின் அருகே சென்று நின்று கொண்டேன்.
உடனே அவர் என்னைப் பார்த்து "டேய் ஜானு! (அவர் எனக்கு வைத்த செல்ல பெயர்) இவர் என்னுடைய ஒன்று விட்ட மாமா பையன் சிவா" என்று ஆரம்பித்து அவருடனான உறவின் சுருக்கத்தை தான் சிறுவனாக இருந்த போது அவருடன் மரமேறி மாங்காய் பறித்ததிலிருந்து, மண்ணில் புரண்டு விளையாடி வளர்ந்த கதை வரை விரிவாகக்
கூறினார். நான் வந்தவரை பார்த்தேன்.  அவர்பார்வையே சரியில்லை! எங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்பதை எங்களது முறைத்த விழிகளில் கண்டு கொண்டார் எங்கள் முதலாளி. வந்தவரும் எங்களை கண்டவுடன் சற்று பயந்தது எங்களுக்கு புரிந்தது. அதற்குள் என்முதுகை தட்டியப்படி "டேய் அம்மாவை அழைத்துவா! இவரை அறிமுகப்படுத்தலாம்" என்று என்னை திசை திருப்பினார். நான் மனதில்லாமல் மாடியேறி அம்மாவை அழைக்கச் சென்றேன்.

காலம் கரைந்தோடியது! அந்த சிவாவும் வீட்டில் ஒருவராகிவிட்டான். போதாகுறைக்கு எங்கள் முதலாளியுடன் இணைந்து வேலையிலும் பார்ட்னராகி விட்டானாம். (முதலாளிதான் இதையெல்லாம் அடிக்கடி எங்களுக்கு தெரிவிப்பார்.) இப்போது அவன் படுத்தும் பாடு அதிகமாகி விட்டது. யாரிடமும் பயமில்லாமல் வீட்டின் வேலையாட்களை அதிகாரம் செய்வதும், எஜமானியம்மாவிடம் உரிமையுடன் பேசுவதுமாக, "நானும் உங்கள் முதலாளிக்கு சமம்" என்பதுபோல் எங்களிடம் நடந்து கொள்வதும், எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. என்ன செய்வது? எல்லாம் எங்கள் எஜமானர் கொடுத்த இடம் வேறு வழியின்றி அவனை பொறுத்துக் கொண்டோம்.

அன்று காலை என் முதலாளி மிடுக்கான உடை அணிந்து காரில் புறப்பட தயாரானார். வேலைக்காரர்கள் கூடவே இருபெட்டிகளை காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர் காரில் பயணிக்கும்போது அவருடன் நாங்களும் அவருக்குத் துணையாக சென்று பழக்கமானதால் அவரை தொடர்ந்து காரில் ஏற முற்பட்டோம். "டேய் ஜானு இரு! இரு! நீங்கள் வரவேண்டாம், நான் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன். நீங்கள் வீட்டில் இருந்து அம்மாவை கவனித்து கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் வந்து விடுவேன். அதுவரை சிவாதான் உங்களுக்கு முதலாளி" என்ற படி எங்களை தவிர்த்து விட்டு அவர் காரில் ஏறி கிளம்பி சென்று விட்டார். வேறு வழியின்றி அவர் போனதிக்கை சற்று வெறித்துவிட்டு வீட்டினுள் சென்றோம்.

மறுநாள் சிவாவின் அதிகாரத்திற்கு செவி மடுத்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தோம். அன்று வழக்கத்திற்கு மாறாக எங்களிடம் மிகவும் அன்புடன் பேசினான். காலை, மதிய உணவுகள் எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் தடபுடலாக உணவகத்திலிருந்து அவன் செலவில் தருவித்து தந்தான். கொஞ்ச நாட்களாக அவனுக்கு கூழைகும்புடு போட்ட வீட்டு வேலைக்காரர்கள் அவனை புகழ்ந்து தள்ளியப்படி இருந்தார்கள். எங்களுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை; முதலாளியின் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். இரவு வந்தது! இருகைகளில் பால் குடுவைகளை ஏந்தியப்படி சிவா வந்தான்! "டேய் ஜானு, பையா, என்ன இது இருவரும் இன்று சரியாகவே சாப்பிடவில்லை இந்த பாலையாவது குடியுங்கள்" என்ற படி அருகில் அமர்ந்து கொண்டான். அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் வாங்கி குடித்து வைத்தோம்!

விடிந்ததும் வீடு அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. விடிந்ததுகூட தெரியாமல் விழுந்து கிடந்த நாங்கள், விழித்துக் கொண்டு துள்ளி எழுந்தோம். வேலைக்காரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாளியம்மா சோகத்துடன் சோபாவில், சரிந்திருந்தார். என்ன வாயிற்று? ஒன்றும் புரியாமல் திரு திரு என்று நின்றிந்தபோது எங்கள் முதலாளி காரில் அவசரமாக வந்து இறங்கினார். நாங்கள் ஓடிச்சென்று அவரை அடைவதற்குள் அவர் ஹாலுக்குள் வந்துவிட்டார். அவரை கண்டதும் முதலாளியம்மா "ஓ"வென்று அழுதப்படி அவரை நெருங்கி அவர் கைகளைபிடித்தப்படி ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள் அருகில் வந்ததும் எங்களை முதலாளி கோபமாகப்  பார்த்தார். அவரது அதீதமான கோபத்தை கண்டு அரண்டு விட்டோம்; ஒன்றும் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது! நேற்று இரவு சிவா வீட்டிலிருந்த பணத்தையும் நகைகளையும் அபேஸ் செய்து விட்டு கம்பி நீட்டி விட்ட விபரங்களை வேலைக்காரர்கள் சொல்லி சொல்லி மாய்ந்து போனதை கேட்டதும், எஜமானரின் சோகம் புரிந்தது. போலீஸ் வந்து அனைவரையும் விசாரித்து விட்டு போனதில், மேலும் சில தினங்கள் சோகத்துடனே கழிந்தது.

அன்று முதலாளி அவர் அறையில் வேலைக்காரர்களுடன் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் "சீ போங்கடா நன்றி கெட்ட நாய்களா!" என்று உரத்த குரலில் சத்தம் போட்டார். வேலைக்காரர்கள் முகத்தை தொங்க போட்டபடி வெளியேறினார்கள். நான் மெல்ல முதலாளியின் அறைக்குள் நுழைந்தேன். "வாடா பெரிய மனுஷா! உன்னையெல்லாம் நான் நம்பினேன் பாரு! வீட்டை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டுதானே  சென்றேன்! ஐயோ! என் பணம் போய் விட்டதே! உறவு என்று வந்தவன் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டானே!" என்று புலம்பியவர், "போடா வெளியே! இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் !" என்று கோபத்துடன் சீறியப்படி அருகிலிருந்த பிரம்பை எடுத்து எங்கள் முதுகில் ஓங்கி ஓர் அரை விட்டார்.

வலி தந்த வேதனையுடன் கண்கள் கலங்க வெளியே வந்தோம். "சிவா வந்தவுடனே நம் சந்தேகத்தை வெளி காட்டினோம். நம் முதலாளிதான் புரிந்து கொள்ளவில்லை. உறவு கதைகள் சொல்லி நம்மை அலட்சியபடுத்தினார். இவர் ஊரில் இல்லாத நேரத்தில் "பிளான் செய்து இவரை சிவா ஏமாற்றியதை இவருக்கு புரிய வைப்பதெப்படி? என்று தெரியவில்லையே?" என்று நான் என்னருகே நின்ற என் சகோதரனிடம் விழியால் கூறினேன். அவனும் அதை ஆமோதித்தப்படி தலையை ஆட்டினான். மூடிய அறை கதவை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பார்த்தோம்.

மனமும் உடலும் சோர்வடைய கால்கள் தள்ளாடியது. "முதலாளி, கவலை வேண்டாம்! நீங்கள் இழந்த செல்வங்கள் போலீஸ் உதவியுடன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடும். சிவாவிற்கு, அவன் உங்களுக்கு செய்த துரோகத்திற்கு, அவனுக்கு தகுந்த தண்டனையும் கிடைக்கும். அவன் அன்று மயக்க மருந்து கலந்த பாலை எங்களுக்கு கொடுத்து குடிக்க வைத்து தைரியமாக திருடி சென்ற விபரங்களை அவன் வாயலேயே ஒப்புக் கொள்வான். அப்போதாவது நீங்கள் எங்களை புரிந்து கொள்வீர்கள்! அந்த உண்மையை இப்போது உங்களிடம் விபரமாக கூற எங்களுக்கு வாயில்லை, ஏன்னென்றால் நாங்கள் உங்களை போல் வாய்பேச முடியாத "ஆனால்" நன்றியுள்ள  உண்மையான நாய்கள். எங்களால் உங்களை விட்டு பிரிந்திருக்க முடியாது. மனிதர்களை கடிந்து கொள்ளும் போது "நன்றி கெட்ட நாய்களா!" என்று சொல்லி நீங்கள் எங்களை அவமான படுத்தினாலும் எங்கள் நன்றி எந்நாளும் மாறாதது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை நாங்கள் உங்களை விட்டு விலகமாட்டோம்." என்று மனதுக்குள் எங்கள் பாஷையில் பேசிக் கொண்ட நாங்கள் அந்த அறையின் வாசலில் படுத்துக் கொண்டோம்.

No comments:

Post a Comment