Sunday, April 30, 2023

மரங்களின் ஆற்றாமை.

ஒத்தையடிப் பாதை மாறி 

ஓரங்கட்டும்  வாகனங்களை சாடி. 

ஊர்ந்து செல்லும் வழிகளை தவிர்த்து

ஊரெங்கும் சடுதியில் கடக்க

நாலு வழிச் சாலை போட்டாச்சு


மனம் போல் மரணித்தவரை

மனம் இல்லையெனினும்

சாலை வழி நடந்து சென்று

நாலு பேர் சுமக்கும் 

ஒரு நியதியும்

நாளடைவில் நின்று போயாச்சு. .


காத வழி பாதைதானே என்ற

கால் நடையான பயணத்தில்

காத தூரமும் கடக்க சோம்பலானதால்

கால்நடைகள் ஊறுதல் பெற்றதோடு, 

கார்களோடு உறவு கொள்வது   

கண்டபடிக்கு அமோகமுமாயாச்சு


மகிழ்வூந்து என்ற பெயரோடு,

மனம் நிறைவுறாது தவிக்கும்

அதன் மகிழ்வுக்கென அதற்கேற்ற 

அனேக பெயர்களையும் சூட்டியாச்சு


எங்களால் இயலாதது இவ்வுலகில் 

எதுவுமே இல்லையென 

மார்தட்டி மமதை கொள்ளும்

மனித வர்க்கமாக மாறியாச்சு.


இவர்களின் இறுமாப்புக்கு

இன்னல்கள் பலதையும்

இவர்கள் வாழ்வினது 

வசதிகளின் பெருக்கத்திற்கு  நாம்

வாழும் வாழ்வையும்  இழந்தாச்சு


அலட்சியமாய் வெட்டப்படும் நம்

அங்கஹீன வலிகளின்,

அவஸ்தையை உணராத

அன்பில்லா மாந்தர் என்றாயாச்சு


எம்மோடு ஒப்பிட்டு பேசவும் இனி, 

எந்தவொரு ஈரமில்லை எம் நெஞ்சில் 

எனினும் உங்களுடன் எம் வாழ்வு

என்று சபித்து விட்ட இறைவனுக்காக 

எந்த ஒரு மனகிலேசமுமின்றி

வாழும் முறையையும் கற்றாச்சு. 


எங்களின் நல்மனம் மனிதருக்கு

எந்நாளும் இனி வரவும் 

எள்ளளவும் வாய்ப்பில்லை என்ற

மரங்களின் முணுமுணுத்தலுக்கு

மறு பேச்சில்லை  என ஆகியாச்சு

.

சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சாலை வசதிகளுக்காக இயற்கையை அழிப்பது குறித்து  அருமையாய் எழுதி இன்று அவர் பதிவில் பகிர்ந்ததை படித்துப் போது, மனம் நொந்த மரமொன்று கூறுவதாக சொல்லப்படும்  இக்கவி என் மனத்துள் உருவாகியது. எழுத வேண்டாமென மனது எவ்வளவோ தடுத்தும் எழுதிதான் பார்க்கலாமே என என் கவிதை படைக்கும் ஆசை ஆற்றாமையுடன்  கூறியது. அதனால் மரங்களின் ஆற்றாமை என்ற தலைப்பையே வைத்தேன். இது எப்படி உள்ளதென கூறுங்கள். கருத்துரைக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏. 

25 comments:

 1. மரங்களின் ஆற்றாமை மிக அருமை.
  ஒவ்வொரு மரமுமும் ஒவ்வொரு பயன் தரும்.
  மரங்களை அழித்து வருவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று ஆய்வாளர்கள் செல்லி வருகிறார்கள்.

  இந்த ஊரில் மரங்கள் சூழ வீடு இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மகன் ஊர் மலைகள் சூழ்ந்து, மகள் ஊர் மரங்கள் சூழ்ந்து இருக்கிறது.

  காற்று வீசும் போது மரங்களின் தலையசைப்பும், அதனால் ஏற்படும் சல சலப்பு சத்தமும் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

  //இவர்களின் இறுமாப்புக்கு

  இன்னல்கள் பலதையும்

  இவர்கள் வாழ்வினது

  வசதிகளின் பெருக்கத்திற்கு நாம்

  வாழும் வாழ்வையும் இழந்தாச்சு. //

  மரம் மட்டும் வாழ்வை இழக்கவில்லை, மனிதனும் நல் வாழ்வை இழந்தாச்சு. மரம் இல்லையென்றால் ஆரோக்கியம் ஏது?


  மரங்களின் முணுமுணுத்தலுக்கு

  மறு பேச்சில்லை என ஆகியாச்சு//

  மரம் சொல்வது சரிதான் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது மரத்துக்கு சொல்ல?
  ஆற்றாமையால் நெடிய பெருமூச்சு தான் விட முடிகிறது.
  நாம் சுவாசிக்க நல்ல காற்று வேண்டுமென்றால் மரம் வேண்டும், அதை மனிதன் உணர்ந்தால் மரம் நட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /ஒவ்வொரு மரமுமும் ஒவ்வொரு பயன் தரும்.
   மரங்களை அழித்து வருவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று ஆய்வாளர்கள் செல்லி வருகிறார்கள்./

   உண்மை.. . மரங்களை நம் சுயநலத்திற்காக அழிக்கிறோம். ஒரு மரக்கன்று வைத்து அது மரமாகும் வரை, அது நமக்கு பயன் தரும் வரை எவ்வளவு நாட்கள் நாமும், அதுவும் காத்திருக்க வேண்டும் என்ற கால நேரம் கூட தெரியாத மக்கள் தங்களுக்கு தேவையில்லையே இலகுவாக மரங்களை அப்புறப்படுத்தி விடுகின்றனர்.

   /இந்த ஊரில் மரங்கள் சூழ வீடு இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மகன் ஊர் மலைகள் சூழ்ந்து, மகள் ஊர் மரங்கள் சூழ்ந்து இருக்கிறது.

   காற்று வீசும் போது மரங்களின் தலையசைப்பும், அதனால் ஏற்படும் சல சலப்பு சத்தமும் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது./

   நீங்கள் கூறுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதன் காற்றும் மனதிற்கு உற்சாகமூட்டுபவை.

   பதிவை ரசித்து நல்லதொரு கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் கருத்து மிக்க மகிழ்வாக உள்ளது நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. //இவர்களின் இறுமாப்புக்கு
  இன்னல்கள் பலதையும்

  இவர்கள் வாழ்வினது
  வசதிகளின் பெருக்கத்திற்கு நாம்
  வாழும் வாழ்வையும் இழந்தாச்சு. //

  அருமை.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   தங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை தருவதோடு. என் எழுத்துகளையும் சீரமைத்து தருமென நம்புகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. மதியத்துக்கு மேல் வருகின்றேன்...

  இன்று தஞ்சையில் திருத்தேர்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நிதானமாக வாருங்கள். தஞ்சை தேர் திருவிழாவில் கலந்து கொள்ளப் போவதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. கவிதை நன்று. கவிஞர் கமலா என்று புனை பெயர் வைத்துக் கொள்ளலாம். கல்யாணப் பரிசு தங்கவேல் சொல்வது போல "மரங்களின் சேவை நாட்டுக்கு தேவை" என்று புது மொழி உண்டாக்கலாம். 

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   கவிதை நன்று என்ற பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

   /கவிஞர் கமலா என்று புனை பெயர் வைத்துக் கொள்ளலாம். கல்யாணப் பரிசு தங்கவேல் சொல்வது போல "மரங்களின் சேவை நாட்டுக்கு தேவை" என்று புது மொழி உண்டாக்கலாம்./

   ஹா ஹா ஹா. கவிஞரா?
   நான்தான் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். :)) மற்றபடி தாங்கள் வந்து சொன்னதற்கும் மகிழ்ச்சி. மரங்களின் சேவை நாட்டுக்கு எந்நாளும் தேவைதான்.. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /நல்ல முயற்சி. பாராட்டுகள்/

   தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. உங்கள் ஊக்கமே எனது ஆக்கம். நன்றி சகோதரரே. .

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. வசதிகள் பெருக்கத்துக்கு வாழ்வை இழந்தாச்சு.
  நாலுபேர் சுமக்கும் நியதியும் போயாச்சு.

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   ஆங்காங்கே குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க மகிழ்வடைந்தேன். சித்திரமும் கைப்பழக்கம் மாதிரி தெளிவான கவி எழுத நாளாகும். அதுவரை பொறுத்திருங்கள். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   கவிதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. /// வசதிகள் பெருக்கத்துக்கு வாழ்வை இழந்தாச்சு.
  நாலுபேர் சுமக்கும் நியதியும் போயாச்சு..///


  வசந்தமும் வீசிட
  வசதியும் ஆயாச்சு.
  நாலு பேர் சுமந்த
  வழக்கமும் போயாச்சு!..

  அருமையான சிந்தனை..
  வாழ்க புலமை..

  (உங்கள் அனுமதியின்றி திருத்தம் செய்துள்ளேன்..)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   /வசந்தமும் வீசிட
   வசதியும் ஆயாச்சு.
   நாலு பேர் சுமந்த
   வழக்கமும் போயாச்சு!../

   ஆகா... அருமை. ரத்தின சுருக்கமான வரிகள். . இதற்குத்தான் நான் தங்களை கவிஞர் என்றேன். நான் யார் என்கிறீர்களா? (திருவிளையாடல் நாகேஷ் வசனத்தை நினைத்து பார்க்கவும்.. ஹா ஹா ஹா) .

   (உங்கள் அனுமதியின்றி திருத்தம் செய்துள்ளேன்..)

   இதில் என் அனுமதி எதற்கு.? உங்கள் திருத்தம் கண்டு மகிழ்வடைகிறேன். நான் பள்ளி மாணவி. நீங்கள் முத்தமிழ் சங்கத்தில் அங்கம் வகிப்பவர். (பிழையான ஒரு பாட்டுக்கு எம் மன்னன் பரிசளிக்கிறான் என்ற ல் அதைக்கண்டு வருத்தப்படவும் நானே... மீண்டும் திருவிளையாடல் படம் நினைவுக்கு வருகிறது. ஹா ஹா ஹா

   மறுபடியும் வந்து அருமையான கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. .

   தஞ்சை தேர்த்திருவிழா பார்த்து விட்டு வந்தீர்களா ? கூட்டமா?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. பிழை திருத்தம்.

   என்றால் அதைக்கண்டு வருத்தப்படுபவனும் நானே... தட்டச்சும் போதே பிழைகள் வருகின்றன. நன்றி.

   Delete
 9. மரங்களின் மன ஓட்டத்தை படம் பிடித்து காட்டிய நல்ல கவிதை வரிகள்

  வாழ்த்துகள் தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

   உங்களைத்தான் இதுவரையில் பதிவுக்கு காணவில்லையே என நினைத்தேன். கவிதையை ரசித்து தாங்கள் தந்த பாராட்டுதலுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த நன்றி. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துரைகள் என்னை கண்டிப்பாக எழுத வைக்கும். நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. இதற்கு நான் கொடுத்திருந்த கமெண்ட்ஸ் எங்கே?  இரண்டு கொடுத்ததை நினைவு,.  மூன்றாவதாய் ஒரு எசப்பாட்டு எழுதிவச்சு வெளியிடவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   அடாடா.. நீங்கள் தந்த இரண்டு கருத்துக்கள் காணாமல் போய் விட்டதா? அது தெரியாமல் நான் உங்களுக்கு வேலைகள் நிறைய வந்து விட்டது போலும் என நினைத்து அடுத்தப்பதிவில் உங்களை காணவில்லையே என குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். இப்போது மீண்ட ம் வந்து தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்.
   கமலா ஹரிஹரன்

   Delete
  2. மீண்டும் வந்து அது குறித்த கருத்தை தெரிவித்திருப்பதற்கு நன்றி.

   Delete
 11. சிறுகதைப் பதிவில் பதில் கொள்கையில் முந்தைய பதிவுக்கு நான் வரவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டதும், நடுவில் நான் கவனிக்காமல் ஏதாவது பதிவு வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   இந்தப் பதிவுக்குத்தான் தாங்கள் வரவில்லையே என குறிப்பிட்டேன். இந்த பதிவுக்கு தாங்கள் ஒரு எசப்பாட்டு வேறு எழுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தங்கள் கவிதை நல்ல பொருளுடன் அம்சமான வடிவில் இருக்கும். அதையும் என்றாவது வியாழனில் பிரசுரித்து விடுங்கள். அந்த சந்தடி சாக்கில் என் பெயரும் (கவியும்) அனைவருக்கும் தெரியட்டும். ஒரு பழமொழி உண்டே...! "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.." அது போல... :))) அப்படியாவது இந்த நாரும் மணம் பெறட்டும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. மரங்களின் ஆற்றாமை நல்ல கவிதை. மனதை தொட்டது.

  இவற்றை அழிக்கும் ஆறறிவு என்று சொல்லப்படும் மனிதனின் மூளை எங்கே?

  ReplyDelete