Sunday, March 30, 2025

இட்லிகளின் ராஜ்ஜியம்.

இன்று உலக இட்லி தினமாம்.

(30.3. 25.) 

நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை  குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது  மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக  கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. . 

நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள்,  தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள்  பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும்  சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது. 

பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர். 

காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன. 

பின்பு வீட்டுக்கான அளவுடன்  சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர். 

அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும்  பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை. 

"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது. 

அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது. 

இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன. 

இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று  முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்

எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...! 

இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

54 comments:

  1. அன்பான வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய பதிவுக்காக இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு எழுதி தயார் செய்து வைத்திருந்தேன். அதை தொடர முடியாமல் ஏதேதோ வேலைகள் குறுக்கிட்டதாலும், நேற்று குழந்தைகளின் அழைப்பை தட்ட முடியாமல் வெளியில் சென்றதாலும், இன்றும் அனேக வேலைகள் வந்து விட்டதாலும், பதிவை இரவு வரை தொடர்ந்து எழுதவே இயலவில்லை. இன்று உலக இட்லி தினமென்று காலண்டரில் படித்ததிலிருந்து இட்லி பற்றிய பதிவு எழுத எனக்கு மிக விருப்பமாகி போனது. (ஏனெனில் இட்லி எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.)

    நிறைய எழுத யோசித்து வைத்தது மறந்து போய் அதை இன்றைய தினத்திற்குள் முடிக்க வேண்டுமேயென அவசரமாக ஏதோ எழுதி வெளியிட வேண்டியதாக போயிற்று. (வெளியிட்ட நேரத்தைப் பாருங்கள். 11.56) இதைப்படிக்கும் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். அடுத்த ஆண்டு இதே தினத்திற்கு இறைவன் அருளால், நன்றாக எழுதுகிறேன். :))வாசிக்கப் போகும் அனைவருக்கும் என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. எஞ்சாய் செய்தீர்களா அக்கா? அதுதான் முக்கியம்....பதிவு ப்ளாக் அல்லாம் அப்புறம் தான். இது இருக்கவே இருக்கு....ஆனால் குழந்தைகளோடான தருணங்கள் பொக்கிஷம்...அது மிஸ் ஆகக் கூடாது. பதிவு கொஞ்சம் தாமதமாகப் போட்டாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை...உங்கள் உடல் நலம் மிக மிக முக்கியம் என்பதை எப்பவுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அக்கா. நம்மை நாமே வருத்திக் கொள்ள வேண்டாமே.

      //நிறைய எழுத யோசித்து வைத்தது மறந்து போய் அதை இன்றைய தினத்திற்குள் முடிக்க வேண்டுமேயென அவசரமாக ஏதோ எழுதி வெளியிட வேண்டியதாக போயிற்று. (வெளியிட்ட நேரத்தைப் பாருங்கள். 11.56)//

      ஆரம்பத்தில் அதாவது வலைத்தளம் வந்த புதிதில் எனக்கும் இப்படியானவை இருந்தன. கொஞ்சம் என் தூக்கம் கெட்டது. துளசி ராக்கோழி. நானோ 9 மணிக்குத் தூங்கிவிடுபவள். எனவே பதிவு போடும் பரபரப்பும், தூக்கமின்மையும் கொஞ்சம் என் உடல் நலனைப் பாதிக்கத் தொடங்கியது....குறிப்பாக சர்க்கரை கூடியது.

      இப்பவும் நிறைய பதிவுகள் இருக்கின்றன. தொடர் பதிவுகள் கூட முடிக்காமல்.....ஆனால் என் உடல் நலம், மன நலம் மிக முக்கியம் என்பதில் குறியாக இருக்கிறேன். பரபரப்பு பிபியை சர்க்கரையை எகிர வைக்கும். அதனாலதான் கதைகள் கூட எழுதாமல் அப்படியே கிடக்கின்றன.

      நீங்க மிக நன்றாகவே எழுதுகிறீர்கள்! உங்கள் திறமைகள் அதிகம். அதை வெளிப்படுத்துங்கள் அக்கா ஆனால் அதே சமயம் உங்கள் உடல் நலன் மிக மிக முக்கியம் அக்கா.

      கீதா

      Delete
  2. இட்லி மகாத்மியம் அருமை.

    நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால் உகாதி ஸ்பெஷல் டிபன் இட்லிதான் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இந்த வருட உகாதிக்கு இட்லி செய்யவில்லை. ஆனால், எப்போதுமே வருடத்திற்கு ஒருநாள் என வரும் விஷேடங்களுக்கு தெ. வ. பிறப்பு, த. வ.. பிறப்பு தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை என அனைத்திற்கும் காலை இட்லிக்கு ரெடி பண்ணி செய்து விடுவேன். அதை தட்டிப்போக விடுமாறு செய்வதில்லை. ஆனால் இப்போது நேரங்கள் இல்லாமையால், சில முடியாமைகளினாலும் இட்லி செய்ய இயலவில்லை. என்னவோ காலமானது அது போகிற போக்கிற்கு நானும் வளைந்து போகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சின்ன வயதில் அல்லது முந்தைய தலைமுறையில் டிபன் என்பதே அபூர்வம், அதனால் இட்லியே ருசியாக இருந்தது. எனக்கு பள்ளி பதின்ம வயதில் பள்ளிக்கு டிபன் கொண்டு செல்லணும் என்ற ஆசையே அனேகமாக நிறைவேறவில்லை.

    பிந்தைய காலங்களில் நிறைய டிபன்கள் வந்துவிட்டதால் இட்லிக்கான மவுசு குறைந்துவிட்டது.

    ReplyDelete
  4. எனக்கு எப்போதும் விருப்பமானது மிளகாய்கொடி தடவின இட்லி. ஒரு மாத்த்துக்கு முன் கீதா ரங்கன்(க்கா) அவருக்குக் கொண்டுவந்திருந்த ராகி இட்லி மெத்மெத் என்று இருந்தது. மிபொடி தடவி எடுத்துவந்திருந்தால் வாங்கிக்கொண்டிருந்திருப்கேன்.

    ஒரு சமயம் சூடான பரைப்பு தக்காளி ரசத்தில் மிதக்கும் இட்லி என் விருப்பமானது,

    கர்நாடகாவில் இட்லியை உளுந்து மாவு அரைத்து, அரிசி ரவையைக் கலந்து செய்வதை நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த மாதிரி இட்லியிலும் எனக்கு விருப்பம் அதிகம் (மி பொடியுடன் சாப்பிட)

    ஆனால் ஒரு தடவை அவசரத்தில் ரவா இட்லிக்கு அந்த ரவையை உபயோகித்து ரவா இட்லி பல்லிளித்து அதன் மீதான ஆசை போய்விட்டதால், அரிசி ரவை, அதாவது இட்லி ரவை வாங்குவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சாப்பிடவே மாட்டேன்னுதானே சொன்னீங்க!!!!! அப்புறம் என்ன பொடி தடவி கொண்டு வந்திருந்தா சாப்பிட்டிருப்பேன்னு.....முதல் நாளே பேசினதுதானே ம்ஹூக்கும்!

      எங்களுக்கும் பிடிக்கும் பொடி தடவி. ஆனால் பிரயாணத்தில் சில சமயம் நெஞ்சுகரித்தால் நல்லது இல்லை என்பதால்...காரம் தவிர்க்கிறோம். வீட்டிலும் காரம் தவிர்க்கிறோம்..மிளகாய்ப் பொடி என்றால் கண்டிப்பாக மோர் அல்லது தயிர் கூட இருக்கும்.

      கீதா

      Delete
    2. கர்நாடகாவில் இட்லியை உளுந்து மாவு அரைத்து, அரிசி ரவையைக் கலந்து செய்வதை நீங்கள் குறிப்பிடவில்லை.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...நெல்லை , அக்கா கர்நாடகான்னு குறிப்பிடலை அவ்வளவுதான் ஆனால் இட்லி ரவை கலந்துன்னு சொல்லிருக்காங்க

      //இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. //

      கீதா

      Delete
    3. எனக்கு எப்படித் தெரியும் நீங்கள் செய்யும் ராகி இட்லி மெத்தென்று இருக்கும் என்று?முதல்லயே சாப்பிடறேன்னு சொல்லிட்டு, அது கல் மாதிரி இருந்தால் என்ன செய்வதாம்?

      Delete
    4. ஆகா... .! சகோதரி. பதிவை நன்கு படித்து எனக்கு பக்கபலமாக ஒரு கருத்து (இட்லி ரவையுடன் கூடிய இட்லி தயாரிப்பை நான் குறிப்பிட்டது.. ) தெரிவித்தமைக்கு உங்களுக்கு இட்லி கொப்பரையில் துணி கட்டி வார்த்த நல்ல நாலு மிருதுவான இட்லியும் (அதற்கு மேலும் நீங்கள் சாப்பிட்டாலும் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.மாறாக சந்தோஷந்தான்... ) அதற்கு தோதாக நாலு வகை சட்னி, சாம்பாருடன் பரிமாற ஆசை வருகிறது. எப்போது வீட்டுக்கு வரப்போகிறீர்கள்...?

      Delete
  5. துபாயில் (1994) நண்பரின் வீட்டில் இரண்டு ஃபிரிட்ஜ் ஃப்லீசரில் ஏகப்பட்ட இட்லி மாவு பாத்திரங்களை அடுக்கியிருந்தார்கள். உறவினர்கள் சேர்ந்து வசித்த அந்த வீட்டில் எப்போதும் இட்லிதானாம். அதற்காக செலவழிய செலவழிய புது மாவு அரைத்துவைத்துவிடுவார்களாம்.ச

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நல்ல தகவல். ஒரு வீட்டில் அனைவருக்கும் இட்லியை பிடித்துப் போகிறது என்பதை கேட்டதும் மகிழ்வு உண்டாகிறது. இதைப்போலத்தான் அன்றாடம் எங்கள் பிறந்த வீட்டிலும் கல்லுரலில் அரைப்பது தொடர்ந்தது. பின்னர் நீங்கள் சொல்வது போல் ப்ரிஜில் பாத்திரங்களாக இட்லி மாவும் தொடர்ந்தது. இப்போது எப்படி எனத் தெரியவில்லை. எங்கள் அண்ணா பேத்திகள் தோசைகளைதான் அதிகம் விரும்புவார்கள் என நினைக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. உண்ணும் பதிவுகள் என்றுமே சுவாரஸ்யமானவை!  இட்லி அப்பா மாதிரி.  முதலில் பிடிக்கும்.  குறிப்பிட்ட வயதில் அதன்மேல் கோபமும் வெறுப்பும் வரும்.  குறிப்பிட்ட வயது கடந்தவுடன் மேகம் கலைந்தது போல மறுபடி அதன்மேல் பிடிப்பு உண்டாகி விடும், அதன் அருமை தெரிந்து விடும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் முன்பு அனைவருக்குமே இந்த இட்லி பிடித்தது. சொல்லப் போனால், தினமும் இட்லி காலைக்கென சாப்பிடுகிறவர்கள் பணக்காரர்கள் என மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்தது. பின் அது ஒருகாலத்தில் அனைவருக்குமே பிடிக்காத உணவாகி , வயதானவர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டது.இப்போது ஒரளவுக்கு அனைவரும் இது செரிமானமாகும் உணவென கருத்தில் கொண்டு சாப்பிட தொடங்கி உள்ளனர். நிழலின் அருமை வெய்யிலில்தானே தெரியும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இட்லிக்கு அரைக்கும் மாவிலேயே எதையெதையோ கலந்து ரகளை செய்ய ஆரம்பித்து விட்டோம்!  அவல், பீட்ரூட் (உடனே வார்த்து விடவேண்டும்) உருளைக்கிழங்கு இப்படி...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா நானும் இந்த ரகளை எல்லாம் ....நீங்க செஞ்சது கூட நல்லா வந்திருந்துச்சு ..உங்க கற்பனைக்கும் சேர்த்து ஒரு பொக்கே கொடுக்கறேன்....அதை இட்லி மாவுல போட்டு ட்ரை பண்ணிடாதீங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா

      Delete
    2. பூ பொக்கே கொடுக்காமல் காய்கறி பொக்கே கொடுத்தால் அதையும் சேர்த்து போட்டு ரகளை செய்து விடலாம்!

      Delete
    3. நான் துபாய் சென்றுவிட்டு விடுமுறையில் இந்தியா வந்தபோது நான் வேலைபார்த்த (மேட்டூர்) கம்பெனி நண்பர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று ஒருவரை ஏற்பாடு செய்யச்சொன்னேன். விளையாட்டாக தயிர் சாதத்தில் எல்லாக் காய்களையும் போட்டாலும் பிடிக்கும் என்று சொன்னேன் (மனதில் கேரட் துருவலை நினைத்துக்கொண்டு). அவரோ நிஜமாகவே கத்தரி, வெண்டையையும் வதக்கிச் சேர்த்துவிட்டார். ஒரு நாள் பயணமாக இருந்தாலும் இனிய நினைவைத் தந்த பயணம் அது.

      Delete
  8. வீட்டில் அன்பாய் ஆடு வளர்ப்பார்கள், கொஞ்சிக் குலாவுவார்கள்.  ஒரு விசேஷ தினத்தில் அதை அறுத்து சாப்பிட்டு விடுவார்கள்.  அதுபோல மாவு அரைத்து. இட்லி குண்டானில் துணியெல்லாம் அன்பாய்க் கட்டி, அழகாய் இட்லி வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி...அப்புறம் அதன்மேல் கத்தி கபடாவுடன் பாய்ந்து துண்டாக்கி, காரப்பொடி தடவி கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுத்து என்று கொலை செய்வோம்!

    ReplyDelete
    Replies
    1. இட்லி வார்ப்பது என்பது சுலபமான வேலை. ஆளுக்கு 5-6 போட்டால் வேலை முடிந்தது. இந்த ஆண்களுக்குப் பொறுக்காதே... இட்லி பண்ணி, அதை கட் பண்ணி, மசாலா போட்டு பொரித்து என்று நிறைய வேலை சொல்லிவிடுவார்களே...

      Delete
    2. கொஞ்ச நாளில் அலுத்துப் போகும்.  மறுபடி இட்லியை அப்படியே வெண்மையாக சாப்பிடும் ஆசை வந்து விடும்!  எல்லாம் ஒரு சுழற்சிதான்.

      Delete
  9. பிரமையா நிஜமா தெரியவில்லை, கல்லுரலில் ஆட்டி வார்க்கும் இட்லிதான் ருசியாகத் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு துணி போட்டு வார்க்கும் இட்லிதான் ருசியாக இருப்பதாகப் பிரம்மை. என் மனைவிக்கு ஹோட்டலில் இட்லி ஆர்டர் செய்து அது சுடச்சுட இல்லையென்றால் என்னை வறுத்துவிடுவாள் திரும்பவும் அந்த ஹோட்டலுக்கு அவள் வருவது கடினம்

      Delete
    2. அதே போலதான் சப்பாத்தியும்...   பிரெஸ் பண்ணி போட்டு எடுத்தால் பிடிக்க மாட்டேன் என்கிறது.  கையாழ் உருளையில் தேய்த்து எடுத்து தவாவில் போட்டு எண்ணெய் இட்டு திருப்பிப் போட்டால்தான் சுகம்.

      Delete
    3. ப்ரெஸ் பண்ணிப் போட்டு எடுப்பதற்குப் பெயர் அட்டைனா? எனக்கு அட்டைச் சப்பாத்தி பிடிக்கவே பிடிக்காது (கடைகளில் பேக்கிங்கில் வரும் சப்பாத்தி இந்த டைப்புதான்)

      Delete
    4. கடைகளில் விற்பது இன்னும் மோசம்.  வீடுகளில் வட்டமாக ஒரு ப்ரெஸ்ஸரை வைத்துக் கொண்டு அமுக்கிய சப்பாத்திகள் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். 

      அப்படியே ஹோட்டல்களிலும் காணக்கிடைக்க, கீதம் ரெஸ்டாரண்ட்டில் பழைய மாடல் சப்பாத்தியைப் பார்த்தபோது சந்தோஷத்தில் கண்ணில் நீர் துளிர்த்தது!

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். கல்லுரலில் அரைத்து துணிகட்டிய இட்லி தட்டுகளில் இட்லி கொப்பரையில் வார்க்கும் இட்லிகளே சிறந்தது. ஆனால், இப்போது முறைப்படி செய்ய இயலவில்லை. கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். கல்லுரலில் அரைத்து துணிகட்டிய இட்லி தட்டுகளில் இட்லி கொப்பரையில் வார்க்கும் இட்லிகளே சிறந்தது. ஆனால், இப்போது முறைப்படி செய்ய இயலவில்லை. கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ​வாழ்க இட்லி. தென் இந்தியாவின் அடையாளம். ஆவியில் வேக வைக்கும் உணவுகளின் தலைவர்/தலைவி. இதற்கென்று ஒரு நாள் வைத்ததுதான் வியப்பு.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஆவியில் வேக வைக்கும் உணவுகளின் தலைவர்/தலைவி. இதற்கென்று ஒரு நாள் வைத்ததுதான் வியப்பு./

      ஆம். எனக்கும் அது வியப்புத்தான். அந்த வியப்பில்தான் இட்லி பதிவு. மேலும் இட்லி என்றுமே ருசியான உணவு வேறே...?! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. நேற்று இட்லிகள் தினம் என்று தெரியாமலேயே அதை நினைவு கூர்ந்தேன்.

    எப்படி என்றால், நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு குண்டன் வந்து எங்களிடம் 'பசிக்கிறது..  இட்லிக்கு பத்து பைசா கொடு' என்று கேட்பான்.  ஒருநாள் பார்த்தல் நாங்கள் தியேட்டரில் சிறிய வகுப்பில் அமர்ந்து படம் பார்க்கிறோம், அவன் மேல்வகுப்பில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

    இவனை நினைவுறுத்தும் வகையில் அதே மாதிரி டிராயர் அணிந்த குண்டன் ஒருவன் வந்து என்னை நிறுத்தி பஸ் மிஸ் ஆகிவிட்டது இருவது ரூபா கொடு என்றான் நேற்று,.  இட்லி குண்டன் (குண்டான் அல்ல!) நினைவு வந்து விட்டது!

    ReplyDelete
  12. எனக்கு அடுக்கடுக்கான தட்டுகளில் இட்லி வார்ப்பார்களே (பலர் ஹோட்டலில் பார்த்திருக்கலாப்) அதை வீட்டுக்கு வாங்கி உபயோகிக்க ஆசை. மனைவி, இரண்டுபேர் இட்லி சாப்பிட அது எதற்கு என்று தடா போடுகிறாள். ரொம்பச் சொன்னா அதை வைக்க இடமும் இல்லை என்கிறாள்

    ReplyDelete
    Replies
    1. நானும் ஆசைப்பட்டேன்!  ஆனால் அது கூட குண்டானில் வார்க்கும் இட்லிக்கு ஈடாகாது!  - ஒரு ஈடுக்கு 81 இட்லி தயாரானாலும்!

      Delete
    2. நெல்லை எனக்கும் ஸ்ரீராம் சொல்வது போல குண்டானில் வார்க்கும் இட்லி தான் ஃபேவரிட். அதுவும் நீங்க் மேலே சொல்லிருக்காப்ல துணி போட்டு வார்க்கும் இட்லி நன்றாக இருக்கும் என்ற பிரமை உண்டு. இப்பவும் வார்க்கிறேன் ஆனால் குண்டான் மேலே இருக்கு...பரணில் ஸோ குக்கரில் தான்

      கீதா

      Delete
    3. எனக்கும் குண்டான் இட்லிதான் பிடிக்கும், துணிபோட்டு வார்க்கணும். நேற்றுகூட மனைவி கேட்டாள், இட்லி குண்டா இருக்கணுமான்னு... இல்லைனா சின்ன மெலிய இட்லிகளை வயிறு நிரம்ப சாப்பிட்டால் ஏதோ ஏகப்பட்ட இட்லிகளை முழுங்கியதுபோல ஒரு எண்ணம் வந்துவிடும்.

      Delete
    4. நெல்லை ரசிக்க மாட்டார் என்றாலும் சொல்கிறேன்..

      சாலையோரத்தில் ஆயா இட்லி குண்டானில் இருந்து எடுத்து துணியைப் பிரித்து தட்டில் போடும் இட்லிகளை காணும் பாக்கியம் நான் தாண்டும் சமயம் கண்ணில் பட்டால் சைக்கிளை விட்டு இறங்கி விடுவேன்!  ஐந்து வகை சட்னி பொடிகளுடன் சுடச்சுட இட்லி சாப்பிடலாம்.  சமயங்களில் கல்தோசையும்.

      Delete
    5. எனக்கும் ஆவி பரக்க ரோட்டோரக் கடையில் செய்யும் இட்லியைப் பார்த்தால் ரொம்பவே ஆர்வம் வரும். என்னிடம் மி.பொடி ந.எண்ணெய் இருந்தால் உடனே வாங்கிவிடுவேன் (அதற்கான சந்தர்ப்பம் வரவில்லை) ஆனால் அங்கு தரும் எந்த விதமான தொடுகையும் எனக்குப் பிடிக்காது, சுத்தம் இருக்காது என்பது என் மனதில் பதிந்துவிட்ட எண்ணம்

      Delete
    6. எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை.  தயங்காமல் ருசி பார்த்து விடுவேன்!!!

      Delete
    7. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இட்லி குண்டன் கதை சுவாரஸ்யமானது. ஒன்று கவனித்தீர்களா? அந்த காலத்து பத்து பைசா இட்லியை நாங்களும் வீட்டில் மாவு ஆட்டாத நேரங்களில், (அந்த நேரம் பார்த்து எனக்கோ , என் அண்ணாவுக்கோ ஜுரம் வேறு வந்திருக்கும்) அப்பா போத்தி
      ( பிராமணாள்) ஹோட்டலில் வாங்கி வந்து தருவார். இரண்டு இட்லி தான். அது இன்னமும் இரண்டு வாங்கி வரக்கூடாதா என்றிருக்கும். அதற்கு நாற்பது காசுகள் வேண்டுமே..! தினமும் வீட்டில் இட்லிகளை சாப்பிட்டாலும், உணவகத்தின் மோகம் அப்போதே... அந்த ஜுரத்திலும்.. ஹா ஹா.

      இப்போது இரண்டு இட்லி ஒரு ஹோட்டலில் 60 ருபாய். அன்று எனக்கு சாப்பிட மனதே ஆகவில்லை. பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது ஹோட்டல்களில் ஒரு இட்லி பதினைந்து ரூபாய்க்கு குறைந்து கிடைப்பதில்லை.

      ஆக.. உங்களிடம் பஸ்ஸுக்காக இருபது ரூபாய் கேட்டவன் இரண்டு இட்லிகளை (இரண்டு கிடைத்தால்) வாங்கி சாப்பிட்டு விட்டு அருகிலிருக்கும் தூரத்தை நடந்தே கடந்திருப்பார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. "பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. //

    உண்மை கமலாக்கா...நானும் பரிசோதிக்கவில்லை இன்னும்.

    அந்தக்காலத்துல வீட்டில் டிஃபன் செய்வதே ரொம்ப அபூர்வம். ஏதாச்சும் விசேஷம்னா தான் குறிப்பா தீபாவளிக்கு இட்லி பார்க்கலாம். அப்படியே அமாவாசை அப்புறம் இன்னும் இப்படியான ஆண்கள் சாப்பிடக் கூடாதுன்னு வர பலகார தினங்களில் அவங்களுக்கு மட்டும் பண்ணிப் போடுவாங்க நாங்கலாம் ஏக்கத்தோடு...குழந்தைகளிலும் கூட ஆண் பெண் வித்தியாசம்....ஹூம் என்ன வளர்ப்போ? நான் ஒருத்திதான் எங்கள் வீட்டில் எதிர்த்து நின்றவள். மத்தவங்க எல்லாம் வாய் பொத்திங்க...

    பள்ளிக்கு நான் மதிய உணவு கொண்டு சென்றதே இல்லை. பழைய சாதத்தில் மோர் கலந்து தண்ணியாக வைப்பாங்க. அவங்களைக் குற்றம் சொல்ல முடியாது வீட்டில் நிலைமைஅது. ஆனால் அந்தப் பருவத்தில் மனப்பக்குவம் முதலில் இல்லை. பேருந்தில் கூட்டதில் தொங்கிக் கொண்டு போக வேண்டும் அது வழிந்து ஸ்மெல் வரும்...பள்ளியில் என்னோடு அமர்ந்து யாரும் மதியம் உணவு சாப்பிட மாட்டங்க. நான் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலைமை. தோழிகளின் வார்த்தைகளும் அப்படி இருக்கும். அவ்னகளுக்கும் அப்பருவத்தில் மனப்பக்குவம் இருந்திருக்காதுதான்....7 ஆம் வகுப்பு சமயத்தில்.... எனவே மதியம் உணவு கொண்டு செல்வதை நிறுத்தினேன். வீட்டிலும் யாரும் கண்டுக்கலை. ...அப்படியான வளர்ப்பு.....இருக்கும். மனம் ரொம்ப வேதனைப்பட்டது. ஒரு தாழ்வு மனப்பான்மை வரத் தொடங்கியது.....அப்போது என்னைக் காத்தவர் என் பள்ளி ஆசிரியை மேரிலீலா அவங்கதான். என் மனம் பக்குவம் அடைந்தது நிறைய யோசிக்க வைத்தது. கேள்விகள் நிறைய வரும்...

    நான் கல்லூரி வந்த சமயத்தில்தான் கொஞ்சம் இந்த டிஃபன் வகையறாக்கள் கண்ணில் படத் தொடங்கியது.

    எனக்குப் பிடித்த டிஃபன் இட்லி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஒரு தாழ்வு மனப்பான்மை வரத் தொடங்கியது..// டிட்டோ.... என்ன பண்ணறது நம்மை வளர்க்கறவங்க அப்படி வளர்த்தால்தான் நாம் ஒரு வள்ளுவர் போல, கணிதமேதை இராமானுஜம் போல, வாரியார் போல வருவோம்னு நினைச்சாங்களோ என்னவோ? அந்த பதின்ம வயது வாழ்க்கையை நினைக்கவே எனக்குப் பிடிப்பதில்லை.

      Delete
    2. பள்ளிக்காலங்களில் மதியத்துக்கு எனக்கும் மோர் சாதம், குழம்பு சாதம்தான்.  அம்மா கொஞ்சம் சூடான சாதத்தில் சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், (மல்லிக்கெல்லாம் வழியில்லை)  நறுக்கிப் போட்டு கொஞ்சம் கழித்து மோரூற்றி உப்புப் போட்டு பிசைந்து கொடுக்கும் சாதம் மதியம் சாப்பிட அப்போது தேவாம்ருதம்.  இப்போதும்!

      Delete
    3. 8ம் வகுப்பு வரை அம்மாவிடம் இருந்தபோது மதியம் சுடச்சுட தக்காளி ரசம், சுடச்சுட சாதம், தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிடுவேன். பெரியப்பா வீட்டில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

      Delete
    4. சிறு வயதில் ரசம் சாதம் என் எதிரி!  உடம்பு சரியில்லை, ஜுரம் என்றால் ரசம் சாதம் மட்டும் கொடுப்பார்களா, ரசம் சாதம் சாப்பிட்டாலே ஜுரம் வருவது போல இருக்கும்!  இப்போதெல்லாம் ரசம் இல்லைன்னா கண் கலங்குகிறது!!!

      Delete
    5. வணக்கம் சகோதரி
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /உண்மை கமலாக்கா...நானும் பரிசோதிக்கவில்லை இன்னும்./
      ஓ.. நீங்களும் அதை இன்னமும் பரபரிசோதிக்கவில்லையா? இங்கு எங்கேயோ அப்படியொரு வசதி வந்து விட்டதாக வீட்டில் சொல்லி கேள்விப்பட்டேன்.

      . /அப்படியே அமாவாசை அப்புறம் இன்னும் இப்படியான ஆண்கள் சாப்பிடக் கூடாதுன்னு வர பலகார தினங்களில் அவங்களுக்கு மட்டும் பண்ணிப் போடுவாங்க நாங்கலாம் ஏக்கத்தோடு...குழந்தைகளிலும் கூட ஆண் பெண் வித்தியாசம்....ஹூம் என்ன வளர்ப்போ? /

      இதை என் புகுந்த வீட்டில் அனுபவித்திருக்கிறேன். அம்மா வீட்டில் அவ்வளவு கண்டிப்புக்கள் அப்படியில்லை. புகுந்த வீட்டில் எங்கள் குழந்தைகளுக்கே இரவு விரத தினங்களில் டிபன் வகையிறாகள் செய்யும் போது, குழந்தைகளுக்கு தரக்கூடாதென சட்டங்கள். எனக்கு ஏக்கமாக பார்த்து வெறும் மோர் சாதத்தை பிடிக்காமல் சாப்பிடும் குழந்தைகளை விட்டு நாம் மட்டும் விதவிதமாக உண்பதில் வருத்தம் வரும். ஆனால், என்ன செய்வது? பிடிக்கவில்லையென்றால் நீ பட்டினி இரு என்று பதில் வரும் போது.

      உங்கள் பள்ளி சென்ற நிலைமைகள் மனதை வருந்த வைத்தது. எனக்கு கொஞ்சம் அருகிலேயே பள்ளி என்பதால் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விடுவேன். அதன் பின்பு. வீட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து விட்டேன்.

      உங்களுக்கும் இட்லி பிடிக்குமென்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அக்கா, ஆமாம் அப்பலாம் நான் மகன் பள்ளி செல்லத் தொடங்கியது வரை கல்லுரலில் தான் அரைத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்ததால் பெரும்பாலும் தனீ வீடு வாடகை வீடுகளில் கல்லுரல் இருக்கும். அதன் பின் அங்கேயே ஃப்ளாட்டுக்குப் போனப்ப தான் என் அத்தை எனக்கு க்ரைண்டர் வாங்கிக் கொடுத்தார். பெரிய க்ரைண்டர்.

    அது பல வருடங்கள் இருந்தது. சென்னை வந்த பிறகும் கூட. நன்றாகவே அரைக்கும். அதன் பின் ரொம்பத் தாமதமாகத்தான் அல்ட்ரா வாங்கினோம்.
    என் தோழிகளின் வீடுகளில் எப்பவுமே இட்லி மாவு தயாராக இருக்கும் அரைத்து வைத்துக் கொண்டே இருப்பாங்க.

    நாகர்கோவிலில் இடியாப்பம், ஆப்பம் புட்டி எல்லாம் கேரளத்து ஸ்டைலில்தானே செய்வாங்க. சோ மதியம் என் தோழிகள் எனக்காகக் கொண்டு வருவாங்க...அதில் ரோஸ்மேரி என்ற தோழியை இப்பவும் நினைவு கூர்வதுண்டு எனக்குத் தனியாக எடுத்து வருவாள். அருமையாக இருக்கும். கல்லூரியிலும் அது தொடர்ந்தது,

    இட்லி என்றதும் பழைய நினைவுகள் தொடர்ச்சங்கிலி போல உருளத்தொடங்கிவிட்டன...ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆமாம் நானும் வாடகைக்கு சென்ற விடமெல்லாம் கல்லுரலில் அரைத்துக் கொண்டுதான் இருந்தேன். அதில் ஒரு வீட்டில் கல்லுரல் இல்லை. அம்மி மட்டுந்தான் இருந்தது. எனவே சென்னை மந்தைவெளியில் விலை தந்து கல்லுரல் வாங்கினேன்.பிறகு அதையும் சுமந்தபடி மதுரை திருமங்கலத்தில் பல வீடு. இப்போது அல்ட்ரா இருக்கிறது. ஆனால், தினசரி எப்போதும் அரைக்கத்தான் அவ்வளவாக முடியவில்லை. ஆனால், இட்லியை இன்னமும் விரும்புகிறேன்.

      /இட்லி என்றதும் பழைய நினைவுகள் தொடர்ச்சங்கிலி போல உருளத்தொடங்கிவிட்டன...ஹாஹாஹா/

      ஆம் இட்லியும் ரவுண்டாக உருளும் வண்ணமாகத்தானே இருக்கும். இட்லி பிரியையாகிய எனக்கு தினமும் இட்லி இருந்தால் சௌகரியமாக இருக்கும். ஆனால் எல்லோரும் அதை விரும்புவதில்லை. தங்கள் மலரும் நினைவாக வந்த கருத்துரைகள் கண்டு மகிழ்ந்தேன். ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. வணக்கம் சகோ
    இட்லி புராணத்தில் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      உங்களது ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. வணக்கம் அனைவருக்கும்.

    அனைவரிடமும் வந்த கருத்துரைகளுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றிகள். 🙏. ஒவ்வொன்றிக்கும் பதில் கருத்து தர தாமதமாகும். (எப்போதும் போலா என நீங்கள் நினைப்பது, கேட்பது புரிகிறது.:))) ) இந்த கைப்பேசியில் உடனே பதில் தர சில சமயங்களில் இயலாமல் போய் விடுகிறது. வேறு ஒன்றுமில்லை. அதுவும் இன்று வீட்டில் அனைவருக்கும் விடுமுறை வேறா? அதனால் இன்றைய பிளான்கள் முடிவு இல்லாமல் கலந்தாலோசனைகளில் போய் கொண்டு உள்ளது. பதிவை ரசித்துப் படித்தமைக்கு அனைவருக்கும் என் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கரைச்சமாவு தோசை பண்ணிப்போட்டால், சுறுசுறுப்பாக அப்புறம் எங்க வெளியில் செல்லலாம் என்றெல்லாம் ஆலோசனை ஓடும். பேசாமல், குழம்புசாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்று போட்டால், வயிறு நிரம்பி, அப்பாடா..டிவி பார்த்துக்கொண்டே கொஞ்சம் தூங்கலாம்னு நினைப்பாங்க.

      Delete
    2. அந்த கரைச்ச மாவு தோசை இன்றைக்கு கேன்சல் ஆகி விட்டது. (நாளை பார்த்துக் கொள்ளலாம் என அனைவரும் சொல்லி விட்டபடியால்) நீங்கள் சொன்னபடி சாம்பார், தயிர் சாதங்கள்தான்.. அடாடா..! இப்போது உங்கள் அனைவரின் அரட்டை கச்சேரியில் கலந்து கொள்ள முடியவில்லையே என எனக்கு வருத்தமாக உள்ளது. அதற்கு என் கையில் ஒட்டியபடி கைப்பேசியை கையோடு வைத்துக் கொண்டிருந்தால், வீட்டில் அனைவரின் கவனமும் என் மேல் திரும்பி விடும். பிறகு என்ன..? பிரம்மாஸ்திரங்கள்தான்.. ஹா ஹா ஹா. அஸ்திரங்களை என் மேல் ஒரு முறைக்கு மேல் ஏவக்கூடாது என்ற வரங்களை நான் பெறவில்லையே ...! உங்கள் களைகட்டிய கச்சேரியை அவ்வப்போது படித்து ரசிக்கிறேன்.👋👋. ஆனால், நான் கலந்து கொள்ள வரும் போது, கச்சேரி கலைந்து விடும். 😥. 😭 அனைவரும் வந்து சுவையான கருத்துக்களை தந்திருப்பதற்கு நன்றி. நன்றி.🙏.

      Delete
  17. இட்லி தினத்திற்கு பதிவு அருமை. குழந்தைகளுடன் வெளியில் சென்று வ்னஹ்து ஓய்வு எடுக்காமல் இட்லி தினத்திற்கு பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள்.

    எனக்கு கொஞ்சம் மனநிலை, உடல் நிலை சரியில்லை அதனால் இங்கு வர தாமதம்.

    உறவினர்கள் வருகை வேறு இருக்கிறது. இரண்டு நாளில்.
    முன்பு மாதிரி இட்லி , தோசைக்கு மாவு இல்லையென்றால் எல்லோருக்கும் கை ஒடிந்த மாதிரி என்ற நிலை மாறி விட்டது. இப்போது வித விதமாக டிபன் சாப்பிட்டு பழகி விட்டார்கள்.

    யூடியூப் மருத்துவர்கள் அதிகமாகி விட்டார்கள், மாவு அரைத்து நீண்ட நாள் குளிசாதன பெட்டியில் வைத்து சாப்பிட வேண்டாம், வாயு தொந்திரவு வந்து விடும் என்றும்
    டயட் என்ற பேரில் இட்லி, தோசை கூடாது என்றும் சிறு தானிய தோசை, இட்லி தான் நல்லது எனவும் சொல்லி இட்லி, தோசை செய்வதை தடுத்து வருகிறார்கள்.

    எத்தனை தடைகள் வந்தாலும் இட்லி, தோசை போல உணவு வேறு எதுவும் இல்லைதான்.

    என் கணவருக்கு இட்லி மிகவும் பிடித்த உணவு.
    பஞ்சு போனற இட்லி சுட சுட என்றால் விருப்பம் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /எனக்கு கொஞ்சம் மனநிலை, உடல் நிலை சரியில்லை அதனால் இங்கு வர தாமதம்./

      தாமதமெல்லாம் ஒன்றில்லை. அதுதான் பதிவை கண்ட நாளே வந்து விட்டீர்களே..! கால் வலி அதிகமாகி உள்ளதா? நீங்கள் வழக்கமாக செல்லும் மருத்துவரிடம் சென்றீர்களா? மனசு வேறே சரியில்லை என்கிறீர்கள். உங்கள் உடல்/ மன நிலைகள் சரியாகி வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

      இவ்வளவு முடியாமையிலும் தாங்கள் இட்லி பதிவை ரசித்து கருத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

      உறவுகள் வேறு இரண்டொரு நாளில் வர இருப்பதாக கூறுகிறீர்கள் . அதனால் வரும் அதிக வேலைகளை செய்யாமலும் இருக்க முடியாது. செய்தாலும் உடல் நல உபாதைகள் அதிகமாகி விடும். கஸ்டந்தான். சீக்கிரம் உங்கள் உடல் நலன் சரியாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      இட்லி போன்ற இலகுவான உணவுதான் எப்போதுமே சிறந்தது. சரியாக சொன்னீர்கள். உங்கள் கணவருக்கும் பிடித்தமான உணவு இது எனபதறிந்து மகிழ்ச்சி. தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete