Friday, December 16, 2022

இது எங்கள் வீட்டு கூட்டணி சமையல்.

இது எங்கள் வீட்டு சிம்பிள் சமையலாக உருவான ஒரு ரெசிபி. இது அனைவரும் அறிந்ததே....! மேலும் அனைவரும் அடிக்கடி செய்து உண்டு மகிழ்ந்ததே. ..! இது யாருக்கும் தெரியாதது இல்லை. எனினும், இந்த மூன்றையும் ஒருங்கே செய்யச் சொல்லி, எங்கள் வீட்டில் ஒருவர்  "நேயர் விருப்பமாக" கேட்டதினால், இந்த மூன்றும் இன்று உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளிப்பட்டு விட்டது. அதோடு எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கிறோம் என்ற அட்டகாசம் வேறு அவைகளிக்கிடையே....!! .சரி...!! அவைகளே பேசட்டும் என நான் அனுமதித்தவுடன் அவைகளுக்குத்தான் என்ன ஒரு மகிழ்ச்சி...!!! அந்த மகிழ்ச்சியில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறேன்... வாருங்கள். 🙏. 


ஒரு எலுமிச்சை அளவு புளியை எடுத்து ஊற வைத்த படம். "நான்தான் அனைவருக்கும் முன்னோடி" என கண்டிப்பாகப் பெருமை அடித்துக் கொள்ளும். நீரில் மூழ்கியுள்ளதால் வாய் திறந்து பேச முடியாது மௌனம் சாதிக்கிறது. 
 

நான் இவர்கள் செய்யப் போகும் ஒரு தயாரிப்புக்காக, தயாராக்கி வைக்கப்பட்ட சின்ன வெங்காயம். "இப்போதெல்லாம் என்னை கையாள  இவர்கள் சிரமபடுவதே இல்லையாம். ஏனென்றால் இவர்களை முன்பு போல் நான் சிறிதும் கண்கலங்க வைப்பதே இல்லை. காரணத்தை எனக்கு விளக்கிக் கூற தெரியவில்லை. ஆனால் அதுதான் உண்மை...!! அதனால் அரைக் கிலோவிற்கு மேலாகவும்  கூட சுலபமாக தனியாக யார் உதவி இல்லாமல் சுத்தம் செய்து விடுவதாக பெருமை பேசுகின்றனர். " என்று மகிழ்ச்சியில் தன் வாய் திறந்து மலர்ந்தருளிய சின்ன வெங்காயம். 


நான் சேப்பங்கிழங்கு....!! மண்ணிலிருந்து வெளி வந்த நான் அதே மண் மீது வைத்திருக்கும் பற்றுடன் அந்த  வாசனையுடன் இருக்கும் என்னைப் பார்த்தவுடன இவர்களுக்கும் என் மேல் ஒரு பற்று வந்து விட்டதாம். "இன்று எங்கள் வீட்டில் நீயும்..!!! " என கையோடு அழைத்து வந்து என்னை முதலில் ஜில்லென்ற நீரில் குளித்து வாவென அன்போடு ஆணையிட்டு விட்டார்கள்.


ஒரு டம்ளரில் கால் அளவு கடலைப் பருப்பை அளந்து எடுத்தவர்கள்... , 


கூடவே அதனுடன் முக்கால் டம்ளர் துவரம் பருப்பையும் எடுத்துக் கொண்டு....., 


நாலு சிகப்பு மிளகாயுடன்.....,
 

ஒரு ஸ்பூன் அளவுக்கு கொஞ்சம் மிளகையும் எடுத்து......, 


எங்கள் அனைவரையும் ஒரு கடாயில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்தெடுத்து வைத்து விட்டார்கள். எங்களுக்கு இதெல்லாம் பழக்கமாகையால் இவர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிடாமல், வறுத்தெடுப்பதற்கு 
சம்மதித்து விட்டோம். அதனால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள்.:))) 


என்னை வட்டமாக செதுக்கி எடுத்த சிற்பம் போல் அமைத்து விட்டதாக இவர்களுக்கு பெருமையோ பெருமை. . பொதுவாக நாங்கள் அனுபவத்தில் சிறந்தவர்கள். எங்களது இருப்பிடம் மிக உயரமானது. அவ்வளவு உயரத்தில் இருக்குமாறு எங்களை படைத்த அந்த ஆண்டவன் இவர்களை விட நல்ல பக்குவமடைந்த உள்ளத்தைத்தான் கண்டிப்பாக தந்திருப்பார். அதனால் என் முகம் சுளிக்காது இவர்கள் உளி போன்ற ஆயுதம்  கொண்டு  என்னை அடித்து துன்புறுத்தியும், நல்ல வட்ட வடிவத்துடன் ஒழுங்காகவே பிரகாசித்து இருக்கிறேன். வறுபட்ட எங்களுடன் நன்றியை பிரதிபலித்து காட்டும் (அதாங்க.... "உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. " என்ற வாக்குக்கு முழு சொந்தக்காராகிய உப்பு. .)  இவரையும் எங்களுடன் இணைத்து..... , 


வட்ட வடிவமாக சிற்பமாக பிரகாசித்தவரையும் எங்களுடன் சேர அனுமதி தந்து...... , 


ஒரு சிறப்பான பெயரை (பருப்புத்துவையல்) எங்களுக்கு நாமகரணம் செய்வித்து, மகிழச்  செய்து வைத்திருக்கிறார்கள். 


இது எங்கள் கூட்டணி.... பார்த்துக் கொண்டீர்களா.. ?  எங்களுடன் புதிதாக ஒரு கூட்டணியாக சேர, கண்ணீர் வர வைத்து துன்புறுத்தாத நல்ல மனதுடைய  இந்த வெங்காயத்தையும் ஒன்றிரண்டாக அரிந்து வைத்திருக்கிறார்கள். பின் ஒரு கடாயில், எண்ணெயுடன், எங்களைப் தீடிரென நாங்களே சற்றும் எதிர்பாராமல் போட்டு நாங்கள் அதனுள் விழுந்த அந்த சிறு கோபத்தில் முகம் சிஙந்ததும், எங்களை சமசரமாக்க மற்றொரு கூட்டணியாகிய, அந்த அன்பான வெங்காயத்தை சேர்த்து..... எங்கள் மனம் உருகி, மகிழும்படியாக கொஞ்சம் நெய்யையும் உருகும்படியாக விட்டு. 


மேலும் நாங்கள் நல்ல மணம் வீசுபடியாக "ஒரு ப. ம,  சிறிதளவு, மி. காரப் பொடி, மணம் வீசும் அந்த மல்லிப் பொடி, ,
 


உப்பார்" என அனைவரையும் சேர்த்து,  எங்கள் கோபம் தவிர்த்து நாங்கள் வாசம் மிகும்படியாக எங்கள் பெருமை கொள்ளச் செய்தார்கள். 


அனைவருக்கும் முன்னோடியான என்னை, அங்கு சிறிதளவு கோபமாக ஒன்றோடொன்றுபேசிக் கொண்டிருந்த வெங்காய கலவையை சமாதானபடுத்த சொன்னதும் நானும் என் அனுபவ அறிவினால் அவர்களுடன் கலந்து கொண்டு, அவர்களையும்  என்னுடன் கலக்கச் செய்து சமாதானபடுத்தினேன். 


அட...! என்ன ஒரு ஆச்சரியம்..!  கொஞ்ச நேரத்தில் அவைகளுடன் பேசி சமாதானம் ஆனதும் நாங்கள் அனைவருமே மணம் வீசும் "வெங்காய பச்சடி" என்ற பெயர் பெற்றும், வழக்கப்படி எங்களுக்கு இறுதியில் எப்போதும் கிடைக்கும்  அந்தப் "பெருங்காயத்திடம்"தப்பிக்க இயலாது சற்று வருத்தமடைந்திருந்தாலும், ஒரு அருமையான பெயர் பெற்ற சந்தோஷத்தில் அகமகிழ்ந்திருந்தோம். 


மண் வாசனையகற்றி, என்னை ஒரளவு மனது இளகச் சொன்ன இவர்களுக்காக பரிதாபப்பட்டு, கடினமாக இருந்த நான் நல்ல சூடுநீரில் அமிழ்ந்து  மனம் இளகியதும், என்ளை அழகுபடுத்தி, என் சுவை கூடும்படி, கலராக பலவித பொடிகளை  ( என்னுடன் கலந்தது மஞ்சள் தூள், காரப்பொடி, தனியா பொடி, உப்பார், பெருங்காயம் போன்ற பொடிகள் என இவர்கள் பேசிக் கொண்டார்கள்.)  சேர்த்தது மட்டுமின்றி,
   
இத்தனைப்பொடிகளோடும், கொஞ்சம் தாராளமாக என்னை எண்ணெய் குளியல் செய்ய வைத்து என்னை மேலும்  மினுமினுப்பாக்கினார்கள்.


இதோ..! எங்கள் கூட்டணி...! இப்போது நாங்கள் மூவரும், அவர்களின் விருப்பபடி ஒன்று சேர்ந்து  அன்னராஜாவுடன் அரசாட்சி செய்ய அமர்நதிருக்கிறோம். எங்கள் ஆட்சி எப்படியென்று பார்வையிட்டு பதில் அளியுங்ளேன். . பார்வையிடும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் தெரிவிக்கிறோம். 🙏.

அப்பாடா.....! ஒரு வழியாக தத்தம் நிலைப்பற்றி அவர்களே கூறுவேன் என்று கூறி விளக்கியதை கேட்டடிருப்பீர்கள். இந்த மூன்றும் சேர்ந்த முக்கூட்டு ராஜ்ஜியம் அன்றொரு நாள் எங்கள் வீட்டில். ஒரளவு மனத்திருப்தியுடன் ருசிக்கும்படி  நன்றாகத்தான் இருந்தது. நீங்களும் இந்தமுக்கூட்டு சமையலை ரசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி

ஒரு மன மாறுதலுக்காக இந்தப்பதிவு. வழக்கப்படி ரம்பமாக இருந்தாலும், பொறுமையாக படித்தவர்களுக்கு என் அன்பான நன்றி. 🙏. 

18 comments:

 1. சுவாரஸ்யமான செய்முறை விளக்கம் படங்களுடன் அருமை.

  ReplyDelete
 2. சாம்பார், ரசம் என்று சாப்பிட்டு அலுத்துப்போன நாளில் இது செய்தால் சிறப்பாக இருக்கும்.  சட்டென ஓரிரு விள்ளல் அதிகமாகவே உள்ளே செல்லும்!

  ReplyDelete
 3. இதில் வெங்காய பச்சடிதான் செய்ததில்லை.  மற்ற இரண்டும் செய்திருக்கிறோம், சுவைத்திருக்கிறோம்.  வெங்காய பச்சடி கொத்ஸு போல இருக்கும் போல

  ReplyDelete
 4. அவசரத்தில் படங்களை மாத்திரம் பார்த்தால், சாம்பார் சாதம், பிறகு என்னென்ன? அடையா... என்றெல்லாம் சந்தேகம் வருது. பிறகு வந்து படிக்கிறேன்.

  ReplyDelete
 5. படிப்படியான செய்முறை அருமை...

  ReplyDelete
 6. கமலாக்கா அருமையான ரெசிப்பிக்கள் ...நம் வீட்டிலும் செய்வதுண்டு. என் பாட்டி சி வெ போட்டு இப்படிச் செய்வதை வெங்காய புளிக்கோசு/கிள்ளிப்போட்ட மிளகாய் வெங்காய குழம்பு/வெங்காய வெறும் குழம்பு/புளிக்குழம்பு இப்படி ஏதேனும் ஒரு பெயருடன் சொல்லிச் செய்வார். எங்களுக்காகச் செய்து தருவார். அவர் தனக்கு புளித் த்ண்ணீர் கலந்து தாளித்து அல்லது கத்தரிக்காயில் புளிக்கோசு என்று செய்து கொள்வார். புடக்கென்று செய்யக் கூடிய ஒன்று இல்லையா அதனால்.

  பார்க்கும் போது நாவூறுது. சூப்பரா சொல்லிருக்கீங்க கமலாக்கா

  கீதா

  ReplyDelete
 7. வணக்கம் அனைவருக்கும்.

  இந்த ரெசிபி பதிவுக்கு வந்து கருத்துக்களை தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். வீட்டில் கொஞ்சம் வேலை. அதனால் உடன் வந்து பதில் தர இயலவில்லை. நாளை காலையிலும் வேலைகள் உள்ளதால், நாளை மதியம் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூறுகிறேன். உடனே பதில் கருத்துக்கள் தர முடியாத தாமதத்திற்கு கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 8. ஆஹா ஆஹா ...

  என்ன அழகாக அனைவரும் பேசி மகிழ்ந்து நம்மை வாழ்விர் கிறார்கள்...

  வெகு சுவாரஸ்யம் கமலா அக்கா ..ரசித்து ரசித்து வாசித்தேன் ..

  இந்த வெங்காய பச்சடி பெயர் மட்டும் புதிது.. இதே போல செய்வது தான் நாங்கள் புளிக்கொழம்பு என்போம் ...

  சுவையான துவையலும் , பளபளக்கும் ரோசஸ்ட்ம் ம்ம்ம்ம் அருமை

  ReplyDelete
 9. மழை நாட்களுக்கான சமையல் இது..

  ஆனால், மூன்று மாதங்களுக்கு முன் சிலந்திப் பூச்சி கடித்து வைத்ததால் உடல் முழுதும் அரிப்பு.. தடிப்பு..

  சித்த வைத்தியம் தான் ஒத்து வருகின்றது.. தற்போது இரத்தச் சர்க்கரை, கால் கை வலி இவற்றுக்கு சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதால் வீரியம்
  குறைந்த மருந்து தான்.. இதில் பத்தியம் என்று இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு நீக்கியாகி விட்டது.. பல காய்களையும் நீக்கியாகி விட்டது.. ஆனாலும் அவ்வப்போது உடலில் தடிப்புகள்... வேதனை குறையவில்லை..
  அதனால் புளி எல்லாம் தற்போது வெகு தூரத்தில்..

  பதிவே மிகச் சுவை..
  மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப மோசமான நேரம் போல. காணாக்கடி எனில் மந்திரித்தும் பார்க்கலாம். சில பேர் மந்திரித்தால் உடனடி குணம் தெரியும். தக்க ஆளைத் தேடிப் பார்க்கவும். எங்கள் பிரார்த்தனைகளும்.

   Delete
  2. // சில பேர் மந்திரித்தால் உடனடி குணம் தெரியும். தக்க ஆளைத் தேடிப் பார்க்கவும். எங்கள் பிரார்த்தனைகளும்.. //

   விசாரித்தாயிற்று.. அருகில் இப்படியாக மந்திரிப்பவர்கள் எவர இல்லை..

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   Delete
 10. நேற்று பராமரிப்பு என்ற பெயரில் காலையில் இருந்து மின் தடை... மாலை 6:30 க்குத் தான் வெளிச்சம் வந்தது..

  வாடகை வீடு வயல்வெளிக்குள் என்பதால் மிகுந்த சிரமம்.. பகவிதமான பாம்புகள். சர்வ சாதாரணமாக இழைகின்றன..

  கடவுள் ஒருவனே துணை..

  ReplyDelete
  Replies
  1. ஐயோ... பாம்புகளா? என்னவோ பாம்புகளைப் பார்த்தால் பயம் தானாகவே வந்துவிடுகிறது. பெருங்களத்தூரில், தண்ணிப்பாம்புகள் வீட்டின் முன்பக்கத்தில் இருந்த மரங்களடர்ந்த பகுதியில் வரும் (சாரையா என்றும் நினைவில்லை.ஆனால் விஷமில்லாதவை, வேகமாக ஓடக்கூடியவை)

   Delete
  2. நாங்க பாம்புகளோடு குடித்தனமே பண்ணி இருக்கோம். எல்லாமும் எழுதி இருக்கேனே!

   Delete
 11. இந்த மாதிரிச் சின்ன வெங்காய கொத்சு நாங்க அரிசி உப்புமா, பொங்கல் ஆகியவற்றுக்குத் தொட்டுக்கப் பண்ணுவோம். சாதத்தில் போட்டுச் சாப்பிட்டதில்லை. இதை நீங்க எ.பி.க்கு அனுப்பி இருக்கலாமே! சுவையாக எழுதுகிறீர்கள். தெரிந்த விஷயத்தையும் சுவைபடக் கூறுவது உங்களுக்குக் கைவந்த கலை.

  ReplyDelete
 12. மிக அருமையான முக்கூட்டு சமையல்.
  சொன்ன விதம் அருமை.
  படங்களும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 13. தாங்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   நான் இப்போதைக்கு இறைவன் அருளால் நலமாக உள்ளேன். கடந்த ஒரு மாதமாக நிறைய அவஸ்த்தை பட்டாகி விட்டது. நீங்கள் மறுபடியும், மீள்வருகை தந்து, நலம் விசாரித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பான பிரார்த்தனைகள் என் உடல் நலத்தை முக்கால்வாசி சரியாக்கி உள்ளது. மிக்கநன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete