Wednesday, May 10, 2023

வாழையும், சேனையும்.

பொங்கலுடன் எரிசேரி. 

நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம்  சம்பந்தபட்ட அனைத்தும்  அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும். 

ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது. 

வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது.  எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது. 

வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம்  இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும். 

வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக  இதை மதிய  உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! . 

வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்

இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. . 

வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும். 

வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது  சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது  உருதெரியாமல் கலந்தும் விடும். 

இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி  துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.) 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள். 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன். 


இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள். 


இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள். 

இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை.  ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது. 

முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 

ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன்  தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும்  கடாயில் அதனுடன் சேர்த்து  வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன்  சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும். 


இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம். 

மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும்  சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி  சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :))) 

பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும்  இணைக்கவில்லை

இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..? 

அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.

50 comments:

 1. வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி மிக நன்றாக வந்துள்ளது.

  இரண்டையும் சேர்த்துப் பண்ணியதை இப்போதுதான் அறிகிறேன். எதற்கு தனித்தனியாக வேகவைக்கவேண்டிய காய்களைச் சேர்க்கணும்?

  சேனை வேஎ வைப்பதில் கவனம் தேவைதான். சிவப்புச் சேனை தொண்டை அரிப்பைச் சில நேரங்களில் ஏற்படுத்திவிடும்.

  நானும் சேனை வாங்கி நாளாகிவிட்டது. இந்த வாரம் வாங்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   சமையல் குறிப்புக்களை ரசித்து முதலாவதாக வந்து கருத்துக்கள் தந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
   இந்த இரண்டு காய்களும் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். அப்படி ஒன்று அன்றைய தினத்தில் கிடைக்காத பட்சத்தில் இருக்கும் ஒன்றை வைத்து தனித்தனியாகவும் செய்திருக்கிறேன்.

   ஆம். சிகப்பு கலரில் உள்ள சேனைக்கிழங்கு அதை கழுவி அரியும் போதே கைகள் அரிப்பையும் தந்து விடும். கைகளில் கொஞ்சம் நல்லெண்ணை தடவிக் கொண்டால் சௌகரியமாக இருக்கும். அதை நறுக்குவதற்கும் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதன் சுவையும், தொண்டை அரிப்புடன் மாறுபடும். அதனால் கொஞ்சம் வெள்ளை கலர் சேர்ந்ததாக பார்த்து வாங்க வேண்டும்.

   இங்கும் இப்போதெல்லாம் இதை அடிக்கடி வாங்குவதில்லை. சேனை ரோஸ்ட் எங்கள் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்தமானது என முன்பெல்லாம் அடிக்கடி வாங்குவோம். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். .

   Delete
 2. படங்கள் அழகு.

  வெண்பொங்கலும் எரிசேரியும் என்ன காம்பினேஷனோ.

  அது சரி, படங்கள் பல முறை செய்ததின் கலவை என்று சொல்லியிருக்கீங்களே. அது எரிசேரி படமா இல்லை வாழைக்காய் புளிக்கூட்டா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   படங்கள் அழகாக உள்ளன என்ற கருத்துக்கு மகிழ்வுடன் கூடிய நன்றி. அன்றைய தினத்திற்கு வெண்பொங்கலுக்கு அந்த மாறுபட்ட சுவை நன்றாக இருந்தது.

   ஆம். படங்கள் முன்னுக்குப் பின்னாகத்தான் எனக்குத் தோன்றியது. எப்போதுமே அடுக்கடுக்காக ஒரு ரெசிபி செய்முறையை படங்கள் எடுப்பேன் நான். இன்று ஆங்காங்கே தேடிப்பிடித்து இந்த எரிசேரி படங்களை தொகுத்துள்ளேன். ஒரு வேளை அது புளிசேரியோ..? :)))).
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. வெண்பொங்கலுக்கு தேங்காய் துருவலா? கொப்பரைத் தேங்காய் வறுத்துச் சேர்க்கணுமோ? இது புதிது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   கொப்பரை இல்லை அம்மா வீட்டில் இப்படியும் செய்வார்கள். தேங்காய் துருவலை இறுதியில் வறுத்து சேர்த்துள்ளேன். இதை புலகம் என்போம். ஆனால், இங்கு வந்த புதிதில் மாமியார் தேங்காய் சேர்க்காமல்தான் செய்வார். ஒவ்வொருவர் ஒவ்வொரு பாணி. ஒவ்வொரு சுவை. அதன்படி கற்று கொண்டதுதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நேற்று கொஞ்சம் வெளியில் வேலையாகச் சென்று விட்டோம். அதனால் பதில் தர தாமதம். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. எரிசேரி எங்க செய்முறையே வேறே. கொத்துமல்லி விதையெல்லாம் வறுத்து அரைப்பதில்லை. வாழை, சேனை இரண்டும் போட்டும் பண்ணி இருக்கோம். போடாமல் தனியாகவும் பண்ணுவோம். எப்படிப் பண்ணினாலும் காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கையில் அரைத் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி, அரைத்தேக்கரண்டி தனி மிளகு பொடி சேர்த்து உப்புச் சேர்த்து வேக விடுவோம். சுமாராக ஒரு சின்னத் தேங்காய் எரிசேரிக்குத் தேவை. ஒரு மூடியைத் துருவி கொஞ்சம் அரிசி ஊற வைத்தது அல்லது அரிசி மாவு சேர்த்து நன்கு அரைத்துக் கொதிக்கும் காயில் கலந்து ஒரு கொதி விட்டுப் பக்கத்தில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை சேர்த்து இன்னொரு மூடித் தேங்காயைத் துருவிக் கொண்டு அதில் போட்டுச் சிவக்க வறுத்து எரிசேரியில் கொட்டி விடுவோம். இதான் எங்கள் செய்முறை.

  ReplyDelete
  Replies
  1. எரிசேரிக்குப் பெருங்காயமும் சேர்ப்பதில்லை. அவியல், மோர்க்கூட்டு, எரிசேரி போன்றவற்றிற்குப் பெருங்காயம் இல்லாமலேயே மணம் இருக்கும்.

   Delete
  2. கமலாக்கா இங்க கீதாக்கா சொல்லியிருக்கறபடிதான் எரிசேரி செய்வது. நோ தனியா, நோ பெருங்காயம்....

   நம் வீட்டிலும் இப்படித்தான்.

   கீதா

   Delete
  3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நானும் ஒரு வித்தியாசத்திற்காகத்தான் இவைகளை சேர்க்கிறேன்.சகோதரி. மற்றபடி மிளகு போன்றவை மட்டுந்தான். அது போல் பொங்கலின் பால் சேர்ப்பதும், தேங்காய் பூ துருவல் சேர்ப்பதும் ஒவ்வொரு சுவைகளை தரும்தான். நாம்தான் விதவிதமாக சமையல் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் ஆயிற்றே...!

   தங்கள் அன்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி. இதன் முந்தைய கதைப்பகுதிக்கும் தங்கள் அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன். தங்கள் கருத்தை தெரிந்து கொள்ளும் ஒரு ஆர்வந்தான்... தங்களால் முடியும் போது வந்து படிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. வெண் பொங்கலுக்கு நாங்க நல்ல பாலாக விடுவோம். அநேகமாகக் குக்கரில் வைப்பதில்லை. வெண்கல உருளி தான். அப்படிக் குக்கரில் வைத்தால் பால் விடாமல் குழைய எடுத்துக்கொண்டு வெளியே எடுத்து ஒரு உருளி, அல்லது கடாயில் பொங்கலை மாற்றிப் பாலை விட்டுச் சேர்த்து நன்கு கலக்கிப் பின்னர் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துப் பொங்கலுக்கான சாமக்ரியைகளைப் போட்டு நெய்யையும் சேர்த்து மு.ப. போட்டுக் கிளறுவோம். பொங்கல் எனில் கொத்சு அல்லது தேங்காய்ச் சட்டினி தான். எனக்கு வத்தக்குழம்பு பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வெண்பொங்கலுக்கு பாலா? இவங்க என்ன அக்காரவடிசில் செய்முறையையும் வெண்பொங்கலையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறார்களோ?

   Delete
  2. ஒருதரம் பால் சேர்த்துப் பண்ணிப் பாருங்க. அல்லது நீங்க வரச்சே நான் பண்ணித் தரேன். எங்க வீட்டுக்கு ஒரு விசேஷத்தில் சமையல் பண்ண வந்திருந்த மாமியிடம் பால் விடுங்க என்றதும் கிட்டத்தட்ட சண்டைக்கே வந்து விட்டார். உடனே மாமாவைக் கூப்பிட்டு எனைப்பற்றிப் புகார். நான் அசரலை. நான் சொன்னதைப் பண்ணத்தான் உங்களைக் கூப்பிட்டிருக்கோம்னு சொல்லிட்டு நானே பாலை விட்டுவிட்டு வந்தேன்.

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   எரிசேரிக்கு கொத்தமல்லி விரைகள் நானும் இப்போதுதான் சேர்க்கிறேன். முன்பெல்லாம் காய்களுடன் உப்பு மஞ்சள் சேர்த்து வேக விடும் போது, மிளகை தட்டி உடன் போடுவேன். பின் தேங்காய், சி. வத்தல் அரைத்து சேர்த்து நீங்கள் சொல்லும் பாணியில்தான்.இறுதியில் சேர்ந்து வருவதற்காக கொஞ்சம் அரிசிமாவு கலந்து விட்டு, தேங்காய் எண்ணெய்யில் தாளித்து, கொஞ்சம் தேங்காய் பூவையும் வறுத்து சேர்ப்பேன். இப்படித்தான் எரிசசேரி ஓடிக்கொண்டிருந்தது. இடையில் வீட்டில் சாப்பிடுவர்களின் (கூட்டு குடும்பம்) ஏதாவது குற்றச்சாட்டுகளில், (சேனை வேகவில்லை., மிளகு காரம் அதிகம் தெரிகிறது, தேங்காய் அதிகம், காய்கள் குழைந்து விட்டன, அன்று பண்ணிய மாதிரி இன்று இல்லை.) மாறி, நானே ஒவ்வொரு ருசிக்காக, ஒவ்வொரு ரெசிபியிலும், சாமான்களை மாற்றிப் போட்டு செய்வேன். இது இந்த முப்பதாண்டு கால பழக்க்கத்தில் வந்தது. தவிரவும் இப்போது குழந்தைகள் அவரவர் வாழ்க்கைப்பயணங்களில் ஒவ்வொரு திசையில். இந்த பயன்பாடுகளும் அடிக்கடி என வராமல் அவ்வப்போது என குறைந்து விட்டது. தங்கள் செய்முறை விபரங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  4. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   வெண் பொங்கலுக்கு பால் சேர்ப்பது எங்கள் அம்மா செய்திருக்கலாம். பார்த்ததில்லை. ஏனெனில் அங்கு இருந்த போது காலை டிபன் முக்கால்வாசி இட்லி, தோசைதான். தவிரவும் சமையலில் என்னை அவ்வளவாக விட்டதில்லை. மடி, ஆச்சாரம் அதிகம். சமையல் பாட்டியும், அம்மாவும்தான். சுற்று வேலைகள்தான் எனக்கும், மன்னிக்கும் அதிகமாக இருக்கும். சர்க்கரை பொங்கலுக்கு பால் அதிகம் சேர்ப்போம்.

   திருமணமாகி இங்கு வந்த பின் மறுநாளே நான் கரண்டி பிடித்து விட்டேன். (பிடிக்கச் சொல்லி விட்டார்கள்) இந்த வெண்பொங்கல் இங்கு தான் நானாகவே செய்யவே கற்று கொண்டேன். மாமியார் வீட்டு பழக்கப்படி பால் சேர்ப்பதில்லை. ஆனால், பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள சட்னி, சி. வெ. சாம்பார் கண்டிப்பாக செய்ய வேண்டும். வடை இடையிடையே வந்து குதித்து விடும். அப்படியே இது பழக்கமாகி போனது. இந்த ஒரு தடவைதான் மாறுபட்ட முறையில் இந்த எரிசேரி உடன் வந்தது. நானும் வெங்கல பானையில்தான் பண்ணுவேன். இப்போது இந்த காலை அவசர சமையலில் குக்கர் பயன்பாடு வந்து விட்டது.

   பழக்கங்களுக்கு நாம் அடிமையாவதை சில நேரங்கள் இடையில் வந்து தடுத்து அதன் போக்கில் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. தங்கள் அன்பான கருத்துகளுக்கும், செய்முறை விளக்கங்களும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் யோசித்தால் விடையே கிடைக்காது!! சேனைக்கிழங்கில் பிட்லை செய்ததில்லை. எரிசேரி முதன் முதலில் எனக்கு மதுரை சக்குடியில் என் அத்தையால் அறிமுகம் செய்யப்பட்டது!..கல்மனதாக இருக்கும் சேனை தரமற்றது என்று நான் நினைப்பேன். எப்படியும் இரண்டையும் சேர்த்து எரிசேரி இதுவரை செய்ததில்லை. எரிசேரியில் மிளகு நாங்கள் கொஞ்சம் தாராளமாகவேவே சேர்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் யோசித்தால் விடையே கிடைக்காது!!/

   ஆம். விடைகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதுவேதான் என் யோசனையும். சேனை பிட்லை நார்மலாக செய்வது போல்தான். நன்றாக இருக்கும். நீங்களும் இந்த இரண்டையும் சேர்த்து ஒருமுறை செய்து பாருங்கள். வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

   /எரிசேரியில் மிளகு நாங்கள் கொஞ்சம் தாராளமாகவேவே சேர்ப்போம்!/

   ஆம்.. கொஞ்சம் தாராளமாக சேர்த்தால்தான் மிளகு வாசனையுடன் நன்றாக இருக்கும். நான் பெரிய ஸ்பூன் என குறிப்பிட வி்ட்டு விட்டேன். ஆனால் எங்கள் மாமியார் மாதிரி உங்களால் அதிகமாக சேர்க்க முடியாது. :)) மிளகு வாசனை ஊரைக்கூட்டும். அவ்வளவு காரம் வேண்டும் அவர்களுக்கு. மிளகை ஒன்றிரண்டு என எண்ணி பொடி செய்து சேர்த்தாயா என என்னைக் கேட்பார்கள்.

   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   அவ்வப்போது கைப்பேசியில் பதில்கள் தருவது என்பதால் தாமதமாகிறது. அனைவரும் மன்னிக்கவும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 7. பொங்கலில் தேங்காய்த்துருவல் இதுவரை முயற்சித்ததில்லை. இந்த காம்பினேஷனும் முயற்சித்ததில்லை. பொங்கலுக்கு பெரும்பாலும் கொத்சு, சில சமயங்களில் தேங்காய் சட்னி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   இந்த மாதிரி தேங்காய் துருவல் சமயத்தில்தான் சேர்ப்பேன். மற்றபடி வெறும் தாளிதங்களோடு எப்போதும் போன்ற வெண்பொங்கல்தான். இங்கும் தொட்டுகையாக சட்னி கொத்சுதான் . இந்த முறை வித்தியாசமான எரிசேரியுடன் தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. படங்கள் வெவ்வேறு சமயங்களில் எடுக்கபப்ட்டவையா?  நன்றாக வந்திருக்கின்றன.  வாழைக்காயை வறுவல் தவிர வேறு எப்படி செய்தாலும் ஒட்டிக்கொண்டு பச்சக் என்று இருந்து விடுவது ஒரு மைனஸ்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   ஆம். படங்கள் மாறுபட்ட பல தினங்களில் எடுக்கப்பட்டவை. ஒரே தினத்தில் சேர்ந்தாற் போல எடுத்த படங்களை காணவில்லை.

   வாழைக்காய் வறுவலை, தவிர்த்து துருவிக் செய்யும் பொடிமாஸ் நன்றாக இருக்குமே..! துவர்ப்பின் சக்தி அதில் உள்ளதால் கொஞ்சம் டல்லடிக்கும் காய்தான் அது. ஆனால், முக்கிய தினங்களில் நம் வீடுகளில் உலா வந்து விடும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. அப்பாடி...  மீண்டும் ஒரு முயற்சியில் கமெண்ட்ஸ் ஒட்டிக்கொண்டு விட்டன!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   அம்மாடி... ஒரு மட்டுக்கும் அனைத்தும் பத்திரமாக வந்து சேர்ந்ததற்கு நன்றி. நானும் அப்படி இப்படியென பார்த்து விட்டு, என் மகளிடம் அவள் வேலையோடு வேலையாக இதையும் கொஞ்சம் பார்க்கிறாயா என கூறிவிட்டு என் கிச்சன் பதவியை ஆக்கிரமிக்கப் போனேன். வந்திருக்கும் உங்கள் கருத்துக்களுக்கும், மற்றும் அனைவரின் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் கொஞ்சம் தாமதமானாலும், பதில் தருகிறேன். அனைவருக்கும் அன்பான நன்றிகள். .

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. எரிசேரி என்பது கேரளத்துச் சிறப்பு துணைக்கறி. நீங்களும் சரி கீதா அம்மையாரும் சரி ஒரு முக்கிய சேரு பொருளான காராமணி பயறை, அல்லது கறுப்புக் கொண்டைக்கடலையை விட்டு விட்டீர்கள். இதில் இரண்டில் ஒன்று சேர்க்காத எரிசேரி எரிசேரி இல்லை. மேலும் இதில் கப்பகிழங்கு, வெள்ளரி போன்றவற்றை சேர்த்து சுக்குப்பொடி போட்டு புழுக்கு என்ற கறி உண்டாக்குவர். சிவப்பு சம்பா அரிசி கஞ்சியும் புழுக்கும் தான் நீத்தார் நினைவு நாளில் செய்யப்படும் முக்கிய படையல் உணவு.

  எனக்கு என்னவோ குக்கரில் வைக்கப்படும் பொங்கல் பொங்கல் என்று சொல்லத் தோன்றவில்லை. பாரம்பரிய பெருமாள் கோயில் பொங்கல் தான் பொங்கல் என்று ஒப்புக் கொள்வேன்.


  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. காராமணி அல்லது கொண்டைக்கடலையா?  நாங்கள் இதுவரை சேர்த்தது இல்லை.   ஆனாலும் இப்போது புதுசு புதுசாக சேர்க்கிறார்கள், செய்கிறார்கள்.

   Delete
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   விபரமான முறையில் செய்யப்படும் எரிசேரியை குறித்து தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி. இனி என்றாவது நானும் எரிசேரி செய்யும் போது தங்கள் சொல்படி, காராமணி, அல்லது கொ. கடலை சேர்த்து செய்கிறேன்.

   /மேலும் இதில் கப்பகிழங்கு, வெள்ளரி போன்றவற்றை சேர்த்து சுக்குப்பொடி போட்டு புழுக்கு என்ற கறி உண்டாக்குவர். சிவப்பு சம்பா அரிசி கஞ்சியும் புழுக்கும் தான் நீத்தார் நினைவு நாளில் செய்யப்படும் முக்கிய படையல் உணவு./

   விபரமான அறியாத தகவல்களுக்கு மிக்க நன்றி. நாமும் அன்று அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளையோ , திற்பண்டங்களையோ செய்வோம். ஆனால் அதில் ஒரு கண்டிப்பு என்பது இல்லை. தாங்கள் பதிவுக்கு வந்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு என்மனம் நிறைவான நன்றி. நான்தான் பதில் கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் சகோதரரே

   வெங்கலப்பானையில் செய்யும் பொங்கல்தான் வாசனையாக நன்றாக இருக்கும். (அதுவும் விறகடுப்பில்..) குக்கர் நம் அவசர வசதிக்காக வேறு வழியின்றி பயன்படுத்துவது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  4. ஜெகே அண்ணா பாலக்காட்டு எரிசேரியில் வான்பயறு சேர்ப்பதில்லை, பொதுவாக அதுவும் சேனையும் வாழைக்காயும் சேர்த்துச் செய்வதில் சேர்ப்பதில்லை. மத்தங்கா எரிசேரியில் சேர்ப்பதுண்டு.

   கீதா

   Delete
 11. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்..

  அதையும் பயனுள்ள பதிவாகத் தந்ததற்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /அதையும் பயனுள்ள பதிவாகத் தந்ததற்கு மகிழ்ச்சி../

   பதிவை ரசித்து படித்து சிறப்பான கருத்தை தந்தமைக்கு நானும் பெருமகிழ்வு கொள்கிறேன். அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. எபியில் திங்கட்கிழமை
  எனது
  (சமையல்) குறிப்பிற்கு தாங்கள் வரவில்லையே..

  உடல் நலம் தானே!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   திங்கள் கிழமை கொஞ்சம் வேலைகள் காரணமாக அன்று வர வலைத்தளம் இயலவில்லை. பிறகு மறுநாள் தங்கள் பதிவை படித்தேன். இன்று கருத்திட்ட வருகிறேன்.

   உடல்நலத்தைப்பற்றறி விசாரித்தமைக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. அருமையாக செய்து உள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   பதிவை ரசித்துப் படித்து தந்த தங்களது அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. படங்களோடு சொல்லிய விதம் அருமையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   பதிவை ரசித்துப் படித்து படங்களை பாராட்டியமைக்கும், தங்களின் ஊக்கம் அளிக்கும் கருத்தினை தந்தமைக்கும் என் மகிழ்வுடன் கூடிய நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. நல்ல குறிப்புகள். நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்களது முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   பதிவை ரசித்து பாராட்டியதற்கும் என் அன்பான நன்றி. தொடர்ந்து வந்து என் எழுத்துக்கு ஊக்கம் தரும் கருத்துக்களை தாருங்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. எரிசேரி நன்றாக இருக்கிறது.
  படங்களுடன் செய்முறையும் நன்றாக இருக்கிறது.
  எங்கள் வீடுகளிலும் செய்வோம்.
  வாழைக்காய் எல்லோருக்கும் பிடிக்கும் சேனையை வாங்கி கொஞ்ச நாள் கழித்து செய்வேன், அப்போது அரிக்காது.
  புது சேனை என்றால் அரிக்கும். பிடி கருணையும் அப்படித்தான். பொங்கலுக்கு வாங்கி போட்டு விட்டு அடுத்த மாதம் கூட சமைப்பேன்.

  முன்னுரையாக செய்தவையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நலமாக உள்ளீர்களா? உங்களை காணவில்லையே என சகோதரர் ஸ்ரீராம் அவர்களிடம் கேட்க வேண்டுமென நினைத்த போது அவர் எ. பியில் யார் எவரென விபரம் கூறாவிடினும், உறவில் சோகம் என செய்தியாக தந்திருந்தார். எனக்கும் வருத்தமாக இருந்தது. தாங்கள் மனதில் தைரியமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்துக் கொண்டேன். இப்போது கொஞ்சம் மன அமைதியாகி இருப்பீர்கள் என நம்புகிறேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

   வலையுலகம் வந்தவுடன் நீங்கள் என் பதிவுக்கும் வந்து கருத்து தந்திருப்பதற்கு மிக்க மன மகிழ்வு அடைகிறேன்

   எரிசேரி குறித்து தாங்களும் நல்லதொரு கருத்தாக சொன்னமைக்கும் நன்றி.

   ஆம்.. வாங்கியவுடன் புது சேனை என்றால் தொண்டை அரிப்பு வரும். கொஞ்ச நாட்பட வைத்திருந்து சமைத்தால் அதன் வீரியம் குறைந்திருக்கும். பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 17. முன்னுரையாக சொன்னதும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /முன்னுரையாக சொன்னதும் அருமை/

   புரிந்து கொண்டேன்.
   முன்னுரையாக கூறியதையும் ரசித்துப்படித்து பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 18. படங்கள் நல்லா வந்திருக்கு பொங்கல் ஆஹா!!

  நானும் பால் விட்டுச் செய்ததுண்டு வெண்பொங்கல்.

  பதிவு சுவையான பதிவு! நீங்கள் எழுதியவிதமும் தான் சொல்கிறேன்!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   தங்களைதான் இந்தப்பதிவுக்கும், இதற்கு முந்தைய கதை பதிவுக்கும் காணவில்லையே என நினைத்திருந்தேன். அதன் பின் தங்கள் மகன் ஊரிலிருந்து வந்திருப்பதாக நம் சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில் படித்தேன் தங்கள் மகன் நலமாக உள்ளாரா? அவர் வந்திருக்கும் இவ்வேளையிலும் தாங்கள் வந்து இப்பதிவுக்கு கருத்து தெரிவித்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி.

   தங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்களது அன்பான வருகைக்கு மிக்க நன்றி சகோதரி . முடிந்தால் இதன் முந்தைய பதிவாகிய கதையையும் வாசித்து கருத்து தாருங்கள்.நீங்களும், சகோதரி கோமதி அரசு அவர்களும்தான் அந்த கதைக்கு கருத்து சொல்ல முடியாத சூழ்நிலைகளில் இருந்தீர்கள்.அதுதான் உங்களிருவரின் கருத்துக்களை அறிய ஆசை கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 19. கமலாக்கா நலம்தானே... இன்று உங்கள் பக்கமும் வந்திட்டேன்.
  எரிசேரி.. நல்ல பெயர்தான் ஆனா எதை எரிக்கப்போகுதோ தெரியவில்லையே:).

  இப்படி இரண்டையும் கலந்து செய்ததில்லை.
  நாங்கள் சேனைக்கிழங்கை கருணைக்கிழங்கு எனத்தான் சொல்லுவோம்.

  ரெசிப்பி முடிவு அழகாக இருக்கு, எதில் செய்ததெனக் கண்டு பிடிக்க முடியாதென நினைக்கிறேன்.

  இலங்கைக் கிழக்கு மாகாணத்தில், வாழைச்சேனை எனும் ஊர் உள்ளது:)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   வாங்க. வாங்க. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? நான் இறைவன் அருளால் நலமாகத்தான் உள்ளேன்.

   தங்கள் அன்பான வருகையும், கருத்துப் பகிர்வும் எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது.

   /எரிசேரி.. நல்ல பெயர்தான் ஆனா எதை எரிக்கப்போகுதோ தெரியவில்லையே:)./

   ஹா ஹா ஹா. இதன் பெயர் காரணம் காண முடியவில்லையே.. ஆனால், காரம் அதிகமானால் வயிறுதான் எரியும்.

   இந்த வகையை இரண்டையும் கலக்காமலும் செய்யலாம். ஆனால், இரண்டும் சேரும் போது இது ஒரு தனிச்சுவை. நாங்கள் பிடி கருணையைதான் கருணை கிழங்கு என்போம். அதை வைத்தும் மசியல், கூட்டு பொரியல் செய்தால் நன்றாக இருக்கும். கருணை கிழங்கு வயிற்றுக்கு நல்லது.

   /இலங்கைக் கிழக்கு மாகாணத்தில், வாழைச்சேனை எனும் ஊர் உள்ளது:)/

   அப்படியா? அறியாத நல்லதொரு தகவலுக்கு நன்றி சகோதரி.

   தாங்கள் வந்து பதிவை ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து வாருங்கள். நீங்களும் பழையபடி சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 20. எரிசேரியும் பொங்கலும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   பதிவை ரசித்து படித்து நல்லதாக கருத்துகள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி. நான்தான் நடுவில் வலைத்தளத்திற்கு வரவில்லையாகையால் உங்கள் கருத்துகளை கவனிக்க இயலாமல் பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். மேலும், விடுபட்ட அனைத்துப் பதிவுகளையும் தாங்கள் ரசித்து படித்து கருத்துகளை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete