தமிழக முன்னாள் முதல்வராகவும், மக்கள் திலகமுமாக திரையுலகிலும் கொடிக்கட்டி பறந்த திரு. எம். ஜி ராமச்சந்திரன் அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்த நாள். இது நம்மால் எளிதில் மறக்க முடியாத நாளும் கூட. இரண்டு இடங்களிலும் தன் திறமையை பறைசாற்றிய அவரின் புகழ் அவர் மறைந்தும் என்றும் நீடித்து நிற்கும். / நிற்கிறது. அதுபோலவே நல்ல கருத்துள்ள மறக்க முடியாத பல பாடல்கள் திரைப்படங்களில் இவருக்கெனவே உருவானவை. அந்த வரிசையில் இன்று நான் பகிர்ந்த இந்த பாடல்கள்.
பிரபல பாடகர் திரு. டி. எம் சௌந்திரராஜன் இவருக்கெனவே பிறந்தது போல், நல்ல கம்பீரமான குரலுடன் இந்த நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதற்காகவே இறைவனால் நிர்ணயக்கப்பட்டவர். திரு. டி. எம் எஸ் அவர்கள் நிறைய பக்தி ரசமிக்க பாடல்களையும் இறைவன் அருளால் தந்துள்ளார். தவிரவும் மக்கள் திலகத்திற்கெனவே நிறைய பாடல்களைப் பாடி இருவரின் வெற்றிகளையும் நிலை நிறுத்தி கொண்டவர். இவரின் புகழும் என்றும் நீடித்து நிற்கும்.
மேலும் இந்த பாடல்களை இயற்றி, அதற்கு இசையமைத்து மேலே குறிப்பிட்ட இருவரின் வெற்றிகளுக்கும் படிக்கல்லாக இருந்த பாடலாசிரியர்களுக்கும் இசையமைத்த இசை மேதைகளுக்கும் என் பணிவான வணக்கங்கள். நன்றிகள். 🙏.
திருடாதே பாப்பா.. நல்ல அறிவுரைகளுடன் கூடிய ஒரு பாடல்.
திரைப்படம்: திருடாதே (1961)
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
. தூங்காதே தம்பி தூங்காதே.. சோம்பலை விரட்டும் நல்ல பாடல்.
திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். இதுவும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பாடல்.
படம் : வேட்டைக்காரன்
இசை : K.v.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் :: T.M.செளந்தரராஜன்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...! குழந்தைகளுக்கான அறிவுரை பாடல்.
திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: : K.v.மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. கண் போன போக்கிலே காலும்...! மனம் போன போக்கெல்லாம் மனிதனும் போகக்கூடாது என்பதை அறிவுறுத்தும் பாடல்.
பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ?
படம் : பணம் படைத்தவன் ( 1965 )
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலி
நேற்று (23ஆம் தேதி. திங்கள்கிழமை) தேசிய விவசாயிகள் தினம். இது ஏதேச்சையாக இன்றைய முதல் நாளாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான இந்த அற்புதமான பாடலை நான் பகிர நினைத்தேன்.அதற்கு பொருத்தமாக இந்த (விவசாயிகள் தினம்.) நாளும் இணைந்து கொண்டது. இந்த படத்தில் நல்ல நடிப்புடன் அருமையான இந்தப்பாடலையும் திரு. எம்ஜிஆர் அவர்கள் விவசாயிகளை போற்றுபடி தந்திருக்கிறார்.
படம்: விவசாயி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: A.மருதகாசி
இசை: K.V. மகாதேவன்
கூகுளுக்கு நன்றி பாடல்கள் பகிர்வுக்கு.
இன்னமும் பல பல பாடல்கள் நம் மனதை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன. இப்படிபட்ட பாடல்களைசொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பதிவு நீண்டு விடும் என்பதால் மற்றதை நம் மனதோடு விட்டு, கூட்டுத் தொகையில் சிறந்த பாடலாக நான் நினைத்ததை மட்டும் (ஆ(றாக)ரமாக) பதிவிடடு உள்ளேன். மறக்காத இந்த பல பாடல்களை தந்த இந்த அபூர்வ கலைஞர்களுக்கு நம் வணக்கங்களும் நன்றிகளும்🙏.
இந்த பதிவையும், பாடல்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.
சென்றவருட தொடக்கத்தில், (ஒரு வேளை இது அதற்கும் முந்தைய வருட தொடக்கமா என்பது சரியாக நினைவில் இல்லை.:)) ) குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் குடும்பத்துடன் மைசூர் இரண்டு மூன்று நாட்களுக்குள் சென்று வருவதாக திட்டம் தீட்டி சென்று வந்தோம். சனிக்கிழமை அதிகாலை கிளம்பி, திங்கட்கிழமை மாலை வாக்கில் வீடு திரும்பி விட்டோம். காலையில் செல்லும் வழியில் குழந்தைகளுக்காக ஒரு பார்க் (ஜி.ஆர்.எஸ் பார்க். அதில் நீர் நிலைகளில் விளையாட்டுக்கள். அதற்கு உள்ளே செலவதற்கே ஒரு நபருக்கு ரூ1000 கட்டணம் வசூலித்தார்கள். கிளம்புவதற்கு முன் கூட்டியே ஆன்லைனில் மகன் அதற்குரிய கட்டணம் கட்டி ஏற்பாடு செய்து விட்டார். ) சென்று விட்டு மாலைக்குள் தங்குமிடமாக ஒரு தரமான ஹோட்டல் ரூமில் இடம் அமர்த்திக் கொண்டுதான் சென்றோம் மாலையில் வேறு எங்கும் சுற்ற முடியாதென்பதால் குழந்தைகளும் (பேரன், பேத்திகள்) நீரில் ஓடியாடி விளையாடி அலுப்பாக இருப்பதால், இரவு உணவை அருகிலிருக்கும் வேறொரு உணவகத்தில் முடித்துக் கொண்டு வந்து,ஓய்வெடுத்து மறுநாள் காலை மைசூர் அரண்மனைசெல்லலாமென முடிவு செய்தோம் .
மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை முதலில் சாமுண்டி கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு அரண்மனை செல்லலாம் என நினைத்தால், அந்த ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியில் உள்ளவர்கள். "ஞாயிறு கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வார. நாட்களான நாளை காலை செல்லுங்கள்" எனக் கூறியதால், கோவிலுக்கும் செல்லும் முடிவை மாற்றி வைதது அரண்மனை செல்ல முடிவாகியது.
சரி... அன்று அரண்மனை செல்லாமென்றால், ஞாயிறு அரண்மனை உள்ளே சுற்றிப்பார்க்க அனுமதி இல்லையாம். அதற்கு பதிலாக அன்று மாலை செயற்கை தீப அலங்கராங்களுடன் ஒளிமயமான அரண்மனையை பார்க்கலாம் என்றதும், காலை வேறு ஒரு சில இடங்களுக்கு சென்று விட்டு, மதியம் உணவு முடிந்ததும் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு மாலை அரண்மனையை காணச் சென்று. அரண்மனை மின்னொளி அலங்காரங்களை சுற்றிப் பார்த்து விட்டு. அறைக்கு திரும்பினோம். அந்த காட்சிகளை இன்றைய பதிவாக படங்களுடன் தந்துள்ளேன. இது புகைப்படங்களுடன் இணைத்து ஒரு வழியாக பதிவாக்கி அப்போதே கொஞ்சம் எழுதி வைத்ததை, இப்போதும் வெளியிடாது விட்டால், மேலும் ஒரு மாமாங்கம் ஆகி விடுமென்பதால், இன்று பாக்கி எழுதாததை முடிந்த வரையில் எழுதி முடித்து இணைத்து வெளியிடுகிறேன். :))
இது என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். அங்கு அன்று ஒரே கூட்டம். அத்தனை இருளிலும், மக்கள் வெள்ளமாக அரண்மனை முழுக்க ஒளிரும் ஒளிக்காட்சியை காண வந்திருந்தார்கள். நாங்கள் கொஞ்ச. தூரம் வரை தட்டித் தடுமாறிதான் நகர்ந்து சென்றோம். ஆனால், அரண்மனை உள்ளே சென்று அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்குமோ தெரியவில்லை... ?
அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிகள் உண்டா.?இல்லை கைப்பேசி முதற்கொண்டு காமிராக்களை வெளியில் பத்திரப்படுத்தி விட்டுதான் உள்ளே செல்ல வேண்டுமா..? தெரியவில்லை. இப்போது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசி என்னிடம் உள்ளது. ஆனால் அது முன்பொரு தடவை (பல, பல வருடங்களுக்கு முன்பு.) மைசூர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சென்ற போது என் கையில் இல்லை. ஏதோ இந்த அரண்மனை மின்னொளி காட்சியை மட்டுமாவது இப்போது எடுக்க முடிந்ததே என மனம் மகிழ்வுற வேண்டியதுதான்..!
ஒரு தடவை நாங்கள் இங்கு வந்த புதிதில் (பல வருடங்களுக்கு முன்பாக) சென்ற மைசூர் பயணத்தில் அரண்மனை உள்ளே சென்று சுற்றிப் பார்த்துள்ளோம். அப்போது இந்த மாலை தீப அலங்காரங்கள் எல்லாம் இல்லையென நினைக்கிறேன். ஒரு நாளில் மாலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அரண்மனையை சுற்றிப்பார்க்க அனுமதி இருந்தது. ஆனால், அப்போது ரசிக்கும் ஆவலும், நேரமும் குறைவோ என்று இப்போது என் மனதில் தோன்றுகிறது.
அப்போது ஒரே நாளில் மைசூரில் பிரசித்தியான சில இடங்களை மட்டும் சுற்றி விட்டு மறுநாள் களைப்புடன் திரும்பி வந்து விட்டோம். இப்போது இரு தினங்கள் அங்கு தங்கியும் அரண்மனை உள்ளே சென்று பார்க்கும் நேரம் வேறு பல அனேக திட்டங்களுக்கிடையே நழுவி விட்டது.
ஒரு பழமொழி உண்டே..! கல்லுக்கும், நாயிக்குமான ஒரு பழமொழி....! அது போலத்தான். ஆனால், இதற்கும் தகுந்த ஒரு கதை உள்ளதை இன்றுதான் கூகுளில் ஒர் இடத்தில் படித்தேன .(பழமொழிகளின் உண்மையான விளக்கத்தை உணர்த்தும் கதை).
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் பொதுவாக நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.
அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.
அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறுதான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி.
கதை விளக்கத்திற்கு நன்றி. கூகுள்.
இந்தப்பதிவை படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.
இன்று மஹாகவி பாரதியார் பிறந்த நாள், மற்றும், சர்வ தேச மலைகளின் தினம். பெரிய மலைகளைப் போல நல்ல குணங்களில் இவரும் உயர்ந்தவர் என்பதினால், மலைகளும் இவருடன் இன்று சேர்ந்து புதிதாக பிறந்த சந்தோஷத்தை இணைத்து கொண்டதோ ? "பா"க்களுக்கு பெருமை சேர்த்த அவருடன் அழகுக்கென்ற வார்த்தைக்கு மறுபெயரெடுத்த "ரதி"யும் அவர் பெயருடன் சேர இணங்கியதால்,"பாரதி" என்றானாரோ..? இல்லை,"பார்" உள்ள வரை இவரின்"பா"க்களுடன்,"ரதி" போன்ற அழகும் சேர்ந்து மிளிரும் என்பதினால் இவர் பா(ர்)ரதி என்று ஆனாரோ..? எது எவ்வாறாயினும், இந்த மஹாகவியை நம் மனமென்ற ஒன்று உள்ளவரை அந்த மனதிலிருந்து அகற்ற இயலாது.
இது சின்னதாக என் சிந்தனையில் உதித்த ஒரு கவிப்பாடல்.(?)
மஹாகவியின் மனதினிலே
மலர்ந்த கவிதை பூக்களை
மலர்சரமாக ஏற்றுக் கொள்ள
மலையும், மடுவும் கடுகளவும்
மறுத்ததில்லை.
பறவைகளும் இவரின்
பாக்களை அனுதினமும் கேட்டு
பரவசத்துடன் தானும் அவ்வாறே
பயிற்சித்து பாடி மகிழ்ந்தன.
சித்தம் மகிழ தன் கிளை பரப்பி
சிரிப்போடு, வளைந்தோடும்
சிந்து நதி மட்டும், தம்
சித்தம் களித்து அவர் ஈந்த
இச்சிறப்பான கவியை
சிறிதளவேனும் மறுக்குமா...!
இது நம் தேசமான இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும்/விவரிக்கும் ஒரு பாடல். பாரதியார் அவர்கள் இயற்றிய அருமையான பாடல். நடிகர் திலகத்தின் அருமையான முகபாவங்களுடன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இன்று பாரதியாரின் பிறந்த நாள் என காலையிலேயே என் நினைவடுக்குகளின் மூலமாக தெரிந்தவுடன் என் மனதினில் அடிக்கடி உதித்து வந்த பாடல். ஏதோ என்னால் இயன்ற வண்ணம் அவசரமாக இன்று மாலைக்குப் பின்னர் தொகுத்த இப்பதிவினில், அவர் புகழ் பற்றி இன்னும் நிறைய எழுதும் அளவிற்கு நான் கற்கவில்லை. ஆதலினால் இப்பாடலை ரசித்து அவர் புகழை நினைவு கூர்வோம்.
இன்றைய நாளை நம் சகோதரிகள் கீதா சாம்பசிவம் அவர்களும், அனுராதா பிரேம்குமார் அவர்களும் எப்போதுமே மறந்ததில்லை..! வருடந்தோறும் மஹாகவியின் நினைவுகள் அவர்கள் நெஞ்சில் இந்த நாட்களில் மலர்ந்த பதிவுகளாகி விடத் தவறியதில்லை. அவர்கள் வீட்டின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களின் எண்ணங்களையும், நேரங்களையும் இன்று தனதாக்கி கொண்டதோ என்னவோ? அவர்களுக்காக, அவர்களின் சார்பாக இன்று பாரதியாரின் நினைவுகளை நாம் போற்றுவோம். அவர் கவித்துவமான மனதை வாழ்த்தி (மலைகளின் உயரத்திற்கும் மேல் ஒப்பான அவர் கவிமனதை வாழ்த்த நமக்குத் தகுதியில்லை.) வணங்குவோம். 🙏.
இம் மண்ணில் பிறந்து சிறந்து விளங்கிய மாமனிதராகிய மஹாகவிக்கும் வணக்கங்கள்.🙏. மண்ணில் உயர்ந்து நிற்கும் இந்த மாமலைகளுக்கும் வணக்கங்கள்.🙏.
இப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.