எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்... என்பது பழமொழி. (எண் ஜாண் என்பது எட்டு ஜாண். ஒரு ஜாண் என்பது அவரவர் கை விரல்களை விரித்து கட்டை விரலில் இருந்து சுண்டு விரல் வரையுலுமான அளவு என்பது எல்லோரும் அறிந்ததே...! இது அவரவர் கை விரல்களுக்கு ஏற்ப, அவரவர் உடம்பு (சிரசிலிருந்து, ஆரம்பித்து குதிங்கால் வரை) எட்டு ஜாண் அளவு என்பதாக முடியும்.)
அது போலவே எண்ஜாண் உடலில் உள்ள ஒரு ஜாண் வயிறும் முக்கிய பிரதானந்தான். ஒரு நாளேனும் வயிற்றிக்கு போதிய உணவு இல்லையேல் நம் உடல் பலம் தளர்ந்துதான் போகும். ஆனால், அதற்காக வயிறு கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு இரண்டொரு நாட்கள் பட்டினியாக இருக்கவும் இயலாது.
ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்!
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய்! ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே.
உன்னோடு வாழ்தல் அரிது!'
என்ற ஔவை பிராட்டியின் பாடலின்படி வயிற்றுக்கு வேண்டியதை அவ்வப்போது ஈவது நம் கடமையாகும்.
"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிக்கும் ஈயப்படும்."
இது அறிவுரையாக திருக்குறளில் கூறப்படுவது. "எப்போதும் கேள்வி ஞானந்தான் அறிவு விருத்தி பெற மிகச்சிறந்தது. அப்படியான கேள்வி ஞானங்களை கேட்க இயலாத துரதிர்ஷ்டவசமான அந்த சூழ்நிலையில், சிறிதளவு உணவை உன் உடல் தளர்ச்சியாக போகாமல் இருப்பதற்காக, உன் வயிற்றிக்கும் கொடு..!"என்பதாக கூறப்படுவது.
அதுபோல் சிரசில் (தலை) இறைவன் படைத்திருக்கும் மூளை ஒழுங்காக வேலை செய்தால்தான் அந்தந்த சமயத்திற்கேற்ப சூட்சுமமான அறிவும், அதன் பயன்களும் ஒருவரை முழுமையாக வந்தடையும். அதே சமயம் நம் மனதில் அநாவசியமாக தோன்றும் கர்வம் (தன்னைப் போல அறிவில் சிறந்ததாக யாருமில்லை என ஒப்பிடும் ஆணவம்) பலம் பெற்றால் மூளையின் செயல்பாடுகளும் சற்றே அகங்காரம் கொண்டு மாறுதல் கொள்ளும். அதனால்தான் நம் அறிவுக்கும்,(மூளைக்கும்) நம் மனதிற்கும் (எண்ணங்களுக்கும்) சம்பந்தமுண்டு என்பார்கள்.
"ஆகா.... வருட ஆரம்பத்தில் ரம்பமாக போர் அடிக்கிறீர்களே..! ஏன் இப்படி..?" என்பதற்குள் விஷயத்திற்கு வருகிறேன்.
இந்த இரண்டும் நம் வாழ்நாள் உள்ள வரை நம்முடன் இணைந்திருப்பவை. முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரண்டிற்காக உலகத்தையே காத்து ரட்சிக்கும் பார்வதி பரமேஸ்வரர் இடையே ஒரு தர்க்கமே நடந்துள்ளதாம் . . "அனைவரும் உண்ணும் உணவே ஒரு மாயை" என்பதாக சிவபெருமானும், இல்லை...இல்லை.. உணவு இல்லையேல் உலகத்தில் ஒரு ஜீவனும் எழுந்து நடமாட இயலாது. உலகம் மொத்தமும் ஸ்தம்பித்து நின்று விடுமென" பதிலுக்கு பார்வதி தேவியும் வாதிட்டனர்.
பொதுவாக இருவருக்கிடையே (அதுவும் தம்பதியினர்) ஒரு வாதம் என்று வந்து விட்டால் அது பிரச்சனையை முடிவாக கொண்டதாகத்தான் அமையும் இந்த உலகத்திற்கே மாதா, பிதாவாகிய இருவரிடையே எழுந்த வாக்குவாதமும் இவ்விதமே ..!
வாதத்தின் இறுதியில் கோபம் கொண்ட அம்பிகை சிவனை விட்டு விலகிப் போக, சிவனாரும் "உணவு ஒரு மாயை" என்பதை அனைவரும் உணர்வதற்காக அண்டசராசரங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி வைத்தார். பார்வதி தேவி சொன்ன மாதிரி உலகம் ஸ்தம்பித்தது. தட்ப வெப்ப நிலைகள் மாறுதல்களை சந்தித்தன. சூரிய சந்திரன், அஸ்டதிக்பாலகர்கள் உட்பட அனைவரும் தம் கடமையை செய்ய மறந்தனர். தாவரங்கள் செழித்து வளரவில்லை. பயிர் பச்சைகள், செடி, கொடிகள் தம் நிலை மறந்து கிடந்தன. மக்கள் பசியால் தவித்தனர். இந்த பயங்கர நிலை கண்டு உலகத்தின் மீது இரக்கம் கொண்ட அன்னை பார்வதி தேவி அன்னபூர்ணேஸ்வரியாக உரு கொண்டு உலகத்தின் பஞ்சத்தை போக்கி, மக்களுக்கு உணவளித்து/ உணர்வளித்து உலகத்தை பழைய நிலைக்கு கொண்டு வந்தாள். அதற்காக இந்த பூமியிலேயே தங்கி விட்டாள். இதுவும் அன்னையின் ஒரு விளையாட்டுதான் என தேர்வர்கள் துதிபாட அன்னை பரமேஸ்வரி அகமகிழ்ந்து மக்களின் பசிப்பிணி நீக்கி அருள் பாலித்தாள் சிவனும், அன்னையின் ஆசிகள் பூரணமாக இந்த உலகத்திற்கு கிடைக்க ஒரு வழியை உண்டாக்கிய திருப்தியில் திளைத்தார். இவ்விதம் இவர்களின் விவாத தர்க்கம் நல்ல விதத்தில், பயனுள்ளதாக முடிவடைந்தது.
இந்த அன்னை அவ்வாறு குடி கொண்ட இடம் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் கலசா எனும் வட்டத்தில் உள்ள ஹொரநாடு என்ற ஊரில் உள்ளது.
அன்னபூர்ணேஸ்வரி.🙏.
###############################
இந்தக் கோவில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. கோவிலில் மூலவராக இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி சிலை அகத்தியரால் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையானது சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்த சிலை புதுப்பிக்கப்பட்ட பின்பு, அம்மனுக்கு ‘ஆதி சக்த்ய மஹா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி’ என்று புதிய பெயரை சூட்டி அழைத்து வந்தனர். இந்த சிலை முழுவதும் தங்கத்தால் ஆனது. அன்னபூர்ணேஸ்வரி தாய் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
######################################
இந்த செய்தி,மற்றும் இந்த ஒரு படம் மட்டும் இணையம். நன்றி கூகுள்.
ஆக கூடி எண்ஜாண் உடம்பிற்கு வயிற்றின் பிரதானத்தைப் பார்த்தோம். இனி சிரசு...! ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதனால் சற்று அகங்காரம் மேற்பட சிவனை மதியாது "நீங்கள் நான்கு திசைகளிலுமாக என்னை சுற்றி வந்து வழிபட வேண்டும். அப்படியும் பூரணமாக என்னை சுற்றி வர இயலாது. ஏனெனில் என்னுடைய ஐந்தாவது தலையை எப்படி வழிபடுவீர்கள்" என ஒரு சமயம் கர்வமாக கேட்டு ஏளனமாக நடந்து கொள்ளவே, சிவன் மிகவும் கோபம் கொண்டு பிரம்மாவின் ஒரு தலையை தன் வலது கைகளாலேயே கிள்ளி கொய்தார். அதன் வலி பொறுக்காத பிரம்மா," இந்த தலை தங்கள் கைகளிலேயே கபால ஓடாக நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும்...! எவர் இதன் நிறைய பிக்ஷை வழங்கியும், அது நிரம்பாமல் வழிந்து ஓடிக் கொண்டேயிருக்கும். ஆனால், என்றைக்கு இந்த ஓடு நிரம்ப தானியத்தை வழியாமல் நிரப்ப முடிகிறதோ அன்று வரை இந்த கபால ஓடு தங்கள் கைகளை விட்டு விலகாது" என சாபமிட்டார். சிவனும் அந்த சாபத்தின்படி கைகளில் அந்த கபால ஓட்டை (சிரசை) சுமந்தபடி பிச்சாடனராக மூவுலகும் வலம் வந்தார். தேவர்கள் அனைவரும் ஓடு நிரம்ப பிக்ஷை தந்தும் அந்த சிரசாகிய ஓட்டில் தானியம் (உணவு) முழுவதுமாக நிரம்பியும் நிற்காமல் வழிந்து ஓடியதால், அவர் கைகளை விட்டு அந்த ஓடு அகலவில்லை.
இறுதியில் இந்த கோவிலில் உள்ள அன்னபூரணேஸ்வரியின் அருட்பார்வையால்தான், தானியங்களால் கபால ஓடு நிரம்பி வழியாமல் நின்று சாப விமோசனம் அடைந்ததால், அந்த கபால ஓடு அவர் கைகளை விட்டு தானாக அகன்றது. இவ்விதம் அந்த சிரசின் (ஓட்டின்) அகங்காரத்தையும் இந்த அன்னபூரணேஸ்வரி (உணவு மாதா) களைந்தாள் என்பது வரலாறு. ஆக நம் எண்ஜான் உடலுக்கு சிரசும், வயிறும் எவ்வளவு முக்கியமென இந்த இரண்டு புராண கதைகளும் நமக்கு ஒரு பாடமாக உணர்த்துகிறது.
இந்த பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இப்போது நாங்கள் குடும்பத்துடன் தீடிரென ஒருநாளில் முடிவாகி புறப்பட்டு சென்று வந்தோம். எங்களை தீடிரென வரச் சொல்லி அழைத்ததும் கண்டிப்பாக அந்த அன்னை அன்னபூர்ணேஸ்வரிதான். அதனாலேயே அவள் அருட்பார்வை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது.
டிசம்பர் 25ம் தேதியன்று இரவில் பயணம். நடு இரவில் சுற்றி வளைத்து மலை ஏறும் போது உலகமே தட்டாமாலையென ஆடியது. நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு சென்ற வண்டி ஓட்டுனரின் கைவண்ணத்தில் சட்சட்டென பாதையின் சரிவான விளிம்புகள் கண் முன்னை வந்து பயமுறுத்த வளைந்து, வளைந்து சென்று ஒரு மட்டும் காலை 6 மணியளவில் கோவில் இருப்பிடத்தை அடைந்தோம். அங்கு நான்கு மணி நேரத்திற்கென்று முன் கூட்டியே (முதல் நாளன்று) ஏற்பாடு செய்த ஒரு தங்குமிடம் சென்று குளித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலை அடைந்தோம்.
அன்னையின் தரிசனத்தை மறக்கவோ, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 🙏. கேட்பவர்க்கு மட்டுமின்றி, கேளாதோர்க்கும் கேட்காமலேயே தன்னருளை தரும் அன்னை அன்னபூர்ணேஸ்வரி தன் அருளை பூரணமாக தந்தாள். அன்னையே..! அனைவருக்கும் உன்னருளை வாரி வழங்கிடு என பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டோம்.🙏.
கீழே காணும் இவை நான்கும் என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள்.
பனி சூழ்ந்த அடர்வனம்.
ஆனாலும் நாங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை (இங்கு வந்த புதிதில்) சென்ற போது அங்கிருந்த பனிபொழிவு இப்போது இல்லை.அப்போது இதே காலை வேளையில் பனி பார்வையை மறைத்தபடி கண்களின் முன்னால் பெய்தது. குளிர் பயங்கரமாக தாங்க முடியாமல் தாக்கியது. இப்போது பனியினால் வெறும் புகைமூட்டந்தான். குளிரும் அவ்வளவாக இல்லை. காரணம் அங்கும் காடுகளை அழித்து கான்கீரிட் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன.
மலர்ந்த இப்புத்தாண்டில் முதலில் இறை சம்பந்தப்பட்ட பதிவை வழங்க வைத்த இறைவனுக்கு என் பணிவான நன்றி. நாங்கள் அந்த இரண்டு மூன்று தினங்களில் மேற்கொண்டு சென்ற இடங்களை இறைவன் அருள் இருந்தால் ஒவ்வொன்றாக பகிர்கிறேன். 🙏.
இதை படிக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள்.🙏.